நம்முடைய ஒளியைத் தொடர்ந்து பிரகாசிக்கச் செய்தல்
1 ஒளி என்றால் என்ன? ஒரு அகராதி இவ்வாறு தொகுத்துரைக்கிறது “பார்வையை சாத்தியமாக்குகிற ஏதோவொன்று.” ஆனால், உண்மையில் மனிதன் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியிருந்தாலும் யோபு 38:24-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள யெகோவா எழுப்பியிருந்த கேள்விக்கு, இன்னும் முழுமையான பதிலை அறியாதவனாக இருக்கிறான். நாம் ஒளி இல்லாமல் இருக்க முடியுமா? ஒளியில்லாமல் நாம் வாழ முடியாது. நம்முடைய சரீரப் பிரகாரமான பார்வைக்கு ஒளி அவசியம் தேவை. பைபிளும் ஆவிக்குரிய அர்த்தத்தில், “தேவன் ஒளியாயிருக்கிறார்,” என்று கூறுகிறது. (1 யோ. 1:5) நமக்கு “ஒளி கொடுப்பவரிடம்” நாம் முழுமையாகச் சார்ந்திருக்கிறோம்.—சங்.118:27, NW.
2 இது உடல்ரீதியாக மாத்திரமல்ல, மேலுமதிகமாக ஆவிக்குரிய விதத்திலும் உண்மையாக உள்ளது. பொய் மதம் அநேக ஜனங்களை தவறாக வழிநடத்தி, அவர்களை ஆவிக்குரிய அந்தகாரத்திலே விட்டுவிட்டு, ‘குருடரைப்போல் சுவரைப் பிடித்து தடவச்செய்திருக்கிறது.’ (ஏசா. 59:9, 10) யெகோவா தம்முடைய விஞ்சமுடியாத அன்பினாலும் இரக்கத்தினாலும் உந்துவிக்கப்பட்டு, ‘தம்முடைய வெளிச்சத்தையும் சத்தியத்தையும் அனுப்புகிறார்.’ (சங். 43:3) சொல்லர்த்தமாகவே, போற்றுதலுள்ள கோடிக்கணக்கானோர், ‘அந்தகாரத்தினின்று அவருடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு’ வருவதின்மூலம் பிரதிபலித்திருக்கிறார்கள்.—1 பே. 2:9.
3 இந்த ஒளியை உலகத்திற்கு கொண்டு வருவதில் இயேசு கிறிஸ்து ஒரு முக்கிய பாகம் வகிக்கிறார். “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்” என்று அவர் கூறினார். (யோவா. 12:46) அவர் தம்முடைய எல்லா நேரத்தையும், சக்தியையும், திறமையையும், சத்தியத்தின் ஒளியை பரப்புவதற்காகப் பயன்படுத்தினார். அவருடைய சொந்த ஊர் முழுவதுமாக பயணம் செய்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலேயும் கிராமத்திலேயும் பிரசங்கித்து போதனை செய்துவந்தார். அவர் எல்லா இடத்திலுமிருந்து வந்த கடுமையான துன்புறுத்துதல்களைத் தாங்கிக்கொண்டு, சத்திய ஒளியைப் பரப்பும் தம்முடைய பொறுப்பிலே தொடர்ந்து உறுதியாக இருந்தார்.
