வீட்டுக்கு வீடு ஊழியம் இப்போது ஏன் முக்கியம்?
“தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.”—அப். 5:42.
1, 2. (அ) யெகோவாவின் சாட்சிகள் முக்கியமாக எந்த முறையில் ஊழியம் செய்கிறார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எவற்றைப் பற்றிச் சிந்திக்கப்போகிறோம்?
நேர்த்தியாக உடையணிந்த இருவர் ஒரு வீட்டுக்குச் செல்கிறார்கள்; பைபிளிலிருந்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை வீட்டுக்காரரிடம் சுருக்கமாகச் சொல்கிறார்கள். இந்தக் காட்சியை உலகில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலுமே சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். வீட்டுக்காரர் அந்தச் செய்தியில் ஆர்வம் காட்டினால், பைபிள் பிரசுரங்களை அவருக்கு அளித்து, வீட்டிலேயே பைபிளைப் படிப்பதற்கான ஏற்பாடுபற்றிச் சொல்வார்கள். பிறகு அடுத்த வீட்டிற்குச் செல்வார்கள். நீங்கள் இந்த வேலையைச் செய்கையில், மக்களிடம் பேசுவதற்கு முன்னரே அவர்கள் உங்களை யெகோவாவின் சாட்சி என்று பெரும்பாலும் அடையாளம் கண்டுகொள்வதைக் கவனித்திருக்கலாம். ஆம், வீட்டுக்கு வீடு ஊழியம் நமது முத்திரையாகவே ஆகியிருக்கிறது.
2 பிரசங்கித்துச் சீஷராக்கும்படி இயேசு கொடுத்த வேலையை நாம் பல்வேறு முறைகளில் செய்கிறோம். (மத். 28:19, 20) சந்தைகளிலும், தெருக்களிலும், மற்ற பொதுவிடங்களிலும் சாட்சி கொடுக்கிறோம். (அப். 17:17) தொலைபேசி மூலமாகவும் கடிதம் மூலமாகவும் அநேகருக்குச் சாட்சி கொடுக்கிறோம். அன்றாட அலுவல்களில் நாம் சந்திப்பவர்களிடம் பைபிள் சத்தியங்களைப் பேசுகிறோம். நமக்கென்று அதிகாரப்பூர்வமான ஓர் இணையதளமும் இருக்கிறது; இது, பைபிள் சார்ந்த தகவல்களை 300-க்கும் அதிகமான மொழிகளில் வழங்குகிறது.a இந்த எல்லா முறைகளும் நல்ல பலன்களைத் தருகின்றன. என்றாலும், பெரும்பாலான இடங்களில், வீட்டுக்கு வீடு ஊழியத்தின் மூலமாகவே முக்கியமாக நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. எதன் அடிப்படையில் இந்த முறை பின்பற்றப்படுகிறது? இது, கடவுளுடைய மக்கள் இன்று பரவலாகப் பயன்படுத்தும் முறையாக ஆனது எப்படி? இந்த முறையைப் பின்பற்றுவது இப்போது ஏன் முக்கியம்?
அப்போஸ்தலர் செய்த முறை
3. பிரசங்கிப்பதுபற்றி தம் அப்போஸ்தலருக்கு இயேசு என்ன அறிவுரைகளை வழங்கினார், அவர்கள் பிரசங்கிக்க வேண்டிய விதத்தைப் பற்றி இவை எதைச் சுட்டிக் காட்டுகின்றன?
3 வீட்டுக்கு வீடு பிரசங்கிக்கும் முறை வேதப்பூர்வமானது. தம் அப்போஸ்தலரைப் பிரசங்கிப்பதற்கு அனுப்பியபோது, இயேசு அவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: ‘எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரியுங்கள்.’ பாத்திரமானவர்களை அவர்கள் எவ்வாறு தேடினார்கள்? மக்களுடைய வீடுகளுக்குச் செல்லுமாறு இயேசு அவர்களிடம் கூறினார். ‘ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது’ என்று அவர் சொன்னார். யாராவது தங்கள் வீட்டிற்கு அழைத்தால்தான் செல்ல வேண்டும் என்று அவர்கள் காத்திருந்தார்களா? இயேசு அடுத்ததாகச் சொன்னதைக் கவனியுங்கள்: “எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.” (மத். 10:11–14) இந்த அறிவுரைகள் எதைச் சுட்டிக் காட்டுகின்றன? அப்போஸ்தலர் ‘கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க’ சென்றபோது மக்கள் அழைக்காமலேயே அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.—லூக். 9:6.
