வாழ்க்கை சரிதை
புதிய உலகை நோக்கி பயணம்
ஜேக் பிராம்பர்க் சொன்னபடி
சுவீடன் நாட்டின் மையத்தில் ஆர்பூகா என்ற சிறிய நகரம் உள்ளது. இயற்கை வனப்புடன் காட்சி அளிக்கிற இந்த நகரத்திற்கு அருகில்தான் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் இருக்கிறது; இங்கே 80-க்கும் அதிகமானோர் சேவை செய்கிறார்கள். இங்குதான் நானும் என் மனைவி காரினும் வசிக்கிறோம், சேவையும் செய்கிறோம். நாங்கள் எப்படி இங்கே வந்தோம் தெரியுமா?
ப த்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையவிருந்த சமயத்தில், சுவீடனைச் சேர்ந்த 15 வயது பெண் அமெரிக்காவில் போய்க் குடியேறினாள். நியு யார்க் நகரில், குடியேறிகளின் முகாம் ஒன்றில் சுவீடனைச் சேர்ந்த மாலுமி ஒருவரைச் சந்தித்தாள். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது, கல்யாணம் நடந்தது, இவர்களுடைய செல்ல மகனாக நான் பிறந்தேன். அமெரிக்காவில், நியு யார்க்கிலுள்ள பிராங்ஸ் நகரத்தில் 1916-ல் பிறந்தேன். அப்போது, முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது.
இதன் பிறகு சீக்கிரத்திலேயே, நாங்கள் புருக்லினுக்குக் குடிமாறிச் சென்றோம். புருக்லின் ஹைட்ஸிலிருந்து சில தெருக்கள் தள்ளி குடியிருந்தோம். இந்த புருக்லின் பாலத்திற்கு அருகில்தான் புதிய வகை கப்பல் ஒன்றில் என் அப்பாவும் நானும் பயணித்ததாகப் பிற்பாடு அவர் கூறினார். யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகக் கட்டடத்திலிருந்து பார்த்தால் இந்தப் பாலம் பளிச்செனத் தெரியும். அங்கு நடைபெறுகிற வேலை, என் வாழ்க்கையை எந்தளவு மாற்றப்போகிறது என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
1918-ல் முதல் உலக போர் ஓய்ந்தது. ஐரோப்பாவில், அப்பாவி ஜனங்களை அநாவசியமாகக் கொன்று குவிப்பது அப்போதைக்கு நிறுத்தப்பட்டது. போர்வீரர்கள் வீடு திரும்பியதும், வேலையில்லா திண்டாட்டம், ஏழ்மை போன்ற புது பிரச்சினைகளோடு மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. சுவீடனுக்குத் திரும்பிச் செல்வதுதான் நல்லதென அப்பா நினைத்தார். எனவே, 1923-ல் நாங்கள் சுவீடனுக்குத் திரும்பினோம். டால்ஸ்லேண்ட் பகுதியில், ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த ஈரிக்ஸ்டாட் என்ற குக்கிராமத்தில் நாங்கள் குடியேறினோம். இங்கு என் அப்பா, இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்கு சொந்தமாக பட்டறை ஒன்றை ஆரம்பித்தார். நான் வளர்ந்ததும் படித்ததும் இந்தக் கிராமத்தில்தான்.
விதை ஒன்று விதைக்கப்பட்டது
அப்பாவுடைய தொழில் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அதனால், 1930-களின் ஆரம்பத்தில் மீண்டும் மாலுமியானார். நானும் அம்மாவும் தனிமையில் விடப்பட்டோம். அம்மா ஏகப்பட்ட பிரச்சினைகளோடு போராடினார், பட்டறையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என் தலையில் விழுந்தது. அம்மா ஒருநாள் என் பெரியப்பாவைப் பார்ப்பதற்குப் போனார். அவருடைய பெயர் யூஹான். உலக நிலையைப்பற்றிய கவலை அம்மாவை வாட்டியதால், “நிலைமைகள் இப்படியே இருக்கப்போகிறதா யூஹான்?” என்று கேட்டார்.
