உங்கள் உத்தமம் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது
“என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோசப்படுத்து.”—நீதி. 27:11.
1, 2. (அ) சாத்தான் எழுப்பிய எந்தச் சவாலைப் பற்றி யோபு புத்தகம் விவரிக்கிறது? (ஆ) யோபுவின் காலத்திற்குப் பிறகும் சாத்தான் யெகோவாவை நிந்தித்துக்கொண்டிருப்பதை எது காட்டுகிறது?
யெகோவா தம்முடைய உண்மை ஊழியனான யோபுவின் உத்தமத்தைச் சோதிக்க சாத்தானை அனுமதித்தார். அதனால், யோபு தன்னுடைய கால்நடைகளையும் பிள்ளைகளையும் உடல் ஆரோக்கியத்தையும் இழந்தார். யோபுவின் உத்தமத்தைக் குறித்துச் சாத்தான் சவால்விட்டபோது அவன் யோபுவை மட்டுமே மனதில் வைத்திருக்கவில்லை. “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான்” என்று அவன் சொன்னான். அது யோபுவை மட்டுமல்ல மற்றவர்களையும் உட்படுத்திய விவாதமாக இருந்தது; யோபுவின் காலத்திற்குப் பிறகும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது.—யோபு 2:4.
2 யோபுவுக்குச் சோதனைகள் வந்து கிட்டத்தட்ட 600 வருடங்களுக்குப் பிறகு சாலொமோன் இவ்வாறு எழுதும்படி யெகோவா தூண்டினார்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோசப்படுத்து.” (நீதி. 27:11) சாலொமோன் காலத்தில்கூட சாத்தான் யெகோவாவிடம் சவால்விட்டுக்கொண்டிருந்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதோடு, 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுச் சில காலம் கழித்து சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதுமுதல் கடவுளுடைய ஊழியர்களை அவன் குற்றம்சாட்டிக்கொண்டு இருப்பதை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் கண்டார். ஆம், இந்தப் பொல்லாத உலகத்தினுடைய கடைசி காலத்தின் இறுதிக் கட்டமான இன்றும் கடவுளுடைய ஊழியர்களின் உத்தமத்தைக் குறித்துச் சாத்தான் சவால்விட்டுக்கொண்டுதான் இருக்கிறான்!—வெளி. 12:10.
3. என்ன முக்கிய விஷயங்களை யோபு புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்?
3 யோபு புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிற மூன்று முக்கிய விஷயங்களைச் சற்றுக் கவனியுங்கள். முதலாவதாக, மனிதகுலத்தின் நிஜமான விரோதியாகவும் கடவுளுடைய மக்களை எதிர்ப்பவனாகவும் இருப்பவன் பிசாசாகிய சாத்தானே என்பதை யோபுவுக்கு வந்த சோதனைகள் வெட்டவெளிச்சமாக்குகின்றன. இரண்டாவதாக, நாம் என்ன சோதனைகளை எதிர்ப்பட்டாலும் கடவுளுடன் நெருங்கிய பந்தம் இருந்தால் நாம் தொடர்ந்து உத்தமமாக இருக்க முடியும். மூன்றாவதாக, சோதனைகளின்போது நாம் ஏதாவது ஒரு விதத்தில் பரீட்சிக்கப்பட்டால், யோபுவுக்குக் கடவுள் உதவியதுபோல நமக்கும் உதவுவார். எப்படி? அவருடைய வார்த்தை, அமைப்பு, சக்தி ஆகியவற்றின் மூலமாகும்.
நிஜ எதிரியை மனதில் வைத்திருங்கள்
4. தற்போதைய உலக நிலைமைகளுக்கு யார் காரணம்?
