உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 9/15 பக். 29-31
  • அரிஸ்தர்க்கு—பற்றுமாறாத ஒரு தோழன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அரிஸ்தர்க்கு—பற்றுமாறாத ஒரு தோழன்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கிரீஸிலிருந்து எருசலேமுக்கு
  • ரோமாபுரிக்கு பயணம்
  • பவுலின் ‘உடன் கைதி’
  • ‘ஆறுதல் செய்தவர்’
  • மற்றவர்களுக்கு ‘மிகவும் ஆறுதலாக இருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • யெகோவாவின் வழிகளில் நடவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • தைரியமாயிருங்கள்​—யெகோவா உங்களுக்குத் துணையாக இருக்கிறார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • பவுலின் உடன் ஊழியர்கள்—யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 9/15 பக். 29-31

அரிஸ்தர்க்கு—பற்றுமாறாத ஒரு தோழன்

அப்போஸ்தலன் பவுலுடைய நம்பிக்கைக்குரிய அநேக உடன் வேலையாட்களில் ஒருவர் அரிஸ்தர்க்கு. அவருடைய பெயரை நீங்கள் கேட்கையில் உங்கள் மனதுக்கு வருவது என்ன? ஏதாவது உங்கள் மனதுக்கு வருகிறதா? ஆரம்பகால கிறிஸ்தவ வரலாற்றில் அவர் என்ன பங்கை வகித்தார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? அரிஸ்தர்க்கு நமக்கு அதிகம் பரிச்சயமான பைபிள் கதாபாத்திரங்களில் ஒருவராக இல்லாவிட்டாலும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் பல சம்பவங்களில் அவர் உட்பட்டவராக இருந்தார்.

அப்படியென்றால், அரிஸ்தர்க்கு யார்? பவுலோடு அவருக்கு என்ன உறவு இருந்தது? அரிஸ்தர்க்கு பற்றுமாறாத ஒரு தோழனாக இருந்தார் என்று ஏன் சொல்லப்படலாம்? அவருடைய முன்மாதிரியை ஆராய்வதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

அப்போஸ்தலர் புத்தகத்தின் பதிவில், அரிஸ்தர்க்கு எபேசு பட்டணத்தில் கலக கூட்டமொன்றின் கூச்சலின் மத்தியிலும் குழப்பத்தின் மத்தியிலும் மாட்டிக்கொள்ளும்போது அறிமுகம் செய்யப்படுகிறார். (அப்போஸ்தலர் 19:23-41) பொய் கடவுளாகிய தியானாளின் சிறிய வெள்ளி கோவில்களைச் செய்வது தெமேத்திரியுவுக்கும் மற்ற எபேசிய வெள்ளித்தட்டான்களுக்கும் மிகுதியான லாபத்தை ஈட்டித்தந்த தொழிலாக இருந்தது. ஆகவே, பட்டணத்தில் பவுல் செய்த பிரசங்க வேலையானது, கணிசமான ஆட்கள் இந்த தேவதையின் அசுத்தமான வணக்கத்தை கைவிடும்படிச் செய்தபோது, தெமேத்திரியு மற்ற தொழிலாளர்களைத் தூண்டிவிடுகிறான். பவுலின் பிரசங்க வேலையின் காரணமாக, அவர்களுடைய பொருளாதார பாதுகாப்புக்கு ஆபத்து வந்திருப்பது மட்டுமல்லாமல் தியானாளின் வணக்கமே இல்லாமல் போய்விடுவதற்கான சாத்தியமும் இருப்பதை அவர்களிடம் அவன் எடுத்துச் சொன்னான்.

பவுலை கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, கோபமாக இருந்த கும்பல் அவருடைய தோழர்களாகிய அரிஸ்தர்க்குவையும் காயுவையும் அரங்கசாலைக்குள் இழுத்துச் சென்றது. அவர்கள் இருவரும் பெரிய ஆபத்தில் இருந்த காரணத்தால், பவுலின் நண்பர்கள், “அரங்கசாலைக்குள் போகவேண்டாம்” என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.