“இல்லை ரூத்” என்று அவர் பதில் அளித்தார். துன்மார்க்கத்துக்கு முடிவுகட்டப் போவதாகவும், இயேசு கிறிஸ்துவின் தலைமையில் பூமியில் நீதியான அரசாங்கத்தை ஏற்படுத்தப் போவதாகவும் கடவுள் அளித்திருக்கும் வாக்குறுதியைப்பற்றி அவர் விளக்கினார். (ஏசாயா 9:6, 7; தானியேல் 2:44) எந்த ராஜ்யத்திற்காக ஜெபிக்கும்படி இயேசு கற்றுக்கொடுத்தாரோ அந்த ராஜ்யமே நீதியான அரசாங்கமாய் இருக்கும், அதுவே இந்தப் பூமியை பூங்காவனமாய் மாற்றும் என்றும்கூட அவர் விளக்கினார்.—மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:3, 4.
பைபிளிலுள்ள அந்த வாக்குறுதிகள் அப்போதே அம்மாவின் நெஞ்சில் ஆழப் பதிந்தன. வழிநெடுக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டே அவர் வீடு வந்து சேர்ந்தார். ஆனால், அம்மாவுக்கு மதப்பற்று அதிகமானது எனக்கும் அப்பாவுக்கும் பிடிக்கவில்லை. அந்தச் சமயத்தில், 1935 வாக்கில், சுவீடனின் மேற்குப் பகுதியில் ட்ரால்ஹெட்டன் என்ற நகரத்திற்கு நான் சென்றேன். அங்கிருந்த ஒரு பெரிய பட்டறையில் எனக்கு வேலை கிடைத்தது. அந்தச் சமயத்தில், மாலுமி வேலையை விட்டுவிட்டு என் அப்பா வீடு திரும்பியிருந்தார். அவரும் அம்மாவும் நான் இருந்த நகரத்திற்கே குடிமாறி வந்துவிட்டார்கள். மீண்டும் குடும்பமாக நாங்கள் ஒன்றுசேர்ந்தோம்.
கடவுளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்கிற ஆசையில் அம்மா அந்தப் பகுதியில் யெகோவாவின் சாட்சிகள் எங்கிருக்கிறார்களென தேடிக் கண்டுபிடித்தார். அந்தச் சமயத்தில், ஆரம்ப கால கிறிஸ்தவர்களைப்போல இவர்கள் கூட்டங்களை ஒவ்வொருவருடைய வீட்டிலும் மாறி மாறி நடத்தினார்கள். (பிலேமோன் 1, 2) கூட்டத்தை எங்களுடைய வீட்டில் நடத்துவதற்கான முறை வந்தது. தன்னுடைய நண்பர்களை வீட்டுக்கு அழைப்பதற்கு அப்பா சம்மதிப்பாரா, மாட்டாரா என்ற கவலையோடு அம்மா அவரிடம் அனுமதி கேட்டார். “அவர்கள் உனக்கு நண்பர்கள் என்றால் எனக்கும் நண்பர்கள்தான்” என அப்பா பதில் அளித்தார்.
இப்படித்தான் கூட்டங்களுக்காக எங்கள் வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டன. ஆட்கள் வீட்டில் நுழையும்போது நான் வெளியே போய்விடுவேன். ஆனால், நாளடைவில் கூட்டங்களுக்கு வருகையில் வீட்டிலேயே இருக்கத் தீர்மானித்தேன். யெகோவாவின் சாட்சிகள் அன்பாகப் பழகியதும், எளிய விதத்தில் விஷயங்களை நியாயமாய் விளக்கியதும் என் மனதிலிருந்த தப்பெண்ணத்தைத் தகர்த்தன. ஒளிமயமான எதிர்கால நம்பிக்கை என்ற விதை என் இதயத்தில் முளைக்க ஆரம்பித்தது.
மாலுமியாக
கடல் பயணத்திற்கான ஆசை என் இரத்தத்திலேயே ஊறினதோ என்னவோ, அப்பாவுக்குத் தப்பாத பிள்ளையாக நானும் மாலுமி ஆனேன். அதே சமயத்தில் கடவுளிடம் நெருங்கிய பந்தத்தை உருவாக்கிக்கொள்வது அவசியம் என்பதையும் நன்கு உணர்ந்தேன். துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிட்டு நிற்கும்போதெல்லாம் யெகோவாவின் சாட்சிகளைச் சந்திக்க முயற்சி செய்தேன். ஹாலந்து நாட்டில் (இன்றைய நெதர்லாந்தில்) உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் யெகோவாவின் சாட்சிகளை எங்கே பார்க்க முடியுமெனத் தெரிந்துகொள்ள தபால் நிலையத்திற்குப் போனேன். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு எனக்கு விலாசம் கிடைத்தது; உடனடியாக அந்த விலாசத்துக்குச் சென்றேன். கதவைத் திறந்த பத்து வயது சிறுமி என்னை அன்பாக வரவேற்றாள். எனக்கு அவர்களை முன்பின் தெரியாது; இருந்தாலும், அவர்களோடு ரொம்ப காலம் பழகியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. இப்படியாக, உலகெங்குமுள்ள சகோதரர்கள் அனுபவிக்கிற அருமையான ஐக்கியத்தை ருசித்தேன்!