4 இயேசு ஒரு குறிப்பிட்ட இலக்கை மனதிலே வைத்து, சீஷர்களை தெரிந்தெடுக்கவும், பயிற்சியளிக்கவும், ஒழுங்கமைக்கவும் தம்முடைய கவனத்தை செலுத்தினார். “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; . . . மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது,” என்ற அவருடைய போதனைகளை மத்தேயு 5:14-16-ல் நாம் வாசிக்கிறோம். இயேசுவைப் போலவே அவர்களும் சத்தியத்தின் ஒளியை எல்லா திசைகளிலும் பரப்பி, ‘உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்க’ வேண்டியவர்களாயிருந்தனர். (பிலி. 2:14) அவர்கள் அந்தப் பொறுப்பை தங்கள் வாழ்க்கையின் முதன்மையான நோக்கமாகக் கருதி, சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டார்கள். சுவிசேஷம், “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது,” என்று சிறிது காலத்திற்குப் பின்னர் பவுலால் சொல்ல முடிந்தது. (கொலோ. 1:23) முழு கிறிஸ்தவ சபையும் அந்த மகத்தான வேலையை செய்து முடிப்பதில் ஐக்கியப்பட்டிருந்தது.
5 ‘அந்தகாரத்தின் கிரியைகளை தள்ளிவிட்டவர்களில்,’ ஒருவராயிருப்பதற்கு இன்று நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். (ரோ. 13:12, 13) இயேசுவும் விசுவாசமுள்ள பண்டைய கிறிஸ்தவர்களும் வைத்த முன்மாதிரியை பின்பற்றுவதன் மூலம் நம்முடைய போற்றுதலைக் காட்டலாம். மனித சரித்திரத்திலே என்றுமில்லாதளவுக்கு, இப்போதுதானே சத்தியத்தை மற்றவர்கள் மிகவும் அவசரமாகவும் கண்டிப்பாகவும் கேட்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வேலையின் அவசரத்தன்மையிலும் அதனால் வரும் அநேக பயன்களிலும் வேறு எந்த நடவடிக்கையையும் இதனுடன் ஒத்துப் பார்க்கமுடியாது.
6 சுடர்விட்டு ஒளி கொடுப்பவர்களாக நாம் எப்படி பிரகாசிக்க முடியும்? நம்முடைய ஒளியைப் பிரகாசிக்கச் செய்யப் பிரதான வழி, ராஜ்ய பிரசங்க வேலையில் பங்கு கொள்வதேயாகும். ஒவ்வொரு சபையும், அதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் பிராந்தியத்தில் பிரசங்க வேலைக்காக சீராக, ஒழுங்கமைக்கப்பட்ட ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும், அநேக மொழிகளிலும் பெருமளவில் பிரசுரங்கள் தயாரித்து அளிக்கப்படுகின்றன. கூட்டங்களினால் விரிவான கல்வி புகட்டப்பட்டு, அனுபவமுள்ளவர்களால் மற்றவர்களை தனிப்பட்ட முறையில் பயிற்றுவிப்பதற்கு உதவியளிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள், முதியோர், மற்றும் பிள்ளைகளும்கூட பங்குகொள்ள வாய்ப்புகள் திறந்துள்ளன. தன்னுடைய திறமையும், சூழ்நிலைமையும் எந்தளவுக்கு இடமளிக்கிறதோ அந்தளவுக்கு சபையிலுள்ள ஒவ்வொருவரும் பங்குகொள்ள அழைக்கப்படுகிறார்கள். சபையில் நடக்கும் எல்லா செயல்களும் பிரசங்க வேலையின்மீது மையப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அங்கத்தினரும் அதிலே ஏதாவது ஒரு விதத்திலே பங்குபெற உதவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நம்முடைய ஒளி தொடர்ந்து பிரகாசிக்கிறதா என்று உறுதிசெய்ய மிகச் சிறந்த வழி, சபையுடன் ஒழுங்கான, நெருக்கமான கூட்டுறவு கொள்வதேயாகும்.
