இளம் வயதிலேயே யெகோவாவைச் சேவிக்கத் தீர்மானியுங்கள்
“நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு.”—2 தீ. 3:14.
1. இளைஞர்களின் சேவையை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
இளைஞர்கள் தமக்குச் செய்யும் பரிசுத்த சேவையை யெகோவா மிக உயர்வாய்க் கருதுவதால் அவர்களைக் குறித்து ஒரு தீர்க்கதரிசனத்தை எழுதச் செய்தார். “உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங். 110:3) ஆம், தமக்குச் சேவை செய்ய விரும்புகிற இளைஞர்களை யெகோவா பொக்கிஷமாய்க் கருதுகிறார்.
2. எதிர்காலத்தைக் குறித்து தீர்மானம் எடுக்கையில் இளைஞர்கள் என்னென்ன சவால்களை எதிர்ப்படுகிறார்கள்?
2 கிறிஸ்தவ சபையிலுள்ள இளைஞர்களே, யெகோவாவுக்கு உங்களை ஒப்புக்கொடுத்துவிட்டீர்களா? அநேக இளைஞர்கள், உண்மைக் கடவுளைச் சேவிப்பதா வேண்டாமா என தீர்மானிக்க முடியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள். தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், சில சமயங்களில் குடும்பத்தார், நண்பர்கள் என எல்லாருமே கைநிறைய சம்பாதிக்கும்படி இளைஞர்களைத் தூண்டுகிறார்கள். இந்த இளைஞர்கள், ஆன்மீக இலக்குகளை வைக்கும்போது பெரும்பாலும் உலகம் இவர்களைப் பார்த்து சிரிக்கிறது. ஆனால், உண்மைக் கடவுளைச் சேவிப்பதே உத்தம வாழ்க்கை முறை என்பது முழுக்க முழுக்க நிஜம்; இத்தகைய வாழ்க்கை முறையையே நீங்களும் தேர்ந்தெடுக்கலாம். (சங். 27:4) இது சம்பந்தமாக பின்வரும் மூன்று கேள்விகளைச் சிந்தியுங்கள்: நீங்கள் ஏன் கடவுளைச் சேவிக்க வேண்டும்? மற்றவர்களுடைய சொல்லையும் செயலையும் பொருட்படுத்தாமல், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியராக கடைசிவரை நீங்கள் எப்படி உண்மையோடு வாழலாம்? பரிசுத்த சேவையில் உங்களுக்கு என்னென்ன அருமையான வாய்ப்புகள் காத்திருக்கின்றன?
யெகோவாவைச் சேவிப்பதே மிகச் சிறந்த தெரிவு
3. யெகோவாவின் படைப்பு என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்?
3 நீங்கள் ஏன் ஜீவனுள்ள, உண்மையான கடவுளைச் சேவிக்க வேண்டும்? அதற்கான முக்கிய காரணத்தை வெளிப்படுத்துதல் 4:11 பின்வருமாறு சொல்கிறது: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” அனைத்து படைப்புகளையும் அதியற்புதமாய் படைத்தவர் யெகோவாவே. பூமிதான் எத்தனை அழகாய் இருக்கிறது! மரங்கள், மலர்கள், விலங்கினங்கள், சமுத்திரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் என அனைத்தையுமே யெகோவா படைத்திருக்கிறார். “பூமி உம்முடைய [கடவுளுடைய] பொருள்களினால் நிறைந்திருக்கிறது” என்று சங்கீதம் 104:24 சொல்கிறது. பூமியையும் அதிலுள்ள நன்மையான காரியங்களையும் மகிழ்ந்து அனுபவிப்பதற்கு யெகோவா நமக்கு அற்புத உடலையும் சிந்திக்கும் திறனையும் கொடுத்திருப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டுமல்லவா? படைப்பில் அவருடைய அதிசயிக்கத்தக்க கைவண்ணத்தைப் பார்க்கையில் நம் உள்ளம் பூரித்துப்போகிறதல்லவா? அப்படியானால், அவரைச் சேவிக்க நம் உள்ளம் நம்மைத் தூண்ட வேண்டுமல்லவா?
4, 5. யெகோவாவின் என்ன செயல்கள் யோசுவாவை அவரிடம் நெருங்கி வரச் செய்தன?
