‘நற்செய்தியை அறிவிக்கிற இந்நாளில்’ கவனச்சிதறல்களைத் தவிர்த்திடுங்கள்
அந்த நான்கு தொழுநோயாளிகளும் என்ன செய்யலாமென்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். பட்டணத்து வாசலில் யாருமே அவர்களுக்குப் பிச்சை போடவில்லை. சமாரியா பட்டணத்தை சீரியர் முற்றுகையிட்டிருந்ததால் அங்கே பஞ்சம் தலைவிரித்தாடியது. எந்த உணவுப்பொருள்களை எடுத்துக்கொண்டாலும் யானை விலை, குதிரை விலை! இந்நிலையில், பட்டணத்திற்குள் சென்றாலும் எந்தப் பிரயோஜனமும் இருக்கப்போவதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அங்கே நரமாமிசம் சாப்பிடப்பட்டதாகக்கூட ஒரு செய்தி பரவியிருந்தது.—2 இரா. 6:24-29.
அதனால் அவர்கள், ‘சீரிய ராணுவத்தினரின் முகாமுக்குப் போய்ப் பார்ப்போமே; நம்மிடமிருந்து அப்படி என்னத்தை அவர்கள் கொள்ளையடித்துவிடப் போகிறார்கள்!’ என்று பேசிக்கொண்டார்கள். பின்பு இருள் சூழ்ந்த வேளையில், யார் கண்ணிலும் படாமல் அங்கே சென்றார்கள். ஒரே நிசப்தம்! காவலாளிகள் ஒருவர்கூட இருக்கவில்லை. குதிரைகளும் கழுதைகளும் கட்டப்பட்டிருந்தன. ஆனால், போர்வீரர்களைக் காணவில்லை. அந்த நான்கு பேரும் ஒரு கூடாரத்திற்குள் மெல்ல எட்டிப் பார்த்தார்கள். யாரையுமே காணோம்! ஆனால், உணவும் பானமும் எக்கச்சக்கமாக இருந்தன. உள்ளே சென்று மனம்போல் சாப்பிட்டுக் குடித்தார்கள். அங்கே விலையுயர்ந்த துணிமணியும் வெள்ளியும் பொன்னும் பொருளும் கொட்டிக் கிடப்பதைக் கண்டார்கள். அவற்றை அள்ளிக் கொண்டுபோனார்கள். பத்திரமாக ஒளித்துவைத்தார்கள். வாரிச்செல்லத் திரும்பி வந்தார்கள். சீரியர்களின் முகாம் முழுவதுமே வெறிச்சோடிக் கிடந்தது. அப்படி என்னதான் நடந்திருந்தது? யெகோவா ஓர் அற்புதத்தைச் செய்திருந்தார்! எதிரிகளுடைய ராணுவப் படையின் இரைச்சல் சீரியர்களின் காதுகளுக்குக் கேட்பதுபோல் செய்திருந்தார். தங்களை அவர்கள் தாக்குவதற்கு வந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டு அந்த சீரியர்கள் தலைதெறிக்க ஓடியிருந்தார்கள். அவர்களுடைய பொருள்களெல்லாம் கேட்பாரற்றுக் கிடந்தன!
அந்த நான்கு தொழுநோயாளிகளும் அவற்றையெல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டும் ஒளித்து வைத்துக்கொண்டும் இருந்தார்கள். சட்டென்று, பஞ்சத்தில் வாடுகிற சமாரிய மக்களின் முகங்கள் அவர்கள் நினைவுக்கு வந்தன; அவர்களுடைய மனசாட்சி உறுத்தியது! “நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு, அவசர அவசரமாக சமாரியாவுக்குப் போய், அந்த நற்செய்தியை அறிவித்தார்கள்.—2 இரா. 7:1-11.
