உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 1/15 பக். 17-20
  • “வழி இதுவே, இதிலே நடவுங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வழி இதுவே, இதிலே நடவுங்கள்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆன்மீகப் பசி அடங்கியது
  • ராஜ்ய ஊழியம் தந்த கனிகள்
  • ஊக்கமளிக்கும் மாநாடுகள்
  • கிலியட் பள்ளியும் அயல்நாட்டில் ஊழியமும்
  • எங்கள் குடும்பத்தைச் சூழ்ந்த சோக மேகங்கள்
  • புதிய நியமிப்புகள்
  • ‘இந்த வழியிலேயே’ அவர்கள் நடந்தார்கள்
  • அம்மா விட்டுச்சென்ற ஆஸ்தி
  • நானும் அம்மாவும் நல்ல நண்பர்களா ஆனோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • கடவுளை நேசிக்க கற்றுத்தந்த பெற்றோர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ஆறு வயதில் தீர்மானித்த இலக்கை பின்தொடருதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • அரியதொரு கிறிஸ்தவ சுதந்தரிப்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 1/15 பக். 17-20

“வழி இதுவே, இதிலே நடவுங்கள்”

எமிலியா பெடர்ஸனின் கதை

ரூத் ஈ. பப்பஸ் சொன்னபடி

என் அம்மா பெயர் எமிலியா பெடர்ஸன். அவர் 1878-⁠ல் பிறந்தார். அவர் ஒரு ஸ்கூல் டீச்சராக வேலை பார்த்து வந்தார். ஆனால், கடவுளிடம் நெருங்கிவர எல்லாருக்கும் உதவ வேண்டுமென்று ரொம்ப ஆசைப்பட்டார். அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்பினார். எங்கள் வீட்டில் கிடந்த ஒரு பெரிய டிரங்க் பெட்டி அம்மாவின் ஆசைக்கு மௌன சாட்சியாக இருக்கிறது. மினிசோடாவில் (அமெரிக்கா) உள்ள ஜாஸ்பர் என்ற சிறிய பட்டணத்தில்தான் எங்கள் வீடு இருந்தது. சீனாவில் மிஷனரியாக சேவை செய்ய வேண்டுமென்பது என் அம்மாவின் நெடுநாள் கனவு. சீனாவுக்குப் போகும்போது அவருடைய பண்டம் பாத்திரங்களையும் துணிமணிகளையும் எடுத்துக்கொண்டு போவதற்காக அந்த டிரங்க் பெட்டியை வாங்கி வைத்திருந்தார். ஆனால், அம்மாவுடைய அம்மா தவறிவிட்டதால் அவருடைய கனவெல்லாம் கலைந்தது. அதனால், வீடே கதியென்று இருந்து தம்பி தங்கைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. 1907-⁠ல் தியடோர் ஹொலீன் என்பவருக்கு வாழ்க்கைப்பட்டார். என் அப்பா அம்மாவுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள். நான்தான் கடைக்குட்டி. 1925 டிசம்பர் 2-⁠ல் நான் பிறந்தேன்.

அம்மாவின் மனதில் நிறைய பைபிள் கேள்விகள் இருந்தன; அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ரொம்ப ஆர்வமாக பதில் தேடினார். கெட்டவர்களை நெருப்பில் போட்டு வதைக்கிற இடம்தான் நரகமா என்பது அவருடைய கேள்விகளில் ஒன்று. இந்தப் போதனைக்கு பைபிளில் ஆதாரம் இருக்கிறதா என்று லூத்தரன் சர்ச்சுக்கு வந்திருந்த ஒரு சூப்பர்வைஸரிடம் கேட்டார். அவரோ, பைபிள் என்ன சொல்கிறது என்பது முக்கியமில்லை; ஆனால் இதைப் பற்றி எல்லாருக்கும் கண்டிப்பாக கற்றுக்கொடுக்க வேண்டுமென சொல்லிவிட்டார்.

ஆன்மீகப் பசி அடங்கியது

என் அம்மாவுக்கு ஒரு தங்கை இருந்தார்; அவர் பெயர் எம்மா; 1900-⁠க்குப் பின் சில காலம் கழித்து, இசை பயில்வதற்காக நார்த்ஃபீல்ட் (மினிசோடா) என்ற நகரத்திற்கு அவர் போனார். அங்கு மிலியஸ் கிரிஸ்டியன்ஸன் என்ற வாத்தியார் வீட்டில் தங்கி படித்தார்; அவருடைய மனைவி, ஒரு பைபிள் ஸ்டூடன்ட்; அந்தக் காலத்தில் யெகோவாவின் சாட்சிகளை அப்படித்தான் சொல்வார்கள். தன்னுடைய அக்கா எப்போதும் பைபிளும் கையுமாகவே இருப்பாரென்று வாத்தியாருடைய மனைவியிடம் எம்மா சொன்னார். உடனே, திருமதி கிறிஸ்டியன்ஸன் என் அம்மாவுடைய பைபிள் கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதி ஒரு கடிதம் போட்டார்.

