பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
பிடிவாதக்காரர் கீழ்ப்படிந்தது எப்படி?
நீ எப்போதாவது சொன்ன பேச்சைக் கேட்காமல் பிடிவாதமாய் இருந்திருக்கிறாயா?—a அம்மாவோ அப்பாவோ பார்க்கக் கூடாது என்று சொன்ன டிவி நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறாயா? அப்படிச் செய்ததை நினைத்து அப்புறம் வருத்தப்பட்டாயா? நாகமான் என்பவரும் அப்படித்தான் செய்தார். ஆனால், பிறகு கீழ்ப்படிந்தார். அவருடைய கதையை இப்போது பார்க்கலாம்.
3,000 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை இது. சீரிய நாட்டின் படைத்தளபதிதான் நாகமான். அவர் சொல்வதற்கெல்லாம் படைவீரர்கள் கீழ்ப்படிவார்கள். நாகமானுக்கு தொழுநோய் என்ற கொடூரமான தோல் வியாதி இருந்தது. பார்க்கவே அசிங்கமாக இருப்பார், அது வேதனையாகவும் இருந்திருக்கும்.
நாகமானின் மனைவிக்கு இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறு பெண் வேலைக்காரியாக இருக்கிறாள். ஒருநாள் அந்தப் பெண் நாகமானின் மனைவியிடம், தன்னுடைய நாட்டில் எலிசா என்று ஒருவர் இருக்கிறார், அவரிடம் போனால் நாகமானுடைய நோய் மாயமாய் மறைந்துவிடும் என்று சொல்கிறாள். இதைக் கேட்டதும் நாகமான் எலிசாவிடம் போக நினைக்கிறார். நிறைய பரிசுகளை எடுத்துக்கொண்டு படைவீரர்களுடன் இஸ்ரவேலுக்குக் கிளம்புகிறார். வந்த விஷயத்தைச் சொல்வதற்காக முதலில் இஸ்ரவேல் ராஜாவிடம் போகிறார்.
இதைக் கேள்விப்பட்ட எலிசா, ராஜாவிடம் ஆள் அனுப்பி நாகமானைத் தன்னிடம் அனுப்பி வைக்கச் சொல்கிறார். எலிசாவின் வீட்டு வாசலுக்கு நாகமான் வந்துவிட்டார். எலிசா வெளியே வராமல் தன் வேலைக்காரனை அனுப்பி, நாகமானை யோர்தான் ஆற்றில் ஏழு தடவை முழுகி எழும்பும்படிச் சொல்கிறார். அப்படிச் செய்தால் நோய் சரியாகிவிடும் என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் நாகமானுக்கு எப்படி இருந்திருக்கும்?—
நாகமானுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கடவுளுடைய தீர்க்கதரிசியின் பேச்சைக் கேட்க மனமில்லாமல் பிடிவாதமாய் இருக்கிறார். ‘என் ஊரில் எத்தனையோ நல்ல ஆறுகள் இருக்கிறதே’ என்று தன் படைவீரர்களிடம் கோபத்தில் கத்துகிறார். ஊருக்கும் கிளம்பிவிடுகிறார். அதற்குப் படைவீரர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?— ‘அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய விஷயத்தைச் சொன்னால் செய்வீர்கள்தானே? அப்படியிருக்கும்போது இது சின்ன விஷயம்தானே?’
படைவீரர்கள் சொல்வதைக் கேட்டு, நாகமான் ஆற்றில் மூழ்குகிறார். ஏழாவது முறை மூழ்கி எழும்போது அவருடைய நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது! முழுவதும் குணமாகிவிடுகிறார்! உடனே, எலிசாவுக்கு நன்றி சொல்ல 48 கிலோ மீட்டர் தூரம் திரும்பிச் செல்கிறார். விலையுயர்ந்த பொருள்களை அவருக்குப் பரிசாகக் கொடுக்கிறார். ஆனால், எலிசா எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
எலிசாவிடம் நாகமான் ஒன்று கேட்கிறார். அது என்ன தெரியுமா?— ‘இரண்டு கழுதைகள் சுமக்கும் அளவுக்கு இரண்டு பொதி மூட்டை மண்.’ ஏன் கேட்கிறார் தெரியுமா?— யெகோவாவுடைய மக்கள் வாழும் இஸ்ரவேல் மண்ணின் மேல், அவருக்கு நன்றி சொல்லி பலி செலுத்த வேண்டுமென ஆசைப்படுகிறார். இனிமேல் யெகோவாவைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் வணங்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார்! பிடிவாத குணத்தை விட்டுவிட்டு உண்மையான கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார்.
நீ எப்படி நாகமானைப் போல இருக்கலாம்?— நீ பிடிவாதம் பிடிப்பவனாக இருந்தால் உன்னால் நல்ல பிள்ளையாக மாற முடியும். சொன்ன பேச்சைக் கேட்டு இனிமேல் பிடிவாதம் பிடிக்காமல் இருக்க முடியும். (w12-E 06/01)
உன்னுடைய பைபிளில் வாசித்துப்பார்
a ஒரு பிள்ளையுடன் சேர்ந்து படித்தால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அந்தக் கேள்விக்குப் பிள்ளையைப் பதில் சொல்லச் சொல்லுங்கள்.