யெகோவாவின் நாளுக்காக நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா?
“யெகோவாவின் மகா நாள் சமீபமாயிருக்கிறது. அது விரைந்து நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.”—செப்பனியா 1:14, NW.
1-3. (அ) யெகோவாவின் நாளைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (ஆ) எந்த ‘யெகோவாவின் நாளை’ நாம் சந்திக்கவிருக்கிறோம்?
யெ கோவாவின் மகா நாள் 24 மணிநேரம் கொண்ட காலப்பகுதி அல்ல. அது, துன்மார்க்கரை கடவுள் நியாயந்தீர்க்கப் போகிற நீண்ட காலப்பகுதியாகும். இருளும் மூர்க்கமும் உக்கிரகோபமும் இக்கட்டும் பாழ்க்கடிப்புமிக்க அந்த நாளைக் கண்டு கடவுளுக்குச் சேவை செய்யாதவர்கள் அஞ்சுவதற்குக் காரணம் இருக்கிறது. (ஏசாயா 13:9; ஆமோஸ் 5:18-20; செப்பனியா 1:15) “அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய [அதாவது, யெகோவாவுடைய] நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது” என்று யோவேலின் தீர்க்கதரிசனம் சொல்கிறது. (யோவேல் 1:15) ஆனால், அந்த மகா நாளில், “செம்மையான இருதயமுள்ளவர்களை” கடவுள் காப்பாற்றுவார்.—சங்கீதம் 7:10.
2 ‘யெகோவாவின் நாள்’ என்ற சொற்றொடர், பல்வேறு சந்தர்ப்பங்களில் கடவுள் நியாயத்தீர்ப்பு செய்ததைக் குறிக்கிறது. உதாரணத்திற்கு, பொ.ச.மு. 607-ல் பாபிலோனியரைப் பயன்படுத்தி கடவுள் நியாயத்தீர்ப்பு செய்தபோது எருசலேம்வாசிகள்மீது ‘யெகோவாவின் நாள்’ வந்தது. (செப்பனியா 1:4-7) இதே போன்று, தம்முடைய குமாரனை ஏற்றுக்கொள்ள மறுத்த யூத தேசத்தின்மீது பொ.ச. 70-ல் ரோமர்களைப் பயன்படுத்தி கடவுள் நியாயத்தீர்ப்பு செய்தார். (தானியேல் 9:24-27; யோவான் 19:15) இன்னுமொரு ‘யெகோவாவின் நாளைப்’ பற்றியும் பைபிள் முன்னறிவிக்கிறது; அப்போது, அவர் ‘எல்லா தேசங்களுக்கும் எதிராக யுத்தம் பண்ணுவார்.’ (சகரியா 14:1-3, NW) கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் அப்போஸ்தலன் பவுல் அந்த நாளை கிறிஸ்துவின் பிரசன்னத்துடன் தொடர்புபடுத்தினார்; அவருடைய பிரசன்னம், 1914-ல் இயேசு பரலோகத்தில் ராஜாவாக முடிசூட்டப்பட்டபோது துவங்கியது. (2 தெசலோனிக்கேயர் 2:1, 2, NW) யெகோவாவின் நாள் சீக்கிரத்தில் வரவிருப்பதற்கான அறிகுறிகளை எங்கும் காண்கிறோம். ஆகவே, யெகோவாவின் சாட்சிகளுடைய 2007-ஆம் ஆண்டிற்கான வருடாந்தர வசனம் அதிக பொருத்தமானதாக இருந்திருக்கிறது. செப்பனியா 1:14-லிருந்து (NW) எடுக்கப்பட்ட அந்த வசனம், ‘யெகோவாவின் மகா நாள் சமீபமாயிருக்கிறது’ என்று சொல்கிறது.
3 கடவுளுடைய மகா நாள் சமீபமாய் இருப்பதால் அதற்கு நீங்கள் தயாராயிருப்பதைக் காட்டுவதற்கு இதுவே காலம். அந்த நாளுக்காக நீங்கள் எவ்வாறு தயாராகலாம்? யெகோவாவின் நாளுக்காக தயாராவதற்கு வேறு என்னென்ன காரியங்களை நீங்கள் செய்ய வேண்டும்?
