‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்’
1. எதை நாம் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்?
1 காலை முதல் மாலை வரை எழில் கொஞ்சும் சூரியவொளி யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறது. என்றாலும், மற்றொரு விதமான ஒளியைப் பெறும்படி, அதாவது “வாழ்வளிக்கும் ஒளியை” பெறும்படி, இயேசு தம்முடைய சீடர்களிடம் சொன்னார். (யோவா. 8:12) இந்த ஆன்மீக அறிவொளி யெகோவா நமக்குக் கொடுத்த அரும்பெரும் பாக்கியம். என்றாலும், இதில் முக்கியப் பொறுப்புகள் உட்பட்டுள்ளன. மற்றவர்கள் பயனடைய, “உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கச் செய்யுங்கள்” என்று இயேசு கற்பித்தார். (மத். 5:16) இந்த உலகம் இன்று ஆன்மீக இருளில் மூழ்கியிருப்பதால், ஆன்மீக ஒளியை நாம் பகிர்ந்தளிக்க வேண்டும்; அப்படிப் பகிர்ந்தளிப்பது என்றும்விட இன்று மிகவும் அவசியம். அப்படியானால், கிறிஸ்துவைப் போல நாம் எப்படி நம் ஒளியைப் பிரகாசிக்கலாம்?
2. ஆன்மீக ஒளியைப் பகிர்ந்தளிப்பதன் முக்கியத்துவத்தை இயேசு எப்படிக் காட்டினார்?
2 நற்செய்தியை அறிவிப்பதன் மூலம்: சத்திய ஒளியை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக இயேசு தம்முடைய நேரம், சக்தி, வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தினார்; வீடுகள், பொது இடங்கள், மலையுச்சிகள் என மக்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம் சென்று பிரசங்கித்தார். மக்கள் உண்மையான ஆன்மீக அறிவொளியைப் பெற்றுக்கொண்டால் நிரந்தர பலனைப் பெறுவார்கள் என அவர் அறிந்திருந்தார். (யோவா. 12:46) எனவே, ஆன்மீக ஒளி இன்னும் அதிக ஆட்களைச் சென்றெட்டுவதற்காக, “உலகத்திற்கு ஒளியாக” இருக்கும்படி தம்முடைய சீடர்களைத் தயார்படுத்தினார். (மத். 5:14) அண்டை அயலாருக்கு நன்மை செய்வதன் மூலமும் கடவுளைப் பற்றிய சத்தியங்களை அறிவிப்பதன் மூலமும் அவர்கள் தங்களுடைய ஒளியைப் பிரகாசித்தார்கள்.
3. சத்திய ஒளியை நாம் உண்மையிலேயே மதித்துணருகிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
3 இன்று கடவுளுடைய மக்கள் ‘ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ளும்’ பொறுப்பு தங்களுக்கு இருப்பதை அறிந்திருக்கிறார்கள்; அந்தப் பொறுப்பை அவர்கள் அதிக முக்கியமானதாகக் கருதுவதால், மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பிரசங்கிக்கிறார்கள். (எபே. 5:8) வேலை செய்யும் இடத்தில் அல்லது பள்ளியில் கிடைக்கிற இடைவேளைகளில் மற்றவர்கள் பார்க்கும் விதமாக பைபிளையோ, பைபிள் பிரசுரங்களையோ வாசிப்பது கலந்துரையாடலுக்கு வழிவகுக்கலாம். இப்படிச் செய்ததன் மூலம், ஓர் இளம் சகோதரி ஒரு பைபிள் படிப்பைத் துவங்கினாள்; தன்னுடன் படிக்கிற 12 மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களையும் கொடுத்தாள்.
4. நம்முடைய நன்னடத்தை எவ்வாறு மற்றவர்களுக்கு முன்பு ‘ஒளியை பிரகாசிக்கச் செய்கிறது?’
4 நற்செயல்கள் மூலம்: நம்முடைய அன்றாட நடத்தையின் மூலமாகவும் ஆன்மீக ஒளியை நாம் பிரகாசிக்க வேண்டும். (எபே. 5:9) வேலை செய்யும் இடத்தில், பள்ளியில், பொது இடங்களில், நம்முடைய கிறிஸ்தவ நன்னடத்தை மற்றவர்களுக்குப் பளிச்சென்று தெரியும்; பைபிள் சத்தியங்களை அறிவிக்க அது வாய்ப்பையும் திறந்துவைக்கும். (1 பே. 2:12) உதாரணமாக, ஐந்து வயது பையன் ஒருவனின் நல்ல நடத்தையைப் பார்த்த அவனுடைய டீச்சர், அவனுடைய அப்பா அம்மாவை அழைத்துவரும்படி அவனிடம் சொன்னார். “இந்தச் சின்ன வயதிலேயே சரி எது, தவறு எது என்பதை உங்கள் பிள்ளை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறான். இவ்வளவு நல்ல பிள்ளையை நான் இதுவரை பார்த்தே இல்லை!” என்று சொல்லிப் பாராட்டினார். ஆம், நாம் செய்கிற ஊழியமும், நம்முடைய நன்னடத்தையும் மக்களை ‘வாழ்வளிக்கும் ஒளியிடம்’ ஈர்க்கிறது; கடவுளுக்குப் புகழ் சேர்க்கிறது.