அந்தக் குடும்பத்தார் பேசிய மொழி எனக்குத் தெரியவில்லை, என் மொழியும் அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் காலண்டரையும் ரயில்வே அட்டவணையையும் எடுத்தார்கள், வரைபடத்தை வரைய ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்த பிறகு, அருகே இருந்த ஹார்லம் என்ற நகரில் ஒரு மாநாடு நடக்கவிருப்பதைப் புரிந்துகொண்டேன். நானும் போனேன், அந்த மாநாட்டில் ஒரு வார்த்தைகூட எனக்கு புரியவில்லை, ஆனாலும் மாநாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பொதுப் பேச்சுக்கான அழைப்பிதழை போவோர், வருவோருக்கு சாட்சிகள் கொடுத்ததைப் பார்த்தபோது எனக்கும் அப்படி வினியோகிக்க ஆசையாய் இருந்தது. எனவே, மக்கள் வீசியெறிந்த அழைப்பிதழ்களைப் பொறுக்கியெடுத்து, அந்த வழியே செல்பவர்களுக்கு அவற்றை மீண்டும் வினியோகித்தேன்.
ஒருசமயம், அர்ஜென்டினா நாட்டிலுள்ள ப்யூனஸ் அயர்ஸ் துறைமுகத்தில் எங்கள் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நின்றது. அங்கு யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் இருப்பதை அறிந்தேன். இரவில் வெகு தாமதமாக அங்கே போய்ச் சேர்ந்தேன். அதன் உள்ளே ஓர் அலுவலக அறையும் சேமிப்பு அறையும் இருந்தன. முன்பக்க அறையில் ஒரு பெண் அமர்ந்து ஏதோ பின்னிக்கொண்டிருந்தார்; பக்கத்தில் ஒரு சின்னப் பெண் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் அவருடைய மகள் என நினைக்கிறேன். அங்கிருந்த ஒருவர் புத்தக அலமாரியிலிருந்து சில புத்தகங்களை எடுத்துக் கொண்டிருந்தார்; அதில், ஸ்வீடிஷ் மொழியிலுள்ள படைப்பு என்ற புத்தகமும் இருந்தது. அவர்கள் முகத்தில் சந்தோஷ ரேகை படர்ந்திருந்ததைப் பார்த்தபோது, நானும் யெகோவாவின் சாட்சியாக மாறி அந்தச் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமென விரும்பினேன்.
பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது, கனடாவின் ராணுவ விமானம் ஒன்று நியூபௌண்ட்லாந்திற்கு அருகே நொறுங்கி விழுந்திருந்ததைப் பார்த்தோம்; அதிலிருந்தவர்களை எங்கள் கப்பலில் ஏற்றிக்கொண்டோம். சில தினங்களுக்குப் பிறகு, ஸ்காட்லாந்தை நெருங்கும்போது ஆங்கிலேய கப்பற்படையைச் சேர்ந்த படகு எங்களை மறித்தது, நாங்கள் கைதுசெய்யப்பட்டு, ஆர்க்னி தீவுகளிலிருந்த கர்க்வால் என்ற நகரத்திற்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டோம். அந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப் போர் கோரமுகத்தைக் காட்ட ஆரம்பித்திருந்தது; 1939, செப்டம்பர் மாதம் ஹிட்லரின் நாசி படைகள் போலந்தின்மீது படையெடுத்தன. சில தினங்களுக்குப் பிறகு நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்; பிரச்சினை எதுவும் இல்லாமல் சுவீடனுக்குத் திரும்பினோம்.