ஒரு நாள், லாரா ஒதாட் என்ற பைபிள் ஸ்டூடன்ட், சியக்ஸ் ஃபால்ஸ் (தென் டகோட்டா) நகரத்திலிருந்து ரயிலேறி ஜாஸ்பருக்கு வந்து ஊழியம் செய்தார். அவர் கொடுத்த எல்லா பைபிள் பிரசுரங்களையும் அம்மா படித்தார். 1915-⁠ல், அவர் கற்றுக்கொண்ட பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தார். லாரா கொடுத்த பிரசுரங்களையும் மற்றவர்களுக்குப் படிக்கக் கொடுத்தார்.

1916-⁠ல் சியக்ஸ் சிட்டியில் (அயோவா) நடக்கப்போகிற மாநாட்டுக்கு சார்லஸ் டேஸ் ரஸல் வருவதைப் பற்றி அம்மா கேள்விப்பட்டார். அதனால், அவரும் அதில் கலந்துகொள்ள வேண்டுமென ஆசைப்பட்டார். அப்போது அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள்; கடைக்குட்டியாக இருந்த மார்வினுக்கு ஐந்து மாசம்தான் ஆகியிருந்தது; அதோடு, எங்கள் வீட்டுக்கும் சியக்ஸ் சிட்டிக்கும் சுமார் 160 கிலோமீட்டர் தூரம்! இருந்தாலும், எல்லா பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு ரயிலேறி மாநாட்டிற்குப் போனார். அங்கு சகோதரர் ரஸல் கொடுத்த பேச்சுகளை அம்மா கேட்டார், “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற திரைப்படத்தையும் பார்த்தார், அப்படியே ஞானஸ்நானமும் எடுத்துக்கொண்டார். வீட்டுக்கு வந்ததும் அந்த மாநாட்டைக் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்; அது பிறகு ஜாஸ்பர் ஜர்னலில் வெளிவந்தது.

1922-⁠ல் ஒஹாயோவிலுள்ள சீடர் பாயின்ட்டில் நடந்த மாநாட்டிற்கு சுமார் 18,000 பேர் வந்திருந்தார்கள். அதில் என் அம்மாவும் கலந்துகொண்டார். அந்த மாநாட்டுக்குப் போய்விட்டு வந்தபிறகு எப்போதும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி விளம்பரப்படுத்திக்கொண்டே இருந்தார், நிறுத்தவே இல்லை. அதேமாதிரி எங்களிடமும், “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்.​—⁠ஏசா. 30:⁠21.

ராஜ்ய ஊழியம் தந்த கனிகள்

1920-⁠களின் ஆரம்பத்தில், என் பெற்றோர் ஜாஸ்பரை விட்டு வேறு இடத்திற்கு குடிமாறி போனார்கள். அப்பாவுடைய பிசினஸ் நன்றாக போய்க்கொண்டிருந்தது; எங்கள் குடும்பமும் பெரிய குடும்பம். அம்மா அளவுக்கு அப்பா பைபிளை படிக்கவில்லை, ஆனால் பிரசங்க வேலைக்கு முழுமனதுடன் ஆதரவு கொடுத்தார். பயணக் கண்காணிகள் (அப்போது பில்கிரிம்ஸ்) யார் வந்தாலும் சரி, அப்பா அவர்களை வீட்டிலேயே தங்க வைத்துக்கொள்வார். சில சமயங்களில், அந்தச் சகோதரர்கள் எங்கள் வீட்டில் பேச்சு கொடுப்பார்கள்; அந்தப் பேச்சை கேட்பதற்காக சுமார் 100 பேர் வருவார்கள்​—⁠ஹால், டைனிங் ரூம், பெட் ரூம் எல்லாமே நிரம்பி வழியும்.

