வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
தாயின் வயிற்றிலுள்ள ஒரு குழந்தை செத்துவிட்டால் அதற்கு உயிர்த்தெழுதல் உண்டா?
இவ்விதங்களில் குழந்தைகளைப் பறிகொடுத்தவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றவர்களுக்குக் கடினமாய் இருக்கலாம். பெற்றோர் சிலர் இந்த இழப்பினால் மீளமுடியாத சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள். இப்படித்தான் ஒரு தாய் ஐந்து குழந்தைகளைப் பறிகொடுத்தார். பிற்பாடு, அவர் ஆரோக்கியமான இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயாகும் பாக்கியத்தைப் பெற்றார். என்றாலும், ஒவ்வொரு குழந்தையைப் பறிகொடுத்த அனுபவமும் அவருடைய நெஞ்சைவிட்டு நீங்காமல் இருந்தது. பிரசவத்திலோ குறைமாதத்திலோ செத்துப்போன அந்தக் குழந்தைகள் உயிரோடு இருந்திருந்தால் அவர்களுக்கு எத்தனை வயது இருந்திருக்கும் என்பதை அவர் இறக்கும்வரை நினைவில் வைத்திருந்தார். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களுடைய குழந்தைகள் உயிர்த்தெழுந்து வருவார்களென எதிர்பார்க்க முடியுமா?
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நமக்குத் தெரியாது. பிரசவத்திலோ குறைமாதத்திலோ செத்துப்போன குழந்தைகளுக்கு உயிர்த்தெழுதல் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பைபிள் நேரடியாகச் சொல்வதில்லை. இருந்தாலும், இது சம்பந்தமான சில நியமங்களை அது குறிப்பிடுகிறது; அவை நம் மனதுக்கு ஓரளவு ஆறுதலைத் தரலாம்.
இப்போது, இரண்டு கேள்விகளைக் கவனிக்கலாம். முதலாவதாக, யெகோவாவின் கண்ணோட்டத்தில் ஓர் உயிர் எப்போது உருவாகிறது, கருத்தரிப்பின்போதா, பிரசவத்தின்போதா? இரண்டாவதாக, தாயின் வயிற்றிலுள்ள குழந்தையை யெகோவா எப்படிப் பார்க்கிறார், ஒரு தனி நபராகவா அல்லது செல்களும் திசுக்களும் சேர்ந்த வெறும் ஒரு பிண்டமாகவா? பைபிளிலுள்ள நியமங்கள் இந்த இரண்டு கேள்விகளுக்கும் தெளிவான பதில்களைத் தருகின்றன.
உயிரானது பிரசவத்தின்போது அல்ல, ஆனால் அதற்கு வெகு முன்னரே உருவாகிவிடுவதை நியாயப்பிரமாணம் தெளிவாகக் காட்டியது. எப்படி? ஒரு சிசுவைக் கொல்வது மரண தண்டனைக்குரிய குற்றம் என அது காட்டியது. “ஜீவனுக்கு ஜீவன் . . . கொடுக்க வேண்டும்” என்று அது குறிப்பிட்டது.a (யாத். 21:22, 23, 25) அப்படியானால், கருப்பையிலுள்ள சிசு உயிருள்ளது, அதுவும்கூட ஒரு மனித ஜீவியே. இந்த மாறா உண்மையைப் புரிந்திருப்பதால்தான் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் கருக்கலைப்பைக் கடவுளுக்கு விரோதமான பெரும் பாவமாகக் கருதி அதை அறவே தவிர்க்கிறார்கள்.
ஆம், தாயின் வயிற்றிலுள்ள குழந்தை உயிருள்ளது; ஆனால், அந்த உயிரை யெகோவா எந்தளவுக்கு மதிப்புள்ளதாய்க் கருதுகிறார்? பிறவாத குழந்தையின் சாவுக்குக் காரணமானவர் மரண தண்டனை பெற வேண்டுமென அந்த நியாயப்பிரமாணச் சட்டம் வலியுறுத்தியது. அப்படியானால், பிறவாத குழந்தையின் உயிரைக் கடவுள் உயர்வாய் மதிக்கிறார் என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, பிறவாத குழந்தையை ஒரு தனி நபராக யெகோவா பார்க்கிறார் என்பதை இன்னும் அநேக வசனங்கள் காட்டுகின்றன. உதாரணமாக, யெகோவாவைப் பற்றி அவருடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது ராஜா இவ்வாறு சொன்னார்: “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். . . . என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் . . . அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”—சங். 139:13-16; யோபு 31:14, 15.