4 யெகோவாவைச் சேவிப்பதற்கான மற்றொரு காரணத்தை, இஸ்ரவேலரை வழிநடத்திச் சென்ற யோசுவா கூறினார். தன் வாழ்நாளின் முடிவில், கடவுளுடைய ஜனங்களிடம் அவர் இவ்வாறு கூறினார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று.” யோசுவா ஏன் அவ்வாறு சொன்னார்?—யோசு. 23:14.
5 எகிப்தில் யோசுவா சிறுபிள்ளையாக இருந்த காலத்தில், இஸ்ரவேலருக்குச் சொந்தமாக ஒரு தேசத்தை அளிக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி கொடுத்திருந்ததை அறிந்திருக்க வேண்டும். (ஆதி. 12:7; 50:24, 25; யாத். 3:8) இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு, யெகோவா எகிப்தின் மீது பத்து வாதைகளைக் கொண்டுவந்ததையும் கல்நெஞ்சம் படைத்த பார்வோன் இஸ்ரவேலரை விடுவிக்கும்படி செய்ததையும் யோசுவா கண்கூடாகப் பார்த்தார். யெகோவாவின் உதவியுடன் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தவர்களில் இவரும் ஒருவராக இருந்தார்; பார்வோனும் அவனுடைய சேனையும் ஜலசமாதி ஆனதையும் இவர் கவனித்தார். சீனாயின் ‘பயங்கரமான பெரிய வனாந்தர வழியாக’ இஸ்ரவேலர் நீண்டகாலம் பயணித்தபோது அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் யெகோவா செய்து கொடுத்ததை இவர் பார்த்தார். அவர்களில் யாருமே பசியாலோ தாகத்தாலோ செத்து மடியவில்லை. (உபா. 8:3-5, 14-16; யோசு. 24:5-7) பலம் படைத்த கானானிய தேசங்களைத் தோற்கடித்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை இஸ்ரவேலர் கைப்பற்றுவதற்கான சமயம் வந்தது. அப்போது, தானும் சக இஸ்ரவேலரும் வழிபட்டு வந்த யெகோவா தங்களுக்குப் பக்கபலமாக இருந்து உதவியதை யோசுவா பார்த்தார்.—யோசு. 10:14, 42.
6. கடவுளைச் சேவிப்பதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ள எது உங்களுக்கு உதவும்?
6 கொடுத்த வாக்குறுதிகளை யெகோவா காப்பாற்றியதை யோசுவா அறிந்திருந்தார். அதனால்தான், “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்று அவர் கூறினார். (யோசு. 24:15) நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உண்மையான கடவுளாகிய யெகோவா ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி இருப்பதையும் இனியும் காப்பாற்றப் போவதையும் எண்ணிப்பார்க்கும்போது, யோசுவாவைப் போல நீங்களும் அவரைச் சேவிக்க ஆசைப்படுகிறீர்களா?
7. முழுக்காட்டுதல் ஏன் மிக முக்கியப் படியாகும்?
7 யெகோவாவின் படைப்புகளைக் கவனமாய்ச் சிந்திப்பதோடுகூட அவர் கொடுத்திருக்கும் அருமையான, நம்பகமான வாக்குறுதிகளை ஆழமாய்த் தியானிப்பதும் உங்களை நடவடிக்கை எடுக்கத் தூண்ட வேண்டும்; அதாவது, யெகோவாவுக்கு உங்களை ஒப்புக்கொடுப்பதற்கு மட்டுமல்ல முழுக்காட்டுதல்மூலம் அதை வெளிக்காட்டவும் உங்களைத் தூண்ட வேண்டும். கடவுளைச் சேவிக்க விரும்புகிறவர்கள் எடுக்க வேண்டிய மிக முக்கியப் படிதான் இந்த முழுக்காட்டுதல். நமக்கு முன்மாதிரியாக விளங்கும் இயேசுவின் விஷயத்தில் இது தெளிவுபடுத்தப்படுகிறது. மேசியாவாக தம் ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன் முழுக்காட்டுதல் பெறுவதற்காக யோவான் ஸ்நானனிடம் சென்றார். அவர் ஏன் முழுக்காட்டுதல் எடுத்தார்? “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்” என்று அவரே பின்னர் பதிலளித்தார். (யோவா. 6:38) தம் தந்தையின் சித்தத்தைச் செய்ய மனமுவந்து தம்மையே அர்ப்பணித்ததற்கு அடையாளமாக இயேசு முழுக்காட்டுதல் பெற்றார்.—மத். 3:13-17.
