முழுமையாகச் சாட்சி கொடுக்கத் தீர்மானமாய் இருங்கள்
“மக்களிடம் பிரசங்கிக்கவும் முழுமையாகச் சாட்சி கொடுக்கவும் வேண்டுமென இயேசு எங்களுக்குக் கட்டளையிட்டார்.”—அப். 10:42, NW.
1. கொர்நேலியுவிடம் சாட்சி கொடுக்கையில் பேதுரு எந்த வேலையைச் சிறப்பித்துக் காட்டினார்?
இத்தாலியப் படைத்தலைவராய் இருந்த கொர்நேலியு கடவுள் பக்தி மிகுந்தவர். அவர் தன் உறவினர்களையும் நண்பர்களையும் ஒரு முக்கியச் சம்பவத்திற்காக அழைத்திருந்தார்; யெகோவா மனிதரோடு நடந்துகொண்ட விதத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் அது. அங்கே கூடியிருந்தவர்களிடம், இயேசுவைக் குறித்து “மக்களிடம் பிரசங்கிக்கவும் முழுமையாகச் சாட்சி கொடுக்கவும்” அப்போஸ்தலரான தங்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருப்பதாக பேதுரு தெரிவித்தார். அவர் கொடுத்த சாட்சிக்கு அபார பலன் கிடைத்தது. விருத்தசேதனம் செய்யப்படாத அந்தப் புறதேசத்தார் கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள், முழுக்காட்டப்பட்டார்கள், பரலோகத்தில் இயேசுவோடு ராஜாக்களாக ஆட்சிசெய்யும் வாய்ப்பையும் பெற்றார்கள். பேதுரு முழுமையாகச் சாட்சி கொடுத்ததற்குக் கிடைத்த பலனைப் பார்த்தீர்களா!—அப். 10:22, 34–48.
2. சாட்சி கொடுக்கும்படியான கட்டளை 12 அப்போஸ்தலருக்கு மட்டுமே உரியதல்ல என நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்?
2 அது பொ.ச. 36-ல் நடந்தது. அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், கிறிஸ்தவர்களைக் கடுமையாக எதிர்த்துவந்த ஒருவரது வாழ்க்கை தலைகீழாக மாறியிருந்தது. அவர்தான் தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுல். அவர் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தார்; அப்போது இயேசு அவருக்குத் தோன்றி இவ்வாறு கூறினார்: “நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். அதே சமயத்தில், “புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும்” சவுல் சாட்சி கொடுப்பார் என்று சீடனாகிய அனனியாவுக்கும் இயேசு உறுதியளித்தார். (அப்போஸ்தலர் 9:3–6, 13–20-ஐ வாசியுங்கள்.) சவுலைச் சந்திக்கச் சென்ற அனனியா, ‘நம்முடைய முன்னோர்களின் தேவன் . . . உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ . . . சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்’ என்று அவரிடம் சொன்னார். (அப். 22:12–16) பவுல் என்று பின்னர் அழைக்கப்பட்ட சவுல், சாட்சி கொடுக்கும் பொறுப்பைப் பெற்றபோது அதை எந்தளவு முழுமையாகச் செய்தார்?
அவர் முழுமையாகச் சாட்சி கொடுத்தார்!
3. (அ) எந்த ஒரு பதிவை மட்டும் இப்போது நாம் கவனிப்போம்? (ஆ) பவுலின் செய்தி கிடைத்ததும் எபேசுவிலிருந்த மூப்பர்கள் என்ன செய்தார்கள், அவர்கள் நமக்கு எவ்வாறு முன்மாதிரியாய் இருக்கிறார்கள்?
