‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
1. ஊழியத்தில் அப்போஸ்தலன் பவுல் எப்படி நல்ல முன்மாதிரி வைத்தார்?
1 “உன் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்று.” (2 தீ. 4:5) அப்போஸ்தலன் பவுல் சுத்தமான மனசாட்சியோடு இந்த அறிவுரையை தீமோத்தேயுவுக்குக் கொடுத்தார். சொல்லப்போனால், கி.பி. 47-லிருந்து கி.பி. 56 வரை அவர் மூன்று மிஷனரி பயணங்களை மேற்கொண்டார். அவர் “முழுமையாகச் சாட்சி கொடுத்தார்” என்று அப்போஸ்தலர் புத்தகம் பலமுறை சொல்கிறது. (அப். 23:11; 28:23) இன்று நாம் எப்படி முழுமையாகச் சாட்சி கொடுக்கலாம்?
2. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நாம் எப்படி முழுமையாகச் சாட்சி கொடுக்கலாம்?
2 வீட்டுக்கு வீடு ஊழியம்: நாம் வெவ்வேறு நேரத்தில் ஊழியம் செய்தால்தான் இதுவரை நற்செய்தியைக் கேட்காதவர்களுக்குச் சாட்சி கொடுக்க முடியும். மாலை நேரத்திலோ வார இறுதி நாட்களிலோ ஊழியம் செய்தால் சிலசமயம் குடும்பத் தலைவர்களைச் சந்திக்க முடியும். நம் பிராந்தியத்தில் அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பகுதிகளில் பிரசங்கிக்கும்போது ஆர்வம் காட்டுகிறவர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு வீட்டிலும் பேச நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்; பூட்டப்பட்ட வீடுகளுக்குத் திரும்பத் திரும்ப செல்ல வேண்டும். நீங்கள் பலமுறை முயற்சி செய்தும் அவர்களைச் சந்திக்க முடியாவிட்டால் என்ன செய்வது? கடிதம் எழுதுவதோ தொலைபேசியில் தொடர்புகொள்வதோ நல்ல பலன்களை அளிக்கலாம்.
3. பொது ஊழியம் செய்யவும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கவும் உங்களுக்கு என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன?
3 பொது ஊழியமும் சந்தர்ப்ப சாட்சியும்: இன்று யெகோவாவின் சாட்சிகள் ஆர்வமுள்ள எல்லோருக்கும் மெய் ‘ஞானத்தை’ அறிவிக்கிறார்கள். சில சமயம் ‘வீதிகளிலும் தெருக்களின் சந்திப்புகளிலும்’ அதை அறிவிக்கிறார்கள். (நீதி. 1:20, 21) நாம் தினசரி வேலைகளில் ஈடுபடும்போதுகூட சாட்சி கொடுக்க வாய்ப்பு தேடுகிறோமா? ‘கடவுளுடைய வார்த்தையை முழுமூச்சோடு பிரசங்கிக்கிறோம்’ என்று நம்மால் சொல்ல முடியுமா? (அப். 18:5) ஆம் என்றால், ‘முழுமையாகச் சாட்சி கொடுக்க’ வேண்டுமென்ற கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோம் என்று அர்த்தம்.—அப். 10:42; 17:17; 20:20, 21, 24.
4. முழுமையாகச் சாட்சி கொடுக்க ஜெபமும் தியானமும் நமக்கு எப்படி உதவும்?
4 நம்முடைய பலவீனத்தினாலோ கூச்ச சுபாவத்தினாலோ சாட்சி கொடுக்க சில சமயம் நாம் தயங்கலாம். ஆனால், யெகோவா நம்முடைய வரம்புகளைப் புரிந்துகொள்கிறார் என்பதில் சந்தேகமில்லை. (சங். 103:14) அப்படிப்பட்ட சமயங்களில், தைரியமாகச் சாட்சி கொடுக்க நாம் அவரிடம் ஜெபம் செய்யலாம். (அப். 4:29, 31) அதோடு, தனிப்பட்ட படிப்பின்போதும் பைபிள் வசனங்களைத் தியானிக்கும்போதும் ஒப்பற்ற செல்வம் போன்ற நற்செய்திமீது நமக்குள்ள மதிப்பை அதிகரிக்க நாம் கவனம் செலுத்தலாம். (பிலி. 3:8) அப்படிச் செய்யும்போது பக்திவைராக்கியத்தோடு நம்மால் பிரசங்கிக்க முடியும்!
5. யோவேல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் நாம் எப்படிப் பங்குகொள்ளலாம்?
5 யெகோவாவின் பெரிதும் மகா பயங்கரமுமான நாள் வருவதற்குமுன் கடவுளுடைய மக்கள் மும்முரமாக ஊழியத்தில் ஈடுபடுவார்கள் என்றும், தங்களைத் தடுத்து நிறுத்த எதற்கும் இடம்கொடுக்க மாட்டார்கள் என்றும் யோவேல் தீர்க்கதரிசி முன்னுரைத்தார். (யோவே. 2:2, 7-9) எனவே, மீண்டும் செய்ய வேண்டியிருக்காத இந்தப் பிரசங்க வேலையில் நாம் முழுமூச்சோடு ஈடுபடுவோமாக!