இளைஞர்களே, உங்கள் மகத்தான சிருஷ்டிகரை இப்போதே நினையுங்கள்
“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் [மகத்தான] சிருஷ்டிகரை நினை.”—பிர. 12:1.
1. தம்மை வணங்கும் இளைஞர்கள்மீது தாம் வைத்திருக்கிற நம்பிக்கையை யெகோவா எவ்வாறு தெரிவித்திருக்கிறார்?
கிறிஸ்தவ இளைஞர்களை அரும்பெரும் பொக்கிஷங்களாகவும் புத்துணர்ச்சியூட்டும் பனித்துளிகளாகவும் யெகோவா கருதுகிறார். சொல்லப்போனால், தம் மகனுடைய “பராக்கிரமத்தின் நாளிலே” இளம் ஆண்களும் பெண்களும் கிறிஸ்துவுக்குச் சேவை செய்யத் தங்களையே ‘மனப்பூர்வமாய்’ அளிப்பார்கள் என்று முன்னுரைத்தார். (சங். 110:3) இது நம்முடைய நாளைக் குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம். இன்றைய உலகில், கடவுள் நம்பிக்கையற்ற, சுயநலமிக்க, பேராசை பிடித்த, கீழ்ப்படிய மறுக்கிற ஆட்களையே பெரும்பாலும் காணமுடிகிறது. எனினும், தம்மை வணங்குகிற இளைஞர்கள் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள் என்பதை யெகோவா அறிந்திருந்தார். இளம் சகோதர சகோதரிகளே, யெகோவா உங்கள்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார், பார்த்தீர்களா!
2. யெகோவாவை நினைப்பது எதையெல்லாம் உட்படுத்துகிறது?
2 இளம் பிள்ளைகள் யெகோவாவைத் தங்கள் மகத்தான சிருஷ்டிகராக நினைப்பதைக் கண்டு அவர் எவ்வளவாய் பூரித்துப்போவார் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். (பிர. 12:1) யெகோவாவை நினைப்பது, அவரைப்பற்றிச் சிந்திப்பதை மட்டுமே அல்லாமல் செயல்படுவதையும் உட்படுத்துகிறது. இது, நாம் அவருக்குப் பிடித்தமானவற்றைச் செய்வதை, நம் அன்றாட வாழ்க்கையில் அவருடைய சட்டங்களின்படியும் நியமங்களின்படியும் நடப்பதை அர்த்தப்படுத்துகிறது. அதோடு, யெகோவா நம்முடைய நலனில் மிகுந்த அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை அறிந்து, அவர்மீது நம்பிக்கை வைப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. (சங். 37:3; ஏசா. 48:17, 18) உங்களுடைய மகத்தான சிருஷ்டிகர்மீது அப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
“உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு”
3, 4. யெகோவாமீது வைத்திருந்த நம்பிக்கையை இயேசு எப்படி வெளிக்காட்டினார், இப்போது யெகோவாமீது நம்பிக்கை வைப்பது ஏன் முக்கியம்?
3 யெகோவாமீது நம்பிக்கை வைப்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் இயேசு கிறிஸ்துதான். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்று நீதிமொழிகள் 3:5, 6-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளின்படி அவர் வாழ்ந்தார். அவர் முழுக்காட்டுதல் பெற்ற பிறகு விரைவிலேயே சாத்தான் அவரிடம் வந்தான்; உலக அதிகாரத்தையும் மகிமையையும் தருவதாக ஆசைகாட்டினான். (லூக். 4:3-13) ஆனால், அவர் ஏமாந்துவிடவில்லை. ஏனெனில், ‘தாழ்மையாக இருப்பதும் கர்த்தருக்குப் பயப்படுதலும்தான்’ உண்மையான ‘ஐசுவரியத்தையும் மகிமையையும் ஜீவனையும்’ தரும் என்பதை அவர் அறிந்திருந்தார்.—நீதிமொழிகள் 22:4.