ஒருவழியாக நான் வீடு திரும்பினேன்; அதோடு, கடவுளோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்தினேன். கடவுளுடைய மக்களில் ஒருவராய் இருக்க உண்மையிலேயே அதிக ஆசைப்பட்டேன்; அவர்களோடு சேர்ந்து சபைக் கூட்டங்கள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொள்ளவும் விரும்பினேன். (எபிரெயர் 10:24, 25) மாலுமியாக வேலை செய்தபோது, நான் எப்போதும் மற்ற மாலுமிகளிடம் கடவுளைப்பற்றிப் பேசினேன்; அவர்களில் ஒருவர் யெகோவாவின் சாட்சியாக ஆனார் என்பதும் எனக்கு நினைவிருக்கிறது; இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது தேனாய் இனிக்கிறது.
விசேஷ ஊழியம்
1940-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் ஸ்டாக்ஹோம் நகரிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்குப் போனேன். அங்கே, யூஹான் எச். ஈனரோட் என்பவர் என்னை அன்பாக வரவேற்றார். அவர் அப்போது சுவீடனில் செய்யப்பட்டு வந்த பிரசங்க வேலையை மேற்பார்வை செய்து வந்தார். பயனியராக முழுநேரமும் பிரசங்க வேலையில் ஈடுபட ஆசைப்படுவதாக அவரிடம் சொன்னபோது, என்னை உற்றுப்பார்த்தபடி, “இது கடவுளுடைய அமைப்பு என்று நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
“ஆமாம், நம்புகிறேன்” என்று பதில் அளித்தேன். இது, 1940, ஜூன் 22-ஆம் தேதி நான் முழுக்காட்டுதல் பெறுவதற்கு வழிவகுத்தது; இப்படியாக, அந்தக் கிளை அலுவலகத்தின் அழகான சூழலில் அன்பான சக ஊழியர்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளை ஊழியத்திலேயே கழித்தோம். கோடைகாலத்தில், பெரும்பாலும் தூரமான இடங்களுக்கு சைக்கிள்களில் சென்றோம்; வாரயிறுதி நாட்களை முழுக்க முழுக்க ஊழியத்திற்கே பயன்படுத்தினோம், இரவு வேளைகளில் வைக்கோல்போரின்மீது படுத்துத் தூங்கினோம்.
எனினும், ஸ்டாக்ஹோமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும்தான் வீட்டுக்கு வீடு போய் பிரசங்கித்தோம். ஒருசமயம், தன் வீட்டின் கீழ்த்தளத்தில் ஒருவர் அரக்கப்பரக்க பாய்லரை சரிசெய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். என் முழுக்கைச் சட்டையின் கையை மடித்துவிட்டுக்கொண்டு, அவருக்கு உதவச் சென்றேன். பாய்லர் ஒழுகுவது நின்றுபோனதும் அவர் நன்றியோடு என்னைப் பார்த்தார். “நீங்கள் வேறு ஏதோ விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வாங்க, மேலே வீட்டுக்குப் போவோம், கைகளைக் கழுவிக்கொண்டு, காபி குடிப்போம்” என்று அழைத்தார். அதேபோல் வீட்டுக்குப் போய் காபியை ருசித்துக்கொண்டே கடவுளைப்பற்றி அவரிடம் பேசினேன். நாளடைவில், இவரும் யெகோவாவின் சாட்சியாக மாறினார்.
போரில் எந்தப் பக்கத்தையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பதாக சுவீடன் அதிகாரப்பூர்வமாய் பிரகடனம் செய்திருந்தபோதிலும் அதன் குடிமக்கள் போரால் பாதிக்கப்பட்டார்கள். ஆண்கள் அநேகரை ராணுவத்தில் சேரச் சொன்னார்கள், என்னையும்தான். ராணுவ அணிவகுப்புப் பயிற்சிகளில் கலந்துகொள்ள நான் மறுத்ததால் அவ்வப்போது கொஞ்ச காலத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டேன். பிறகு, போர் கைதிகளுக்கான முகாமில் பணிபுரியும் தண்டனை பெற்றேன். யெகோவாவின் சாட்சிகளான இளைஞர்கள் அடிக்கடி நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்கள்; அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப்பற்றிச் சாட்சிகொடுக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. “அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்” என இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தை இது நிறைவேற்றியது.—மத்தேயு 10:18.