3 அதன் பிறகு பவுல் என்னவெல்லாம் செய்தாரென்பதை விலாவாரியாகப் படிப்பது சுவாரஸ்யமாய் இருக்கும். என்றாலும், அப்போஸ்தலர் 20-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பதிவை இப்போது நாம் கவனிக்கலாம்; அது பொ.ச. 56 வாக்கில் பவுல் கொடுத்த ஒரு பேச்சாகும். இதைத் தனது மூன்றாவது மிஷனரிப் பயணத்தை முடிக்கவிருந்த சமயத்தில் கொடுத்தார். ஏஜியன் கடலில் அமைந்திருந்த துறைமுகப் பட்டணமான மிலேத்துவில் அவர் கால்வைத்ததும், எபேசு சபையிலிருந்த மூப்பர்களை வரச்சொல்லி செய்தி அனுப்பியிருந்தார். எபேசு பட்டணம் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலேயே இருந்தபோதிலும், சாலைகள் வளைந்து நெளிந்து சென்றதால் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. பவுலிடமிருந்து செய்தி கிடைத்தவுடன் எபேசுவிலிருந்த மூப்பர்கள் எந்தளவு பரவசமடைந்திருப்பார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதல்லவா! (நீதிமொழிகள் 10:28-ஐ ஒப்பிடுங்கள்.) என்றாலும், மிலேத்துவுக்குப் பயணிப்பதற்காக அவர்கள் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது. அவர்களில் சிலர் வேலையிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டியிருந்திருக்கும், அல்லது கடையை மூட வேண்டியிருந்திருக்கும், அல்லவா! இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் வருடந்தோறும் நடைபெறுகிற மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியைக்கூட விட்டுவிடாதபடிக்கு அவ்வாறே செய்கிறார்கள்.
4. எபேசுவில் சில வருடங்கள் இருந்தபோது பவுல் எதைப் பழக்கமாகச் செய்திருந்தார்?
4 மூப்பர்கள் வந்து சேரும்வரை, பவுல் மூன்று நான்கு நாட்களாக மிலேத்துவில் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? (அப்போஸ்தலர் 17:16, 17-ஐ ஒப்பிடுங்கள்.) எபேசுவிலிருந்து வந்த மூப்பர்களிடம் பவுல் சொன்னதிலிருந்தே அதற்கான பதிலை நாம் தெரிந்துகொள்ளலாம். அவர் முன்பு எபேசுவில் செய்த காரியம் உட்பட, பல வருடங்களாகப் பழக்கமாய்ச் செய்துவந்த காரியத்தை விவரித்தார். (அப்போஸ்தலர் 20:18–21-ஐ வாசியுங்கள்.) எந்த மறுப்புக்கும் இடமின்றி அவர் இவ்வாறு கூறினார்: ‘நான் ஆசியா நாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி . . . யூதருக்கும் கிரேக்கருக்கும் முழுமையாகச் சாட்சி கொடுத்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.’ ஆம், இயேசு கொடுத்த வேலையைச் செய்து முடிக்க அவர் தீர்மானமாய் இருந்தார். எபேசுவில் அதை எவ்வாறு செய்து முடித்தார்? யூதர்கள் எங்கே அதிகம் காணப்பட்டார்களோ அங்கே சென்று சாட்சி கொடுப்பது அதற்கு ஒரு வழியாக இருந்தது. எபேசுவில் பவுல் சுமார் பொ.ச. 52-55-ல் இருந்தபோது, ஜெப ஆலயத்தில் ‘சம்பாஷணைபண்ணி, புத்திசொன்னார்’ என லூக்கா பதிவு செய்திருக்கிறார். யூதர்கள் ‘கடினப்பட்டு அவிசுவாசிகளானபோது’ பவுல் அவர்களை விட்டுவிட்டு அதே நகரத்தில் வேறொரு இடத்திற்குச் சென்று மற்றவர்களிடம் தொடர்ந்து பிரசங்கித்தார். இவ்வாறு, அவர் அந்தப் பெரிய பட்டணத்தில் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சி கொடுத்தார்.—அப். 19:1, 8, 9.
5, 6. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமே பவுல் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கித்தார் என்பதை நாம் எப்படி உறுதியாகச் சொல்லலாம்?
