கடல்களில் கோலோச்சிய “கித்தீமின் கப்பல்கள்”
கி ழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் நடந்த எண்ணற்ற போர்களில் கப்பற்படைகள் பங்கேற்றன. கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு போரைக் கற்பனை செய்துபாருங்கள். நினைத்த திசையில் செலுத்த முடிந்த டிரைரிம் போர்க் கப்பல் ஒன்று முழு வீச்சில் பயணிக்கிறது. பொதுவாக, இதுபோன்ற கப்பலின் இருபுறமும் மூன்று அடுக்குகளில் அமர்ந்து துடுப்பு வலிப்பார்கள். இந்தக் கப்பலில் துடுப்பு வலிப்பதற்கு சுமார் 170 பேர் மூன்று அடுக்குகளில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய முறுக்கேறிய கைகள் துடுப்புகளை முழு பலத்தோடு வலிக்கின்றன. இடுப்போடு சேர்த்து கட்டப்பட்ட தோல் மெத்தைகள் மீது அமர்ந்து முன்னும் பின்னுமாக சாய்ந்து அவர்கள் துடுப்பு வலிக்கிறார்கள்.
இந்தக் கப்பல், மணிக்கு எட்டு முதல் பத்து கடல் மைல்கள் வேகத்தில் அலைகளைக் கிழித்துக்கொண்டு, எதிரி கப்பலை நோக்கிச் சீறிப் பாய்கிறது. எதிரி கப்பல் தப்பிச் செல்ல வழிதேடுகிறது. இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் அது தவித்துக்கொண்டிருக்க, கப்பலின் பக்கவாட்டு பகுதி உடைகிறது. எதிரி கப்பல்களைச் சின்னாபின்னமாக்குவதற்கு டிரைரிம் கப்பலின் முன்புறத்தில் நீண்ட வெண்கல ஆயுதம் தண்ணீருக்கடியில் மறைந்திருக்கிறது. அதன் உதவியால் எதிரி கப்பலின் இலேசான பகுதியில் இது துளையிடுகிறது. பக்கவாட்டு பலகைகள் உடைபட்டு, அந்த ஓட்டை வழியாகத் தண்ணீர் குபுகுபுவென உள்ளே புகும் சத்தத்தைக் கேட்டதும் எதிரி கப்பலில் துடுப்பு வலிப்பவர்கள் திடுக்கிடுகிறார்கள். எதிரிகளைத் தாக்குவதற்காக டிரைரிம் கப்பலிலிருந்து ஆயுதமணிந்த சிலர் இடையே உள்ள நடைபாதை வழியாக அந்தக் கப்பலுக்குள் செல்கிறார்கள். ஆம், அந்தக் காலத்து கப்பல்களில் சில வெல்ல முடியாதவையாய் திகழ்ந்தன.
பைபிள் தீர்க்கதரிசனங்கள் சிலவற்றிலும், பைபிளின் மற்ற பகுதிகளிலும் காணப்படும் ‘கித்தீம்,’ “கித்தீமின் கப்பல்கள்” என்ற வார்த்தைகள் பைபிளை ஆழ்ந்து படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன. (எண்ணாகமம் 24:24; தானியேல் 11:30; ஏசாயா 23:1) கித்தீம் எங்கு இருந்தது? அதன் கப்பல்களைப் பற்றிய தகவல்கள் ஏதாவது இருக்கின்றனவா? பதில்களைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன பயன்?
யூத சரித்திராசிரியரான ஜொஸிஃபஸ் கித்தீமை “ஹெதீமாஸ்” என்று அழைத்தார். அதை சைப்ரஸ் [பண்டைய சீப்புரு] தீவுடன் சம்பந்தப்படுத்தி பேசினார். சைப்ரஸ் தீவின் தென்கிழக்குப் பகுதியில் இருந்த கீடியான் நகரம் (அதாவது, ஷிஷம்) சைப்ரஸுடன் கித்தீம் சம்பந்தப்பட்டிருந்தது என்பதற்குக் கூடுதல் சான்றளிக்கிறது. பண்டைய வர்த்தக மார்க்கங்களின் நாற்சந்தியில் சைப்ரஸ் அமைந்திருக்கிறது. கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்த துறைமுகங்களுக்கு அருகே சாதகமாக இடத்தில் அது அமைந்திருந்தது. இப்படி முக்கிய இடத்தில் அமைந்திருந்ததால், நாடுகளுக்கு இடையிலான போரில் அது ஏதாவது ஒரு பக்கத்தை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது. பலமான கூட்டணியாகவோ, பயமுறுத்தும் தடைக்கல்லாகவோ சைப்ரஸ் செயல்பட்டது.
