உள்ளப்பூர்வமான ஜெபத்திற்கு யெகோவா தரும் பதில்
‘யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணருவார்களாக.’—சங். 83:17.
1, 2. அநேகருக்கு என்ன அனுபவம் இருந்திருக்கிறது, என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு பெண்மணி தன் வீட்டின் அருகே நடந்த துயர சம்பவத்தால் மிகவும் மனமொடிந்து போயிருந்தார். ரோமன் கத்தோலிக்கராயிருந்த அவர் ஆறுதல்தேடி தன் சர்ச் பாதிரியிடம் சென்றார். அவரோ முகம்கொடுத்துக்கூட பேசவில்லை. அதனால் கடவுளிடம், “நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை . . . , ஆனால், நீங்கள் இருக்கிறீர்களென்று எனக்குத் தெரியும். உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவுங்களேன்!” என்று ஜெபம் செய்தார். கொஞ்ச நேரத்திலேயே, யெகோவாவின் சாட்சிகள் அவரைச் சந்தித்து, அவர் நாடிய ஆறுதலையும் அவர் தேடிய தகவலையும் அளித்தார்கள். கடவுளுடைய பெயர் யெகோவா என்று அவருக்குத் தெரிவித்தார்கள்; அதோடு, வேறு பல விஷயங்களையும் கற்றுக்கொடுத்தார்கள். அவற்றை அறிந்து அவர் மெய்சிலிர்த்துப் போனார். “இந்தக் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளத்தான் நான் சிறுவயதிலிருந்தே ஆசைப்பட்டேன்!” என்றார்.
2 இதுபோன்ற அனுபவம் அநேகருக்கு இருந்திருக்கிறது. பெரும்பாலும், அவர்கள் சங்கீதம் 83:17-ஐ பைபிளில் வாசிக்கும்போதுதான் கடவுளுடைய பெயரை முதன்முதலாகப் பார்த்திருக்கிறார்கள். “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி” என அந்த வசனத்தில் வாசிக்கிறோம். சரி, 83-ஆம் சங்கீதம் எதற்காக எழுதப்பட்டதென நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? யெகோவா ஒருவரே மெய்த் தேவன் என்று எல்லாரையும் ஒத்துக்கொள்ள வைக்கும் சம்பவங்கள் யாவை? இந்தச் சங்கீதத்திலிருந்து இன்று நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இக்கேள்விகளுக்கான விடைகளை இந்தக் கட்டுரையில் நாம் சிந்திப்போம்.a
யெகோவாவின் மக்களுக்கு எதிராகச் சதி
3, 4. சங்கீதம் 83-ஐ இயற்றியவர் யார், என்ன அச்சுறுத்தலைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்?
3 சங்கீதம் 83-ன் தலைப்பு கூறுகிறபடி, அது “ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு” ஆகும். இதை இயற்றியவர், லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆசாபின் பரம்பரையில் வந்தவரெனத் தெரிகிறது; இந்த ஆசாப், தாவீது ராஜாவின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த பிரபலமான இசைக் கலைஞர் ஆவார். இச்சங்கீதத்தில், யெகோவாவின் அரசாட்சியே உன்னதமானது என்பதை நிரூபிப்பதற்கும், அவரது பெயரை யாவருக்கும் தெரியப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி சங்கீதக்காரன் கெஞ்சி மன்றாடுகிறார். இந்தச் சங்கீதம் சாலொமோனின் மரணத்திற்குச் சற்றுப் பின்னரே இயற்றப்பட்டிருக்க வேண்டும். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனெனில், தாவீது மற்றும் சாலொமோனின் ஆட்சிக்காலத்தில் தீரு தேசத்துக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையே எந்தப் பகையும் இருக்கவில்லை. ஆனால், 83-ஆம் சங்கீதம் இயற்றப்பட்ட காலத்திற்குள் தீரு தேசத்தார் இஸ்ரவேலரின் எதிரிகளாகிவிட்டனர். அதோடு, அத்தேசத்தின் பகைவர்களோடு கூட்டுச் சேர்ந்துகொண்டனர்.
