உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 12/15 பக். 21-22
  • பூர்வ கியூனிஃபார்மும் பைபிளும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூர்வ கியூனிஃபார்மும் பைபிளும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • காலத்தால் அழியாத பதிவுகள்
  • பைபிளோடு ஒத்துப்போகும் சான்று
  • அசீரிய, பாபிலோனிய பதிவுகளிலுள்ள பெயர்கள்
  • தொல்பொருள் ஆராய்ச்சி—பைபிளை ஆதரிக்கிறதா?
    விழித்தெழு!—2007
  • ஆராய்ச்சி எண் 9—தொல்பொருள் ஆராய்ச்சியும் பைபிளும்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 12/15 பக். 21-22

பூர்வ கியூனிஃபார்மும் பைபிளும்

மனிதர் பேசிவந்த மொழி பாபேல் நகரில் தாறுமாறாக்கப்பட்ட பிறகு, வெவ்வேறு எழுத்து முறைகள் உருவாயின. மெசொப்பொத்தாமியாவில் வாழ்ந்த சுமேரியர், பாபிலோனியர் போன்ற மக்கள் கியூனிஃபார்ம் என்ற எழுத்து முறையைப் பயன்படுத்தினர். கியூனிஃபார்ம் என்ற இந்த வார்த்தை, “ஆப்பு வடிவ” என்ற அர்த்தமுடைய லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது; இது, ஈரக் களிமண் பலகையில் எழுத்தாணியால் எழுதப்படும் முக்கோண வடிவத்தைக் குறிக்கிறது.

பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மக்களையும் சம்பவங்களையும் பற்றி விவரிக்கிற கியூனிஃபார்ம் பலகைகளைத் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்தப் பழங்கால எழுத்துமுறை பற்றி நாம் என்ன அறிந்திருக்கிறோம்? இதுபோன்ற பலகைகள் பைபிளின் நம்பகத்தன்மைக்கு எவ்வாறு அத்தாட்சி அளிக்கின்றன?

காலத்தால் அழியாத பதிவுகள்

ஆரம்பத்தில் மெசொப்பொத்தாமியாவில் சித்திர எழுத்துமுறையே பயன்படுத்தப்பட்டதாக நிபுணர்கள் நம்புகின்றனர்; அதன்படி, ஒரு வார்த்தையையோ கருத்தையோ தெரிவிக்க, ஒரு சித்திரம் அல்லது ஓர் அடையாளக் குறியீடு பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, ஒரு காளை மாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட அடையாளம், காளையின் தலைபோலவே காணப்பட்டது. காலம் செல்லச் செல்ல, பதிவு செய்தவற்றைப் பாதுகாப்பதற்கான அவசியம் அதிகரிக்கவே, கியூனிஃபார்ம் எழுத்துமுறை உருவானது. “அப்போது, வார்த்தைகளை மட்டுமின்றி வார்த்தைகளை அசைகளாகப் பிரித்து, அவற்றையும் குறிக்க அடையாளக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன; இவ்வாறு, அசைகள் பலவற்றை ஒன்றுசேர்த்து ஒரு வார்த்தையாகக் குறிப்பிட முடிந்தது” என NIV தொல்பொருள் ஆராய்ச்சி பைபிள் (ஆங்கிலம்) விளக்குகிறது. காலப்போக்கில் இதுபோன்று 200 அடையாளக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டதால் கியூனிஃபார்ம் எழுத்துமுறை, “ஒரு மொழியில் பேசுவதற்குத் தேவையான அனைத்துச் சொற்களும் இலக்கணமும் அமையப் பெற்ற எழுத்துமுறையாக உருவெடுத்தது” என்று அந்த நூல் குறிப்பிடுகிறது.