5 கிறிஸ்தவர்களாக மாறி, காலப்போக்கில் மூப்பர்களாவதற்குத் தகுதி பெற்றவர்களிடம்தான் மிலேத்துவில் பவுல் பேசினார். தான் எந்த முறையில் பிரசங்கம் செய்திருந்தார் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்: ‘பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து உபதேசம் பண்ணினேன்.’ கிறிஸ்தவர்களிடம் தான் செய்த மேய்ப்பு சந்திப்பைப் பற்றியே இந்த வசனத்தில் பவுல் குறிப்பிடுவதாக நம் நாளில் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. “வெளியரங்கமாக வீடுகள்தோறும் . . . உபதேசம் பண்ணி” என்ற சொற்றொடர், முக்கியமாகக் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதையே அர்த்தப்படுத்தியது. அவர் அடுத்துச் சொன்னதிலிருந்து இது இன்னும் தெளிவாகிறது. ‘தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக் குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும் தான் யூதருக்கும் கிரேக்கருக்கும்’ சாட்சி கொடுத்து வந்திருந்ததை பவுல் குறிப்பிட்டார். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்தான் மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்க வேண்டியிருந்தது; அப்படிப்பட்டவர்களிடமே பவுல் சாட்சி கொடுத்திருந்தார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.—அப். 20:20, 21.
6 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஓர் அறிஞர் அப்போஸ்தலர் 20:20-ஐக் குறித்துச் சொன்னதாவது: “எபேசுவில் பவுல் மூன்று வருடங்கள் செலவிட்டிருந்தார். அவர் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தார், அல்லது எவ்விதத்திலாவது ஒருவரும் விட்டுப்போகாதபடி எல்லா மக்களிடமும் நற்செய்தியைப் பிரசங்கித்தார். (வசனம் 26) வீட்டுக்கு வீடு சென்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தியும் நற்செய்தியைப் பிரசங்கித்ததற்கு இது ஒரு வேதப்பூர்வ அத்தாட்சியாக உள்ளது.” இந்த அறிஞர் சொல்கிறபடி பவுல் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றாரோ இல்லையோ, தான் சாட்சி கொடுத்திருந்த விதத்தையும் அதனால் கிடைத்த பலனையும் எபேசு பட்டணத்தைச் சேர்ந்த மூப்பர்கள் மறந்துவிடக் கூடாது என அவர் நினைத்தார். “ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்” என லூக்கா பதிவு செய்திருக்கிறார். (அப். 19:10) ஆசியாவில் குடியிருந்த “எல்லாரும்” எப்படி இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள், நாம் சாட்சி கொடுக்கும் விஷயத்தில் இது எதைத் தெரிவிக்கிறது?
7. பவுல் நேரடியாகச் சாட்சிகொடுத்தவர்கள்போக, வேறு யாரும் அவர் சொன்ன செய்தியால் பலன் அடைந்திருக்கலாம்?
7 பொதுவிடங்களிலும் வீடு வீடாகவும் பவுல் பிரசங்கித்ததன் மூலம் அநேகர் அவர் சொன்ன செய்தியைக் கேட்டார்கள். அவ்வாறு கேட்ட எல்லாருமே, தொழில் சம்பந்தமாக வேறெங்கும் செல்லாமலோ, உறவினரிடத்திற்குப் போகாமலோ, பட்டணத்து நெரிசலைத் தவிர்த்து அமைதியான இடத்திற்குச் செல்லாமலோ எபேசுவிலேயே இருந்துவிட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? அப்படியிருக்காது. இதுபோன்ற காரணங்களுக்காக இன்று அநேகர் இடம்மாறிச் சென்றிருக்கிறார்கள்; நீங்களும்கூட அப்படிச் சென்றிருக்கலாம். அவ்வாறே, அன்றும்கூட சமூக அல்லது தொழில் ரீதியிலான காரணங்களால் வெவ்வேறு இடங்களிலிருந்து மக்கள் எபேசுவுக்குச் சென்றிருப்பார்கள். அங்கிருந்தபோது, பவுலை அவர்கள் சந்தித்திருக்கலாம், அல்லது அவர் கொடுத்த சாட்சியைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம். அவர்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் சென்றபின் என்ன நடந்திருக்கும்? சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அதைக் குறித்துச் சாட்சி கொடுத்திருப்பார்கள். ஒருவேளை கிறிஸ்தவர்களாக மாறாதிருந்த மற்றவர்கள், எபேசுவிலிருந்தபோது தாங்கள் கேட்டவற்றைக் குறித்துப் பிறரிடம் பேசியிருப்பார்கள். இதன் பலனாக, அவர்களுடைய உறவினர்களும் அக்கம்பக்கத்தாரும் வாடிக்கையாளர்களும் சத்தியத்தைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவர்களில் சிலர் அதை ஏற்றிருக்கலாம். (மாற்கு 5:14-ஐ ஒப்பிடுங்கள்.) நீங்கள் முழுமையாகச் சாட்சி கொடுக்கும்போது அதற்கு எவ்விதமான பலன் கிடைக்கலாமென இது சுட்டிக்காட்டுகிறது?