4 இஸ்ரவேலைச் சுற்றி அமைந்திருந்த பத்துத் தேசங்கள் கடவுளுடைய மக்களை அழிப்பதற்காகச் சதி செய்தன. இந்தத் தேசங்களின் பட்டியலைச் சங்கீதக்காரன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ‘ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடு கூடிய பெலிஸ்தரும், . . . அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்தார்கள்.’ (சங். 83:5, 6, 8) சரித்திரத்தில் நடைபெற்ற எந்தச் சம்பவத்தை இந்தச் சங்கீதம் குறிப்பிடுகிறது? யோசபாத் ராஜாவின் காலத்தில் அம்மோன், மோவாப், சேயீர் மலைத்தேசத்தார் அனைவரும் கூட்டுச் சேர்ந்து இஸ்ரவேலரைத் தாக்கிய சம்பவத்தை இந்தச் சங்கீதம் குறிப்பிடுவதாகச் சிலர் சொல்கிறார்கள். (2 நா. 20:1–26) மறுபட்சத்தில், இஸ்ரவேலருக்கும் அக்கம்பக்கத்து தேசத்தாருக்கும் இடையே காலங்காலமாக இருந்துவந்த பகைமையைக் குறிப்பிடுவதாக இன்னும் சிலர் சொல்கிறார்கள்.
5. சங்கீதம் 83-லிருந்து இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள்?
5 எதுவானாலும் சரி, தம்முடைய தேசத்தார் ஆபத்தான சூழ்நிலையில் இருந்தபோது யெகோவா தேவன் சங்கீதக்காரனுக்குத் தமது சக்தியை அருளி இந்தப் பாடலை எழுதும்படிச் செய்திருப்பதாகத் தெரிகிறது; இது ஜெபத்தின் வடிவில் எழுதப்பட்ட பாடலாகும். இந்தச் சங்கீதம், இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கும் உற்சாகம் அளிக்கிறது. ஏனெனில், தங்களைப் பூண்டோடு அழிக்கத் தீர்மானித்திருக்கும் பற்பல விரோதிகளிடமிருந்து இவர்களும் அடுத்தடுத்து எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இந்தச் சங்கீதம் நம்மைப் பலப்படுத்தும். ஏனெனில், கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் அவரை வணங்குகிற அனைவரையும் ஒழித்துக்கட்ட மாகோகு தேசத்தின் கோகு கடைசி முயற்சியாகத் தன் படைகளை அப்போது ஒன்றுதிரட்டுவான்.—எசேக்கியேல் 38:2, 8, 9, 16-ஐ வாசியுங்கள்.
பெரிதும் கவலை தந்த ஒரு விஷயம்
6, 7. (அ) இந்தச் சங்கீதத்தின் ஆரம்ப வசனங்களில் என்ன விஷயங்களுக்காக சங்கீதக்காரன் ஜெபிக்கிறார்? (ஆ) அவருக்குப் பெரிதும் கவலை தந்த விஷயம் எது?
6 சங்கீதக்காரன் ஜெபத்தில் தன் உணர்ச்சிகளையெல்லாம் கொட்டுவதைக் கவனியுங்கள்: “தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும். இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள். உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, . . . ஏகமன நிர்ணயமாய் ஆலோசனை செய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.”—சங். 83:1–3, 7.
7 சங்கீதக்காரனுக்குப் பெரிதும் கவலை தந்த விஷயம் எது? தானும் தன் குடும்பமும் காப்பாற்றப்படுவது பற்றி அவர் ரொம்பவே கவலைப்பட்டிருப்பார் என்பது உண்மைதான். இருந்தாலும், யெகோவாவின் பெயருக்கு ஏற்படும் நிந்தை பற்றியும் அவருடைய பெயரைத் தாங்கிய தேசத்தார் எதிர்ப்பட்ட அச்சுறுத்தல்கள் பற்றியுமே அவர் பெரிதும் கவலைப்பட்டதை அவருடைய ஜெபம் சுட்டிக்காட்டியது. இந்த உலகின் கடைசி நாட்களில் கஷ்டங்களைச் சகித்து வருகிற நாம் அனைவரும், இந்தச் சங்கீதக்காரனைப் போலவே சமநிலையான கண்ணோட்டத்தை வைத்திருப்போமாக.—மத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.
