வடிவமைப்பை ரசித்து வடிவமைப்பாளரை அறியுங்கள்
இ த்தாலிய ஓவியரும், சிற்பியுமான மைக்கலான்ஜலோவைப்பற்றி நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அவருடைய அசல் கைவண்ணங்களில் ஒன்றைக்கூட நீங்கள் ஒருவேளை பார்த்தே இருக்கமாட்டீர்கள். என்றாலும், கலை சரித்திராசியர் இந்த இத்தாலிய ஞானியை “அற்புதமான ஒப்பற்ற கலைஞர்” என்று புகழ்ந்ததை நீங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வீர்கள். மைக்கலான்ஜலோவின் திறமைகளை யாருமே மறுக்க முடியாது. யாராவது மைக்கலான்ஜலோவின் கலையை ரசித்துவிட்டு அவர் ஒரு கைதேர்ந்த கலைஞர் என்று புகழாமல் இருப்பார்களா, என்ன?
பூமியில் நம்மைச் சுற்றி ஏராளமாயுள்ள உயிர்களின் பிரமிக்கவைக்கும் நுணுக்கங்களையும் பல்வகைமையையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். “உயிரியலின் அம்சங்களில் வடிவமைப்பின் அத்தாட்சிகள் தெளிவாய்த் தெரிகின்றன” என்று ஓர் உயிரியல் பேராசிரியர் கூறுவதாக த நியு யார்க் டைம்ஸ் மிகச் சரியாகவே மேற்கோள் காட்டியது. “உயிரின் வடிவமைப்பு நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது” என்றும் அவர் கூறினாராம். வடிவமைப்பை மட்டும் ரசித்துவிட்டு வடிவமைப்பாளரை புகழாதிருப்பது எந்த விதத்தில் நியாயம்?
தன்னைச் சுற்றியுள்ளவற்றை மிகக் கவனமாய் ஆராய்ந்த அப்போஸ்தலன் பவுல் “சிருஷ்டிகரை அல்லாமல் சிருஷ்டியை அதிகமாக மதித்துச் சேவித்த” மக்களைக் குறித்துப் பேசினார். (ரோமர் 1:25, டார்பீ) காற்றாய் பரவியுள்ள பரிணாமக் கருத்துக்களால் பாதிக்கப்பட்டிருக்கிற சிலர், வடிவமைப்புகள் வடிவமைப்பாளரைப் பறைசாற்றுவதை ஏற்க மறுக்கிறார்கள் அல்லது ஏற்கத் தவறுகிறார்கள். ஆனால், பரிணாமக் கோட்பாடு உண்மையிலேயே விஞ்ஞானத்தை ஆதரிக்கிறதா? வியன்னாவின் கத்தோலிக்க ஆர்ச்பிஷப்பான கிரிஸ்டாஃப் ஷான்பார்ன் த நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் தன் முடிவைத் தெரிவித்திருப்பதைக் கவனியுங்கள்: “உயிரியலில் உள்ள பிரமிப்பூட்டும் வடிவமைப்புக்கான அத்தாட்சிகளை ஏற்க மறுக்கிற அல்லது அசட்டை செய்கிற எந்த ஒரு கோட்பாடும் சித்தாந்தமே தவிர விஞ்ஞானம் அல்ல.”
விஞ்ஞானத்திற்கு முடிவா?
என்றாலும், சிருஷ்டிகர் இருக்கிறார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது, “ஆராய்ச்சிக்கு தடையாக இருக்குமென” நினைக்கிறவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் பயத்தை நியூ சயன்டிஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை விவரிக்கிறது. “‘வடிவமைப்பாளரின் கைவரிசை’ என்ற விளக்கம் எல்லையற்ற ஆராய்ச்சிக்கு அடிகோலுகிற அறிவியலின் முடிவுக்கு வழிவகுக்கும்” என்று அவர்கள் நினைப்பதாக அந்தப் பத்திரிகை கூறியது. அப்படிப் பயப்பட வேண்டிய தேவை இருக்கிறதா? இல்லவே இல்லை. பார்க்கப்போனால் அதற்கு நேரெதிரானதே உண்மையாக இருக்கிறது. ஏன்?