8. கடவுளை வழிபட தீமோத்தேயு ஏன் தீர்மானித்தார், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
8 இளைஞரான தீமோத்தேயுவின் உதாரணத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். காலப்போக்கில், யெகோவா இவருக்கு நிறைய வேலைகளையும் அநேக விசேஷ பொறுப்புகளையும் கொடுத்தார். உண்மைக் கடவுளை வழிபட தீமோத்தேயு ஏன் தீர்மானித்தார்? அவர் காரியங்களை ‘கற்று நிச்சயித்துக்கொண்டதாக’ பைபிள் குறிப்பிடுகிறது. (2 தீ. 3:14) நீங்கள் கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதன் போதனைகள் உண்மையானவை என உறுதியாய் நம்புகிறீர்களா? அப்படியென்றால், நீங்களும் தீமோத்தேயுவைப் போல் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். உங்கள் விருப்பத்தைப்பற்றி உங்கள் பெற்றோரிடம் ஏன் பேசக்கூடாது? முழுக்காட்டுதல் பெறுவதற்கான தகுதிகளைப்பற்றி பைபிள் சொல்வதைப் புரிந்துகொள்ள சபை மூப்பர்களுடன்கூட அவர்களும் உங்களுக்கு உதவலாம்.—அப்போஸ்தலர் 8:12-ஐ வாசியுங்கள்.
9. நீங்கள் முழுக்காட்டுதல் பெறுகையில் மற்றவர்கள் எப்படிப் பிரதிபலிக்கலாம்?
9 நீங்கள் முழுக்காட்டுதல் பெறப் போகிறீர்களா? அப்படியென்றால், இதுவே உண்மைக் கடவுளைச் சேவிப்பதற்கு நீங்கள் எடுக்கும் முதலும் முக்கியமுமான படியாகும். இந்தப் படியில் நீங்கள் காலெடுத்து வைப்பதன்மூலம் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்கிறீர்கள். இதற்கு பரிசாக எதிர்காலத்தில் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள். இருப்பினும், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் இப்போதே சந்தோஷம் காண்பீர்கள். (எபி. 12:2, 3) அதோடு, இந்த ஓட்டப்பந்தயத்தில் ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சபையிலுள்ள நண்பர்களுக்கும் சந்தோஷத்தை அளிப்பீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவின் இதயத்தையும் சந்தோஷப்படுத்துவீர்கள். (நீதிமொழிகள் 23:15-ஐ வாசியுங்கள்.) நீங்கள் ஏன் யெகோவாவை வழிபட தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். உங்கள் தீர்மானத்தைக் குறித்து கேள்வி கேட்கலாம். உங்களை எதிர்க்கவும் செய்யலாம். ஆனால், இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் நீங்கள் வெற்றிகரமாகச் சமாளிக்கலாம்.
மற்றவர்கள் கேள்வி கேட்கையில் அல்லது எதிர்க்கையில்
10, 11. (அ) கடவுளைச் சேவிக்க நீங்கள் தீர்மானிக்கையில் மக்கள் உங்களிடம் என்ன கேள்விகளைக் கேட்கலாம்? (ஆ) உண்மை வணக்கத்தைப் பற்றிய கேள்விகளுக்கு இயேசு பதிலளித்த விதத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
10 யெகோவாவைச் சேவிக்க நீங்கள் தீர்மானித்திருப்பதைப் பார்த்து உங்கள் பள்ளித் தோழர்களும் அக்கம்பக்கத்தாரும் உறவினர்களும் குழம்பிப்போகலாம். நீங்கள் ஏன் இந்தத் தீர்மானம் எடுத்தீர்கள் என்று அவர்கள் கேட்கலாம். உங்கள் மத நம்பிக்கையைக் குறித்தும் விசாரிக்கலாம். அவர்களுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? என்னவெல்லாம் யோசித்தீர்கள், எப்படியெல்லாம் உணர்ந்தீர்கள் என்பதை சிந்தித்தால்தான் அத்தகைய தீர்மானத்திற்கான காரணத்தை உங்களால் விளக்கிச் சொல்ல முடியும். உங்கள் மத நம்பிக்கைகளைக் குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், நீங்கள் பின்பற்றுவதற்கு இயேசுவைவிட சிறந்த முன்மாதிரி இருக்க முடியுமா?
