யெகோவாவின் வழிகளில் நடவுங்கள்
“கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான் [“சந்தோஷமுள்ளவன்,” NW].”—சங். 128:1.
1, 2. உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைவது சாத்தியமென நாம் ஏன் உறுதியாய் நம்பலாம்?
சந்தோஷம். இதை எல்லாரும் விரும்புகிறார்கள். சந்தோஷத்தை விரும்புவதும், அதை அடைய பாடுபடுவதுமே நாம் சந்தோஷமாய் இருப்பதை அர்த்தப்படுத்தாது என்பதை நீங்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள்.
2 இருந்தாலும், உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைவது சாத்தியமே. “கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான் [“சந்தோஷமுள்ளவன்,” NW]” என்பதாக சங்கீதம் 128:1 சொல்கிறது. கடவுளை வணங்கி, அவர் எதிர்பார்ப்பவற்றைச் செய்வதன்மூலம் அவருடைய வழிகளில் நடந்தால் நாம் சந்தோஷமாய் இருக்க முடியும். இப்படி நடப்பது, நம் நடத்தையையும் குணங்களையும் எப்படிப் பாதிக்கிறது?
நம்பகமானவர் என்பதை வெளிக்காட்டுங்கள்
3. நம்மைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பது நம்பகமானவராய் இருப்பதோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
3 யெகோவா நம்பகமானவர், அவருக்குப் பயப்படுகிறவர்களும் நம்பகமானவர்களாக இருக்கிறார்கள். பூர்வ இஸ்ரவேலருக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் யெகோவா நிறைவேற்றினார். (1 இரா. 8:56) நம்மை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பது நாம் அவருக்குக் கொடுத்திருக்கிற வாக்குறுதிகளிலேயே மிக முக்கியமானதாகும்; இதைக் குறித்து அடிக்கடி ஜெபம் செய்வது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நமக்கு உதவும். “தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; . . . தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்” என்று சங்கீதக்காரனான தாவீது ஜெபம் செய்ததைப் போலவே நாமும் செய்யலாம். (சங். 61:5, 8; பிர. 5:4-6) கடவுளுடைய நண்பர்களாவதற்கு நாம் நம்பகமானவர்களாய் இருக்க வேண்டும்.—சங். 15:1, 4.
4. யெகோவாவுக்கு யெப்தா செய்த பொருத்தனைக்கு இசைவாக அவரும் அவருடைய மகளும் என்ன செய்தார்கள்?
4 இஸ்ரவேலை நியாயாதிபதிகள் வழிநடத்திய காலத்தில், யெப்தா ஒரு பொருத்தனை செய்தார்; அதாவது, அம்மோனியருக்கு எதிரான யுத்தத்தில் தனக்கு யெகோவா வெற்றி தந்தால், வீடு திரும்பியதும் முதலாவதாக தான் சந்திக்கிறதை அவருக்கு “சர்வாங்க தகனபலியாகச்” செலுத்துவதாகப் பொருத்தனை செய்தார். அப்படி அவர் முதலாவதாகச் சந்தித்தது தன்னுடைய ஒரே மகளை. யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்ததால் செய்த பொருத்தனையை யெப்தாவும் கன்னிப் பெண்ணாயிருந்த அவருடைய மகளும் நிறைவேற்றினார்கள். மணமுடிப்பதும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும் இஸ்ரவேலில் உயர்வாய் மதிக்கப்பட்டபோதிலும், யெப்தாவின் மகள் மணமுடிக்காதிருப்பதை மனமுவந்து ஏற்றுக்கொண்டாள், யெகோவாவின் ஆலயத்தில் பரிசுத்த சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றாள்.—நியா. 11:28-40.
5. எந்த விதத்தில் அன்னாள் நம்பகமானவளாக நடந்துகொண்டாள்?