4 சாத்தான் இருக்கிறான் என்றே நிறையப் பேர் நம்புவதில்லை. உலக நிலைமைகளைப் பார்த்து அவர்கள் கதிகலங்கிப் போயிருந்தாலும் அதற்கெல்லாம் பிசாசாகிய சாத்தான்தான் காரணமென்பதை உணராதிருக்கிறார்கள். உண்மைதான், மனிதர்கள் படும் கஷ்டங்களுக்குப் பெரும்பாலும் மனிதர்களே காரணமாக இருக்கிறார்கள். நம் முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் தங்கள் படைப்பாளரின் துணையின்றி மனம்போல் வாழத் தீர்மானித்தார்கள். அதுமுதற்கொண்டு தலைமுறை தலைமுறையாக மக்கள் மிகவும் ஞானமற்ற விதத்தில் நடந்துவந்திருக்கிறார்கள். இருந்தாலும், கடவுளுக்கு விரோதமாகக் கலகம் செய்யும்படி ஏவாளைப் பிசாசுதான் வஞ்சித்தான். சாகக்கூடிய அபூரண மனிதர்கள் மத்தியில் சாத்தான் ஓர் உலகத்தை உருவாக்கி அதைத் தன் பிடியில் வைத்திருக்கிறான். அவன் ‘இந்த உலகத்தின் கடவுளாக’ இருப்பதால் மனித சமுதாயமும் அவனுடைய குணங்களையே வெளிக்காட்டுகிறது. அதனால், திரும்பிய பக்கமெல்லாம் பெருமை, பகைமை, பொறாமை, பேராசை, மோசடி, கலகம் ஆகியவற்றைத்தான் பார்க்க முடிகிறது. (2 கொ. 4:4; 1 தீ. 2:14; 3:6; யாக்கோபு 3:14, 15-ஐ வாசியுங்கள்.) இவை அரசியல் தகராறுகள், மதப் பூசல்கள், வெறுப்பு, ஊழல், கலவரம் ஆகியவற்றிற்கு வழிவகுத்துள்ளன; இதனால் மனிதகுலம் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
5. நாம் தெரிந்துவைத்திருக்கிற முக்கியத் தகவல்களை என்ன செய்ய வேண்டும்?
5 யெகோவாவின் ஊழியர்களான நாம் எப்பேர்ப்பட்ட முக்கியத் தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறோம்! ஆம், உலகம் சீரழிந்து வருவதற்கு யார் காரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நிஜ எதிரியை மக்களுக்கு அம்பலப்படுத்துவதற்காக நாம் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளத் தூண்டப்படுகிறோம், அல்லவா? அதோடு, உண்மைக் கடவுளான யெகோவாவின் பக்கம் இருப்பதிலும், சாத்தானுக்கும் மனித பிரச்சினைகளுக்கும் அவர் எப்படி முடிவுகட்டப்போகிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதிலும் நாம் சந்தோஷப்படுகிறோம், அல்லவா?
6, 7. (அ) உண்மை வணக்கத்தார் துன்பப்படுவதற்கு யார் காரணம்? (ஆ) எலிகூவின் உதாரணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
6 உலக மக்கள் சந்திக்கிற பல பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல, கடவுளுடைய மக்கள் சந்திக்கிற எதிர்ப்புக்கும் சாத்தான்தான் காரணம். நம்மைச் சோதிக்க வேண்டும் என்பதில் அவன் குறியாக இருக்கிறான். அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு கிறிஸ்து, “சீமோனே, சீமோனே, இதோ! கோதுமையைச் சலித்தெடுப்பதுபோல் உங்கள் எல்லாரையும் சலித்தெடுக்க வேண்டுமெனச் சாத்தான் கேட்டிருக்கிறான்” என்று சொன்னார். (லூக். 22:31) அதேபோல், இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற நாம் ஒவ்வொருவருமே ஏதோவொரு விதத்தில் சோதிக்கப்படுவோம். பிசாசு, “கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்” எனப் பேதுரு சொன்னார். “கிறிஸ்து இயேசுவின் சீடர்களாகத் தேவபக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்” என பவுலும் சொன்னார்.—1 பே. 5:8; 2 தீ. 3:12.
7 நம் சக கிறிஸ்தவர் ஒருவரைக் கடும் துயரம் தாக்குகையில், நாம் எப்படி நிஜ எதிரியை மனதில் வைத்து நடந்துகொள்ளலாம்? பாதிக்கப்பட்ட சகோதரரைவிட்டு விலகிப்போவதற்குப் பதிலாக உண்மையான நண்பனாக யோபுவிடம் பேசிய எலிகூவைப்போல் நாம் நடந்துகொள்ளலாம். நம் எல்லாருடைய விரோதியான சாத்தானுக்கு எதிரான போராட்டத்தில் அந்தச் சகோதரருக்கு நாம் பக்கபலமாக இருக்கலாம். (நீதி. 3:27; 1 தெ. 5:25) எப்பாடுபட்டாவது, நம்முடைய சக கிறிஸ்தவர் உத்தமத்தைக் காத்துக்கொள்ளவும் அதன்மூலம் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தவும் உதவுவதே நம் இலட்சியமாக இருக்க வேண்டும்.