11 உயிர்த்தெழுதலைக் குறித்து யூத மதத் தலைவர்கள் இயேசுவைக் கேட்டபோது, அவர்கள் அதுவரை யோசித்திராத ஒரு வசனத்தை அவர் சுட்டிக்காட்டினார். (யாத். 3:6; மத். 22:23, 31-33) வேதபாரகர் ஒருவர் கட்டளைகளிலேயே பிரதான கட்டளை எது என்று அவரிடம் கேட்டபோது பொருத்தமான வசனங்களை எடுத்துக்காட்டினார். இயேசுவின் பதிலைக் கேட்டு அவர் சந்தோஷப்பட்டார். (லேவி. 19:18; உபா. 6:5; மாற். 12:28-34) இயேசு வசனங்களைப் பயன்படுத்தின விதமும் பேசிய விதமும், “அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினை” உண்டாக்கியது. எனவே, அவருடைய எதிரிகளால் அவருக்குத் தீங்கிழைக்க முடியவில்லை. (யோவா. 7:32-46) உங்கள் மத நம்பிக்கைகளைக் குறித்து மற்றவர்கள் கேள்வி கேட்கையில், பைபிளைப் பயன்படுத்தி “சாந்தத்தோடும் வணக்கத்தோடும் [அதாவது, ஆழ்ந்த மரியாதையோடும்]” பதிலளியுங்கள். (1 பே. 3:15) ஒருவேளை எந்தக் கேள்விக்காவது உங்களுக்குப் பதில் தெரியாவிட்டால், அதை ஒத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துவந்து பதில் அளிப்பதாகச் சொல்லுங்கள். பிறகு, அந்தக் கேள்வியைக் குறித்து உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸில் ஆராய்ச்சி செய்யுங்கள். அல்லது உங்களுக்குத் தெரிந்த மொழியில் உவாட்ச் டவர் லைப்ரரி சிடி-ராம் இருந்தால் அதிலும் ஆராய்ச்சி செய்யுங்கள். இப்படி நன்றாகத் தயாரிக்கும்போது, ‘அவரவருக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்.’—கொலோ. 4:6.
12. துன்புறுத்தலைக் கண்டு நீங்கள் ஏன் சோர்ந்துவிடக்கூடாது?
12 கடவுளுக்குச் சேவை செய்ய நீங்கள் எடுத்த தீர்மானத்தையும் உங்கள் மத நம்பிக்கைகளையும் குறித்து மற்றவர்கள் கேள்வி கேட்பதோடு நிறுத்திக்கொள்ள மாட்டார்கள். பார்க்கப்போனால், இந்த உலகம் கடவுளுடைய எதிரியான பிசாசாகிய சாத்தானின் கையில்தானே இருக்கிறது! (1 யோவான் 5:19-ஐ வாசியுங்கள்.) எல்லாருமே உங்களைப் பாராட்டுவார்கள் என்றோ உங்கள் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது. நீங்கள் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கலாம். சிலர் சதா ‘உங்களைத் தூஷிக்கலாம்.’ (1 பே. 4:4) ஆனால், நீங்கள் மட்டுமே இப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்ப்படுவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். இயேசு கிறிஸ்துவும் துன்புறுத்தலை எதிர்ப்பட்டார். அப்போஸ்தலன் பேதுருவும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே, “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து [துன்புறுத்தலைக் குறித்து] ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்” என்று அவர் எழுதினார்.—1 பே. 4:12, 13.
13. துன்புறுத்தலைச் சந்திக்கையில் கிறிஸ்தவர்கள் ஏன் சந்தோஷப்படலாம்?
13 கிறிஸ்தவர்களாகிய நீங்கள் துன்புறுத்தலையோ எதிர்ப்பையோ சந்திக்கையில் சந்தோஷப்பட காரணம் இருக்கிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், உலகிலுள்ள அனைவரும் உங்கள் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டால் நீங்கள் கடவுளுடைய நெறிமுறைகளின்படி அல்ல, சாத்தானின் நெறிமுறைகளின்படியே வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். “எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்” என்று இயேசு எச்சரித்தார். (லூக். 6:26) நீங்கள் யெகோவாவைச் சேவிப்பதால் சாத்தானும் அவனுடைய உலகமும் உங்கள்மீது கோபமாக இருப்பதையே துன்புறுத்தல் சுட்டிக்காட்டுகிறது. (மத்தேயு 5:11, 12-ஐ வாசியுங்கள்.) ‘கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்படுவது’ சந்தோஷத்திற்குரிய விஷயமே.—1 பே. 4:14.
14. எதிர்ப்பின் மத்தியிலும் ஒருவர் யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருப்பது என்ன நன்மைகளைத் தரும்?
