உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 10/15 பக். 13-17
  • ‘நீங்கள் என் நண்பர்கள்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘நீங்கள் என் நண்பர்கள்’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நல்ல நண்பராக இருப்பதில் இயேசுவின் முன்மாதிரி
  • இயேசுவின் நட்புக்கு சீடர்கள் எப்படி மதிப்புக் காட்டினார்கள்?
  • இன்று கிறிஸ்துவோடு நட்பு
  • நல்ல நண்பர்களை எங்கே கண்டடையலாம்?
  • “நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • நீங்கள் கண்டடையலாமே நண்பர்களை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • அன்பற்ற உலகில் நட்பைக் காத்துக்கொள்ளுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • நட்புக்கான தீரா பசியைத் தீர்த்தல்
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 10/15 பக். 13-17

‘நீங்கள் என் நண்பர்கள்’

“நான் உங்களுக்குக் கட்டளையிடுவதைச் செய்தால் என் நண்பர்களாக இருப்பீர்கள்.” —யோவா. 15:14.

1, 2. (அ) இயேசுவின் நண்பர்கள் என்ன பின்னணிகளைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள்? (ஆ) நாம் இயேசுவின் நண்பர்களாய் இருப்பது ஏன் அதிமுக்கியமானது?

எருசலேமில் ஒரு வீட்டின் மேலறையில் இயேசுவோடு சிலர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள். அண்ணன் தம்பிகளான பேதுருவும் அந்திரேயாவும் முன்பு மீனவர்களாய் இருந்தவர்கள். மத்தேயு, யூதர்களால் இழிவாகக் கருதப்பட்ட வரிவசூலிக்கும் வேலையைச் செய்தவர். யாக்கோபு, யோவான் போன்ற சிலர் இயேசுவைச் சிறு வயதிலிருந்தே அறிந்தவர்களாக இருந்திருக்கலாம். நாத்தான்வேல் போன்ற சிலர் அவரைச் சில வருடங்கள் மட்டுமே அறிந்தவர்களாக இருந்திருக்கலாம். (யோவா. 1:43-50) என்றாலும், மிக முக்கியமான பஸ்கா இரவன்று அங்கு கூடியிருந்த எல்லாரும் இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா, உயிருள்ள கடவுளின் மகன் என்று நன்றாகவே அறிந்திருந்தார்கள். (யோவா. 6:68, 69) அவர்களிடம் இயேசு, “நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன், ஏனென்றால் என் தகப்பனிடமிருந்து கேட்ட எல்லா விஷயங்களையும் நான் உங்களுக்குத் தெரிவித்திருக்கிறேன்” என்று சொன்னபோது அவர்களுடைய மனம் எவ்வளவாய் நெகிழ்ந்துபோயிருக்கும்!—யோவா. 15:15.

2 இயேசு அந்த வார்த்தைகளை உண்மையுள்ள அப்போஸ்தலர்களிடம் சொன்னபோதிலும், பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாருக்குமே அவை பொருந்துகின்றன. அதோடு, அவர்களுடைய நண்பர்களான ‘வேறே ஆடுகளுக்கும்’ பொருந்துகின்றன. (யோவா. 10:16) நாம் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும், இயேசுவின் நண்பர்களாயிருக்கிற பாக்கியத்தைப் பெற முடியும். இந்த நட்பு அதிமுக்கியமானது, ஏனெனில், நாம் இயேசுவின் நண்பர்களாக இருந்தால் யெகோவாவின் நண்பர்களாகவும் இருக்க முடியும். சொல்லப்போனால், முதலில் கிறிஸ்துவிடம் நெருங்கி வந்தால்தான் யெகோவாவிடம் நெருங்கி வர முடியும். (யோவான் 14:6, 21-ஐ வாசியுங்கள்.) ஆகவே, இயேசுவின் நண்பர்களாக ஆவதற்கும், தொடர்ந்து அவருடைய நண்பர்களாக இருப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த முக்கியமான விஷயத்தைக் கலந்தாலோசிக்கும்முன், இயேசு எப்படி ஒரு நல்ல நண்பராக இருந்து நமக்கு முன்மாதிரி வைத்தார் என்று சிந்திப்போம்; அவருடைய நட்புக்குச் சீடர்கள் எப்படி மதிப்புக் காட்டினார்கள் என்பதைக் குறித்தும் சிந்திப்போம்.