4 இன்றைய உலகில் பேராசையும் சுயநலமும் மலிந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதே ஞானமானது. அதோடு, ஜீவனுக்கு வழிநடத்துகிற இடுக்கமான பாதையிலிருந்து யெகோவாவின் ஊழியர்களை வழிவிலக வைப்பதற்கு சாத்தான் எதையும் செய்வான் என்பதையும் நினைவில் வையுங்கள். அழிவுக்கு வழிநடத்துகிற விசாலமான பாதையில் அனைவரும் நடக்க வேண்டுமென்பதுதான் அவன் விருப்பம். அவனிடம் ஏமாந்துவிடாதீர்கள்! அதற்கு மாறாக, உங்களுடைய மகத்தான சிருஷ்டிகரை நினைக்கத் தீர்மானமாய் இருங்கள். அவர்மீது முழு நம்பிக்கை வையுங்கள். நிச்சயமாகவே வெகுவிரைவில் வரவிருக்கும் ‘உண்மையான வாழ்வை’ உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.—1 தீ. 6:19, பொது மொழிபெயர்ப்பு.
இளைஞர்களே, ஞானமாகச் செயல்படுங்கள்!
5. இந்த உலகத்தின் எதிர்காலத்தைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
5 தங்களுடைய மகத்தான சிருஷ்டிகரை நினைக்கும் இளைஞர்கள் தங்கள் வயதிலுள்ள மற்றவர்களைவிட ஞானமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (சங்கீதம் 119:99, 100-ஐ வாசியுங்கள்.) எந்த விஷயத்தையும் கடவுள் எப்படிக் கருதுகிறாரோ அப்படியே அவர்களும் கருதுகிறார்கள். எனவே, இந்த உலகத்திற்கு முடிவு நெருங்கிவிட்டதை நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். உங்களுக்கு அதிக அனுபவம் இல்லாதபோதிலும், எதிர்காலத்தைப் பற்றிய பயமும் கவலையும் மக்கள் மனதில் அதிகரித்து வருவதைக் கவனித்திருப்பீர்கள். நீங்கள் பள்ளி மாணவரெனில், சுற்றுச்சூழல் பாதிப்பு, புவிச்சூடு, காடுகள் அழிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளைப்பற்றி நிறையவே அறிந்திருப்பீர்கள். மக்கள் இவற்றை நினைத்துப் பெரிதும் கலக்கமடைகிறார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள்; இன்றைய சாத்தானின் உலகத்திற்கு முடிவு நெருங்கிவிட்டதன் அடையாளமாய் இவையெல்லாம் இருப்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.—வெளி. 11:18.
6. சில இளைஞர்கள் எவ்வாறு ஏமாந்திருக்கிறார்கள்?
6 எனினும், யெகோவாவுக்குச் சேவை செய்துவரும் இளைஞர்கள் சிலர் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும் இந்த உலகத்திற்கு முடிவு நெருங்கி விட்டதை மனதில் வைக்கவும் தவறியிருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது. (2 பே. 3:3, 4) இன்னும் சிலர், கெட்ட சகவாசத்தாலும் ஆபாசத்தாலும் வசீகரிக்கப்பட்டுப் படுமோசமான பாவத்தில் விழுந்திருக்கிறார்கள். (நீதி. 13:20) முடிவு நெருங்கி வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயம்பார்த்து கடவுளுடைய தயவை இழந்துபோவது எவ்வளவு பரிதாபகரமானது! பொ.ச.மு. 1473-ல் இஸ்ரவேலருக்குச் சம்பவித்ததிலிருந்து ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். அந்தச் சமயத்தில் அவர்கள் மோவாபின் சமவெளிகளில் தங்கியிருந்தார்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் நுழைவாயிலில் இருந்தார்கள் என்றே சொல்லலாம். அப்போது என்ன நடந்தது?
நுழையும் தறுவாயில் தடுமாறி விழுந்தார்கள்
7, 8. (அ) மோவாப் சமவெளியில் சாத்தான் என்ன தந்திரத்தைக் கையாண்டான்? (ஆ) இன்று என்ன சூழ்ச்சியைப் பயன்படுத்துகிறான்?
