உண்மை கிறிஸ்தவன்... நல்ல குடிமகன்... இரண்டும் சாத்தியமா?
இயேசுவின் ஊழியத்தில் பளிச்சிட்ட இரண்டு முக்கிய விஷயங்கள் யாவை? முதல் விஷயம்: அவர் மக்களின் மனதைச் சீர்திருத்த முயன்றார், அரசியலை அல்ல. உதாரணத்திற்கு, மலைப்பிரசங்கத்தில் அவர் எதை வலியுறுத்திக் காட்டினார் என்று கவனியுங்கள். உப்பாகவும் ஒளியாகவும் இருக்க வேண்டுமென்று சீடர்களிடம் சொல்வதற்கு முன், ‘ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமானவர்கள்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:1-11) எது சரி, எது தவறு என கடவுள் வகுத்த நெறிகளுக்கு ஏற்ப தங்களுடைய எண்ணங்களை, உணர்ச்சிகளை மாற்றிக்கொள்வது முக்கியம் என்பதைச் சீடர்களுக்குத் தெளிவுபடுத்தினார். முழுமனதோடு கடவுளை வழிபடுவதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
இரண்டாவது விஷயம்: மனிதரின் துன்பத்தைப் பார்த்த இயேசு மனதுருகி அவர்களுடைய துயரைத் தணித்தார். ஆனால், துன்ப துயரத்தைப் பூமியிலிருந்து அறவே துடைத்தழிப்பது அவரது நோக்கமாக இருக்கவில்லை. (மத்தேயு 20:30-34) நோயுற்றோரைச் சுகப்படுத்தினார், ஆனால் நோய்நொடியை உலகிலிருந்து முற்றிலுமாக ஒழித்துக்கட்டவில்லை. (லூக்கா 6:17-19) ஒடுக்கப்பட்டோருக்கு உதவினார், ஆனால் அநியாயத்தை அடியோடு நீக்கிவிடவில்லை. பசியில் வாடியோருக்கு உணவளித்தார், ஆனால் பஞ்சத்தைப் போக்கவில்லை.—மாற்கு 6:41-44.
சீர்திருத்துவதும் துயர்துடைப்பதும்
மக்களின் மனதைச் சீர்திருத்தியவர் ஏன் அரசியலில் சீர்திருத்தம் செய்யவில்லை? துன்பத்தைப் போக்கியவர் ஏன் அதை அடியோடு துடைத்தழிக்கவில்லை? மனித அரசாங்கங்களுக்கு முடிவுகட்டி, துன்ப துயரங்களுக்குக் காரணமான அனைத்தையும் துடைத்தழிப்பது கடவுளுடைய நோக்கம். சீக்கிரத்தில் கடவுள் தமது அரசாங்கத்தின் மூலம் இதைச் செய்வாரென இயேசு அறிந்திருந்தார். (லூக்கா 4:43; 8:1) அதனால்தான், ஒருசமயம் இன்னும் நிறையப் பேரை சுகப்படுத்தும்படி சீடர்கள் சொன்னபோது, “பக்கத்திலுள்ள வேறு ஊர்களுக்குப் போகலாம், வாருங்கள்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும்; இதற்காகவே வந்திருக்கிறேன்” என்று சொன்னார். (மாற்கு 1:32-38) அநேகருடைய துன்பத்தை இயேசு தணித்தபோதிலும் கடவுளுடைய வார்த்தையை அறிவிப்பதும் கற்றுக்கொடுப்பதுமே அவருடைய முக்கிய நோக்கமாய் இருந்தது.
இன்று யெகோவாவின் சாட்சிகள் ஊழியம் செய்யும்போது இயேசுவைப் பின்பற்ற முயலுகிறார்கள். கஷ்டத்தில் இருப்போருக்கு தேவையான உதவிகளைச் செய்து துயரைத் துடைக்கிறார்கள். ஆனால், உலகில் நடக்கிற அநியாயம் அக்கிரமங்களை எல்லாம் முற்றிலுமாக நீக்க பாடுபடுவதில்லை. துன்பத்திற்குக் காரணமான எல்லாவற்றையும் கடவுளுடைய அரசாங்கம் சுவடு தெரியாமல் அழித்துவிடும் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். (மத்தேயு 6:10) இயேசுவைப் போல அரசியலை அல்ல, மக்களின் மனதை, வாழ்க்கைமுறையைச் சீர்திருத்தவே முயலுகிறார்கள். அதுதான் மக்களுக்கும் தேவை, ஏனென்றால் மக்களுடைய முக்கிய பிரச்சினை அரசியல் அல்ல, வாழ்க்கைமுறைதான்.
