கொரியாவில் நான் கண்ட வளர்ச்சி
மில்டன் ஹாமில்டன் சொல்கிறார்
“மிஷனரிகளாகிய உங்கள் அனைவரது விசாக்களையும் கொரியக் குடியரசு ரத்து செய்து, நீங்கள் இனி அந்த நாட்டில் இருக்க முடியாதெனக் குறிப்பிட்டுள்ளதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்; . . . இதன் காரணமாக, உங்களைத் தற்காலிகமாய் ஜப்பானுக்கு நியமிக்கிறோம்.”
அமெரிக்காவின் நியு யார்க் நகரைச் சேர்ந்த புருக்லினிலிருந்து 1954-ன் பிற்பகுதியில் எனக்கும் என் மனைவிக்கும் வந்த கடிதம் அது. அந்த வருடத்தின் முற்பகுதியில்தான் நாங்கள் நியு யார்க் நகரின் வடக்கில் அமைந்த கிலியட் பள்ளியின் 23-ஆம் வகுப்பில் பட்டம் பெற்றிருந்தோம். அந்தக் கடிதத்தை நாங்கள் பெற்றபோது இண்டியானாவிலுள்ள இண்டியானாபோலிஸில் தற்காலிகமாகச் சேவை செய்துகொண்டிருந்தோம்.
நானும் என் மனைவி லிஸ்சும் உயர்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பின்னர் 1948-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். முழுநேர ஊழியம் என்றால் அவளுக்கு ஆசைதான், என்றாலும் அமெரிக்காவைவிட்டு வேறு நாட்டிற்குப்போய் ஊழியம் செய்ய விரும்பவில்லை. அவள் எப்படி மனம் மாறினாள்?
கிலியட் பள்ளிக்குச் செல்ல விரும்புவோருக்கான ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள அவளும் ஒத்துக்கொண்டாள். அந்தக் கூட்டம், நியு யார்க்கிலுள்ள யாங்கி ஸ்டேடியத்தில் 1953-ன் கோடைகாலத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின்போது நடந்தது. அந்தக் கூட்டம் எங்களுக்கு ஊக்கமளித்ததால் நாங்கள் கிலியட் பள்ளிக்கான விண்ணப்பங்களை எழுதிக் கொடுத்தோம். என்னே ஆச்சரியம், பிப்ரவரி 1954-ல் ஆரம்பிக்கவிருந்த அடுத்த வகுப்பிலேயே கலந்துகொள்ளும்படி எங்களுக்கு அழைப்பு வந்தது.
கொரியாவில் மூன்று வருடங்களாக நடந்துவந்த போர் 1953-ன் கோடைகாலத்தில்தான் முடிவுக்கு வந்திருந்தது; அதனால் நாடு சின்னாபின்னமாகி இருந்தது. இருந்தபோதிலும், நாங்கள் அங்கு நியமிக்கப்பட்டோம். மேற்கூறிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தபடியே நாங்கள் ஜப்பானுக்கு முதலில் சென்றோம். 20 நாள் கடற்பயணத்திற்குப் பிறகு, ஜனவரி 1955-ல் அங்கு கால்வைத்தோம்; கொரியாவுக்கு நியமிக்கப்பட்டிருந்த இன்னும் ஆறு மிஷனரிகளும் எங்களோடு வந்திருந்தனர். அப்போது ஜப்பான் கிளை அலுவலகக் கண்காணியாய் இருந்த சகோதரர் லாய்ட் பாரி காலை 6:00 மணிக்கு எங்களைத் துறைமுகத்தில் சந்தித்தார். பின்பு, நாங்கள் யோகோஹாமாவில் இருந்த மிஷனரி இல்லத்திற்குக் கிளம்பினோம். அன்று சாயங்காலமே ஊழியத்திற்குச் சென்றுவிட்டோம்.