வாழ்க்கை மாறியது
1945-ல் ஐரோப்பா எங்கும் யுத்தத்தின் சத்தம் ஓய்ந்தது. பின்னர், அதே வருடத்தில் எங்களைச் சந்திக்க நேதன் ஹெச். நார் புருக்லினிலிருந்து வந்தார்; உலகளாவிய வேலையை அப்போது முன்நின்று வழிநடத்திய இவர், தன்னுடைய செயலர் மில்டன் ஹென்ஷலுடன் வந்தார். அவர்களுடைய வருகை, சுவீடனில் நடந்துவந்த பிரசங்க வேலையை மீண்டும் ஒழுங்கமைப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தது; என் வாழ்க்கையிலும்தான். உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது உடனடியாக அதற்கு விண்ணப்பித்தேன்.
மறுவருடம், அந்தப் பள்ளியின் வகுப்பறையில் நானும் அமர்ந்திருந்தேன்; அந்தப் பள்ளி அப்போது, நியு யார்க்கிலுள்ள செளத் லான்சிங் நகருக்கு அருகே இருந்தது. அதில் ஐந்து மாதங்களுக்குப் பயிற்சி பெற்றேன்; இந்தப் பயிற்சி, பைபிளிடமும் கடவுளுடைய அமைப்பிடமும் இருந்த நன்றியுணர்வை ஆழமாக்கியது. உலகளாவிய பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்துபவர்கள் பாசமாய் பழகுபவர்கள், மற்றவர்களைப் புரிந்துகொண்டு நடப்பவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். எங்கள் எல்லாருடனும் தோளோடு தோள் சேர்ந்து அவர்கள் கடினமாய் உழைத்தார்கள். (மத்தேயு 24:14) இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்காவிட்டாலும், அதை நானே கண்ணாரக் கண்டது ஆனந்தத்தை அளித்தது.
கிலியட் பள்ளியின் எட்டாவது வகுப்பில் பயின்றவர்கள் பட்டம் பெறுவதற்கான நாள் சீக்கிரத்திலேயே வந்தது. அந்தப் பட்டமளிப்பு விழா 1947, பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி நடைபெற்றது. மாணாக்கர்களாகிய நாங்கள் எந்தெந்த நாடுகளுக்குச் செல்லவிருக்கிறோம் என்பதை சகோதரர் நார் அறிவித்தார். என்னுடைய முறை வந்தபோது, “சகோதரர் பிராம்பர்க் தன்னுடைய சகோதரர்களுக்குச் சேவை செய்ய சுவீடனுக்குத் திரும்புகிறார்” என அறிவித்தார். வீடு திரும்புவதைக் குறித்து அந்தளவுக்கு நான் சந்தோஷப்படவில்லை என்பதை மறைக்காமல் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
மாபெரும் சவாலைச் சமாளித்தல்
மாவட்ட கண்காணியாக இருந்து சபைகளுக்கு உதவி செய்கிற புதியதொரு ஊழியம் உலகெங்குமுள்ள பல நாடுகளில் ஆரம்பமாவதை சுவீடன் திரும்பியதும் அறிந்தேன். சுவீடனின் முதல் மாவட்டக் கண்காணியாகப் பொறுப்பளிக்கப்பட்டேன், நாடு முழுவதும் உள்ள எல்லா சபைகளையும் போய்ப் பார்ப்பது என் வேலையாய் இருந்தது. வட்டார மாநாடுகள் என இப்போது அழைக்கப்படுகிற மாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்தினேன்; இவை சுவீடன் முழுவதிலும் உள்ள நகரங்களிலும் மாநகரங்களில் நடைபெற்றன. இது முற்றிலும் புதிய ஏற்பாடாக இருந்ததால் இவற்றை நடத்துவது சம்பந்தமாக ஒருசில ஆலோசனைகளையே பெற்றிருந்தேன். நானும் சகோதரர் ஈனரோட்டும் உட்கார்ந்து, எங்களால் முடிந்தவரை சிறப்பாக நிகழ்ச்சியை நடத்துவதற்குத் திட்டத்தைத் தயாரித்தோம். இந்தப் பொறுப்பைப் பெற்றபோது பயம் என்னைக் கவ்விக்கொண்டது. எனவே, யெகோவாவின் உதவியைப் பெற கணக்கு வழக்கில்லாமல் ஜெபித்தேன். 15 வருடங்களுக்கு மாவட்டக் கண்காணியாக சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேன்.