7 வாய் மொழியான சாட்சியை உட்படுத்தாமல் வேறு வழிகளில் நாம் சத்தியத்தை பிரகாசிக்கச் செய்யலாம். வெறுமனே நம் நடத்தையின் மூலமாக மாத்திரமே மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்திழுக்கலாம். “அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் . . . தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்,” என்று பேதுரு வலியுறுத்தினபோது இதைத்தான் மனதில் வைத்திருந்தார். (1 பே. 2:12) ஒரு வேலை அல்லது ஒரு அமைப்பு, அதனோடு சம்பந்தப்பட்டவர்களின் நடத்தையின் அடிப்படையில் அநேகரால் மதிப்பிடப்படுகிறது. ஒழுக்கத்தில் சுத்தமாயும், உண்மையாயும், சமாதானமாயும், சட்டத்திற்கு கீழ்ப்படிகிறவர்களாயும் இருக்கிறவர்களை மக்கள் கவனிக்கும்போது, அத்தகையவர்களை வித்தியாசமானவர்கள் என்று கருதி, பெரும்பான்மையோர் பின்பற்றுகிறதைவிட இவர்கள் மிக உயர்ந்த தராதரங்களோடு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று தீர்மானிக்கிறார்கள். ஒரு கணவன் தன் மனைவியை மதித்தும், அன்பானவிதத்தில் நெஞ்சார நேசித்தும், மனைவியும் அப்படியே தன் கணவனின் தலைமை வகிப்புக்கு மரியாதை கொடுத்தும் வந்தால் தங்களுடைய ஒளியை இருவரும் பிரகாசிக்கச் செய்கிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிகையில், பால் சம்பந்த ஒழுக்கயீனத்தையும் போதைமருந்தின் உபயோகத்தையும் தவிர்க்கையில் வித்தியாசமானவர்களாக மேலோங்கி நிற்கின்றனர். ஒரு பணியாளர் தன் வேலையைக் குறித்ததில் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு, நேர்மையாயும், பிறருடைய நலனைக் கருதுபவராயுமிருந்தால் உயர்வாக மதிக்கப்படுவார். இந்தக் கிறிஸ்தவப் பண்புகளை செயல்படுத்திக்காட்டுவதன் மூலம், நம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்து, மற்றவர்களுக்கு நம் வாழ்க்கை பாதையை சிபாரிசு செய்கிறோம்.
8 பிரசங்கிப்பதென்பது கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் கற்றுக்கொண்டவற்றை பிறரிடம் பேசுவதேயாகும். இது பேச்சு மேடையிலிருந்தோ, வீடுவீடாகவோ செய்யப்படுகிறது. ஆனால் அதை ஒருபோதும், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களோடு மாத்திரம் நிறுத்தி விடக்கூடாது. நம் அன்றாட நடவடிக்கைகள், அநேக ஜனங்களை நாம் சந்திக்கும்படி செய்கிறது. உங்களுடைய அக்கம்பக்கத்தாரோடு ஒரு நாளைக்கு எத்தனை தடவை பேசுகிறீர்கள்? உங்கள் கதவை எத்தனை தடவை யாரோ ஒருவர் தட்டுகிறார்? நீங்கள் கடைக்கு செல்லும்போதோ பஸ்ஸில் பயணம் செய்யும்போதோ அல்லது வேலைசெய்யும் இடத்திலோ எத்தனை விதமான ஜனங்களை சந்திக்கிறீர்கள்? நீங்கள் பள்ளியில் படிக்கும் ஒரு இளைஞராகயிருந்தால், தினமும் எத்தனை நபர்களுடன் பேசுகிறீர்கள் என்று எண்ண முடியுமா? மற்றவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்புகள் அநேகமாக எண்ணிலடங்காதவையாக உள்ளன. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், சில வசனங்களை ஞாபகத்திலே வைத்தும், ஒரு பைபிளையும் சில துண்டுப்பிரதிகளையும் எளிதில் எடுக்கும் நிலையில் கொண்டிருப்பதும், மற்றவர்களுடன் சமயம் கிடைக்கும்போது பேச முயற்சியெடுப்பதும்தான்.