ஆபிரகாம் வாழ்ந்த காலத்திற்குள், அதாவது சுமார் பொ.ச.மு. 2,000-⁠ற்குள், கியூனிஃபார்ம் எழுத்துமுறை முழுமைபெற்றது. அடுத்த 20 நூற்றாண்டுகளில், சுமார் 15 மொழிகளில் கியூனிஃபார்ம் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட கியூனிஃபார்ம் வாசகங்களில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்டவை களிமண் பலகைகளில் எழுதப்பட்டவை ஆகும். கடந்த 150-⁠க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் அப்படிப்பட்ட ஏராளமான பலகைகள் ஊர், யூரக், பாபிலோன், நிம்ரூட், நிப்புர், ஆஷூர், நினிவே, மாரி, எப்லா, உகரிட், அமர்னா ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒடிஸி தொல்பொருள் ஆராய்ச்சி (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “கிட்டத்தட்ட இருபது லட்சம் கியூனிஃபார்ம் பலகைகள் ஏற்கெனவே தோண்டியெடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆண்டுதோறும் சுமார் 25,000 பலகைகள் தோண்டியெடுக்கப்படுவதாகவும் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.”

உலகெங்குமுள்ள கியூனிஃபார்ம் நிபுணர்களுக்கு இவ்வாசகங்களை மொழிபெயர்க்கும் இமாலயப் பணி உள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி, “தற்போதுள்ள கியூனிஃபார்ம் வாசகங்களில் சுமார் 1/10 மட்டுமே நவீன காலத்தில் வாசிக்கப்பட்டுள்ளன, அதுவும் ஒரு முறை மட்டுமே வாசிக்கப்பட்டுள்ளன.”

கியூனிஃபார்ம் முறையில் எழுதப்பட்ட இருமொழி மற்றும் மும்மொழி வாசகங்கள் அடங்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால்தான் கியூனிஃபார்ம் எழுத்துக்களின் பொருளைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. கியூனிஃபார்ம் முறையில் எழுதப்பட்ட இந்த வாசகங்கள் எல்லாம் ஒரே விஷயத்தையே வெவ்வேறு மொழிகளில் தெரிவிப்பதாக நிபுணர்கள் புரிந்துகொண்டனர். இவ்வாசகங்களின் பொருளைக் கண்டறிவதற்கு எது உதவியதென்றால், இவற்றில் வரும் பெயர்கள், பதவிப்பெயர்கள், ஆட்சியாளர்களின் வம்ச வரலாறுகள், அவர்களது பெருமிதப் பேச்சுகள் ஆகியவை பெரும்பாலும் திரும்பத்திரும்ப குறிப்பிடப்பட்டிருப்பதுதான்.

1850-⁠க்குள், கியூனிஃபார்ம் முறையில் எழுதப்பட்டிருந்த அக்காடியன் மொழியை, அதாவது அசீரிய-பாபிலோனிய மொழியை, நிபுணர்களால் வாசிக்க முடிந்தது; அது பண்டைய மத்தியக் கிழக்கு நாடுகளின் வர்த்தக மொழியாக இருந்தது. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு விளக்குகிறது: “அக்காடியன் மொழி வாசகங்களின் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுமுதல், அந்த எழுத்துமுறை நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டது; இவ்வாறு, கியூனிஃபார்ம் முறையில் எழுதப்பட்ட பிற மொழி வாசகங்களையும் புரிந்துகொள்வதற்கான அடிப்படை கிடைத்தது.” இந்த வாசகங்கள் பைபிளோடு எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளன?

பைபிளோடு ஒத்துப்போகும் சான்று

தாவீது ராஜா சுமார் பொ.ச.மு. 1070-⁠ல் எருசலேமைக் கைப்பற்றியதுவரை அந்நகரைக் கானானிய அரசர்கள் ஆட்சிசெய்தனர் என பைபிள் குறிப்பிடுகிறது. (யோசு. 10:1; 2 சா. 5:4–9) ஆனால், சில அறிஞர்கள் இதைச் சந்தேகித்தனர். என்றாலும், 1887-⁠ல், எகிப்திலுள்ள அமர்னாவில் ஒரு கிராமியப் பெண் களிமண் பலகை ஒன்றைக் கண்டெடுத்தாள். அதன் பின்னர் அங்கு சுமார் 380 பலகைகள் கண்டெடுக்கப்பட்டன; அவை அனைத்துமே எகிப்து ராஜாக்களுக்கும் (மூன்றாம் அமென்ஹாடெப்பும் அக்ஹநேட்டானும்) கானானிய தேசங்களுக்கும் மத்தியில் இருந்துவந்த அரசு தரப்பிலான கடிதத்தொடர்பாகும். ஆறு கடிதங்கள் எருசலேமை ஆட்சிசெய்தவரான ஆப்டைஹீபா அனுப்பியவை.