7 தங்களுக்கு வாக்குக்கொடுக்கப்பட்டிருந்த சொத்தை இஸ்ரவேலர் பெற்றுக்கொள்ளாதபடி எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென்று சாத்தான் தீர்மானமாயிருந்தான். பிலேயாம் தீர்க்கதரிசியைப் பயன்படுத்தி அவர்களைச் சபிப்பதற்குச் சாத்தான் போட்ட சதித்திட்டம் தோல்வியடைந்தது. ஆகவே, அவர்களைத் தந்திரமாகச் சிக்க வைக்கத் தீர்மானித்தான். அதாவது, யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற அவர்களைத் தகுதியற்றவர்களாய் ஆக்குவதற்கு முயன்றான். ஆம், இஸ்ரவேலரை வசியப்படுத்த மோவாபைச் சேர்ந்த மயக்கும் மங்கையரைச் சாத்தான் பயன்படுத்தினான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டான். ஆம், அவர்கள் மோவாபியப் பெண்களுடன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு, பாகால் பேயோரை வணங்குமளவுக்குச் சென்றார்கள்! வாக்குப்பண்ணப்பட்ட தேசம் என்ற அரும்பெரும் சொத்தைப் பெறும் தறுவாயில், சுமார் 24,000 பேர் தங்கள் உயிரை இழந்தார்கள். எப்பேர்ப்பட்ட பரிதாபகரமான முடிவு!—எண். 25:1-3, 9.
8 இன்று அதைவிடச் சிறந்ததொரு வாக்குப்பண்ணப்பட்ட தேசமான புதிய உலகத்தை நாம் அதிவேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறோம். வழக்கம் போலவே, கடவுளுடைய மக்களைச் சீரழிக்க இன்றும் பாலுறவு ஒழுக்கக்கேட்டை ஓர் ஆயுதமாகச் சாத்தான் பயன்படுத்துகிறான். இந்த உலகத்தின் ஒழுக்க நெறிகள் மகா மட்டமாகிவிட்டன. இதனால், வேசித்தனத்தில் ஈடுபடுவதெல்லாம் பெரிய தவறல்ல என்றும், ஓரினச்சேர்க்கை என்பது அவரவருடைய இஷ்டமென்றும் கருதப்படுகிறது. “ஓரினச்சேர்க்கையும், தங்கள் மணத்துணை அல்லாத வேறொருவரோடு பாலுறவில் ஈடுபடுவதும் தவறு என்பதை என் பிள்ளைகள் கற்றுக்கொள்வது வீட்டிலும் ராஜ்ய மன்றத்திலும்தான்” என்று ஒரு சகோதரி குறிப்பிட்டார்.
9. ‘கன்னிகைப்பருவத்தில்’ என்ன ஏற்படலாம், இளைஞர்கள் இதை எப்படி மேற்கொள்ளலாம்?
9 பாலுறவு என்பது உயிர் உருவாவதுடன் சம்பந்தப்பட்ட புனிதமான பரிசு என்பதைத் தங்கள் மகத்தான சிருஷ்டிகரை நினைவில் வைத்திருக்கும் இளைஞர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகவே, கடவுள் சொல்லியிருக்கிறபடி, தம்பதிகள் மட்டும்தான் பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். (எபி. 13:4) என்றாலும், ‘கன்னிகைப்பருவத்தில்,’ அதாவது, பாலுறவு உணர்ச்சிகள் மேலோங்கி, தவறாகச் சிந்திக்கத் தூண்டும் சமயத்தில் கற்புடன் நிலைத்திருப்பது கடினமாக இருக்கலாம். (1 கொ. 7:36) ஒழுக்கக்கேடான சிந்தனைகள் மனதிற்குள் எட்டிப்பார்க்கும்போது நீங்கள் என்ன செய்யலாம்? நல்ல காரியங்களில் மனதை ஊன்றவைக்க உதவும்படி யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள். உண்மையாக உதவிகேட்டுத் தம்மிடம் வரும் ஊழியர்களின் ஜெபங்களை யெகோவா எப்போதுமே கேட்கிறார். (லூக்கா 11:9-13-ஐ வாசியுங்கள்.) விசுவாசத்தைப் பலப்படுத்துகிற நல்ல விஷயங்களைப்பற்றிப் பேசுவதும்கூட மனதை அதிலிருந்து திசைதிருப்புவதற்கு உதவும்.