9 சந்தர்ப்ப சாட்சிகொடுப்பது இலகுவானதாயிருந்தாலும், சிலர் அதை முயற்சி செய்ய தயங்குகிறார்கள். முன்பின் பழக்கமற்றவர்களை அணுகுவதற்கு, வெட்கமாயும் நடுக்கமாயும் இருப்பதாக சிலர் அழுத்திக் கூறி, இதனால் மௌனமாயிருக்கலாம். தங்கள் பக்கமாக கவனத்தை இழுத்து விடுவோமோ அல்லது ஒரு கடுமையான பதில் கிடைத்து விடுமோ என்று நினைத்து அவர்கள் அச்சப்படலாம். கவலைப்படுவதற்கு அரிதாகவே காரணமுண்டு என்று சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் அனுபவமிக்கவர்கள் உங்களிடம் கூறலாம். மற்றவர்களும் அடிப்படையிலே நம்மைப் போலத்தான் இருக்கிறார்கள்; அவர்களுக்கும் அதேவிதமான தேவைகளும் அதேவிதமான அக்கறைகளும், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அதேவிதமான காரியங்களையும் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலானோர், ஒரு மகிழ்ச்சியான சிரிப்பிற்கோ அல்லது ஒரு சிநேகப்பான்மையான வாழ்த்துதலுக்கோ அன்பான விதத்தில் பிரதிபலிப்பார்கள். ஆரம்பத்தில் நீங்கள் “தைரியத்தை திரட்டிக்கொள்ள” வேண்டியிருக்கலாம். (1 தெ. 2:2, NW) ஆயினும், ஒருதரம் ஆரம்பித்து விட்டீர்களென்றால் அதனுடைய விளைவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டு, சந்தோஷப்படுவீர்கள்.
10 நம்முடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்: சந்தர்ப்ப சாட்சியின் மூலம் கிடைத்த புத்துணர்ச்சியளிக்கும் அனுபவங்களில் சில இதோ: 55 வயதுள்ள ஒரு பெண் சாலையைக் கடக்க முற்பட்டுக்கொண்டிருந்தபோது, ஒரு கார் அவரை இடிக்க வந்தது. உடனே ஒரு சகோதரி அவருடைய கையைப் பிடித்து, பாதுகாப்பாக இழுத்து இவ்வாறு கூறினார்: “தயவுசெய்து கவனமாக இருங்கள். நாம் நெருக்கடியான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!” பிறகு அவர், காலங்கள் ஏன் அவ்வளவு பயங்கரமானவையாக உள்ளன என்று விவரித்தார். அதற்கு அந்தப் பெண் கேட்டார், “நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியா?” தன்னுடைய அக்காவினிடத்திலிருந்து நம்முடைய பிரசுரங்களில் ஒன்றை வாங்கியிருந்த இந்தப் பெண், ஒரு யெகோவாவின் சாட்சியை சந்திக்க விருப்பமுள்ளவராகயிருந்தார். எதிர்பாராது நடந்த இந்தச் சம்பவம் அதை சாத்தியமாக்கிற்று.
11 ஒரு டாக்டரைக் காண சென்ற இடத்தில் காத்திருப்பதற்கான அறையிலிருந்த ஒரு பெண்ணிடம், ஒரு சகோதரி பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார். அந்தப் பெண் கவனமாக கேட்டுவிட்டு பின் இவ்வாறு கூறினார்: “சில காலமாகவே நான் யெகோவாவின் சாட்சிகளை அடிக்கடி எதிர்ப்படுகிறேன்; பிற்காலத்தில் ஒருவேளை நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானால், அது நீங்கள் இப்போது என்னிடத்தில் கூறியவற்றிற்காகத்தான் இருக்கும். உங்களுக்கு செவிகொடுப்பது இருட்டிலிருந்து வெளிச்சத்தை காண்கிறமாதிரி உள்ளது.”
