ஆன்மீகக் காரியங்களில் புத்துணர்ச்சி பெறுங்கள்
‘என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.’—மத். 11:29.
1. திருச்சட்ட ஒப்பந்தத்தில் கடவுள் எதற்கான ஏற்பாட்டைச் செய்தார், ஏன்?
சீனாய் மலையில் செய்யப்பட்ட திருச்சட்ட ஒப்பந்தத்தில், வாராந்தர ஓய்வுநாள் சட்டமும் அடங்கியிருந்தது. யெகோவா தம்முடைய பிரதிநிதியாகிய மோசே மூலம் இஸ்ரவேல் தேசத்தாருக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம் நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப் பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.” (யாத். 23:12) ஆம், திருச்சட்டத்தின் கீழிருந்தவர்களுடைய நலனைக் கருதி, அவர்கள் ‘இளைப்பாறும்படி,’ அதாவது புத்துணர்ச்சி பெறும்படி, ஓய்வுநாள் அனுசரிப்பை யெகோவா அன்போடு ஏற்பாடு செய்தார்.
2. ஓய்வுநாள் அனுசரிப்பால் இஸ்ரவேலர் பெற்ற நன்மைகள் யாவை?
2 ஓய்வுநாள் என்பது வெறுமனே ஓய்வெடுப்பதற்கான நாளாக இருந்ததா? இல்லை, யெகோவாவின் மக்களாகிய இஸ்ரவேலருடைய வணக்கத்தில் அது ஒரு முக்கிய அம்சமாய் இருந்தது. ஓய்வுநாள் அனுசரிப்பு, ‘நீதியை . . . செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடக்கும்படி’ தங்கள் குடும்பத்தாருக்குக் கற்பிக்கத் தகப்பன்மாருக்கு நேரத்தை அளித்தது. (ஆதி. 18:19) அதோடு, யெகோவாவின் செயல்களைப் பற்றித் தியானிப்பதற்கும் ஒன்றுகூடிவந்து மகிழ்வதற்கும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் வாய்ப்பளித்தது. (ஏசா. 58:13, 14) எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில் உண்மையான புத்துணர்ச்சி கிடைக்கப்போகும் காலத்திற்கு அந்த ஓய்வுநாள் முன்நிழலாக இருந்தது. (ரோ. 8:21) நம்முடைய காலத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? யெகோவாவின் வழிகளில் நடக்க விரும்புகிற உண்மைக் கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட புத்துணர்ச்சியை எங்கே, எப்படிப் பெறலாம்?
சகோதர சகோதரிகள் தரும் புத்துணர்ச்சி
3. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஒருவரையொருவர் தூண்போல் தாங்கினார்கள், அதன் விளைவு என்ன?
3 கிறிஸ்தவச் சபை “சத்தியத்தின் தூணும் ஆதாரமுமாக” இருப்பதாய் அப்போஸ்தலன் பவுல் விவரித்தார். (1 தீ. 3:15) ஆரம்பகால கிறிஸ்தவர்கள், உற்சாகப்படுத்துவதன் மூலமும் அன்பினால் பலப்படுத்துவதன் மூலமும் ஒருவரையொருவர் தூண்போல் தாங்கினார்கள். (எபே. 4:11, 12, 16) எபேசுவில் பவுல் இருந்தபோது, கொரிந்து சபையைச் சேர்ந்த சகோதரர்கள் அவரைச் சந்தித்து உற்சாகப்படுத்தினார்கள். அதைக் குறித்து பவுல் சொன்னதைக் கவனியுங்கள்: ‘ஸ்தேவனான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் இங்கு வந்திருப்பது எனக்குச் சந்தோஷம்; . . . [அவர்கள்] என் மனதிற்கு . . . புத்துணர்ச்சி அளித்திருக்கிறார்கள்.’ (1 கொ. 16:17, 18) அதேபோல், கொரிந்துவில் இருந்த சகோதரர்களுக்கு ஊழியம் செய்ய தீத்து அங்கு சென்றபோது, பவுல் அச்சகோதரர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “உங்கள் அனைவராலும் அவரது உள்ளம் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது.” (2 கொ. 7:13) இன்றும்கூட, யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய கிறிஸ்தவச் சகோதர சகோதரிகள் தரும் உற்சாகத்தால் உண்மையான புத்துணர்ச்சியைப் பெறுகிறார்கள்.
