பைபிள் போதனைகள் சமுதாயத்தைச் சீர்திருத்துமா?
உண்மை கிறிஸ்தவர்கள் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதில்லை. ஆனால், சமுதாயத்தைச் சீர்திருத்த அவர்கள் என்ன செய்யலாம்? இயேசு கொடுத்த இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது ஒரு வழி. “புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
அதோடு, இந்த உலகத்திற்கு உப்பாக, ஒளியாக இருக்கும்படி இயேசு சொன்னார். இதற்கும் மக்களை ‘சீடர்களாக்குங்கள்’ என்ற கட்டளைக்கும் சம்பந்தம் இருக்கிறது. (மத்தேயு 5:13, 14) எப்படி? இதனால் மக்களுக்கு என்ன நன்மை?
இயேசுவின் செய்தி பாதுகாக்கும், அறிவொளியூட்டும்
ஒரு பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க உப்பு உதவும். அதுபோல, இயேசு சொன்ன செய்தி மக்களைப் பாதுகாக்கும். அவருடைய போதனைகளை ஏற்றுக்கொண்டு நடக்கிறவர்கள் இந்த உலகத்தில் சர்வ சாதாரணமாய் இருக்கிற ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். எப்படி? உடலுக்குக் கெடுதலான பழக்கங்களை, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களை விட்டுவிட்டு அன்பு, சமாதானம், நீடிய பொறுமை, கருணை, நல்மனம் போன்ற குணங்களை வளர்த்துக்கொள்வார்கள். (கலாத்தியர் 5:22, 23) இந்தக் குணங்களைக் காட்டும்போது சமுதாயத்தில் மணிக்கற்களாய் ஜொலிப்பார்கள். கிறிஸ்தவர்கள் அறிவிக்கிற இந்தச் செய்தி மக்களைப் பாதுகாக்கிறது, சமுதாயத்தை மேம்படுத்துகிறது.
கிறிஸ்தவர்கள் எப்படி உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார்கள்? சூரியனிலிருந்து வரும் ஒளியை சந்திரன் பிரதிபலிப்பது போல யெகோவா தேவன் கொடுக்கும் ‘ஒளியை’ கிறிஸ்தவர்கள் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் அறிவிக்கிற அறிவொளியூட்டும் செய்தியிலும், செய்கிற நற்செயல்களிலும் அந்த ஒளி பிரதிபலிக்கிறது.—1 பேதுரு 2:12.
ஒளியாக இருப்பதற்கும் சீடராக இருப்பதற்கும் உள்ள ஒற்றுமையை இயேசு இன்னும் விளக்குகிறார்: “மக்கள் விளக்கைக் கொளுத்தி அதைக் கூடையால் மூடி வைக்க மாட்டார்கள், விளக்குத் தண்டின் மீதே வைப்பார்கள்; அப்போது, வீட்டிலுள்ள எல்லாருக்கும் அது ஒளி தரும். அவ்வாறே, உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கச் செய்யுங்கள்.” எரிகிற விளக்கைத் தண்டின் மீது வைத்தால் சுற்றியிருக்கிற எல்லாருக்கும் தெரியும். அதுபோல, உண்மை கிறிஸ்தவர்கள் செய்கிற ஊழியமும், நற்செயல்களும் சுற்றியிருக்கிற அனைவருடைய கண்ணிலும் பளிச்சென தெரியும். அதைப் பார்க்கிறவர்கள் ஊழியம் செய்கிறவர்களை அல்ல, கடவுளை மகிமைப்படுத்துவார்கள் என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 5:14-16.
அனைத்து கிறிஸ்தவர்களின் பொறுப்பு
“நீங்கள் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறீர்கள்” என்றும் ‘உங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்யுங்கள்’ என்றும் தம் சீடர்கள் எல்லாரையும் பார்த்தே இயேசு சொன்னார். அவர் கொடுத்த வேலையை வெவ்வேறு சர்ச்சுகளிலுள்ள ஒருசிலரால் மட்டுமே செய்து முடிக்க முடியாது. உண்மை கிறிஸ்தவர்கள் எல்லாரும் சேர்ந்து ‘ஒளியாக இருக்கிறார்கள்.’ 235-க்கும் மேலான நாடுகளில் வாழ்கிற 70 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் செய்தியை அறிவிக்கிறார்கள். அதைத் தனி நபரின் பொறுப்பாக அல்ல, சாட்சிகளாக தங்கள் அனைவருடைய பொறுப்பாக நினைத்து செய்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் சொல்லும் செய்தியின் கருத்து என்ன? சமூக அல்லது அரசியல் சீர்திருத்தத்தைப் பற்றியதோ சர்ச்சின் அல்லது தேசத்தின் ஒருமைப்பாடு பற்றியதோ, மனித கோட்பாடு பற்றியதோ அல்ல. “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:14) அதன்படி, இன்று உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி சொல்கிறார்கள். அந்த அரசாங்கமே சாத்தானுடைய உலகிற்கு முடிவுகட்டி நீதியான புதிய உலகைக் கொண்டுவரும்.
பைபிளின் சுவிசேஷ புத்தகங்களை வாசிக்கும்போது இயேசுவின் ஊழியம் சம்பந்தமான இரண்டு முக்கிய விஷயங்கள் பளிச்சிடுகின்றன. இன்று உண்மை கிறிஸ்தவர்கள் செய்கிற ஊழியத்திலும் அவை பளிச்சிடுகின்றன. அவற்றை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். (w12-E 05/01)
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
இயேசுவின் செய்தி எப்படி உப்பைப் போல் இருக்கிறது?
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
இயேசுவின் செய்தி எப்படி ஒளிவீசும் விளக்கைப் போல் இருக்கிறது?