பைபிள் சம்பந்தமான தொல்பொருள் ஆராய்ச்சி விமர்சனம் (ஆங்கிலம்) என்ற பத்திரிகை குறிப்பிடுவதாவது: “அமர்னாவில் கண்டெடுக்கப்பட்ட பலகைகள் தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், எருசலேம், யாரோ ஒருவருக்கு மட்டும் சொந்தமான நிலம் அல்ல, அது ஒரு நகரம்; ஆளுநர் பதவியிலிருந்த ஆப்டைஹீபாவுக்கு . . . எருசலேமில் ஒரு மாளிகை இருந்தது; எகிப்திய ராணுவ வீரர்கள் 50 பேர் எருசலேமில் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள்; இவற்றை வைத்துப் பார்க்கும்போது, எருசலேம் ஒரு சிறிய மலைப்பிரதேச ராஜ்யமாகவே இருந்ததாகத் தெரிகிறது.” அதே பத்திரிகை பின்னர் இவ்வாறு குறிப்பிட்டது: “அமர்னாவில் கண்டெடுக்கப்பட்ட கடிதங்களிலிருந்து, அந்தக் காலப்பகுதியில் பிரசித்திபெற்ற ஒரு நகரம் இருந்ததென நாம் உறுதியாக நம்பலாம்.”

அசீரிய, பாபிலோனிய பதிவுகளிலுள்ள பெயர்கள்

அசீரியர்களும், அவர்களைத் தொடர்ந்து பாபிலோனியர்களும், தங்கள் சரித்திரத்தைக் களிமண் பலகைகளிலும், உருளைகளிலும், முப்பட்டகங்களிலும், நினைவுச்சின்னங்களிலும் எழுதிவைத்தனர். ஆகவே, அக்காடியன் மொழியிலிருந்த கியூனிஃபார்ம் வாசகங்களை நிபுணர்கள் புரிந்துகொண்டபோது, அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்கள் பைபிளிலும் இருந்ததைக் கண்டனர்.

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பைபிள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்வதாவது: “1870-⁠ல் பைபிள் சம்பந்தமான தொல்பொருள் ஆராய்ச்சி சங்கம் புதிதாக நிறுவப்பட்ட சமயத்தில் உரையாற்றிய அறிஞரான டாக்டர் சாம்யல் பர்ச், [கியூனிஃபார்ம் எழுத்துக்களிலிருந்த] பின்வருவோரின் பெயர்களை அடையாளம் காட்டினார்: எபிரெய அரசர்களான உம்ரி, ஆகாப், யெகூ, அசரியா, . . . மெனாகேம், பெக்கா, ஓசெயா, எசேக்கியா, மனாசே; அசீரிய அரசர்களான [மூன்றாம்] திக்லாத்பிலேசார், சர்கோன், சனகெரிப், எசாரோதான், அஷூர்பானிப்பால்; . . . சீரிய அரசர்களான பெனாதாத், ஆசகேல், ரேத்சீன்.”

பைபிளும் கார்பன் கதிரியக்கக் கணிப்பும் (ஆங்கிலம்) என்ற புத்தகம், பைபிளில் கூறப்பட்ட இஸ்ரவேல் மற்றும் யூதாவின் வரலாற்றைப் பூர்வ கியூனிஃபார்ம் வாசகங்களோடு ஒப்பிடுகிறது. அதன் முடிவு என்ன? மொத்தத்தில், யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களில் 15 அல்லது 16 பேரைப் பற்றிய பதிவுகள் பிற நாட்டு ஆவணங்களில் காணப்படுகின்றன; அவர்களுடைய பெயரும் சரி அவர்கள் வாழ்ந்த காலமும் சரி, [பைபிள் புத்தகங்களாகிய] இராஜாக்களில் உள்ளபடியே காணப்படுகின்றன. ஒரு அரசரின் பெயர்கூட வித்தியாசமாக இருக்கவில்லை; வேறு வார்த்தைகளில் சொன்னால், மற்ற புத்தகங்களில் காணப்படுகிற பெயர்கள் இராஜாக்கள் புத்தகங்களிலும் இடம்பெறுகின்றன.”