நீங்கள் தயாராய் இருங்கள்
4. எந்தக் கடும் சோதனைக்கு இயேசு தம்மை தயார்படுத்திக் கொண்டார்?
4 இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு பற்றிய தீர்க்கதரிசனத்தைச் சொல்லுகையில், ‘நீங்கள் ஆயத்தமாயிருங்கள்’ என்று தம்முடைய சீஷர்களிடம் இயேசு கிறிஸ்து கூறினார். (மத்தேயு 24:44) அப்படிச் சொன்னபோது அவரே கடும் சோதனைக்கு, அதாவது, மீட்கும்பொருளாக இறப்பதற்குத் தயாராய் இருந்தார். (மத்தேயு 20:28) இயேசு தம்மை தயார்படுத்திக்கொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
5, 6. (அ) கடவுளிடமும் பிறரிடமும் உள்ள அன்பு, யெகோவாவின் நாளுக்காக தயாராய் இருக்க நமக்கு எவ்வாறு உதவுகிறது? (ஆ) பிறரிடம் அன்பு காட்டும் விஷயத்தில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
5 யெகோவாவையும் அவருடைய நீதியான நெறிமுறைகளையும் இயேசு உள்ளப்பூர்வமாய் நேசித்தார். இயேசுவைக் குறித்து எபிரெயர் 1:9 இவ்வாறு சொல்கிறது: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.” தம்முடைய பரலோகத் தகப்பனை இயேசு நேசித்ததால் எப்போதும் அவருக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். கடவுளிடம் அதே போன்ற அன்பை நாமும் காட்டி, அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு இசைய வாழ்ந்தால் அவர் நம்மைப் பாதுகாப்பார். (சங்கீதம் 31:23) அத்தகைய அன்பும் கீழ்ப்படிதலும் யெகோவாவின் மகா நாளுக்காக தயாராய் இருக்க நமக்கு உதவும்.
6 ஜனங்களிடம் இயேசு அன்பு காட்டினார்; அவருடைய பண்புகளில் இது முக்கியமானதாகும். சொல்லப்போனால், ‘அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்.’ (மத்தேயு 9:36) இதன் காரணமாக, அவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார்; அத்தகைய அன்புதான் மற்றவர்களுக்கு ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க நம்மையும் தூண்டுகிறது. கடவுளிடமும் பிறரிடமும் உள்ள அன்பு காரணமாக, ஊழியத்தில் ஆர்வத்துடன் நாம் கலந்துகொள்கிறோம்; இது, யெகோவாவின் மகா நாளுக்காக தயாராய் இருக்க நமக்கு உதவுகிறது.—மத்தேயு 22:37-39.
7. யெகோவாவின் நாளுக்காகக் காத்திருக்கையில் நாம் ஏன் மகிழ்ச்சியாய் இருக்கலாம்?
7 யெகோவாவின் நோக்கத்திற்கு இசைய நடப்பதில் இயேசு இன்பம் கண்டார். (சங்கீதம் 40:8) அத்தகைய மனப்பான்மை நமக்கும் இருந்தால் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வதில் இன்பம் காண்போம். இயேசுவைப் போலவே தன்னலமின்றி நம்மையே கொடுப்போம்; இது உண்மையிலேயே நம்மை சந்தோஷமுள்ளவர்களாய் ஆக்கும். (அப்போஸ்தலர் 20:35) ஆம், “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய [நம்முடைய] பெலன்.” அந்த மகிழ்ச்சி, கடவுளுடைய மகா நாளுக்காக சிறந்த விதத்தில் தயாராய் இருக்க உதவும்.—நெகேமியா 8:10.
8. ஜெபத்தில் யெகோவாவிடம் ஏன் நெருங்கி வர வேண்டும்?
