கடவுளுடைய தயவைவிட்டு விலகாதிருங்கள் மாற்றங்கள் ஏற்பட்டாலும்!
உங்கள் வாழ்க்கையில் எதிர்பாரா மாற்றங்களை எதிர்ப்பட்டு வருகிறீர்களா? அவற்றை ஏற்றுக்கொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? நம்மில் பெரும்பாலோருக்கு அப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம், அல்லது எதிர்காலத்தில் ஏற்படலாம். பூர்வகால ஊழியர்கள் சிலர் அதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன குணங்களை வெளிக்காட்டினார்கள் என்பதைப் புரிந்துகொள்வது நமக்குப் பெரிதும் கைகொடுக்கும்.
தாவீதின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அவருடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைச் சிந்திப்போம். சாமுவேல் தீர்க்கதரிசி அவரை எதிர்கால ராஜாவாக நியமித்தபோது அவர் ஒரு சாதாரண மேய்ப்பராக இருந்தார். அவர் இளைஞனாக இருந்தபோதே பெலிஸ்திய ராட்சதனான கோலியாத்தோடு நேருக்கு நேர் மோதத் துணிந்தார். (1 சா. 17:26-32, 42) சவுல் ராஜாவின் அரண்மனையில் வசிக்கும் வாய்ப்பைப் பெற்றார்; படைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தன் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமென்று அவர் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார்; இதற்கடுத்து வந்த மாற்றங்களையும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
தாவீதுக்கும் சவுலுக்கும் இடையே இருந்த உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது. (1 சா. 18:8, 9; 19:9, 10) தாவீது தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வருடக்கணக்காக நாடோடியாய் வனாந்தரத்தில் திரிய வேண்டியிருந்தது. இஸ்ரவேல் மக்களின் ராஜாவாக ஆன பின்பும்கூட அவருடைய வாழ்க்கையில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன; குறிப்பாக, மாற்றான் மனைவியோடு தகாத உறவுகொண்டு அதை மறைக்கப் படுகொலை செய்தபோது அவருடைய குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் தலைதூக்கின. உதாரணமாக, அவருடைய மகன் அப்சலோம் அவரை எதிர்த்துக் கலகம் செய்தான். (2 சா. 12:10-12; 15:1-14) தாவீது தன் பாவங்களுக்காக மனம் வருந்தியபோது யெகோவா அவரை மன்னித்து மீண்டும் அவருக்குத் தயவு காட்டினார்.
நம்முடைய வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படலாம். சுகவீனங்கள், பணச் சிக்கல்கள், குடும்பப் பிரச்சினைகள் ஆகியவற்றாலோ, ஏன் நம் சொந்தச் செயல்களாலோகூட மாற்றங்கள் ஏற்படலாம். அப்படிப்பட்ட சவால்களைச் சமாளிக்க என்ன குணங்கள் நமக்கு உதவும்?
மனத்தாழ்மை எவ்வாறு உதவும்
மனத்தாழ்மை என்பது அடிபணிந்துபோவதைக் குறிக்கிறது. நமக்கு உண்மையிலேயே மனத்தாழ்மை இருந்தால், நம்மை நாமே எதார்த்தமான கண்ணோட்டத்தோடு பார்ப்போம்; மற்றவர்களையும் அப்படியே பார்ப்போம். மற்றவர்களுடைய குணங்களையும் சாதனைகளையும் மட்டம்தட்டிப் பேசாமல் அவர்களை மனதாரப் பாராட்டுவோம், அவர்களுடைய செயல்களை வரவேற்போம். அவ்வாறே, நமக்கு மனத்தாழ்மை இருந்தால் நம் வாழ்க்கையில் ஏன் மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றைச் சமாளிப்போம்.