4. சபைக் கூட்டங்கள் நமக்கு எவ்வாறு புத்துணர்ச்சி அளிக்கின்றன?
4 சபைக் கூட்டங்கள் பெருமகிழ்ச்சி தருவதை நீங்களே அனுபவத்தில் கண்டிருப்பீர்கள். அங்கே ஒவ்வொருவரிடமும் காணப்படும் ‘விசுவாசத்தின் மூலம் ஒருவருக்கொருவர் ஊக்கம்’ பெறுகிறோம். (ரோ. 1:12) நம் கிறிஸ்தவச் சகோதர சகோதரிகளோடு நாம் பட்டும்படாமல் பழகுவதில்லை, ஒட்டுதல் இல்லாமல் ஒதுங்குவதும் இல்லை. அவர்கள் நம்முடைய உயிர்த் தோழர்கள், நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அவர்களோடு தவறாமல் ஒன்றுகூடி வருவதன் மூலம் நாம் மிகுந்த ஆனந்தத்தையும் ஆறுதலையும் பெறுகிறோம்.—பிலே. 7.
5. மாநாடுகளில் நாம் எவ்வாறு ஒருவருக்கொருவர் புத்துணர்ச்சி அளிக்க முடியும்?
5 மாநாடுகளும்கூட நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கின்றன. அவை, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள உயிர்காக்கும் சத்தியத்தை வழங்குவதோடு, மற்றவர்களுடன் பழகுகையில் நம் ‘இதயக் கதவை அகலத் திறந்திட’ வாய்ப்பளிக்கின்றன. (2 கொ. 6:12, 13) ஆனால், நம்முடைய கூச்ச சுபாவத்தின் காரணமாக மற்றவர்களை அணுகிப் பேசுவது நமக்குக் கஷ்டமாக இருந்தால் என்ன செய்யலாம்? நம் சகோதர சகோதரிகளோடு பரிச்சயமாவதற்கு ஒரு வழி, மாநாடுகளில் வாலண்டியர் சேவை செய்ய முன்வருவதாகும். ஒரு சகோதரி, சர்வதேச மாநாட்டில் உதவிசெய்த பிறகு இவ்வாறு சொன்னார்: “அங்கே என் குடும்பத்தாரையும் ஒருசில நண்பர்களையும் தவிர வேறு யாரையுமே எனக்குத் தெரியவில்லை. ஆனால், சுத்தம் செய்ய உதவியபோது கணக்குவழக்கில்லாத சகோதர சகோதரிகளைச் சந்தித்தேன்! ரொம்பச் சந்தோஷமாக இருந்தது!”
6. விடுமுறையின்போது நாம் என்ன வழியில் புத்துணர்ச்சி பெறலாம்?
6 இஸ்ரவேலர் ஒவ்வொரு வருடமும் மூன்று பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக எருசலேமுக்குப் பயணம் செய்தார்கள். (யாத். 34:23) பெரும்பாலும், அவர்கள் தங்களுடைய வயல்களையும் வியாபாரங்களையும் விட்டுவிட்டு புழுதி நிறைந்த சாலைகளில் நாட்கணக்காக நடந்து சென்றார்கள். இருந்தாலும், அவர்கள் ஆலயத்திற்குச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் யெகோவாவைத் ‘துதித்துக்கொண்டிருந்ததை’ பார்த்து ‘மகா ஆனந்தம்’ அடைந்தார்கள். (2 நா. 30:21) இன்றும் யெகோவாவின் ஊழியர்கள் அநேகர் குடும்பமாகச் சேர்ந்து தங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகமாகிய பெத்தேலுக்குப் போய் வருவதில் மகா ஆனந்தம் அடைகிறார்கள். அடுத்த விடுமுறையின்போது நீங்களும் குடும்பமாக பெத்தேலுக்குப் போய் வர முடியுமா?