8 கடவுளிடம் ஊக்கமாக ஜெபம் செய்வதன்மூலம் தம்முடைய விசுவாசத்திற்கு வரவிருந்த சோதனைகளைச் சந்திப்பதற்கு இயேசு தம்மைத் தயார்படுத்திக்கொண்டார். யோவான் அவரை முழுக்காட்டுகையில் அவர் ஜெபம் செய்துகொண்டிருந்தார். தம்முடைய அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக இரவு முழுவதும் அவர் ஜெபம் செய்தார். (லூக்கா 6:12-16) பூமியில் வாழ்ந்த அந்தக் கடைசி இரவின்போது அவர் செய்த உருக்கமான ஜெபத்தை பைபிளில் வாசித்து நெகிழாதோர் யாரேனும் இருக்கிறார்களா? (மாற்கு 14:32-42; யோவான் 17:1-26) இயேசுவைப்போல நீங்களும் அடிக்கடி ஜெபம் செய்கிறீர்களா? யெகோவாவிடம் அடிக்கடி ஜெபம் செய்யுங்கள், அவசர அவசரமாக ஜெபம் செய்யாமல், அதற்கு நேரமெடுத்துக்கொள்ளுங்கள், பரிசுத்த ஆவியின் உதவியை நாடுங்கள், கடவுளுடைய வழிநடத்துதல் எனத் தெளிவாய் தெரியும்போது உடனடியாக அதை ஏற்றுக்கொள்ளுங்கள். கடவுளுடைய மகா நாள் விரைவாய் நெருங்கி வருகிற இந்தக் கொடிய காலத்தில் நம் பரலோகத் தகப்பனுடன் பலமான பந்தத்தை வைத்திருப்பது மிக முக்கியம். எனவே, ஜெபத்தின் மூலமாக யெகோவாவிடம் மேன்மேலும் நெருங்கி வர முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.—யாக்கோபு 4:8.
9. யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதில் அக்கறை காட்டுவது எந்தளவு முக்கியமானது?
9 யெகோவாவின் புனிதமான பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் இயேசுவுக்கு இருந்த அக்கறையும்கூட, சோதனைகளைச் சந்திக்கத் தயாராவதற்கு அவருக்கு உதவின. சொல்லப்போனால், தம்முடைய சீஷர்கள் கடவுளிடம் ஜெபம் செய்கையில், “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்ற மன்றாட்டையும் அதில் சேர்த்துக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9) யெகோவாவின் பெயர் பரிசுத்தப்பட, அல்லது புனிதமாகக் கருதப்பட நாம் உளமார விரும்பினால், அந்தப் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் எதையும் செய்யாதிருக்க கடினமாய் முயற்சி செய்வோம். அப்போது, யெகோவாவின் மகா நாளுக்காக சிறந்த விதத்தில் தயாராய் இருப்போம்.
நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமா?
10. நம்மையே ஆராய்ந்து பார்ப்பது ஏன் சரியானது?
10 நாளைக்கே யெகோவாவின் நாள் வருகிறதென்றால் அதற்கு நீங்கள் உண்மையிலேயே தயாராய் இருப்பீர்களா? நம்முடைய செயல்களிலோ மனப்பான்மைகளிலோ ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டுமாவென நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தற்போது மனிதருடைய வாழ்நாள் குறுகியதாகவும், நிலையற்றதாகவும் இருப்பதை மனதில் வைத்து, ஒவ்வொரு நாளும் ஆன்மீக ரீதியில் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். (பிரசங்கி 9:11, 12; யாக்கோபு 4:13-15) எனவே, நம் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய சில அம்சங்களைக் குறித்து சிந்திப்போமாக.
11. பைபிளை வாசிப்பதில் என்ன குறிக்கோள் வைத்திருக்கிறீர்கள்?
11 அந்த அம்சங்களில் முக்கியமான ஒன்று, தினந்தோறும் பைபிளை வாசிக்கும்படி ‘உண்மையுள்ள அடிமை’ தரும் புத்திமதியாகும். (மத்தேயு 24:45, NW) ஒவ்வொரு வருடமும் ஆதியாகமம்முதல் வெளிப்படுத்துதல்வரை படித்து, தியானிப்பதை உங்களது குறிக்கோள் ஆக்கலாம். ஒரு நாளைக்கு சுமார் நான்கு அதிகாரங்களை வாசித்தால் ஒரு வருடத்தில் பைபிளிலுள்ள 1,189 அதிகாரங்களையும் நீங்கள் வாசித்துவிடலாம். இஸ்ரவேலை ஆண்ட ஒவ்வொரு ராஜாவும், “தன் ஜீவனுள்ள நாளெல்லாம்” யெகோவாவின் நியாயப்பிரமாண புத்தகத்தை வாசிக்க வேண்டியிருந்தது. இதைப் போன்ற ஒன்றைத்தான் யோசுவாவும் செய்ததாகத் தெரிகிறது. (உபாகமம் 17:14-20; யோசுவா 1:7, 8) ஆகவே, சபையிலுள்ள மூப்பர்களும் கடவுளுடைய வார்த்தையை நாள்தோறும் வாசிப்பது மிக முக்கியம். ‘ஆரோக்கியமான உபதேசத்தை’ போதிக்க இது அவர்களுக்கு உதவும்.—தீத்து 2:1.