8. ஆசியா எங்குமுள்ள மக்கள் எவ்வாறு சத்தியத்தைக் கேட்டிருக்கலாம்?
8 முன்பு எபேசுவில் தான் செய்திருந்த ஊழியத்தைக் குறித்து பவுல் எழுதியபோது, ‘பெரிதும் அநுகூலமுமான கதவு தனக்குத் திறக்கப்பட்டிருப்பதாக’ குறிப்பிட்டார். (1 கொ. 16:8, 9) அது என்ன கதவு, அது எப்படி அவருக்குத் திறக்கப்பட்டது? பவுல் தொடர்ந்து எபேசுவில் ஊழியம் செய்ததால் நற்செய்தி நாலாபக்கமும் பரவியது. எபேசுவிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருந்த கொலோசே, லவோதிக்கேயா, எராப்போலியா ஆகிய மூன்று பட்டணங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். பவுல் அப்பட்டணங்களுக்கு நேரில் சென்றதே இல்லை, ஆனால் அங்கும் நற்செய்தி எட்டியது. எப்பாப்பிரா அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். (கொலோ. 2:1; 4:12, 13) எபேசுவில் பவுல் சாட்சி கொடுத்ததைக் கேட்டு எப்பாப்பிரா கிறிஸ்தவராக மாறியிருந்தாரா? பைபிள் இதைப்பற்றிக் குறிப்பிடுவதில்லை. ஆனால், தன் சொந்த ஊரில் பவுலுக்குப் பதிலாக எப்பாப்பிராவே ஊழியம் செய்திருக்கலாம். (கொலோ. 1:7) அவ்வாறே, பவுல் மூன்று வருடம் எபேசுவில் ஊழியம் செய்திருந்த சமயத்தில் பிலதெல்பியா, சர்தை, தியத்தீரா போன்ற பட்டணங்களிலும் நற்செய்தி எட்டியிருக்கலாம்.
9. (அ) எது பவுலின் உள்ளப்பூர்வமான ஆசையாக இருந்தது? (ஆ) 2009-ஆம் வருடத்திற்கான வசனம் என்ன?
9 ஆகவேதான், “என் உயிர் எனக்கு முக்கியமல்ல, எஜமானராகிய இயேசுவிடமிருந்து நான் பெற்ற ஊழியத்தைச் செய்து முடிப்பதே எனக்கு முக்கியம்; கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுத்து என் ஓட்டத்தை முடிப்பதே எனக்கு முக்கியம்” என்று பவுல் கூறியபோது அதை எபேசிய மூப்பர்களும் ஒப்புக்கொண்டார்கள். இந்த வசனத்தின் ஒரு பகுதியே 2009-ஆம் வருடத்திற்கான வசனமாக எடுக்கப்பட்டுள்ளது. அது சொல்வதாவது: ‘நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுங்கள்.’ இது நம் அனைவரையும் ஊக்கப்படுத்தி நமக்குத் தூண்டுதல் அளிக்கிறது, அல்லவா?—அப். 20:24, NW.
இன்று முழுமையாகச் சாட்சி கொடுத்தல்
10. நாமும் முழுமையாகச் சாட்சி கொடுக்க வேண்டுமென்று நமக்கு எப்படித் தெரியும்?
10 ‘மக்களிடம் பிரசங்கிக்கவும் முழுமையாகச் சாட்சி கொடுக்கவும் வேண்டும்’ என்ற கட்டளை, அப்போஸ்தலருக்கு மட்டுமே கொடுக்கப்படவில்லை. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, கலிலேயாவில் கூடியிருந்த சுமார் 500 சீடர்களுக்குப் பின்வரும் கட்டளையைக் கொடுத்தார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” இந்தக் கட்டளை இன்றுள்ள உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே பொருந்துகிறது; இதை இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.”—மத். 28:19, 20.