நாம் வாழ்கிற இந்தக் காலத்தையும்கூட ‘நற்செய்தி அறிவிக்கிற நாள்’ என்று அழைக்கலாம். ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கான அடையாளத்தை’ பற்றி இயேசு சொன்னபோது, பின்வரும் முக்கிய அம்சத்தைக் குறிப்பிட்டார்: “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத். 24:3, 14) இவ்வார்த்தைகளுக்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
சொந்த விருப்பங்களும் கவலைகளும் நம்மைப் பாரமடையச் செய்யலாம்
பொன்னையும் பொருளையும் கண்ட சந்தோஷத்தில் அந்தத் தொழுநோயாளிகள் சமாரியாவைப் பற்றி ஒருகணம் மறந்தேபோனார்கள். அந்தப் பொருள்களைச் சுருட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள். நாமும் அவர்களைப் போலவே நடந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறதா? ‘பஞ்சங்கள்’ ஏற்படுவது, இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கான ஓர் அடையாளமாக இருக்கிறது. (லூக். 21:7, 11) இயேசு தம் சீடர்களை இவ்வாறு எச்சரித்தார்: “பெருந்தீனியாலும் குடிவெறியாலும் வாழ்க்கைக் கவலைகளாலும் உங்கள் இருதயம் பாரமடையாதபடிக்கு உங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.” (லூக். 21:34) கிறிஸ்தவர்களாகிய நாம், ‘நற்செய்தியை அறிவிக்கிற நாளில்’ வாழ்ந்துவருகிறோம் என்பதை மறந்துபோகுமளவுக்கு அன்றாடக் கவலைகளில் மூழ்கிவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும்.
பிளெஸ்ஸிங் என்ற சகோதரி, தனது சொந்த விருப்பங்கள் மேலோங்கிவிடாதபடி பார்த்துக்கொண்டார். அவர் ஒரு பயனியராகச் சேவை செய்தார்.. ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை முடித்தார்.. பெத்தேலில் இருந்த ஒரு சகோதரரைக் கரம்பிடித்தார்.. பெனின் பெத்தேலில் சேவை செய்கிற வாய்ப்பைப் பெற்றார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் ஹௌஸ்கீப்பராக வேலை செய்கிறேன்; இந்த வேலை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.” இவர் முழுநேர ஊழியத்தை 12 வருடங்களாகச் செய்துவருகிறார்; ‘நற்செய்தியை அறிவிக்கிற நாளை’ மனதில் வைத்துச் செயல்பட்டிருப்பதை நினைத்து இப்போது பூரிப்படைகிறார்.
நேரத்தை உறிஞ்சும் கவனச்சிதறல்கள் ஜாக்கிரதை!
இயேசு தமது 70 சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பியபோது, “அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்களோ குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானரிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று சொன்னார். (லூக். 10:2) அறுவடை சமயத்தில் ஏனோதானோவென்று இருந்துவிட்டால் பயிர்கள் நாசமாகிவிடலாம், அவ்வாறே பிரசங்க வேலையில் நாம் அசட்டையாக இருந்துவிட்டால், உயிர்கள் சேதமாகிவிடலாம். இயேசு மேலும் இவ்வாறு சொன்னார்: “வழியில் எவரையும் அரவணைத்துக்கொண்டும் நலம் விசாரித்துக்கொண்டும் நிற்காதீர்கள்.” (லூக். 10:4) “நலம் விசாரி” என்பதற்கான மூல வார்த்தை, “சௌக்கியமா?” அல்லது “நலமா?” என்று கேட்பதை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. வழியில் ஒருவர் தன் நண்பரைச் சந்திக்கும்போது இருவரும் பலமுறை அரவணைத்துக்கொண்டும், நெடுநேரம் பேசிக்கொண்டும் இருப்பதைக்கூட அர்த்தப்படுத்துகிறது. எனவே, கவனத்தைச் சிதறடிக்கிற தேவையற்ற காரியங்களைத் தவிர்த்து நேரத்தை ஞானமாகப் பயன்படுத்தும்படி இயேசு தம் சீடர்களுக்கு அறிவுறுத்தினார். காரணம், நற்செய்தியை அவர்கள் அவசரமாக அறிவிக்க வேண்டியிருந்தது.
கவனத்தைச் சிதறடிக்கிற காரியங்கள் எந்தளவு நேரத்தை உறிஞ்சிவிடக்கூடும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பல வருடங்களாக, டிவி அநேகருடைய நேரத்தைச் சூறையாடுகிற சாதனமாய் இருந்துவந்திருக்கிறது. மொபைல் ஃபோன்களையும் கம்ப்யூட்டர்களையும் பற்றி என்ன சொல்லலாம்? “சராசரியாக ஒருவர் நாளொன்றுக்கு ‘லேண்ட்லைன்’ ஃபோனில் 88 நிமிடங்களையும், மொபைல் ஃபோனில் 62 நிமிடங்களையும், ஈ-மெயில் அனுப்புவதில் 53 நிமிடங்களையும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதில் 22 நிமிடங்களையும் செலவிடுகிறார்” என்று பிரிட்டனில் 1,000 பேரிடம் நடத்தப்பட்ட சுற்றாய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படிச் செலவிடுகிற நேரத்தை மொத்தமாகக் கணக்கிட்டால், ஒரு துணைப் பயனியர் ஒரு நாளில் செலவிடும் நேரத்தைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான நேரம் அது! அதைப்போன்ற காரியங்களுக்கு நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?