அந்தக் காலத்தில், கூட்டங்களை நடத்துவதற்குப் பொருத்தமான இடங்களைக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பாய் இருந்தது. கூட்டங்களை நடத்த நடன மன்றங்கள் போன்ற சில இடங்கள் கிடைத்தன. இவை பெரும்பாலும் கதகதப்பூட்டுவதற்குப் போதுமான வசதியில்லாதவையாக இருந்தன; அதோடு, சில சமயங்களில் அவை சரிவர பராமரிக்கப்படாமலும் இருந்தன. ஆனாலும் கூட்டங்களை நடத்த முடிந்ததே என திருப்திப்பட்டுக்கொண்டோம். பின்லாந்து நாட்டில், ரோக்கியோ என்ற இடத்தில் நடைபெற்ற மாநாடு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. கொஞ்ச காலமாக யாரும் உபயோகிக்காதிருந்த பழங்கால சமுதாயக் கூடம் ஒன்றில் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது, பனிப்புயல் வீசிக்கொண்டிருந்தது. வெப்பநிலை -20 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. கதகதப்பூட்டுவதற்கு, எண்ணெய் பீப்பாயால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான இரண்டு அடுப்புகளில் நெருப்பு மூட்டினோம். ஆனால், புகை வெளியேறாதபடி புகைக்கூண்டில் பறவைகள் கூடுகளைக் கட்டியிருந்ததை அறியாது போனோம். எங்களைச் சுற்றிலும் ஒரே புகை! இருப்பினும், கோட்டு அணிந்து மாநாட்டுக்கு வந்திருந்த எல்லாரும், புகையால் கண்கள் எரிந்தாலும் பொறுத்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தார்கள், யாரும் எழுந்துபோகவில்லை. இந்தச் சம்பவம் இந்த மாநாட்டை மறக்க முடியாததாக்கிவிட்டது.
மூன்று நாள் வட்டார மாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்துவது சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட அறிவுரைகளில் மாநாட்டுக்கு வருவோருக்காக உணவு தயாரித்து அளிப்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பத்தில், இப்படித் தயாரித்து அளிப்பதற்குத் தேவையான பாத்திர பண்டங்களோ அனுபவமோ இல்லை. ஆனால், நம்முடைய அருமையான சகோதர சகோதரிகள் இந்தக் கடினமான வேலையைச் செய்ய சந்தோஷமாய் முன்வந்தார்கள். மாநாட்டிற்கு முன்தினம், அகலமான தொட்டியின் முன்பாக குனிந்து உட்கார்ந்தபடி உருளைக்கிழங்கின் தோலை சீவியவாறே ஒருவருக்கொருவர் அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டு, குதூகலமாய் பேசிக்கொண்டிருந்தார்கள். இதுபோன்று, சகோதர சகோதரிகள் ஒன்றுசேர்ந்து கடினமாய் வேலைசெய்த சந்தர்ப்பங்கள் நீண்டகால நட்புறவுகளுக்கு வித்திட்டன.
அந்தக் காலத்தில், வட்டார மாநாடுகளை விளம்பரப்படுத்திய அட்டைகளை அணிந்துகொண்டு ஊர்வலமாய் நடப்பது எங்கள் வேலையின் மற்றொரு அம்சமாகும். நகரத்தின் அல்லது கிராமத்தின் வீதிகளில் ஊர்வலமாய் நடந்து, பொதுப் பேச்சுக்கு வரும்படி அங்கிருந்தவர்களுக்கு அழைப்புவிடுத்தோம். பொதுவாக ஜனங்கள் கனிவோடும் மரியாதையோடும் நடந்துகொண்டார்கள். ஒருசமயம் ஃபின்ஸ்போங் நகரத்தில், தொழிற்சாலையிலிருந்து வீடுதிரும்புகிற தொழிலாளர்கள் சாலையின் இருபுறமும் நின்றிருந்தார்கள். திடீரென அவர்களில் ஒருவர், “இதோ, ஹிட்லரால் வெல்ல முடியாத அந்த ஜனங்களைப் பாருங்கள்!” என்று சத்தமாய்ச் சொன்னார்.