11. யெகோவாவின் சாட்சிகள் என்ன முக்கியமான வேலையைச் செய்பவர்கள் என அறியப்பட்டிருக்கிறார்கள்?
11 பக்திவைராக்கியமுள்ள கிறிஸ்தவர்கள் அந்தக் கட்டளைக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்து, ‘நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுக்க’ கடுமையாய் உழைக்கிறார்கள். இதற்கென்று அவர்கள் கையாளும் முக்கியமான வழி, பவுல் எபேசிய மூப்பர்களிடம் தெரிவித்த விதமாகவே வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதாகும். திறம்பட்ட மிஷனரி வேலை குறித்து 2007-ல் வெளிவந்த ஒரு புத்தகத்தில் இளைய டேவிட் ஜி. ஸ்டியூவர்ட் சொன்னதாவது: “தெளிவற்ற விதத்தில் வெறுமனே [மேடையிலிருந்து வற்புறுத்துவதைவிட] யெகோவாவின் சாட்சிகள் கையாளும் முறை எத்தனையோ மடங்கு திறம்பட்டதாய் இருந்திருக்கிறது; அவர்கள் தங்களது நம்பிக்கைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது எப்படியென ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கற்பிக்கிறார்கள். அவர்களில் அநேகர், பிரியத்துடன் தங்கள் மத நம்பிக்கைகளை மற்றவர்களிடம் சொல்கிறார்கள்.” இதனால் கிடைத்த பலன்? “1999-ல் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த இரண்டு தலைநகரங்களில் நான் நடத்திய சுற்றாய்வில் 2 முதல் 4 சதவீதத்தினர் மட்டுமே, இக்காலப் புனிதர்கள் அல்லது ‘மார்மன்’ மிஷனரிகள் தங்களை வந்து சந்தித்ததாகக் கூறினார்கள். 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், யெகோவாவின் சாட்சிகள் தங்களை நேரில் சந்தித்ததாக அதுவும் நிறைய முறை சந்தித்ததாகச் சொன்னார்கள்” என்று அவர் கூறினார்.
12. (அ) நம் பிராந்தியத்திலுள்ள வீட்டாரை நாம் ஏன் “நிறைய முறை” சந்திக்கிறோம்? (ஆ) முன்பு நற்செய்திக்குக் காதுகொடுக்காமல் இருந்து, பின்பு மாறியவர்களைப் பற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
12 நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மக்களும் அவ்வாறே சொல்லலாம். அவர்கள் அப்படிச் சொல்வதற்கு நீங்களும் ஒருவேளை காரணமாக இருக்கலாம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நீங்கள் ஆண்களையும் பெண்களையும் இளைஞரையும் ‘நேரில் சந்தித்து’ பேசியிருக்கிறீர்கள். நீங்கள் “நிறைய முறை” சென்று சந்தித்தபோதிலும் அவர்களில் சிலர் காதுகொடுத்துக் கேட்டிருக்க மாட்டார்கள். வேறு சிலர் நீங்கள் பைபிள் வசனம் ஒன்றை அல்லது பைபிள் கருத்து ஒன்றை விளக்கியபோது சற்றே அதைக் காதுகொடுத்துக் கேட்டிருக்கலாம். ஆனாலும், சிலரிடம் நீங்கள் நன்றாகச் சாட்சி கொடுக்க முடிந்திருக்கிறது; அவர்களும் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு அதன்படி மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். நாம் ‘நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுக்கும்போது’ இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. “நிறைய முறை” சந்தித்த பிறகும்கூட சரியாகக் காதுகொடுத்துக் கேட்காமல் இருந்த எண்ணற்றோர், பிற்பாடு மாறியிருப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒருவேளை அவர்களுக்கோ, அவர்களுக்குப் பிரியமானவர்களுக்கோ ஏதாவது நடந்திருக்கலாம்; அது சத்தியத்தைக் கேட்பதற்கு அவர்களுடைய மனதையும் இருதயத்தையும் திறந்திருக்கலாம். இப்போது அவர்கள் நம் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் இருக்கிறார்கள். ஆகவே, நற்செய்திக்குக் காதுகொடுத்துக் கேட்கிற அநேகரைத் தற்போது உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள். எல்லாரும் சத்தியத்திற்கு வருவார்களென்று நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், நாம் ஊக்கத்தோடும் பக்திவைராக்கியத்தோடும் தொடர்ந்து முழுமையாகச் சாட்சி கொடுக்க வேண்டுமென்றே கடவுள் எதிர்பார்க்கிறார்.