5 கடவுள்பக்திமிக்க அன்னாள் நம்பகமானவளாக நடந்துகொண்டாள். இவளுடைய கணவரான எல்க்கானா லேவியனாக இருந்தார்; இவருக்கு பெனின்னாள் என்ற மற்றொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடன்தான் எப்பிராயீம் மலைத்தேசத்தில் அன்னாள் வசித்துவந்தாள். பெனின்னாளுக்கு அநேக பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை. ஆகவே, இதைக் குத்திக்காட்டி அன்னாளின் மனதை பெனின்னாள் நோகடித்தாள், அதுவும் குடும்பமாய் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சென்ற சமயங்களில் இப்படி நோகடித்தாள். ஒருமுறை அவர்கள் இவ்வாறு சென்றிருந்த சமயத்தில், தனக்கு மகன் பிறந்தால் அவனை யெகோவாவுக்குக் கொடுப்பதாக அன்னாள் பொருத்தனை செய்தாள். விரைவிலேயே அவள் கர்ப்பமாகி, மகனைப் பெற்றெடுத்தாள்; அவனுக்கு சாமுவேல் என பெயரிடப்பட்டது. பால் மறந்ததும், அந்தப் பிள்ளையைக் கடவுளுக்குக் கொடுக்க சீலோவுக்கு அன்னாள் சென்றாள்; இப்படியாக, சாமுவேல் “உயிரோடிருக்கும் சகல நாளும்” யெகோவாவுக்கு அவனை அர்ப்பணித்தாள். (1 சா. 1:11) பின்னர் தனக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது அன்னாளுக்குத் தெரியாதிருந்தபோதிலும் அவள் தன் பொருத்தனையை நிறைவேற்றினாள்.—1 சா. 2:20, 21.
6. தீகிக்கு நம்பகமானவராய் இருந்தது எப்படித் தெரிகிறது?
6 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவரான தீகிக்கு நம்பகமானவராகவும், ‘உண்மையுள்ள ஊழியக்காரராகவும்’ இருந்தார். (கொலோ. 4:7) அப்போஸ்தலன் பவுலோடு அவர் கிரேக்குவிலிருந்து மக்கெதோனியா வழியாக ஆசியா மைனர்வரை பயணித்தார். அங்கிருந்து எருசலேமுக்கும்கூட அவரோடு பயணித்திருக்கலாம். (அப். 20:2-4) யூதேயாவில் வறுமையில் வாடிய சக விசுவாசிகளுக்காக நன்கொடைகளைக் கொண்டு செல்வதில் தீத்துவுக்கு உதவிய அந்தச் ‘சகோதரன்’ இவராக இருந்திருக்கலாம். (2 கொ. 8:18, 19; 12:18) பவுல் முதன்முறையாக ரோமில் சிறையிலடைக்கப்பட்டபோது, அவர் எழுதிய கடிதங்களை எபேசுவிலும் கொலோசெயிலும் இருந்த சக விசுவாசிகளுக்கு எடுத்துச் செல்ல அவருக்கு நம்பகமான தூதுவராக தீகிக்கு இருந்தார். (எபே. 6:21, 22; கொலோ. 4:8, 9) பவுல் இரண்டாவது முறை ரோமில் சிறையிலடைக்கப்பட்ட சமயத்தில், தீகிக்குவை எபேசுவுக்கு அவர் அனுப்பினார். (2 தீ. 4:12) நம்பகமானவர்களாய் இருந்தால், யெகோவாவின் சேவையில் நாமும் ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
7, 8. தாவீதும் யோனத்தானும் உண்மையான நண்பர்களாய் இருந்தார்கள் என நாம் ஏன் சொல்லலாம்?
7 நாம் நம்பகமான நண்பர்களாய் இருக்கும்படி கடவுள் எதிர்பார்க்கிறார். (நீதி. 17:17) சவுல் ராஜாவின் மகனான யோனத்தான், தாவீதின் நண்பரானார். கோலியாத்தை தாவீது கொன்றதைப்பற்றி யோனத்தான் கேள்விப்பட்டதும், ‘யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவரைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தார்.’ (1 சா. 18:1, 3) தாவீதைக் கொல்ல சவுல் தீர்மானித்தபோது அதைக் குறித்தும்கூட தாவீதை எச்சரித்தார். தாவீது தப்பியோடிய பிறகு, அவரைச் சந்தித்து அவருடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். தாவீதோடு பேசியதற்காக யோனத்தானை சவுல் கொல்லவும் துணிந்துவிட்டார். இருந்தாலும், இந்த நண்பர்கள் இருவரும் மீண்டும் சந்தித்து, தங்கள் நட்பைத் தொடர்ந்தார்கள். (1 சா. 20:24-41) கடைசியாக அவர்கள் சந்தித்துக்கொண்டபோது, “தேவனுக்குள்” தாவீதின் கரத்தை யோனத்தான் திடப்படுத்தினார்.—1 சா. 23:16-18.
