‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாய்’ இருங்கள்!
“கிறிஸ்து நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார்; இவ்வாறு, நம்மை எல்லா விதமான அக்கிரமங்களிலிருந்தும் விடுவித்து, அவருக்கே உரிய மக்களாகவும் நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமுள்ள மக்களாகவும் ஆகும்படி நம்மைத் தூய்மையாக்கினார்.”—தீத். 2:14.
1. பொ.ச. 33, நிசான் 10-ஆம் தேதி ஆலயப் பகுதிக்கு இயேசு வரும்போது என்ன நடக்கிறது?
வருடம் பொ.ச. 33, தேதி நிசான் 10. பஸ்கா பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. எருசலேமின் ஆலயப் பகுதியில் திரண்டு வந்திருக்கும் மக்கள் ஆனந்தப் பரவசத்தில் திளைக்கிறார்கள். ஆனால், இயேசு அங்கு வரும்போது என்ன நடக்குமென்று தெரியுமா? இதை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சுவிசேஷ எழுத்தாளர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆம், விற்பவர்களையும் வாங்குபவர்களையும் இயேசு இரண்டாவது முறையாக விரட்டியடிக்கிறார். காசு மாற்றுபவர்களின் மேஜைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போடுகிறார். (மத். 21:12; மாற். 11:15; லூக். 19:45, 46) மூன்று வருடங்களுக்குமுன் செய்த காரியத்தையே அவர் இப்போதும் செய்கிறார். அவருடைய பக்திவைராக்கியம் சற்றும் தணியவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.—யோவா. 2:13-17.
2, 3. ஆலயத்தைச் சுத்தப்படுத்துவதில் மட்டுமே இயேசு பக்திவைராக்கியம் காட்டவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?
2 இயேசு அங்கு வந்தபோது ஆலயத்தைச் சுத்தப்படுத்துவதில் மட்டுமே தம்முடைய பக்திவைராக்கியத்தைக் காட்டவில்லை என்பதை மத்தேயுவின் சுவிசேஷம் சுட்டிக்காட்டுகிறது. அவர் தம்மிடம் வந்த பார்வையற்றவர்களையும் கால் ஊனமுற்றவர்களையும் சுகப்படுத்தினார் என்றும் அது சொல்கிறது. (மத். 21:14) இயேசு செய்த மற்ற செயல்களைப் பற்றி லூக்காவின் சுவிசேஷம் குறிப்பிடுகிறது. “[இயேசு] தினந்தோறும் ஆலயத்தில் கற்பித்து வந்தார்” என அது சொல்கிறது. (லூக். 19:47; 20:1) இவ்விதத்தில், அவருடைய பக்திவைராக்கியம் ஊழியத்திலும் பளிச்செனத் தெரிந்தது.
3 பிற்பாடு, தீத்துவுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதுகையில் “கிறிஸ்து நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார்; இவ்வாறு, நம்மை எல்லா விதமான அக்கிரமங்களிலிருந்தும் விடுவித்து, அவருக்கே உரிய மக்களாகவும் நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமுள்ள மக்களாகவும் ஆகும்படி நம்மைத் தூய்மையாக்கினார்” என்று குறிப்பிட்டார். (தீத். 2:14) இன்று நாம் எவ்வழிகளில் ‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாய்’ இருக்கலாம்? யூதாவை ஆண்ட நல்ல ராஜாக்களின் உதாரணங்கள் நம்மை எவ்வாறு ஊக்குவிக்கலாம்?
பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் பக்திவைராக்கியம்
4, 5. யூதேயாவை ஆண்ட நான்கு ராஜாக்கள் நற்காரியங்களைச் செய்வதில் எப்படி வைராக்கியத்தைக் காட்டினார்கள்?
4 ஆசா, யோசபாத், எசேக்கியா, யோசியா ஆகிய நால்வரும் யூதாவில் உருவ வழிபாட்டை ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கினார்கள். ஆசா, ‘அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டினார்.’ (2 நா. 14:3) யெகோவாவுடைய வணக்கத்தின்மீது அளவுகடந்த பக்திவைராக்கியம் கொண்டிருந்த யோசபாத், ‘மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றினார்.’—2 நா. 17:6; 19:3.a
5 எருசலேமில் எசேக்கியா ஏற்பாடு செய்த அந்த ஏழுநாள் புனிதப் பண்டிகையான பஸ்காவைக் கொண்டாடிய பிறகு, அங்கு “வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீனெங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்.” (2 நா. 31:1) யோசியா எட்டு வயதிலேயே ராஜாவானார். ‘அவர் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினார்’ என பைபிள் பதிவு காட்டுகிறது. (2 நா. 34:3) ஆக, இந்த நான்கு ராஜாக்களும் நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாய் இருந்தார்கள்.