அந்த நிலைமையில் உங்களைக் கற்பனை செய்துபாருங்கள். இரண்டு மணிநேரமாக கலகக்கார கும்பல், “எபேசியருடைய தியானாளே பெரியவள்” என்று தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. தங்களுடைய சொந்த நிலைமையை எடுத்து விளக்கக்கூட இயலாதவர்களாய் அந்த வெறிப்பிடித்த கூட்டத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பது அரிஸ்தர்க்குவுக்கும் காயுவுக்கும் உண்மையில் பயங்கரமான அனுபவமாக இருந்திருக்கவேண்டும். தாங்கள் உயிரோடு வெளியே வரக்கூடுமா என்பதாக அவர்கள் யோசித்திருக்க வேண்டும். மகிழ்ச்சிகரமாக அவர்கள் அதிலிருந்து உயிரோடே வெளியே வந்தார்கள். ஆம், லூக்காவின் பதிவு நேரில் கண்டு எழுதியதுபோல் இருப்பதன் காரணமாக, ஒருவேளை நேரில் பார்த்த சாட்சிகளாகிய அரிஸ்தர்க்கு, காயு ஆகியோரின் சாட்சியங்களை வைத்து அவர் எழுதியிருக்க வேண்டும் என்பதாக சில கல்விமான்கள் கூறுகின்றனர்.

பட்டணத்துச் சம்பிரதியானவர் கடைசியாக கூச்சலை அமைதிப்படுத்தினார். அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை அறிவுப்பூர்வமாக அவர் ஒப்புக்கொள்வதைக் கேட்டபோதும், அவர்களைச் சுற்றியிருந்த அமளி ஓய்ந்துபோவதைப் பார்த்தபோதும் அரிஸ்தர்க்குவுக்கும் காயுவுக்கும் அது பெரும் நிம்மதியளிப்பதாய் இருந்திருக்க வேண்டும்.

இது போன்ற ஒரு அனுபவத்துக்குப்பின் நீங்கள் எவ்வாறு உணர்ந்திருப்பீர்கள்? பவுலின் மிஷனரி தோழனாக இருப்பது நல்லதல்ல; அது மிகவும் ஆபத்தானது, அமைதியான வாழ்க்கையை நாடுவதே மேலானதாக இருக்கும் என்பதாக நீங்கள் முடிவு செய்திருப்பீர்களா? அரிஸ்தர்க்கு அவ்விதமாக நினைக்கவில்லை! தெசலோனிக்கேயாவிலிருந்து வந்தபடியால், நற்செய்தியை அறிவிப்பதில் இருக்கும் ஆபத்துக்களை அவர் ஏற்கெனவே நன்கு அறிந்திருந்தார். பவுல் ஒருசில வருடங்களுக்கு முன்பாக அவருடைய பட்டணத்தில் பிரசங்கித்தபோது, அங்கேயும்கூட ஒரு அமளியுண்டாயிற்று. (அப்போஸ்தலர் 17:1-9; 20:4) அரிஸ்தர்க்கு உண்மையோடு பவுலைப் பற்றிக்கொண்டிருந்தார்.

கிரீஸிலிருந்து எருசலேமுக்கு

வெள்ளித்தட்டான்களின் அமளிக்கு சில மாதங்களுக்குப் பின்னர், பவுல் கிரீஸிலிருந்தார். அவர் எருசலேமுக்கு சீரியா வழியாக கப்பலேறி செல்லவிருந்தார். அப்போது “யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்”தார்கள். (அப்போஸ்தலர் 20:2, 3) ஆபத்தான இந்தச் சூழ்நிலைகளில் பவுலோடு யாரை நாம் காண்கிறோம்? அரிஸ்தர்க்கு!

இந்தப் புதிய ஆபத்தின் காரணமாக பவுலும் அரிஸ்தர்க்குவும் அவர்களுடைய தோழர்களும் தங்கள் திட்டங்களை மாற்றிக்கொண்டார்கள், முதலாவது அவர்கள் மக்கெதோனியா வழியாக பிரயாணப்பட்டு பின்னர் ஆசோ பட்டணம்வரைக்கும் கரை வழியாய் பிரயாணம் செய்து கடைசியாக பத்தாராவில் பெனிக்கேவுக்கு கப்பலில் ஏறிப்போனார்கள். (அப்போஸ்தலர் 20:4, 5, 13-15; 21:1-3) மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருந்த கிறிஸ்தவர்கள் எருசலேமில் தேவையிலிருந்த தங்கள் சகோதரர்களுக்கு கொடுத்தனுப்பிய நன்கொடைகளை அவர்களுக்கு எடுத்துச்செல்வதே இந்தப் பயணத்தின் நோக்கமாக இருந்தது. (அப்போஸ்தலர் 24:17; ரோமர் 15:25, 26) ஒருவேளை பல்வேறு சபைகள் இந்தப் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்திருந்தபடியால் அநேகம் பேர் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். இப்படி ஒரு பெரிய கூட்டமாக செல்வது அதிக பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரிஸ்தர்க்குவுக்கு கிரீஸிலிருந்து எருசலேமுக்கு பவுலோடுகூட பிரயாணம் செய்யும் பெரிய சிலாக்கியம் கிட்டியது. இருந்தபோதிலும் அவர்களுடைய அடுத்தப் பயணத்தில் யூதேயாவிலிருந்து ரோமாபுரி வரையாக அவர்கள் செல்ல வேண்டியதாக இருந்தது.

