எரிநரகத்தைக் குறித்துதான் இயேசு பேசினாரா?
எரிநரகத்தைப் பற்றிய கோட்பாட்டில் நம்பிக்கை வைக்கும் சிலர் மாற்கு 9:48-ஐ (அல்லது 44, 46 வசனங்களை) அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அந்த வசனத்தில், புழுக்கள் சாவதில்லை என்றும் நெருப்பு அணைவதில்லை என்றும் இயேசு குறிப்பிட்டார். இதைப்பற்றி உங்களிடம் யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள்?
சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் 44, 46, 48 ஆகிய வசனங்கள் ஒரேவிதமாக உள்ளன. எனவே, ஒருவர் எந்த மொழிபெயர்ப்பை வைத்திருக்கிறாரோ அதைப் பொறுத்து, இவற்றில் ஏதாவது ஒரு வசனத்தை வாசிக்கலாம்.a புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிள் இவ்வாறு வாசிக்கிறது: “நீ இடறலடைய உன் கண் காரணமாக இருந்தால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்களுடன் கெஹென்னாவுக்குள் வீசப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணுடன் கடவுளுடைய ராஜ்யத்திற்குள் நுழைவது நல்லது. கெஹென்னாவில் புழுக்கள் சாவதில்லை, நெருப்பும் அணைவதில்லை.”—மாற். 9:47, 48.
இயேசுவின் இந்த வார்த்தைகள், தீயவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய ஆத்துமாக்கள் என்றென்றும் துன்பப்படும் என்ற கருத்தை ஆதரிப்பதாக சிலர் வாதாடுகிறார்கள். உதாரணத்திற்கு, நாவாரா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஸாக்ராத்தா பிப்லியா என்ற ஸ்பானிஷ் பைபிளிலுள்ள ஒரு குறிப்பு இவ்வாறு சொல்கிறது: “நரகத்தில் அனுபவிக்கும் வாதனைகளைப்பற்றி குறிப்பிடத்தான் நம் ஆண்டவர் [இந்த வார்த்தைகளை] பயன்படுத்துகிறார். ‘புழு சாகாது’ என்பது நரக தண்டனை அளிக்கப்பட்டவர்கள் என்றென்றும் அனுபவிக்கும் நிரந்தர மனவேதனையையும் ‘நெருப்பு அணையாது’ என்பது அவர்கள் உடலில் அனுபவிக்கும் வேதனையையும் குறிப்பதாகவே பெரும்பாலும் விளக்கப்படுகிறது.”
என்றாலும், இயேசுவின் வார்த்தைகளை ஏசாயா 66-ஆம் அதிகாரத்திலுள்ள கடைசி வசனத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.b அந்த வசனத்திலுள்ள விஷயங்களைத்தான் இயேசு குறிப்பிட்டார் என்பது தெளிவாக இருக்கிறது, அல்லவா? அதில், “எருசலேமுக்கு வெளியே இருந்த இன்னோம் பள்ளத்தாக்கிற்கு (கெஹென்னாவிற்கு)” போவதைக் குறித்து அந்த தீர்க்கதரிசி சொல்வதாகத் தெரிகிறது. “ஒரு காலத்தில், அங்கு மனிதர்களை பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. (எரே. 7:31) காலப்போக்கில், அந்த இடம் அந்நகரின் குப்பை கொட்டும் இடமாக ஆனது.” (த ஜெரோம் பிப்ளிக்கல் கமன்டரி) தெளிவாகவே, ஏசாயா 66:24-ல் சித்தரிக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் மனிதர் வாதிக்கப்படுவதைப்பற்றி குறிப்பிடுவதில்லை, ஆனால் பிரேதங்கள், அதாவது இறந்தவர்களின் உடல்களைப் பற்றியே குறிப்பிடுகின்றன. பூச்சி அல்லது புழுக்கள் சாகாமல் இருப்பதாகவே இந்த வசனம் சொல்கிறது; உயிருள்ள மனிதர்களையோ அழியாத ஆத்துமாக்களையோ பற்றி அது சொல்வதில்லை. அப்படியானால், இயேசுவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?