இலட்சியங்களை ஞானமாகத் தீர்மானியுங்கள்!
10. எப்படிப்பட்ட வீணான சிந்தையைத் தவிர்க்க நாம் விரும்புகிறோம், நம்மைநாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
10 உலக இளைஞர்கள் பலரும் தங்கள் மனம்போன போக்கில் இன்ப நாட்டங்களுக்காகவே வாழ்கிறார்கள்; இதற்கு ஒரு காரணம், கடவுளுடைய வழிநடத்துதலோ, எதிர்கால நம்பிக்கையோ இல்லாததுதான். இவர்கள், ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்த கடவுள் பயமற்ற இஸ்ரவேலரைப்போல இருக்கிறார்கள்; அதாவது, கடவுளுடைய வழிநடத்துதலைப் புறக்கணித்துவிட்டு, “சந்தோஷித்துக் களித்து, . . . இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்து” இவற்றுக்காகவே வாழ்ந்தவர்களைப்போல இருக்கிறார்கள். (ஏசா. 22:13) இப்படிப்பட்டவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதற்குப் பதிலாக, தமக்கு உண்மையோடு இருப்பவர்களுக்கு யெகோவா அளித்திருக்கும் பிரகாசமான எதிர்கால நம்பிக்கையைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம், அல்லவா? நீங்கள் யெகோவாவை வணங்கும் இளைஞராக இருந்தால், பின்வரும் கேள்விகளைச் சற்றுச் சிந்தியுங்கள்: புதிய உலகம் சீக்கிரத்தில் வரவேண்டும் என்று நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறீர்களா? யெகோவா உங்களுக்கு முன் வைத்திருக்கிற ‘ஆனந்த பாக்கியத்திற்காக [நீங்கள்] எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், தெளிந்தபுத்தி . . . உள்ளவர்களாய் . . . ஜீவனம்பண்ண’ ஊக்கமாக முயற்சி செய்கிறீர்களா? (தீத். 2:12, 13) உங்களுடைய வாழ்க்கையில் எதை இலட்சியமாக வைத்திருக்கிறீர்கள், எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள் என்பது இந்தப் பதிலைச் சார்ந்தே இருக்கிறது.
11. பள்ளியில் படிக்கும் இளைஞர்கள் ஏன் நன்றாகப் படிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்?
11 இளைஞர்கள் இவ்வுலக இலட்சியங்களை அடையப் பாடுபட வேண்டுமென்று உலகத்தார் விரும்புகிறார்கள். நீங்கள் இன்னும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தால், அடிப்படைக் கல்வியை நன்கு கற்றுக்கொள்வதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. எனினும், நல்ல வேலையில் சேருவதற்காக மட்டுமல்லாமல் சபைக்கு ஒரு சொத்தாக, பயனுள்ள ராஜ்ய அறிவிப்பாளராக இருக்கும் இலட்சியத்துடனேயே நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்திருங்கள். இதற்காக, நீங்கள் தெளிவாகப் பேசுவதற்கான திறமையையும், தெளிவாக யோசிப்பதற்கான திறமையையும், நிதானத்தோடும் மரியாதையோடும் விளக்குவதற்கான திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். எனினும், பைபிளைப் படித்து அதன் நியமங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் இளைஞர்கள் உலகத்திலேயே மிகச்சிறந்த கல்வியைப் பெறுகிறார்கள்; வெற்றிகரமான முடிவில்லா வாழ்க்கைக்கு இப்போதே அடித்தளம் போடுகிறார்கள்.—சங்கீதம் 1:1-3-ஐ வாசியுங்கள்.a
12. பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் விஷயத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள் யாருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்?