சவுலின் மகனாகிய யோனத்தான் இதற்குச் சிறந்த உதாரணம். அவருடைய வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன; அவற்றை அவரால் தடுத்துநிறுத்த முடியவில்லை. ராஜ்யத்தை சவுலின் கையிலிருந்து யெகோவா பறித்துவிடுவார் என சவுலிடம் சாமுவேல் சொன்னார்; ஆனால், அடுத்த ராஜாவாக யோனத்தான் நியமிக்கப்படுவார் என்று சொல்லவில்லை. (1 சா. 15:28; 16:1, 12, 13) அடுத்த ராஜாவாக தாவீதையே கடவுள் தேர்ந்தெடுத்தார். சவுல் கீழ்ப்படியாமல்போனதால் யோனத்தானைக் கடவுள் தேர்ந்தெடுக்காமல் இருந்திருக்கலாம். சவுலின் செயல்களுக்கு யோனத்தான் பொறுப்பல்ல என்றாலும், அடுத்த ராஜாவாக அவர் நியமிக்கப்படவில்லை. (1 சா. 20:30, 31) இந்தச் சூழ்நிலையில் யோனத்தான் எப்படி நடந்துகொண்டார்? ராஜாவாகும் வாய்ப்பு கைநழுவிப் போனதற்காக தாவீதின் மீது வன்மத்தை வளர்த்துக்கொண்டாரா? பொறாமைப்பட்டாரா? இல்லவே இல்லை! தாவீதைவிட வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவராக இருந்தபோதிலும், தாவீதுக்கு முழு ஆதரவளித்தார். (1 சா. 23:16-18) கடவுளுடைய ஆசீர்வாதம் யார்மீது இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள மனத்தாழ்மை அவருக்கு உதவியது; ‘தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணவில்லை.’ (ரோ. 12:3) தன்னிடம் யெகோவா என்ன எதிர்பார்த்தார் என்பதை அவர் புரிந்துகொண்டார்; யெகோவாவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார்.
அநேக மாற்றங்கள் வரும்போது பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஒரு கட்டத்தில், யோனத்தான் இரு நபர்களுடைய மனதை நோகடிக்காமல் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. ஒருவர், நண்பன் தாவீது. இவர் எதிர்கால ராஜாவாக யெகோவாவினால் நியமிக்கப்பட்டிருந்தவர். இன்னொருவர், தகப்பன் சவுல். அப்போதைய ராஜாவாக இருந்தபோதிலும் யெகோவாவினால் நிராகரிக்கப்பட்டிருந்தவர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலே, யோனத்தான் உணர்ச்சி ரீதியில் அல்லாடினார்; ஆனாலும், யெகோவாவின் தயவைவிட்டு விலகாதபடி பார்த்துக்கொண்டார். நமக்கு ஏற்படப்போகிற மாற்றங்களை நினைத்து நாம் கவலைப்படலாம், பயப்படலாம். ஆனாலும், யெகோவாவின் கண்ணோட்டம் என்னவென்று நாம் புரிந்துகொள்ள முயன்றால், மாற்றங்களைச் சமாளிப்போம்; தொடர்ந்து அவரை உண்மையோடு சேவிப்போம்.
தன்னடக்கம் எவ்வாறு உதவும்
தன்னடக்கம் என்பது ஒருவர் தன்னுடைய வரம்புகளைப் புரிந்து நடப்பதைக் குறிக்கிறது. தன்னடக்கத்தையும் மனத்தாழ்மையையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஒருவர் மனத்தாழ்மையாக இருந்தாலும், தனது வரம்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டால், அவர் தன்னடக்கம் காட்டாதவராக இருக்கலாம்.
தாவீது தன்னடக்கமுள்ளவராய் இருந்தார். அவரை ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்திருந்தபோதிலும், உடனே அவரால் அரியணையில் அமர முடியவில்லை. இந்தத் தாமதத்திற்கான காரணத்தை தாவீதிடம் யெகோவா தெரிவித்ததாக பைபிள் சொல்வதில்லை. என்றாலும், விரக்தி ஏற்படுத்தக்கூடிய இந்தச் சூழ்நிலையால் தாவீது மனம் நொந்துபோகவில்லை. தாவீது தன்னுடைய வரம்புகளை அறிந்திருந்தார்; இந்தச் சூழ்நிலையை யெகோவா அனுமதித்திருந்ததையும், அவரை மீறி எதுவும் நடந்துவிடாது என்பதையும் புரிந்திருந்தார். எனவே, தாவீது தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகக்கூட சவுலைக் கொல்லத் துணியவில்லை. அவருடைய நண்பன் அபிசாய், சவுலைக் கொல்ல முயன்றபோதும்கூட அவரைத் தடுத்துநிறுத்தினார்.—1 சா. 26:6-9.
நம் சபையில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் நமக்கு நெருடலாக இருக்கலாம்; அது சரியாகக் கையாளப்படாததுபோல் தோன்றலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில், இயேசுவே சபைக்குத் தலைவர் என்பதையும், சபை மூப்பர்களின் வாயிலாக அவர் செயல்படுகிறார் என்பதையும் ஏற்றுக்கொண்டு தன்னடக்கத்தைக் காட்டுவோமா? இயேசு கிறிஸ்துவைப் பயன்படுத்தி யெகோவா எல்லாவற்றையும் சரிசெய்யும்வரை பொறுமையோடு இருந்து தன்னடக்கத்தைக் காட்டுவோமா? இப்படிச் செய்வது கஷ்டம்தான் என்றாலும் யெகோவாவின் தயவைவிட்டு விலகாதிருக்க தன்னடக்கத்தோடு பொறுமை காத்திடுவோமா?—நீதி. 11:2.