சைப்ரஸ் மக்களும் கடலும்
அகழ்வாய்வில் கடலுக்கடியிலிருந்தும் சமாதிகளிலிருந்தும் தோண்டியெடுக்கப்பட்ட பொருள்கள், பூர்வகால எழுத்துகள், மண்பாண்டங்களில் காணப்படும் சித்திரங்கள் ஆகியவற்றின் உதவியோடு சைப்ரஸின் கப்பல்கள் எப்படியிருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. அன்றைய சைப்ரஸ்வாசிகள் கப்பல் கட்டுவதில் கில்லாடிகள். அந்தத் தீவில் அடர்ந்த காடுகள் இருந்தன. பாதுகாப்பான விரிகுடாக்கள் இயற்கை துறைமுகங்கள் உருவாகக் காரணமாயின. கப்பல் கட்டுவதற்கு மட்டுமின்றி செம்பை உருக்குவதற்கும் மரக்கட்டைகள் தேவைப்பட்டதால் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. பண்டைய சைப்ரஸ், செம்புக்குப் பெயர்போனதாய் விளங்கியது.
சைப்ரஸில் படுமும்முரமாக நடைபெற்ற ஏற்றுமதி, பெனிக்கேயர்களின் கண்களை உறுத்தியது. தங்களுடைய வர்த்தக மார்க்கத்தில் பல குடியேற்றங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அவற்றில் ஒன்றுதான் சைப்ரஸில் உள்ள கீடியான்.—ஏசாயா 23:10-12.
பெனிக்கேயின் முக்கியப் பட்டணமான தீருவின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதில் குடியிருந்த சிலர் கித்தீமில் தஞ்சம் புகுந்ததாகத் தெரிகிறது. பெனிக்கேயர்கள் திறமையான கப்பலோட்டிகள். சைப்ரஸ்வாசிகள் கப்பல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றப் படிகளில் ஏற பெனிக்கேய குடியேறிகள் பெரிதும் உதவினார்கள். கீடியானின் புவியியல் அமைப்பும் பெனிக்கேயர்களின் கப்பல்களுக்குச் சிறந்த பாதுகாப்பை அளித்தது.
பன்னாட்டு வணிகம்—படுமும்முரமாக!
இந்தச் சமயத்தில், கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் வணிகம் செய்வது படுசிக்கலாய் இருந்தது. சைப்ரஸிலிருந்து மதிப்புமிக்க பொருள்கள் கப்பல் மூலமாக கிரீட், சார்டீனியா, சிசிலி ஆகிய இடங்களுக்கும் ஏஜியன் பகுதியிலிருந்த தீவுகளுக்கும் அனுப்பப்பட்டன. இந்த இடங்களில் சைப்ரஸைச் சேர்ந்த ஜாடிகளும், பூ ஜாடிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நுணுக்கமான வேலைப்பாடுமிக்க மைசனியன் (கிரேக்க) மண்பாண்டங்கள் சைப்ரஸில் அதிகளவு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சார்டீனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட செம்பு வார்ப்புகளை ஆராய்ந்த சில அறிஞர்கள், அவை சைப்ரஸைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
பொ.ச.மு. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேதமடைந்ததாகக் கருதப்படும் கப்பல் தென் துருக்கியின் கரையோரமாக 1982-ல் கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியலாளர்கள் கடலுக்கடியிலிருந்து புதையலாகப் பலதரப்பட்ட பொருள்களைக் கண்டுபிடித்தார்கள். சைப்ரஸைச் சேர்ந்ததாக நம்பப்படுகிற செம்பு வார்ப்புகள், அம்பர் எனப்படும் ஒருவகை பிசின், கானானைச் சேர்ந்த ஜாடிகள், கருங்காலி மரக்கட்டை, யானை தந்தங்கள், கானானைச் சேர்ந்த பொன், வெள்ளி ஆபரணங்கள், பாதுகாப்புக்கு எகிப்தியர்கள் அணிந்த வண்டுவடிவ அணிகலன்கள் ஆகியவையும் எகிப்தைச் சேர்ந்த பிற பொருள்களும் அவற்றில் சில. கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட மண்பாண்டங்களை ஆராய்ந்தவர்கள் அதற்குப் பயன்படுத்தப்பட்ட களிமண்ணை வைத்து அந்தக் கப்பல் சைப்ரஸைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