கொரியாவுக்கு ஒருவழியாக
சீக்கிரத்திலேயே, கொரியக் குடியரசுக்குச் செல்ல எங்களுக்கு விசா கிடைத்தது. மார்ச் 7, 1955-ல், எங்கள் விமானம் டோக்கியோவிலுள்ள ஹானடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பியது; மூன்று மணிநேரம் பறந்தபின் சியோலில் உள்ள யோயிடோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. கொரியாவிலிருந்த 200-க்கும் மேற்பட்ட சாட்சிகள் எங்களை வரவேற்றார்கள். நாங்கள் ஒருவரையொருவர் கண்டபோது, ஆனந்தக் கண்ணீர்விட்டோம். அப்போது கொரியா முழுவதிலுமே 1,000 சாட்சிகள்தான் இருந்தார்கள். கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள், எந்த நாட்டினராய் இருந்தாலும் சரி, பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள் என்றும், ஒரே மாதிரி நடந்துகொள்வார்கள் என்றும் மேலை நாட்டவரில் அநேகர் நினைத்ததைப் போலவே நாங்களும் நினைத்தோம். ஆனால், அப்படி இல்லை என்பதைச் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டோம். கொரிய நாட்டவர்கள், அவர்களுக்கே உரிய மொழியில் பேசுவதும் எழுதுவதும் மட்டுமின்றி, உணவு வகைகள், உடல்வாகு, பாரம்பரிய உடை, கட்டட வடிவமைப்புகள் போன்ற எத்தனையோ விஷயங்களில் அவர்கள் வித்தியாசமாய் இருக்கிறார்கள்.
முதலில் எங்கள் முன் இருந்த பெரிய சவால், அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொள்வதுதான். கொரிய மொழியைக் கற்றுக்கொள்ள எந்தவொரு புத்தகமும் அப்போது இருக்கவில்லை. ஆங்கில ஒலிப்பு முறையைப் பயன்படுத்தி கொரியன் வார்த்தைகளை அச்சுப் பிசகாமல் உச்சரிக்க முடியாது என்பதைச் சீக்கிரத்திலேயே உணர்ந்தோம். ஒருவர் கொரியன் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டால்தான் அதைச் சரியாக உச்சரிக்க முடியும்.
நாங்கள் ஆரம்பத்தில் தப்பும் தவறுமாகப் பேசினோம். உதாரணத்திற்கு, வீட்டுக்குவீடு ஊழியத்தில், ஒரு வீட்டுக்காரரைப் பார்த்து, அவரிடம் பைபிள் இருக்கிறதா என்று லிஸ் கேட்டபோது, அவருக்குப் புரியாமல் திருதிருவென்று விழித்துவிட்டு, உள்ளே போய் ஒரு தீப்பெட்டியை எடுத்துவந்தார். “பைபிள்” என்பதற்கான கொரிய வார்த்தை, சங்க்யுங்; அவள் கேட்டிருந்ததோ, சங்யாங் (தீக்குச்சிகள்).
சில மாதங்களுக்குப் பிறகு, தென்பகுதியிலுள்ள பூஸான் என்ற துறைமுகப் பட்டணத்தில் ஒரு மிஷனரி இல்லத்தை நிறுவும் வேலை எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. எங்கள் இருவருக்கும் எங்களோடு நியமிக்கப்பட்டிருந்த இன்னும் இரண்டு சகோதரிகளுக்கும் சேர்த்து மூன்று சிறிய அறைகளை வாடகைக்கு எடுத்தோம். அதில் தண்ணீர் வசதியோ, கழிப்பிட வசதியோ இருக்கவில்லை. இரண்டாவது மாடிக்கு டியூப் வழியாகத் தண்ணீரை ஏற்றுவதற்கு இரவு நேரத்தில்தான் தண்ணீரின் அழுத்தம் போதியளவு இருந்தது. ஆகவே, விடிவதற்கு முன்னதாகவே எழுந்து பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைத்தோம்; ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக முறை எடுத்துக்கொண்டு அதைச் செய்தோம். அந்தத் தண்ணீரைக் காய்ச்சியோ குளோரின் சேர்த்தோதான் குடிக்க வேண்டியிருந்தது.