1879-⁠ல் கண்டெடுக்கப்பட்ட கோரேஸ் உருளையில், பிரசித்திபெற்ற ஒரு கியூனிஃபார்ம் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், கோரேஸ் எப்போதும் கடைப்பிடித்து வந்த கொள்கையை பொ.ச.மு. 539-⁠ல் பாபிலோனைக் கைப்பற்றியபோதும் கடைப்பிடித்தது பற்றிய குறிப்பு உள்ளது; சிறைபிடிக்கப்பட்டுக் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டவர்களை அவர்களது தாய்நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் அந்தக் கொள்கையினால் யூதர்களும் பயனடைய இருந்தனர். (எஸ்றா 1:1–4) பைபிளில் நாம் வாசிக்கிற கோரேஸின் கட்டளை எந்தளவு உண்மையானது என 19-ஆம் நூற்றாண்டு அறிஞர்களில் அநேகர் கேள்வி எழுப்பியிருந்தனர். என்றாலும், கோரேஸ் உருளை உட்பட, பெர்சியப் பேரரசின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த கியூனிஃபார்ம் ஆவணங்கள், பைபிளில் வாசிக்கப்படுகிற கோரேஸின் கட்டளை திருத்தமானது என்பதற்கு நம்பகமான அத்தாட்சியை அளிக்கின்றன.

1883-⁠ல், 700-⁠க்கும் மேற்பட்ட கியூனிஃபார்ம் வாசகங்களின் ஆவணத் தொகுப்பு ஒன்று பாபிலோனுக்கு அருகே நிப்பூரில் கண்டெடுக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்ட 2,500 பெயர்களில் சுமார் 70 பெயர்கள் யூதர்களுடையதாய் இருந்தன. அவை, “ஒப்பந்தம் செய்பவர்கள், ஏஜெண்டுகள், சாட்சிகள், வரிவசூலிப்பவர்கள், அரசு அதிகாரிகள்” ஆகியோரின் பெயர்களாய் இருந்திருக்கலாமென எட்வின் யாமௌச்சி என்ற வரலாற்று வல்லுநர் கூறுகிறார். அக்காலப்பகுதியில், யூதர்கள் பாபிலோனுக்கு அருகில் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு வந்ததற்கு இது அத்தாட்சி அளிப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். அசீரியாவிலும் பாபிலோனிலும் சிறைக் கைதிகளாய் இருந்தவர்களில் ‘மீதியானவர்கள்’ யூதேயாவுக்குத் திரும்பியபோதிலும், அநேகர் பாபிலோனிலேயே இருந்துவிடுவார்கள் என்பதாக பைபிள் கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறியதற்கு இந்த ஆவணத் தொகுப்பு சான்று அளிக்கிறது.​—⁠ஏசா. 10:​21, 22.

பொ.ச.மு. முதல் ஆயிரமாண்டில், அகரவரிசை எழுத்துக்களோடு கியூனிஃபார்ம் எழுத்துக்களும் புழக்கத்தில் இருந்தன. ஆனால், அசீரியர்களும் பாபிலோனியர்களும் அகரவரிசை எழுத்துக்களையே அதிகம் பயன்படுத்தியதால் காலப்போக்கில் கியூனிஃபார்ம் எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

அருங்காட்சியகங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பலகைகள் இன்னும் ஆராயப்படாமலேயே உள்ளன. அறிஞர்களால் ஏற்கெனவே ஆராய்ந்து அறியப்பட்ட கியூனிஃபார்ம் பலகைகள், பைபிள் நம்பகமானது என்பதற்கு மிகச் சிறந்த அத்தாட்சியை அளிக்கின்றன. ஆகவே, ஆராயப்படாத வாசகங்கள் இன்னும் எத்தனை அத்தாட்சிகளை அளிக்கப்போகின்றனவோ!

[பக்கம் 21-ன் படம்]

Photograph taken by courtesy of the British Museum

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்