நல்ல நண்பராக இருப்பதில் இயேசுவின் முன்மாதிரி

3. இயேசு எப்படிப்பட்டவர்களுடைய நண்பரென அறியப்பட்டிருந்தார்?

3 ‘ஐசுவரியவானுக்கு அநேக சிநேகிதருண்டு’ என ஞானியான சாலொமோன் ராஜா எழுதினார். (நீதி. 14:20) இது, அபூரண மனிதர்களின் மனோபாவத்தையே சுட்டிக்காட்டுகிறது; மற்றவர்களுக்கு எதைக் கொடுக்கலாம் என்பதைவிட மற்றவர்களிடமிருந்து எதைப் பெறலாம் என்ற மனோபாவத்தை அடிப்படையாக வைத்தே பொதுவாக அவர்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தப் பலவீனம் இயேசுவுக்கு இருக்கவில்லை. ஒருவருடைய பண பலத்தையோ சமுதாய அந்தஸ்தையோ வைத்து அவர் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. உண்மைதான், அவர் ஒரு பணக்கார இளைஞனிடம் அன்பு காட்டினார், தம்முடைய சீடராகும்படி அழைப்பு விடுத்தார். என்றாலும், அவனுடைய சொத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடும்படி கட்டளையிட்டார். (மாற். 10:17-22; லூக். 18:18, 23) பணக்காரர் மற்றும் பிரசித்தி பெற்றவர்களின் நண்பர் என இயேசு அறியப்படவில்லை; ஏழை எளியோர் மற்றும் பாவிகளின் நண்பர் என்றே அறியப்பட்டிருந்தார்.—மத். 11:19.

4. இயேசுவின் நண்பர்கள் தப்புத்தவறு செய்தவர்கள் என்று ஏன் சொல்லலாம்?

4 இயேசுவின் நண்பர்கள் தப்புத்தவறு செய்தவர்கள்தான். ஒரு சந்தர்ப்பத்தில் பேதுரு, ஆன்மீகக் கண்ணோட்டத்தில் காரியங்களைப் பார்க்கத் தவறினார். (மத். 16:21-23) இயேசு ராஜாவாகப்போகிற சமயத்தில் தங்களை முக்கியமான ஸ்தானங்களில் அமர்த்தும்படி யாக்கோபும் யோவானும் கேட்டார்கள்; இது அவர்களுக்குப் பதவி ஆசை இருந்ததை வெளிக்காட்டியது. அவர்கள் அப்படிக் கேட்டது மற்ற அப்போஸ்தலர்களுடைய கோபத்தைக் கிளறியது; அதோடு, தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்ற பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே இருந்துவந்தது. என்றாலும், இயேசு தம் நண்பர்கள்மீது எரிந்துவிழாமல் பொறுமையோடு அவர்களைத் திருத்தினார்.—மத். 20:20-28.

5, 6. (அ) இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களில் பெரும்பாலோரை ஏன் தொடர்ந்து நண்பர்களாகப் பாவித்தார்? (ஆ) இயேசு ஏன் யூதாஸின் நட்பை முறித்துக்கொண்டார்?