8 பெலிஸ்தருக்கு எதிரான யுத்தத்தில் யோனத்தான் இறந்துபோனார். (1 சா. 31:6) அப்போது தாவீது பாடிய புலம்பலில், “என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்: உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது” என்று குறிப்பிட்டார். (2 சா. 1:26) ஆம், தாவீதும் யோனத்தானும் உண்மையான நண்பர்களாய் இருந்தார்கள்.
எப்போதும் ‘தாழ்மையுள்ளவர்களாய்’ இருங்கள்
9. தாழ்மையுள்ளவர்களாய் இருப்பதன் அவசியத்தை நியாயாதிபதிகள் 9-ஆம் அதிகாரம் எவ்வாறு விளக்குகிறது?
9 கடவுளுடைய நண்பர்களாய் இருப்பதற்கு நாம் ‘தாழ்மையுள்ளவர்களாய்’ இருக்க வேண்டும். (யாக். 4:6; சங். 138:6) தாழ்மையுள்ளவர்களாய் இருப்பதன் அவசியத்தை நியாயாதிபதிகள் 9-ஆம் அதிகாரம் விளக்குகிறது. ‘விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போனதைப்பற்றி’ கிதியோனின் மகனான யோதாம் சொன்னார். ஒலிவமரம், அத்திமரம், திராட்சச் செடி ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டன. இவை, சக இஸ்ரவேலர்மீது ஆட்சி செய்ய தகுதியிருந்தும் அதை நாடாத ஆட்களைக் குறித்தன. ஆனால், அடுப்பெரிக்க மட்டுமே பயன்படுகிற முட்செடி தலைக்கனமிக்க அபிமெலேக்கின் அரசாட்சியைப் பிரதிநிதித்துவம் செய்தது. கொலைகாரனான அபிமெலேக்கு மற்றவர்களை அடக்கி ஒடுக்க விரும்பினான். “இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்ட [ஆட்டிப் படைத்த]” இவன் அகால மரணத்தை சந்தித்தான். (நியா. 9:8-15, 22, 50-54) ‘தாழ்மையுள்ளவர்களாய்’ இருப்பது எவ்வளவு நல்லது!
10. ஏரோது, “தேவனுக்கு மகிமையைச் செலுத்த” தவறிய விஷயத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
10 பொ.ச. முதல் நூற்றாண்டில் யூதேயாவை ஆண்ட ஆணவமிக்க ஏரோது அகிரிப்பா ராஜாவுக்கும் தீரு, சீதோன் பட்டணத்தாருக்கும் இடையே உட்பூசல்கள் தலைதூக்கின. அந்த மக்கள் அவனுடன் சமாதானமாய் இருக்க முயற்சி செய்தார்கள். ஒரு சமயம் ஏரோது பிரசங்கம் பண்ணும்போது, “இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம்” என்று அவர்கள் ஆர்ப்பரித்தார்கள். அத்தகைய முகஸ்துதியை ஏரோது நிராகரிக்காததால் யெகோவாவின் தூதன் அவனை அடித்தார், ‘அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால்’ பயங்கரமான மரணத்தைத் தழுவினான். (அப். 12:20-23) நாம் திறம்பட்ட விதத்தில் பேச்சுக் கொடுப்பவராகவோ பைபிள் சத்தியங்களைக் கற்பிப்பவராகவோ இருந்தால் என்ன செய்யலாம்? நாம் செய்ய கடவுள் அனுமதிக்கிற காரியங்களுக்கான புகழ் அவருக்கே போய்ச் சேரும்படி பார்த்துக்கொள்வோமாக.—1 கொ. 4:6, 7; யாக். 4:6.
பலத்தோடும் தைரியத்தோடும் இருங்கள்
11, 12. தம்முடைய ஊழியர்களுக்குப் பலத்தையும் தைரியத்தையும் யெகோவா கொடுக்கிறார் என்பதை ஏனோக்கின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?
