அன்பில் ஒன்றுபட்டிருத்தல் வருடாந்தரக் கூட்டம்—ஓர் அலசல்
அமெரிக்கா, நியூ ஜெர்ஸியிலுள்ள ஜெர்ஸி நகரத்தில் அமைந்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டு மன்றம் சந்தோஷத்தில் களைகட்டியிருந்தது. அக்டோபர் 3, 2009 அன்று காலையில் 5,000-க்கும் அதிகமானோர், உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தரக் கூட்டத்திற்காக அங்கு வந்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கேட்பதற்கு அல்லது பார்ப்பதற்கு அமெரிக்காவிலுள்ள மூன்று பெத்தேல் வளாகங்களிலும் கனடா பெத்தேலிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யெகோவா மீதுள்ள அன்பில் ஒன்றுபட்டிருக்கிற மொத்தம் 13,235 பேர், மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை அனுபவித்து மகிழ்ந்தார்கள்.
ஆளும் குழுவின் அங்கத்தினரான ஜெஃப்ரீ ஜேக்ஸன் இந்தக் கூட்டத்திற்குச் சேர்மனாக இருந்தார். கூட்டத்தின் தொடக்கத்தில், புதிய பாட்டுப் புத்தகத்திலுள்ள பாடல்களைப் பாடுவதற்கு பெத்தேல் அங்கத்தினர்கள் அடங்கிய இசைக் குழுவை அவர் அறிமுகம் செய்து வைத்தார். ஆளும் குழுவின் மற்றொரு அங்கத்தினரான டேவிட் ஸ்ப்லேன் இந்த இசைக் குழுவின் இயக்குநராக இருந்தார்; அவர், உண்மை வணக்கத்தில் இசை எந்தளவு முக்கியமானது என்பதைச் சுருக்கமாக விளக்கினார். இந்தக் கூட்டத்தில் மூன்று புதிய பாடல்களைப் பாடக் கூட்டத்தாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; இசைக் குழுவினர் அந்தப் பாடல்களை முதலில் பாடினார்கள், பிறகு அந்த இசைக் குழுவினரோடு சேர்ந்து கூட்டத்தார் அதே பாடல்களைத் திரும்பவும் பாடினார்கள். இந்த விசேஷ நிகழ்ச்சிக்காக மட்டுமே இத்தகைய இசைக் குழு பயன்படுத்தப்பட்டது; இதை, சபைகளோ வட்டாரங்களோ மாவட்டங்களோ மாதிரியாகப் பின்பற்றக்கூடாது.
கிளை அலுவலகங்களிலிருந்து வந்த அறிக்கைகள்
ஐந்து கிளை அலுவலகங்களிலிருந்து வந்திருந்த கிளை அலுவலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் அறிக்கைகளைச் சொன்னார்கள். அமெரிக்காவுக்கும் கனடாவுக்குமான பெரும்பாலான பத்திரிகைகள் இனி கனடா கிளை அலுவலகத்தில் அச்சிடப்படும் என்று அங்கிருந்து வந்திருந்த கென்னத் லிட்டல் சொன்னார்; ஆகவே, தற்போது அச்சிடப்படுவதைவிட பத்து மடங்கு அதிகமான பத்திரிகைகள் அங்கு அச்சிடப்படும். இதற்காக, புதிதாய் வாங்கப்பட்ட அச்சு இயந்திரம் தினமும் இரண்டு ஷிப்டுகளில் மொத்தம் 16 மணிநேரம் இயங்கும்.
டொமினிகன் குடியரசில் நடைபெற்று வரும் ராஜ்ய பிரசங்க வேலையைக் குறித்து, ரேன்னர் தாம்ஸன் விவரித்தார்; நைஜீரியாவில் செய்யப்படுகிற ஊழியத்தைக் குறித்து ஆல்பர்ட் ஓலி தெரிவித்தார். மொசம்பிக்கில் பல வருட துன்புறுத்தலுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகள் 1992-ல் சட்டப்படி பதிவு செய்யப்பட்டதை அங்கிருந்து வந்த ஏமில் க்ரிட்ஸிங்கர் விளக்கினார். இந்த மூன்று நாடுகளிலுமே சமீபத்தில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் மிகப் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய சகோதரர்களின் மேற்பார்வையில் உள்ள கிழக்கு தைமூர் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் குறித்து ஆஸ்திரேலிய கிளை அலுவலகத்திலிருந்து வந்திருந்த விவ் மோரிட்ஸ் சொன்னார்.