5 அவர்களுடைய தப்புத்தவறுகளை இயேசு கண்டுகொள்ளாததால்தான் அல்லது அவர்களுடைய குற்றங்குறைகளைக் கவனிக்காததால்தான் தொடர்ந்து அவர்களை நண்பர்களாகப் பாவித்தார் என்று சொல்ல முடியாது. மாறாக, அவர்களுடைய நல்லெண்ணங்களையும், நற்குணங்களையுமே பார்த்தார். உதாரணமாக, அவர் வேதனைமிக்க சூழ்நிலையில் இருந்தபோது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அவருக்குப் பக்கபலமாய் இருப்பதற்குப் பதிலாக ஆழ்ந்து தூங்கிவிட்டார்கள். இதைப் பார்த்து இயேசு நிச்சயம் ஏமாற்றமடைந்திருப்பார். ஆனாலும், அவர்களுடைய உள்நோக்கம் நல்லதாய் இருந்ததை உணர்ந்து பின்வருமாறு சொன்னார்: “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது.”—மத். 26:41.

6 மறுபட்சத்தில், யூதாஸ் இஸ்காரியோத்தின் நட்பை இயேசு முறித்துக்கொண்டார். அவன் தன்னை இயேசுவின் நண்பனாகக் காட்டிக்கொண்டபோதிலும் அவனுடைய கபடநாடகத்தை அவர் கண்டுகொண்டார். யூதாஸ் இந்த உலகத்திற்கு நண்பனாய் ஆனதால் கடவுளுக்குப் பகைவனாய் ஆனான். (யாக். 4:4) அதனால், யூதாஸை அனுப்பிவிட்ட பிறகே தமது 11 அப்போஸ்தலர்களுடன் இயேசு தம்முடைய நட்பை உறுதிப்படுத்தினார்.—யோவா. 13:21-35.

7, 8. தம்முடைய நண்பர்கள் மீதிருந்த அன்பை இயேசு எப்படி வெளிக்காட்டினார்?

7 தமக்கு உண்மையாய் இருந்த நண்பர்களின் தப்புத்தவறுகளை இயேசு பெரிதுபடுத்தவில்லை, அவர்களுடைய நலனுக்காகவே பாடுபட்டார். உதாரணத்திற்கு, சோதனைகளின்போது அவர்களைப் பாதுகாக்கும்படி தம்முடைய தகப்பனிடம் ஜெபம் செய்தார். (யோவான் 17:11-ஐ வாசியுங்கள்.) அவர்களுடைய தேவைகளை மனதில் கொண்டு செயல்பட்டார். (மாற். 6:30-32) அவர், தம்முடைய எண்ணத்தைத் தெரிவிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், அவர்களுடைய எண்ணத்தைத் தெரிந்துகொள்வதிலும் அதைப் புரிந்துகொள்வதிலுமே ஆர்வம் காட்டினார்.—மத். 16:13-16; 17:24-26.

8 இயேசு தம் நண்பர்களுக்காக வாழ்ந்தார், தம் நண்பர்களுக்காக இறந்தார். உண்மைதான், தம்முடைய தகப்பன் வகுத்த நியாயமான சட்டத்தின்படி தம் உயிரைப் பலிகொடுக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். (மத். 26:27, 28; எபி. 9:22, 28) என்றாலும், அன்பினால் தூண்டப்பட்டே தம் உயிரைப் பலிகொடுத்தார். “ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு இல்லை” என்று அவர் கூறினார்.—யோவா. 15:13.

இயேசுவின் நட்புக்கு சீடர்கள் எப்படி மதிப்புக் காட்டினார்கள்?

9, 10. இயேசு தாராள குணத்தைக் காட்டியபோது மக்கள் என்ன செய்தார்கள்?

9 இயேசு தம்முடைய நேரத்தைச் செலவிடுவதிலும், பாசத்தைக் காட்டுவதிலும், பொருள்களைக் கொடுப்பதிலும் தாராளப் பிரபுவாகத் திகழ்ந்தார். இதன் காரணமாக, மக்கள் அவரிடம் கவர்ந்திழுக்கப்பட்டார்கள், அவருக்குச் சந்தோஷமாகப் பல வழிகளில் கைமாறு செய்தார்கள். (லூக். 8:1-3) அதனால்தான், இயேசு அனுபவப்பூர்வமாக இப்படிச் சொன்னார்: “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எதைக் கொண்டு மற்றவர்களுக்கு அளந்து கொடுக்கிறீர்களோ, அதைக் கொண்டு அவர்களும் உங்களுக்கு அளந்து கொடுப்பார்கள்.”—லூக். 6:38.