நல்ல குடிமக்கள்
நல்ல குடிமக்களாக வாழ்வது ஒரு கிறிஸ்தவருடைய பொறுப்பு என்பதை யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால், அரசாங்க அதிகாரிகளுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கிறார்கள். ஊழியத்தின் மூலமும் தாங்கள் கொடுக்கும் பிரசுரங்களின் மூலமும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க மக்களை ஊக்குவிக்கிறார்கள். ஆனால், கடவுளுடைய கட்டளைகளுக்கு எதிராக செய்யும்படி அரசாங்கம் வற்புறுத்தும் சமயத்தில், “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, கடவுளுக்கே” கீழ்ப்படிகிறார்கள்.—அப்போஸ்தலர் 5:29; ரோமர் 13:1-7.
யெகோவாவின் சாட்சிகள் சமுதாயத்திலுள்ள எல்லாரையும் சந்திக்கிறார்கள், எந்தக் கட்டணமும் இல்லாமல் பைபிளைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால், லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றியிருக்கிறார்கள். புகைப்பது, குடிப்பது, போதைப்பொருள் பழக்கம், சூதாட்டம், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை போன்ற கெட்ட பழக்கங்களைக் கைவிட ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோருக்கு உதவுகிறார்கள். அவர்களும் பைபிள் நியமங்களை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதால், ஒழுக்கமுள்ள, நல்ல குடிமக்களாக மாறுகிறார்கள்.
பைபிளைக் கற்றுக்கொள்வதால் குடும்ப உறவுகளும் மேம்படுகின்றன. குடும்ப அங்கத்தினர்கள் ஒருவரையொருவர் மதித்து நடக்க அது உதவியிருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையே, ஏன் பிள்ளைகளுக்கு இடையேயும் நல்ல பேச்சுத்தொடர்பு வளர உதவியிருக்கிறது. குடும்பம் கட்டுக்கோப்பாக இருக்க பேச்சுத்தொடர்பு முக்கியம். கட்டுக்கோப்பான குடும்பங்கள்தான் கட்டுக்கோப்பான சமுதாயங்களாக உருவெடுக்கின்றன.
இந்தக் கட்டுரைகளை வாசித்த பிறகு என்ன முடிவுக்கு வருகிறீர்கள்? உண்மை கிறிஸ்தவர்கள் நல்ல குடிமக்களாகவும் இருக்க முடியுமா? அதில் சந்தேகமே இல்லை. இயேசுவின் கட்டளைபடி, உலகத்திற்கு உப்பாக, ஒளியாக இருப்பதன் மூலம் உண்மை கிறிஸ்தவர்களாகவும் நல்ல குடிமக்களாகவும் வாழ்கிறார்கள்.
இயேசு கொடுத்த இந்த நல்ல ஆலோசனைகளைப் பின்பற்ற முயலும்போது நீங்கள், உங்கள் குடும்பம், நீங்கள் வாழும் சமுதாயம் பயனடையும். யெகோவாவின் சாட்சிகள் உங்கள் சமுதாயத்திலும் பைபிள் விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறார்கள். உங்களுக்கும் உதவ ஆர்வமாய் இருக்கிறார்கள்.a (w12-E 05/01)
[அடிக்குறிப்பு]
a நீங்கள் விரும்பினால் www.jw.org வெப் சைட்டில் யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளுங்கள்.
[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]
இயேசு அரசியலை அல்ல, மக்களின் மனதையே சீர்திருத்தினார்
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
நல்ல குடிமக்களாக வாழ்வது தங்கள் பொறுப்பு என்பதை யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்திருக்கிறார்கள்