“சாந்தகுணமுள்ளோரே, நீங்கள் அனைவரும் யெகோவாவைத் தேடுங்கள்”
“யெகோவாவின் சொந்த நியாயமான தீர்மானத்தைப் பின்பற்றுகிறவர்களாகிய, பூமியிலுள்ள சாந்தகுணமுள்ளோரே, நீங்கள் அனைவரும் யெகோவாவைத் தேடுங்கள். நீதியைத் தேடுங்கள், சாந்தத்தைத் தேடுங்கள். யெகோவாவினுடைய கோபத்தின் நாளிலே நீங்கள் ஒருவேளை மறைக்கப்படலாம்.”—செப்பனியா 2:3, NW.
‘பூமியின் சாந்தகுணமுள்ளோரை’ நோக்கி தீர்க்கதரிசி செப்பனியா அந்த வார்த்தைகளைச் சொன்னார், மேலும் “யெகோவாவினுடைய கோபத்தின் நாளிலே” பாதுகாக்கப்படுவதற்கு “சாந்தத்தைத் தேடுங்கள்” என்று அவர்களைத் துரிதப்படுத்தினார். இது, தப்பிப்பிழைப்பதற்கு சாந்தம் அவசியமான ஒன்று என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஏன்?
ஏன் சாந்தத்தைத் தேடவேண்டும்?
சாந்தம் என்பது அகந்தையில்லாது அல்லது தற்பெருமையில்லாது கனிவான குணத்தோடு இருக்கும் பண்பைக் குறிக்கிறது. இது மனத்தாழ்மை, கனிவு போன்ற மற்ற நற்குணங்களோடு நெருங்கிய தொடர்பு உடையதாக இருக்கிறது. அவ்வாறு இருப்பதால், சாந்தகுணமுள்ளோர் கற்பிக்கப்பட முடிவோராயும், கடவுளிடமிருந்து சிட்சையை ஏற்பது சிறிது காலத்திற்கு கஷ்டமானதாகத் தோன்றினாலும்கூட அதை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தை உடையோராயும் இருக்கின்றனர்.—சங்கீதம் 25:9; எபிரெயர் 12:4-11.
ஒருவருடைய கல்வி அல்லது வாழ்க்கை தராதரத்தோடு சாந்தம் எந்தவித சம்பந்தமும் உடையதாக இல்லை. ஆனாலும், அதிகம் படித்தவர்கள் அல்லது உலகப்பிரகாரமாக முன்னேறியிருப்பவர்கள் எல்லா காரியத்திலும், வணக்க சம்பந்தமான விஷயங்களிலும்கூட தாங்களே தீர்மானங்களை எடுக்க தகுதிபெற்றிருப்பதாக உணரும் மனச்சாய்வை உடையவர்களாக இருக்கிறார்கள். இது மற்றொருவர் அவர்களுக்கு ஏதோ ஒன்றைக் கற்பிக்க அனுமதிப்பதிலிருந்து அல்லது ஆலோசனையை ஏற்று, தங்களுடைய வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்வதிலிருந்து அவர்களை தடுக்கலாம். பொருள் சம்பந்தமாக ஐசுவரியர்களாக இருக்கும் மற்றவர்கள் அவர்களுடைய பாதுகாப்பு, அவர்களின் பொருள் சம்பந்தமான ஆஸ்திகளில் இருக்கிறது என்னும் தவறான சிந்தனைக்குள் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து வரும் ஆவிக்குரிய ஐசுவரியங்கள் தேவையில்லை என அவர்கள் உணர்கிறார்கள்.—மத்தேயு 4:4; 5:3; 1 தீமோத்தேயு 6:17.
இயேசுவின் நாளில் இருந்த சதுசேயர்களையும், பரிசேயர்களையும், பிரதான ஆசாரியர்களையும் நினைத்துப்பாருங்கள். ஒரு சமயத்தில் இயேசுவைக் கைதுசெய்து வரும்படி அனுப்பப்பட்ட அதிகாரிகள் அவரைக் கைதுசெய்யாமல் திரும்பியபோது, பரிசேயர்கள் சொன்னார்கள்: “நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்.” (யோவான் 7:45-49) பரிசேயரின்படி, வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், அறியாதவர்களும் கல்வியறிவில்லாதவர்களுமே இயேசுவின்மீது விசுவாசம் வைக்கும் அளவிற்குப் பேதைகளாக இருப்பர்.