நம் பிரபஞ்சமும் பூமியிலுள்ள உயிர்களும் குருட்டாம்போக்கில் தானாக வந்தன என்றும் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொன்றாகப் பரிணமித்தன என்றும் நம்பினால், மேற்கொண்டு ஆராய்ச்சி செய்து ஞானமான காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சி எடுக்கவே மாட்டோம். மறுபட்சத்தில், நம்மைச் சுற்றியுள்ளவை, புத்திக்கூர்மையுள்ள ஒரு சிருஷ்டிகரின் கைவரிசை என்பதை நாம் ஒத்துக்கொண்டால் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய தூண்டப்படுவோம். எப்படியெனில், பிரபஞ்சத்தின் வடிவமைப்புகளில் மிளிருகிற அந்தச் சிருஷ்டிகரின் ஞானத்தைப் பற்றியும் அவர் அதைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தைப் பற்றியும் ஆராய நாம் தூண்டப்படுவோம். இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: லியானார்டோ டா வின்ஸிதான் “மோன லிசா” ஓவியத்தைத் தீட்டியவர் என்பதை கலை சரித்திராசிரியர்கள் அறிந்திருந்தாலும் அவருடைய தொழில் திறமையையும் அவர் பயன்படுத்தின உபகரணங்களையும்பற்றி ஆராய்ச்சி செய்வதை அவர்கள் நிறுத்திவிடவில்லை. அதுபோலவே, வடிவமைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது அவருடைய வடிவமைப்புகளிலும் படைப்புகளிலும் காணப்படும் நுணுக்கங்களையும் சிக்கல்களையும் ஆராய்ச்சி செய்வதிலிருந்து நம்மை நிறுத்திவிட வேண்டியதில்லை.
தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதற்கு பைபிள் தடையாக இருப்பதில்லை, மாறாக, அறிவியல் ரீதியான கேள்விகளுக்கும் ஆன்மீக ரீதியான கேள்விகளுக்கும் விடை தேடுமாறே அது ஊக்குவிக்கிறது. பூர்வ காலத்தில் வாழ்ந்த அரசனாகிய தாவீது, தன் உடல் திறமை வாய்ந்த விதத்தில் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதைக் குறித்துத் தியானித்தப் பிறகு இவ்வாறு கூறினார்: ‘நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.’ (சங்கீதம் 139:14) சொல்லப்போனால், முற்பிதாவான யோபுவிடம், “நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ?” என்று சிருஷ்டிகரே கேட்டதாக பைபிள் கூறுகிறது. (யோபு 38:18) சிருஷ்டிகர் கேட்ட இந்தக் கேள்வி, விசாரிப்பதையும் ஆராய்வதையும் தடைசெய்வதை அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக, கைதேர்ந்த இந்த வடிவமைப்பாளர் தன் கைவேலையை ஆராயும்படி அழைப்பு விடுக்கிறார். நம்மைச் சுற்றியுள்ள படைப்புகளுக்குக் காரணமானவரைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள தீர்க்கதரிசியான ஏசாயாவும் எழுத்துவடிவில் நமக்கு அழைப்பு விடுத்திருப்பதைக் கவனியுங்கள்: “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்?” உண்மையில், ஏசாயா 40:26-ல் உள்ள ஓர் உண்மை E=mc2 என்ற ஐன்ஸ்டீனின் பிரபலமான சூத்திரத்துடன் ஒத்துப்போகிறது. அந்த உண்மை என்னவெனில், ஆற்றலும் சக்தியும் படைத்த ஓர் ஊற்றுமூலத்திலிருந்துதான் இந்தப் பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது.
சிருஷ்டிப்பு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு எப்போதும் சுலபமாக பதில் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். நம்முடைய புரிந்துகொள்ளும் சக்தி குறைவாக இருப்பதும் இந்தப் பிரபஞ்சத்தைப்பற்றி நாம் முழுமையாக அறியாதிருப்பதும் இதற்கு ஓரளவு காரணம் எனலாம். யோபு இதைப் புரிந்துகொண்டார். விண்வெளியில் காணக்கூடிய எதன்மீதும் சாராமல் பூமி அந்தரத்தில் தொங்குவதற்கும் நீர்த்ததும்புகிற மேகக்கூட்டங்கள் பூமியைப் பார்த்தபடி மேலே நிற்பதற்கும் காரணமாயிருக்கிறவரை அவர் புகழ்ந்தார். (யோபு 26:7-9) இருப்பினும், “தேவன் செய்கிற வியக்கத்தக்க காரியங்களில் இவை சிலவே” என்பதை அவர் உணர்ந்தார். (யோபு 26:14, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆம், தன்னைச் சுற்றியுள்ள காரியங்களைப்பற்றித் தெரிந்துகொள்ள யோபு விரும்பினார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. தன் வரையறைகளை உணர்ந்த தாவீது “இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது” என்று எழுதினார்.—சங்கீதம் 139:6.