இன்னும் பல சவால்களும் இருந்தன. மின்தட்டுப்பாடு கடுமையாய் இருந்ததால் துணி துவைக்கும் மெஷினையோ, இஸ்திரிப் பெட்டியையோ உபயோகிக்க முடியவில்லை. வராந்தாவைத்தான் சமையலறையாகப் புழங்கினோம்; அங்கிருந்த ஒரே சாதனம் மண்ணெண்ணெய் ஸ்டவ்தான். சில நாட்களுக்குள், இருப்பதை வைத்துச் சமையல் செய்யக் கற்றுக்கொண்டு, அவரவர் சமைக்க வேண்டிய நாளில் சமைத்தோம். நாங்கள் கொரியாவில் கால்வைத்ததற்கு மூன்று வருடங்கள் கழித்து, எனக்கும் லிஸ்சுக்கும் கல்லீரல் அழற்சி ஏற்பட்டது. அந்தக் காலத்தில் இந்த நோய் மிஷனரிகளில் பெரும்பாலோருக்கு வந்தது. பல மாதங்களுக்குப் பிறகுதான் குணமடைந்தோம், இன்னும் வேறு மாதிரியான உடல்நலக் கோளாறுகளாலும் பாதிக்கப்பட்டோம்.
தடைகளைச் சமாளிக்க உதவி
கடந்த 55 வருடங்களாக, அரசியலில் ஆட்டங்காணும் ஆசிய நாடுகளில் கொரிய தீபகற்பமும் ஒன்றாக இருந்திருக்கிறது. இந்தத் தீபகற்பத்தை இரண்டாகப் பிரிக்கும் பகுதி, (DMZ) ராணுவப் படைகள் அப்புறப்படுத்தப்பட்ட பகுதியாகும். இது கொரியக் குடியரசின் தலைநகரான சியோலுக்கு வடக்கே 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1971-ல் புருக்லின் தலைமையகத்திலிருந்து சகோதரர் ஃப்ரெட்ரிக் ஃப்ரான்ஸ் இங்கு வந்திருந்தார். உலகிலேயே பலத்த பாதுகாப்புடன் இருந்த எல்லைப்பகுதியான இந்தப் பகுதிக்கு நான் அவரோடு சென்றிருந்தேன். கடந்த ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடிக்கடி இந்தப் பகுதியில் வைத்துத்தான் கொரியாவின் இரண்டு அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் கூட்டம் நடத்தியிருக்கின்றனர்.
யெகோவாவின் சாட்சிகளாக இந்த உலக அரசியலில் தலையிடாத நாங்கள், கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழலிலும் நடுநிலை வகிக்கிறோம். (யோவா. 17:14) சக மனிதருக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த மறுத்ததன் காரணமாக கொரியாவில் 13,000-க்கும் மேற்பட்ட சாட்சிகள் மொத்தத்தில் 26,000 வருடங்களைச் சிறையில் கழித்திருக்கிறார்கள். (2 கொ. 10:3, 4) இந்தப் பிரச்சினையை எதிர்ப்பட வேண்டியிருக்குமென்று அந்நாட்டு இளம் சகோதரர்கள் அனைவருக்குமே தெரியும்; ஆனால் அவர்கள் இதற்குப் பயப்படுவதில்லை. கிறிஸ்தவ ஊழியர்கள் தங்களுடைய நடுநிலையை விட்டுக்கொடுக்க மறுக்கிறார்கள் என்ற ஒரே ‘குற்றத்திற்காக,’ அவர்களை “குற்றவாளிகள்” என்று அரசு முத்திரை குத்துவது வருந்தத்தக்கதே.
