‘யெகோவாவின் தூதர் சூழ்ந்துநின்று காக்கிறார்’
கிறிஸ்டபல் கான்னல் சொன்னபடி
பைபிள் சம்பந்தமாக கிறிஸ்டஃபர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் நாங்கள் மூழ்கிவிட்டிருந்தோம். அதனால், நாங்கள் நேரமாகிவிட்டதையும் கவனிக்கவில்லை, கிறிஸ்டஃபர் அடிக்கடி ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டு இருந்ததையும் கவனிக்கவில்லை. கடைசியில், அவர் எங்களைப் பார்த்து, “இப்போது ஆபத்தில்லை, நீங்கள் பத்திரமாகப் போகலாம்” என்று சொன்னார். பின்பு நாங்கள் சைக்கிளில் ஏறும்வரை கூடவே வந்து வழியனுப்பி வைத்தார். அப்படியென்ன ஆபத்து இருந்ததை அவர் பார்த்தார்?
இங்கிலாந்திலுள்ள ஷெஃபீல்ட் என்ற இடத்தில் 1927-ஆம் வருடம் நான் பிறந்தேன். இரண்டாம் உலகப் போரின்போது குண்டு வீச்சில் எங்களுடைய வீடு தரைமட்டமானது. அதனால், என்னுடைய பாட்டியின் வீட்டிற்கு நான் அனுப்பப்பட்டேன். அங்குதான் பள்ளிப்படிப்பை முடித்தேன். நான் ஒரு கான்வென்டில் படித்த சமயத்தில் அங்கிருந்த கன்னியாஸ்திரீகளிடம், எங்கு பார்த்தாலும் அக்கிரமமும் அடிதடி சண்டையும் ஏன் நடக்கிறது என பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால், அவர்களும் சரி மதப்பற்றுள்ள மற்றவர்களும் சரி, நான் கேட்ட கேள்விக்குத் திருப்திகரமான பதிலைத் தரவில்லை.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு, நான் நர்ஸ் படிப்பை முடித்தேன். பாடிங்டன் பொது மருத்துவமனையில் பணிபுரிவதற்காக நான் லண்டனுக்குச் சென்றேன். ஆனால், அந்த நகரத்தில் அடிதடி சண்டைகள் இன்னும் அதிகமாக நடந்ததைப் பார்த்தேன். கொரியப் போரில் ஈடுபடுவதற்காக என்னுடைய அண்ணன் சென்ற பிறகு, மருத்துவமனைக்கு முன்னாலேயே ஒருவர் பயங்கரமாக அடிக்கப்படுவதைப் பார்த்தேன். அடித்த அடியில் அவருக்குக் கண்பார்வையே போய்விட்டது; ஆனாலும் ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை. கிட்டதட்ட அந்தச் சமயத்தில்தான் நானும் அம்மாவும் ஆவியுலகத்தொடர்பு சம்பந்தமான கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தோம். ஆனாலும், ஏன் இந்தளவு அக்கிரமம் நடக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பைபிளைப் படிக்க ஊக்குவிக்கப்பட்டேன்
ஒரு நாள், யெகோவாவின் சாட்சியாக மாறியிருந்த என்னுடைய மூத்த அண்ணன் ஜான், என்னைப் பார்க்க வந்திருந்தார். “உலகத்தில் ஏன் இவ்வளவு அக்கிரமம் நடக்கிறதென்று உனக்குத் தெரியுமா?” என அவர் கேட்டார். “தெரியாது” என்றேன். அவர் தன்னுடைய பைபிளைத் திறந்து வெளிப்படுத்துதல் 12:7-12-ஐ வாசித்துக் காட்டினார். இந்த உலகத்தில் நடக்கிற கெட்ட காரியங்களுக்குச் சாத்தானும் பேய்களும்தான் முக்கியக் காரணம் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டேன். அவர் சொன்னதைக் கேட்டு, சீக்கிரத்திலேயே ஒரு யெகோவாவின் சாட்சியோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். என்றாலும், மனித பயத்தின் காரணமாக, ஞானஸ்நானம் பெறுவதற்குத் தயங்கினேன்.—நீதி. 29:25.