12. யெகோவாவின் நாள் நெருங்கி வருவதைக் காண்கையில், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
12 யெகோவாவின் நாள் நெருங்கி வந்துகொண்டிருப்பதால், தவறாமல் சபை கூட்டங்களில் கலந்துகொள்ளவும் முடிந்தவரை முழுமையாய் அவற்றில் பங்கெடுக்கவும் ஊக்கமாக முயற்சி செய்யுங்கள். (எபிரெயர் 10:24, 25) இது, ராஜ்யத்தை அறிவிப்பதில் அதிக திறம்பட்டவர்களாய் ஆவதற்கு உங்களுக்கு உதவும்; நித்திய ஜீவனைப் பெற தகுதியுள்ளவர்களைக் கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு உதவவும் முடியும். (அப்போஸ்தலர் 13:48) வயதானவர்களுக்கு உதவுவது, இளைஞர்களை உற்சாகப்படுத்துவது போன்ற மற்ற விதங்களிலும்கூட நீங்கள் சபை காரியங்களில் அதிக மும்முரமாக ஈடுபடலாம். இப்படி ஈடுபடுவது பரம திருப்தி தரும், அல்லவா?
பிறருடனான உறவு
13. புதிய ஆளுமையை அணிந்துகொள்வது சம்பந்தமாக என்னென்ன கேள்விகளை நம்மையே கேட்டுக்கொள்ளலாம்?
13 யெகோவாவின் நாள் நெருங்கி வருவதால், ‘மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் [அதாவது, ஆளுமையைத்] தரித்துக்கொள்ள’ நீங்கள் கடும் முயற்சி எடுக்க வேண்டுமா? (எபேசியர் 4:20-24) கடவுள் வெளிக்காட்டுகிற குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது நீங்கள், ‘[கடவுளுடைய] ஆவிக்கேற்றபடி நடப்பதையும்’ அதன் கனியை வெளிக்காட்டுவதையும் மற்றவர்கள் கவனிப்பார்கள். (கலாத்தியர் 5:16, 22-25) நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் புதிய ஆளுமையை அணிந்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுவதற்கு எதையாவது குறிப்பாகச் சொல்ல முடியுமா? (கொலோசெயர் 3:9, 10) உதாரணத்திற்கு, சக விசுவாசிகளிடமும் மற்றவர்களிடமும் கனிவாக நடந்துகொள்கிறவரென நீங்கள் பெயரெடுத்திருக்கிறீர்களா? (கலாத்தியர் 6:10) பைபிளைத் தவறாமல் படிப்பது கடவுளிடமுள்ள குணங்களை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவும்; இது, யெகோவாவின் நாளுக்கு உங்களைத் தயார்படுத்தும்.
14. சுயகட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள ஒருவர் முயற்சி செய்யும்போது பரிசுத்த ஆவிக்காக ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?
14 தொட்டதற்கெல்லாம் நீங்கள் கோபப்படுகிறவரா? உங்களுக்கு இன்னுமதிக இச்சையடக்கம், அதாவது சுயகட்டுப்பாடு தேவையென நினைத்தால் என்ன செய்யலாம்? இந்தக் குணம் ஆவியின் கனியில் ஒன்றாக இருப்பதால், அதை கடவுளுடைய பரிசுத்த ஆவி உங்களில் பிறப்பிக்க முடியும். எனவே, இயேசுவின் பின்வரும் வார்த்தைகளுக்கு இசைவாக, பரிசுத்த ஆவிக்காக ஜெபம் செய்யுங்கள். ‘கேட்டுக்கொண்டே இருங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். . . . பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.’—லூக்கா 11:9-13; NW.