10 உண்மைதான், சிலர் இயேசுவிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரோடு பழகினார்கள். இந்தப் போலி நண்பர்கள் அவர் சொன்ன ஒரு விஷயத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரைவிட்டுப் பிரிந்து சென்றார்கள். இயேசு தவறாக எதையும் சொல்லியிருக்க மாட்டார் என்று நினைப்பதற்குப் பதிலாக, அவரைக் குறித்துத் தப்புக்கணக்குப் போட்டார்கள், அவரை ஒதுக்கித்தள்ளினார்கள். அப்போஸ்தலர்களோ பற்றுமாறாதவர்களாக அவர் கூடவே இருந்தார்கள். அவரோடு தங்களுக்கிருந்த நட்புக்கு அடிக்கடி சோதனை வந்தபோதிலும், சாதகமான காலத்திலும் சரி பாதகமான காலத்திலும் சரி, தங்களால் முடிந்தளவு அவருக்குப் பக்கபலமாய் இருந்தார்கள். (யோவான் 6:26, 56, 60, 66-68-ஐ வாசியுங்கள்.) இயேசு, தாம் உயிரோடிருந்த கடைசி இரவன்று, “என்னுடைய சோதனைகளில் என்னோடு நிலைத்திருந்தவர்கள் நீங்களே” என்று தம் நண்பர்களிடம் கூறினார்.—லூக். 22:28.

11, 12. சீடர்களோடு தமக்கிருந்த நட்பை இயேசு எவ்வாறு உறுதிப்படுத்தினார், அவர்கள் என்ன செய்தார்கள்?

11 பற்றுமாறாமல் இருந்த தம் சீடர்களை இயேசு பாராட்டிய சற்று நேரத்திற்குள் அதே சீடர்கள் அவரைத் தனியாக விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். மனிதர்களுக்குப் பயந்து கிறிஸ்துவின் மீதுள்ள அன்பை விட்டுவிட்டார்கள். அந்தச் சமயத்திலும் இயேசு அவர்களை மன்னித்தார். அவர் இறந்து உயிர்த்தெழுந்த பின்பு அவர்களுக்குக் காட்சியளித்து, அவர்களோடுள்ள தம் நட்பை உறுதிப்படுத்தினார். “எல்லாத் தேசத்தாரையும்” சீடர்களாக்கி, “பூமியின் கடைமுனைவரையிலும்” அவருக்குச் சாட்சிகளாக இருக்கும் பரிசுத்த பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார். (மத். 28:19; அப். 1:8) அவர்கள் என்ன செய்தார்கள்?

12 உயிரைக் கொடுத்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். யெகோவாவுடைய சக்தியின் வழிநடத்துதலோடு, சீக்கிரத்திலேயே எருசலேம் முழுவதையும் தங்களுடைய போதனையால் நிரப்பினார்கள். (அப். 5:27-29) கொலை மிரட்டலுக்கும்கூட அவர்கள் அஞ்சவில்லை. இயேசுவிடமிருந்து கட்டளை பெற்ற சில பத்தாண்டுகளுக்குள்ளேயே “வானத்தின் கீழிருக்கிற எல்லா மக்களுக்கும்” நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டுவிட்டதாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கொலோ. 1:23) இந்தச் சீடர்கள் இயேசுவோடு தங்களுக்கிருந்த நெருங்கிய நட்பைப் பொக்கிஷமாய்ப் போற்றியதைச் செயலில் காட்டினார்கள்.

13. இயேசுவின் போதனைகள் தங்கள்மீது செல்வாக்கு செலுத்த அவருடைய சீடர்கள் எவ்வழிகளில் இடமளித்தார்கள்?