என்னுடைய அக்கா டாரதியும் யெகோவாவின் சாட்சியாக ஆகியிருந்தார். அவரும் அவருடைய வருங்கால கணவர் பில் ராபர்ட்ஸும் நியு யார்க்கில் நடந்த சர்வதேச மாநாட்டில் (1953) கலந்துகொண்டு திரும்பி வந்திருந்தபோது, ஒரு சகோதரி எனக்கு பைபிள் படிப்பு நடத்தியிருந்ததாக அவர்களிடம் சொன்னேன். அப்போது பில், “புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த எல்லா வசனங்களையும் எடுத்துப் பார்த்தாயா? பதில்களைக் குறித்து வைத்தாயா?” என்று கேட்டார்; இல்லை என்று நான் சொன்னதும், “அப்படியென்றால், நீ படிக்கவே இல்லை என்று அர்த்தம்! அந்தச் சகோதரியை அழைத்து திரும்பவும் பைபிளைப் படி” என்று அவர் சொன்னார். ஏறக்குறைய அந்தச் சமயத்தில், பேய்கள் எனக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தன. அவற்றிடமிருந்து என்னைப் பாதுகாக்கும்படியும் விடுவிக்கும்படியும் யெகோவாவிடம் மன்றாடியது இன்னும் ஞாபகமிருக்கிறது.
ஸ்காட்லாந்திலும் அயர்லாந்திலும் பயனியர் சேவை
ஜனவரி 16, 1954-ல் நான் ஞானஸ்நானம் பெற்றேன். மருத்துவமனையில் நான் பணிபுரிய ஒத்துக்கொண்ட காலம் மே மாதத்துடன் முடிந்தது. ஆகவே, ஜூன் மாதத்திலிருந்து பயனியர் செய்ய ஆரம்பித்தேன். எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஸ்காட்லாந்திலுள்ள க்ரான்ஞ்மாத் என்ற இடத்திற்கு விசேஷ பயனியராக அனுப்பப்பட்டேன். அந்தளவுக்கு ஒதுக்குப்புறமான இடத்திலும் யெகோவாவின் தூதர்கள் என்னை ‘சூழ்ந்துநின்று காத்ததை’ உணர்ந்தேன்.—சங். 34:7, பொது மொழிபெயர்ப்பு.
1956-ல் அயர்லாந்தில் சேவை செய்யும்படி அழைக்கப்பட்டேன். அங்குள்ள கால்வே நகரத்திற்கு இரண்டு சகோதரிகளுடன் நியமிக்கப்பட்டேன். ஊழியத்தில் முதல் நாளே ஒரு பாதிரியைச் சந்தித்தேன். சில நிமிடங்களுக்குள் ஒரு போலீஸ்காரர் அங்கு வந்து என்னையும் என்னுடன் வந்த சகோதரியையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். எங்களுடைய பெயர்களையும் விலாசங்களையும் வாங்கிய உடனேயே யாருக்கோ ஃபோன் செய்தார். “ஆமாம் ஃபாதர், அவர்களுடைய வீடு எங்கிருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும்” என்று அவர் சொன்னது எங்களுடைய காதில் விழுந்தது. ஆம், அந்தப் பாதிரிதான் அவரை அனுப்பியிருந்தார்! நாங்கள் உடனடியாக வீட்டைக் காலி செய்ய வேண்டுமென சொல்லும்படி வீட்டின் சொந்தக்காரரை வற்புறுத்தினார்கள். அதனால், அந்தப் பகுதியைவிட்டு வந்துவிடுவதுதான் நல்லதென கிளை அலுவலகம் ஆலோசனை கூறியது. நாங்கள் ரயில் நிலையத்திற்குப் பத்து நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தோம். ஆனால், ரயில் கிளம்பாமல் நின்றுகொண்டிருந்தது. எங்களை எப்படியாவது அந்த ரயிலில் ஏற்றிவிடுவதற்காக ஒருவர் அங்கு காத்துக்கொண்டிருந்தார். நாங்கள் கால்வேக்கு வந்து மூன்றே வாரங்களில் இது நடந்தது.
பின்பு, லிமிரிக் என்ற மற்றொரு நகரத்திற்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம். அது முழுக்க முழுக்க கத்தோலிக்க சர்ச்சின் ஆதிக்கத்தில் இருந்தது. ரவுடிக் கும்பல்கள் எப்போதும் எங்களைப் பார்த்து கத்திக் கூச்சல் போட்டன. கதவைத் திறந்து எங்களிடம் பேசக்கூட நிறைய பேர் பயந்தார்கள். ஒரு வருடத்திற்கு முன்னால், அருகிலிருந்த க்லூன்லாரா என்ற சிறிய ஊரில் ஒரு சகோதரர் பயங்கரமாக அடிவாங்கியிருந்தார். அப்படிப்பட்ட இடத்தில்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த கிறிஸ்டஃபர் என்பவரைச் சந்தித்தோம். திரும்பவும் வந்து தன்னுடைய பைபிள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படி அவர் கேட்டதால் நாங்கள் சந்தோஷப்பட்டோம். அடுத்த முறை அவரைச் சந்தித்தபோது, ஒரு பாதிரி உள்ளே வந்து, எங்களை வெளியே போகச் சொல்லும்படி கிறிஸ்டஃபரிடம் அதிகாரம் செய்தார். ஆனால் கிறிஸ்டஃபரோ, “இந்தப் பெண்களை நான்தான் வரச் சொன்னேன். அவர்கள் வருவதற்குமுன் கதவைத் தட்டினார்கள். ஆனால், உங்களை நான் வரச் சொல்லவுமில்லை, நீங்கள் வருவதற்குமுன் கதவைத் தட்டவுமில்லை” என்று முகத்தில் அறைந்தாற்போல் அவரிடம் சொன்னார். உடனே அவர் கோபாவேசத்துடன் வெளியேறினார்.