12 பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டுமென்பது இஸ்ரவேலருக்கு மிக முக்கியமான விஷயமாக இருந்தது. சொல்லப்போனால், வாழ்க்கைக்குத் தேவையான கிட்டத்தட்ட எல்லா விஷயங்களைக் குறித்தும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். முக்கியமாக, ஆன்மீகக் காரியங்களைக் கற்றுக்கொடுத்தார்கள். (உபா. 6:6, 7) ஆகவே, தங்கள் பெற்றோரும், கடவுள் பயமுள்ள பெரியவர்களும் சொல்லுகிறவற்றைக் கேட்டு நடந்த இளைஞர்கள் அறிவில் சிறந்து விளங்கினார்கள். அதோடு, ஞானம், உட்பார்வை, புரிந்துகொள்ளுதல், சிந்திக்கும் திறன் ஆகியவற்றையும் சம்பாதித்தார்கள். ஆன்மீகக் காரியங்களைக் கற்றுக்கொண்டதால்தான் இதுபோன்ற அரிய பண்புகளை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடிந்தது. (நீதி. 1:2-4; 2:1-5, 11-15) அவ்வாறே, பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கு கிறிஸ்தவ குடும்பங்கள் இதே முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும்.
உங்களை நேசிப்பவர்களின் பேச்சைக் கேளுங்கள்
13. சில இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட ஆலோசனை கிடைக்கிறது, அவர்கள் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
13 இளைஞர்களுக்கு பலதரப்பிலிருந்து ஆலோசனைகள் கிடைக்கின்றன. அதிலும், பள்ளி ஆசிரியர்கள் இந்த உலகில் சாதனை படைப்பதைப் பற்றியே பெரும்பாலும் ஆலோசனை தருகிறார்கள். தயவுசெய்து, கடவுளுடைய வார்த்தையையும், உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு தந்திருக்கும் பிரசுரங்களையும் வைத்து இந்த ஆலோசனைகளைப் பரிசீலியுங்கள். இதைச் செய்கையில் கடவுளுடைய வழிநடத்துதலுக்காக ஜெபம் பண்ணுங்கள். நீங்கள் பைபிளில் கற்றுக்கொண்டதிலிருந்து, இளைஞர்களையும் அனுபவமில்லாதவர்களையுமே சாத்தான் முக்கியமாகக் குறி வைக்கிறான் என்பதை அறிந்திருக்கிறீர்கள். உதாரணமாக, ஏதேன் தோட்டத்தில் நடந்ததை எண்ணிப்பாருங்கள். அனுபவமில்லாத ஏவாள் சாத்தானின் பேச்சைக் கேட்டாள்; ஆம், தன்மீது துளிகூட அன்பில்லாத அந்த அந்நியனின் வார்த்தைகளை நம்பினாள். அதற்கு மாறாக, தன்னிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்த யெகோவாவின் பேச்சை அவள் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!—ஆதி. 3:1-6.
14. யெகோவாவும் அவரை வணங்குகிற பெற்றோரும் சொல்லுகிற ஆலோசனைகளை ஏன் கேட்க வேண்டும்?
14 உங்களுடைய மகத்தான சிருஷ்டிகர் உங்கள்மீதும் அன்பு வைத்திருக்கிறார். அவருடைய அன்பு முற்றிலும் தூய்மையானது. இன்று மட்டுமல்ல, என்றென்றும் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். எனவே, உங்களிடமும் தம்மை வணங்குகிற அனைவரிடமும், “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று அக்கறையுள்ள பெற்றோரைப்போல் அவர் கரிசனையோடு சொல்கிறார். (ஏசா. 30:21) யெகோவாவை நெஞ்சார நேசிக்கிற பெற்றோர் உங்களுக்கு இருந்தால், அது உங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்றே சொல்லலாம். வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுப்பது, எதை இலட்சியமாக வைப்பது போன்றவற்றைத் தீர்மானிக்கையில் அவர்கள் தரும் ஆலோசனைகளுக்கு மதிப்புக் கொடுங்கள். (நீதி. 1:8, 9) ஏனெனில், நீங்கள் ஜீவனைப் பெற வேண்டுமென்றே அவர்கள் விரும்புகிறார்கள். அது இந்த உலகம் தரும் ஆஸ்தியையும் அந்தஸ்தையும்விடப் பன்மடங்கு மதிப்புடையது.—மத். 16:26.