எனக்கு கிட்டத்தட்ட ஏழு வயது இருக்கும்; அப்போது ஒரு நாள் என்னுடைய லெட்டி சித்தி ஃபோன் பண்ணி, தன் வீட்டுப் பக்கத்தில் குடியிருக்கிற எட் லார்சனும் அவருடைய மனைவியும் பைபிள் படிக்க விரும்புவதாகச் சொன்னார். அந்தத் தம்பதி பைபிள் சத்தியத்தை கற்றுக்கொண்டதும் அதை உடனே ஏற்றுக்கொண்டார்கள்; அதோடு, பக்கத்து வீட்டிலிருந்த இன்னொரு அம்மாவையும் பைபிள் படிப்புக்கு அழைத்து வந்தார்கள். அவருடைய பெயர் மார்த்தா வான் டாலன்; அவருக்கு எட்டுப் பிள்ளைகள். கடைசியில், மார்த்தாவும் அவருடைய முழுக் குடும்பமும் பைபிள் ஸ்டூடன்டுகளாக ஆனார்கள்.a

அந்தச் சமயத்தில், கார்டன் கம்மரூட் என்ற பையன் என் அப்பாவிடம் வேலைக்குச் சேர்ந்தான். அந்தப் பையனுடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தள்ளியிருந்தது. “உன் முதலாளி வீட்டு பிள்ளைகள் வினோதமான ஒரு மதத்தைச் சேர்ந்தவங்க, உஷாரா இருந்துக்கோ” என்று யாரோ அவனிடம் சொல்லி வைத்திருந்தார்கள். இருந்தாலும், அவர்கள் பேச்சை எல்லாம் கேட்காமல் கார்டன் பைபிள் படிக்க ஆரம்பித்தான். இதுதான் சத்தியம் என்பதை சீக்கிரத்திலேயே உணர்ந்துகொண்டான். மூன்று மாசம் கழித்து, ஞானஸ்நானம் பெற்றான். அவனுடைய தாய்தந்தையும் சாட்சிகளானார்கள். அதன் பிறகு, நாங்கள் எல்லாரும்​—⁠ஹொலீன் குடும்பத்தாரும் கம்மரூட் குடும்பத்தாரும் வான் டாலன் குடும்பத்தாரும்​—⁠நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.

ஊக்கமளிக்கும் மாநாடுகள்

சீடர் பாயின்ட் மாநாடு அம்மாவுக்கு ரொம்பவே ஊக்கமளித்ததால் அதற்கப்புறம் எந்த மாநாட்டையும் அவர் தவறவிடவில்லை. சின்ன வயதில் இப்படி மாநாடுகளுக்கு போவதற்காக ரொம்ப தூரம் பயணம் செய்தது இன்னமும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. 1931-⁠ல் கொலம்பஸில் (ஒஹாயோ) நடந்த மாநாட்டில் கலந்துகொண்டதை என்னால் மறக்கவே முடியாது. ஏனென்றால், அந்த மாநாட்டில்தான் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரே நமக்கு வழங்கப்பட்டது. (ஏசா. 43:10–12) 1935-⁠ல் வாஷிங்டன் டி.சி.-⁠யில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அங்கு சரித்திர புகழ்வாய்ந்த ஒரு சொற்பொழிவைக் கேட்டேன்; வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிற “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” யார் என்று அந்தச் சொற்பொழிவில்தான் சொல்லப்பட்டது. (வெளி. 7:9) அங்கு 800-⁠க்கும் அதிகமானோர் ஞானஸ்நானம் பெற்றார்கள்; அவர்களில் என் அக்காமார் லில்லியனும் யூனிஸும்கூட இருந்தார்கள்.

1937-⁠ல் கொலம்பஸில் (ஒஹாயோ) நடந்த மாநாட்டுக்கும், 1938-⁠ல் சீயட்டிலில் (வாஷிங்டன்) நடந்த மாநாட்டுக்கும், 1939-⁠ல் நியு யார்க் சிட்டியில் நடந்த மாநாட்டுக்கும் நாங்கள் எல்லாரும் குடும்பமாகப் போனோம். வான் டாலன் குடும்பமும் கம்மரூட் குடும்பமும் எங்களோடு வந்தார்கள். நாங்கள் எல்லாரும் ஆங்காங்கே நின்று, பயணத்தைத் தொடர்ந்தோம். 1940-⁠ல் லியோ வான் டாலனை என் அக்கா யூனிஸ் கல்யாணம் பண்ணிக்கொண்டார். பின்பு அவர்கள் பயனியர்களாக ஆனார்கள். அதே வருஷத்தில், கார்டன் கம்மரூடை என் அக்கா லில்லியன் திருமணம் செய்துகொண்டார்; அவர்களும் பயனியர்கள் ஆனார்கள்.