8. யெகோவாவைக் கனப்படுத்துவதிலிருந்து யோபுவைத் தடுத்து நிறுத்த சாத்தானால் ஏன் முடியவில்லை?
8 சாத்தான் முதலாவதாக யோபுவின் கால்நடைகளைப் பறித்தான். அவை அவருக்கு விலைமதிப்புள்ள சொத்தாக, சொல்லப்போனால் அவருடைய வயிற்றுப் பிழைப்பாக, இருந்தன. அவற்றை வணக்கத்திற்காகவும் அவர் பயன்படுத்தினார். யோபு தன் பிள்ளைகளைப் பரிசுத்தப்படுத்திய பிறகு, ‘ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, . . . அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவார்; இந்தப் பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்து வருவார்.’ (யோபு 1:4, 5) யோபு யெகோவாவுக்குத் தவறாமல் மிருக பலிகளைச் செலுத்தி வந்தார் என இதிலிருந்து தெரிகிறது. ஆனால், சோதனைகள் அவரைத் தாக்க ஆரம்பித்ததும் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஏனென்றால், யெகோவாவைக் கனப்படுத்துவதற்கு யோபுவிடம் “விலைமதிப்புள்ள சொத்துக்கள்” எதுவும் இருக்கவில்லை. (நீதி. 3:9, NW) என்றாலும், அவருடைய உதடுகளால் யெகோவாவைக் கனப்படுத்த முடிந்தது, அதைத்தான் அவர் செய்தார்!
யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
9. நம்மிடம் இருக்கும் விலைமதிப்புள்ள சொத்து என்ன?
9 நாம் ஏழையோ பணக்காரரோ, இளையவரோ முதியவரோ, ஆரோக்கியமானவரோ ஆரோக்கியமற்றவரோ எப்படிப்பட்டவராக இருந்தாலும் யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள முடியும். அது, எப்பேர்ப்பட்ட சோதனைகள் மத்தியிலும் நம் உத்தமத்தைக் காத்துக்கொள்ளவும் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தவும் நமக்கு உதவும். சத்தியத்தைப் பற்றி அதிகம் தெரியாத சிலரும்கூட தைரியமாகத் தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ள அப்படிப்பட்ட பந்தம்தான் உதவியிருக்கிறது.
10, 11. (அ) சோதனைகளின் மத்தியிலும் ஒரு சகோதரி எப்படி உத்தமத்தைக் காத்துக்கொண்டார்? (ஆ) அந்தச் சகோதரி சாத்தானுக்கு என்ன பதிலடி கொடுத்தார்?
10 வாலென்டீனா கார்னோஸ்கயா என்ற சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். ரஷ்யாவில், கடும் சோதனைகளின் மத்தியிலும் உண்மையுள்ள யோபுவைப்போல் உத்தமத்தைக் காத்துக்கொண்ட அநேக சாட்சிகளில் இவரும் ஒருவர். 1945-ல் அவருக்கு சுமார் 20 வயதாக இருந்தபோது ஒரு சகோதரர் அவருக்குச் சாட்சி கொடுத்தார். பைபிளைப் பற்றி பேச மீண்டும் இரண்டு முறை வாலென்டீனாவை அந்தச் சகோதரர் சந்தித்தார்; ஆனால், அதன்பிறகு அவர் அந்தச் சகோதரரைப் பார்க்கவே இல்லை. என்றாலும், வாலென்டீனா அக்கம்பக்கத்தாரிடம் பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால் அவர் கைது செய்யப்பட்டு எட்டு வருடங்கள் முகாமில் அடைக்கப்பட்டார். 1953-ல் விடுதலை செய்யப்பட்ட உடனேயே மீண்டும் பிரசங்கிக்க ஆரம்பித்தார். மறுபடியும் கைது செய்யப்பட்டார்; ஆனால், இந்த முறை பத்து வருடங்களுக்குச் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு முகாமில் பல வருடங்கள் கழித்த பிறகு இன்னொரு முகாமுக்கு மாற்றப்பட்டார். அந்த முகாமில் சில சகோதரிகள் இருந்தார்கள்; அவர்களிடம் ஒரு பைபிள் இருந்தது. ஒருநாள், வாலென்டீனாவுக்கு ஒரு சகோதரி அந்த பைபிளைக் காட்டினார். அதைப் பார்த்ததும் அவர் சிலிர்த்துப் போனார்! 1945-ல் தன்னைச் சந்திக்க வந்த சகோதரரிடம்தான் அவர் பைபிளைப் பார்த்திருந்தார், அதன்பிறகு இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பார்த்தார்!
