யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்
“நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.”—1 யோவான் 5:3.
1, 2. (அ) அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது என்ற எண்ணமே ஏன் இன்று அநேகருக்கு கசப்பாக இருக்கிறது? (ஆ) யாருக்கும் கட்டுப்படாமல் தங்களுடைய இஷ்டப்படி நடப்பதாக சொல்லிக்கொள்பவர்கள் உண்மையில் அப்படித்தான் வாழ்கிறார்களா? விளக்கவும்.
“அதிகாரம்” என்ற வார்த்தையைக் கேட்டாலே இன்று அநேகருக்கு எரிச்சலாக இருக்கிறது. மற்றவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்ற எண்ணமே அநேகருக்கு எட்டிக்காயாய் கசக்கிறது. “நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன், என் இஷ்டப்படிதான் நடப்பேன்” என்ற மனநிலையே அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய விரும்பாதவர்களிடம் காணப்படுகிறது. என்றாலும், இந்த மக்கள் உண்மையில் தங்கள் சொந்த இஷ்டப்படிதான் நடக்கிறார்களா? இல்லவே இல்லை! ‘இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரித்த’ பெரும்பாலான ஆட்களின் நெறிகளைப் பின்பற்றித்தான் இவர்கள் நடக்கிறார்கள். (ரோ. 12:2) சுதந்திரமாய் இருப்பதாக இவர்கள் நினைக்கிறார்கள்; ஆனால், அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்கிறபடி ‘கேட்டுக்கு அடிமைகளாகவே’ இருக்கிறார்கள். (2 பே. 2:19) “இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடி . . . ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய” பிசாசாகிய சாத்தானின் விருப்பப்படி இவர்கள் நடக்கிறார்கள்.—எபே. 2:2.
2 “எனக்கு எது நல்லது என்று சொல்வதற்கான அதிகாரத்தை என் பெற்றோருக்கோ பாதிரியாருக்கோ மதபோதகருக்கோ குருவுக்கோ பைபிளுக்கோ நான் தருவதில்லை” என்று ஓர் எழுத்தாளர் பெருமையடித்துக்கொண்டார். உண்மைதான், சிலர் தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தலாம்; அப்படிப்பட்டவர்களுக்குக் கீழ்ப்படிய அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என நமக்குத் தோன்றலாம். அதற்காக, யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை என்று நினைப்பது சரியாக இருக்குமா? இருக்காது என்ற கசப்பான உண்மையை நீங்கள் செய்தித்தாளைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். மனிதனுக்கு அறிவுரை மிக அதிகமாக தேவைப்படுகிற இந்தக் காலக்கட்டத்தில் அதை அநேகர் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
அதிகாரத்தைப்பற்றி நம் மனநிலை
3. மனிதருடைய அதிகாரத்திற்குக் கண்மூடித்தனமாக கீழ்ப்படியவில்லை என முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படி காட்டினார்கள்?
3 அதிகாரத்தைப் பொறுத்த வரையில், கிறிஸ்தவர்களாகிய நம்முடைய மனநிலை உலகத்தாரின் மனநிலையிலிருந்து வேறுபடுகிறது. அதற்காக, மற்றவர்கள் என்ன சொன்னாலும் நாம் கண்மூடித்தனமாக கீழ்ப்படிகிறோம் என்று சொல்லமுடியாது. ஆனால், சில சமயங்களில் மற்றவர்களுடைய விருப்பத்திற்கு நாம் இணங்கிப் போகாமல் இருக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு நாம் இணங்கிப் போகாமல் இருக்க வேண்டும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் இப்படித்தான் செய்தார்கள். உதாரணமாக, ஆலோசனைச் சங்கத்தில் இருந்த பிரதான ஆசாரியரும் மற்ற தலைவர்களும் பிரசங்கிப்பதை நிறுத்தும்படி அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர்களோ, அதற்குப் பயந்து அடிபணிந்துவிடவில்லை. மனிதருடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவதற்காக சரியானதைச் செய்வதை விட்டுவிடவில்லை.—அப்போஸ்தலர் 5:27-29-ஐ வாசியுங்கள்.