1941-⁠ல் மிஸ்சௌரியில் உள்ள செ. லூயிவில் நடந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு என்று சொல்லலாம். அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, பிள்ளைகள் என்ற புத்தகம் கிடைத்தது. அந்த மாநாடு எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதற்குப்பின் 1941 செப்டம்பர் 1-⁠ஆம் தேதி என்னுடைய அண்ணன் மார்வீனோடும் என் அண்ணி ஜாய்ஸோடும் சேர்ந்து நானும் பயனியர் ஆனேன். அப்போது எனக்கு 15 வயது.

சகோதரர்கள் எல்லாரும் விவசாயம் செய்துதான் வாழ்க்கை நடத்தினார்கள். மாநாடுகளும் அறுப்பு சமயம் பார்த்துதான் வரும். எனவே, எல்லா சகோதரர்களுமே மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமற்போனது. இதனால், மாநாட்டுக்குப் போய்விட்டு வந்த பிறகு மாநாட்டில் கேட்ட விஷயங்களைப் பற்றி எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் பேசுவோம். மாநாட்டுக்கு வர முடியாமல் போனவர்களுக்கு இது ரொம்ப உதவியாக இருந்தது. அப்படிக் கூடிவந்த தருணங்கள் சந்தோஷமான தருணங்கள்!

கிலியட் பள்ளியும் அயல்நாட்டில் ஊழியமும்

1943 பிப்ரவரி மாதம் கிலியட் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. மிஷனரி சேவைக்காக பயனியர்களைப் பயிற்றுவிப்பதற்கு இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. முதல் வகுப்பில், வான் டாலன் குடும்பத்திலிருந்து ஆறு பேர் கலந்துகொண்டார்கள். எமில், ஆர்தர், ஹோமர், லீயோ ஆகிய சகோதரர்களும் அவர்களுடைய பெரியப்பா பையன் டோனால்டும் லீயோவின் மனைவியும், அதாவது என் யூனிஸ் அக்காவும்தான் அந்த ஆறு பேர். அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பியபோது எங்களுக்கு ஒருபுறம் சந்தோஷம், ஒருபுறம் துக்கம். ஏனென்றால், மறுபடியும் அவர்களை எப்போது பார்ப்போம் என்றே எங்களுக்குத் தெரியாது. பட்டம் பெற்ற பிறகு அந்த ஆறு பேரும் பியூர்டோ ரிகோவுக்கு நியமிக்கப்பட்டார்கள்; அந்தச் சமயத்தில் அங்கு ஒரு டஜன் சாட்சிகள்கூட இல்லை.

ஒரு வருஷம் கழித்து லில்லியன், கார்டன் தம்பதியும் மார்வீன், ஜாய்ஸ் தம்பதியும் மூன்றாம் கிலியட் பள்ளிக்குப் போனார்கள். அவர்களும் பியூர்டோ ரிகோவுக்கே நியமிக்கப்பட்டார்கள். பின்பு, 1944 செப்டம்பரில், எனக்கு 18 வயதாக இருந்தபோது நான்காம் கிலியட் பள்ளிக்குப் போனேன். 1945 பிப்ரவரியில் பட்டம் பெற்ற பிறகு நானும் பியூர்டோ ரிகோவுக்கே போய் கூடப்பிறந்தவர்களுடன் சேர்ந்துகொண்டேன். எனக்கு முன்னால் அற்புதமான ஓர் உலகம் விரிந்திருந்தது! ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொள்வது படுகஷ்டமாக இருந்தாலும், கொஞ்ச நாட்களுக்குள் எங்களில் சிலர் 20-⁠க்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்திவந்தோம். யெகோவா எங்கள் வேலையை ஆசீர்வதித்தார். இன்றைக்கு பியூர்டோ ரிகோவில் சுமார் 25,000 சாட்சிகள் இருக்கிறார்கள்!