மேற்குறிப்பிடப்பட்ட அந்தக் கப்பற்சேதம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிற கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், கித்தீமின் கப்பல்களைப்பற்றி பிலேயாம் தன் ‘வாக்கியத்தில்’ எடுத்துரைத்தார். (எண்ணாகமம் 24:15, 24) சைப்ரஸின் கப்பல்கள் மத்திய கிழக்கில் அதிக பிரபலமடைந்திருந்தது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கப்பல்கள் பார்க்க எப்படி இருந்தன?
வணிக கப்பல்கள்
சைப்ரஸைச் சேர்ந்த பூர்வ நகரமான அமாதஸில் உள்ள கல்லறைகளிலிருந்து களிமண்ணால் செய்யப்பட்ட மாதிரி கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் உதவியோடு சைப்ரஸின் கப்பல்கள் எப்படி இருந்திருக்கலாம் என்ற அரிய தகவல்களை நாம் பெறுகிறோம். அருங்காட்சியகங்களை இந்தக் கப்பல்களில் சில அலங்கரிக்கின்றன.
அந்தக் காலத்து கப்பல்கள் அமைதியான விதத்தில் வணிகத்தில் பயன்படுத்த உருவாக்கப்பட்டன என்பது அந்த மாதிரி கப்பல்களிலிருந்து தெரிய வருகிறது. சிறிய கப்பல்களில் பொதுவாக 20 ஆட்கள் துடுப்பு வலித்தார்கள். இவை அகலமாகவும் ஆழமாகவும் இருந்ததால் பொருள்களையும் ஆட்களையும் ஏற்றிச்செல்ல வசதியாக இருந்தன. சைப்ரஸின் கரையோரமாகச் சற்றுத் தொலைவிலிருந்த இடங்களுக்குச் செல்ல இவை பயன்படுத்தப்பட்டன. சைப்ரஸ்வாசிகள் சிறிய, கனம் குறைந்த, 90 டன் எடைவரை பொருள்களை ஏற்றிச் செல்ல முடிந்த கப்பல்களை வடிவமைத்தார்கள் என்று மூத்த பிளைனி குறிப்பிடுகிறார்.
துருக்கி கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற பெரிய வணிக கப்பல்களும் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில 450 டன் எடைவரை சரக்குகளை ஏற்றிச் செல்ல முடிந்தவை. பெரிய கப்பல்களில் ஒவ்வொரு பக்கத்திலும் 25 பேர் வீதம் துடுப்பு வலிக்க, 50 பேர் இருப்பார்கள். இவை 30 மீட்டர் நீளமுள்ளதாகவும், இவற்றின் பாய்மரம் 10 மீட்டருக்கும் அதிக உயரமுள்ளதாகவும் இருந்தன.
பைபிள் தீர்க்கதரிசனத்தில் ‘கித்தீம்’ போர்க் கப்பல்கள்
யெகோவாவின் ஆவியே பின்வரும் அறிவிப்புக்குக் காரணமாய் இருந்தது: ‘சித்தீமின் [அதாவது, கித்தீமின்] கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் [அதாவது, அசீரியாவை] சிறுமைப்படுத்தும்.’ (எண்ணாகமம் 24:2, 24) இது நிறைவேறியதா? இதன் நிறைவேற்றத்தில் சைப்ரஸ் கப்பல்களின் பங்கென்ன? ‘சித்தீமின் கரைதுறையிலிருந்து’ வந்த “கப்பல்கள்,” சமாதானமாக வணிகம் செய்வதற்காக மத்தியதரைக்கடல் பகுதியில் வலம் வந்த கப்பல்கள் அல்ல. அவை மக்களுக்குக் கஷ்டத்தைக் கொடுத்த போர்க் கப்பல்கள்.