15, 16. (அ) யெகோவாமீது நாம் என்ன உறுதியான நம்பிக்கையை வைக்கலாம்? (ஆ) பாருக்கின் உதாரணத்திலிருந்து நாம் என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
15 தங்களுடைய மகத்தான சிருஷ்டிகரை நினைப்பவர்கள் பணம் சம்பாதிப்பதை இலட்சியமாக வைக்காமல் எளிமையாக வாழ்கிறார்கள்; ஏனெனில், யெகோவா தங்களை “ஒருபோதும்” (NW) விட்டுவிலக மாட்டார், “ஒருபோதும்” (NW) கைவிடமாட்டார் என்பதை அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். (எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள்.) இந்த உலகத்தின் சிந்தனையோ, இப்படிப்பட்ட நல்ல மனப்பான்மைக்கு முரண்படுவதால், அது நம்மைத் தொற்றிவிடாதபடி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (எபே. 2:2) இவ்விஷயத்தில், எரேமியாவின் செயலரான பாருக்கின் உதாரணத்தைச் சிந்திப்போம். பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்னாலிருந்த கடினமான காலப்பகுதியில் அவர் வாழ்ந்துவந்தார்.
16 வசதியாக வாழ வேண்டுமென்று பாருக் நினைத்திருக்கலாம். யெகோவா இதைக் கவனித்தார். “பெரிய காரியங்களைத்” தேட வேண்டாமென்று அன்புடன் அவரை எச்சரித்தார். பாருக் மனத்தாழ்மையுள்ளவராகவும் ஞானமுள்ளவராகவும் இருந்ததால் யெகோவாவின் வார்த்தையைக் கேட்டு, எருசலேமின் அழிவிலிருந்து தப்பிப்பிழைத்தார். (எரே. 45:2-5) மறுபட்சத்தில், பாருக்கின் காலத்தில், யெகோவாவின் வணக்கத்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிட்டு, பொருளாதார ரீதியில் “பெரிய காரியங்களை” சம்பாதித்த ஆட்கள் சீக்கிரத்தில் எல்லாவற்றையும் கல்தேயரிடம் (பாபிலோனியர்களிடம்) பறிகொடுத்தார்கள். அநேகர் தங்கள் உயிரையும்கூட பறிகொடுத்தார்கள். (2 நா. 36:15-18) இந்த உலகத்தில் ஆஸ்தியையும் அந்தஸ்தையும் சம்பாதிப்பதைவிட யெகோவாவுடன் நல்லுறவைக் கொண்டிருப்பதே அதிமுக்கியமானது என்பதை பாருக்கின் உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
நல்ல முன்மாதிரிகளைப் பின்பற்றுங்கள்
17. இயேசு, பவுல், தீமோத்தேயு ஆகியோர் யெகோவாவின் ஊழியர்களுக்கு மிகச்சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள் என ஏன் சொல்லலாம்?
17 நாம் ஜீவனுக்குப் போகிற பாதையில் தொடர்ந்து நடக்க உதவியாக, கடவுளுடைய வார்த்தை அநேக அருமையான முன்மாதிரிகளை அளிக்கிறது. உதாரணமாக, இதுவரை வாழ்ந்த மனிதர்களிலேயே மிகத் திறமையானவர் இயேசுதான். எனினும், மக்களுக்கு நிரந்தர நன்மைகளை வாரி வழங்கப்போகிற “ராஜ்யத்தைக் குறித்துப்” பிரசங்கிப்பதற்கே அவர் தன்னுடைய சக்தியையெல்லாம் செலவிட்டார். (லூக். 4:43) அப்போஸ்தலன் பவுல் தன்னிடமுள்ள மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்க விரும்பினார்; இதனால் செல்வமும் செல்வாக்குமுள்ள வாழ்க்கையை விட்டுவிட்டு, தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்குப் பயன்படுத்தினார். அவருடைய சிறந்த முன்மாதிரியை “விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய” தீமோத்தேயு பின்பற்றினார். (1 தீ. 1:2) இயேசு, பவுல், தீமோத்தேயு ஆகியோர் தாங்கள் எடுத்த முடிவை நினைத்து வருந்தினார்களா? நிச்சயமாகவே இல்லை! சொல்லப்போனால், கடவுளைச் சேவிப்பதற்குக் கிடைக்கும் பாக்கியத்தோடு ஒப்பிட, இந்த உலகம் அளிக்கும் எதையுமே ‘குப்பையாக’ கருதுவதாய் பவுல் கூறினார்.—பிலி. 3:8-11.