13 இயேசுவின் சீடர்களாக ஆனவர்கள், தங்கள் சொந்த வாழ்க்கையிலும் அவருடைய போதனைகள் செல்வாக்கு செலுத்த இடமளித்தார்கள். பலர் தங்களுடைய நடத்தையிலும் சுபாவத்திலும் பெரும் மாற்றங்களைச் செய்தார்கள். புதிய சீடர்களில் சிலர் முன்பு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர்களாக, மணத்துணைக்குத் துரோகம் செய்தவர்களாக, குடிவெறியர்களாக, திருடர்களாக இருந்தார்கள். (1 கொ. 6:9-11) பிற இனத்தவரை வெறுத்த சிலர் தங்களது மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. (அப். 10:25-28) ஆனாலும், இயேசுவுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். தங்களுடைய பழைய சுபாவத்தைக் களைந்துவிட்டு, புதிய சுபாவத்தை அணிந்துகொண்டார்கள். (எபே. 4:20-24) அதோடு, ‘கிறிஸ்துவின் சிந்தையில்’ என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவரைப் போலவே சிந்திக்கவும் செயல்படவும் ஆரம்பித்தார்கள்.—1 கொ. 2:16.

இன்று கிறிஸ்துவோடு நட்பு

14. ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது’ என்ன செய்வதாக இயேசு வாக்குறுதி அளித்திருந்தார்?

14 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பலர் இயேசுவை நன்கு அறிந்திருந்தார்கள், இன்னும் பலர், அவர் உயிர்த்தெழுந்த பின்பு பார்த்திருந்தார்கள். நமக்கு அந்தப் பாக்கியம் இல்லை என்பது உண்மையே. என்றாலும், நம்மால்கூட கிறிஸ்துவின் நண்பர்களாக இருக்க முடியும். எப்படி? அதற்கு ஒரு வழி, பூமியிலுள்ள அடிமை வகுப்பாரால் அளிக்கப்படுகிற வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதாகும். ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது’ ‘தம்முடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள’ இந்த அடிமை வகுப்பாரை நியமிப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். (மத். 24:3, 45-47) இன்று, உண்மையுள்ள இந்த அடிமை வகுப்பின் பாகமாய் இல்லாத ஏராளமானோர் கிறிஸ்துவின் நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால், அந்த அடிமை வகுப்பாரிடமிருந்து பெறுகிற வழிநடத்துதலின்படி அவர்கள் நடப்பதும் நடக்காததும் கிறிஸ்துவோடு அவர்களுக்குள்ள நட்பை எவ்வாறு பாதிக்கும்?

15. ஒருவர் செம்மறியாடா, வெள்ளாடா என்பதை எது தீர்மானிக்கிறது?

15 மத்தேயு 25:31-40-ஐ வாசியுங்கள். உண்மையுள்ள அடிமை வகுப்பின் பாகமாக இருக்கப்போகிறவர்களை இயேசு தம்முடைய சகோதரர்களென அழைத்தார். செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பது பற்றிய உவமையில், தம் சகோதரர்களுக்குச் செய்யப்படுவதெல்லாம் தமக்கே செய்யப்படுவதுபோல் தாம் கருதுவதாகத் தெளிவாய்க் குறிப்பிட்டார். உண்மையில், ‘மிகச் சிறியோரான [அவருடைய] சகோதரர்களை’ நடத்துகிற விதமே ஒருவரைச் செம்மறியாடா வெள்ளாடா என்பதைத் தீர்மானிக்கும் என அவர் கூறினார். ஆகவே, பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்கள் கிறிஸ்துவுக்கு நண்பர்களாய் இருக்க விரும்புவதைக் காட்டுவதற்கான முக்கிய வழி, உண்மையுள்ள அடிமை வகுப்பாருக்கு ஆதரவளிப்பதாகும்.

16, 17. கிறிஸ்துவின் சகோதரர்களோடு நாம் வைத்திருக்கிற நட்பை எவ்வழிகளில் வெளிக்காட்டலாம்?

