தளராது வீடுவீடாகச் செல்லுதல்
1 பூர்வ இஸ்ரவேலில் பலிகள் நாள்தோறும் செலுத்தப்பட்டன. (யாத். 29:38-42) பலிபீடத்தின் நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும்படி வைக்கப்பட்டது; மேலெழும்பிக்கொண்டிருந்த புகை, யெகோவாவைப் பிரியப்படுத்தின “சுகந்த வாசனை”யாக இருந்தது. (யாத். 29:18) இன்று, ‘துதியின் பலியை, அதாவது, அவருடைய பெயருக்கு வெளிப்படையான அறிவிப்பு செய்யும் உதடுகளின் கனியைக் கடவுளுக்குச் செலுத்தும்படி,’ நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். (எபி. 13:15, NW) நியாயப்பிரமாணத்தால் கட்டளையிடப்பட்ட பலிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாம் தளராமல் யெகோவாவின் துதிகளைச் சொல்லிவருவதன்மூலம் அவரை வணங்குகிறோம்.—ஏசா. 43:21; அப். 5:42.
2 பூமியில் வாழ்ந்த எவருக்கும் மேலான மிகப் பெரிய சாட்சியாகிய இயேசு கிறிஸ்து, துதியின் பலிகளைச் செலுத்துவதன்மூலம் தூய்மையான வணக்கத்தை எவ்வாறு நாம் தொடர முடியும் என்பதை நமக்குக் கற்பித்தார். தம்முடைய சீஷர்கள் பிரசங்கித்த அந்தச் செய்திக்கு ஓர் அவசரம் இருந்ததென்று அவர்களுக்குக் கற்பித்தார். ஆட்களுடைய வீடுகளில் அவர்களிடம் நேராகப் பேசுவதே நற்செய்தியுடன் அவர்களை எட்டுவதற்கு மிக அதிக பயன்தரும் முறையென அவர் அறிந்திருந்தார். (மத். 10:7, 12) ஆகவே, வீடுவீடாகப் பிரசங்கிக்கும்படியான, கடவுளால் ஏவப்பட்ட அவருடைய வழிநடத்துதலை அப்போஸ்தலர் பின்பற்றினார்களென்று நாம் காண்கிறோம்.—அப். 20:20.
3 இன்றும் அவ்வாறே இருக்கிறது. இயேசுவின் சீஷராக, உண்மையான கிறிஸ்தவர்கள், வீடுவீடாக நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகின்றனர். அதற்காக நாம் ஒருவேளை கேலிசெய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும், லட்சக்கணக்கானோர் சத்தியத்தைக் கற்றிருக்கின்றனர், மேலும் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான புதிய சீஷர்கள் திரள் கூட்டத்தின் அணிவகுப்பில் சேர்ந்துகொண்டிருக்கின்றனர். இவ்வாறு இதுவே யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்குரிய அவருடைய வழியென அத்தாட்சியளிக்கின்றனர். அதனிமித்தமே நாம் அவருடைய ஊழியத்தில் விடாமுயற்சியுடன் நிலைத்திருக்கிறோம்.
4 வீடுவீடாகப் பிரசங்கிப்பதன் பயன்கள்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல . . . அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.” (அப். 10:34, 35) நம்முடைய பிராந்தியத்திலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் செல்வது பட்சபாதமில்லாமையைத் தெளிவாக மெய்ப்பித்துக் காட்டுகிறது, அதோடு ராஜ்ய செய்தியைத் தவறாமல் கேட்பதற்கு எல்லாருக்கும் வாய்ப்பளிக்கிறது. ஏற்றுக்கொள்பவர்களோ, அவரவருடைய தேவைகளுக்கேற்ப தனிப்பட்ட உதவியைப் பெறுகின்றனர்.
5 இளைஞரும் முதியோரும் உட்பட, புதியோராக இருப்போரும்கூட ஏறக்குறைய எல்லா பிரஸ்தாபிகளும் வீடுவீடாகச் செய்யும் இந்த ஊழியத்தில் பங்குகொள்ளலாம். இவ்வாறு ஒவ்வொருவரும் ‘இரட்சிப்புண்டாக யாவரறிய அறிக்கை செய்யலாம்.’ (ரோ. 10:10, NW) வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தில் மற்றவர்களோடு பங்குகொள்வது, அன்பும் ஒற்றுமையுமான கட்டுகளில் நம்மை ஒன்றுசேர இணைக்கிறது. அதே சமயத்தில், அக்கறையில்லாமையை அல்லது எதிர்ப்பை நாம் எதிர்ப்படுகையில் நம் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பும் நமக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு விசுவாசத்தை வெளிப்படையாய்க் காட்டுவது நம்மை ‘நாடகமேடைக்குரிய காட்சியாக்குகிறது.’ இது, பைபிளைக் கற்பிப்பதற்கு ஒழுங்குபடுத்தியமைக்கப்பட்ட ஓர் ஏற்பாட்டை நாம் கொண்டுள்ளோமெனவும் அதிலிருந்து தாங்கள் பயனடையலாமெனவும் நேர்மை மனமுள்ளோர் கண்டுணர உதவிசெய்கிறது. (1 கொ. 4:9) வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தை யெகோவா ஆசீர்வதிக்கிறாரென்றும் திரள் கூட்டத்தாரைத் தம்முடைய தூய்மையான வணக்கத்துக்குரிய ‘ஆலயத்துக்குக்’ கூட்டிச்சேர்ப்பதற்கு அதைப் பயன்படுத்துகிறாரென்றும் எல்லாம் தெளிவாகக் காட்டுகிறது.—ஏசா. 2:2-4.
6 சரித்திரத்தில் வேறு எந்தக் காலத்தையும் பார்க்கிலும் அதிகமாக இப்பொழுதே, ஆட்கள் இந்த ராஜ்ய செய்தியைக் கேட்பது அவசியம். போதும் என யெகோவா சொல்லும் வரையில் நாம் தளராமல் வீடுவீடாகப் பிரசங்கிப்பதில் தொடர்ந்திருப்போமாக. (ஏசா. 6:11) அவ்வாறு செய்வதால், இந்த முடிவின் காலத்தில் முக்கியமானதும் நன்மைபயக்குவதுமான வீடுவீடாகச் செய்யும் இந்த ஊழியத்தில் பங்குகொள்வதிலிருந்து வரும் மகிழ்ச்சியால் நாம் பலனளிக்கப்படுவோம்.—1 கொ. 15:58.