4. கடவுளுடைய மக்களில் பலர் மனிதருடைய தயவைப் பெறுவதற்காக அவர்களுக்கு இணங்கிப்போகவில்லை என்பதற்கு எபிரெய வேதாகமத்திலுள்ள உதாரணங்களைக் குறிப்பிடுங்கள்.
4 இயேசுவுக்கு முன்பு வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் பலர் இதேபோன்ற மனநிலையை வெளிக்காட்டினார்கள். உதாரணமாக மோசே, “அரசனுடைய சீற்றத்திற்கு” ஆளானபோதிலும் ‘பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்பட மறுத்து . . . கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுவதையே தேர்ந்து கொண்டார்.’ (எபி. 11:24, 25, 27, பொது மொழிபெயர்ப்பு) யோசேப்பைத் தன்னுடன் தகாத உறவுகொள்ளும்படி போத்திபாரின் மனைவி மீண்டும்மீண்டும் வற்புறுத்தியபோது அவர் அதற்கு இணங்கிவிடவில்லை. அவரைப் பழிவாங்குவதற்கும் அவருக்கு கெடுதல் செய்வதற்கும் அவளுக்கு அதிகாரம் இருக்கிறதென்று அறிந்தபோதிலும் அவர் இணங்கிவிடவில்லை. (ஆதி. 39:7-9) தானியேல், ‘ராஜாவின் போஜனத்தினால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டார்.’ பாபிலோனியரின் பிரதானிகளின் தலைவனுக்கு அவருடைய தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும்கூட அவர் அதில் உறுதியாக இருந்தார். (தானி. 1:8-14) பூர்வ காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய மக்கள், சரியானதைச் செய்வதில் உறுதியாக இருந்தார்கள்; அதனால் வந்த பின்விளைவுகளை சந்திக்கவும் தயாராக இருந்தார்கள் என்று இத்தகைய உதாரணங்கள் காட்டுகின்றன. மனிதருடைய தயவைப் பெறுவதற்காக அவர்களது விருப்பத்திற்கு கடவுளுடைய மக்கள் இணங்கிப்போகவில்லை. அதுபோலவே நாமும் இணங்கிப்போகக்கூடாது.
5. அதிகாரத்தைக் குறித்த நம் மனப்பான்மை உலகத்தாரின் மனப்பான்மையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
5 நம்முடைய இந்த தைரியமான நிலைநிற்கை நாம் பிடிவாதக்காரர்களாக இருக்கிறோம் என்றோ அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறவர்களைப்போல் இருக்கிறோம் என்றோ அர்த்தப்படுத்தாது. மாறாக மனிதனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் யெகோவாவுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியவே நாம் தீர்மானமாய் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. மனித சட்டம் கடவுளுடைய சட்டத்தோடு முரண்பட்டால் எதற்குக் கீழ்ப்படிவது என்று தீர்மானிப்பது நமக்கு ஒன்றும் கடினமல்ல. ஏனென்றால், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அப்போஸ்தலர்களைப் போல நாமும் மனுஷருக்கு அல்ல தேவனுக்கே கீழ்ப்படிவோம்.
6. யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது ஏன் எப்போதும் நமக்கு நல்லது?
6 கடவுளுடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள எது நமக்கு உதவுகிறது? நீதிமொழிகள் 3:5, 6-ல் உள்ள வார்த்தைகளை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். அது சொல்வதாவது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்கள் நமக்கு நன்மையில்தான் முடிவடையும் என நாம் மனதார நம்புகிறோம். (உபாகமம் 10:12, 13-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேலர்களிடம் யெகோவா தம்மைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறவர் நானே.’ மேலும் அவர் இவ்வாறு சொன்னார்: “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.” (ஏசா. 48:17, 18) இந்த வார்த்தைகளை நாம் உறுதியாக நம்புகிறோம். கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது எப்போதும் நமக்கு நன்மையையே தரும் என நாம் ஆணித்தரமாக நம்புகிறோம்.
7. கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஒரு சட்டதிட்டத்தை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டால் என்ன செய்யவேண்டும்?