ஆளும் குழுவினுடைய குழுக்கள்
1976-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகள் அனைத்தும் ஆளும் குழுவின் ஆறு குழுக்களுடைய மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டன. பின்னர், வேறே ஆடுகளின் வகுப்பாரில் சிலர் இந்தக் குழுக்களுக்கு உதவி செய்பவர்களாக நியமிக்கப்பட்டார்கள். இப்போது 23 பேர் அவ்வாறு உதவி செய்து வருகிறார்கள். அவர்களில் 6 பேர் பேட்டி காணப்பட்டார்கள். அவர்கள் மொத்தமாக 341 வருடங்களை, அதாவது ஒவ்வொருவரும் சராசரியாக 57 வருடங்களை, முழுநேர ஊழியத்தில் செலவிட்டிருக்கிறார்கள்.
1943-லிருந்து பெத்தேலில் சேவை செய்து வரும் டான் ஆடம்ஸ், ஒருங்கிணைப்பாளர்களின் குழுவைப் பற்றி விளக்கினார். அந்தக் குழுவில் மற்ற ஐந்து குழுக்களிலுமுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள்; அந்தக் குழு, மற்ற ஐந்து குழுக்களும் சேர்ந்து சுமுகமாகச் செயல்படும்படி பார்த்துக்கொள்கிறது. அது, உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்படுகிற பெரும் நெருக்கடிகள், துன்புறுத்தல்கள், நீதிமன்ற வழக்குகள், இயற்கைப் பேரழிவுகள் போன்ற உடனடித் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறது.
ஊழியர்களின் குழு செய்கிற வேலையைப் பற்றி டான் மால்கன் விளக்கினார்; அந்தக் குழு, உலகெங்குமுள்ள 19,851 பெத்தேல் அங்கத்தினர்களுடைய ஆன்மீகத் தேவைகளையும் பிற தேவைகளையும் கவனித்துக்கொள்கிறது. பிரசுரிக்கும் குழு, கிளை அலுவலகங்களுக்குத் தேவையான பொருள்களையும் சாதனங்களையும் வாங்குவதை எவ்வாறு மேற்பார்வை செய்கிறதென டேவிட் சிங்ளர் விளக்கினார். அடுத்து, பெத்தேலில் கிட்டத்தட்ட 60 வருடங்களாகச் சேவை செய்து வருகிற ராபர்ட் வாலன், ஊழியத்திலும் சபைகளிலும் யெகோவாவின் மக்கள் செய்து வருபவற்றை ஊழியக் குழு எவ்வாறு மேற்பார்வையிடுகிறது என்பதைச் சொன்னார். போதனாக் குழு, மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிகளைத் தயாரிக்க எந்தளவு பாடுபடுகிறது என்பதை வில்லியம் மாலன்ஃபான்ட் தொகுத்துக் கூறினார். இறுதியில், நம்முடைய பிரசுரங்களுக்கான தகவலைக் கவனமாய்த் தயாரித்து வழங்குவதை எழுத்துக் குழு எவ்வாறு மேற்பார்வை செய்கிறது என்பதை ஜான் விஸ்சக் விவரித்தார்.a
2010-ன் வருடாந்தர வசனம் அன்பை வலியுறுத்துகிறது
அடுத்த மூன்று பேச்சுகளை ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் கொடுத்தார்கள். “மற்றவர்கள் உங்களிடம் அன்பு காட்ட வேண்டுமென ஆசைப்படுகிறீர்களா?” என்ற கேள்வியுடன் கெரட் லாஷ் தன் பேச்சை ஆரம்பித்தார். அன்பு, மனிதரின் அடிப்படை தேவை என்றும் அந்த அன்பினால் நாம் எல்லாருமே தழைத்தோங்குகிறோம் என்றும் அவர் விளக்கினார். நாம் உயிரோடிருப்பதற்குக் காரணமே அன்புதான்; ஏனென்றால், யெகோவா தன்னலமற்ற அன்பினால்தான் நம்மைப் படைத்திருக்கிறார். முக்கியமாக, யெகோவா மீதுள்ள அன்பே பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் ஈடுபட நம்மைத் தூண்டுகிறது.