11 வாலென்டீனா, 1967-ல் விடுதலை செய்யப்பட்டார்; அப்போது ஒருவழியாக, அவரால் ஞானஸ்நானம் பெற முடிந்தது. தனக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி 1969 வரை ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டார். ஆனால், அந்த வருடத்தில் மறுபடியும் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களுக்குச் சிறையில் தள்ளப்பட்டார். இருந்தாலும், அவர் பிரசங்கிப்பதை நிறுத்தவே இல்லை. 2001-ல் அவர் இறந்தார்; அதற்குள் 44 பேர் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவியிருந்தார். அவர் 21 வருடங்கள் சிறைகளிலும் முகாம்களிலும் கழித்திருந்தார். தன் உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்காகத் தன் சுதந்திரத்தையும் மற்ற எல்லாவற்றையும் தியாகம் செய்யத் தயாராய் இருந்திருந்தார். தன் இறுதி காலத்தில் வாலென்டீனா இவ்வாறு சொன்னார்: “எனக்கென்று சொந்தமாக ஓர் இடம் இருந்ததில்லை. என்னுடைய எல்லா உடைமைகளையும் ஒரே ஒரு பெட்டிக்குள் வைத்திருந்தேன். இருந்தாலும், யெகோவாவின் சேவையில் எனக்குச் சந்தோஷமும் திருப்தியும் கிடைத்தன.” சோதனைகள் வந்தால் மனிதர்கள் கடவுளுக்கு உத்தமமாக இருக்க மாட்டார்கள் என்று சாத்தான் சொன்ன குற்றச்சாட்டிற்கு வாலென்டீனா தக்க பதிலடியைக் கொடுத்திருக்கிறார், அல்லவா? (யோபு 1:9-11) அவர் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தினார் என்பதில் சந்தேகமே இல்லை; அவரையும் உண்மையுள்ள மற்றவர்களையும் உயிர்த்தெழுப்பப்போகும் காலத்திற்காக யெகோவா மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார் என்பதிலும் சந்தேகமே இல்லை.—யோபு 14:15.
12. யெகோவாவுடன் உள்ள நம் பந்தத்தில் அன்பு என்ன பங்கு வகிக்கிறது?
12 நாம் அன்பின் நிமித்தம் யெகோவாவிடம் நட்பு வைத்திருக்கிறோம். நாம் அவருடைய குணங்களை மதிக்கிறோம்; அவருடைய நோக்கங்களுக்கு இசைவாக வாழ முழு முயற்சி எடுக்கிறோம். பிசாசு சொல்வதற்கு நேர்மாறாக, நாம் மனப்பூர்வமாகவும் நிபந்தனையின்றியும் யெகோவாமீது அன்பு காட்டுகிறோம். இருதயப்பூர்வமான இந்த அன்பு, சோதனைகளின் மத்தியிலும் உத்தமத்தைக் காத்துக்கொள்ள நமக்கு உதவுகிறது. யெகோவாவும் அவருடைய பங்கில், ‘தம்முடைய பரிசுத்தவான்களின் [“உத்தமர்களின்,” NW] பாதையைக் காப்பாற்றுவார்.’—நீதி. 2:8; சங். 97:10.
13. நாம் யெகோவாவுக்காகச் செய்வதை அவர் எப்படிக் கருதுகிறார்?