4. வீட்டுக்கு வீடு ஊழியம் பற்றி பைபிளில் எங்கே திட்டவட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது?
4 அப்போஸ்தலர் வீட்டுக்கு வீடு பிரசங்கித்ததைப் பற்றி பைபிள் திட்டவட்டமாகச் சொல்கிறது. உதாரணமாக, அவர்களைக் குறித்து அப்போஸ்தலர் 5:42 இவ்விதமாகச் சொல்கிறது: ‘தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.’ சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு, எபேசு சபையின் மூப்பர்களிடம் அப்போஸ்தலன் பவுல் பேசுகையில், ‘பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து உபதேசம் பண்ணினேன்’ என்று நினைப்பூட்டினார். அந்த மூப்பர்கள் விசுவாசிகளாக ஆவதற்கு முன்பு அவர்களுடைய வீடுகளுக்கு பவுல் சென்றாரா? ஆம், சென்றதாகவே தெரிகிறது; ஏனென்றால், மற்ற காரியங்களோடுகூட, “தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும்” அவர்களுக்குப் போதித்தார். (அப். 20:20, 21) ராபர்ட்சனின் புதிய ஏற்பாட்டில் வார்த்தை வர்ணனைகள் அப்போஸ்தலர் 20:20 சம்பந்தமாகச் சொல்வதாவது: “பிரசங்கிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்த இவர் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கித்தார் என்பது கவனிக்கத்தக்கது.”
இன்றைய வெட்டுக்கிளி சேனை
5. பிரசங்க வேலையை யோவேல் தீர்க்கதரிசனம் எவ்வாறு சித்தரிக்கிறது?
5 முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட பிரசங்க வேலை, நம் நாளில் அது இன்னும் அதிகளவில் செய்யப்படும் என்பதற்கு ஒரு முற்காட்சியாகவே இருந்தது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் பிரசங்க வேலையை வெட்டுக்கிளி உட்பட பல பூச்சிகளின் நாசவேலைக்கு யோவேல் தீர்க்கதரிசி ஒப்பிட்டார். (யோவே. 1:4) முன்னேறிச் செல்லும் ஒரு சேனையைப்போல, வெட்டுக்கிளிகள் தடைகளைத் தகர்த்து வீடுகளுக்குள் நுழைந்து, அவை செல்லும் வழியில் உள்ளவற்றையெல்லாம் தின்றுதீர்த்துவிடும். (யோவேல் 2:2, 7-9-ஐ வாசியுங்கள்.) தற்போது கடவுளுடைய மக்கள் விடாமுயற்சியுடனும் முழுமையாகவும் செய்துவரும் பிரசங்க வேலையை விளக்க எவ்வளவு தத்ரூபமான சித்தரிப்பு! அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களுடைய தோழர்களான “வேறே ஆடுகளும்” இந்தத் தீர்க்கதரிசனக் காட்சியை நிறைவேற்றி வருகிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தி வருகிற முறைகளிலேயே மிக முக்கியமானது வீட்டுக்கு வீடு ஊழியம்தான். (யோவா. 10:16) யெகோவாவின் சாட்சிகளாகிய நாம், அப்போஸ்தலர் பிரசங்கித்த முறையை எப்படிப் பின்பற்ற ஆரம்பித்தோம்?
6. 1922-ல் வீடு வீடாகச் சென்று பிரசங்கிப்பதற்கு எவ்வாறு ஊக்கம் அளிக்கப்பட்டது, ஆனால் சிலர் என்ன செய்தார்கள்?