7. (அ) ஒன்றுகூடிவருவது ஏன் பயனுள்ளது? (ஆ) ஒன்றுகூடிவருகிற சந்தர்ப்பங்கள் ஊக்கம் தருபவையாகவும் நினைவில் நிற்பவையாகவும் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
7 குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் ஒன்றுகூடி வந்து நேரம் செலவிடுவதும் உற்சாகம் அளிக்கலாம். “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப் பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை” என்று ஞானியான சாலொமோன் ராஜா சொன்னார். (பிர. 2:24) ஒன்றுகூடி வருவது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாமல், நம் சக கிறிஸ்தவர்களை இன்னும் நன்கு அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது; இவ்வாறு, அவர்களோடு உள்ள பாசப்பிணைப்பை வலுவாக்குகிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நம்மை ஊக்கப்படுத்தி நம் நினைவைவிட்டு அகலாமல் இருப்பதற்கு, பெரிய கூட்டமாகக் கூடிவராதிருப்பது நல்லது; முக்கியமாக, மதுபானம் பரிமாறப்பட்டால் சரியாகக் கண்காணிக்கப்படும்படி பார்த்துக்கொள்வதும் நல்லது.
ஊழியம் தரும் புத்துணர்ச்சி
8, 9. (அ) இயேசு கற்பித்த செய்திக்கும், பரிசேயர் மற்றும் சதுசேயர் சுமத்திய சட்டதிட்டங்களுக்கும் இடையே இருந்த வித்தியாசம் என்ன? (ஆ) பைபிள் சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதால் நாம் எவ்வாறு நன்மையடைகிறோம்?
8 இயேசு பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்தார், தமது சீடர்களையும் அவ்வாறே செய்யும்படி உற்சாகப்படுத்தினார். இது, அவர் பின்வருமாறு சொன்னதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது: “அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்களோ குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானரிடம் கெஞ்சிக் கேளுங்கள்.” (மத். 9:37, 38) இயேசு கற்பித்த செய்தி உண்மையான புத்துணர்ச்சியைத் தந்தது; அது, ‘நற்செய்தியாக’ இருந்தது. (மத். 4:23; 24:14) பரிசேயர்கள் மக்கள்மீது சுமத்திய பாரமான சட்டதிட்டங்களுக்கு நேர் மாறானதாக இருந்தது.—மத்தேயு 23:4, 23, 24-ஐ வாசியுங்கள்.
9 நாம் ராஜ்ய செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது அவர்களுக்கு ஆன்மீகப் புத்துணர்ச்சி அளிக்கிறோம்; அதேசமயத்தில், அருமையான பைபிள் சத்தியங்களை நம் மனதிலும் இதயத்திலும் ஆழப் பதித்துக்கொள்கிறோம். பொருத்தமாகவே, சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: “கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.” (சங். 147:1) யெகோவாவைப் பற்றி அக்கம்பக்கத்தாரிடம் புகழ்ந்து பேசுவதால் உங்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியுமா?
10. நம் ஊழியத்தின் வெற்றி, நற்செய்தியை மக்கள் எந்தளவுக்கு ஆர்வமாகக் கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்ததா? விளக்குங்கள்.
10 சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றவர்களைவிட அதிக ஆர்வமாக நற்செய்தியைக் கேட்கிறார்கள் என்பது உண்மைதான். (அப்போஸ்தலர் 18:1, 5-8-ஐ வாசியுங்கள்.) நீங்கள் வசிக்கும் பகுதியில் வெகு சிலரே நற்செய்தியிடம் ஆர்வம் காட்டினால், ஊழியம் செய்வதன் பயனைச் சிந்தித்துப் பார்க்க முயற்சி செய்யுங்கள். யெகோவாவின் பெயரை அறிவிக்க நீங்கள் விடாமுயற்சி எடுப்பது வீண்போகாது என்பதை நினைவில் வையுங்கள். (1 கொ. 15:58) அதோடு, நம் ஊழியத்தின் வெற்றி, நற்செய்தியை மக்கள் எந்தளவுக்கு ஆர்வமாகக் கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அல்ல. நல்மனமுள்ள ஆட்கள் நற்செய்தியைக் கேட்க வாய்ப்பு பெறும்படி யெகோவா பார்த்துக்கொள்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.—யோவா. 6:44.