8. என்ன உள்நோக்கத்தோடு அந்தத் தேசத்தாரெல்லாம் இஸ்ரவேலுக்கு எதிராகச் சதித் திட்டம் போட்டார்கள்?
8 இஸ்ரவேலரின் விரோதிகள் சொன்னதை சங்கீதக்காரன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.” (சங். 83:4) கடவுள் தேர்ந்தெடுத்த மக்களை அவர்கள் எந்தளவு வெறுத்திருக்கிறார்கள்! ஆனால், அவர்களுடைய சதித் திட்டத்திற்கு இன்னொரு உள்நோக்கமும் இருந்தது. அவர்களுக்கு இஸ்ரவேல் தேசத்தின் மீது ஒரு கண் இருந்ததால், “தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம்” என்று மார்தட்டிச் சொன்னார்கள். (சங். 83:12) நம்முடைய காலத்திலும் இப்படி ஏதாவது நடந்திருக்கிறதா? ஆம், நடந்திருக்கிறது.
‘உம்முடைய பரிசுத்த வாசஸ்தலம்’
9, 10. (அ) பூர்வ காலத்தில் எது கடவுளுடைய பரிசுத்த வாசஸ்தலமாக இருந்தது? (ஆ) பரலோக நம்பிக்கையுள்ள மீதியானோரும் “வேறே ஆடுகளும்” இன்று என்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்?
9 வாக்குப்பண்ணப்பட்ட தேசம், பூர்வ காலத்தில் கடவுளுடைய பரிசுத்த வாசஸ்தலம் என அழைக்கப்பட்டது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு பாடிய வெற்றிப் பாடலைச் சற்று நினைத்துப் பாருங்கள். “நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்” என்று அவர்கள் பாடினார்கள். (யாத். 15:13) அந்த ‘வாசஸ்தலத்தில்’ பின்னர் ஓர் ஆலயம் கட்டப்பட்டது, அதில் சேவை செய்வதற்கு ஆசாரியர்களும் நியமிக்கப்பட்டார்கள்; அந்தத் தேசத்திற்கு எருசலேம் தலைநகராக இருந்தது; தாவீதுமுதல் வழிவழியாக வந்த அரசர்கள் அங்கே யெகோவாவின் சிங்காசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்கள். (1 நா. 29:23) அதனால்தான் எருசலேமை “மகாராஜாவினுடைய நகரம்” என்று இயேசு அழைத்தார்.—மத். 5:35.
10 நம் காலத்தில் இது எதைக் குறிக்கிறது? ‘தேவனுடைய இஸ்ரவேல்’ என்று அழைக்கப்பட்ட ஒரு புதிய தேசம் பொ.ச. 33-ல் உருவானது. (கலா. 6:16) அந்தத் தேசம் பரலோக நம்பிக்கையுள்ள, இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களால் ஆனது. பூர்வ கால இஸ்ரவேலரைப் போல் அல்லாமல் இவர்கள் கடவுளுக்குச் சாட்சிகளாய்த் தங்களை நிரூபித்தார்கள். (ஏசா. 43:10; 1 பே. 2:9) பூர்வ இஸ்ரவேல் தேசத்தாருக்கு அளித்த அதே வாக்குறுதியை யெகோவா இவர்களுக்கும் அளித்தார். “நான் . . . அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்” என்றார். (2 கொ. 6:16; லேவி. 26:12) ‘தேவனுடைய இஸ்ரவேலின்’ மீதியானோரை 1919-ல் யெகோவா விசேஷித்த ஓர் உறவுக்குள் கொண்டுவந்தார். அந்தச் சமயத்தில், அவர்கள் ஒரு ‘தேசத்தை’ அதாவது, ஆன்மீக வேலைகள் அடங்கிய ஒரு ராஜ்யத்தைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்; இது அவர்களுக்கு ஓர் ஆன்மீகப் பரதீஸாக இருக்கிறது. (ஏசா. 66:8) ‘வேறே ஆடுகள்’ எனப்படும் லட்சக்கணக்கானோரும் 1935 முதற்கொண்டு அவர்களோடு சேர்ந்திருக்கிறார்கள். (யோவா. 10:16) இவர்கள் அனுபவித்து வருகிற சந்தோஷமும் ஆன்மீகச் செழுமையும் யெகோவாவின் உன்னத அரசதிகாரமே சரியானது என்பதற்கு வலுவான அத்தாட்சி அளிக்கின்றன. (சங்கீதம் 91:1, 2-ஐ வாசியுங்கள்.) இது சாத்தானை எவ்வளவாய்க் கொதிப்படையச் செய்கிறது!
