உங்கள் திட்டமும் கடவுளின் நோக்கமும் ஒத்துப்போகிறதா?
கிளார்க் என்ற கொட்டை உடைப்பான் இன்னிசை பாடிக்கொண்டு வட அமெரிக்காவின் மேற்கத்திய காடுகளில் இங்குமங்கும் சிட்டாக அலைந்து திரிவதை நீங்கள் பார்க்கலாம். இந்தச் சாம்பல் நிற பறவை வருடத்திற்குக் கிட்டத்தட்ட 33,000 விதைகளைச் சேகரித்து, சுமார் 2,500 இடங்களில் புதைத்து வைக்கிறது. கடுங்குளிர் காலத்திற்காக இவற்றைச் சேமித்து வைக்கிறது. எதிர்காலத்திற்காகத் திட்டமிடும் இந்தப் பறவை இயல்பாகவே ‘மகா ஞானமுள்ளதாய்’ விளங்குகிறது.—நீதிமொழிகள் 30:24.
மனிதனோ இதைவிட அசாதாரண திறமை படைத்தவன். யெகோவாவின் பூமிக்குரிய படைப்புகளிலேயே மனிதனால் மட்டுமே கடந்தகால அனுபவத்திலிருந்து பாடம் படிக்க முடியும்; கற்றுக்கொண்ட அந்தப் பாடங்களை வைத்து அவனால் எதிர்காலத்திற்காகத் திட்டமிடவும் முடியும். “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்” என்றார் ஞானியான சாலொமோன் ராஜா.—நீதிமொழிகள் 19:21.
அப்படியிருந்தாலும், எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதில் மனிதருக்கு வரம்பு இருக்கிறது; அவர்கள் ஊகத்தின் அடிப்படையில்தான் திட்டங்கள் போட முடியும். உதாரணத்திற்கு, நாளை சூரியன் உதிக்கும்; நீங்கள் உயிரோடிருப்பீர்கள் என்று நினைத்து அடுத்த நாளுக்குரிய வேலைகளைத் திட்டமிடுகிறீர்கள். சூரியனின் உதயம் என்னவோ நிச்சயம்; ஆனால், நீங்கள் உயிரோடிருப்பீர்களா என்பது நிச்சயமில்லை. அதனால்தான் பைபிள் எழுத்தாளர் யாக்கோபு, “நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே!” என்று சொன்னார்.—யாக்கோபு 4:13, 14, பொது மொழிபெயர்ப்பு.
ஆனால், யெகோவா தேவனுக்கு இப்படிப்பட்ட வரம்புகள் இல்லை. ‘பின் நிகழவிருப்பதைத் தொடக்கத்திலே’ அவர் அறிந்திருக்கிறார். அவருடைய திட்டம் நிச்சயம் நிறைவேறும்; எதுவும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. “என் திட்டம் நிலைத்திருக்கும்; என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்” என்று அவர் சொல்கிறார். (ஏசாயா 46:10, பொ.மொ.) அப்படியென்றால், மனிதரின் திட்டங்கள் கடவுளுடைய நோக்கத்துடன் முரண்பட்டால் என்ன ஆகும்?
மனிதருடைய திட்டங்கள் கடவுளுடைய நோக்கத்தைப் புறக்கணித்தால் . . .
சுமார் 4,000 வருடங்களுக்கு முன் பாபேல் கோபுரத்தைக் கட்டத் தொடங்கியவர்கள் மனித இனம் பூமியெங்கும் பரவிச் செல்வதைத் தடுத்து நிறுத்த திட்டமிட்டார்கள். “நமக்காக நாம் ஒரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேண்டும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்” என்று அவர்கள் சொன்னார்கள்.—ஆதியாகமம் 11:4, ஈஸி டு ரீட் வர்ஷன்.
ஆனால், பூமிக்கான கடவுளுடைய நோக்கம் இதற்கு நேர்மாறாக இருந்தது. “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” என்று நோவாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் கடவுள் கட்டளையிட்டிருந்தார். (ஆதியாகமம் 9:1) பாபேல் நகரத்தில் வாழ்ந்த கலகக்கார மக்களின் இலட்சியங்களை கடவுள் என்ன செய்தார்? அவர்களுடைய மொழியைக் குழப்பி, அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியாதபடி செய்தார். விளைவு? ‘யெகோவா அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.’ (ஆதியாகமம் 11:5–8) பாபேல் கோபுரத்தைக் கட்டத் தொடங்கியவர்கள் மதிப்புமிக்க ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார்கள். கடவுளுடைய நோக்கத்துடன் மனிதரின் திட்டங்கள் குறுக்கிடுகையில், ‘யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.’ (நீதிமொழிகள் 19:21) இவற்றை உங்கள் வாழ்க்கைக்குப் பாடமாக எடுத்துக்கொள்வீர்களா?