15. உங்களுக்கும் சக விசுவாசி ஒருவருக்கும் இடையே மனகசப்பு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
15 ஒருவேளை உங்களுக்கும் சக விசுவாசி ஒருவருக்கும் இடையே மனகசப்பு இருந்தால், அதைச் சரிசெய்ய எல்லா விதத்திலும் முயற்சி செய்யுங்கள்; இவ்வாறு, சபையில் சமாதானமும் ஐக்கியமும் நிலவ வழிசெய்யுங்கள். (சங்கீதம் 133:1-3) மத்தேயு 5:23, 24-ல் அல்லது மத்தேயு 18:15-17-ல் உள்ள இயேசுவின் அறிவுரையைப் பின்பற்றுங்கள். சூரியன் அஸ்தமித்தும் உங்கள் கோபம் தணியாதிருந்தால், சீக்கிரத்தில் பிரச்சினைகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள். பெரும்பாலும், மன்னிக்கிற மனமிருந்தாலே பிரச்சினைகள் தீர்ந்துவிடும். “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் [“பரிவு காட்டுகிறவர்களாயும்,” பொது மொழிபெயர்ப்பு] இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்று பவுல் எழுதினார்.—எபேசியர் 4:25, 26, 32.
16. மணவாழ்வில் என்னென்ன வழிகளில் பரிவு காட்ட வேண்டியிருக்கிறது?
16 தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரிவு காட்டுவதோடு மன்னிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். உங்கள் துணையிடம் நீங்கள் இன்னும் அதிகமாக அன்பையும் பரிவையும் காட்டுவது அவசியமானால், கடவுளுடைய துணையோடும், அவருடைய வார்த்தையின் துணையோடும் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய பந்தத்தை இன்னும் பலப்படுத்திக் கொள்வதற்காகவும், துரோகம் செய்யாதிருப்பதற்காகவும் 1 கொரிந்தியர் 7:1-5-க்குக் கீழ்ப்படியும் விதத்தில் நீங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறதா? மணவாழ்வின் இந்த அம்சத்தில், கணவனோ மனைவியோ நிச்சயம் ‘பரிவு காட்டுகிறவராக’ நடந்துகொள்ள வேண்டும்.
17. ஒருவர் படுமோசமான குற்றத்தைச் செய்துவிட்டால் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
17 ஏதோவொரு விதத்தில் படுமோசமான பாவத்தில் நீங்கள் விழுந்துவிட்டீர்கள் என்றால் என்ன செய்வது? முடிந்தவரை சீக்கிரத்தில் சரிசெய்வதற்கு நடவடிக்கைகளை எடுங்கள். சபையிலுள்ள மூப்பர்களின் உதவியைக் கண்டிப்பாக நாடுங்கள். அவர்களது ஜெபமும் அறிவுரையும் ஆன்மீக ரீதியில் ஆரோக்கியமடைய உங்களுக்கு உதவும். (யாக்கோபு 5:13-16) மனந்திரும்பிய உள்ளத்தோடு யெகோவாவிடம் ஜெபியுங்கள். இப்படிச் செய்யாவிட்டால், உங்கள் மனம் குற்ற உணர்வால் குறுகுறுக்கும், மனசாட்சியும் வாட்டி வதைக்கும். இதைத்தான் தாவீது அனுபவித்தார்; ஆனால், யெகோவாவிடம் தவறை அறிக்கை செய்து தன் பாரத்தை இறக்கி வைத்தபோது அவர் ஆறுதலடைந்தார். எனவேதான், “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான் [அதாவது, சந்தோஷமுள்ளவன்]. எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான் [அதாவது, சந்தோஷமுள்ளவன்]” என்று தாவீது எழுதினார். (சங்கீதம் 32:1-5) உள்ளப்பூர்வமாய் மனந்திரும்புவோரின் குற்றத்தை யெகோவா மன்னிக்கிறார்.—சங்கீதம் 103:8-14; நீதிமொழிகள் 28:13.