6 பிரசங்க வேலையில் ஒவ்வொருவரும் ஈடுபடுவது அவசியமென 1919-லிருந்தே வலியுறுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஆகஸ்ட் 15, 1922 ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த “சேவை முக்கியம்” என்ற கட்டுரை, “ஆர்வத்துடன் வீடு வீடாகச் சென்று அச்சில் வடிக்கப்பட்ட செய்தியை மக்களிடம் பேசுவது, பரலோக ராஜ்யம் சமீபமென்று சாட்சி கொடுப்பது” ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டியது. வெவ்வேறு தலைப்புகளில் எப்படிப் பேசலாம் என்பது புல்லட்டின் (இப்போது, நம் ராஜ்ய ஊழியம்) என்ற இதழில் விலாவாரியாகக் கொடுக்கப்பட்டது. என்றாலும், ஆரம்பத்தில் வெகு சிலரே வீடு வீடாகச் சென்று பிரசங்கித்தார்கள். சிலர் அவ்வாறு செல்வதற்குத் தயக்கம் காட்டினார்கள். அவர்கள் பல விதங்களில் ஆட்சேபணை தெரிவித்தார்கள்; ஆனால், வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிப்பதைத் தரக்குறைவாக நினைத்ததே அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. வெளி ஊழியம் செய்வது அவசியமென திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டபோது, அவர்களில் அநேகர் யெகோவாவின் அமைப்பிலிருந்து படிப்படியாக விலகிவிட்டார்கள்.
7. எதற்கான தேவை 1950-களில் தெளிவாகத் தெரிந்தது?
7 காலம் செல்லச் செல்ல, பிரசங்க வேலையில் அதிகமதிகமானோர் கலந்துகொண்டார்கள். என்றாலும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒவ்வொருவருக்கும் கூடுதலான பயிற்சி தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. அமெரிக்காவிலிருந்த சூழ்நிலையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். 1950-களின் ஆரம்பத்தில், அந்நாட்டிலிருந்த சாட்சிகளில் 28 சதவீதத்தினர், கைப்பிரதிகளை வினியோகிப்பது, பத்திரிகைகளுடன் தெருக்களில் நிற்பது போன்ற அம்சங்களில் மட்டுமே ஈடுபட்டார்கள். 40 சதவீதத்திற்கும் மேலானோர் ஊழியத்தில் ஏனோதானோவென்று இருந்துவிட்டார்கள்; அவர்கள் மாதக்கணக்காக ஊழியத்தில் கலந்துகொள்ளவில்லை. வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் ஈடுபடுவதற்கு ஒப்புக்கொடுத்த எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் என்ன உதவி தேவைப்பட்டது?
8, 9. என்ன பயிற்சித் திட்டம் 1953-ல் ஆரம்பிக்கப்பட்டது, அதனால் என்ன பலன்கள் கிடைத்தன?
8 நியு யார்க் நகரில் 1953-ல் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், வீட்டுக்கு வீடு ஊழியத்தின் அவசியம் வலியுறுத்திக் காட்டப்பட்டது. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒவ்வொரு சாட்சியும் தவறாமல் ஈடுபடுவதற்கு உதவுவதே அனைத்துக் கிறிஸ்தவக் கண்காணிகளின் மிக முக்கிய வேலை என்பதாக சகோதரர் நேதன் எச். நார் அறிவித்தார். “நற்செய்தியை வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதில் ஒவ்வொருவரும் திறமை பெற்றிருக்க வேண்டும்” என்று அவர் சொன்னார். இதற்காக உலகளாவிய பயிற்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இதுவரை பங்குபெறாதிருந்தவர்கள், மக்களை வீடுகளில் சந்தித்து அவர்களுக்கு பைபிள் வசனங்களை விளக்கிக் காட்டுவதற்கும், அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
9 இந்தப் பயிற்சித் திட்டத்தினால் மிகச் சிறந்த பலன்கள் கிடைத்தன. பத்து வருடங்களுக்குள், உலகெங்கும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 100 சதவீதமும், மறு சந்திப்புகளில் 126 சதவீதமும், பைபிள் படிப்புகளில் 150 சதவீதமும் அதிகரிப்பு ஏற்பட்டது. இன்று, கிட்டத்தட்ட 70 லட்சம் ராஜ்ய பிரஸ்தாபிகள் ராஜ்ய நற்செய்தியை உலகெங்கும் பிரசங்கிக்கிறார்கள். இந்த அபார வளர்ச்சி, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடுவதற்குத் தம் மக்கள் எடுத்த முயற்சியை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார் என்பதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது.—ஏசா. 60:22.