12 மற்றவர்கள் சத்தியத்தை கற்றுக்கொள்ள உதவ ஒரு அன்பான செயல் ஒரு முன்னேற்றப்படியாக அமையலாம். வெளி ஊழியத்திலிருந்து வீட்டுக்கு திரும்பி செல்கையில், நோய்வாய்ப்பட்ட மாதிரி தெரிந்த ஒரு வயதான பெண்மணி பஸ்ஸிலிருந்து இறங்குவதை இரண்டு சகோதரிகள் கண்டார்கள். அந்தப் பெண்ணை நிறுத்தி உதவி வேண்டுமா என்று கேட்டார்கள். முன்பின் அறிமுகமில்லாதவர்கள் தன்னிடத்தில் அக்கறை காட்டினதைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு, இப்படிப்பட்ட அன்பான செயலை தூண்டியது எது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சாட்சிகொடுக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இது அளித்தது. அந்தப் பெண் உடனடியாக தன் விலாசத்தைக் கொடுத்து, தன்னை பார்க்க வரும்படி அன்பாக அழைத்தார். ஒரு பைபிள் படிப்பு தொடங்கியது. வெகு சீக்கிரத்தில் அப்பெண் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்து, இப்போது சத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
13 கடற்கரையோரம் செய்யப்படும் அதிகாலை ஊழியத்தை ஒரு வயதான சகோதரி பிரயோஜனப்படுத்திக் கொள்கிறார். கடற்கரையோரம் காலையில் உலாவவரும் வீட்டுப் பணிப்பெண்கள், குழந்தைகளை பேணுபவர்கள், வங்கி கிளர்க்குகள் ஆகியோரையும் மற்றவர்களையும் இவர் சந்திக்கிறார். மணல் பக்கத்திலுள்ள இருக்கைகளில் அமர்ந்து, பைபிள் படிப்புகளை நடத்துகிறார். இவரிடம் சத்தியத்தை கற்றுள்ள அநேகம்பேர், இன்று யெகோவாவின் சாட்சிகளாக உள்ளனர்.
14 ஒரு அரசியல் கட்சியினால் மட்டுமே உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று தான் நம்புகிறதாக ஒரு சக பணியாளர் கூறுவதை, உலகப்பிரகாரமான வேலையிலிருக்கும் ஒரு சகோதரி கவனித்துக் கேட்டார். கடவுளுடைய ராஜ்யம் செய்யக்கூடிய காரியங்களைப் பற்றிய வாக்குறுதிகளை அந்தச் சகோதரி கூறினார். அலுவலகத்திலே ஆரம்பித்த இந்தக் கலந்துரையாடல், ஒரு ஒழுங்கான வீட்டு பைபிள் படிப்பாக மாறி, முடிவிலே அவரும் அவருடைய கணவரும் சாட்சிகளாக மாற உதவினது.
15 நீங்கள் ஒரு சாட்சி என்பதை என்றும் மறவாதீர்கள்! இயேசு தம்முடைய சீஷர்களை “உலகத்துக்கு வெளிச்சமாயிரு”ப்பவர்கள் என்று விவரித்தபோது, அவர்கள் கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் ஆவிக்குரிய அறிவொளி மற்றவர்கள் பயனடைவதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கருதினார். நாம் இயேசுவின் ஆலோசனையை செயல்படுத்தினால், நம் ஊழியத்தை எவ்வாறு நோக்குவோம்?
16 வேலை தேடும்போது சிலர், பகுதிநேர வேலையைத் தெரிந்தெடுக்கிறார்கள். அதிலே தாங்கள் செலவிடப்போகும் நேரத்திற்கும் சக்திக்கும் ஒரு வரம்பை போட்டுள்ளார்கள். ஏனென்றால், அதிகம் பயனளிக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தேடுவதில் நேரத்தை செலவிட அவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். நாமும்கூட, நம் ஊழியத்தை அவ்வாறு நோக்குகிறோமா? ஊழியத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று நினைத்து, அதற்காக கொஞ்ச நேரத்தை ஒதுக்க மனமுள்ளவர்களாக இருந்தாலும் நம்முடைய முதன்மையான அக்கறை வேறு எங்கேனும் இருக்கிறதா?