ரோமாபுரிக்கு பயணம்

இந்த முறை சூழ்நிலைமைகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. பவுல் இரண்டு வருடங்களாக செசரியாவில் காவலில் இருந்திருக்கிறார், இராயனிடம் மேல் முறையீடு செய்திருந்தார், சங்கிலிகளால் கட்டப்பட்டவராக ரோமாபுரிக்கு அனுப்பிவைக்கப்படவிருந்தார். (அப்போஸ்தலர் 24:27; 25:11, 12) பவுலின் தோழர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் என்பதைக் கற்பனை செய்ய முயன்றுபாருங்கள். எத்தகைய தீர்ப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாத நிலையில், செசரியாவிலிருந்து ரோமாபுரிக்குச் செல்லும் பயணம் நீண்டதாக இருந்தது, உணர்ச்சிரீதியில் அவர்களை அலைக்கழிப்பதாய் இருந்திருக்கும். அவரோடுகூட போய் அவருக்கு ஆதரவாயும் உதவியாயும் யார் இருப்பார்? இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் அல்லது அவர்களாகவே முன்வந்தார்கள். அவர்கள் அரிஸ்தர்க்குவும் அப்போஸ்தலர் நடபடிகளின் ஆசிரியரான லூக்காவும் ஆவர்.—அப்போஸ்தலர் 27:1, 2.

ரோமாபுரியை நோக்கி செய்த பிரயாணத்தின் முதல் கட்டத்தில் லூக்காவும் அரிஸ்தர்க்குவும் எவ்வாறு அதே கப்பலில் செல்ல முடிந்தது? வரலாற்றாசிரியர் ஜசப்பா ரெக்கோட்டி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இவர்கள் இருவரும் [லூக்காவும் அரிஸ்தர்க்குவும்] பொதுப் பயணிகளாக கப்பலேறினார்கள் . . . அல்லது ஒரு ரோம குடிமகன் உதவிக்கு ஓரிரு அடிமைகளை வைத்துக்கொள்வதை சட்டம் அனுமதித்தப்படியால், பவுலின் அடிமைகளாக இவர்களைக் கருதியதாக பாவனைசெய்த நூற்றுக்கதிபதியின் தயவினால் இவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிக சாத்தியமாகும்.” அவர்கள் அவருடைய முன்னிலையில் இருந்ததும் அவர்களுடைய ஊக்கமூட்டுதலும் பவுலுக்கு எத்தனை தைரியமூட்டுவதாக இருந்திருக்க வேண்டும்!

லூக்காவும் அரிஸ்தர்க்குவும் தங்கள் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் நிலையில் பவுலுக்கு தங்களுடைய அன்பைக் காண்பித்தனர். உண்மையில், கைதியாக இருந்த தங்கள் தோழனோடு இருக்கையில் மெலித்தா தீவில் கப்பற்சேதம் ஏற்பட்டபோது, அவர்கள் உயிருக்கு ஆபத்தான ஒரு நிலைமைக்கு உள்ளானார்கள்.—அப்போஸ்தலர் 27:13–28:1.

பவுலின் ‘உடன் கைதி’

பவுல் கொலோசெயருக்கும், பிலேமோனுக்கும் பொ.ச. 60-61-ல் தன்னுடைய கடிதங்களை எழுதியபோது, அரிஸ்தர்க்குவும் லூக்காவும் இன்னும் ரோமாபுரியில் அவர் அருகிலேயே இருந்தனர். அரிஸ்தர்க்குவும் எப்பாப்பிராவும் பவுலோடு ‘உடன் கைதி’ என்பதாக குறிப்பிடப்படுகின்றனர். (கொலோசெயர் 4:10, 14; பிலேமோன் 23, 24) ஆகவே, கொஞ்ச காலத்துக்கு அரிஸ்தர்க்கு பவுலுடன் சிறையிருப்பில் இருந்திருக்க வேண்டும்.