உயிர்பிழைக்க மக்களுக்குக் குறியிடுதல்
10, 11. (அ) எசேக்கியேலுக்குக் கொடுக்கப்பட்ட என்ன தரிசனம் எசேக்கியேல் 9-ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது? (ஆ) அந்தத் தரிசனம் இன்று எவ்வாறு நிறைவேறி வருகிறது?
10 எசேக்கியேல் தீர்க்கதரிசிக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தரிசனத்திலிருந்து வீட்டுக்கு வீடு ஊழியத்தின் முக்கியத்துவத்தை நாம் காண முடியும். அந்தத் தரிசனத்தில், ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்திருந்த ஆறு மனிதரையும், சணல்நூல் அங்கி தரித்துத் தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருந்த ஏழாம் மனிதனையும் எசேக்கியேல் காண்கிறார். அந்த ஏழாவது மனிதனிடம், “நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம்போடு” என்று சொல்லப்பட்டது. அந்த வேலை முடிந்ததும், குறியிடப்படாத எல்லாரையும் வெட்டி வீழ்த்தும்படி ஆயுதங்களைக் கையில் வைத்திருந்த அந்த ஆறு மனிதருக்குக் கட்டளையிடப்பட்டது.—எசேக்கியேல் 9:1–6-ஐ வாசியுங்கள்.
11 இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில், “சணல்நூல் அங்கி தரித்த” அந்த மனிதன், 1,44,000 பேரில் மீந்தவர்களைக் குறிக்கிறான் என்று புரிந்துகொள்கிறோம். பிரசங்கித்துச் சீஷராக்கும் வேலையின் மூலம், கிறிஸ்துவின் ‘வேறே ஆடுகளாக’ ஆகிவருவோருக்கு இந்த வகுப்பார் அடையாளப்பூர்வமாகக் குறியிடுகிறார்கள். (யோவா. 10:16) அந்தக் குறி என்ன? ஆடுகளாகிய அவர்கள், ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்று இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகி, அவருடைய சுபாவத்தை அணிந்துகொண்டதற்குத் தெள்ளத்தெளிவான அத்தாட்சியே அந்தக் குறி. (எபே. 4:20–24) செம்மறியாடுகள் போன்ற இவர்கள், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களோடு சேர்ந்து ஒரே மந்தையாகி, இன்னும் அநேகருக்குக் குறிபோடும் இந்த முக்கியமான வேலையில் உதவுகிறார்கள்.—வெளி. 22:17.
12. நெற்றிகளில் குறிபோடுவதைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனம், செம்மறியாடு போன்றவர்களைத் தொடர்ந்து தேடுவதன் முக்கியத்துவத்தை எவ்வாறு விளக்கிக் காட்டுகிறது?
12 பெருமூச்சுவிட்டு அழுகிற மக்களைத் தொடர்ந்து தேடுவது ஏன் அவசரம் என்பதற்கான ஒரு காரணத்தை எசேக்கியேலின் தரிசனம் சுட்டிக்காட்டுகிறது. அது என்னவெனில், மக்களுடைய உயிர் ஆபத்தில் இருக்கிறது. வெகு விரைவில், ஆயுதம் தரித்த அந்த ஆறு மனிதர்களால் குறிக்கப்பட்ட யெகோவாவுடைய பரலோக சேனைகள், அடையாளப்பூர்வ குறியைப் பெற்றிராதவர்களை அழித்துப்போடுவார்கள். கர்த்தராகிய இயேசு தமது “வல்லமையின் தூதரோடு” வந்து, ‘தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்துவார்’ என்று வரவிருக்கும் அந்த நியாயத்தீர்ப்பைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தெ. 1:7, 8) நற்செய்திக்கு எப்படிச் செவிகொடுக்கிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே மக்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்பதைக் கவனியுங்கள். ஆகவே, கடவுளுடைய செய்தியின் வலிமை குறையாமல் அதை முடிவுவரை தொடர்ந்து அறிவிக்க வேண்டும். (வெளி. 14:6, 7) யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் அனைவருக்கும் பெரும் பொறுப்பு இருப்பதை இது உணர்த்துகிறது.—எசேக்கியேல் 3:17–19-ஐ வாசியுங்கள்.