போரிடும் முறைகள் மாறியதும், அதற்கேற்ப கப்பலின் வடிவமைப்புகளும் மாறின; அதிவேகமாக செல்கிற, சக்திவாய்ந்த கப்பல்கள் உருவாக்கப்பட்டன. அமாதஸில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது, ஒருவேளை பூர்வ கால சைப்ரஸ் போர்க் கப்பல்களாக இருந்திருக்கலாம். அதில் காணப்பட்ட கப்பல் நீளமானதாயும், பருமன் குறைந்ததாயும் இருந்தது. அதன் பின்புறம் மேலே நீண்டு, உட்புறமாகச் சற்றே வளைந்திருந்தது. பார்ப்பதற்கு பெனிக்கேய போர்க் கப்பலைப் போலிருந்தது. எதிரி கப்பல்களைத் தாக்குவதற்கான கொம்பு போன்ற அமைப்பும், கப்பலின் இருபுறமும் வட்ட வடிவ கேடயங்களும் இருந்தன.
பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் கிரீஸில் முதன்முதலாக பைரிம் (கப்பலில் இருபுறமும் துடுப்பு வலிப்பவர்கள் இரண்டு அடுக்குகளில் அமர்ந்திருப்பார்கள்) கப்பல்கள் கட்டப்பட்டன. இவை 24 மீட்டர் நீளமாகவும் 3 மீட்டர் அகலமாகவும் இருந்தன. ஆரம்பத்தில், போர் வீரர்களை ஏற்றிச் செல்ல கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன; ஆனால், சண்டை நிலப்பகுதியில்தான் நடந்தது. சீக்கிரத்தில், இரண்டு தளங்களில் அல்ல, ஆனால் மூன்று தளங்களில் துடுப்பு வலிப்பவர்களைப் பயன்படுத்துவதன் உபயோகம் புரிந்தது. கப்பலின் முன்புறத்தில் வெண்கலத்தாலான கூர்மையான ஆயுதம் பொருத்தப்பட்டிருந்தது. இந்தப் புதிய கப்பலே இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட டிரைரிம் கப்பலாகும். இந்த வகை கப்பல்கள், சலாமிஸ் போரில் (பொ.ச.மு. 480) பிரபலமடைந்தன; அந்தப் போரில் பெர்ஸிய கப்பற்படையை கிரேக்கர்கள் தோற்கடித்தார்கள்.
பிற்பாடு, அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்துவந்த மகா அலெக்சாந்தர், தனது டிரைரிம் கப்பற்படையை கிழக்கு திசையில் வழிநடத்தினார். இந்தக் கப்பல்கள் போருக்காகவே வடிவமைக்கப்பட்டிருந்தன; ஆழமான கடல்களில், நீண்ட தூரம் பயணிக்க இவை வடிவமைக்கப்படவில்லை. ஏனெனில், பொருள்களைச் சேமித்து வைப்பதற்கு மிகக் குறைவான இடமே இவற்றில் இருந்தன. இதனால், ஏஜியன் கடல்பகுதியில் அமைந்துள்ள தீவுகளில் இடையிடையே நிறுத்தி, பொருள்களை வாங்கவும், பழுதுபார்க்கவும் வேண்டியதாயிற்று. பெர்ஸிய கப்பற்படையைக் கபளீகரம் செய்வதுதான் அலெக்சாந்தரின் இலட்சியமாக இருந்தது. அதற்கு அவர் வெல்ல முடியாததாய் தோன்றிய, அரணான தீருவை முதலில் அடிபணிய வைக்க வேண்டியிருந்தது. தீருவுக்குச் செல்லும் வழியில் இடையே நிறுத்துவதற்கான இடமாக சைப்ரஸ் இருந்தது.