7 பைபிளிலுள்ள சில சட்டதிட்டங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும்கூட, நாம் யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிகிறோம். இது கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை, உறுதியான நம்பிக்கை. நமக்கு எது நல்லதென்று யெகோவா அறிந்திருக்கிறார் என்பதை நாம் மனதார நம்புவதை இது காட்டுகிறது. நாம் அவருக்குக் கீழ்ப்படிவது நம் அன்பின் வெளிக்காட்டாகவும் இருக்கிறது. ஏனென்றால், “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். (1 யோ. 5:3) ஆனால், நம்முடைய கீழ்ப்படிதலில் மற்றொரு அம்சமும் உட்பட்டுள்ளது; இதை நாம் அசட்டை செய்துவிடக்கூடாது.
பகுத்தறியும் ஆற்றல்களைப் பயிற்றுவித்தல்
8. நம்முடைய ‘பகுத்தறியும் ஆற்றல்களைப் பயிற்றுவிப்பது’ யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதுடன் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது?
8 ‘நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்றுவிக்கும்படி’ பைபிள் நமக்குச் சொல்கிறது. (எபி. 5:14, பொ.மொ.) எனவே, கடவுளுடைய சட்டங்களுக்கு இயந்திரத்தனமாக கீழ்ப்படிவது நம் இலக்கு அல்ல. மாறாக, யெகோவாவின் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு ‘நன்மை தீமையைப் பகுத்தறிபவர்களாக’ இருக்கவே நாம் விரும்புகிறோம். யெகோவாவின் வழிகளில் பொதிந்துள்ள ஞானத்தைக் கண்டறிய நாம் விரும்புகிறோம். அப்போது சங்கீதக்காரனைப்போல நாமும் இவ்வாறு சொல்ல முடியும்: “உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது.”—சங். 40:8.
9. நம் மனசாட்சியை யெகோவாவின் நெறிமுறைகளுக்கு இசைவாக நாம் எப்படிக் கொண்டுவரலாம், அப்படிச் செய்வது ஏன் முக்கியமானது?
9 கடவுளுடைய சட்டங்கள் நமக்கு ஏன் பயனுள்ளது என்பதை சங்கீதக்காரனைப் போலவே நாமும் பகுத்தறிய வேண்டும்; இதற்கு, பைபிளில் வாசிக்கும் விஷயங்களை ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். உதாரணமாக, யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கும் ஒரு விஷயத்தைப்பற்றி வாசிக்கும்போது, நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘இந்தச் சட்டம் அல்லது நியமம் ஏன் ஞானமானது? இதற்குக் கீழ்ப்படிவது எனக்கு எந்தவிதத்தில் நன்மையாக இருக்கும்? இந்த விஷயத்தில் கடவுளுடைய அறிவுரையை அசட்டை செய்தவர்கள் என்ன மோசமான விளைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள்?’ இப்படிச் சிந்தித்து, நம் மனசாட்சியை யெகோவாவின் வழிகளுக்கு இசைவாகக் கொண்டுவந்தால், அவருடைய சித்தத்திற்கு ஏற்ற தீர்மானங்களை நம்மால் செய்ய முடியும். ‘யெகோவாவுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொண்டு,’ நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருக்குத் தொடர்ந்து கீழ்ப்படிய முடியும். (எபே. 5:17) இப்படிச் செய்வது எப்போதும் அவ்வளவு சுலபமல்ல.
யெகோவாவின் அதிகாரத்தை மட்டம்தட்ட சாத்தான் முயலுகிறான்
10. கடவுளுடைய அதிகாரத்தை மட்டம்தட்ட சாத்தான் முயன்றிருக்கிற ஒரு வழி என்ன?