16 கடவுளுடைய அரசாங்கத்தின்கீழ் இந்தப் பூமியில் வாழும் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதென்றால், கிறிஸ்துவின் சகோதரர்களோடு உங்களுக்கிருக்கும் நட்பை நீங்கள் எப்படி வெளிக்காட்டலாம்? மூன்று வழிகளை மட்டும் இப்போது சிந்திப்போம். முதல் வழி, பிரசங்க வேலையில் முழு இருதயத்தோடு ஈடுபடுவதாகும். நற்செய்தியை உலகமெங்கும் பிரசங்கிக்கும்படி கிறிஸ்து தம் சகோதரர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 24:14) என்றாலும், இன்று பூமியிலுள்ள கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு, அவர்களுடைய நண்பர்களாகிய ‘வேறே ஆடுகளின்’ உதவியில்லாமல் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது கடினம். உண்மையில், வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு முறையும் பிரசங்க வேலையில் ஈடுபடும்போது, இந்தப் பரிசுத்த வேலையை நிறைவேற்ற கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவவே செய்கிறார்கள். இந்த விதத்தில் அவர்கள் காட்டுகிற நட்பை உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் பெரிதும் போற்றுகிறார்கள், கிறிஸ்துவும் போற்றுகிறார்.

17 வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவுகிற இரண்டாவது வழி, பிரசங்க வேலைக்குப் பண உதவி அளிப்பதாகும். “அநீதியான இந்த உலகத்தின் செல்வங்களைக் கொண்டு” நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி இயேசு தம் சீடர்களுக்கு ஊக்கமளித்தார். (லூக். 16:9) இயேசுவின் நட்பையும் யெகோவாவின் நட்பையும் நாம் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு நம்முடைய பணத்தையும் பொருளையும் பயன்படுத்தி, அவர்கள் மீது நமக்குள்ள நட்பையும் அன்பையும் வெளிக்காட்டலாம் என்று அர்த்தப்படுத்துகிறது; ஆம், வெறுமனே சொல்லினால் அல்லாமல் ‘செயலினாலும் சத்தியத்தினாலும்’ வெளிக்காட்டலாம் என்று அர்த்தப்படுத்துகிறது. (1 யோ. 3:16-18) பிரசங்க வேலையில் ஈடுபடும்போதும், கூட்டங்கள் நடைபெறுகிற மன்றங்களைக் கட்டி, அவற்றைப் பராமரிப்பதற்கு நன்கொடை வழங்கும்போதும், உலகளாவிய பிரசங்க வேலைக்காக நன்கொடை கொடுக்கும்போதும் நாம் இந்தப் பண உதவியை அளிக்கிறோம். நாம் கொடுக்கிற நன்கொடை அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி, அதைச் சந்தோஷமாகக் கொடுக்கும்போது யெகோவாவும் இயேசுவும் நிச்சயமாகச் சந்தோஷப்படுவார்கள்.—2 கொ. 9:7.

18. சபை மூப்பர்கள் பைபிள் அடிப்படையில் அளிக்கிற அறிவுரைகளுக்கு நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

18 நாம் எல்லாருமே கிறிஸ்துவின் நண்பர்கள் என்பதை நிரூபிக்கிற மூன்றாவது வழி, சபை மூப்பர்கள் அளிக்கிற வழிநடத்துதலுக்கு ஒத்துழைப்பதாகும். இந்த மூப்பர்கள், கடவுளுடைய சக்தியினால் கிறிஸ்துவின் வழிநடத்துதலின்படி நியமிக்கப்படுகிறார்கள். (எபே. 5:23) ‘உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்’ என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 13:17) பைபிள் அடிப்படையில் சபை மூப்பர்கள் கொடுக்கிற அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவது சில சமயங்களில் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஒருவேளை அவர்களுடைய குறைபாடுகளை அறிந்திருப்பதன் காரணமாக அவர்கள் தருகிற அறிவுரையைத் தவறான கண்ணோட்டத்தில் நாம் காணலாம். என்றாலும், சபையின் தலைவராகிய கிறிஸ்து அந்த அபூரண மனிதர்களைப் பயன்படுத்த மனமுள்ளவராக இருக்கிறார். ஆகவே, அவர்களுடைய அதிகாரத்தைக் குறித்து நாம் காட்டுகிற மனப்பான்மை, கிறிஸ்துவோடுள்ள நம் நட்பை நேரடியாகப் பாதிக்கும். மூப்பர்களின் குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், அவர்கள் தருகிற அறிவுரைகளுக்கு மனமுவந்து கீழ்ப்படியும்போது கிறிஸ்துமீது நமக்குள்ள அன்புக்கு அத்தாட்சி அளிக்கிறோம்.

