வடிவமைப்பாளருக்குப் புகழ் சேர்க்காத வடிவமைப்பா?
இ யற்கை தெரிவே உயிரின் நுணுக்கங்களுக்கும் பல்வகைமைக்கும் காரணம் என்பதாக சார்ல்ஸ் டார்வின் கூறி கிட்டத்தட்ட 150 வருடங்கள் கடந்துவிட்டன. என்றாலும், அவருடைய பரிணாமக் கோட்பாடும் அதில் செய்யப்பட்டிருக்கும் நவீன மாற்றங்களும் சமீப காலங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. ஆம், உயிரினங்கள் பிரமிக்கத்தக்க விதத்தில் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கையில் அவை நிச்சயம் ஒரு நோக்கத்துடன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்புகிறவர்கள் டார்வினின் கொள்கையை எதிர்க்கிறார்கள். நாம் பூமியில் பார்க்கிற பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் பரிணாமம் வழியாக வந்தன என்கிற கருத்தைச் சாதனை படைத்த பல விஞ்ஞானிகள்கூட ஏற்றுக்கொள்வதில்லை.
இவர்களில் சிலர் பல்லாயிரக்கணக்கான இந்த உயிரினங்கள் புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பின் வாயிலாக வந்திருப்பதாக வாதாடுகிறார்கள். படைப்பிலுள்ள வடிவமைப்பே உயிரியல், கணிதவியல், பகுத்தறிவு ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது என அவர்கள் அடித்துக் கூறுகிறார்கள். இந்தக் கருத்தின் பேரிலான கலந்தாலோசிப்பை விஞ்ஞானப் பாடத்தில் சேர்க்கும்படி பள்ளிகளை வற்புறுத்துகிறார்கள். பரிணாமப் போர்கள் என அழைக்கப்படும் இவை முக்கியமாக அமெரிக்காவில் எரிமலையாய் வெடித்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற போர்கள் இங்கிலாந்து, செர்பியா, துருக்கி, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய தேசங்களிலும் வெடித்திருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன.
ஏன் விடப்படுகிறதோ புரியவில்லை
புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்புக்கு அந்த விஞ்ஞானிகள் மிக ஜாக்கிரதையாகக் கொடுத்திருக்கும் விளக்கத்தில் பொதுவாக ஏதோவொன்று விடப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆம், அவர்கள் வடிவமைப்பாளரைப்பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வடிவமைப்பாளர் இல்லாமல் வடிவமைப்பு இருக்க முடியுமா? புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பு என்னும் கருத்தை பரப்புகிறவர்கள் “வடிவமைப்பாளர் யார் அல்லது யாராக இருக்க முடியும் என்பதைப்பற்றி திட்டவட்டமான எந்தத் தகவல்களையும் அளிப்பதில்லை” என்று த நியு யார்க் டைம்ஸ் மேகசின் அறிக்கையிட்டது. புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பின் ஆதரவாளர்கள் “இந்தச் சர்ச்சையில் கடவுளின் பெயரை எடுக்காதிருக்க எச்சரிக்கையாய்” இருக்கிறார்கள் என்று எழுத்தாளரான க்ளாடியா வாலஸ் குறிப்பிட்டார். “புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பு என்ற கருத்து, வடிவமைப்பாளர் இருப்பதைப் பற்றியோ அவர் யார் என்பதைப் பற்றியோ எதுவுமே குறிப்பிடுவதில்லை” என்று நியூஸ்வீக் பத்திரிகை தெரிவித்தது.
இருந்தாலும், வடிவமைப்பாளரைப்பற்றி சிந்திக்காதிருப்பது நடைமுறையானதல்ல என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். வடிவமைப்பாளர் இருப்பதைப் பற்றியும் அவர் யார் என்பதைப் பற்றியுமான தகவல் மறைத்துவைக்கப்படும்போது அல்லது சிந்தித்தே பார்க்கப்படாதபோது பிரபஞ்சத்திலுள்ள வடிவமைப்புக்கும் ஏன், உயிருக்கும் அளிக்கப்படுகிற விளக்கம் எப்படி முழுமையாக இருக்க முடியும்?
வடிவமைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற விவாதம் பின்வரும் இந்தக் கேள்விகளை ஓரளவு சார்ந்திருக்கிறது: மனிதருக்கு அப்பாற்பட்ட வடிவமைப்பாளர் இருப்பதை ஏற்றுக்கொள்வது விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திற்கும் அறிவின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்குமா? வேறு எந்த விளக்கமும் அளிக்கப்பட முடியாத பட்சத்தில் மட்டுமே புத்திக்கூர்மையுள்ள ஒரு வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அதோடு, வடிவமைப்பிற்குப் பின்னால் ஒரு வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது ஞானமாக இருக்குமா? இந்தக் கேள்விகளையும் இது சம்பந்தப்பட்ட வேறு கேள்விகளையும் பின்வரும் கட்டுரை கலந்தாலோசிக்கும்.
[பக்கம் 3-ன் படங்கள்]
உயிரின் நுணுக்கங்களை இயற்கை தெரிவு விளக்கியதாக சார்ல்ஸ் டார்வின் நம்பினார்
[படத்திற்கான நன்றி]
டார்வின்: From a photograph by Mrs. J. M. Cameron/U.S. National Archives photo