10 கடவுளின் அதிகாரத்தை மட்டம்தட்ட சாத்தான் காலங்காலமாக முயன்று வந்திருக்கிறான். அவனுடைய சுதந்திர மனப்பான்மை பல வழிகளில் தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக, திருமணம் என்ற தெய்வீக ஏற்பாடு அவமதிக்கப்படுவதைக் கவனியுங்கள். சிலர் மணம்புரியாமல் சேர்ந்துவாழ விரும்புகிறார்கள். மற்றவர்களோ, தங்களுடைய திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள வழிதேடுகிறார்கள். ஒரு பிரபல நடிகை சொன்னதை இந்த இருசாராரும் ஒருவேளை ஒத்துக்கொள்ளலாம். அவர் இவ்வாறு சொன்னார்: “ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது.” “யாருமே ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வதாகவோ, அப்படி வாழ விரும்புவதாகவோ எனக்குத் தெரியவில்லை” என்றும் சொன்னார். புகழின் உச்சியிலிருந்த மற்றொரு நடிகர், பலமுறை தன்னுடைய மணவாழ்வில் ஏற்பட்ட தோல்வியை மனதில் வைத்து இதேவிதமாகக் குறிப்பிட்டார்: “காலம் முழுக்க ஒருவரோடுதான் வாழவேண்டும் என்ற சுபாவம் நமக்குள் இருப்பதாகவே எனக்குத் தெரியவில்லை.” எனவே, நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘திருமணத்தைக் குறித்ததில் யெகோவாவின் அதிகாரத்தை நான் ஏற்றுக்கொள்கிறேனா, அல்லது இந்த உலகின் அலட்சிய மனப்பான்மை என்னையும் தொற்றியிருக்கிறதா?’
11, 12. (அ) யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வது இளைஞர்களுக்கு ஏன் கடினமாக இருக்கலாம்? (ஆ) யெகோவாவின் சட்டங்களையும் நியமங்களையும் அவமதிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதற்கு ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுங்கள்.
11 நீங்கள் யெகோவாவின் அமைப்பில் இருக்கிற ஓர் இளைஞரா? அப்படியென்றால் யெகோவாவின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனமாக இருக்காது என நீங்கள் நினைக்க வேண்டுமென்று சாத்தான் ரொம்பவே விரும்புகிறான். ‘பாலியத்துக்குரிய இச்சைகளாலும்’ நண்பர்களின் செல்வாக்காலும், கடவுளுடைய சட்டங்கள் உங்களை அளவுக்குமீறி கட்டுப்படுத்துவது போல் நீங்கள் உணரலாம். (2 தீ. 2:22) அப்படிப்பட்ட எண்ணத்திற்கு இடமளிக்காதீர்கள். கடவுளுடைய நெறிமுறைகளில் பொதிந்திருக்கும் ஞானத்தைக் கண்டறிய முயலுங்கள். உதாரணமாக, “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 6:18) ஆகவே, இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்தச் சட்டம் ஏன் ஞானமானது? இதற்குக் கீழ்ப்படிவதால் எனக்கு என்ன நன்மை?’ கடவுளுடைய அறிவுரையை அசட்டை செய்ததால் கடும் வேதனைகளை அனுபவித்த சிலரை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். அவர்கள் உண்மையில் சந்தோஷமாக இருக்கிறார்களா? யெகோவாவின் அமைப்பில் இருந்த சமயத்தைக் காட்டிலும் இப்போது அவர்கள் அதிக திருப்தியாக வாழ்கிறார்களா? கடவுளுடைய ஊழியர்களுக்குக் கிடைக்காத ஏதோவொரு சந்தோஷம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதா?—ஏசாயா 65:14-ஐ வாசியுங்கள்.
12 ஷேரன் என்ற கிறிஸ்தவ பெண் சொன்னதைக் கவனியுங்கள்: “யெகோவாவின் சட்டங்களை அவமதித்ததால் எய்ட்ஸ் என்ற கொடிய வியாதி எனக்கு வந்துவிட்டது. பல வருடங்களாக யெகோவாவின் சேவையில் செலவிட்ட அந்த இனிமையான காலங்களை நான் அடிக்கடி யோசித்துப் பார்க்கிறேன்.” யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதையும் அவற்றை மிக உயர்வாய் கருதியிருக்க வேண்டும் என்பதையும் அவள் புரிந்துகொண்டாள். யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதால் நமக்குத்தான் பாதுகாப்பு, அல்லவா? இதை எழுதி ஏழே வாரங்களில் ஷேரன் இறந்துவிட்டாள். இந்தப் பொல்லாத உலகத்தோடு கைகோர்த்துக்கொள்பவர்களுக்கு சாத்தானால் எவ்வித நன்மையும் செய்ய முடியாது என்பதை அவளுடைய சோக அனுபவம் தெளிவாகக் காட்டுகிறது. ‘பொய்க்குப் பிதாவாயிருக்கிற’ பிசாசு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறான். ஏவாளிடம் அவன் தந்த வாக்குறுதியைப் போலவே, அவையெல்லாம் காற்றோடு காற்றாக போய்விடுகின்றன. (யோவா. 8:44) உண்மையில், யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதே நமக்கு எப்போதும் சிறந்தது.