17 பகுதிநேர கிறிஸ்தவர் என்று ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து, ‘நம்மை நாமே சொந்தம் கைவிட்டு,’ இயேசுவை “தொடர்ந்து” பின்பற்றுவோம் என்று ஒத்துக்கொண்டு ஒப்புக்கொடுத்திருக்கிறோம். (மத். 16:24, NW) மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கேயெல்லாம் நம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்க கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் ஆதாயப்படுத்திக் கொண்டு, தொடர்ந்து “மனப்பூர்வமாய்” இருப்பதே நம் விருப்பமாக இருக்கிறது. (கொலோ. 3:23 24) உலகப்பிரகாரமான மனப்பான்மைகளை எதிர்த்து, தொடக்கத்திலே இருந்த வைராக்கியத்தை காத்துக்கொண்டு, நம்முடைய ஒளி தொடர்ந்து சுடர்விட்டு பிரகாசிக்கிறதா என்று உறுதிசெய்து கொள்ளவேண்டும். சிலர் தங்களுடைய வைராக்கியத்தை தணியவிட்டு, தங்களுடைய ஒளி சிறிது தூரத்திலிருந்துகூட தெரியாதளவுக்கு மங்கிப்போக விட்டிருப்பார்கள். ஊழியத்தில் இழந்துபோன வைராக்கியத்தைத் திரும்பப் பெற, அப்படிப்பட்டவருக்கு உதவி தேவையாக இருக்கலாம்.
18 நம்முடைய செய்தியை அநேகர் விரும்பாததினால் சிலர் தயங்கநேரிடலாம். கிறிஸ்துவைப் பற்றின உபதேசம் ‘கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது,’ என்று பவுல் கூறினார். (1 கொரி. 1:18) மற்றவர்கள் என்ன கூறினாலும் அவர் பொருட்படுத்தாமல், அழுத்தந்திருத்தமாக இவ்வாறு அறிவித்தார்: “சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்.” (ரோ. 1:16) வெட்கப்படுகிறவர் தன்னை தாழ்ந்தவராக அல்லது தகுதியற்றவராக கருதுகிறார். சர்வலோகத்திலேயே மிக உன்னத அரசதிகாரமுள்ளவரைப் பற்றியும், நம்முடைய நீடித்த மகிழ்ச்சிக்காக அவர் செய்திருக்கும் அற்புதமான ஏற்பாடுகளைப் பற்றியும் நாம் பேசும்போது எப்படி வெட்கப்பட முடியும்? இந்த சத்தியங்களைப் பற்றி மற்றவர்களிடம் நாம் கூறும் போது, தாழ்ந்தவராகவோ அல்லது தகுதியற்றவராகவோ நம்மை உணருவது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மாறாக நம்மால் முடிந்தளவு கட்டாயமாக செய்து, ‘வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை’ என்ற பற்றுறுதியை வெளிக்காட்ட வேண்டும்.—2 தீ. 2:15.
19 பூமி முழுவதிலுமுள்ள எல்லா தேசங்களிலும் பிரகாசிக்கிற சத்தியத்தின் ஒளி, பரதீஸான புதிய உலகத்தில் என்றும் வாழக்கூடிய நம்பிக்கையை அனலுடன் அளிக்கிறது. நம் வெளிச்சத்தை, தொடர்ந்து பிரகாசிக்கச் செய்வதற்கான இந்த அறிவுரையை இருதயத்திற்குள் ஏற்றுக்கொண்டோம் என்று காட்டுவோமாக! இதன்படி செய்தால் சீஷர்கள் எப்படி தினந்தோறும் ‘இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்து’ சந்தோஷப்பட்டார்களோ அப்படியே நாமும்கூட சந்தோஷப்படுவதற்கான காரணத்தைக் கொண்டிருக்கலாம்.—அப் 5:42.