பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
அவள் உதவிசெய்ய விரும்பினாள்
உடம்பு முடியாமல் ரொம்பக் கஷ்டப்பட்ட யாரையாவது உனக்குத் தெரியுமா?— ‘அவருக்கு ஏதாவது உதவிசெய்தால் நன்றாக இருக்குமே!’ என்று நீ நினைத்தாயா?— அவர் வேறு நாட்டைச் சேர்ந்தவராகவோ வேறு மதத்தைச் சேர்ந்தவராகவோ இருந்திருந்தால் நீ என்ன செய்திருப்பாய்? அப்படி இருந்தாலும் அவருக்கு உதவி செய்ய நினைத்திருப்பாயா?— கிட்டத்தட்ட 3,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சிறுமி அப்படித்தான் செய்தாள். அவள் இஸ்ரவேல் தேசத்தில் வாழ்ந்து வந்தாள். அப்பொழுது என்ன நடந்தது என்று நாம் பார்ப்போமா?
இஸ்ரவேல் நாட்டுக்கும் பக்கத்து நாடான சீரியாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கிறது. (1 இராஜாக்கள் 22:1) ஒரு நாள், சீரியர் இஸ்ரவேலுக்கு வந்து அந்தச் சிறுமியைக் கைதியாகப் பிடித்துச்செல்கிறார்கள். அவள், சீரிய நாட்டுப் படைத்தலைவனாகிய நாகமானின் மனைவிக்கு வேலைக்காரி ஆகிவிடுகிறாள். நாகமானுக்கு மோசமான ஒரு வியாதி இருக்கிறது. அதை குஷ்டரோகம் என்பார்கள். அந்த வியாதி ஒருவருக்கு இருந்தால், அவர் உடம்பிலுள்ள சதையெல்லாம் அழுகி, கீழே விழ ஆரம்பித்துவிடும்.
நாகமான் குணமாவதற்கான வழியை அவருடைய மனைவியிடம் அந்தச் சிறுமி சொல்கிறாள். ‘நாகமான் இப்போது சமாரியாவில் இருந்திருந்தால், யெகோவாவின் தீர்க்கதரிசியான எலிசா அவருடைய குஷ்டரோகத்தைக் குணமாக்கி இருப்பார்’ என்று சொல்கிறாள். எலிசா இப்படியெல்லாம் செய்வார் என்று அந்தச் சிறுமி சொன்னதைக் கேட்டதும், அந்தத் தீர்க்கதரிசி தன்னை எப்படியும் சரியாக்கிவிடுவார் என்ற நம்பிக்கை நாகமானுக்கு வந்துவிடுகிறது. சீரியா நாட்டு ராஜாவாகிய பெனாதாத்திடம் ஒப்புதல் கடிதத்தை வாங்கிக்கொண்டு, தன் வேலைக்காரர்களுடன் நாகமான் புறப்படுகிறார். எலிசாவைப் பார்க்க அவர்கள் சுமார் 150 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறார்கள்.
முதலில் இஸ்ரவேல் ராஜாவான யோராமிடம் போகிறார்கள். அந்தக் கடிதத்தை அவரிடம் காட்டுகிறார்கள். அதில், நாகமானுக்கு உதவி செய்யும்படி கேட்டு எழுதியிருந்தது. யோராம் ராஜாவுக்கு யெகோவா மீதோ, எலிசா மீதோ நம்பிக்கையே இல்லை. சீரியா நாட்டு ராஜா தன்னோடு சண்டைக்கு வரப்பார்க்கிறாரோ என்று நினைக்கிறார். இதைக் கேள்விப்பட்ட எலிசா, ‘அவர் என்னிடத்தில் வரட்டும்’ என்று யோராம் ராஜாவிடம் சொல்கிறார். நாகமானின் மோசமான வியாதியைக் குணமாக்க கடவுளுக்குச் சக்தி இருக்கிறது என்பதைக் காட்ட எலிசா நினைக்கிறார்.—2 இராஜாக்கள் 5:1–8.
நாகமான், குதிரைகளோடும் இரதங்களோடும் எலிசாவின் வீட்டுக்கு வருகிறார். அப்போது எலிசா ஆள் அனுப்பி, ‘நீ யோர்தானில் ஏழுதரம் ழூழ்கி எழு; அப்பொழுது நீ குணமாவாய்’ என்று சொல்லச்சொல்கிறார். இதைக் கேட்ட நாகமானுக்குப் பயங்கர கோபம் வந்துவிடுகிறது. எலிசா வெளியே வந்து, குஷ்டரோகம் உள்ள இடத்தில் தன் கையை அசைத்துக் குணமாக்குவார் என்று அவர் நினைத்தார். ஆனால், எலிசா அனுப்பிய ஆளை மட்டுமே அவர் பார்த்தார்! அதனால், நாகமான் ஆத்திரமடைந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்லத் தயாராகிறார்.—2 இராஜாக்கள் 5:9–12.
நாகமானின் வேலைக்காரர்களில் ஒருவராக நீ இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?— அவருடைய வேலைக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்: ‘அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உம்மிடம் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா?’ ஆனால் அவர் ஒரு சிறிய காரியத்தைத்தானே செய்யச் சொல்கிறார், ‘ழூழ்கி எழும், அப்பொழுது குணமாவீர் என்றுதானே சொல்கிறார்!’ என்கிறார்கள். அவர்கள் பேச்சை நாகமான் கேட்கிறார். அவர் ‘இறங்கி, . . . யோர்தானில் ஏழுதரம் ழூழ்கி எழுகிறபோது, அவருடைய உடல் ஒரு சிறுபிள்ளையின் உடலைப்போல மாறுகிறது.’
நாகமான் எலிசாவிடம் திரும்பிவந்து, ‘இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை நான் அறிந்தேன்’ என்று சொல்கிறார். ‘இனி கர்த்தருக்கே [“யெகோவாவுக்கே,” NW] அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை’ என்று வாக்குக் கொடுக்கிறார்.—2 இராஜாக்கள் 5:13–17.
அந்தச் சிறுமியைப் போலவே நீயும் செய்ய ஆசைப்படுகிறாயா? யெகோவாவைப் பற்றியும், அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பற்றியும் யாருக்காவது சொல்லிக்கொடுப்பாயா?— இயேசு பூமியில் இருந்தபோது, அவர்மீது நம்பிக்கை வைத்த குஷ்டரோகி ஒருவர், ‘உமக்கு விருப்பம் இருந்தால், என்னைக் குணமாக்க உம்மால் முடியும்’ என்றார். அதற்கு இயேசு என்ன சொன்னார் தெரியுமா?— ‘எனக்கு விருப்பம் இருக்கிறது’ என்று சொன்னார். நாகமானை யெகோவா குணமாக்கியதைப் போலவே, இயேசுவும் இவரைக் குணமாக்கினார்.—மத்தேயு 8:2, 3.
யெகோவா ஒரு புதிய உலகத்தை உண்டாக்கப் போகிறார் என்றும், அதில் எல்லாரும் வியாதியே இல்லாமல் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் உனக்குத் தெரியுமா?— (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4) அப்படியானால், இந்த நல்ல விஷயத்தை நீ கண்டிப்பாக மற்றவர்களிடம் சொல்ல வேண்டும்தானே! (w08 6/1)