அந்தப் பாதிரி ஒரு கும்பலைக் கூட்டி கிறிஸ்டஃபரின் வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த விஷயம் எங்களுக்கு தெரியவில்லை. அவர்கள் எங்களைத் தாக்க வந்திருப்பதை அறிந்ததால்தான், ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த விதமாக கிறிஸ்டஃபர் நடந்துகொண்டார். அந்த ஆட்கள் அங்கிருந்து செல்லும்வரை அவர் எங்களைப் போகவிடாமல் பேசிக்கொண்டிருந்தார். சீக்கிரத்திலேயே, அவரும் அவருடைய குடும்பத்தாரும் அங்கிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதால் அவர்கள் இங்கிலாந்திற்குக் குடிமாறிச் சென்றதைப் பிற்பாடு அறிந்துகொண்டோம்.
கிலியட் பள்ளிக்கு அழைக்கப்பட்டேன்
1958-ல் நியு யார்க்கில் நடந்த தெய்வீக சித்தம் என்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்கு நான் திட்டமிட்டுக்கொண்டிருந்த சமயத்தில்தான் கிலியட் பள்ளியின் 33-ஆம் வகுப்புக்கு நான் அழைக்கப்பட்டேன். மாநாட்டிற்குப் பிறகு வீடு திரும்புவதற்குப் பதிலாக, 1959-ல் கிலியட் பள்ளி துவங்கும்வரை கனடாவைச் சேர்ந்த ஒன்டாரியோவிலுள்ள காலிங்வுட் என்ற ஊரில் ஊழியம் செய்தேன். ஆனால், அந்த மாநாட்டின்போது, எரிக் கான்னல் என்பவரைச் சந்தித்தேன். அவர் 1957-ல் சத்தியத்தைக் கற்று 1958-ல் பயனியர் சேவையைத் துவங்கியிருந்தார். மாநாட்டிற்குப் பிறகு, நான் கனடாவில் தங்கியிருந்த சமயத்திலும், கிலியட் பயிற்சியின் சமயத்திலும் நாள் தவறாமல் அவர் எனக்குக் கடிதம் எழுதினார். எனக்குப் பட்டம் கிடைத்த பிறகு நாங்கள் என்ன செய்யப்போகிறோமோ என நினைத்துக் குழம்பினேன்.
கிலியட் பள்ளியில் கலந்துகொண்டது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. அக்கா டாரதியும் அவருடைய கணவரும்கூட அதே வகுப்பில் இருந்தார்கள். அவர்கள் இருவரும் மிஷனரிகளாக போர்ச்சுகலுக்கு நியமிக்கப்பட்டார்கள். நானோ அயர்லாந்துக்கு நியமிக்கப்பட்டதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். என்னை அக்காவோடு நியமிக்காதது எவ்வளவு ஏமாற்றமாக இருந்தது தெரியுமா? எங்களுக்கு வகுப்பு நடத்திய ஒரு சகோதரரிடம் சென்று, நான் ஏதாவது தப்பு செய்துவிட்டேனா என்று கேட்டேன். “இல்லை, இல்லை. நீங்களும் உங்களுடைய பார்ட்னர் ஐலீன் மயோனியும் உலகிலுள்ள எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் போவதற்குத்தான் ஒத்துக்கொண்டீர்கள்” என்று பதிலளித்தார். அயர்லாந்தும் அவற்றில் ஒன்றுதானே!