நேரத்தைச் செலவிடும் விஷயத்தில் எர்னஸ்ட் செலிகர், ஹில்டகார்ட் செலிகர் தம்பதியர் கவனமாக இருந்தார்கள். அவர்கள் நாசி சித்திரவதை முகாம்களிலும் கம்யூனிஸ்ட் சிறைச்சாலைகளிலும் மொத்தமாக 40-க்கும் அதிகமான வருடங்களைச் செலவழித்திருந்தார்கள். விடுதலையான சமயத்திலிருந்து தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையின் இறுதிக்கட்டம்வரை பயனியர்களாகச் சேவை செய்தார்கள்.
செலிகர் தம்பதியரோடு கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ள அநேகர் விரும்பினார்கள். இந்தத் தம்பதியர் நினைத்திருந்தால், தூங்குகிற நேரம் தவிர மீதி நேரம் முழுவதையும் கடிதங்களை வாசிப்பதிலும் எழுதுவதிலுமே செலவிட்டிருக்கலாம். ஆனால், ஆன்மீகக் காரியங்களுக்குத்தான் அவர்கள் முதலிடம் கொடுத்தார்கள்.
நம் பிரியமானவர்களிடம் ஃபோன் மூலமோ கடிதம் மூலமோ தொடர்பு வைத்துக்கொள்வது நமக்கு உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கலாம்; அதில் தவறொன்றும் இல்லை. தினசரி வேலையிலிருந்து ஒரு மாற்றம் வேண்டுமென விரும்புவது சகஜம்தான். ஆனாலும், கவனத்தைச் சிதறடிக்கிற காரியங்கள் நம்முடைய நேரத்தை உறிஞ்சிவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும்; அதுவும், நற்செய்தியை அறிவிக்க வேண்டிய இந்நாளில்!
நற்செய்தியை முழுமையாகப் பிரசங்கியுங்கள்
‘நற்செய்தியை அறிவிக்கிற இந்நாளில்’ வாழ்வது எவ்வளவு பெரிய பாக்கியம்! ஆகவே, அந்த நான்கு தொழுநோயாளிகளின் கவனம் ஆரம்பத்தில் சிதறடிக்கப்பட்டதுபோல் நமக்கும் சம்பவிக்காதபடி பார்த்துக்கொள்வது அவசியம். “நாம் செய்கிறது நியாயமல்ல” என்று அவர்கள் சொல்லிக்கொண்டதை நினைத்துப் பாருங்கள். அப்படியானால், நேரத்தை உறிஞ்சும் கவனச்சிதறல்களோ சொந்த விருப்பங்களோ ஊழியத்தில் முழுமையாக ஈடுபடாதபடி நம்மைத் தடுக்க இடமளிப்பதும்கூட நியாயமல்ல.
இந்த விஷயத்தில் ஒருவர் நமக்கு அருமையான முன்மாதிரியை வைத்திருக்கிறார். அவர்தான் அப்போஸ்தலன் பவுல். தான் ஊழியம் செய்திருந்த முதல் 20 ஆண்டுகளைக் குறித்துச் சொல்லும்போது, “கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை முழுமையாகப் பிரசங்கித்திருக்கிறேன்” என்று அவர் எழுதினார். (ரோ. 15:19) தனது ஆர்வக்கனலைத் தணிக்கிற எந்தக் காரியத்திற்கும் அவர் இடமளிக்கவில்லை. அவ்வாறே, நாமும் நமது ஆர்வக்கனலைத் தணிக்கிற எந்தக் காரியத்திற்கும் இடமளிக்காமல், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய ‘நற்செய்தியை அறிவிக்கிற இந்நாளில்’ அதை முழுமையாய் அறிவிப்போமாக!
[பக்கம் 28-ன் படம்]
சொந்த விருப்பங்கள் முழுநேர ஊழியத்தில் குறுக்கிட்டுவிடாதபடி பிளெஸ்ஸிங் பார்த்துக்கொண்டார்
[பக்கம் 29-ன் படம்]
நேரத்தைச் செலவிடும் விஷயத்தில் செலிகர் தம்பதியர் கவனமாக இருந்தார்கள்