நமக்கே தெரியாத விதத்தில் பலன் தரலாம்
13. நாம் கொடுக்கும் சாட்சி நமக்குத் தெரியாத விதத்தில் எவ்வாறு பலன் தரலாம்?
13 பவுல் அறிவித்த நற்செய்தியை நேரடியாகக் கேட்டவர்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக மாறவில்லை. அவ்வாறே நாம் நற்செய்தியை அறிவிக்கும்போது அதை நேரடியாகக் கேட்பவர்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக மாறுவதில்லை. என்றாலும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் தவறாமல் ஈடுபட்டு எத்தனை பேரிடம் முடியுமோ அத்தனை பேரிடம் சாட்சி கொடுக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அக்கம்பக்கத்தாரிடமும் சகபணியாளரிடமும் சகமாணவரிடமும் உறவினரிடமும் நற்செய்தியை நாம் சொல்கிறோம். அது எப்படியெல்லாம் பலன் தரலாமென்று நமக்குத் தெரியுமா? சிலருடைய விஷயத்தில், அவர்கள் நற்செய்தியைக் கேட்டவுடன் மாற்றங்கள் செய்யலாம். வேறு சந்தர்ப்பங்களில், சத்திய விதைகள் ஒருவரது இருதயமாகிய மண்ணில் சிறிது காலத்திற்குப் புதைந்திருக்கலாம், ஆனால் சில காலம் கழித்து அந்த விதை வேர்விட்டு வளரலாம். ஒருவேளை அப்படி வளராவிட்டாலும், நம்மிடம் நற்செய்தியைக் கேட்ட மக்கள் நாம் சொன்னதையும், நம் நம்பிக்கைகளையும், நம் செயல்களையும் பற்றி மற்றவர்களிடம் பேசலாம். ஆம், அவர்களை அறியாமலே அந்த விதைகள் வேறொரு நல்மனமாகிய மண்ணில் விழுந்து பலன் தரலாம்.
14, 15. ஒரு சகோதரர் சாட்சி கொடுத்தது என்ன பலனைத் தந்தது?
14 இதற்கு ஓர் உதாரணமாக, ரையனையும் அவருடைய மனைவி மன்டீயையும் எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடாவில் வசிக்கிறார்கள். ரையன் வேலை பார்க்குமிடத்தில் சக பணியாளர் ஒருவரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார். அந்தப் பணியாளர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்; ரையன் உடையணிந்த விதமும் பேசிய விதமும் அவரைக் கவர்ந்தன. அவர்களுடைய உரையாடலின்போது, உயிர்த்தெழுதல், இறந்தோரின் நிலை போன்ற விஷயங்களைக் குறித்து ரையன் பேசினார். ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சாயங்காலம் அந்த இந்து மனிதர், அவருடைய மனைவி ஜோதியிடம் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஏதாவது தெரியுமா எனக் கேட்டார். ஜோதி கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்; சாட்சிகள் செய்துவந்த “வீட்டுக்கு வீடு பிரசங்க வேலை” பற்றி மட்டுமே அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே இன்டர்நெட்டில் “யெகோவாவின் சாட்சிகள்” என்று டைப் செய்து தேடினார்; இதனால் என்ற நமது வெப் சைட் முகவரியைக் கண்டுபிடித்தார். சில மாதங்களாக அந்த வெப் சைட்டில் பைபிள் மற்றும் சுவாரஸ்யமான கட்டுரைகள் உட்பட நிறைய தகவல்களை ஜோதி வாசித்துவந்தார்.