இருந்தாலும், சில பரிசேயர்கள் சத்தியத்தால் கவர்ந்திழுக்கப்பட்டனர், அவர்கள் இயேசுவுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சாதகமாகவும்கூட வாதாடினார்கள். இவர்களில் நிக்கொதேமுவும் கமாலியேலும் இருந்தனர். (யோவான் 7:50-52; அப்போஸ்தலர் 5:34-40) இயேசுவின் மரணத்திற்குப் பின்பு, “ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.” (அப்போஸ்தலர் 6:7) மிக விசேஷித்த முன்மாதிரி சந்தேகமின்றி அப்போஸ்தலன் பவுலாக இருந்தார். அவர் கமாலியேலின் பாதத்தருகே போதிக்கப்பட்டு யூதமத கொள்கையின் அதிக திறமையுடைய, மதிக்கப்பட்ட பரிந்துரையாளராக இருந்தார். எனினும், காலப்போக்கில் கிறிஸ்து இயேசுவின் அழைப்பிற்கு மனத்தாழ்மையோடு பிரதிபலித்தபோது, அவருடைய உற்சாகமான சீஷராக அவர் ஆனார்.—அப்போஸ்தலர் 22:3; 26:4, 5; கலாத்தியர் 1:14-24; 1 தீமோத்தேயு 1:12-16.
இதெல்லாம் ஒருவர் எந்தப் பின்னணியில் இருந்தாலும் அல்லது ஒருவர் இப்போது பைபிளின் செய்தியைக் குறித்து எவ்வகையில் உணர்ந்தாலும், செப்பனியாவின் வார்த்தைகள் இன்னும் பொருந்துகின்றன என்று எடுத்துக்காண்பிக்கிறது. ஒருவர் கடவுளால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், அவருடைய வார்த்தையால் வழிநடத்தப்பட வேண்டுமென்றால், சாந்தம் இன்றியமையாதது.
இன்று ‘சாந்தத்தைத் தேடுபவர்கள்’
உலகமெங்கும் உள்ள லட்சக்கணக்கானோர் ராஜ்ய நற்செய்திக்குப் பிரதிபலிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் வீடுகளில் யெகோவாவின் சாட்சிகள் நாற்பது லட்சத்திற்கும் அதிகமான பைபிள் படிப்புகளை வாரந்தோறும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் பல்வேறுபட்ட பின்னணிகளிலிருந்தும் வித்தியாசமான பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளிலிருந்தும் வருகின்றனர். எனினும், ஒரு காரியத்தை அவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கிறார்கள்; அதாவது அவர்கள் வேறு எங்கிருந்தோ அவர்களுடைய வீட்டிற்கு யாராவது வந்தோ சொல்லப்பட்ட பைபிள் அடிப்படையிலான செய்தியை ஏற்றுக்கொள்ளும் அளவிற்குப் போதுமான மனத்தாழ்மையைக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலர் நல்ல முன்னேற்றமடைந்து வருகின்றனர், ஏனென்றால் அவர்கள் தங்களுடைய போக்கில் வரும் தடைகளை மேற்கொள்வதற்கு முயற்சிசெய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆம், அவர்கள் ‘பூமியின் சாந்தகுணமுள்ளோர்’ மத்தியில் இன்று இருக்கிறார்கள்.
உதாரணமாக, மெக்ஸிகோவில் உள்ள மரியாவை எடுத்துக்கொள்ளுங்களேன். அவள் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தாள்; பரம்பரைச் சொத்திருந்ததால் பணம்சம்பந்தமாக நல்ல நிலையில் இருந்தாள். இதன் காரணமாக, அவள் சில சுதந்திரப்போக்கான கொள்கைகளை வகித்துக்கொண்டாள். இவை அவளை மாற்றியது; அவள் சொன்னபிரகாரம், “அடங்காத, முரட்டுத்தனமான, வீறாப்பான, கடவுள் நம்பிக்கையற்ற” ஒரு பெண்ணாக மாறினாள். “பணத்தினால் எதையும் சமாளிக்கலாம், கடவுள் அவசியமில்லை என்று நான் சிந்திக்க ஆரம்பித்தேன். உண்மையில், அவர் இல்லவே இல்லை என்றும் நான் உணர்ந்தேன்,” என்று மரியா நினைவுகூர்ந்தாள். அவள் மேலுமாக, “எனக்கு மதம் முட்டாள்தனமான ஒன்றாகவும், வெறும் ஒரு சமூக தேவை என்பதாகவும் தோன்றியது,” என்று சொன்னாள்.