6. நம்முடைய ஊழியத்தை, யூதாவைச் சேர்ந்த உண்மையுள்ள ராஜாக்கள் செய்த வேலையோடு ஏன் ஒப்பிடலாம்?
6 இன்று நாமும்கூட, உருவ வழிபாடு உட்பட பொய்மதப் போதனைகளிலிருந்து விடுபட மக்களுக்கு உதவும் வேலையில் ஈடுபடுகிறோம். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது, எல்லாவித மக்களையும் சந்திக்க நமக்கு உதவுகிறது. (1 தீ. 2:4) ஆசியாவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணின் உதாரணத்தைக் கவனியுங்கள்; அவளுடைய அம்மா தன் வீட்டில் கணக்குவழக்கில்லாத உருவச் சிலைகளையும் படங்களையும் வைத்து பூஜை செய்து வந்தாராம். ஆனால், இந்த உருவங்களெல்லாம் உண்மையில் கடவுளாக இருக்க முடியாது என்பதை அந்த இளம் பெண் உணர்ந்தாள்; ஆகவே, கடவுள் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென அடிக்கடி பிரார்த்தனை செய்தாள். ஒரு நாள் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவளுடைய வீட்டிற்கு வந்தார்கள். உண்மையான கடவுளுடைய பெயர் யெகோவா என்று சொன்னார்கள்; அவரைப் பற்றி கற்றுக்கொடுப்பதாகவும் சொன்னார்கள். உருவ வழிபாட்டைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டபோது அவள் பூரித்துப்போனாள்! இப்போது அவள் வெளி ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடுகிறாள்; உண்மையான கடவுளைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் மெச்சத்தக்க பக்திவைராக்கியத்தைக் காட்டி வருகிறாள்.—சங். 83:17; 115:4-8; 1 யோ. 5:21.
7. யோசபாத்தின் நாளில் தேசமெங்கும் சென்று போதித்தவர்களைப் பின்பற்ற நாம் என்ன செய்யலாம்?
7 நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பிராந்தியத்தில் எந்தளவு முழுமையாக நாம் வீட்டுக்கு வீடு ஊழியத்தைச் செய்கிறோம்? யோசபாத் ராஜா தன்னுடைய ஆட்சியின் மூன்றாம் வருடத்தில், ஐந்து பிரபுக்களையும் ஒன்பது லேவியர்களையும் இரண்டு ஆசாரியர்களையும் அழைத்து, எல்லாப் பட்டணங்களுக்கும் போய் யெகோவாவின் சட்டங்களை மக்களுக்குப் போதிக்கும்படி சொன்னார். அவர்கள் அந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்ததால், சுற்றியிருந்த தேசத்தார் யெகோவாவுக்குப் பயப்பட ஆரம்பித்தார்கள். (2 நாளாகமம் 17:9, 10-ஐ வாசியுங்கள்.) வெவ்வேறு நாட்களிலும் நேரங்களிலும் நாம் ஊழியம் செய்யும்போது ஒரே வீட்டிலுள்ள பலரிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
8. சாட்சி கொடுக்கும் வேலையை நாம் எப்படி விரிவுபடுத்தலாம்?
8 நவீன காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் பலர் தங்களுடைய வீட்டை விட்டுவிட்டு வைராக்கியமுள்ள சாட்சிகள் அதிகம் தேவைப்படுகிற இடங்களுக்குக் குடிமாற மனமுள்ளவர்களாய் இருந்திருக்கிறார்கள். நீங்களும் அவ்வாறு செய்ய முடியுமா? வேறு இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் தங்களுடைய பகுதியிலேயே வேற்றுமொழி பேசுவோரிடம் சாட்சிகொடுக்க முயலலாம். 81 வயது ரான் என்ற சகோதரர் தன்னுடைய பிராந்தியத்தில் பற்பல நாட்டவரைச் சந்திப்பதால் 32 மொழிகளில் வணக்கம் சொல்ல கற்றிருக்கிறார்! அவர் சமீபத்தில் ஓர் ஆப்பிரிக்க தம்பதியரைத் தெருவில் சந்தித்தபோது அவர்களுடைய தாய்மொழியான யொருபா மொழியில் வணக்கம் சொன்னார். ரான் எப்போதாவது ஆப்பிரிக்காவுக்குச் சென்றிருக்கிறாரா என அவர்கள் கேட்டார்கள். “இல்லை” என அவர் சொன்னதும், தங்களுடைய மொழி அவருக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டார்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் நன்கு சாட்சி கொடுத்தார். அவர்கள் உடனடியாகச் சில பத்திரிகைகளை வாங்கிக்கொண்டதோடு, தங்களுடைய விலாசத்தையும் கொடுத்தார்கள். அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தப்படுவதற்காக அந்த விலாசத்தை ரான் சபையில் ஒப்படைத்தார்.