சுதந்திர மனப்பான்மை தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்
13. எந்த விஷயத்தில் சுதந்திர மனப்பான்மை நமக்குள் தலைதூக்காதபடி நாம் காத்துக்கொள்ளவேண்டும்?
13 யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் சுதந்திர மனப்பான்மை நமக்குள் தலைதூக்காதபடி கவனமாய் இருக்க வேண்டும். நமக்கு அகந்தை வந்துவிட்டால், ‘யாருடைய அறிவுரையும் எனக்குத் தேவையில்லை’ என்ற எண்ணம் நமக்குள் எழலாம். உதாரணமாக, கடவுளுடைய மக்களை முன்நின்று நடத்துபவர்கள் தரும் அறிவுரையை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஏற்ற வேளையில் ஆன்மீக உணவை அளிப்பதற்கு உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பை யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். (மத். 24:45-47, NW) இந்த அடிமை வகுப்பின் மூலமாகவே இன்று யெகோவா நம்மைக் கவனித்துக்கொள்கிறார் என்பதை நாம் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். உண்மையுள்ள அப்போஸ்தலரைப்போல் நாம் இருக்க வேண்டும். சீஷர்களில் சிலர் இயேசுவை விட்டுப் பின்வாங்கியபோது, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ” என்று அவர் தம்முடைய அப்போஸ்தலரிடம் கேட்டார். “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்று பேதுரு பதிலளித்தார்.—யோவா. 6:66-68.
14, 15. பைபிளின் அறிவுரைக்கு நாம் ஏன் தாழ்மையுடன் கீழ்ப்படிய வேண்டும்?
14 யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில் அவருடைய வார்த்தையிலுள்ள அறிவுரைக்கு இசைவாக நடப்பதும் உட்பட்டுள்ளது. உதாரணமாக, ‘விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருங்கள்’ என்று உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் நம்மை எச்சரித்து வருகிறார்கள். (1 தெ. 5:6) இந்தக் கடைசி நாட்களில் அநேகர் “தற்பிரியராயும், பணப்பிரியராயும்” இருப்பதால் இது காலத்திற்கேற்ற அறிவுரையாக இருக்கிறது. (2 தீ. 3:1, 2) எங்கும் பரவியிருக்கிற இதுபோன்ற மனநிலை நம்மையும் பாதிக்குமா? ஆம், பாதிக்கும். கடவுளுடைய சேவையுடன் சம்பந்தப்படாத இலக்குகளை வைத்தால் ஆன்மீக ரீதியில் நாம் மந்தமாகிவிடலாம், அல்லது பொருள் சேர்ப்பதிலேயே முழுமூச்சாக இறங்கிவிடலாம். (லூக். 12:16-21) எனவே, சாத்தானின் உலகில் கொடிகட்டிப் பறக்கிற தன்னலமான வாழ்க்கைப் போக்கைத் தவிர்த்து பைபிளின் அறிவுரைபடி நடப்பது எவ்வளவு ஞானமானது!—1 யோ. 2:16.
15 உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரிடமிருந்து வரும் ஆன்மீக உணவு நியமிக்கப்பட்ட சபை மூப்பர்களின் வாயிலாக நமக்குக் கிடைக்கிறது. “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே” என்று பைபிள் அறிவுரை கூறுகிறது. (எபி. 13:17) சபை மூப்பர்கள் தவறே செய்யாதவர்கள் என இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை! அவர்களிடமுள்ள குறைகள் மனிதருக்குத் தெரிவதைக் காட்டிலும் கடவுளுக்கு நன்றாகத் தெரியும். என்றாலும், அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். மூப்பர்கள் அபூரணர்களாக இருக்கிறபோதிலும், அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பது யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது.