11. கடவுளுடைய எதிரிகளுக்கு எப்போதுமே எது முக்கியக் குறியாய் இருந்திருக்கிறது?
11 இந்தக் கடைசிநாட்கள் தொடங்கியது முதற்கொண்டு, பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானோரையும் அவர்களுடைய நண்பர்களான வேறே ஆடுகளையும் துன்புறுத்துவதற்காக, சாத்தான் தனது கையாட்களைத் தூண்டியிருக்கிறான். நாசி ஆட்சியின்கீழ் இருந்த மேற்கு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனின் கம்யூனிச ஆட்சியின்கீழ் இருந்த கிழக்கு ஐரோப்பாவிலும் இதுதான் நடந்திருக்கிறது. இன்னும் பல நாடுகளில் இதுபோல் நடந்திருக்கிறது; எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்கும், முக்கியமாக மாகோகு தேசத்து கோகுவின் கடைசித் தாக்குதலின்போது இவ்வாறு நடக்கும். அந்தத் தாக்குதலின்போது, விரோதிகள் முற்காலத்தில் செய்ததைப் போலவே யெகோவாவின் மக்களுடைய சொத்துகளையும் உடமைகளையும் பேராசையோடு அபகரித்துக்கொள்ளக்கூடும். என்றாலும், “யெகோவாவின் சாட்சிகள்” என்ற நம் பெயரை அனைவரும் அறவே மறந்துவிட வேண்டும் என்பதற்காக நம்மை ஒட்டுமொத்தமாய்த் துடைத்தழிப்பதே எப்போதும் சாத்தானின் முக்கியக் குறியாய் இருந்திருக்கிறது. தம்முடைய உன்னத அரசாட்சியை எதிர்த்து அவன் இவ்வாறு செயல்படுவதால் யெகோவா என்ன நடவடிக்கை எடுப்பார்? சங்கீதக்காரனின் ஜெபத்தை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.
யெகோவாவின் வெற்றிக்கு ஓர் எடுத்துக்காட்டு
12-14. மெகிதோ பட்டணத்து அருகே கிடைத்த எந்த இரண்டு மாபெரும் வெற்றிகளைச் சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார்?
12 எதிரி தேசங்களின் சதித் திட்டங்களை யெகோவா தவிடுபொடியாக்குவார் என்பதில் சங்கீதக்காரனுக்கு உறுதியான விசுவாசம் இருந்ததைக் கவனியுங்கள். பூர்வகால மெகிதோ பட்டணத்து அருகே இஸ்ரவேலருக்குக் கிடைத்த இரண்டு மாபெரும் வெற்றிகளையும் இந்தச் சங்கீதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பட்டணம் மெகிதோ பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது. கோடையில், வறண்டுபோயிருக்கும் கீசோன் ஆற்றுப் படுகையின் தடம் அந்தப் பள்ளத்தாக்கின் சமவெளியில் வளைந்து நெளிந்து செல்வதைப் பார்க்க முடியும். மழை காலத்திலோ அந்தச் சமவெளியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதனாலேயே, அது “மெகிதோவின் தண்ணீர்” என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.—நியா. 4:13; 5:19.