1944-ல் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது, நானும் ராணுவத்திற்குச் செல்ல மறுத்திருந்தேன்; இதனால் பென்சில்வேனியாவின் லூயிஸ்பர்க்கிலிருந்த அமெரிக்க சிறைச்சாலையில் இரண்டரை வருடங்களைக் கழித்திருந்தேன். ஆகவே, கொரிய நாட்டுச் சகோதரர்கள் அதைவிடக் கடும் சிறைத்தண்டனைக்கு ஆளானபோதிலும், அது எப்படிப்பட்டதென்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதேசமயம், கொரியாவிலிருந்த மிஷனரிகளாகிய எங்களில் சிலர் அதுபோன்ற தண்டனை அனுபவித்திருந்தவர்களே என்பதை அறியவந்தபோது அவர்களில் அநேகர் ஊக்கம்பெற்றார்கள்.—ஏசா. 2:4.
நாங்கள் எதிர்ப்பட்ட பிரச்சினை
1977-ல் நாங்கள் சந்தித்த ஒரு பிரச்சினை எங்களுடைய நடுநிலை சம்பந்தப்பட்டதாய் இருந்தது. கொரிய நாட்டு இளைஞர்கள் ராணுவத்தில் சேரவும் ஆயுதங்களைப் பயன்படுத்தவும் மறுப்பதற்கு நாங்கள்தான் காரணம் என்பதாக அதிகாரிகள் நினைத்தார்கள். ஆகவே, மிஷனரிகள் எந்தக் காரணத்திற்காகக் கொரிய நாட்டைவிட்டுச் செல்ல நேர்ந்தாலும், மறுபடியும் வர அவர்களுக்கு அனுமதி தரப்போவதில்லை என அரசு தீர்மானித்தது. இந்தக் கட்டுப்பாடு 1977 முதல் 1987 வரையாக நீடித்தது. அவ்வருடங்களின்போது நாங்கள் கொரியாவைவிட்டுச் சென்றிருந்தால் மீண்டும் வருவதற்கு அனுமதி கிடைத்திருக்காது. இதை மனதில்கொண்டு, அத்தனை வருடங்களாக நாங்கள் விடுமுறைக்காகக்கூட வீட்டிற்குப் போகவில்லை.
பல சந்தர்ப்பங்களில் அரசு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினோம்; கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக நாங்கள் வகிக்கும் நடுநிலையை விளக்கினோம். கடைசியில், எதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று அந்த அதிகாரிகள் கண்டபிறகு, அதாவது பத்து வருடங்களுக்குப் பிறகு, அந்தக் கட்டுப்பாட்டை விலக்கிக்கொண்டார்கள். அவ்வருடங்களில், நோயினாலோ மற்ற காரணங்களாலோ சில மிஷனரிகள் கொரியாவைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது; ஆனால் மீதிப்பேராகிய நாங்கள் அங்கேயே இருந்துவிட்டோம், அப்படிச் செய்ததை நினைத்து இப்போதும் சந்தோஷப்படுகிறோம்.
கிட்டத்தட்ட 1985-ல், ஊழியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், எங்கள் சட்டப்பூர்வ சங்கத்தின் நிர்வாகிகள்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள்; அதாவது, ராணுவ சேவைக்குச் செல்லக் கூடாதென்று வாலிபப் பையன்களுக்குப் போதிப்பதாகக் குற்றம்சாட்டினார்கள். அதனால் நிர்வாகிகளாகிய எங்கள் ஒவ்வொருவரிடமும் அரசு விசாரணை நடத்தியது. ஜனவரி 22, 1987-ல், எங்கள்மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என நிரூபணமானது. எதிர்காலத்திலும் இதுபோன்ற பிரச்சினை வராமலிருக்க இது உதவியது.