11 யெகோவாவுடைய வழிகளில் நாம் தாழ்மையோடு நடந்தால் அவர் பலத்தையும் தைரியத்தையும் நமக்குத் தருவார். (2 நா. 32:7) ஆதாமின் ஏழாவது தலைமுறையில் பிறந்த ஏனோக்கு, தன் காலத்தில் வாழ்ந்த துன்மார்க்கர் மத்தியில் நேர்மையான பாதையில் தைரியமாய் கடவுளோடு நடந்தார். (ஆதி. 5:21-24) அந்த ஜனங்கள் சொல்லிலும் செயலிலும் தேவபயமின்றி நடந்துகொண்டதால் அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு செய்தியை அறிவிக்க யெகோவா அவரைப் பலப்படுத்தினார். (யூதா 14, 15-ஐ வாசிக்கவும்.) கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்தியை அறிவிப்பதற்குத் தேவையான தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?
12 நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தைக் கொண்டு வந்ததன்மூலம் அந்தத் தேவபக்தியற்றவர்கள்மீது யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார். எனினும், ஏனோக்கின் தீர்க்கதரிசனம் நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது; ஏனெனில், நம் நாளிலுள்ள தேவபக்தியற்றவர்கள் கடவுளுடைய எண்ணற்ற பரிசுத்த சேனையினரால் சீக்கிரத்தில் அழிக்கப்படவிருக்கிறார்கள். (வெளி. 16:14-16; 19:11-16) நம் ஜெபங்களுக்குப் பதில் அளிக்கும் விதத்தில், தம்முடைய செய்தியை அறிவிக்க யெகோவா நமக்குத் தைரியத்தைக் கொடுக்கிறார்; அது அவருடைய நியாயத்தீர்ப்புகளைப் பற்றியதாகவோ ராஜ்ய ஆட்சியில் அனுபவிக்கவிருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றியதாகவோ எதுவாக இருப்பினும் அவர் நமக்குத் தைரியத்தைக் கொடுக்கிறார்.
13. நம்மைச் சோர்வடையச் செய்கிற பிரச்சினைகளைச் சமாளிக்க தேவையான பலத்தையும் தைரியத்தையும் கடவுள் தருவாரென நாம் ஏன் உறுதியாய் இருக்கலாம்?
13 நம்மைச் சோர்வடையச் செய்கிற பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு, கடவுள் தரும் பலமும் தைரியமும் நமக்குத் தேவை. ஏத்தியரிலிருந்து இரண்டு பெண்களை ஏசா மணமுடித்தபோது, “அவர்கள் [அவருடைய பெற்றோரான] ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.” “ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் [நம்முடைய மகன்] யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன” என்றும்கூட ரெபெக்காள் புலம்பினாள். (ஆதி. 26:34, 35; 27:46) உடனடியாக, ஈசாக்கு நடவடிக்கை எடுத்தார், யெகோவாவின் வணக்கத்தார் மத்தியில் ஒரு பெண்ணைத் தேடிக்கொள்ளும்படி யாக்கோபை அவர் அனுப்பிவிட்டார். ஏசா செய்த காரியத்தை ஈசாக்காலும் ரெபெக்காளாலும் மாற்ற முடியாவிட்டாலும், அவர்களுக்கு ஞானத்தையும் பலத்தையும் தைரியத்தையும் தந்து, உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க கடவுள் உதவினார். இப்படி உதவி தேவைப்படுகையில் நாமும் யெகோவாவிடம் ஜெபம் செய்தால், நமக்கும் அதே விதமாக உதவுவார்.—சங். 118:5.
14. இஸ்ரவேல சிறுமி எப்படித் தைரியத்தை வெளிக்காட்டினாள்?
14 இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, கொள்ளைக் கூட்டத்தாரால் இஸ்ரவேல சிறுமி ஒருத்தி சிறைபிடித்துச் செல்லப்பட்டாள். இவள், குஷ்டரோகத்தால் அவதிப்பட்டுவந்த சீரிய நாட்டுப் படைத் தலைவரான நாகமானின் வீட்டில் வேலை செய்துவந்தாள். எலிசா தீர்க்கதரிசியின்மூலம் கடவுள் நடத்திய அற்புதங்களைப்பற்றிக் கேட்டிருந்த அந்தச் சிறுமி, “என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்” என்று நாகமானின் மனைவியிடம் தைரியமாய்ச் சொன்னாள். நாகமான் இஸ்ரவேல் தேசத்திற்குச் சென்றார், அற்புதமாய் குணப்படுத்தப்பட்டார். (2 இரா. 5:1-3) ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் இன்னும் மற்றவர்களுக்கும் தைரியமாய் சாட்சிகொடுப்பதற்கு யெகோவாவைச் சார்ந்திருக்கும் இளம் பிள்ளைகளுக்கு இந்தச் சிறுமி சிறந்த முன்மாதிரி, அல்லவா?