தீருவின் முற்றுகையின்போது (பொ.ச.மு. 332) சைப்ரஸ் தீவினர், மகா அலெக்சாந்தரை ஆதரித்தார்கள். 120 கப்பல்களைக் கொடுத்து உதவினார்கள். அலெக்சாந்தருக்குத் துணையாய் போரில் களமிறங்க சைப்ரஸ் அரசர்கள் மூவர் கப்பற்படையோடு சென்றார்கள். தீருவின் மீது ஏழு மாத காலம் முற்றுகை நீடித்தது. இந்த அரசர்கள் இதில் துணைபுரிந்தார்கள். பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக தீரு வீழ்ச்சியடைந்தது. (எசேக்கியேல் 26:3, 4; சகரியா 9:3, 4) சைப்ரஸ் அரசர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், அலெக்சாந்தர் அவர்களுக்கு விசேஷ அதிகாரத்தை வழங்கினார்.
குறிப்பிடத்தக்க நிறைவேற்றம்
அரேபியாவுக்கு எதிராகப் போரிட அலெக்சாந்தர் சென்றபோது, கப்பற்படைகளை அனுப்பும்படி சைப்ரஸிடமும் பெனிக்கேயிடமும் கேட்டுக்கொண்டதாக முதல் நூற்றாண்டு சரித்திராசிரியரான ஸ்டிராபோ கூறுகிறார். இந்தக் கப்பல்கள் கனமற்றவையாகவும், பிரித்தெடுப்பதற்கு வசதியாகவும் இருந்தன. இவை வட சிரியாவிலுள்ள தப்ஸிகஸ் (டிப்ஸா) நகரத்திற்கு ஏழே நாளில் போய்ச் சேர்ந்துவிட்டன. (1 இராஜாக்கள் 4:24) அங்கிருந்து பாபிலோனுக்குப் பயணிப்பது எளிதாய் இருந்தது.
இப்படியாக, படிக்கும்போது ஒன்றுமே புரியாததுபோல் தெரிந்த பைபிள் வாக்கியம் சுமார் பத்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க விதமாய் நிறைவேறியது. எண்ணாகமம் 24:24-ன்படி, மகா அலெக்சாந்தரின் ராணுவம் மாசிடோனியாவிலிருந்து கிழக்கு நோக்கி எளிதாக முன்னேறி, அசீரியாவைக் கைப்பற்றியது. கடைசியில், வலிமைவாய்ந்த மேதிய பெர்ஸிய வல்லரசை வீழ்த்தியது.
“கித்தீமின் கப்பல்கள்” பற்றி நமக்குத் தெரிந்த கொஞ்சநஞ்ச தகவல்களே பைபிள் தீர்க்கதரிசனம் வியப்பூட்டும் விதத்தில் நிறைவேற்றமடைந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. இதுபோன்ற சரித்திரப்பூர்வ ஆதாரங்கள், பைபிளில் காணப்படும் தீர்க்கதரிசனங்கள்மீது நம் நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. இவற்றில் அநேக தீர்க்கதரிசனங்கள் நம்முடைய எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டுள்ளன. ஆகவே, அவற்றை நாம் கவனமாய் ஆராய வேண்டும்.
[பக்கம் 16, 17-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இத்தாலி
சார்டீனியா
சிசிலி
ஏஜியன் கடல்
கிரீஸ்
கிரீட்
லிபியா
துருக்கி
சைப்ரஸ்
கீடியான்
தீரு
எகிப்து
[பக்கம் 16-ன் படம்]
கிரேக்க டிரைரிம் போர்க் கப்பலின் மாதிரி
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 17-ன் படம்]
பூர்வ பெனிக்கேய பைரிம் போர்க் கப்பலின் மாதிரி
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 17-ன் படம்]
சைப்ரஸ் கப்பலை சித்தரிக்கும் பூ ஜாடி
[படத்திற்கான நன்றி]
Published by permission of the Director of Antiquities and the Cyprus Museum
[பக்கம் 18-ன் படம்]
ஏசாயா 60:9-ல் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்ற பூர்வகால சரக்குக் கப்பல்கள்