13 மெகிதோ பள்ளத்தாக்கிற்கு அப்பால் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் மோரே குன்று அமைந்துள்ளது. அங்குதான், நியாயாதிபதியான கிதியோனின் காலத்தில் மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும் கூட்டுச்சேர்ந்து கடவுளுடைய மக்களுக்கு எதிராகப் படையெடுத்து வந்தார்கள். (நியா. 7:1, 12) கிதியோனின் சிறிய படையில் கடைசியாக 300 பேர் மட்டுமே இருந்தபோதிலும், யெகோவாவின் உதவியோடு விரோதிகளின் பெரிய படையை அவர்கள் முறியடித்தார்கள். எவ்வாறு? கடவுள் சொன்னபடி பானைக்குள் தீவட்டிகளை மறைத்து வைத்துக்கொண்டு விரோதிகளின் பாளயத்தை இரவில் சூழ்ந்துகொண்டார்கள். கிதியோன் பானையை உடைத்ததும், எல்லாரும் அப்படியே செய்தார்கள். அப்போது பாளயமெங்கும் ஒளிமயமாய்க் காட்சியளித்தது. அதே சமயத்தில் எக்காளங்களையும் ஊதி, “கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம்”! என்று சத்தமிட்டார்கள். விரோதிகளுக்குள் அமளி ஏற்பட்டு அவர்கள் ஒருவரையொருவர் கொல்ல ஆரம்பித்தார்கள்; அதில் தப்பிப்பிழைத்தவர்களோ அங்கிருந்து ஓட்டம்பிடித்து, யோர்தான் நதிக்கு அப்பால் சென்றுவிட்டார்கள். இதற்கிடையே, இஸ்ரவேலரில் இன்னும் பலரும் அந்த 300 பேருடன் சேர்ந்துகொண்டு எதிரிகளைத் துரத்தினார்கள். ஆகமொத்தம், 1,20,000 படைவீரர்களைக் கொன்று குவித்தார்கள்.—நியா. 7:19–25; 8:10.
14 மெகிதோ பள்ளத்தாக்கிற்கு அப்பால் அமைந்துள்ள மோரே குன்றிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் தாபோர் மலை உள்ளது. அங்கே, நியாயாதிபதியான பாராக் இஸ்ரவேலரில் 10,000 படைவீரர்களை இராணுவத் தளபதியான சிசெராவின் தலைமையில் வந்த யாபீனின் சேனைக்கு எதிராக ஒன்றுதிரட்டியிருந்தார்; இந்த யாபீன் ஆத்சோர் என்ற கானானிய தேசத்தின் ராஜா ஆவார். இந்தக் கானானிய படைவீரர்களின் தரப்பில் 900 போர் இரதங்கள் இருந்தன; அந்த இரதங்களின் சக்கரங்களில் பொருத்தப்பட்டிருந்த கூர்மையான நீண்ட அரிவாள்கள் சக்கரங்களோடு சேர்ந்து சுழன்றன. அப்படிப்பட்ட போராயுதங்கள் எதுவும் இல்லாமல் தாபோர் மலையில் நிர்க்கதியாய் நின்றிருந்த இஸ்ரவேலரை ‘ஒருகை’ பார்த்துவிட எண்ணி சிசெராவின் சேனை பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்ந்தது. அச்சமயத்தில், ‘யெகோவா சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனை அனைத்தையும் . . . கலங்கடித்தார்.’ ஒருவேளை, திடீரென்று பெய்த கனமழை காரணமாக கீசோன் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தபோது, எதிரிகளின் இரதங்கள் சேற்றில் புதைந்திருக்கலாம். அப்போது, அவர்கள் அனைவரையும் இஸ்ரவேலர் சர்வசங்காரம் செய்தார்கள்.—நியா. 4:13–16; 5:19–21.
15. (அ) என்ன செய்யும்படி யெகோவாவிடம் சங்கீதக்காரன் ஜெபிக்கிறார்? (ஆ) கடவுளுடைய இறுதிப் போரின் பெயர் நமக்கு எதை நினைப்பூட்டுகிறது?