13 நமக்குக் கொஞ்சமும் தகுதியில்லையென நாம் நினைத்தாலும் யெகோவா மீதுள்ள அன்பு அவருடைய பெயரைக் கனப்படுத்த நம்மைத் தூண்டுகிறது. அவர் நம்முடைய நல்ல எண்ணங்களைப் பார்க்கிறார்; நாம் ஆசைப்படுவதையெல்லாம் செய்ய முடியாமற்போனாலும் அதற்காக அவர் நம்மைக் குற்றப்படுத்துவதில்லை. ஏனென்றால், நாம் என்ன செய்கிறோம் என்பது மட்டுமல்ல, அதை ஏன் செய்கிறோம் என்பதும் அவருக்கு முக்கியம். வாழ்க்கையில் இடிமேல் இடியெனப் பல சோதனைகளை யோபு சகிக்க வேண்டியிருந்தபோதிலும் யெகோவாவின் வழிகளைத் தான் நேசிப்பதைக் குறித்து தன்னைக் குற்றப்படுத்தியவர்களிடம் பேசினார். (யோபு 10:12; 28:28-ஐ வாசியுங்கள்.) எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் ஆகிய மூவரும் உண்மையைப் பேசாததால் அவர்கள்மீது கடவுளுடைய கோபம் மூண்டதைக் குறித்து யோபு புத்தகத்தின் கடைசி அதிகாரம் சொல்கிறது. அதே சமயத்தில், யோபுவை நான்கு தடவை ‘என் தாசன்’ என்று குறிப்பிட்டதன் மூலமும், பொய்த் தேற்றரவாளர்களின் சார்பாக ஜெபம் செய்யும்படி சொன்னதன் மூலமும் யோபு தம் பிரியத்திற்குரியவர் என்பதை யெகோவா சுட்டிக்காட்டினார். (யோபு 42:7-9) நம்மீதும் யெகோவா பிரியம் வைக்கும் விதத்தில் நாம் நடந்துகொள்வோமாக!
யெகோவா தம் உண்மை ஊழியர்களை ஆதரிக்கிறார்
14. யோபு தன் எண்ணத்தை திருத்திக்கொள்ள யெகோவா எப்படி உதவினார்?
14 யோபு அபூரணராக இருந்தபோதிலும் தன் உத்தமத்தைக் காத்துக்கொண்டார். சில சமயங்களில், பிரச்சினைகள் வாட்டிவதைத்தபோது அவர் தப்புக்கணக்குப் போட்டார். உதாரணத்திற்கு, அவர் யெகோவாவிடம், “உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர். . . . உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்” என்றார். அதுமட்டுமல்ல, தன்மீது எந்தக் குற்றமுமில்லை என்பதை நிரூபிப்பதில் குறியாய் இருந்தார்; “நான் துன்மார்க்கன் அல்ல” என்றும் ‘என் கைகளிலே கொடுமையில்லை, என் ஜெபம் சுத்தமாயிருக்கிறது’ என்றும் சொன்னார். (யோபு 10:7; 16:17; 30:20, 21) இருந்தாலும், யெகோவா யோபுவிடம் கேள்விக்குமேல் கேள்வி கேட்டு அவருக்கு அன்போடு உதவினார்; யோபு தன்னைப் பற்றியே யோசிக்காமல் இருக்கவும், கடவுளுடைய மேன்மையையும் மனிதரின் சிறுமையையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் அக்கேள்விகள் அவருக்கு உதவின. யெகோவாவின் அறிவுரையை யோபு ஏற்று தன்னைத்தானே திருத்திக்கொண்டார்.—யோபு 40:8-ஐயும் 42:2, 6-ஐயும் வாசியுங்கள்.
15, 16. இன்று யெகோவா தம் ஊழியர்களுக்கு எவ்விதங்களில் உதவுகிறார்?
15 இன்றும்கூட யெகோவா தம் ஊழியர்களுக்கு அன்போடும் அதே சமயத்தில் கண்டிப்போடும் அறிவுரைகள் தருகிறார். அதோடு, மிகச் சிறந்த நன்மைகளை நாம் அனுபவிக்கிறோம். உதாரணத்திற்கு, இயேசு கிறிஸ்து மீட்புப் பலியை அளித்து நம் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்க வழிசெய்திருக்கிறார்; நாம் அபூரணராக இருந்தாலும் அந்த பலியின் அடிப்படையில் கடவுளோடு நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும். (யாக். 4:8; 1 யோ. 2:1) நமக்குச் சோதனைகள் வரும்போது, கடவுளுடைய சக்தியின் ஆதரவுக்காகவும் பலத்துக்காகவும் நாம் ஜெபம் செய்கிறோம். அதோடு, நம்மிடம் முழு பைபிளும் இருக்கிறது; அதை நாம் வாசித்து தியானித்தால், விசுவாசப் பரீட்சைகளுக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, சர்வலோக அரசதிகாரத்தையும் நம் ஒவ்வொருவருடைய உத்தமத்தையும் பற்றிய விவாதங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
16 உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக நாம் இருப்பதாலும் அளவிலா நன்மைகளைப் பெறுகிறோம்; “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பார் மூலம் யெகோவா ஆன்மீக உணவை நம் எல்லாருக்கும் அளிக்கிறார். (மத். 24:45-47) யெகோவாவின் சாட்சிகளுடைய கிட்டத்தட்ட 1,00,000 சபைகளில் நடைபெறும் கூட்டங்கள், வரவிருக்கும் விசுவாசப் பரீட்சைகளுக்காக நம்மைத் தயார்படுத்திப் பலப்படுத்துகின்றன. ஜெர்மனியில் வசிக்கிற ஷீலா என்ற இளம் சாட்சியின் உதாரணத்தைக் கவனியுங்கள்.