பின்னர், மரியா அவளுடைய தந்தை வழி உடன்பிறந்தார் மகன், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆன பின்பு, அவர் நடத்தையில் உள்ள மாற்றங்களைக் கவனித்தாள். “அவர் மிகப் பொல்லாதவராக இருந்து வந்தவர், இப்போது அவர் அதிக அமைதியானவராகவும் நேர்மையானவராகவும் இருந்தார்,” என்று மரியா விளக்கினாள். “அவர் பிரசங்கியாக இருந்தார், பைபிளை படித்தார், இதன் காரணமாக இனிமேலும் அவர் குடிக்கவோ பெண்கள் பின்பாக அலையவோ இல்லை என்று உறவினர்கள் சொன்னார்கள். எனவே, அவர் என்னிடத்தில் வந்து எனக்காகப் பைபிள் வாசிக்கும்படி நான் விரும்பினேன். ஏனென்றால் இந்த வழியில், நான் அதிகம் விரும்பின சமாதானத்தையும் மன சாந்தியையும் பெற முடியும் என்று நான் நினைத்தேன்.” விளைவு, ஒரு சாட்சி தம்பதியோடு பைபிள் படிப்பு ஒன்றை மரியா ஏற்றுக்கொண்டாள்.
அவள் பல காரியங்களை மேற்கொள்ள வேண்டியதிருந்தது, அவளுடைய கணவனுக்குக் கீழ்ப்பட்டு நடக்க தலைமைத்துவம் சம்பந்தமான பைபிள் நியமத்தை ஏற்றுக்கொள்வது அவளுக்கு அதிக கடினமாக இருந்தது. ஆனால் அவள் தன்னுடைய வாழ்க்கையிலும் எண்ணத்திலும் முக்கிய மாற்றங்களைச் செய்தாள். “சகோதரர்கள் என் வீட்டிற்கு தங்களோடு யெகோவாவின் உதவியைக் கொண்டுவந்ததிலிருந்து, என் வீட்டில் சந்தோஷமும், மன சாந்தியும், கடவுளுடைய ஆசீர்வாதமும் இருந்து வருகிறது,” என்று அவள் ஒத்துக்கொண்டாள். இன்று மரியா, யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருக்கிறாள்.
உண்மை வணக்கத்தைத் தேடுவதில், சாந்தம் அல்லது அது இல்லாமை, ஒரு முக்கியமான பாகத்தை வகிக்கும் மற்றொரு சமயம் இருக்கிறது. பெரும்பாலும், ஒரு குடும்பத்தில், மனைவி சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறாள், கடவுளைச் சேவிக்க விரும்புகிறாள், கணவனோ மனமில்லாதிருக்கிறார். ஒருவேளை சில கணவன்மார்கள், இப்போது தங்கள் மனைவிகள் வேறு ஒருவருக்கு—யெகோவா தேவனுக்கு—கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள கடினமாக உணரலாம். (1 கொரிந்தியர் 11:3) மெக்ஸிகோவின் சிஹூவாஹூவாவில் உள்ள ஒரு பெண், பைபிள் படிப்பிற்காகக் கேட்டாள். காலப்போக்கில், அவளும், அவளுடைய ஏழு பிள்ளைகளும் சத்தியத்திற்குள் வந்தனர். முதலில் அவளுடைய கணவர் எதிர்த்தார். ஏன்? அவருடைய குடும்பம் பிரசங்கிக்க வீடுவீடாகச் சென்று பைபிள் பிரசுரங்களைக் கொடுப்பதை அவர் விரும்பவில்லை. வெளிப்படையாகவே, இது அவருடைய அந்தஸ்துக்கு உகந்ததல்ல என்று உணர்ந்தார். அவருடைய குடும்பத்தினரோ தாங்கள் கடவுளைச் சேவிக்க வேண்டும் என்கிற தங்களுடைய தீர்மானத்தில் விடாப்பிடியாக இருந்தனர். காலப்போக்கில், அந்தக் கணவர் கடவுளுடைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வதன் அவசியத்தை உணர ஆரம்பித்தார். ஆனால் அவர் தன்னை யெகோவாவிற்காக ஒப்புக்கொடுத்ததற்கு முன்பு 15 வருடங்கள் கடந்துபோயிருந்தன.