ஒரு கத்தோலிக்க புத்தகத்தின் (எல் இவான்ஹெல்யோ டி மார்க்காஸ், ஆனாலிஸிஸ் லிங்விஸ்டிகோ இ கோமென்டாரியோ எக்ஸெஹெடிகோ), இரண்டாம் தொகுப்பில் மாற்கு 9:48-ஐப்பற்றி குறிப்பிடுவதைக் கவனியுங்கள்: “இந்த வார்த்தைகள் ஏசாயாவிலிருந்து (66,24) எடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக இறந்தவர்களின் உடல்கள் இரண்டு விதங்களில் அழிந்துபோகின்றன: ஒன்று அழுகிப்போவது, மற்றொன்று எரிந்துபோவது. இதையே அந்தத் தீர்க்கதரிசி இங்கு தெரிவிக்கிறார். . . . புழுக்களையும் நெருப்பையும் அடுத்தடுத்துப் பயன்படுத்துவது, அழிவு நிச்சயம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. . . . அழிவை ஏற்படுத்தும் அந்த இரண்டுமே எப்போதும் இருப்பதாக விவரிக்கப்படுகிறது (அதாவது, ‘அணைவதில்லை, சாவதில்லை’): அவற்றிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. இந்த விவரிப்பில், மனிதன் அல்ல, புழுவும் நெருப்பும்தான் அழியாமல் இருக்கும். இவற்றிற்கு இரையாகிற எதையுமே அவை விட்டுவைக்காது, அதை முற்றிலும் அழித்துவிடுகின்றன. எனவே, என்றென்றும் வாதிக்கப்படுவதை இது விவரிக்கவில்லை. மாறாக, நிரந்தரமான அழிவை விவரிக்கிறது. ஏனென்றால், இப்படி அழிபவர்கள் உயிர்த்தெழுதலைப் பெற மாட்டார்கள், அவர்களுடைய மரணத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. ஆக, [நெருப்பு] என்பது முழுமையான அழிவை அடையாளப்படுத்துகிறது.”
உண்மையான கடவுள் அன்புள்ளவர், நீதியுள்ளவர் என்பதை அறிந்திருப்பவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகளை இப்படிப் புரிந்துகொள்வதில் எந்தக் கஷ்டமும் இருக்காது. இந்த விளக்கம் அவர்களுக்கு நியாயமாகவே தோன்றும். தீயவர்கள் நித்திய வாதனையை அனுபவிப்பார்கள் என்று அவர் சொல்லவில்லை. மாறாக, அவர்கள் முழுமையான அழிவை சந்திப்பார்கள்; அவர்களுக்கு உயிர்த்தெழுதலே கிடையாது.
[அடிக்குறிப்புகள்]
a மிகவும் நம்பத்தக்க பைபிள் கையெழுத்துப் பிரதிகளில், 44 மற்றும் 46-ஆம் வசனங்கள் காணப்படுவதில்லை. இந்த இரு வசனங்களும் பின்னர் சேர்க்கப்பட்டவையாக இருக்கலாம் என்று அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். பேராசிரியர் ஆர்ச்சபால்ட் டி. ராபர்ட்ஸன் இவ்வாறு எழுதுகிறார்: “மிகப் பழமையான, நம்பத்தக்க கையெழுத்துப் பிரதிகளில் இவ்விரு வசனங்கள் காணப்படுவதில்லை. இவை மேற்கத்திய மற்றும் சீரிய (பைஸன்டைன்) கையெழுத்துப் பிரதிகளின் தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. 48-ஆம் வசனத்தில் உள்ள வார்த்தைகளே 44 மற்றும் 46-ஆம் வசனங்களில் திரும்பவும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, இந்த இரண்டு வசனங்களை [விட்டுவிடுகிறோம்].” தமிழில் பொது மொழிபெயர்ப்பு, கத்தோலிக்க பைபிள், ஈஸி டு ரீட் வர்ஷன் ஆகிய பைபிள்களில் 44 மற்றும் 46-ஆம் வசனங்கள் விடப்பட்டிருப்பதையும், அவற்றிற்கு அடிக்குறிப்பு கொடுக்கப்பட்டிருப்பதையும் நாம் கவனிக்கலாம். இந்த “வசனங்கள் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது” என பொது மொழிபெயர்ப்பு பைபிளிலுள்ள அடிக்குறிப்பு சொல்கிறது. இவை, சில கிரேக்க பிரதிகளில் மட்டுமே இருப்பதாக மற்ற இரு மொழிபெயர்ப்புகளும் அடிக்குறிப்பில் தெரிவிக்கின்றன.
b “அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.”—ஏசா. 66:24.