என் வாழ்வின் முக்கியமான நிகழ்ச்சி
காரின் என்ற அருமையான இளம் பெண்ணைச் சந்தித்த பிறகு, பயண ஊழியராக என் வாழ்க்கை சீக்கிரத்தில் மாறவிருந்தது. 1953, ஜூலை மாதத்தில் நியு யார்க் நகரின் யாங்கி மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள எங்கள் இருவருக்கும் அழைப்பு கிடைத்தது. 20-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று எங்கள் திருமணத்தை மாநாட்டின் மதிய இடைவேளையின்போது மில்டன் ஹென்ஷல் நடத்தி வைத்தார். மிகப் பிரபலமான இந்த பேஸ்பால் மைதானத்தில் நடந்த அரிய நிகழ்ச்சி இது. 1962 வரை நாங்கள் பயண ஊழியம் செய்து வந்தோம்; பிறகு, சுவீடன் பெத்தேல் குடும்பத்தாரோடு சேர்ந்து சேவை செய்ய அழைப்பைப் பெற்றோம். ஆரம்பத்தில், பத்திரிகை இலாகாவில் நான் வேலை செய்தேன். பிறகு, இயந்திரங்கள் சம்பந்தமான பயிற்சி பெற்றிருந்ததால், அச்சகங்களில் இருந்த இயந்திரங்களையும் கிளை அலுவலகத்திலிருந்த பிற இயந்திரங்களையும் பராமரிக்கும் வேலை கொடுக்கப்பட்டது; காரின், பல வருடங்களுக்கு சலவையகத்தில் சேவை செய்து வந்தாள். இப்போது அநேக வருடங்களாக பிழைத்திருத்தும் இலாகாவில் சேவை செய்து வருகிறாள்.
மணவாழ்வில் நாங்கள் இருவரும் இணைந்ததுமுதல் 54-க்கும் அதிக வருடங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறோம். இந்த வருடங்களில், நெஞ்சைவிட்டு நீங்காத நிகழ்ச்சிகள் நிறைந்த, அர்த்தமுள்ள, ஆனந்தமான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்திருக்கிறோம்! கடினமாய் உழைக்கிற, நேசத்தைப் பொழிகிற மக்கள் உள்ள தம்முடைய அமைப்பை யெகோவா உண்மையிலேயே ஆசீர்வதித்திருக்கிறார். 1940-ல், கிளை அலுவலகத்தில் நான் வேலை செய்ய ஆரம்பித்தபோது சுவீடனில் 1,500 யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே இருந்தார்கள். இன்றோ, 22,000-க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். இதுபோன்ற வளர்ச்சி உலகின் பிற பகுதிகளில் இன்னுமதிகமாயிருக்கிறது; இப்படியாக, உலகெங்கும் சாட்சிகளின் எண்ணிக்கை இன்று 65 லட்சத்தையும் தாண்டிவிட்டது.
யெகோவாவுடைய பரிசுத்த ஆவியே நம் பிரசங்க வேலையை வழிநடத்துகிறது; கப்பலை பாய்மரம் நடத்திச் செல்வதுபோல அது நம்மை எப்போதும் நடத்திச் செல்கிறது. ஆட்டம்காணா விசுவாசம் நமக்கு இருப்பதால், கொந்தளிக்கிற கடலைப் போன்ற மனித சமுதாயத்தைக் கண்டு நாம் கதிகலங்குவதில்லை. நம்முடைய பயணத்தில் கடவுள் தரவிருக்கிற புத்தம் புது உலகம் நம் கண்முன் தெரிகிறது. ஒவ்வொரு சமயத்திலும் கடவுள் எங்களிடம் காட்டுகிற நற்குணத்திற்கு நானும் காரினும் நன்றி சொல்கிறோம். தொடர்ந்து உத்தம இதயத்தோடு கடவுளுக்குச் சேவை செய்ய பலத்தைத் தரும்படி நித்தம் நித்தம் அவரிடம் வேண்டுகிறோம்; யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்று முடிவில்லா வாழ்வை ருசிக்க வேண்டும் என்ற இலட்சியத்தை அடைய துணைபுரியும்படியும் ஓயாமல் ஜெபிக்கிறோம்.—மத்தேயு 24:13.
[பக்கம் 12-ன் படம்]
என் அம்மாவின் மடியில்
[பக்கம் 13-ன் படம்]
1920-களின் ஆரம்பத்தில் அப்பாவும் நானும் புதிய வகை கப்பலில் பயணித்தபோது
[பக்கம் 15-ன் படம்]
1946-ல் (மில்டனுடைய அப்பா) ஹர்மன் ஹென்ஷலுடன் கிலியட்டில்
[பக்கம் 16-ன் படங்கள்]
1953, ஜூலை 20-ஆம் தேதி யாங்கி மைதானத்தில் திருமணம் செய்துகொண்டோம்