எங்கள் குடும்பத்தைச் சூழ்ந்த சோக மேகங்கள்

1950-⁠ல் லீயோவுக்கும் யூனிஸுக்கும் மார்க் பிறந்தான்; அதன் பிறகும் அவர்கள் பியூர்டோ ரிகோவிலேயே இருந்தார்கள். 1952-⁠ல் சொந்தபந்தங்களைப் பார்ப்பதற்காக விடுமுறை எடுத்து ஊருக்குச் செல்ல திட்டமிட்டார்கள். ஏப்ரல் 11-⁠ஆம் தேதி விமானம் ஏறினார்கள். எதிர்பாரா விதமாக, விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே நிலைதடுமாறி கடலில் விழுந்துவிட்டது. அந்த விபத்தில் லீயோவும் யூனிஸும் இறந்துவிட்டார்கள், ஆனால் இரண்டு வயது மார்க் மட்டும் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தான். அந்த விபத்தில் தப்பிப்பிழைத்த ஒருவர் உயிர்காக்கும் படகில் மார்க்கை அலாக்காக தூக்கிப்போட்டார். பின்பு அவனுக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்டது, கடைசியில் அந்தச் சின்ன பையன் உயிர் பிழைத்துக்கொண்டான்.b

ஐந்து வருஷம் கழித்து, 1957 மார்ச் 7-⁠ஆம் தேதி அம்மாவும் அப்பாவும் ராஜ்ய மன்றத்துக்கு காரில் போய்க்கொண்டிருந்தபோது டயர் பஞ்சராகிவிட்டது. சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு டயர் மாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு கார்காரன் வேகமாக வந்து அப்பாமீது மோதிவிட்டான். அந்த இடத்திலேயே அப்பா பரிதாபமாக இறந்துவிட்டார். சுமார் 600 பேர் அவருடைய சவ அடக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்; அப்பாமீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த அவர்கள் எல்லாருக்கும் நல்ல சாட்சி கொடுக்கப்பட்டது.

புதிய நியமிப்புகள்

அப்பா சாவதற்கு கொஞ்சம் முன்னாடிதான் அர்ஜென்டினாவில் சேவை செய்ய எனக்கு நியமிப்பு கிடைத்தது. 1957 ஆகஸ்ட் மாதத்தில், ஆன்டிஸ் மலை அடிவாரத்தில் உள்ள மென்டோஜா நகரத்துக்கு வந்து சேர்ந்தேன். 30-⁠வது கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற ஜார்ஜ் பப்பஸ் 1958-⁠ல் அங்கு நியமிக்கப்பட்டார். ஜார்ஜும் நானும் நல்ல நண்பர்களானோம்; பின்பு, 1960-⁠ல் திருமணம் செய்துகொண்டோம். 1961-⁠ஆம் வருஷத்தில், அம்மாவுக்கு 83 வயதாயிருந்தபோது அவர் காலமானார். அவர் கடைசிவரை உண்மை மதத்தை உத்தமமாய் கடைப்பிடித்து வந்தார், அவரைப் போலவே உண்மை மதத்தை அறிந்து கடவுளுக்குச் சேவை செய்ய ஏராளமானோருக்கு உதவியிருக்கிறார்.

நானும் ஜார்ஜும் பத்து வருஷமாக பல்வேறு மிஷனரி இல்லங்களில் மற்ற மிஷனரிகளோடு சேர்ந்து சேவை செய்தோம். பின்பு, ஏழு வருஷம் வட்டார வேலையில் ஈடுபட்டோம். 1975-⁠ல், வியாதியாயிருந்த எங்கள் குடும்ப அங்கத்தினர்களைக் கவனித்துக்கொள்ள அமெரிக்காவுக்குத் திரும்பினோம். 1980-⁠ல் என் கணவர் ஸ்பானிஷ் மொழி பேசும் பிராந்தியத்தில் வட்டார கண்காணியாக சேவை செய்ய அழைக்கப்பட்டார். அப்போது அமெரிக்காவில் சுமார் 600 ஸ்பானிஷ் சபைகள் இருந்தன. 26 வருடங்களாக, அங்கு அநேக சபைகளைச் சந்தித்தோம். அங்கிருந்த சபைகள் 3,000-⁠க்கும் அதிகமான சபைகளாக பெருகியதைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றோம்.