15 தன்னுடைய காலத்தில் இஸ்ரவேலருக்கு அச்சுறுத்தலாக இருந்த தேசங்களுக்கு அதேவிதமாகச் செய்யும்படி சங்கீதக்காரன் யெகோவாவிடம் கெஞ்சுகிறார். அவர் இவ்வாறு ஜெபிக்கிறார்: “மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு, நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.” (சங். 83:9, 10) சாத்தானுடைய உலகத்திற்கு எதிராகக் கடவுள் தொடுக்கப்போகும் கடைசிப் போர் ஹார்-மெகதோன் (அதன் அர்த்தம், “மெகிதோ மலை”), அதாவது அர்மகெதோன் என அழைக்கப்படுவது கவனிக்கத்தக்கது. இது, மெகிதோ பட்டணத்திற்கு அருகே நடந்த குறிப்பிடத்தக்க போர்களை நமக்கு நினைப்பூட்டுகிறது. அன்று நடந்த போர்களில் யெகோவா வெற்றிபெற்றது, அர்மகெதோன் போரிலும் அவர் நிச்சயம் வெற்றிபெறுவார் என்பதை நமக்கு உறுதிப்படுத்துகிறது.—வெளி. 16:13–16.
யெகோவாவின் அரசாட்சியே உன்னதமானதென்று நிரூபிக்கப்பட ஜெபியுங்கள்
16. இன்று எதிரிகளின் ‘முகங்கள் அவமானத்தாலே மூடப்பட்டிருப்பது’ எவ்வாறு?
16 ‘கடைசி நாட்கள்’ ஆரம்பித்தது முதற்கொண்டே தம்முடைய மக்களை அடியோடு அழிப்பதற்காக எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் யெகோவா முறியடித்திருக்கிறார். (2 தீ. 3:1) அதன் விளைவாக, எதிரிகள் அவமானத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதைத்தான் சங்கீதம் 83:16 முன்நிழலாகக் குறிப்பிட்டது: “கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.” ஒவ்வொரு நாட்டிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலைக்கு எதிராகத் தலையெடுத்தவர்கள் அடுத்தடுத்து படுதோல்வியையே தழுவியிருக்கிறார்கள். அந்நாடுகளில், ஒரே உண்மைக் கடவுளை வணங்கி வருபவர்களின் மன உறுதியும் சகிப்புத்தன்மையும் நல்மனமுள்ளவர்களுக்குச் சாட்சியாக அமைந்திருக்கின்றன; இதனால் அவர்களில் அநேகர் ‘யெகோவாவின் பெயரைத் தேடியிருக்கிறார்கள்.’ ஒருகாலத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்குக் கடும் துன்புறுத்தல் இருந்த அநேக நாடுகளில் இன்று, ஆயிரக்கணக்கான, ஏன், லட்சக்கணக்கான மக்கள் யெகோவாவை மகிழ்ச்சியோடு துதித்துவருகிறார்கள். இது யெகோவாவுக்கு மாபெரும் வெற்றி! அவருடைய எதிரிகளுக்கோ பெருத்த அவமானம்!—எரேமியா 1:19-ஐ வாசியுங்கள்.
17. இன்று மனிதர் என்ன அவசரக் கட்டத்தில் இருக்கிறார்கள், சீக்கிரத்தில் எந்த வார்த்தைகளை நாம் நினைத்துக்கொள்வோம்?
17 எதிரிகளிடமிருந்து நமக்கு வரும் துன்புறுத்தல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நற்செய்தியை நாம் தொடர்ந்து அறிவித்து வருகிறோம்; ஏன், எதிர்ப்பவர்களிடமும் அறிவிக்கிறோம். (மத். 24:14, 21) இன்று மனிதர் ஓர் அவசரக் கட்டத்தில் இருக்கிறார்கள்; அவர்கள் மனந்திரும்பி இரட்சிப்படைவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு சீக்கிரத்தில் முடிவுக்கு வரப்போகிறது. நம்முடைய இரட்சிப்பைவிட யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதே மிக மிக முக்கியமானது. (எசேக்கியேல் 38:23-ஐ வாசியுங்கள்.) முன்னறிவிக்கப்பட்டபடி, கடவுளுடைய மக்களை ஒழித்துக்கட்டுவதற்காக உலகெங்குமுள்ள தேசங்கள் கைகோர்த்துக்கொண்டு வரும்போது சங்கீதக்காரனின் பின்வரும் ஜெபத்தை நாம் நினைத்துக்கொள்வோம்: “அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்து போவார்களாக.”—சங். 83:18.