பிறவாத குழந்தைக்குத் தனித்தன்மை வாய்ந்த பண்புகள் இருப்பதையும் எதிர்காலத்தில் அது சிறந்த நபராக ஆவதற்கான வாய்ப்பு இருப்பதையும் யெகோவா பார்க்கிறார். ஈசாக்கின் மனைவியாகிய ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைச் சுமந்துகொண்டிருந்தபோது, யெகோவா ஒரு தீர்க்கதரிசனம் சொன்னார்; அவளுடைய வயிற்றில் மோதிக்கொண்டிருந்த அந்த இரண்டு ஆண் குழந்தைகளின் பண்புகள் பிற்காலத்தில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமென அவர் முன்கூட்டியே அறிந்திருந்ததை இது காட்டுகிறது.—ஆதி. 25:22, 23; ரோ. 9:10-13.
யோவான் ஸ்நானகரின் உதாரணமும்கூட ஆர்வத்திற்குரியது. சுவிசேஷப் பதிவு இவ்வாறு சொல்கிறது: ‘மரியாளுடைய வாழ்த்தை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய வயிற்றிலிருந்த சிசு துள்ளியது; எலிசபெத் கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டாள்.’ (லூக். 1:41) இந்த விஷயத்தை மருத்துவராகிய லூக்கா விவரிக்கையில், பிறவாத குழந்தையை மட்டுமல்லாமல் பிறந்த குழந்தையையும் குறிக்கிற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார். தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த பிள்ளையாகிய இயேசுவைக் குறிப்பிடுகையில் அதே கிரேக்க வார்த்தையைத்தான் அவர் பயன்படுத்தினார்.—லூக். 2:12, 16; 18:15.
இதையெல்லாம் பார்க்கும்போது, வயிற்றிலுள்ள குழந்தைக்கும் பிறந்த குழந்தைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகவா பைபிள் காட்டுகிறது? அப்படிக் காட்டுவதாகத் தெரியவில்லை. நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் இதை ஒத்துக்கொள்கின்றன. உதாரணமாக, வயிற்றிலுள்ள குழந்தையால் வெளியில் நடப்பவற்றை உணர்ந்துகொள்ளவும் அதற்கேற்ப பிரதிபலிக்கவும் முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள். அதனால்தான், ஒரு தாய்க்கும் அவளுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கும் இடையே நெருங்கிய பந்தம் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.
கடைசியில் குழந்தை பிறக்கிற சமயம் வருகிறது, என்றாலும், பிறக்கும் சமயம் குழந்தைக்குக் குழந்தை வேறுபடுகிறது. இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு தாய்க்குக் குறைமாதத்தில் குழந்தை பிறக்கிறது, ஆனால் அது சில நாட்களிலேயே இறந்துவிடுகிறது. இன்னொரு தாயோ நிறைமாதமாக இருக்கிறாள், ஆனால் பிரசவத்திற்குச் சற்று முன்னர் குழந்தை இறந்துவிடுகிறது. முதல் தாயின் குழந்தை குறைமாதத்தில் பிறந்தது என்பதற்காக அதற்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை உண்டு என்றும் இரண்டாவது தாயின் குழந்தைக்கு அந்த நம்பிக்கை இல்லை என்றும் சொல்ல முடியுமா?