குடும்ப வழிபாடு தரும் புத்துணர்ச்சி
11. பெற்றோருக்கு என்ன பொறுப்பை யெகோவா அளித்திருக்கிறார், அவர்கள் அதை எப்படி நிறைவேற்றலாம்?
11 தேவபக்தியுள்ள பெற்றோர், யெகோவாவையும் அவரது வழிகளையும் பற்றித் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் பொறுப்பைப் பெற்றிருக்கிறார்கள். (உபா. 11:19, 20) நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், நம்முடைய அன்பான பரலோகத் தகப்பனைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க நேரம் ஒதுக்குகிறீர்களா? இந்த முக்கியப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் உங்களுக்கு உதவ, யெகோவா ஏராளமான ஆன்மீக உணவை வழங்கியிருக்கிறார்; ஆம், போஷாக்குமிக்க இந்த ஆன்மீக உணவை அவர் புத்தகங்கள், பத்திரிகைகள், வீடியோக்கள், ஆடியோ பதிவுகள் ஆகியவற்றின் மூலம் அள்ளி வழங்கியிருக்கிறார்.
12, 13. (அ) குடும்ப வழிபாட்டிலிருந்து குடும்பத்தார் எவ்வாறு பயன் பெறலாம்? (ஆ) குடும்ப வழிபாடு புத்துணர்ச்சி அளிப்பதாக இருப்பதற்குப் பெற்றோர் என்ன செய்யலாம்?
12 அதுமட்டுமல்லாமல், குடும்ப வழிபாட்டிற்காக உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். குடும்ப பைபிள் படிப்புக்காக வாரந்தோறும் ஒரு மாலைப்பொழுது ஒதுக்கப்படுகிறது. இந்த ஏற்பாட்டினால் குடும்பத்தாரிடையே பாசப்பிணைப்பு அதிகரித்திருப்பதையும் யெகோவாவுடன் உள்ள பந்தம் பலப்பட்டிருப்பதையும் அநேகர் கண்டிருக்கிறார்கள். ஆனால், குடும்ப வழிபாட்டினால் ஆன்மீகப் புத்துணர்ச்சி கிடைக்கும்படி பெற்றோர் எவ்வாறு பார்த்துக்கொள்ளலாம்?
13 குடும்ப வழிபாடு சுவாரஸ்யமே இல்லாத, அலுப்புத்தட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது. நாம் ‘சந்தோஷமுள்ள கடவுளை’ வணங்குகிறோம்; நாம் அவரை மகிழ்ச்சியோடு வழிபட வேண்டுமென்றுதான் அவரும் விரும்புகிறார். (1 தீ. 1:11; பிலி. 4:4) பைபிளிலுள்ள மதிப்புமிக்க சத்தியங்களைப் பற்றிக் கலந்து பேசக் கூடுதலாக ஒரு மாலைப்பொழுது கிடைத்திருப்பது பெரிய ஆசீர்வாதம். பெற்றோர் தங்களுடைய கற்பனை வளத்தைப் பயன்படுத்தி புதுப் புது வழிகளில் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு பெற்றோர் தங்களுடைய குடும்ப வழிபாட்டின்போது, “சாத்தானை பாம்பு என பைபிள் குறிப்பிடுவது ஏன்?” என்ற தலைப்பில் பேச தங்களுடைய பத்து வயது மகன் ப்ரான்டனுக்கு வாய்ப்பளித்தார்கள். ஏனென்றால், அவன் பாம்புப் பிரியனாக இருந்தான்; ஆகவே, அது சாத்தானுக்கு ஒப்பிடப்படுவதைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். சில குடும்பத்தார் அவ்வப்போது பைபிள் நாடகங்களை நடத்துகிறார்கள்; அவர்கள் ஆளுக்கொரு கதாபாத்திரத்தை ஏற்று அதன்படி பைபிளிலிருந்து வாசிக்கிறார்கள் அல்லது ஒரு பைபிள் சம்பவத்தை நடித்துக் காட்டுகிறார்கள். இவ்விதங்களில் குடும்ப வழிபாட்டை நடத்தும்போது உங்கள் பிள்ளைகள் அதை ரசித்து மகிழ்வார்கள், அதோடு அதில் ஒன்றிப்போய்விடுவார்கள்; அப்போது, பைபிள் நியமங்கள் அவர்களுடைய உள்ளத்தைத் தொடும்.a
கவலைகளைத் தவிர்த்திடுங்கள்
14, 15. (அ) இந்தக் கடைசி நாட்களில் கவலையும் பயமும் எவ்வாறு அதிகரித்திருக்கின்றன? (ஆ) என்ன கூடுதலான பிரச்சினைகளை நாம் சந்திக்கலாம்?