நல்ல நண்பர்களை எங்கே கண்டடையலாம்?

19, 20. சபையிலே நாம் எப்படிப்பட்டவர்களைக் கண்டடையலாம், அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?

19 சபையிலே, இயேசு நமக்கு அன்பான மேய்ப்பர்களை அளிப்பதோடு, ஆன்மீக ரீதியில் தாய்களையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் அளிக்கிறார்; இவ்வாறு, நம்மீது அக்கறை காட்டி வருகிறார். (மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் அமைப்போடு நீங்கள் முதன்முதலாகக் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தபோது உங்கள் உறவினர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? கடவுளோடும் கிறிஸ்துவோடும் நெருங்கி வருவதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு அவர்கள் ஆதரவு காட்டியிருப்பார்கள். ஆனால், சிலருடைய விஷயத்தில் அப்படி இருப்பதில்லை. ‘ஒரு மனிதனுக்கு அவனுடைய வீட்டாரே எதிரிகளாக இருப்பார்கள்’ என்று இயேசுவே முன்னறிவித்தார். (மத். 10:36) உடன்பிறந்தாரைவிட நெருக்கமாயிருக்கிற நண்பர்களைச் சபையிலே நாம் கண்டடையலாம் என்பது நமக்கு எப்பேர்ப்பட்ட ஆறுதல்!—நீதி. 18:24.

20 பவுல், ரோமக் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தின் முடிவில் அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்தார்; இதிலிருந்து, அவருக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருந்தார்கள் என்று தெரிகிறது. (ரோ. 16:8-16) அப்போஸ்தலன் யோவான் தனது மூன்றாவது கடிதத்தின் முடிவில் இவ்வாறு சொன்னார்: “அங்குள்ள நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் வாழ்த்தைத் தெரிவிக்கவும்.” (3 யோ. 14) ஆகவே, நெருங்கிய நண்பர்கள் பலர் அவருக்கும் இருந்தார்கள் என்று தெரிகிறது. அப்படியானால், ஆன்மீகச் சகோதர சகோதரிகளை நண்பர்களாக்கி, அவர்களோடு தொடர்ந்து நட்பை வளர்த்துக்கொள்கிற விஷயத்தில், இயேசுவும் அவருடைய ஆரம்பகால சீடர்களும் வைத்த முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த கட்டுரையில் நாம் சிந்திப்போம்.

உங்கள் பதில் என்ன?

• இயேசு எப்படி ஒரு நல்ல நண்பராக இருந்து நமக்கு முன்மாதிரி வைத்தார்?

• இயேசுவின் நட்புக்குச் சீடர்கள் எப்படி மதிப்புக் காட்டினார்கள்?

• நாம் கிறிஸ்துவின் நண்பர்கள் என்பதை எவ்வழிகளில் காட்டலாம்?

[பக்கம் 14-ன் படம்]

தம்முடைய நண்பர்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்வதில் இயேசு ஆர்வம் காட்டினார்

[பக்கம் 16-ன் படங்கள்]

கிறிஸ்துவின் நண்பர்களாவதற்கான நம் விருப்பத்தை எவ்வழிகளில் காட்டலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்