9. ஊழியத்தில் நாம் பைபிளிலிருந்து வசனங்களை வாசிப்பது ஏன் முக்கியம்? ஓர் உதாரணம் கொடுங்கள்.
9 யோசபாத்தின் கட்டளைப்படி தேசமெங்கும் சென்று மக்களுக்குப் போதித்தவர்கள் ‘யெகோவாவுடைய வேத புஸ்தகத்தை’ கையில் வைத்திருந்தார்கள். பைபிள் கடவுளுடைய வார்த்தையாக இருப்பதால், உலகெங்குமுள்ள சாட்சிகளான நாம் மக்களுக்கு அதிலிருந்தே கற்பிக்கிறோம். பைபிள் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை அதிலிருந்தே நேரடியாக வாசித்துக்காட்ட முயற்சி எடுக்கிறோம்; இவ்வாறு, ஊழியத்தில் பைபிளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். சகோதரி லின்டா ஒரு பெண்மணியைச் சந்தித்தபோது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற தன் கணவரைக் கவனிக்க வேண்டியிருப்பதாக அந்தப் பெண்மணி சொன்னார். “கடவுள் எனக்கு இப்படியொரு கஷ்டத்தைக் கொடுத்திருப்பதற்கு நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை” என்று அவர் ஆதங்கப்பட்டார். அதற்கு லின்டா, “உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிற ஒரு விஷயத்தை நான் சொல்லட்டுமா?” என்றார். பின்பு, யாக்கோபு 1:13-ஐ வாசித்து இவ்வாறு சொன்னார்: “நாமும் நமக்குப் பிரியமானவர்களும் அனுபவிக்கிற கஷ்டங்களெல்லாம் கடவுள் கொடுக்கிற தண்டனை இல்லை.” உடனே அந்தப் பெண்மணி லின்டாவை அன்போடு அணைத்துக் கொண்டார். லின்டா இவ்வாறு சொல்கிறார்: “பைபிளிலிருந்து என்னால் அவருக்கு ஆறுதல் சொல்ல முடிந்தது. சில சமயங்களில் பைபிளிலிருந்து நாம் வாசிக்கிற வசனங்களை அவர்கள் அதற்குமுன் கேட்டிருக்கவே மாட்டார்கள்.” அந்த உரையாடல் பைபிள் படிப்புக்கு வழிவகுத்தது.
பக்திவைராக்கியத்தோடு சேவிக்கும் இளைஞர்கள்
10. இன்றுள்ள கிறிஸ்தவ இளைஞர்களுக்கு யோசியா எப்படிச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார்?
10 நாம் மீண்டும் யோசியா ராஜாவின் உதாரணத்தைக் கவனிக்கலாம். அவர் இளம் வயதிலேயே மெய் வணக்கத்தைப் பின்பற்றினார்; சுமார் 20 வயதில், தேசமெங்கும் உருவ வழிபாட்டை ஒழிக்கும் மாபெரும் வேலையில் இறங்கினார். (2 நாளாகமம் 34:1-3-ஐ வாசியுங்கள்.) அவரைப் போலவே இன்றும் எண்ணிலடங்கா இளைஞர்கள் ஊழியத்தில் பக்திவைராக்கியத்தைக் காட்டுகிறார்கள்.