உலகத்தின் பாகமாய் இருக்காதீர்கள்
18. இந்த உலகத்தை நீங்கள் எப்படிக் கருத வேண்டும்?
18 நம்முடைய பரலோகத் தகப்பன் வாக்குறுதி அளித்திருக்கிற அருமையான புதிய உலகிற்காக நீங்கள் ஆவலோடு காத்திருக்கிறீர்கள் என்பது நிச்சயம். அப்படியென்றால், கடவுளிடமிருந்து பிரிந்திருக்கிற இந்த அநீதியான மனித சமுதாயத்தை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்? இயேசு கிறிஸ்துவின்மேல் இந்த ‘உலகத்தின் அதிபதியான’ சாத்தானுக்கு அதிகாரம் இருக்கவில்லை. (யோவான் 12:31; 14:30) பிசாசும் அவனுடைய உலகமும் உங்கள்மேல் அதிகாரம் செலுத்த நீங்கள் உண்மையில் விரும்பமாட்டீர்கள்; எனவே, “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்” என்று சொன்ன அப்போஸ்தலன் யோவானின் வார்த்தைகளுக்குச் செவிசாயுங்கள். அதுவே புத்திசாலித்தனமான செயல், ஏனெனில், “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:15-17.
19. எத்தகைய இலக்குகளை வைக்கும்படி உண்மைக் கிறிஸ்தவ இளைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்?
19 உங்கள் பிள்ளைகள் ‘உலகத்தால் கறைபடாதபடிக்குத் தங்களைக் காத்துக்கொள்ள’ நீங்கள் உதவுகிறீர்களா? (யாக்கோபு 1:27) தூண்டிலில் மீனைப் பிடிப்பதுபோல் உங்கள் பிள்ளைகளைத் தன் பிடியில் சிக்கவைக்க சாத்தான் விரும்புகிறான். இளைஞர்களை சாத்தானின் உலகத்தோடு கைகோர்க்க வைப்பதற்கென்றே பல்வேறு மனமகிழ் மன்றங்களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், யெகோவாவின் ஊழியர்கள், இந்தப் பொல்லாத உலகின் அழிவிலிருந்து பாதுகாக்கப்படவிருக்கிற ஒரே அமைப்பில் ஏற்கெனவே அங்கத்தினர்களாய் இருக்கிறார்கள். எனவே, ‘கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாய் இருக்கும்படி’ கிறிஸ்தவ இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். (1 கொரிந்தியர் 15:58) பிள்ளைகள் நல்ல இலக்குகளை வைக்க கடவுள் பயமுள்ள பெற்றோர் உதவ வேண்டும். இப்படிப்பட்ட இலக்குகள், பிள்ளைகள் சந்தோஷத்தையும் திருப்தியையும் பெற்று, கடவுளுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் வாழ்வதற்கு துணைபுரியும். அதோடு, யெகோவாவின் நாளுக்காக தயாராய் இருக்கவும் அவர்களுக்கு உதவும்.
யெகோவாவின் மகா நாளுக்குப் பிறகு . . .
20. நித்திய ஜீவனை நாம் ஏன் கண்முன் வைத்திருக்க வேண்டும்?
20 நித்திய ஜீவனை உங்கள் கண்முன் வைத்திருங்கள். இது மன அமைதியோடு யெகோவாவின் நாளுக்காக காத்திருக்க உதவும். (யூதா 20, 21) பரதீஸான பூமியில் என்றென்றும் வாழ்வதையும், வாலிபத்தில் இருந்த தெம்பை மீண்டும் பெறுவதையும் நீங்கள் எதிர்நோக்கியிருக்கிறீர்கள். பயன் தரும் இலக்குகளை அடைவதற்கும், யெகோவாவைப்பற்றி மேன்மேலும் கற்றுக்கொள்வதற்கும் எல்லையில்லா காலம் உங்களுக்கு இருக்கும். சொல்லப்போனால், நித்தியத்திற்கும் கடவுளைப்பற்றி நீங்கள் கற்றுவரலாம்; ஏனெனில், இப்போது மனிதர் ‘அவருடைய கிரியையில் கடைகோடியானவைகளையே’ அறிந்திருக்கிறார்கள். (யோபு 26:14) எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி தரும் எதிர்பார்ப்புகள்!