மனத்தாழ்மை—ஏன் முக்கியம்?
16. கிறிஸ்தவ சபையின் தலைவரான இயேசுவுக்கு நாம் எப்படி மரியாதை காட்டலாம்?
16 இயேசுவே உண்மையில் சபையின் தலைவராக இருக்கிறார் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. (கொலோ. 1:18) நாம் நியமிக்கப்பட்ட மூப்பர்களை ‘உயர்வாய் கருதி’ அவர்களுக்கு மனத்தாழ்மையோடு கீழ்ப்படிவதற்கு இது ஒரு காரணமாய் இருக்கிறது. (1 தெ. 5:12, 13, பொ.மொ.) அதேசமயம், மூப்பர்களும் சொந்தக் கருத்துகளை அல்ல, கடவுளுடைய கருத்துகளையே சபையினருக்குக் கற்பிக்க கவனமாய் இருக்கவேண்டும். இதன்மூலம் தங்களுடைய கீழ்ப்படிதலை இவர்களும் காண்பிக்கமுடியும். தங்களுடைய சொந்த அபிப்பிராயத்தை வலியுறுத்துவதற்காக “எழுதப்பட்டதற்கு மிஞ்சி” போகக்கூடாது.—1 கொ. 4:6.
17. பேரும் புகழும் பெறுவதற்கான ஆசை ஏன் ஆபத்தானது?
17 தற்புகழை நாடுவதைக் குறித்து சபையிலுள்ள ஒவ்வொருவருமே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். (நீதி. 25:27) அப்போஸ்தலனாகிய யோவானின் காலத்தில் வாழ்ந்த ஒரு சீடருக்கு இதுவே கண்ணியாக இருந்தது. அவரைப்பற்றி யோவான் இவ்வாறு எழுதினார்: “அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன்.” (3 யோ. 9, 10) இதில் நமக்கும் ஒரு பாடம் இருக்கிறது. பேரும் புகழும் பெறுவதற்கான ஆசை நமக்குள் கொஞ்சம் துளிர்விட்டாலும் அதை நாம் வேரோடு பிடுங்கிவிடவேண்டும்; இப்படிச் செய்ய நல்ல காரணம் இருக்கிறது. ஏனென்றால் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.” யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் அகந்தை என்னும் கண்ணியில் சிக்கிவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், இல்லையென்றால் அவர்கள் அவமானத்திற்கே ஆளாவார்கள்.—நீதி. 11:2; 16:18.
18. யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள எது நமக்கு உதவும்?
18 ஆம், இந்த உலகின் சுதந்திர மனப்பான்மையை எதிர்ப்பதும் யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதும் உங்களுடைய குறிக்கோளாக இருக்கட்டும். யெகோவாவைச் சேவிப்பது உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்பதை அவ்வப்போது நன்றியுடன் சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் யெகோவாவின் மக்களோடு இருப்பதே, அவருடைய சக்தியின் மூலமாக அவர் உங்களை தம்வசம் இழுத்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. (யோவா. 6:44) கடவுளுடன் உள்ள பந்தத்தை ஒருபோதும் துச்சமாக நினைக்காதீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சுதந்திர மனப்பான்மையைத் தவிர்த்து யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதைக் காட்டுவதற்கு கடினமாக முயலுங்கள்.
நினைவிருக்கிறதா?
• யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வது எதை உட்படுத்துகிறது?
• நம்முடைய பகுத்தறியும் ஆற்றல்களைப் பயிற்றுவிப்பது யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதோடு எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது?
• கடவுளுடைய அதிகாரத்தை மட்டம்தட்ட சாத்தான் எந்தெந்த விதங்களில் முயலுகிறான்?
• யெகோவாவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மனத்தாழ்மை ஏன் அவசியம்?
[பக்கம் 18-ன் படம்]
“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது”
[பக்கம் 20-ன் படம்]
யெகோவாவின் நியமங்களுக்கு கீழ்ப்படிவதே எப்போதும் ஞானமானது