சிருஷ்டிகர் இருப்பதை ஏற்றுக்கொள்வது விஞ்ஞான முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பதில்லை. பூமி மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காரியங்களைப்பற்றி மேன்மேலுமாகத் தெரிந்துகொள்வதில் காட்டப்படுகிற ஆர்வம் எல்லையற்றது, என்றென்றுமானது. தன் மகத்தான ஞானத்திற்கு புகழ்பெற்ற பூர்வகால அரசர் ஒருவர் தாழ்மையுடன் எழுதியதாவது: “அவர் நித்தியத்தின் நினைவை மனிதனின் மனதில் வைத்திருக்கிறார்; இருப்பினும் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனிதனால் புரிந்துகொள்ள இயலவில்லை.”—பிரசங்கி 3:11, ஹோலி பைபிள்—நியூ லைஃப் வர்ஷன்.
காரணமறியப்படாத பட்சத்தில் கடவுளா?
அறிவியல்பூர்வமாக பதில் கொடுக்க முடியாத பட்சத்தில் திடீரென கடவுளை நுழைத்து “விடையளிப்பதை” சிலர் எதிர்க்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், காரணமறியப்படாத பட்சத்தில் மட்டுமே வடிவமைப்பாளராயிருக்கும் கடவுள் நுழைக்கப்படுகிறார்; தர்க்க ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் மனிதர்களால் விடையளிக்க முடியாதபோது “கடவுள்” என்பதை ஒரு மந்திரச் சொல்போல பயன்படுத்தி அவர்கள் நழுவிவிடுவதாக வாதாடுகிறார்கள். பதில் கொடுக்க முடியாத அல்லது காரணமறியப்படாத விஷயங்கள் எப்பேர்ப்பட்டவை? நமக்குத் தெரியாத அற்பமான விஷயங்களா? இல்லை. மாறாக, டார்வினின் பரிணாமக் கோட்பாட்டில் மறைந்துள்ள மிகப் பெரிய கேள்விக்குறிகள் அவை. அதாவது, பரிணாமக் கோட்பாட்டால் பதிலளிக்க முடியாத உயிரியல் சம்பந்தப்பட்ட கேள்விகள். நியாயமாகப் பார்த்தால், ஆதாரமில்லாத கூற்றுகளை ஆதரிக்கிற பரிணாமவாதிகள், விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத காரியங்களுக்கு டார்வினின் கோட்பாட்டைக்கொண்டு மிகத் திறமையாக விளக்கமளித்துவிடுகிறார்கள்.
பைபிளில் சித்தரிக்கப்படும் சிருஷ்டிகர், காரணமறியப்படாத விஷயங்களுக்கு விளக்கமாய் அமைகிறவர் அல்ல. மாறாக, அவரது செயல், படைப்பின் எல்லா கட்டங்களையும் அம்சங்களையும் நுணுக்கங்களையும் உள்ளடக்குகிறது. இவை அனைத்தையும் உட்படுத்தும் யெகோவாவின் சிருஷ்டிப்பு வேலைகளை வலியுறுத்தி, சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.” (சங்கீதம் 36:9) ‘வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவரென’ அவர் வர்ணிக்கப்பட்டிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 4:24; 14:15; 17:24) சரியாகவே, முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் ஆசிரியர், கடவுளே ‘எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்’ என்று எழுதினார்.—எபேசியர் 3:11.
அதோடுகூட, ‘வானத்தின் நியமங்களையும்,’ பொருளையும் ஆற்றலையும் கட்டுப்படுத்துகிற—விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சி நடத்திவருகிற—இயற்கை நியதிகளையும் கடவுள் உருவாக்கினார். (யோபு 38:33) கடவுளுடைய வடிவமைப்பு முழுமைபெற்றதாயும் நோக்கமுள்ளதாயும் இருக்கிறது. பலவகையான எண்ணற்ற உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாய் இந்தப் பூமி இருக்க வேண்டும் என்ற அவருடைய நோக்கத்தை அது நிறைவேற்றுகிறது.
வடிவமைப்பும் பகுத்தறிவும்
கடைசியாக, நாம் சிந்திப்பதற்கு எஞ்சியுள்ள கேள்வியானது பகுத்தறிவு பற்றியதே. பலவித விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பகத்தன்மையைக் குறித்து பொதுவாகப் பேசுகையில், விஞ்ஞான எழுத்தாளரான ஜான் ஹார்கன் இவ்வாறு குறிப்பிட்டார்: “அத்தாட்சி சந்தேகத்துக்குரியதாய் இருக்கையில் வழிநடத்துதலுக்காக பகுத்தறிவைப் பயன்படுத்த நாம் வெட்கப்படக்கூடாது.”