17. இன்று யெகோவாவின் அமைப்பு தரும் அறிவுரைகளை அப்படியே பின்பற்றுவது ஞானமானது என்பதற்கு உதாரணம் கொடுங்கள்.
17 பள்ளியில் ஒருநாள் ஷீலாவின் வகுப்பிற்கு ஆசிரியர் கொஞ்ச நேரத்திற்கு வரவில்லை. அப்போது, மாணவர்கள் வீஜா பலகையை வைத்து ஆவிகளிடம் பேசத் தீர்மானித்தார்கள். உடனடியாக, ஷீலா வகுப்பைவிட்டு வெளியேறினாள்; பிற்பாடு, நடந்ததைக் கேள்விப்பட்டபோது தான் எடுத்த முடிவைக் குறித்துச் சந்தோஷப்பட்டாள். ஏனென்றால், வீஜா பலகையைப் பயன்படுத்திய சமயத்தில், பேய்கள் அங்கு வந்துவிட்டதை உணர்ந்த சில மாணவர்கள் பயந்துபோய் ஓட்டமாக ஓடிவிட்டார்களாம். என்றாலும், முன்கூட்டியே அங்கிருந்து வெளியேற ஷீலாவுக்கு எது உதவியது? “இந்தச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்புதான் வீஜா பலகைகளின் ஆபத்துகளைப் பற்றி ராஜ்ய மன்றத்தில் ஒரு பேச்சு கொடுக்கப்பட்டது. அதனால், என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குத் தெரிந்திருந்தது. நீதிமொழிகள் 27:11 சொல்கிறபடியே யெகோவாவைச் சந்தோஷப்படுத்த நான் விரும்பினேன்” என அவள் சொல்கிறாள். கூட்டத்திற்குச் சென்று கூர்ந்து கவனித்தது ஷீலாவுக்கு எவ்வளவு உதவியாய் இருந்தது!
18. என்ன செய்ய நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
18 கடவுளுடைய அமைப்பிடமிருந்து வரும் அறிவுரைகளை அப்படியே பின்பற்ற நாம் ஒவ்வொருவரும் தீர்மானமாயிருப்போமாக. தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வது, பைபிள் வாசிப்பது, பைபிள் பிரசுரங்களைப் படிப்பது, ஜெபம் செய்வது, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களோடு பழகுவது ஆகியவை தேவையான வழிநடத்துதலையும் ஆதரவையும் அளிக்கின்றன. நாம் வெற்றிபெற வேண்டுமென யெகோவா விரும்புகிறார்; நாம் தொடர்ந்து உத்தமத்தைக் காட்டுவோம் என்ற நம்பிக்கையுடனும் இருக்கிறார். யெகோவாவின் பெயரைப் புகழ்வதும், உத்தமத்தைக் காத்துக்கொள்வதும், அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவதும் நமக்குக் கிடைத்திருக்கிற அரும்பெரும் பாக்கியம்!
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• என்ன நிலைமைகளுக்கும் சோதனைகளுக்கும் சாத்தான் காரணமாக இருக்கிறான்?
• நம்மிடமுள்ள விலைமதிப்புள்ள சொத்து எது?
• நாம் எதன் நிமித்தம் யெகோவாவிடம் நட்பு வைத்திருக்கிறோம்?
• இன்று யெகோவா நம்மை ஆதரிக்கும் சில வழிகள் யாவை?
[பக்கம் 8-ன் படம்]
நீங்கள் தெரிந்துவைத்திருக்கிற முக்கிய விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்லத் தூண்டப்படுகிறீர்களா?
[பக்கம் 9-ன் படம்]
உத்தமத்தைக் காத்துக்கொள்ள சக கிறிஸ்தவர்களுக்கு நாம் உதவலாம்
[பக்கம் 10-ன் படம்]
உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்காக எல்லாவற்றையும் தியாகம்செய்ய வாலென்டீனா தயாராய் இருந்தார்