14 இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்களில் கவலையும் பயமும் அதிகரித்திருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டமும் மற்ற பொருளாதார நெருக்கடிகளும் லட்சக்கணக்கானோரைப் பாதித்திருக்கின்றன. வேலை பார்க்கும் சிலர்கூட, சம்பாதிக்கும் பணமெல்லாம் ஏதோ பொத்தலான பையில் இருப்பதுபோலவும் தங்கள் குடும்பத்தாருக்குப் பயன் அளிக்காததுபோலவும் அடிக்கடி உணருகிறார்கள். (ஆகாய் 1:4-6-ஐ ஒப்பிடுங்கள்.) அரசியல்வாதிகளும் மற்ற தலைவர்களும் தீவிரவாதத்தையும் வேறு சமூகக் கேடுகளையும் ஒழித்துக்கட்டத் திண்டாடுகிறார்கள். மக்களில் அநேகர் தங்களுடைய குற்றங்குறைகளை எண்ணி நொந்து நூலாகிறார்கள்.—சங். 38:4.
15 சாத்தானுடைய இந்த உலகிலுள்ள பிரச்சினைகளும் கவலைகளும் உண்மைக் கிறிஸ்தவர்களைக்கூட வாட்டி வதைக்கின்றன. (1 யோ. 5:19) சில சமயங்களில், அவர்கள் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க முயலுகையில் கூடுதலான பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். “அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்” என இயேசு சொன்னார். (யோவா. 15:20) என்றாலும், ‘துன்புறுத்தப்படும்’ சமயத்தில்கூட நாம் “கைவிடப்படுவதில்லை.” (2 கொ. 4:9) ஏன்?
16. மகிழ்ச்சியை இழக்காதிருக்க நமக்கு எது உதவும்?
16 “உழைத்துக் களைத்துப் போனவர்களே, பெருஞ்சுமை சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன்” என்று இயேசு சொன்னார். (மத். 11:28) கிறிஸ்து தந்த மீட்புப் பலியில் முழு விசுவாசம் வைப்பதன் மூலம் நாம் யெகோவாவின் கைகளில் நம்மையே ஒப்படைத்துவிடுகிறோம் எனச் சொல்லலாம். இவ்விதத்தில் நாம் ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ பெறுகிறோம். (2 கொ. 4:7) ‘சகாயராக’ செயல்படும் கடவுளுடைய சக்தி நம் விசுவாசத்தைப் பெருமளவு பலப்படுத்தும்; அதன் விளைவாக, சோதனைகளையும் கஷ்டங்களையும் சகித்துக்கொள்வதற்கு மட்டுமல்ல மகிழ்ச்சியை இழக்காதிருக்கவும் நம்மால் முடியும்.—யோவா. 14:26; யாக். 1:2-4.
17, 18. (அ) நாம் எதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? (ஆ) சுகபோகங்களுக்கு முதலிடம் தந்தால் என்ன நடக்கலாம்?
17 சுகபோகப் பித்துப் பிடித்த இந்த உலகத்தால் பாதிக்கப்படாதவாறு உண்மைக் கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். (எபேசியர் 2:2-5-ஐ வாசியுங்கள்.) இல்லாவிட்டால், ‘உடலின் இச்சை, கண்களின் இச்சை, பகட்டாகக் காட்டப்படுகிற பொருள் வசதி’ ஆகிய வலைகளில் நாம் விழுந்துவிடுவோம். (1 யோ. 2:16) அல்லது, உடலின் இச்சைகளுக்கு இணங்கிப்போவது புத்துணர்ச்சி தருமென தவறாக நினைத்துவிடுவோம். (ரோ. 8:6) உதாரணத்திற்கு, சிலர் கிளர்ச்சி அடைவதற்காகப் போதைப்பொருள், மதுபானம், ஆபாசம், ஆபத்தான விளையாட்டு, அல்லது வேறு முறைகேடான காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். சாத்தானுடைய ‘சூழ்ச்சிகள்,’ புத்துணர்ச்சியைக் குறித்த தவறான கண்ணோட்டத்தை மக்களுக்கு அளித்து அவர்களை ஏமாற்றுவதற்கென்றே வகுக்கப்பட்டவை.—எபே. 6:11.