நியமங்களின் அடிப்படையிலான அன்பை நாம் சக மனிதரிடம் மட்டுமல்ல, நம்முடைய எதிரிகளிடமும் காட்டுகிறோம். (மத். 5:43-45) இயேசு நமக்காக எதையெல்லாம் சகித்தார் என்பதைச் சிந்திக்கும்படி கூடிவந்திருந்தோர் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்; அவர் சாட்டையால் அடிக்கப்பட்டார், கேலி செய்யப்பட்டார், துப்பப்பட்டார், ஈட்டியால் குத்தப்பட்டார். இந்த வேதனைக்கு மத்தியிலும், தம்மைக் கழுமரத்தில் அறைந்த படைவீரர்களுக்காக அவர் ஜெபம் செய்தார். இது அவரிடம் முன்பைவிட அதிக அன்பு காட்ட நம்மைத் தூண்டுகிறதல்லவா? பிறகு சகோதரர் லாஷ், 1 கொரிந்தியர் 13:7, 8-லிருந்து எடுக்கப்பட்ட 2010-ம் ஆண்டுக்கான வருடாந்தர வசனத்தை அறிவித்தார்; அது, ‘அன்பு எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது’ என்பதாகும். நமக்கு என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, என்றென்றும் அன்பு காட்டுவதற்கும் அன்பு காட்டப்படுவதற்குமான எதிர்பார்ப்பும் இருக்கிறது.
குறைந்த பெட்ரோலுடன் ஓட்டுகிறீர்களா?
சாம்யெல் ஹெர்ட் ஓர் உதாரணத்துடன் தன் பேச்சை ஆரம்பித்தார். ஒரு நண்பர் 50 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதற்கு உங்களைத் தன் காரில் ஏற்றிக்கொள்கிறாரென வைத்துக்கொள்ளுங்கள். அவருடன் பயணிக்கையில், பெட்ரோல் டாங்க் ‘எம்ப்டி’ ஆகிவிட்டதாக காரிலுள்ள இன்டிகேட்டர் காட்டுவதைக் கவனிக்கிறீர்கள். பெட்ரோல் எந்தச் சமயத்திலும் தீர்ந்துவிடலாம் என்பதை உங்கள் நண்பரிடம் சொல்கிறீர்கள். அவர் உங்களிடம் கவலைப்பட வேண்டாமென்றும், டாங்கில் சுமார் நான்கு லிட்டர் பெட்ரோல் இன்னும் இருக்கிறதென்றும் சொல்கிறார். ஆனால், சீக்கிரத்தில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது. காரில் பெட்ரோல் தீரப்போவது தெரிந்தும் அதை ஓட்டிச் செல்வது புத்திசாலித்தனமாய் இருக்குமா? டாங்க் நிறைய பெட்ரோல் வைத்திருப்பது எவ்வளவு நல்லது! அடையாள அர்த்தத்தில், நாமும் மனம் என்ற டாங்க் நிறைய, யெகோவாவைப் பற்றிய அறிவு என்ற பெட்ரோலை வைத்திருக்க வேண்டும்.
அப்படி வைத்திருப்பதற்கு, நாம் தவறாமல் அறிவைப் பெறுவது அவசியம். அதற்கு நான்கு வழிகள் இருக்கின்றன. முதல் வழி, தனிப்பட்ட படிப்பாகும். நாம் தினமும் பைபிளை வாசித்து அதை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அதிலுள்ள வார்த்தைகளை வெறுமனே வாசிக்காமல் அவற்றைப் புரிந்துகொள்வதும் அவசியம். இரண்டாவது வழி, குடும்ப வழிபாட்டுக்கான மாலைப்பொழுதை நன்கு பிரயோஜனப்படுத்திக் கொள்வதாகும். நாம் வாரந்தோறும் ‘பெட்ரோலை’ கொஞ்சமாகப் போட்டுக்கொள்கிறோமா அல்லது ‘டாங்க் நிறைய’ போட்டுக்கொள்கிறோமா? மூன்றாவது வழி, சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதாகும். நான்காவது வழி, யெகோவாவின் செயல்களைப் பற்றித் தனிமையில் அமைதியாகத் தியானிப்பதாகும். “பூர்வ நாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்” என்று சங்கீதம் 143:5 சொல்கிறது.