உயிர் தானாக வந்தது அல்லது குருட்டாம்போக்கில் வந்தது என்று சொல்லிக்கொள்வது உண்மையிலேயே அர்த்தமுள்ளதாய் இருக்கிறதா? பரிணாமக் கோட்பாடு மிகப் பரவலாய் இருக்கிறபோதிலும் விஞ்ஞானிகள் உட்பட புத்தியுள்ள மக்கள் பலர், புத்திக்கூர்மையுள்ள ஒரு சிருஷ்டிகர் இருப்பதை ஒத்துக்கொள்கிறார்கள். பொதுமக்கள், “அறிவுப்பூர்வமாய் யோசித்து உயிர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு பெரும்பாலும் வருகிறார்கள்” என்று ஒரு விஞ்ஞான பேராசிரியர் கூறுகிறார். அதற்கு காரணமென்ன? “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்” என்று அப்போஸ்தலன் பவுல் கூறியதை அநேகர் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வார்கள். (எபிரெயர் 3:4) “எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்” என்று மேலுமாக கூறி பவுல் ஒரு நியாயமான முடிவையும் வழங்கினார். பைபிளின் கருத்துபடி, ஒரு வீட்டை வடிவமைத்துக் கட்டுவதற்கு யாராவது தேவை என ஒத்துக்கொண்டு, சிக்கல் வாய்ந்த ஒரு செல் மட்டும் தானாக வந்துவிட்டதென சொல்வது கொஞ்சமும் நியாயமல்ல.
வடிவமைப்பாளரும் சிருஷ்டிகரும் இருப்பதை மறுக்கிறவர்களைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.” (சங்கீதம் 14:1) இந்த வசனத்தில், கடவுள் இருப்பதை இன்னும் ஒத்துக்கொள்ளாதவர்களை சங்கீதக்காரன் கடிந்துரைக்கிறார். ஒருவர் உண்மைகளின் மீது அல்லாமல் தன் சொந்த கருத்தின் மீது சார்ந்திருக்கலாம். மறுபட்சத்தில், பகுத்தறிவைப் பயன்படுத்தி ஞானமாய் யோசிக்கிறவர் சிருஷ்டிகர் இருப்பதை தாழ்மையுடன் ஒத்துக்கொள்கிறார்.—ஏசாயா 45:18.
சிந்தித்து ஆராய்கிற அநேகருக்கு, மகத்தான வடிவமைப்பாளர் இருப்பதை நிரூபிக்கும் அத்தாட்சி தெளிவாக உள்ளது.
வடிவமைப்பாளரை நீங்கள் அறியலாம்
நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம் என்று கருதினால், எதற்காக நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்? நம் வாழ்க்கையின் நோக்கமென்ன? இதுபோன்ற கேள்விகளுக்குத் திருப்தியான பதில்களைப் பெற விஞ்ஞானத்தைச் சார்ந்திருந்தால் மட்டும் போதாது. ஏனெனில், இந்த அடிப்படை கேள்விகளுக்கு நியாயமான, திருப்தியான பதில்கள் தேவைப்படுகின்றன. இந்த விஷயத்தில் பைபிள் பெரிதும் உதவியளிக்கிறது. அது யெகோவாவை, சிருஷ்டிகராக மட்டுமின்றி நோக்கமுள்ளவராகவும், அதாவது, தாம் செய்யும் காரியங்களுக்கு வலுவான காரணங்களை உடையவராகவும் அடையாளம் காட்டுகிறது. வேதவசனங்கள் மனிதர்களுக்கான கடவுளுடைய நோக்கத்தை வெளிப்படுத்துவதோடு எதிர்காலத்தையும் எதிர்பார்ப்பையும் அளிக்கின்றன.
சரி, யெகோவா யார்? அவர் எப்படிப்பட்ட கடவுள்? நம்முடைய கைதேர்ந்த வடிவமைப்பாளர் நிஜமான ஓர் ஆள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களை அழைக்கிறார்கள். அவருடைய பெயர், பண்புகள், மனிதர்களை அவர் நடத்துகிற விதம் ஆகியவற்றை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். அவருடைய வார்த்தையாகிய பைபிளைப் படிப்பதன்மூலம் அவருடைய மிகச் சிறந்த வடிவமைப்பை ரசிப்பதோடுகூட வடிவமைப்பாளரான அவரை மகிமைப்படுத்தவும் வேண்டுமென்பதை நாம் புரிந்துகொள்வோம்.—சங்கீதம் 86:12; வெளிப்படுத்துதல் 4:11.
[பக்கம் 4-ன் படம்]
மைக்கலான்ஜலோ
[பக்கம் 5-ன் படம்]
வடிவமைப்பாளர் இருக்கிறார் என்ற நம்பிக்கை உண்மையான விஞ்ஞானத்துடன் ஒத்துப்போகிறது
[பக்கம் 6-ன் படம்]
புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பில் பல்வேறு வகைகள் இருப்பதற்கு பல்வகைமையும் மாற்றியமைத்துக்கொள்ளும் திறனும் சான்றளிக்கின்றன
[பக்கம் 7-ன் படம்]
வடிவமைப்புக்குப்பின் ஒரு வடிவமைப்பாளர் இருக்க வேண்டும்