11-13. இன்று பக்திவைராக்கியத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்கிற இளைஞர்களிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
11 இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேனா 13 வயதாய் இருந்தபோது, பிரெஞ்சு மொழி தொகுதி ஒன்று பக்கத்து ஊரில் உருவாகியிருந்ததைக் கேள்விப்பட்டாள்; அப்போது அவள் பள்ளியில் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டிருந்தாள். அந்த ஊரில் நடந்த கூட்டங்களுக்கு அவளை அழைத்துச் செல்ல அவளுடைய அப்பா சம்மதித்தார். இப்போது 18 வயதில் இருக்கும் ஹேனா ஒழுங்கான பயனியராக பிரெஞ்சு மொழியில் வைராக்கியத்தோடு சாட்சிகொடுத்து வருகிறாள். நீங்களும் வேறொரு மொழியைக் கற்றுக்கொண்டு, யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவலாம், அல்லவா?
12 கடவுளைக் கனப்படுத்துகிற இலக்குகளை நாடுங்கள் என்ற ஆங்கில வீடியோவில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரேச்சல் கண்டு மகிழ்ந்தாள். 1995-ல் யெகோவாவைச் சேவிக்க ஆரம்பித்த சமயத்தில் அவள் யோசித்த விதத்தைக் குறித்து இவ்வாறு சொல்கிறாள்: “அந்தச் சமயத்தில் நான் சத்தியத்தை எனக்குச் சொந்தமாக்கியிருந்ததாக நினைத்தேன். ஆனால், அந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் புரிந்தது, இத்தனை வருடங்களாகப் பெயரளவுக்குத்தான் சத்தியத்தில் இருந்திருக்கிறேன் என்று. அதனால், நான் இனி சத்தியத்திற்காக அரும்பாடுபட வேண்டும்; ஊழியத்திற்கும் தனிப்பட்ட படிப்புக்கும் நான் முழு கவனம் செலுத்த வேண்டும், அதற்காக என்னுடைய எல்லா சக்தியையும் செலவிட வேண்டும்.” இப்போது ரேச்சல் அதிக பக்திவைராக்கியத்துடன் யெகோவாவைச் சேவிப்பதாக உணர்கிறாள். இதனால் அவள் என்ன பலன்களை அனுபவிக்கிறாள்? “யெகோவாவுடன் உள்ள என் பந்தம் ஆழமாக வேர்பிடித்திருக்கிறது. அர்த்தமுள்ள விதத்தில் ஜெபம் செய்கிறேன், நன்கு ஆராய்ந்து படிக்கிறேன், அதனால் அதிக திருப்தி அடைகிறேன்; அதுமட்டுமல்ல பைபிள் பதிவுகள் இப்போது எனக்கு இன்னும் நிஜமாகத் தெரிகின்றன. இதனால், ஊழியத்தில் அதிக சந்தோஷத்தோடு ஈடுபடுகிறேன்; யெகோவாவின் வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஆறுதலாக இருப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.”
13 லூக் என்ற மற்றொரு இளைஞன், இளைஞர் கேட்கின்றனர்—வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன? என்ற ஆங்கில வீடியோவைப் பார்த்து மிகவும் உற்சாகமடைந்தான். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு அவன் இவ்வாறு எழுதினான்: “வாழ்க்கையில் நான் என்ன இலட்சியம் வைத்திருக்கிறேன் என்பதை யோசித்து பார்க்க அது உதவியது. ‘முதலில், நிறைய படித்து சம்பாதி, அப்புறம் ஆன்மீக இலக்குகளை வை’ என்றுதான் மற்றவர்கள் என்னிடம் சதா சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்படிச் சொல்வது ஒருவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவாது, மாறாக முட்டுக்கட்டையாகவே இருக்கும்.” இளம் சகோதர சகோதரிகளே, ஹேனாவைப் போல் பள்ளியில் நீங்கள் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி உங்களுடைய ஊழியத்தை எப்படி விரிவாக்கலாமென யோசித்துப் பார்க்கலாம், அல்லவா? ரேச்சலைப் போல், உண்மையிலேயே கடவுளைக் கனப்படுத்துகிற இலக்குகளை அடைய பக்திவைராக்கியத்தோடு முயலலாம், அல்லவா? லூக்கின் மாதிரியைப் பின்பற்றி, அநேக இளைஞர்களுக்குக் கண்ணியாய் இருக்கிற ஆபத்துகளைத் தவிர்க்கலாம், அல்லவா?
எச்சரிப்புகளுக்குப் பக்திவைராக்கியத்தோடு செவிசாயுங்கள்
14. எப்படிப்பட்ட வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்வார், ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்வது இன்று ஏன் கடினம்?