ரோமாபுரியில் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது பவுல் ஒரு சிறைக்கைதியாக இருந்தபோதிலும், தன்னைக் காவல் காக்கும் சேவகனோடு சொந்தமாக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டில் தங்கியிருக்க அவர் அனுமதிக்கப்பட்டார். இங்கே தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் இவரால் நற்செய்தியை அறிவிக்க முடிந்தது. (அப்போஸ்தலர் 28:16, 30) அப்போது அரிஸ்தர்க்குவும், எப்பாப்பிராவும் லூக்காவும் மற்றவர்களும் பவுலுக்கு ஊழியஞ்செய்துகொண்டு அவருக்கு உதவிசெய்து அவரைக் காத்துவந்தனர்.

‘ஆறுதல் செய்தவர்’

ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிள் பதிவில் அரிஸ்தர்க்கு சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்களைச் சிந்தித்தப் பிறகு, அரிஸ்தர்க்கு எப்படிப்பட்ட மனிதனாக காட்சியளிக்கிறார்? எழுத்தாளர் டபிள்யூ. டி. தாமஸின்படி அரிஸ்தர்க்கு “எதிர்ப்பை சந்தித்து, விசுவாசம் சேதமடையாமலும் ஊழியஞ்செய்வதற்கான மனஉறுதி குறையாமலும் அதிலிருந்து வெளிவரக்கூடிய ஒரு நபராக தனித்து நிற்கிறார். நீல வானிலிருந்து சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்த நல்ல நாட்களில் மட்டுமல்ல, ஆனால் நிந்தனையிலும் சூறாவளியின் மத்தியிலும் கடவுளை நேசித்த ஒரு மனிதனாக தனித்து நிற்கிறார்.”

அரிஸ்தர்க்குவும் மற்றவர்களும் தனக்கு ‘ஆறுதல் செய்தவர்கள்’ (கிரேக்கு, பாரிகோரியா) அதாவது, ஆறுதலுக்கு காரணமானவர்கள் என்பதாக பவுல் சொல்கிறார். (கொலோசெயர் 4:10, 11) ஆகவே பவுலுக்கு ஆறுதலளித்து தைரியமூட்டுவதன் மூலம் அரிஸ்தர்க்கு ஆபத்து காலங்களில் உண்மையான தோழனாக இருந்தார். பல ஆண்டுகளாக அப்போஸ்தலனின் தோழமையையும் நட்பையும் பெற்றிருந்தது மிகவும் மனநிறைவளிப்பதாயும் ஆவிக்குரிய வகையில் பயன்பெருக்கும் அனுபவமாயும் இருந்திருக்க வேண்டும்.

அரிஸ்தர்க்கு அனுபவித்தது போன்று குறிப்பிடத்தக்க சூழ்நிலைமைகள் ஒருவேளை நமக்கு ஏற்படாமல் இருக்கலாம். இருந்தபோதிலும், கிறிஸ்துவின் ஆவிக்குரிய சகோதரர்களிடமும் யெகோவாவின் அமைப்பினிடமும் இதேபோன்ற ஒரு பற்றுறுதி இன்று கிறிஸ்தவ சபையிலுள்ள அனைவருக்கும் தேவையாக இருக்கிறது. (மத்தேயு 25:34-40 ஒப்பிடுக.) நாம் அறிந்திருக்கும் நம்முடைய உடன் வணக்கத்தார் ஒருவேளை இறுதியில், இழப்பு, வியாதி அல்லது மற்ற கஷ்டங்களின் காரணமாக துன்பத்தை அல்லது மன வேதனையை எதிர்ப்படலாம். அவர்களை பற்றிக்கொண்டு, உதவியையும் ஆறுதலையும் உற்சாகத்தையும் கைவிட்டுவிடாமல் அவர்களுக்கு அளிப்பதன் மூலம் நாம் சந்தோஷத்தைக் கண்டடைந்து, பற்றுமாறாத தோழர்களாக நம்மைநாமே நிரூபிக்க முடியும்.—நீதிமொழிகள் 17:17-ஐ ஒப்பிடுக; அப்போஸ்தலர் 20:35.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்