பணிவு எவ்வாறு உதவும்
பணிவு என்பது கோபப்படாமல் அமைதியாகச் செயல்படுவதைக் குறிக்கிறது. நம்மிடம் இந்தக் குணம் இருந்தால், நமக்கு இழைக்கப்படுகிற தீங்கைப் பொறுத்துக்கொள்வோம்; எரிச்சலடைய மாட்டோம், கசப்புணர்வை வளர்த்துக்கொள்ள மாட்டோம், பழிவாங்கத் துடிக்க மாட்டோம். இந்தக் குணத்தை வளர்ப்பது கஷ்டமே. அதனால்தான் பைபிள் வசனம் ஒன்று, ‘பணிவை நாடும்படி’ ‘பணிவான ஜனங்களை’ அறிவுறுத்துகிறது. (செப். 2:3, NW) பணிவு என்ற குணம் மனத்தாழ்மையோடும் தன்னடக்கத்தோடும் தொடர்புடையது; அதே சமயத்தில் நல்மனம், சாந்தகுணம் ஆகியவற்றையும் உட்படுத்துகிறது. பணிவான ஒருவர், விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதற்கும் மனமுள்ளவராக இருப்பார்; இதனால், ஆன்மீக ரீதியில் வளர்ச்சி அடைவார்.
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிற மாற்றங்களைச் சமாளிப்பதற்குப் பணிவு என்ற குணம் எவ்வாறு உதவும்? வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்போது அநேகர் பொதுவாக அவற்றைத் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். ஆனால், யெகோவா நமக்குக் கூடுதல் பயிற்சி அளிப்பதற்கான சந்தர்ப்பங்களே அவை. மோசேயின் உதாரணம் இதற்கு அத்தாட்சி அளிக்கிறது.
40 வயது மோசேக்கு ஏற்கெனவே முத்தான குணங்கள் இருந்தன. கடவுளுடைய மக்கள் படுகிற கஷ்டங்களைத் தீர்க்க அவர் பாடுபட்டிருந்தார், சுய தியாக மனப்பான்மையை வெளிக்காட்டியிருந்தார். (எபி. 11:24-26) ஆனாலும், இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவிப்பதற்காகக் கடவுள் அவரை நியமிப்பதற்கு முன்பு வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது; அந்த மாற்றங்கள், அவருடைய பணிவை இன்னும் மெருகேற்றின. ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த அவர், எகிப்தைவிட்டு ஓடி, மீதியான் தேசத்தில் சாதாரண ஒரு மேய்ப்பனாக 40 வருடங்கள் தன் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது. அதனால் கிடைத்த பலன்? அவருடைய சுபாவம் இன்னமும் செதுக்கிச் சீராக்கப்பட்டது. (எண். 12:3) தன்னுடைய விருப்பத்தைவிட யெகோவாவின் சித்தத்திற்கே முதலிடம் கொடுக்க அவர் கற்றுக்கொண்டார்.
மோசே பணிவானவர் என்பதற்கான அத்தாட்சியை இப்போது சிந்திப்போம். கீழ்ப்படியாத இஸ்ரவேல் தேசத்தை நிராகரிக்கப்போவதாகவும், மோசேயின் வம்சத்தை ஒரு பெரிய தேசமாய் ஆக்கப்போவதாகவும் யெகோவா சொன்னபோது மோசே என்ன செய்தார்? (எண். 14:11-20) அந்த மக்களுக்காகப் பரிந்து பேசினார். அவரது சொந்த நலனைவிட இஸ்ரவேல் மக்களுடைய நலன் மீதும் கடவுளுடைய நற்பெயர் மீதும் அவருக்கிருந்த அக்கறையை அவருடைய வார்த்தைகள் வெளிக்காட்டின. அந்தத் தேசத்தின் தலைவராகவும் மத்தியஸ்தராகவும் பொறுப்பு வகிக்க ஒரு பணிவான நபரால்தான் முடியும்; மோசே அப்படிப்பட்ட நபராகவே இருந்தார். மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராக முறுமுறுத்தபோதிலும், ‘பூமியிலுள்ள எல்லா மனிதரிலும் மிகுந்த பணிவுள்ளவராக இருந்தார்’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. (எண். 12:1-3; NW; 9-15) தன்னை அவர்கள் அவமதித்தபோது, அவர்களிடம் பணிவோடு நடந்துகொண்டார். அவர் மட்டும் பணிவுள்ளவராக இருந்திருக்காவிட்டால், என்ன நடந்திருக்கும்?!