13. (அ) அப்போஸ்தலன் பவுல் தனக்கு என்ன பொறுப்பு இருப்பதாக உணர்ந்தார், ஏன்? (ஆ) உங்களுடைய பிராந்தியத்தில் உள்ள மக்களிடம் உங்களுக்கு என்ன பொறுப்பு இருப்பதாக நீங்கள் உணருகிறீர்கள்?
13 நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கான பொறுப்பு தனக்கிருப்பதை அப்போஸ்தலன் பவுல் உணர்ந்தார். அதனால்தான், “கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்ற மட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்” என்று அவர் எழுதினார். (ரோ. 1:14, 15) பவுல், தனக்குக் காட்டப்பட்ட இரக்கத்திற்கு நன்றியுள்ளவராக இருந்தார்; ஆகவே, கடவுளுடைய அளவற்ற கருணையால் தான் பயனடைந்ததைப்போலவே மற்றவர்களும் பயனடைவதற்கு உதவ வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார். (1 தீ. 1:12–16) தான் சந்தித்த ஒவ்வொருவருக்கும் கடன்பட்டிருப்பதைப்போல உணர்ந்தார்; நற்செய்தியைச் சொல்வதன்மூலம் மட்டுமே அந்தக் கடனைத் தீர்க்க முடியும் என்று அவர் நினைத்தார். உங்களுடைய பிராந்தியத்தில் உள்ளவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறதைப் போல நீங்களும் உணருகிறீர்களா?—அப்போஸ்தலர் 20:26, 27-ஐ வாசியுங்கள்.
14. நாம் வெளியரங்கமாகவும் வீடு வீடாகவும் பிரசங்கிப்பதற்கு மிக முக்கியக் காரணம் என்ன?
14 மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதற்கு முக்கியமானதாய் இருந்தாலும், நாம் வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதற்கு அதைவிட ஒரு முக்கியக் காரணமும் இருக்கிறது. மல்கியா 1:11-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தில், “சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; ... என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்” என்று யெகோவா அறிவிக்கிறார். இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, யெகோவாவின் ஊழியர்கள் அகிலமெங்கும் அவருடைய பெயரை யாவரறியத் துதிக்கிறார்கள்; பிரசங்க வேலையில் தாழ்மையோடு ஈடுபடுவதன் மூலம் இதை அவர்கள் செய்கிறார்கள். (சங். 109:30; மத். 24:14) ஆகவே, யெகோவாவுக்கு “ஸ்தோத்திரபலியை” செலுத்துவதுதான் வெளியரங்கமாகவும் வீடு வீடாகவும் சென்று நாம் பிரசங்கிப்பதற்கு முக்கியக் காரணம்.—எபி. 13:15.
அதிமுக்கியமான சம்பவங்கள் விரைவில்
15. (அ) எரிகோ பட்டணத்தைச் சுற்றிவந்த இஸ்ரவேலர் ஏழாம் நாளில் எவ்வாறு தீவிரமாகச் செயல்பட்டார்கள்? (ஆ) பிரசங்க வேலை குறித்து இது எதைச் சுட்டிக் காட்டுகிறது?