மீண்டும் அயர்லாந்துக்கு
ஆகஸ்ட் 1959-ல் நான் மீண்டும் அயர்லாந்துக்கு வந்து சேர்ந்தேன். அங்குள்ள டூன் லர்ரா சபைக்கு நியமிக்கப்பட்டேன். இதற்கிடையே, எரிக் இங்கிலாந்துக்குத் திரும்பியிருந்தார், எனக்கு ரொம்பவே பக்கத்தில் வந்துவிட்டதை நினைத்து சந்தோஷத்தில் மிதந்தார். அவரும்கூட ஒரு மிஷனரியாவதற்கு விரும்பினார். அப்போதெல்லாம், அயர்லாந்துக்கு மிஷனரிகள் அனுப்பப்பட்டதால் தானும் அங்கு வந்து பயனியர் செய்ய முடியுமென சொன்னார். பின்பு, அவர் டூன் லர்ராவுக்குக் குடிமாறினார். 1961-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர் மோட்டார் பைக் விபத்தில் படுகாயமடைந்தார். மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டிருந்ததால், அவரைக் காப்பாற்ற முடியுமா என்று டாக்டர்களுக்குச் சந்தேகமாயிருந்தது. மூன்று வாரம் மருத்துவமனையில் இருந்த பிறகு, ஐந்து மாதங்களுக்கு அவரை நான் வீட்டில் வைத்துக் கவனித்துக்கொண்டேன். என்னால் முடிந்தவரை தொடர்ந்து ஊழியமும் செய்தேன்.
1965-ல் எட்டு பிரஸ்தாபிகள் இருந்த ஸ்லைகோ சபைக்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம். இது வடமேற்குக் கடற்கரையிலுள்ள ஒரு துறைமுகமாகும். மூன்று வருடங்களுக்குப் பிறகு, இன்னும் வடக்கே லான்டன்டெரி என்ற ஊரிலுள்ள சிறிய சபைக்கு மாறிச் சென்றோம். ஒருநாள், ஊழியத்தை முடித்துவிட்டுத் திரும்புகையில் நாங்கள் குடியிருந்த தெருவின் குறுக்கே முள் கம்பி வேலி போடப்பட்டிருந்ததைப் பார்த்தோம். வடக்கு அயர்லாந்தில் பிரச்சினைகள் தலைதூக்கியிருந்தன. இளைஞர் கோஷ்டிகள் கார்களுக்குத் தீ வைத்தார்கள். அந்த நகரம் ஏற்கெனவே புராட்டஸ்டன்ட்டினரின் பகுதி, கத்தோலிக்கரின் பகுதி என பிரிக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வது ஆபத்தாக இருந்தது.
தொல்லைகளின் மத்தியில் வாழ்க்கையும் ஊழியமும்
என்றாலும், எல்லா இடங்களிலும் நாங்கள் ஊழியம் செய்தோம். தேவதூதர்கள் எங்களைச் சூழ்ந்துநின்று காப்பாற்றியதை நாங்கள் மீண்டும் உணர்ந்தோம். நாங்கள் ஊழியம் செய்கிற இடத்தில் கலவரம் வெடித்துவிட்டதென்றால் உடனடியாக வேறு இடத்திற்குச் சென்றுவிடுவோம்; கலவரம் அடங்கியபின் மீண்டும் அந்த இடத்திற்கு வருவோம். ஒருசமயம், எங்களுடைய வீட்டிற்குப் பக்கத்தில் கலவரம் வெடித்தது. பக்கத்திலிருந்த பெயின்ட் கடையில் எரிந்துகொண்டிருந்த பொருட்கள் சிதறி எங்களுடைய அபார்ட்மென்ட்டின் ஜன்னல்திட்டில் வந்து விழுந்தன. எங்களுடைய அபார்ட்மென்ட்டும் தீப்பிடித்து விடுமோ என்ற பயத்தில் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தோம். 1970-ல் நாங்கள் பெல்ஃபாஸ்ட் என்ற இடத்திற்கு மாறிய பிறகு, அந்த பெயின்ட் கடையும், நாங்கள் முன்பு குடியிருந்த அபார்ட்மென்ட்டும் பெட்ரோல் குண்டு வெடித்ததில் எரிந்து சாம்பலானதைக் கேள்விப்பட்டோம்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் நானும் ஒரு சகோதரியும் ஊழியத்திற்குச் சென்றபோது, வித்தியாசமான நீண்ட குழாய் ஒரு வீட்டின் ஜன்னல்திட்டில் இருந்ததைக் கவனித்தோம். ஆனாலும், நாங்கள் நிற்காமல் நடந்து போய்க்கொண்டே இருந்தோம். சில நிமிடங்களில் அது வெடித்தது. வெளியே வந்து பார்த்த மக்கள் நாங்கள்தான் அந்தக் குழாய் குண்டை வைத்தோம் என்று நினைத்தார்கள்! அதற்குள்ளாக அந்தப் பகுதியில் குடியிருந்த ஒரு சகோதரி எங்களை அவர்களுடைய வீட்டிற்குள் அழைத்தார். அதனால், நாங்கள் அந்தக் குண்டை வைக்கவில்லை என்பதை அக்கம்பக்கத்தார் புரிந்துகொண்டார்கள்.