14 எதிர்ப்பின் மத்தியிலும் நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருப்பது குறைந்தபட்சம் நான்கு நன்மைகளைத் தரும். கடவுளைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் நீங்கள் சாட்சி கொடுப்பீர்கள். நீங்கள் உண்மையோடு சகித்திருப்பதைப் பார்த்து சபையிலுள்ள சகோதர சகோதரிகள் உற்சாகம் பெறுவார்கள். யெகோவாவை அறியாத சிலர் உங்களைப் பார்த்து யெகோவாவைத் தேட ஆரம்பிக்கலாம். (பிலிப்பியர் 1:12-14-ஐ வாசியுங்கள்.) துன்பங்களைச் சகிக்க யெகோவா சக்தியளிப்பதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணருகையில் அவர் மீதுள்ள உங்கள் அன்பு மேன்மேலும் அதிகரிக்கும்.
‘பெரிய கதவு’ உங்களுக்குத் திறந்திருக்கிறது
15. என்ன ‘பெரிய கதவு’ அப்போஸ்தலன் பவுலுக்குத் திறந்திருந்தது?
15 எபேசுவில் செய்த ஊழியத்தைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகையில், “பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது” என்று எழுதினார். (1 கொ. 16:8, 9) அந்தப் பட்டணத்தில், நற்செய்தியைப் பிரசங்கித்து சீஷராக்கும் வேலையில் பெருமளவு பங்குகொள்வதற்கான வாய்ப்பே அந்தப் பெரிய கதவாகும். அந்த வாய்ப்பை பவுல் பயன்படுத்திக்கொண்டதால், அநேகர் யெகோவாவைப்பற்றிக் கற்றுக்கொள்ளவும் அவரை வழிபடவும் உதவினார்.
16. அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் 1919-ல் எவ்வாறு ‘திறந்தவாசல்’ வழியாகச் சென்றார்கள்?
16 அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் 1919-ல் ‘திறந்தவாசல்’ வழியாகச் செல்வதற்கு ராஜாவான இயேசு கிறிஸ்து ஏற்பாடு செய்தார். (வெளி. 3:8) அவர்கள் அந்த வாசல் வழியாகச் சென்று, என்றுமில்லாத அளவில் முழுமூச்சாய் நற்செய்தியைப் பிரசங்கித்து, பைபிள் சத்தியத்தைக் கற்பித்தார்கள். அவர்களுடைய ஊழியத்தின் விளைவு? இப்போது பூமியின் கடைக்கோடிவரை நற்செய்தி சென்றெட்டி இருக்கிறது. கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையை சுமார் 70 லட்சம் பேர் பெற்றிருக்கிறார்கள்.
17. “பெரிதும் அநுகூலமுமான கதவு” வழியாக நீங்கள் எப்படிச் செல்லலாம்?
17 “பெரிதும் அநுகூலமுமான கதவு” யெகோவாவின் ஊழியர்கள் அனைவருக்கும் இன்னமும் திறந்திருக்கிறது. அது வழியாகச் செல்கிறவர்கள், மும்முரமாக நற்செய்தியைப் பிரசங்கிக்கையில் சந்தோஷத்தையும் திருப்தியையும் பெறுகிறார்கள். யெகோவாவுக்குச் சேவை செய்யும் இளைஞர்களே, ‘சுவிசேஷத்தை விசுவாசிக்க’ மற்றவர்களுக்கு உதவும் ஒப்பற்ற பாக்கியத்தை நீங்கள் எவ்வளவு உயர்வாய் மதிக்கிறீர்கள்? (மாற். 1:14, 15) ஒழுங்கான பயனியராகவோ துணைப் பயனியராகவோ சேவை செய்வதைக் குறித்து யோசித்திருக்கிறீர்களா? ராஜ்ய மன்ற கட்டுமானப் பணி, பெத்தேல் சேவை, மிஷனரி ஊழியம் போன்ற வேறு வாய்ப்புகளையும் உங்களில் அநேகர் பெறலாம். சாத்தானின் இந்தப் பொல்லாத உலகிற்கு எஞ்சியிருக்கும் காலம் குறைந்துகொண்டே வருவதால் இதுபோன்ற ராஜ்ய சேவைகளில் ஈடுபடுவதற்கான தேவை நாளுக்கு நாள் பெருமளவு அதிகரித்து வருகிறது. இன்னும் காலம் இருக்கும்போதே இந்தப் ‘பெரிய கதவு’ வழியாக நீங்கள் செல்வீர்களா?