15. ஆகாப்பின் வீட்டு விசாரணைக்காரரான ஒபதியா தைரியமாய் என்ன செய்தார்?
15 கடவுள் தரும் தைரியம் துன்புறுத்தலைச் சகிக்க நமக்கு உதவுகிறது. உதாரணத்திற்கு, ஆகாப் ராஜாவின் வீட்டு விசாரணைக்காரரும், எலியா தீர்க்கதரிசியின் காலத்தில் வாழ்ந்தவருமான ஒபதியாவை எடுத்துக்கொள்வோம். கடவுளுடைய தீர்க்கதரிசிகளைக் கொல்லும்படி யேசபேல் ராணி கட்டளையிட்டபோது இவர் நூறுபேரை “ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக” ஒளித்து வைத்தார். (1 இரா. 18:13; 19:18) யெகோவாவின் தீர்க்கதரிசிகளுக்கு ஒபதியா உதவியதைப் போல, துன்புறுத்தப்படுகிற சக கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் தைரியமாய் உதவுவீர்களா?
16, 17. துன்புறுத்தலை எதிர்ப்பட்டபோது அரிஸ்தர்க்குவும் காயுவும் எப்படி நடந்துகொண்டார்கள்?
16 நாம் துன்புறுத்தப்படும்போது யெகோவா நம்மோடிருப்பாரென உறுதியாய் இருக்கலாம். (ரோ. 8:35-39) எபேசு பட்டணத்திலிருந்த திறந்தவெளி அரங்கத்தில், கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் இருந்த கலக கும்பலை பவுலின் சக ஊழியர்களான அரிஸ்தர்க்குவும் காயுவும் எதிர்ப்பட்டார்கள். தெமேத்திரியு என்னும் தட்டான் கலகத்தைத் தூண்டிவிட்டிருந்தான். அவனும் மற்ற தட்டான்களும் தேவியாகிய தியானாளுக்கு வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து விற்று வந்தார்கள். பவுலுடைய பிரசங்கத்தைக் கேட்டு அந்த நகரவாசிகளில் அநேகர் சிலை வழிபாட்டை நிறுத்திவிட்டதால், லாபகரமான அவர்களுடைய தொழில் பாதிக்கப்பட்டது. இந்தக் கும்பலைச் சேர்ந்தோர் அரிஸ்தர்க்குவையும் காயுவையும் அரங்கத்திற்கு இழுத்து வந்து, “எபேசியருடைய தியானாளே பெரியவள்” என்று சத்தமிட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த ஜனங்கள் தங்களை அடித்துக் கொன்றுவிடுவார்களென்று அரிஸ்தர்க்குவும் காயுவும் நினைத்திருப்பார்கள்; ஆனால், நகர ஆணையர் அந்தக் கூட்டத்தாரை அமைதிப்படுத்தினார்.—அப். 19:23-41.
17 இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் எதிர்ப்பட்டிருந்தால், ‘எனக்கு இந்தத் தொல்லையெல்லாம் வேண்டாம்’ என்று நினைத்து ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்திருப்பீர்களா? அரிஸ்தர்க்குவும் காயுவும் தைரியத்தை இழந்துவிட்டதாகத் தெரியவில்லை. தெசலோனிக்கே பட்டணத்தைச் சேர்ந்தவராக அரிஸ்தர்க்கு இருந்ததால், நற்செய்தியை அறிவிக்கையில் துன்புறுத்தப்படலாம் என்பதை அறிந்திருந்தார். கொஞ்ச காலத்திற்கு முன்புதான் பவுல் அங்கு பிரசங்கித்தபோது கலகம் நிகழ்ந்திருந்தது. (அப். 17:5; 20:4) அரிஸ்தர்க்குவும் காயுவும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால், துன்புறுத்தலைச் சகிப்பதற்குத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் கடவுள் அவர்களுக்கு அளித்திருந்தார்.