1971-ல் ஒரு சகோதரியைப் பார்ப்பதற்காக நாங்கள் லான்டன்டெரிக்குச் சென்றோம். நாங்கள் வந்த வழியையும், கடந்துவந்த சோதனைச் சாவடியையும் பற்றி அவருக்கு விளக்கியபோது, “அந்தச் சோதனைச் சாவடியில் யாருமே இல்லையா?” என்று அந்தச் சகோதரி கேட்டார். “இருந்தார்கள், ஆனால் அவர்கள் எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை” என்று சொன்னபோது அவர் வியந்து போனார். ஏன்? ஏனென்றால், அதற்கு முந்தின நாட்களில், ஒரு டாக்டரின் காரையும் ஒரு போலீஸின் காரையும் சிலர் கடத்திக்கொண்டுபோய் எரித்துவிட்டார்களாம்.
பிறகு, 1972-ல் நாங்கள் கார்க் என்ற இடத்திற்கு மாறிச் சென்றோம். அதன்பின் நேஸ் என்ற இடத்திற்கும், பிறகு ஆர்க்லோ என்ற இடத்திற்கும் சென்று ஊழியம் செய்தோம். கடைசியாக, 1987-ல் காசல்பார் என்ற இடத்திற்கு நியமிக்கப்பட்டோம். அங்குதான் இப்போதும் சேவை செய்துகொண்டிருக்கிறோம். அங்கு ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டும் பணிக்கு உதவும் பெரும் பாக்கியத்தைப் பெற்றோம். 1999-ல் எரிக்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஆனாலும், யெகோவாவின் உதவியோடும் சபையாரின் அன்பான ஆதரவோடும் அந்தச் சூழ்நிலையை என்னால் சமாளிக்க முடிந்தது, அவர் மீண்டும் சுகமடையும் வரையில் அவரைக் கவனித்துக்கொள்ளவும் முடிந்தது.
நானும் எரிக்கும் இரண்டு முறை பயனியர் ஊழியப் பள்ளியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றோம். எரிக் இப்போதும் ஒரு மூப்பராகச் சேவை செய்து வருகிறார். நான் கடும் மூட்டு அழற்சி வியாதியால் அவதிப்படுகிறேன்; என்னுடைய இரண்டு இடுப்பு எலும்புகளும், இரண்டு கால் மூட்டு எலும்புகளும் நீக்கப்பட்டு செயற்கை எலும்புகள் பொருத்தப்பட்டுள்ளன. நான் கடும் மத எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறேன், அரசியல் கொந்தளிப்புகளின் மத்தியிலும் சமுதாயப் பிரச்சினைகளின் மத்தியிலும் வாழ்ந்திருக்கிறேன்; ஆனால், நான் சந்தித்த மிகப்பெரிய சவால் கார் ஓட்ட முடியாமல் போனதுதான். அது உண்மையிலேயே எனக்கு ஒரு சோதனையாக இருந்தது; ஏனென்றால், நினைத்த இடத்திற்கெல்லாம் என்னால் போக முடியவில்லை. இருந்தாலும், சபையார் பெரிதும் உதவியிருக்கிறார்கள், எப்போதும் ஆதரவாய் இருந்திருக்கிறார்கள். இப்போது நான் கைத்தடியின் உதவியோடு நடமாடுகிறேன்; சற்றுத் தூரமான இடங்களுக்குப் போக பாட்டரியில் ஓடுகிற மூன்று சக்கர சைக்கிளைப் பயன்படுத்துகிறேன்.
நானும் எரிக்கும் சேர்ந்து விசேஷ பயனியர்களாக மொத்தம் 100 வருடங்களுக்குமேல் சேவை செய்திருக்கிறோம்; அதில் 98 வருடங்களை அயர்லாந்தில் செலவிட்டிருக்கிறோம். ஊழியத்திலிருந்து ஓய்வுபெறும் எண்ணமே எங்களுக்கு இல்லை. எப்போதும் அற்புதங்கள் நடக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் யெகோவாவுடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களையும் உண்மையோடு சேவை செய்கிறவர்களையும் ‘சூழ்ந்துநின்று காக்கிறார்கள்’ என்பதை நம்புகிறோம்.