14 யெகோவாவுடைய மக்கள் சுத்தமுள்ளவர்களாய் இருந்தால்தான் அவர்களுடைய வணக்கத்தை அவர் ஏற்றுக்கொள்வார். ஏசாயா இவ்வாறு எச்சரிக்கிறார்: “புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் [பாபிலோனின்] நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.” (ஏசா. 52:11) இந்த வார்த்தைகளை ஏசாயா எழுதுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே, நல்ல ராஜாவாகிய ஆசா யூதாவிலிருந்து ஒழுக்கக்கேட்டை அடியோடு ஒழிக்கும் வேலையில் முழுமூச்சாய் இறங்கினார். (1 இராஜாக்கள் 15:11-13-ஐ வாசியுங்கள்.) பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தீத்துவிடம் அப்போஸ்தலன் பவுல், இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களை ‘தமக்கே உரிய மக்களாகவும் நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ள மக்களாகவும்’ ஆகும்படி தூய்மையாக்குவதற்காகத் தம்மையே அவர்களுக்காகக் கொடுத்தார் என்று சொன்னார். (தீத். 2:14) ஒழுக்கக்கேடு மலிந்துகிடக்கும் இன்றைய சமுதாயத்தில் முக்கியமாக இளைஞர்கள் ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்வது மிகவும் கடினம். உதாரணத்திற்கு, விளம்பரப் பலகைகளிலும், டிவியிலும், திரைப்படங்களிலும், குறிப்பாக இன்டர்நெட்டிலும் வருகிற ஆபாசக் காட்சிகளைப் பார்க்காமல் இருப்பதற்கு இளையோர் முதியோர் எனக் கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே போராடுவது அவசியம்.
15. தீமையை வெறுக்க எது நமக்கு உதவும்?
15 கடவுள் கொடுக்கிற எச்சரிப்புகளுக்குச் செவிசாய்ப்பதில் பக்திவைராக்கியத்தைக் காட்டுவது தீமையை வெறுக்க நமக்கு உதவும். (சங். 97:10; ரோ. 12:9) ஒரு கிறிஸ்தவர் சொன்ன விதமாக, “ஆபாசத்தின் வலிமைமிக்க காந்த சக்தியிலிருந்து நம்மை விடுவிக்க” வேண்டுமென்றால் அதை அறவே வெறுப்பது அவசியம். காந்த சக்தியால் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும் உலோகத் துண்டுகளை விடுவிக்க அந்தச் சக்தியைவிட வலுவான ஒரு சக்தி தேவைப்படும். அவ்வாறே, ஆபாசத்தின் மீதுள்ள ஈர்ப்பிலிருந்து விடுபடுவதற்குப் பலமான முயற்சி தேவை. ஆபாசத்தினால் விளையும் பெருநாசத்தைப் பற்றிப் புரிந்துகொள்வது அதைச் ‘சீயென்று’ வெறுக்க நமக்கு உதவும். இன்டர்நெட்டில் ஆபாசக் காட்சிகளைப் பார்க்கும் பழக்கமிருந்த ஒரு சகோதரர், அதை விட்டொழிப்பதற்குப் பெருமுயற்சி செய்தார். வீட்டில் மற்றவர்கள் பார்வையில் படும்படியான இடத்தில் தன்னுடைய கம்ப்யூட்டரை மாற்றி வைத்தார். அதோடு, தன்னைச் சுத்தமாக்கிக்கொள்ளவும் நற்காரியங்களில் வைராக்கியமாக ஈடுபடவும் தீர்க்கமாக முடிவு செய்தார். அதுமட்டுமல்ல, தன்னுடைய வேலை சம்பந்தமாக இன்டர்நெட்டைப் பயன்படுத்த வேண்டியிருந்ததால், தன் மனைவி அருகில் இருக்கும்போது மட்டுமே அதைப் பயன்படுத்த அவர் முடிவு செய்தார்.
நல்நடத்தையின் மகிமை
16, 17. நம்முடைய நல்நடத்தை மற்றவர்கள்மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தலாம்? ஓர் உதாரணம் கொடுங்கள்.