‘இந்த வழியிலேயே’ அவர்கள் நடந்தார்கள்

குடும்பத்தில் இளைய தலைமுறையும் முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் பாக்கியம் என் அம்மாவுக்குக் கிடைத்தது. உதாரணத்திற்கு, என்னுடைய பெரிய அக்கா எஸ்தரின் மகள், காரல் 1953-⁠ல் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். டென்னிஸ் டிரம்பார் என்பவரை மணமுடித்தாள்; அதுமுதல் அவர்கள் இரண்டு பேரும் முழுநேர ஊழியம் செய்து வருகிறார்கள். எஸ்தருடைய இன்னொரு மகள் லோயஸ், வென்டல் ஜென்ஸன் என்பவரை மணந்துகொண்டாள். 41-⁠வது கிலியட் பள்ளியில் கலந்துகொண்ட இவர்கள் 15 வருடங்களாக நைஜீரியாவில் மிஷனரி சேவை செய்தார்கள். விமான விபத்தில் பெற்றோரை இழந்த மார்க்கை லீயோவின் சகோதரி ரூத் லா லான்ட்டும் அவருடைய கணவர் கர்ட்டிஸும் தத்தெடுத்துக்கொண்டார்கள். மார்க்கும் அவனுடைய மனைவி லவனும் அநேக ஆண்டுகளுக்குப் பயனியர்களாக சேவை செய்தார்கள். தங்களுடைய நான்கு பிள்ளைகளையும் ‘இந்த வழியிலேயே’ வளர்த்தெடுத்தார்கள்.​—⁠ஏசா. 30:⁠21.

இப்போது என்னுடைய அண்ணன் ஆர்லன் மட்டுமே உயிரோடு இருக்கிறார், அவருக்கு சுமார் 95 வயது இருக்கும். இன்னும் யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்து வருகிறார். ஜார்ஜும் நானும் முழுநேர சேவையை தொடர்ந்து சந்தோஷமாக செய்து வருகிறோம்.

அம்மா விட்டுச்சென்ற ஆஸ்தி

அம்மா பொத்திப் பொத்தி பாதுகாத்த அருமையான பொக்கிஷங்களில் ஒன்று இப்போது என்னிடம் இருக்கிறது. அதுதான் திருமண பரிசாக என்னுடைய அப்பா அவருக்குக் கொடுத்த மேஜை. அதிலுள்ள ஒரு அறையில் ஒரு பழைய நோட்டு புத்தகம் இருந்தது. அதில் சில கடிதங்களும், சாட்சி கொடுத்து செய்தித்தாளுக்கு அவர் எழுதிய கட்டுரைகளும் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் சில 1900-⁠களின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தவை. அம்மாவின் நெஞ்சை குளிர்வித்த கடிதங்களும்​—⁠மிஷனரி பிள்ளைகள் எழுதிய கடிதங்களும்​—⁠அந்த மேஜை அறையில் இருந்தன. அதை மீண்டும் மீண்டும் படிப்பதில் எனக்கு அலாதி பிரியம்! அவர் எங்களுக்கு எழுதிய கடிதங்கள் எப்போதுமே உற்சாக ஊற்றாக இருந்திருக்கின்றன; அவற்றில் நம்பிக்கையூட்டும் விஷயங்களை எங்களுக்கு எழுதி அனுப்புவார். ஆனால், மிஷனரி ஆகவேண்டும் என்ற என் அம்மாவின் கனவு மட்டும் நனவாகவே இல்லை. இருந்தாலும், மிஷனரி சேவைமீது அவருக்கு இருந்த தீரா ஆசை பின்வந்த தலைமுறையினரை தொற்றிக்கொண்டது. புதிய பூமியில் அம்மா அப்பா, அக்கா அண்ணன் . . . என என் முழு குடும்பமும் ஒன்றுகூடும் அந்த நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேன்!​—⁠வெளி. 21:​3, 4.

[அடிக்குறிப்புகள்]

a எமில் எச். வான் டாலனின் வாழ்க்கை சரிதையை ஜூன் 15, 1983 காவற்கோபுர இதழில் 27-⁠30 பக்கங்களில் காண்க.

b ஜூன் 22, 1952 விழித்தெழு! இதழில் 3, 4 பக்கங்களைக் காண்க.

[பக்கம் 17-ன் படம்]

எமிலியா பெடர்ஸன்

[பக்கம் 18-ன் படம்]

1916: அம்மா, அப்பா (கையில் மார்வீன்); கீழே, இடமிருந்து வலம்: ஆர்லன், எஸ்தர், லில்லியன், மில்டிரட்

[பக்கம் 19-ன் படம்]

லீயோவும் யூனிஸும், இறப்பதற்கு சில காலம் முன்பு

[பக்கம் 20-ன் படம்]

1950: இடமிருந்து வலம், மேலே: எஸ்தர், மில்டிரட், லில்லியன், யூனிஸ், ரூத்; கீழே: ஆர்லன், அம்மா, அப்பா, மார்வீன்

[பக்கம் 20-ன் படம்]

2001-⁠ல், ஜார்ஜ் பப்பஸும் ரூத் பப்பஸும் வட்டார சேவையில்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்