ஆக, கரு உருவாகும் சமயத்தில் உயிர் தோன்றுகிறது என்றும் பிறவாத குழந்தையை மதிப்புமிக்க தனி நபராக யெகோவா கருதுகிறார் என்றும் பைபிள் தெளிவாகக் கற்பிக்கிறது. இந்த பைபிள் உண்மைகளை வைத்துப் பார்க்கையில், பிறப்பதற்கு முன்பு இறந்துபோகும் குழந்தைக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை இல்லையெனச் சொல்வது சிலருக்கு முரணாகத் தெரிகிறது. அந்த நம்பிக்கை இல்லையென்றால், பைபிள் உண்மைகளின் அடிப்படையில் நாம் கருக்கலைப்பைத் தவிர்ப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடுமென அவர்கள் நினைக்கிறார்கள்.
இந்த விஷயம் சம்பந்தமாக இப்பத்திரிகை ஏற்கெனவே கேட்டிருந்த சில கேள்விகள், பிறப்பதற்கு முன்பு இறந்துபோகிற குழந்தைகள் உயிர்த்தெழுவது நடைமுறையானதா என்பதன் பேரில் சந்தேகத்தை எழுப்பியிருந்தன. உதாரணத்திற்கு, புதிய உலகத்தில், முழு வளர்ச்சியடையாத கருவையும்கூட அதன் தாயின் வயிற்றில் மறுபடியும் கடவுள் வைப்பாரா என்ற கேள்வியை இந்தப் பத்திரிகை கேட்டிருந்தது. ஆனால் இப்போது, இது சம்பந்தமாக ஆளும் குழு இன்னுமதிகமாக ஆராய்ச்சி செய்து, தியானித்து, ஜெபம் செய்ததில், உயிர்த்தெழுதலைப் பொறுத்தவரை இக்கேள்விகள் முக்கியமல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. ஏனென்றால், “கடவுளால் எல்லாமே முடியும்” என்று இயேசு சொன்னார். (மாற். 10:27) இது உண்மை என்பதை இயேசுவின் உதாரணமே காட்டுகிறது; அவருடைய உயிர் பரலோகத்திலிருந்து ஓர் இளம் கன்னியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டது; மனித கண்ணோட்டத்தில் இது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு விஷயம் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பிறப்பதற்குமுன் இறந்துபோகிற குழந்தைகள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று பைபிள் கற்பிக்கிறதா? இந்தக் கேள்விக்கு பைபிள் நேரடியான பதிலைத் தருவதில்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்; அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உயிர்த்தெழுதல் உண்டென்று எந்த மனிதராலும் அடித்துச் சொல்ல முடியாது. இந்த விஷயம் சம்பந்தமாக நாம் ஏராளமான கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நாம் எதையும் ஊகிக்காமல் இருப்பதுதான் நல்லது. அதேசமயத்தில், ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக நம்பலாம்: அப்படிப்பட்ட குழந்தைகள் உயிர்த்தெழுப்பப்படுவார்களா மாட்டார்களா என்பது, கிருபையும் இரக்கமும் நிறைந்த யெகோவா தேவன் கையில்தான் இருக்கிறது. (சங். 86:15) உயிர்த்தெழுதலின் மூலம் மரணத்தின் பாதிப்பை அறவே நீக்க வேண்டும் என்பது அவருடைய மனப்பூர்வமான ஆசை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. (யோபு 14:14, 15) அவர் எப்போதும் சரியானதைத்தான் செய்வார் என்றும் நாம் முழுமையாக நம்பலாம். அவர் அன்போடு தமது மகனின் மூலமாக, ‘பிசாசின் செயல்களை ஒழித்து,’ இந்தப் பொல்லாத உலகத்திலே நம் மனதில் ஏற்பட்டிருக்கும் எல்லா ரணங்களையும் ஆற்றப்போவது உறுதி.—1 யோ. 3:8.
[அடிக்குறிப்பு]
a தாயைக் கொலை செய்தால்தான் மரண தண்டனை என்ற அர்த்தத்தில் இந்த வசனம் சிலசமயங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. என்றாலும், மூல எபிரெய வசனத்தின்படி, தாய்க்கு மட்டுமல்ல அவள் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் ஏற்படுகிற உயிர்ச்சேதத்தைப் பற்றித்தான் நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது.
[பக்கம் 13-ன் படம்]
நம் மனதில் ஏற்பட்டிருக்கும் எல்லா ரணங்களையும் யெகோவா ஆற்றுவார்