16 யெகோவாவின் சேவையில் ஈடுபடுகிற இளம் ஆண்கள் பெண்கள் மத்தியில் எப்பேர்ப்பட்ட சிறந்த மனப்பான்மை நிலவுகிறது, அதைப் பார்ப்பவர்கள் எவ்வளவாய் நெகிழ்ந்து போகிறார்கள்! (1 பேதுரு 2:12-ஐ வாசியுங்கள்.) லண்டன் பெத்தேலிலுள்ள அச்சு இயந்திரத்தைப் பழுதுபார்க்கச் சென்றிருந்த ஒருவருக்கு அங்கு ஒருநாள் செலவிட்ட பிறகு, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய கண்ணோட்டமே மாறிவிட்டது. யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துவந்த அவருடைய மனைவி, தன் கணவரிடத்தில் அந்த மாற்றங்களைக் கவனித்தார். முன்பெல்லாம், சாட்சிகள் வீட்டிற்கு வருவதே அவருக்குப் பிடிக்காது. ஆனால், பெத்தேலில் தன் வேலையை முடித்துவிட்டு வந்த பிறகு, சகோதரர்கள் தன்னிடம் அன்பாக நடந்துகொண்ட விதத்தைப் பற்றி வாயாரப் புகழ்ந்தார். அங்கு யாரும் கெட்ட வார்த்தை பேசவில்லை என்று அவர் சொன்னார். எல்லாரும் பொறுமையாக நடந்துகொண்டதாகவும் அங்கே அமைதியான சூழல் இருந்ததாகவும் குறிப்பிட்டார். முக்கியமாக, இளம் சகோதர சகோதரிகள் சம்பளமின்றி வைராக்கியத்தோடு வேலை செய்வதையும், நற்செய்தியை அச்சில் வடிப்பதற்குத் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் மனமுவந்து அளிப்பதையும் பார்த்து அவர் மனங்கவரப்பட்டார்.
17 அவ்வாறே, குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக வெளி வேலைக்குச் செல்கிற சகோதர சகோதரிகளும் முழுமூச்சோடு பாடுபடுகிறார்கள். (கொலோ. 3:23, 24) இவ்வாறு சாட்சிகள் கடமையுணர்வோடு வேலை செய்வதை அவர்களுடைய முதலாளிகள் பெரிதும் மதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை இழக்க அவர்கள் விரும்புவதில்லை. அதனால் சாட்சிகளுடைய வேலை அவ்வளவு எளிதில் பறிபோவதில்லை.
18. நாம் எவ்வாறு ‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாக’ இருக்கலாம்?
18 யெகோவாமீது நம்பிக்கை வைப்பது, அவருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவது, கூடிவரும் இடங்களைப் பராமரிப்பது ஆகியவை யெகோவாவுடைய வீட்டின் மீதுள்ள பக்திவைராக்கியத்தை வெளிக்காட்டுவதற்கான சில வழிகள். அது போக, பிரசங்க வேலையிலும் சீடராக்கும் வேலையிலும் முடிந்தளவு முழுமையாக ஈடுபட வேண்டும். நாம் இளைஞராக இருந்தாலும் சரி முதியவராக இருந்தாலும் சரி, கடவுள் கொடுத்திருக்கும் சுத்தமான நெறிகளின்படி வாழக் கடினமாக முயலுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அறுவடை செய்வோம். அதுமட்டுமல்ல, எப்போதும் ‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாக’ விளங்குவோம்.—தீத்து 2:14.
[அடிக்குறிப்பு]
a ஆசா, பொய்க் கடவுட்களின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட மேடைகளை அகற்றியிருக்கலாம், ஆனால் அப்படிப்பட்ட மேடைகளை யெகோவாவின் வணக்க ஸ்தலத்திலிருந்து அகற்றாமல் இருந்திருக்கலாம். அல்லது ஆசாவுடைய ஆட்சியின் இறுதியில் மேடைகள் திரும்பக் கட்டப்பட்டிருக்கலாம்; அவருடைய மகனான யோசபாத் அவற்றை அகற்றியிருக்கலாம்.—1 இரா. 15:14; 2 நா. 15:17.
பைபிள் கால, நம் கால உதாரணங்களிலிருந்து பின்வருவனவற்றைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்:
• பிரசங்கிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் உங்களுடைய பக்திவைராக்கியத்தைக் காட்டுவது பற்றி?
• கிறிஸ்தவ இளைஞர்கள் ‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாய்’ இருப்பது பற்றி?
• மோசமான பழக்கங்களிலிருந்து விடுபடுவது பற்றி?
[பக்கம் 13-ன் படம்]
நீங்கள் ஊழியத்தில் தவறாமல் பைபிளைப் பயன்படுத்துகிறீர்களா?
[பக்கம் 15-ன் படம்]
பள்ளியில் மற்றொரு மொழியைப் பேச கற்றுக்கொள்வது உங்களுடைய ஊழியத்தை விரிவாக்க உதவலாம்