மற்றொரு சமயம், யெகோவா தம்முடைய சக்தியை வேறுசில ஆண்களுக்கு அருளியபோது அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இப்படித் தீர்க்கதரிசனம் சொல்வதன் மூலம் செய்யக் கூடாத காரியத்தை அவர்கள் செய்வதாக மோசேயின் உதவியாளரான யோசுவா நினைத்தார். ஆனால், மோசே பணிவோடு இவ்விஷயத்தை யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்த்தார்; தன்னுடைய அதிகாரத்தை இழந்துபோவதை எண்ணி அவர் கவலைப்படவில்லை. (எண். 11:26-29) பணிவு என்ற குணம் மோசேயிடம் இல்லாதிருந்தால், யெகோவாவின் இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டிருப்பாரா?
கடவுள் கொடுத்திருந்த பெரும் அதிகாரத்தை நன்கு பயன்படுத்துவதற்கும், அவர் ஒப்படைத்திருந்த பொறுப்பைச் சரிவர கையாளுவதற்கும் பணிவு என்ற குணம்தான் மோசேக்கு உதவியது. மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக ஓரேப் மலைக்கு ஏறிப்போகும்படி அவரிடம் யெகோவா முன்பு சொல்லியிருந்தார். அப்போது, ஒரு தேவதூதர் மூலமாக அவரிடம் பேசி, மக்களோடு செய்த ஒப்பந்தத்திற்கு அவரை மத்தியஸ்தராக நியமித்திருந்தார். என்றாலும், அதிகாரம் சம்பந்தமாகத் தனக்கு ஏற்பட்ட பெரிய மாற்றத்தை மோசே ஏற்றுக்கொண்டார்; கடவுளுடைய தயவைவிட்டு விலகாதிருந்தார். இதற்கு, பணிவு என்ற குணம்தான் அவருக்குக் கைகொடுத்தது.
இந்த விஷயத்தை நமக்கு எப்படிப் பொருத்தலாம்? முன்னேற்றம் அடைய நம் ஒவ்வொருவருக்கும் பணிவு என்ற குணம் அத்தியாவசியம். கடவுளுடைய மக்களிடையே பொறுப்பும் அதிகாரமும் பெற்றிருப்போருக்கு முக்கியமாக இந்தக் குணம் தேவை. வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்போது கர்வத்தோடு நடக்காதவாறு இது நம்மைப் பாதுகாக்கும்; அதுமட்டுமல்ல, சரியான மனப்பான்மையோடு எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க நமக்குக் கைகொடுக்கும். மாற்றம் வரும்போது அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம். அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறோமா? நம் சுபாவத்தைச் செதுக்கிச் சீராக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பாக அதைக் கருதுகிறோமா? ஒருவேளை, பணிவு என்ற குணத்தை வளர்த்துக்கொள்ள அது ஓர் அரிய வாய்ப்பாக அமையலாம்!
வாழ்க்கை என்றாலே மாற்றங்கள் வரத்தான் செய்யும். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று புரியாமல் சில சமயங்களில் நாம் குழம்பலாம். நம்முடைய வரம்புகளின் காரணமாகவோ உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் காரணமாகவோ, விஷயங்களை யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாமல்போகலாம். என்றாலும், மனத்தாழ்மை, தன்னடக்கம், பணிவு போன்ற குணங்கள் நமக்கிருந்தால், வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு கடவுளுடைய தயவைவிட்டு விலகாதிருப்போம்.
[பக்கம் 4-ன் சிறுகுறிப்பு]
நமக்கு உண்மையிலேயே மனத்தாழ்மை இருந்தால், நம்மை நாமே எதார்த்தமான கண்ணோட்டத்தோடு பார்ப்போம்
[பக்கம் 5-ன் சிறுகுறிப்பு]
முன்னேற்றம் அடைய நம் ஒவ்வொருவருக்கும் பணிவு என்ற குணம் அத்தியாவசியம்
[பக்கம் 5-ன் படம்]
மோசே சந்தித்த சவால்கள் அவருடைய பணிவை மெருகேற்றின