15 பிரசங்க வேலை சம்பந்தமாக இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது? எரிகோ பட்டணத்தின் முற்றுகைபற்றி யோசுவா புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சம்பவத்தை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். கடவுள் எரிகோவை அழிப்பதற்குச் சற்று முன்பு என்ன நடந்ததென்பதை நினைத்துப் பாருங்கள்; ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் ஆறு நாட்கள் அந்தப் பட்டணத்தைச் சுற்றி வரும்படி இஸ்ரவேலருக்குச் சொல்லப்பட்டது. என்றாலும், ஏழாம் நாளில் அவர்கள் படுதீவிரமாகச் செயல்பட வேண்டியிருந்தது. யெகோவா யோசுவாவிடம், “பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும். அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போது ... ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்” என்று சொன்னார். (யோசு. 6:2–5) நாம் செய்கிற பிரசங்க வேலையும் அவ்வாறே தீவிரமடைவதற்குச் சாத்தியம் இருக்கிறது. ஆகவே, இந்த உலகம் அழிக்கப்படுவதற்குள்ளாக, கடவுளுடைய பெயருக்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் வரலாறு காணாத அளவுக்கு மாபெரும் சாட்சி கொடுக்கப்பட்டிருக்கும் என்பது உறுதி.
16, 17. (அ) ‘மிகுந்த உபத்திரவம்’ முடிவடைவதற்கு முன்பாக எது அறிவிக்கப்பட்டிருக்கும்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைச் சிந்திப்போம்?
16 நாம் அறிவிக்கும் செய்தி, “மகா ஆரவார” சத்தமாகக் கேட்கப்படும் காலம் வருமென்று நாம் எதிர்பார்க்கலாம். வெளிப்படுத்துதல் புத்தகத்தில் கடவுளுடைய வலிமையான நியாயத்தீர்ப்புச் செய்திகள், ‘தாலந்து நிறையான பெரிய கல்மழை’ போன்று அதாவது ஆலங்கட்டி மழை போன்று சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.b அதனால்தான், “அந்த வாதை மகா கொடிதாயிருந்தது” என்று வெளிப்படுத்துதல் 16:21 சொல்கிறது. கடவுளின் அந்த இறுதி நியாயத்தீர்ப்புச் செய்திகளை அறிவிப்பதில் வீட்டுக்கு வீடு ஊழியம் எந்தளவு முக்கியப் பங்கு வகிக்கும் என்பது இனிமேல்தான் நமக்குத் தெரியவரும். ஆனால், ‘மிகுந்த உபத்திரவம்’ முடிவதற்கு முன்பு இதுவரை பார்த்திராத அளவுக்கு யெகோவாவின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம்.—வெளி. 7:14; எசே. 38:23.
17 விரைவில் அதிமுக்கியமான சம்பவங்கள் நடைபெறுவதைக் காணக் காத்திருக்கிற நாம், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ராஜ்ய நற்செய்தியை ஆர்வத்துடன் தொடர்ந்து பிரசங்கிப்போமாக. இவ்வாறு செய்கையில் நாம் என்ன சவால்களைச் சந்திக்கிறோம், அவற்றை நாம் எவ்வாறு சமாளிக்கலாம்? இந்தக் கேள்விகளை நாம் அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a இணையதள முகவரி www.watchtower.org.
b கிரேக்க தாலந்து எனில், இந்த ஆலங்கட்டி ஒவ்வொன்றும் சுமார் 20 கிலோ எடையுள்ளதாய் இருக்கும்.
உங்கள் பதில்?
• வீடு வீடாய்ப் பிரசங்கிப்பதற்கு என்ன பைபிள் ஆதாரம் இருக்கிறது?
• நம் காலத்தில் வீட்டுக்கு வீடு ஊழியத்தின் முக்கியத்துவம் எவ்வாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது?
• யெகோவாவின் ஊழியர்களுக்கு பிரசங்கிக்கும் பொறுப்பு ஏன் இருக்கிறது?
• என்ன அதிமுக்கியமான சம்பவங்கள் விரைவில் நடக்கவிருக்கின்றன?
[பக்கம் 4-ன் படங்கள்]
அப்போஸ்தலன் பவுலைப்போல மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதை நீங்கள் உணருகிறீர்களா?
[பக்கம் 5-ன் படங்கள்]
சகோதரர் நார், 1953