15 பிற்பாடு, ஜோதி மன்டீயைச் சந்தித்தார்; ஏனென்றால், இருவருமே நர்சுகளாகப் பணியாற்றிவந்தனர். ஜோதி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மன்டீ சந்தோஷத்துடன் பதில் சொன்னார். அதன் பிறகு, ஜோதி சொல்வதன்படி, “ஆதாம்முதல் அர்மகெதோன்வரை” நிறைய விஷயங்களை அவர்கள் பேசினார்கள். பைபிள் படிப்பிற்கு ஜோதி சம்மதம் தெரிவித்தார். சீக்கிரத்தில் ராஜ்ய மன்றத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். அக்டோபர் மாதத்தில் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியானார்; பிப்ரவரி மாதத்தில் முழுக்காட்டுதல் பெற்றார். அவர் இவ்வாறு எழுதியுள்ளார்: “இப்போது சத்தியத்தைத் தெரிந்துகொண்டதால் என் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறது.”
16. முழுமையாகச் சாட்சி கொடுக்க நாம் எடுக்கும் முயற்சி குறித்து ப்ளோரிடாவைச் சேர்ந்த சகோதரருக்குக் கிடைத்த அனுபவம் எதைச் சுட்டிக்காட்டுகிறது?
16 தான் ஒருவரிடம் சாட்சிகொடுத்தது, வேறொருவர் சத்தியத்திற்கு வருவதில் விளைவடையும் என்று ரையன் நினைக்கவே இல்லை. அவருடைய விஷயத்தில், ‘முழுமையாகச் சாட்சி கொடுக்க’ தீர்மானமாய் இருந்ததற்குக் கிடைத்த பலனைக் கண்ணாரக் காண முடிந்தது உண்மையே. உங்கள் விஷயத்திலோ, ஒரு வீட்டில், வேலை பார்க்குமிடத்தில், பள்ளியில், அல்லது எதிர்பாராத சந்தர்ப்பத்தில் நீங்கள் சாட்சி கொடுக்கலாம்; ஆனால், உங்களுக்குத் தெரியாமலேயே சத்தியம் மற்றவர்களிடம் பரவுவதற்கு அது வழிவகுக்கிறது. “ஆசியாவில்” தனக்குக் கிடைத்த பலன் எல்லாவற்றையும் பவுல் அறிந்திருக்கவில்லை; அவ்வாறே, நீங்கள் முழுமையாகச் சாட்சி கொடுப்பதற்குக் கிடைக்கிற நல்ல பலன்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். (அப்போஸ்தலர் 23:11; 28:23-ஐ வாசியுங்கள்.) ஆனால், நீங்கள் தொடர்ந்து அவ்வாறு சாட்சி கொடுப்பது எவ்வளவு முக்கியம்!
17. வருடம் 2009-ல் நீங்கள் என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறீர்கள்?
17 வருடம் 2009-ல், வீடு வீடாகவும் பிற வழிகளிலும் சாட்சி கொடுக்க வேண்டிய வேலையை நாம் அனைவரும் தலையாய வேலையாகக் கருதுவோமாக. இப்படிச் செய்தால், பவுல் பின்வருமாறு கூறிய விதமாகவே நம்மாலும் கூற முடியும்: “என் உயிர் எனக்கு முக்கியமல்ல, எஜமானராகிய இயேசுவிடமிருந்து நான் பெற்ற ஊழியத்தைச் செய்து முடிப்பதே எனக்கு முக்கியம்; கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுத்து என் ஓட்டத்தை முடிப்பதே எனக்கு முக்கியம்.”
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலராகிய பேதுருவும் பவுலும், மற்றவர்களும் எவ்வாறு முழுமையாகச் சாட்சி கொடுத்தனர்?
• நாம் சாட்சி கொடுப்பது ஏன் நமக்குத் தெரியாதளவுக்கு அதிக பலன் தரலாம்?
• 2009-ஆம் வருடத்திற்கான வசனம் என்ன? அது பொருத்தமான வசனமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
2009-க்கான வருடாந்தர வசனம்: ‘நற்செய்தியைக் குறித்து முழுமையாகச் சாட்சி கொடுங்கள்.’—அப். 20:24, NW.
[பக்கம் 17-ன் படம்]
வீடு வீடாகச் சென்று சாட்சி கொடுப்பது பவுலின் பழக்கம் என்பதை எபேசிய மூப்பர்கள் அறிந்திருந்தனர்
[பக்கம் 18-ன் படம்]
நீங்கள் முழுமையாகச் சாட்சி கொடுப்பதற்கு எந்தளவு பலன் கிடைக்குமென்று உங்களுக்குத் தெரியுமா?