18 மிதமான அளவுக்குச் சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், தரமான பொழுதுபோக்கில் ஈடுபடுவதிலும் தவறு இல்லை என்பது உண்மைதான். ஆனால், நாம் இவற்றிற்கே வாழ்க்கையில் முதலிடம் தருவது இல்லை. முக்கியமாக இந்தக் காலத்தில் சமநிலையும் சுயக்கட்டுப்பாடும் மிக அவசியம். ஏனென்றால், சொந்தக் காரியங்கள் நம்மைத் தளர்ந்துபோக வைத்து, ‘நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவில் செயலற்றவர்களாகவும் பலனற்றவர்களாகவும் ஆக்கிவிட’ வாய்ப்பிருக்கிறது.—2 பே. 1:8.
19, 20. நாம் எவ்வாறு உண்மையான புத்துணர்ச்சியைப் பெறலாம்?
19 நாம் யெகோவாவின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நம் சிந்தையைச் செதுக்கினால், இவ்வுலகம் அளிக்கிற சுகபோகங்கள் தற்காலிகமானவையே என்பதை அறிந்திருப்போம். மோசே இதை உணர்ந்திருந்தார், நாமும் உணர்ந்திருக்கிறோம். (எபி. 11:25) ஆகவே, அளவில்லாச் சந்தோஷத்தையும் திருப்தியையும் நிரந்தரமாகத் தருகிற உண்மையான புத்துணர்ச்சி, நம் பரலோகத் தகப்பனின் சித்தத்தைச் செய்வதாலேயே கிடைக்கிறது.—மத். 5:6.
20 நாம் தொடர்ந்து ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட்டு, புத்துணர்ச்சி பெறுவோமாக. அப்படிச் செய்கையில், “நம்முடைய மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்காகவும், நம்முடைய மகத்தான கடவுளும் நம்முடைய மீட்பராகிய கிறிஸ்து இயேசுவும் மகிமையோடு வெளிப்படுவதற்காகவும் காத்திருக்கிற வேளையில்,” ‘தேவபக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டொழிப்போம்.’ (தீத். 2:12, 13) ஆகவே, நாம் இயேசுவின் அதிகாரத்திற்கும் வழிநடத்துதலுக்கும் அடிபணிவதன் மூலம் அவரது நுகத்தின்கீழ் நிலைத்திருக்கத் தீர்மானமாய் இருப்போமாக. அப்போது, உண்மையான சந்தோஷத்தையும் புத்துணர்ச்சியையும் பெறுவோம்!
[அடிக்குறிப்பு]
a குடும்பப் படிப்பு சுவாரஸ்யமானதாகவும் அறிவூட்டுவதாகவும் இருப்பதற்கு வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ள ஜனவரி 1991 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 1-ஐப் பாருங்கள்.
என்ன பதில் சொல்வீர்கள்?
• இன்று யெகோவாவின் மக்கள் எவ்வாறு புத்துணர்ச்சி பெறுகிறார்கள்?
• நம் ஊழியம் எவ்வாறு நமக்கும் நாம் சந்திப்பவர்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது?
• குடும்ப வழிபாடு புத்துணர்ச்சி தரும்படி பார்த்துக்கொள்ள பெற்றோர் என்ன செய்யலாம்?
• ஆன்மீக ரீதியில் நம்மைத் தளர்ந்துபோக வைக்கும் காரியங்கள் யாவை?
[பக்கம் 26-ன் படங்கள்]
இயேசுவின் நுகத்தை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலம், பல வழிகளில் புத்துணர்ச்சி பெறுகிறோம்