ஒரு பணக்காரனின் முட்டாள்தனம்
நீங்கள் ஒரு கோபுரத்தை கட்ட திட்டமிடாதிருக்கலாம். ஆனால், அநேகர் இன்று வங்கியில் பணத்தை சேர்க்கவும் ஏராளமான பொருள்களைக் குவிக்கவும் திட்டமிடுகிறார்கள்; வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சொகுசாக வாழ இதையெல்லாம் செய்கிறார்கள். ஒருவர் தன்னுடைய வேலையினால் கிடைக்கும் பலனை அனுபவிக்க விரும்புவது இயல்புதான். “எல்லோரும் உண்ணவும் குடிக்கவும் அவரது வேலையில் மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்” என சாலொமோன் எழுதினார். ஏனென்றால், “இவை தேவனிடமிருந்து வரும் அன்பளிப்புகள்.”—பிரசங்கி 3:13, ERV.
என்றாலும், இந்த அன்பளிப்புகளை நாம் பயன்படுத்தும் விதத்தை குறித்து யெகோவா நம்மிடம் கணக்கு கேட்பார். ஏறத்தாழ 2,000 வருடங்களுக்கு முன் ஓர் உவமையின் மூலம் இயேசு தம்முடைய சீடர்களுக்கு இந்தக் குறிப்பை வலியுறுத்தி இவ்வாறு சொன்னார்: ‘ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: [என் நெஞ்சமே,] உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேக பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.’ (லூக்கா 12:16–19) இந்தப் பணக்காரனுடைய இலட்சியம் நியாயமான இலட்சியம்தானே? ஆரம்பத்தில், குறிப்பிடப்பட்ட கிளார்க் பறவையைப் போல இந்த மனிதனும் எதிர்காலத்திற்காக இதையெல்லாம் செய்ததாகத் தெரிகிறது.
ஆனால், இந்த மனிதன் யோசித்த விதம் சரியில்லை. அவனைக் குறித்து இயேசு தொடர்ந்து சொல்வதாவது, ‘தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் [உயிர்] உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.’ (லூக்கா 12:20) வேலையும் அதிலிருந்து கிடைக்கும் பலன்களும் கடவுளிடமிருந்து வரும் அன்பளிப்புகள் என்று சாலொமோன் சொன்னதற்கு இயேசு எதிர்மறையாகச் சொன்னாரா? இல்லை. அப்படியானால், இயேசு இங்கு என்ன சொல்ல வருகிறார்? “கடவுளுடைய பார்வையில் செல்வந்தனாக இல்லாமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவனுக்கு இப்படித்தான் நடக்கும்” என்பதே இயேசுவின் குறிப்பு.—லூக்கா 12:21, NW.
நாம் திட்டமிடும்போது தம்மையும் தம்முடைய நோக்கத்தையும் மனதில் வைத்து செயல்பட வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்பதை ஜனங்களுக்கு இயேசு கற்பித்தார். அந்தச் செல்வந்தன், கடவுளிடம் நெருங்கிச் செல்லவும், ஞானத்தையும் அன்பையும் வளர்த்துக்கொள்ளவும் முயற்சி செய்திருந்தால் அவரிடம் செல்வந்தனாய் இருந்திருப்பான். இப்படிப்பட்ட காரியங்களில் அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது அவனுடைய வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது. தன்னுடைய விளைச்சலில் ஏழைகளுக்குச் சிலவற்றை கொடுக்கவோ யெகோவாவுக்கு காணிக்கை செலுத்தவோ அவனுக்கு மனமில்லை என்பதும் தெரிகிறது. அந்த மனிதனுக்கு இப்படிப்பட்ட ஆன்மீகச் சிந்தையோ மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்ற எண்ணமோ இருந்ததாகத் தெரியவில்லை. அவன் போட்ட திட்டத்தில் தன்னுடைய ஆசைகளுக்கும் சொகுசுகளுக்குமே முதலிடம் கொடுத்தான்.
இயேசு குறிப்பிட்ட இந்தச் செல்வந்தனைப் போலவே இன்றும் அநேகர் தங்கள் வாழ்க்கையில் இலட்சியங்களை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நாம் பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, நாமும் பொருளாசை எனும் வலையில் சிக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு, அன்றாட வாழ்க்கையின் கவலைகளும் தேவைகளும் ஆன்மீக விஷயங்களுக்குக் கவனம் செலுத்தாதபடி நம்மை செய்துவிடலாம். இந்த வலையில் சிக்காதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்?