மற்றவர்களிடம் அக்கறை காட்டுவது
18. பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் எப்படி மற்றவர்களிடம் ‘அக்கறை காட்டினார்கள்’?
18 இப்போது நாம் துன்புறுத்தலை எதிர்ப்பட்டாலும்சரி எதிர்ப்படாவிட்டாலும்சரி, நாம் சக கிறிஸ்தவர்களிடம் அக்கறை காட்ட வேண்டும். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் மற்றவர்களுடைய தேவைகளை ‘நோக்கினார்கள்,’ அதாவது, மற்றவர்களிடம் ‘அக்கறை காட்டினார்கள்.’ (பிலிப்பியர் 2:4-ஐ வாசியுங்கள்.) நல்ல முன்மாதிரியாய்த் திகழ்ந்த இந்தத் தம்பதியர் எபேசுவில் பவுல் தங்குவதற்கு இடம் கொடுத்திருக்கலாம்; இங்கேதான் தெமேத்திரியு என்னும் தட்டான் முன்னர் குறிப்பிடப்பட்ட கலகத்தை மூட்டிவிட்டான். அந்தச் சூழ்நிலைதான் பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் பவுலுக்காக ‘தங்கள் கழுத்தைக் கொடுக்க’ தூண்டியிருக்க வேண்டும். (ரோ. 16:3, 4; 2 கொ. 1:8) இன்று, துன்புறுத்தப்படும் சகோதரர்களிடம் நமக்குள்ள அக்கறை, ‘சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாக’ நம்மை ஆக்குகிறது. (மத். 10:16-18) இதனால், நம்முடைய ஊழியத்தை எச்சரிக்கையுடன் செய்கிறோம்; அதோடு, அவர்களுடைய பெயர்களையோ பிற தகவல்களையோ துன்புறுத்துபவர்களிடம் சொல்லி அவர்களைக் காட்டிக்கொடுக்காமலும் இருக்கிறோம்.
19. மற்றவர்களுக்கு தொற்காள் என்ன பயனுள்ள காரியங்களைச் செய்தார்?
19 மற்றவர்களிடம் அக்கறை காட்டுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. சில கிறிஸ்தவர்கள் அடிப்படைத் தேவைகள் இல்லாமல் கஷ்டப்படலாம், அவர்களுக்கு உதவுகிற நிலையில் நாம் இருக்கலாம். (எபே. 4:28; யாக். 2:14-17) முதல் நூற்றாண்டில் யோப்பா பட்டணத்திலிருந்த சபையில் தொற்காள் என்ற பெண்மணி இருந்தார். இவர் தாராள மனம்படைத்தவர். (அப்போஸ்தலர் 9:36-42-ஐ வாசியுங்கள்.) ஏழை விதவைகளுக்கு ஆடைகளைச் செய்து தந்தது உட்பட அவர், ‘நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தார்.’ பொ.ச. 36-ல் அவர் இறந்தபோது, விதவைகள் மிகவும் வேதனை அடைந்தார்கள். அப்போஸ்தலன் பேதுருவைப் பயன்படுத்தி, கடவுள் அவரை உயிர்த்தெழுப்பினார்; பின்னர் அவர் உயிரோடிருந்த காலமெல்லாம் சந்தோஷமாய் நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டும், மற்றவர்களுக்கு பயனுள்ள காரியங்களைச் செய்துகொண்டும் வந்திருப்பார் என்பது நிச்சயம். அத்தகைய தாராள மனம்படைத்த கிறிஸ்தவ பெண்கள் இன்று நம் மத்தியிலிருப்பதற்கு அதிக மகிழ்ச்சி அடைகிறோம், அல்லவா?
20, 21. (அ) மற்றவர்களிடம் அக்கறை காட்டுவதற்கும் ஊக்கமளிப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? (ஆ) ஊக்கமளிக்க நீங்கள் என்ன செய்யலாம்?