மெக்ஸிகோ முழுவதும், பல தனித்திருக்கும் சமுதாயங்கள் இன்னும் இருக்கின்றன; அங்குள்ள உள்ளூர்க்காரர்கள் தங்களுடைய ஆரம்பமொழியாகிய ஆதிவாசிகளின் மொழிகளையும் பழக்கவழக்கங்களையும் உடையவர்களாக இருக்கின்றனர். பைபிள் செய்தி இந்த மக்களைச் சென்றெட்டிக் கொண்டிருக்கிறது, இது அவர்களின் பண்பாடுகளை மேம்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவிசெய்துவருகிறது. ஏனென்றால் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது, வாசிக்கவும் எழுதவும் சிலர் கற்றுக்கொள்கிறார்கள். எனினும், மக்கள் குறைவான படிப்பும் சிறிதளவான பொருள்வளங்களையும் பெற்றிருக்கிற நிலையானது, அவர்கள் கருத்துக்களை எளிதில் ஏற்றுக்கொள்வர் என்று உண்மையில் அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. சில சமயங்களில், இனப் பெருமை, மூதாதையர்களின் பாரம்பரியங்களோடு பலமாக இணைக்கப்பட்டிருப்பது போன்றவை சிலர் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதைக் கடினமாக்குகிறது. ஆதிவாசிகளின் கிராமங்களில் சத்தியத்தை ஏற்றுக்கொள்பவர்கள் ஏன் மற்ற கிராமத்தார்களினால் பெரும்பாலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும் இது விளக்குகிறது. எனவே, சாந்தகுணம் பல்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறது.
சாந்தகுணத்தோடு பிரதிபலியுங்கள்
தனிப்பட்ட வகையில் உங்களைப் பற்றி என்ன? கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்திற்கு நீங்கள் பிரதிபலிக்கிறீர்களா? அல்லது சில பைபிள் சத்தியங்களை ஏற்றுக்கொள்வது உங்களுக்குக் கடினமாய் இருக்கிறதா? எது உங்களைத் தடுக்கிறது என நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்க ஒருவேளை விரும்பலாம். சத்தியத்திற்குள் வருபவர்களில் பெரும்பான்மையர் தாழ்ந்த பின்னணியிலிருப்பதால், நீங்கள் பாதிக்கப்படுகிறீர்களா? உங்கள் சிந்தனையில் தற்பெருமை உட்பட்டிருக்க முடியுமா? அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளைப் பிரதிபலிப்பது நல்லது: “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.”—1 கொரிந்தியர் 1:27-29.
வெறுமனே ஒரு மட்டமான மண்பாண்டத்தில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடித்ததால், அதை நீங்கள் ஏற்க மறுப்பீர்களா? நிச்சயமாகவே இல்லை! எனினும், அந்த முறையில்தான் கடவுள், உயிர் காக்கும் அவருடைய சத்திய வார்த்தையை நமக்குக் கொடுக்கிறார்; அப்போஸ்தலன் பவுல் விளக்குகிற பிரகாரம்: “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 4:7) சாந்தமும் மனத்தாழ்மையும், பொக்கிஷத்தை நம்மிடம் கொண்டுவரும் வெறும் “மண்பாண்டங்களை,” அல்லது மனித பிரதிநிதிகளைக் காணும்படிச் செய்யாமல், அதன் உண்மை மதிப்பை நாம் காணும்படி செய்யும். இப்படிச் செய்வதன்மூலம், நாம் ‘யெகோவாவினுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்பட்டு,’ “பூமியைச் சுதந்தரிக்கும்” சாந்தகுணமுள்ளோரோடு இருந்துகொண்டிருக்கும் வாய்ப்பை அதிகரிக்கவும் செய்வோம்.—செப்பனியா 2:3, NW; மத்தேயு 5:5.