18. ஓர் இளம் சகோதரர் எப்படிப்பட்ட பெரிய மாற்றங்களைச் செய்தார், அதில் ஏன் அவருக்கு எந்த வருத்தமுமில்லை?
18 இயேசு, பவுல், தீமோத்தேயு ஆகியோரின் முன்னுதாரணத்தை இன்றைய கிறிஸ்தவ இளைஞர்களில் அநேகர் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக, கைநிறைய சம்பளம் கிடைக்கிற வேலை பார்த்துவந்த ஓர் இளம் சகோதரர் இவ்வாறு கூறினார்: “பைபிள் சொல்கிறபடி வாழ்வதால், சீக்கிரத்திலேயே எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது. சம்பளமும் உயர்ந்தது. இருந்தாலும், நான் என் வாழ்க்கையை வீணடிப்பதாகவே எனக்குத் தோன்றியது. அதனால், அந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவைச் சந்தித்து, நான் முழுநேர ஊழியத்தில் ஈடுபட விரும்புவதாகச் சொன்னேன். பணத்தை வாரிக்கொடுத்தால் மனம் மாறிவிடுவேன் என்றெண்ணி உடனடியாக எனக்குப் பலமடங்கு அதிக சம்பளம் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் நான் அதற்கெல்லாம் மசியவில்லை. நான் ஏன் நல்ல வேலையை விட்டுவிட்டு, முழுநேர சேவை செய்கிறேன் என்று அநேகருக்குப் புரிவதில்லை. கடவுளுக்குச் செய்த ஒப்புக்கொடுத்தலை முழுமையாக நிறைவேற்ற மனதார விரும்பியதால்தான் இந்தத் தீர்மானத்தை எடுத்தேன். இப்போது என் வாழ்க்கையில் முக்கியமானதாக இருப்பது கடவுளுடைய சேவைதான். அதுவே, பணமும் பதவியும் தரமுடியாத சந்தோஷத்தையும் திருப்தியையும் எனக்குத் தருகிறது.”
19. இளைஞர்கள் எப்படிப்பட்ட ஞானமான தீர்மானத்தை எடுக்கும்படி ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்?
19 உலகெங்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதேபோன்ற ஞானமான தீர்மானங்களைச் செய்திருக்கிறார்கள். ஆகவே இளைஞர்களே, உங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து முடிவெடுக்கும்போது யெகோவாவின் நாளை மனதில் வைத்துத் தீர்மானம் செய்யுங்கள். (2 பே. 3:11, 12) இந்த உலகத்தில் ஜொலிக்கும் ஆட்களைப் பார்த்துப் பொறாமைப்படாதீர்கள். மாறாக, உங்களை மனதார நேசிப்பவர்களின் பேச்சைக் கேளுங்கள். “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்.” ஏனெனில், இதுவே மிகப் பாதுகாப்பான முதலீடு. இதுவே நித்தியத்திற்கும் பலன் தருவது. (மத். 6:19, 20; 1 யோவான் 2:15-17-ஐ வாசியுங்கள்) ஆகவே, உங்கள் மகத்தான சிருஷ்டிகரை நினையுங்கள். அப்போது, யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.
[அடிக்குறிப்பு]
a உயர்கல்வி, வேலை சம்பந்தமான தகவலுக்கு அக்டோபர் 1, 2005 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 26-31-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கடவுள்மீது நம்பிக்கை வைத்திருப்பதை எப்படிக் காட்டுகிறோம்?
• எது மிகச்சிறந்த கல்வி?
• பாருக்கிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
• யாரெல்லாம் நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார்கள், ஏன்?
[பக்கம் 13-ன் படங்கள்]
யெகோவா மிகச்சிறந்த கல்வியை அளிக்கிறார்
[பக்கம் 15-ன் படம்]
பாருக் யெகோவாவின் பேச்சைக் கேட்டதால் எருசலேமின் அழிவிலிருந்து தப்பித்தார். இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?