20 மற்றவர்களை ஊக்கப்படுத்துவதன்மூலம் அவர்களிடம் அக்கறை காட்டுகிறோம். (ரோ. 1:11, 12, NW) பவுலின் சக ஊழியரான சீலா ஊக்கத்தின் ஊற்றாய் இருந்தார். சுமார் பொ.ச. 49-ல் விருத்தசேதனம் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வுகண்ட பிறகு, எருசலேமிலிருந்த ஆளும் குழு எல்லா இடங்களிலுமுள்ள கிறிஸ்தவர்களுக்குக் கடிதங்களை எடுத்துச் செல்ல தூதுவர்களைப் பயன்படுத்தியது. அந்தக் கடிதத்தை சீலா, யூதா, பர்னபா, பவுல் ஆகியோர் அந்தியோகியாவுக்கு எடுத்துச் சென்றார்கள். சீலாவும் யூதாவும், ‘அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தினார்கள் [ஊக்கப்படுத்தினார்கள்].’—அப். 15:32.
21 பின்னர், பவுலும் சீலாவும் பிலிப்பி பட்டணத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்கள், பூமி அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு அவர்கள் விடுதலை பெற்றார்கள். சிறைச்சாலைக்காரருக்குச் சாட்சி கொடுத்து, அவரும் அவருடைய வீட்டாரும் விசுவாசிகள் ஆனதைப் பார்த்து அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படுவதற்கு முன்பாக அங்கிருந்த சகோதரர்களை சீலாவும் பவுலும் ஊக்கப்படுத்தினார்கள். (அப். 16:12, 40, NW) பவுலையும் சீலாவையும் போலவே, உங்களுடைய பதில்கள், பேச்சுகள் மூலமாகவும் ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் பங்குகொள்ளுவதன் மூலமாகவும் மற்றவர்களை ஊக்கப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்களால் ‘ஊக்கமளிக்கும் வார்த்தைகளைச்’ சொல்ல முடியுமென்றால் ‘சொல்லத்’ தவறாதீர்கள்.—அப். 13:15, NW.
யெகோவாவின் வழிகளில் தொடர்ந்து நடவுங்கள்
22, 23. பைபிள் பதிவுகளிலிருந்து நாம் எப்படி உண்மையில் பயன் அடையலாம்?
22 ‘சகல விதத்திலும் ஊக்கமளிக்கிற தேவனான’ யெகோவா, பைபிளில் நிஜ வாழ்க்கை சரிதைகளை பதிவுசெய்திருப்பதற்கு நாம் அதிக நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும், அல்லவா? (2 கொ. 1:3, பையிங்டன்) இந்தப் பதிவுகளிலிருந்து நாம் பயன் அடைவதற்கு, பைபிள் புகட்டும் பாடங்களை நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றவும், கடவுளுடைய பரிசுத்த ஆவி நம்மை வழிநடத்த அனுமதிக்கவும் வேண்டும்.—கலா. 5:22-25.
23 பைபிள் பதிவுகளைத் தியானிப்பது கடவுளுக்குப் பிரியமான குணங்களை வெளிக்காட்ட நமக்கு உதவும். யெகோவா “ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும்” நமக்கு அளிப்பதால் அவருடனான பந்தத்தை இது பலப்படுத்தும். (பிர. 2:26) இதன்மூலம், கடவுளுடைய அன்புள்ளத்தை நம்மால் சந்தோஷப்படுத்த முடியும். (நீதி. 27:11) யெகோவாவின் வழிகளில் எப்போதும் நடப்பதன்மூலம் அவரைச் சந்தோஷப்படுத்த தீர்மானமாய் இருப்போமாக.
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• நீங்கள் நம்பகமானவர் என்பதை எப்படி வெளிக்காட்டலாம்?
• நாம் ஏன் ‘தாழ்மையுள்ளவர்களாய்’ இருக்க வேண்டும்?
• தைரியமாய் இருக்க பைபிள் பதிவுகள் நமக்கு எப்படி உதவலாம்?
• என்னென்ன வழிகளில் மற்றவர்களிடம் நாம் அக்கறை காட்டலாம்?
[பக்கம் 8-ன் படம்]
கடினமாய் இருந்தபோதிலும், செய்த பொருத்தனையை நம்பகமானவரான யெப்தாவும் அவருடைய மகளும் நிறைவேற்றினார்கள்
[பக்கம் 10-ன் படம்]
பிள்ளைகளே, இஸ்ரவேல சிறுமியிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
[பக்கம் 11-ன் படம்]
சக கிறிஸ்தவர்களின் தேவைகளை தொற்காள் எப்படிப் பூர்த்தி செய்தார்?