18, 19. (அ) யெகோவாவின் உன்னத அரசாட்சியை விடாப்பிடியாய் எதிர்ப்பவர்களுக்கு என்ன காத்திருக்கிறது? (ஆ) யெகோவாவின் அரசாட்சியே உன்னதமானதென்று நிரூபிக்கப்படும் நாள் நெருங்கிவருவதால் என்ன செய்யும்படி நீங்கள் தூண்டப்படுகிறீர்கள்?
18 யெகோவாவின் உன்னத அரசாட்சியை விடாப்பிடியாய் எதிர்ப்பவர்களுக்குக் கேவலமான முடிவு காத்திருக்கிறது. “சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்” அர்மகெதோனில் ‘நித்திய அழிவை’ சந்திப்பார்கள். (2 தெ. 1:7–10) அவர்கள் அழிக்கப்படுவதும் யெகோவாவை உண்மையோடு வணங்குவோர் தப்பிப்பிழைப்பதும், யெகோவா ஒருவரே மெய்க் கடவுள் என்பதற்கு மறுக்கமுடியாத அத்தாட்சி அளிக்கும். புதிய உலகில், இந்த மாபெரும் வெற்றி நெஞ்சைவிட்டு நீங்கவே நீங்காது. ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்து வருகையில்’ யெகோவாவின் இந்த மகத்தான செயலைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். (அப். 24:15) யெகோவாவின் உன்னத அரசாட்சியின்கீழ் வாழ்வதே சிறந்தது என்பதைப் புதிய உலகில் அவர்கள் கண்கூடாகக் காண்பார்கள். அவர்களில் சாந்த குணமுள்ளவர்கள் யெகோவா ஒருவரே மெய்த் தேவன் என்பதை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்வார்கள்.
19 நமது அன்பான பரம தகப்பன் தமது உண்மை வணக்கத்தாருக்காக எப்பேர்ப்பட்ட அருமையான எதிர்காலத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்! “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி, அவர்கள் [உம்முடைய விரோதிகள்] நாணமடைந்து அழிந்து போவார்களாக” என்று சங்கீதக்காரன் செய்த ஜெபத்திற்குச் சீக்கிரத்தில் முழுமையாகப் பதில் அளிக்கும்படி யெகோவாவிடம் ஜெபிக்க நீங்கள் தூண்டப்படுகிறீர்கள், அல்லவா?—சங். 83:17, 18.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையை நீங்கள் படிப்பதற்கு முன், 83-ஆம் சங்கீதத்தை வாசித்து அதிலுள்ள விஷயங்களைத் தெரிந்துகொள்வது உங்களுக்குப் பிரயோஜனமாய் இருக்கும்.
உங்கள் பதில்?
• 83-ஆம் சங்கீதம் எழுதப்பட்டபோது இஸ்ரவேலர் என்ன சூழ்நிலையில் இருந்தார்கள்?
• 83-ஆம் சங்கீதத்தை எழுதியவருக்குப் பெரிதும் கவலை தந்த விஷயம் எது?
• இன்று சாத்தானின் தாக்குதலுக்கு முக்கியக் குறியாய் இருப்போர் யார்?
• சங்கீதம் 83:17-ல் காணப்படும் ஜெபத்திற்கு யெகோவா இறுதியில் எவ்வாறு பதில் அளிப்பார்?
[பக்கம் 15-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பூர்வ மெகிதோ பட்டணத்துக்கு அருகே நடைபெற்ற போர்கள் நம் எதிர்காலத்துடன் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளன?
கீசோன் ஆறு
அரோசேத்
கர்மேல் மலை
யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு
மெகிதோ
தானாக்
கில்போவா மலை
ஆரோத்தின் கிணறு
மோரே
எந்தோர்
தாபோர் மலை
கலிலேயாக் கடல்
யோர்தான் நதி
[பக்கம் 12-ன் படம்]
உள்ளப்பூர்வமான ஜெபத்தைப் பாடலாக இயற்றுவதற்கு இந்தச் சங்கீதக்காரனை எது தூண்டியது?