21, 22. உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களுடன் நீங்கள் என்னென்ன தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம்?
21 பரதீஸில் உயிர்த்தெழுப்பப்படுகிற ஆட்களிடமிருந்து, கடந்த காலத்தைப்பற்றி நமக்குத் தெரியாத தகவல்களைப் பெற முடியும். யெகோவாவின் செய்தியை தேவபக்தியற்றவர்களுக்குத் தைரியமாகப் பிரசங்கித்ததைப்பற்றி விவரிக்க ஏனோக்கு அங்கிருப்பார். (யூதா 14, 15) பேழையைக் கட்டுவது எப்படியிருந்தது என்பதைப்பற்றி நோவா நிச்சயம் சொல்வார். ஊர் பட்டணத்திலிருந்த சௌகரியங்களை விட்டுவிட்டு கூடாரங்களில் குடியிருக்கச் சென்றபோது எப்படியிருந்தது என்பதை ஆபிரகாமும் சாராளும் தெரிவிப்பார்கள். தன் ஜனங்களுடைய நலனுக்காகச் செயல்பட்டதையும், அவர்களுக்கு எதிராக ஆமான் போட்ட திட்டத்தைத் தவிடுபொடியாக்கியதையும் பற்றிய தகவல்களை எஸ்தரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்வதைப்பற்றிச் சற்று எண்ணிப் பாருங்கள். (எஸ்தர் 7:1-6) பெரிய மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்ததைப்பற்றி யோனாவும் இயேசுவுக்கு முழுக்காட்டுதல் கொடுத்தபோது உணர்ந்த விதத்தைப்பற்றி யோவான் ஸ்நானனும் விவரிப்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள். (லூக்கா 3:21, 22; 7:28) நாம் தெரிந்துகொள்வதற்கு சுவாரஸ்யமான விஷயங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றனவே!
22 கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது, உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள், “தேவனை அறியும் அறிவை” பெறுவதற்கு உதவும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம். (நீதிமொழிகள் 2:1-6) இன்று, ஆட்கள் யெகோவா தேவனைப் பற்றிய அறிவைப் பெற்று, அதற்கேற்ப நடப்பதைப் பார்ப்பது எவ்வளவு ஆனந்தம் அளிக்கிறது! அதேபோல, பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆட்களுக்குப் போதிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்து, அவர்களும் கற்றுக்கொண்டவற்றைக் கடைப்பிடிப்பதைக் காணும்போது எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும் என்பதை மனக்கண்ணில் ஓடவிட்டுப் பாருங்கள்.
23. என்ன செய்ய நாம் திடத்தீர்மானமாய் இருக்க வேண்டும்?
23 யெகோவாவின் ஜனங்களாக இப்போது நாம் பெறுகிற பயன்கள் எல்லாவற்றையும் பட்டியலிடவோ மதிப்பிடவோ நம்மால் முடியாது. (சங்கீதம் 40:5) முக்கியமாக, ஆன்மீக ரீதியில் நாம் பலப்படுவதற்கு யெகோவா செய்திருக்கிற அனைத்து ஏற்பாடுகளுக்கும் நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். (ஏசாயா 48:17, 18) நாம் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தாலும்சரி, யெகோவாவின் மகா நாளுக்குக் காத்திருக்கையில், முழு இருதயத்தோடு பரிசுத்த சேவை செய்வோமாக.
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• ‘யெகோவாவின் நாள்’ என்பது என்ன?
• யெகோவாவின் நாளுக்காக நீங்கள் தயாராய் இருப்பதை எப்படிக் காட்டலாம்?
• கடவுளுடைய மகா நாள் விரைவாக நெருங்கி வருவதால் என்னென்ன மாற்றங்களை நாம் செய்ய வேண்டியிருக்கலாம்?
• யெகோவாவின் நாளுக்குப் பிறகு, எவற்றையெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
[பக்கம் 12-ன் படம்]
சோதனைகளைச் சந்திக்க இயேசு தயாராயிருந்தார்
[பக்கம் 15-ன் படம்]
உயிர்த்தெழுப்பப்படுவோருக்கு யெகோவாவைப்பற்றி கற்றுக்கொடுப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!