எங்கள் ஊழியத்தின்மீது கடவுளின் ஆசீர்வாதம்
எங்கள் நடுநிலை காரணமாக, கொரியாவில் நாங்கள் செய்துவந்த பிரசங்க வேலைக்கு எதிர்ப்பு மேன்மேலும் அதிகரித்தது. இதனால் பெரிய மாநாடுகளை நடத்துவதற்குத் தேவையான இடங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாகிவிட்டது. ஆகவே, சாட்சிகள் அனைவருமாகச் சேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டத் தீர்மானித்தார்கள்; கிழக்கத்திய நாடுகளின் முதல் மாநாட்டு மன்றத்தை பூஸானில் கட்டினார்கள். ஏப்ரல் 5, 1976-ல் அந்த மன்றத்தின் பிரதிஷ்டைப் பேச்சை 1,300 பேருக்கு முன்பாக அளிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
1950 முதல், அமெரிக்க ராணுவ வீரர்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொரியாவில் நிறுத்தப்பட்டு இருந்திருக்கின்றனர். அவர்களில் பலர், அமெரிக்காவுக்குத் திரும்பியபின் யெகோவாவின் சாட்சிகளாய் ஆகியிருக்கின்றனர். அடிக்கடி அவர்களிடமிருந்து எங்களுக்குக் கடிதங்கள் வருகின்றன; அவர்களுக்கு ஆன்மீக உதவி அளிக்க முடிந்திருப்பதை எங்களுக்குக் கிடைத்த அரிய பாக்கியமாகக் கருதுகிறோம்.
வருத்தகரமாக, என் அருமை மனைவி லிஸ், செப்டம்பர் 26, 2006-ல் இறந்துவிட்டாள். அவளுடைய பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது. இங்கு அவள் சேவைசெய்த 51 வருடங்களின்போதும் எந்த நியமிப்பையும் முகம்கோணாமல் ஏற்றுக்கொண்டாள். அமெரிக்காவுக்குத் திரும்பிச்செல்வோம் என ஒருநாளும் அவள் என்னிடம் ஜாடைமாடையாகக்கூட சொன்னதில்லை, ஆனால், ஒரு காலத்தில் அமெரிக்காவைவிட்டு வேறெங்கும் போகக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லாமல் இருந்தாள்!
நான் இன்றும் கொரியாவிலுள்ள பெத்தேல் குடும்பத்தில் சேவை செய்கிறேன். ஆரம்பத்தில் இக்குடும்பத்தில் வெகு சிலரே இருந்தனர்; இப்போதோ சுமார் 250 பேர் இருக்கின்றனர். இந்நாட்டு ஊழியத்தை மேற்பார்வை செய்யும் கிளை அலுவலகக் குழுவிலுள்ள ஏழு பேரில் ஒருவனாக இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது.
நாங்கள் கொரியாவில் கால்வைத்த காலத்தில் அது ரொம்பவே ஏழ்மை நிலையில் இருந்தது, இப்போதோ மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நாட்டில் 95,000-க்கும் அதிகமான சாட்சிகள் இருக்கிறார்கள்; அவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர் ஒழுங்கான பயனியராகவோ துணைப் பயனியராகவோ சேவை செய்கிறார்கள். இந்தக் காரணங்களால்தான், நான் இங்கு கடவுளுக்குச் சேவை செய்வதையும் அவருடைய மக்களின் வளர்ச்சியைக் கண்ணாரக் காண்பதையும் குறித்து நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.
[பக்கம் 24-ன் படம்]
சக மிஷனரிகளோடு கொரியாவில் கால்வைத்தல்
[பக்கம் 24-ன் படம்]
பூஸானில் சேவைசெய்தல்
[பக்கம் 25-ன் படம்]
DMZ பகுதியில் சகோதரர் ஃப்ரான்ஸுடன், 1971
[பக்கம் 26-ன் படம்]
லிஸ்சுடன், அவள் இறப்பதற்குச் சிலகாலம் முன்பு
[பக்கம் 26-ன் படம்]
கொரியக் கிளை அலுவலகம், இங்குதான் பெத்தேல் குடும்ப அங்கத்தினனாக இன்றும் சேவைசெய்கிறேன்