“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்”
18, 19. (அ) யெகோவாவை நெஞ்சார நேசிக்க எது தாவீதுக்கு உதவியது? (ஆ) கடவுளைச் சேவிப்பதைக் குறித்து தாவீது துளியும் கவலைப்படவில்லை என்பதை எது காட்டுகிறது?
18 “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” என்று சங்கீதக்காரனாகிய தாவீது பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் மற்றவர்களுக்கு அழைப்புவிடுத்தார். (சங். 34:8) பூர்வ இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜா, சிறுவயதில் மேய்ப்பராக இருந்தபோது யெகோவா அவரைக் கொடிய விலங்குகளிடமிருந்து காப்பாற்றினார். கோலியாத்துடன் அவர் யுத்தம் செய்தபோது யெகோவா அவருக்குப் பக்கத்துணையாக இருந்தார். அதோடு, இன்னும் அநேக துன்பங்களிலிருந்தும் யெகோவா அவரை விடுவித்தார். (1 சா. 17:32-51; சங். 18, மேற்குறிப்பு) கடவுளுடைய அளவற்ற அன்பாலும் தயவாலும் தூண்டப்பட்ட தாவீது, “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது” என்று எழுதினார்.—சங். 40:5.
19 தாவீது யெகோவாவை நெஞ்சார நேசித்தார்; எனவே, அவரை முழு இருதயத்தோடும் மனதோடும் துதிக்க விரும்பினார். (சங்கீதம் 40:8-10-ஐ வாசியுங்கள்.) வருடங்கள் பல உருண்டோடியும், உண்மைக் கடவுளை வழிபடுவதில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக தாவீது துளியும் கவலைப்படவில்லை. தேவ பக்தியோடு வாழ்வதை அவர் மாபெரும் பாக்கியமாய்க் கருதினார். அப்படி வாழ்வதில், ஈடிணையற்ற சந்தோஷம் கண்டார். வயதான காலத்தில் தாவீது, “கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். . . . முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக” என்று சொன்னார். (சங். 71:5, 18) அவருடைய உடலில் தெம்பு குறைந்தாலும், யெகோவாமீது அவருக்கு இருந்த நம்பிக்கையும் நட்புறவும் குறையவே இல்லை.
20. யெகோவாவைச் சேவிப்பதே ஏன் மிகச் சிறந்த வாழ்க்கை முறையாகும்?
20 யெகோவாவைச் சேவிப்பதே மிகச் சிறந்த வாழ்க்கை முறை என்பதற்கு யோசுவா, தாவீது, தீமோத்தேயு ஆகியோரின் வாழ்க்கை சான்றளிக்கிறது. “உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும்” யெகோவாவைச் சேவிக்கும்போது கிடைக்கும் எதிர்கால பயனோடு ஒப்பிட இந்த உலகில் கைநிறைய சம்பாதிப்பதால் கிடைக்கும் தற்கால பயன் ஒன்றுமே இல்லை. (யோசு. 22:5) நீங்கள் ஜெபத்தில் இன்னும் யெகோவாவுக்கு உங்களை ஒப்புக்கொடுக்கவில்லையா? அப்படியானால், ‘யெகோவாவின் சாட்சியாகாதபடி எது என்னைத் தடுக்கிறது?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் வணக்கத்தாராக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்வில் சந்தோஷத்தைக் கூட்ட விரும்புகிறீர்களா? அப்படியானால், கடவுளுடைய சேவையில் இன்னும் அதிகமாய் ஈடுபடுங்கள். தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றம் செய்யுங்கள். இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுலின் மாதிரியை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம் என்பதை அடுத்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வீர்கள்.
உங்கள் பதில்?
• நாம் ஏன் கடவுளைச் சேவிக்க வேண்டுமென்பதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடுங்கள்.
• கடவுளைச் சேவிப்பதற்கான தீர்மானத்தை எடுக்க தீமோத்தேயுவுக்கு எது உதவியது?
• துன்புறுத்தல் மத்தியில் நீங்கள் ஏன் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும்?
• யெகோவாவின் சேவையில் என்ன வாய்ப்புகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன?
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவைச் சேவிப்பதே மிகச் சிறந்த வாழ்க்கை முறை
[பக்கம் 19-ன் படம்]
உங்கள் மத நம்பிக்கைகளைக் குறித்துக் கேள்வி கேட்கப்படுகையில் பதில் சொல்ல முடியுமா?