“இயல்பான” வாழ்க்கைக்காக திட்டமிடுதல்
இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட ஐசுவரியனைப் போல் இல்லாமல், நீங்கள் ஒருவேளை பணப் பிரச்சினையுடன் போராடிக்கொண்டிருக்கலாம். உங்களுக்கு திருமணமாகியிருந்தால் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய திட்டமிடலாம், முடிந்தவரை, உங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வியைக் கொடுக்க விரும்பலாம். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், மற்றவர்களுக்கு பாரமாய் இல்லாமல் சொந்த காலில் நிற்க ஒரு வேலை தேடிக்கொண்டிருக்கலாம் அல்லது இருக்கும் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கலாம். இவை அனைத்தும் சிறந்த இலட்சியங்களே.—2 தெசலோனிக்கேயர் 3:10–12; 1 தீமோத்தேயு 5:8.
என்றாலும், வேலை செய்வது, சாப்பிடுவது, குடிப்பது போன்ற இயல்பான காரியங்கள்கூட கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக வாழாதபடி ஒருவரை செய்துவிடக்கூடும். எப்படி? அதற்கு இயேசு விடையளிக்கிறார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு [அதாவது, பெருவெள்ளத்துக்கு] முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”—மத்தேயு 24:37–39.
பெருவெள்ளத்துக்கு முன்பு வாழ்ந்த ஜனங்கள் வாழ்க்கையைச் சந்தோஷமாய் அனுபவித்து மகிழ்ந்தார்கள். அது இயல்பான வாழ்க்கை என்றே அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் செய்த தவறு என்னவென்றால், கடவுளுடைய நோக்கத்தை, அதாவது ஒரு பெருவெள்ளத்தினால் பொல்லாத மக்கள் அனைவரையும் அழிப்பதற்கான அவருடைய நோக்கத்தை, ‘உணர’ தவறினார்கள். நோவாவின் வாழ்க்கை முறை இயல்புக்கு மாறானதாய் இருந்ததாக அவர்கள் கருதினார்கள் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், பெருவெள்ளம் வந்தபோது நோவா மற்றும் அவரது குடும்பத்தாருடைய வாழ்க்கை முறையே ஞானமானதென நிரூபிக்கப்பட்டது.
நமக்கு இருக்கும் அனைத்து அத்தாட்சிகளும் நாம் முடிவு காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று நிரூபிக்கின்றன. (மத்தேயு 24:3–12; 2 தீமோத்தேயு 3:1–5) விரைவில் கடவுளுடைய அரசாங்கம், பொல்லாத சமுதாயத்தை ‘நொறுக்கி, நிர்மூலமாக்கும்.’ (தானியேல் 2:44) அந்த அரசாங்கம் இந்தப் பூமியை அழகிய பூந்தோட்டமாக மாற்றும். அது, நோய் நொடிகளுக்கும் மரணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும். (ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3–5) பூமியிலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் ஒருமித்து வாழும்; பசி பட்டினியிலிருந்தும் விடுதலையடையும்.—சங்கீதம் 72:16; ஏசாயா 11:6–9.
ஆனால், யெகோவா இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு, தம்முடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி ‘சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்பட’ வேண்டுமென நோக்கம் கொண்டுள்ளார். (மத்தேயு 24:14) கடவுளுடைய இந்த நோக்கத்திற்கு இசைவாக, சுமார் 70 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் 236 நாடுகளில் 400-க்கும் அதிகமான மொழிகளில் நற்செய்தியை அறிவித்து வருகிறார்கள்.
இன்று உலக மக்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளின் வாழ்க்கை பாணி விசித்திரமாகத் தோன்றலாம்; ஏன், சில சமயங்களில் கேலியாகவும் தோன்றலாம். (2 பேதுரு 3:3, 4) பெருவெள்ளத்துக்கு முன்பு வாழ்ந்த மக்களைப் போலவே இன்றும் அநேகர் அன்றாட வாழ்க்கையில் மூழ்கிப்போயிருக்கிறார்கள். இன்றைய சமுதாயம் இயல்பாய் கருதும் வாழ்க்கை பாணியைப் பின்பற்றாதவர்களை பைத்தியக்காரர்களென அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கடவுளுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்களின் பார்வையில், அவருடைய சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களே ஞானமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
எனவே, நீங்கள் பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, அல்லது அதற்கு இடைப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, எதிர்காலத்திற்காக உங்களுடைய திட்டங்களை அவ்வப்போது அலசி ஆராய்வது ஞானமானதாகும். அப்படிச் செய்யும்போது, ‘என்னுடைய திட்டங்கள் கடவுளுடைய நோக்கத்துடன் ஒத்திருக்கிறதா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (w08 7/1)
[பக்கம் 9-ன் படம்]
கடவுளுடைய நோக்கத்துடன் மனிதரின் திட்டங்கள் குறுக்கிடுகையில், யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்
[பக்கம் 10-ன் படம்]
இயேசுவின் உவமையில் வரும் செல்வந்தன் திட்டம் போட்டபோது கடவுளுடைய நோக்கத்தை மனதில் வைக்க தவறிவிட்டான்