‘நீதிமான்கள் பிரகாசிப்பார்கள்’
சகோதரர் ஜான் பார் மூன்றாவதும் கடைசியுமான பேச்சைக் கொடுத்தார்; அதில், கோதுமை மற்றும் களையைப் பற்றிய இயேசுவின் உவமையை விளக்கினார். (மத். 13:24-30, 38, 43) அந்த உவமையின்படி, ஓர் ‘அறுவடைக் காலத்தில்,’ கோதுமையைப் போன்ற “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்” கூட்டிச்சேர்க்கப்படுவார்கள், களைகளோ எரித்துப்போடப்படும்.
கூட்டிச்சேர்க்கும் வேலை என்றென்றும் தொடராது என்பதைச் சகோதரர் பார் தெளிவுபடுத்தினார். அவர் மத்தேயு 24:34-ஐ மேற்கோள் காட்டினார்; “இவையெல்லாம் நடப்பதற்குமுன் இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது” என்று அது சொல்கிறது. பின்பு, இந்தக் குறிப்பை இருமுறை வாசித்தார்: “1914-ல் கடைசி நாட்களுக்கான அடையாளம் ஆரம்பமானதைப் பார்த்த பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் சிலரும் மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பத்தைப் பார்க்கப்போகிற பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் சிலரும் ஒரே காலகட்டத்தில் வாழ்வார்கள் என்று இயேசு அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும்.” இயேசு சொன்ன “இந்தத் தலைமுறை” எவ்வளவு காலம் நீடிக்கும் என நமக்குத் தெரியாது, ஆனால் மேற்சொன்ன இரு தொகுதியினரும் அதில் அடங்குவார்கள்; அந்த இரு தொகுதியினரும் ஒரே காலகட்டத்தில் வாழ்வார்கள். பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பல்வேறு வயதினராக இருந்தாலும், அந்த இரு தொகுதியினரும் கடைசி நாட்களின் ஏதோவொரு கட்டத்தில் சமகாலத்தவர்களாக இருப்பார்கள். இவர்களில் முதியவர்கள், அதாவது 1914-ல் கடைசி நாட்களுக்கான அடையாளம் ஆரம்பமானதைக் கண்டுணர்ந்தவர்கள், இவர்களில் இளையவர்களோடு ஒரே காலத்தில் வாழ்வார்கள்; இப்படி அந்த முதியவர்களோடு ஒரே காலத்தில் வாழும் அந்த இளையவர்கள் மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாவதற்குமுன் இறந்துபோக மாட்டார்கள்; இதை அறிவது எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது!
“கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்” தங்களுடைய பரலோகப் பரிசைப் பெற ஆவலோடு காத்திருக்கிறார்கள்; ஆனால், நாம் அனைவருமே உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்து இறுதிவரை நன்கு பிரகாசிக்க வேண்டும். நம் காலத்தில் “கோதுமை” சேர்க்கப்படுவதைப் பார்க்கும் எப்பேர்ப்பட்ட பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம்!
இறுதிப் பாட்டுக்குப் பிறகு, ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் தியோடர் ஜாரஸ் ஜெபம் செய்தார். இந்த வருடாந்தரக் கூட்டம் அளித்த உற்சாகத்திற்கு அளவே இல்லை!
[அடிக்குறிப்பு]
a ஆளும் குழுவின் ஆறு குழுக்களும் செய்கிற வேலைகளைப் பற்றி அறிந்துகொள்ள, மே 15, 2008 தேதியிட்ட காவற்கோபுரம் பக்கம் 29-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 5-ன் பெட்டி]
மூப்பர்களுக்கான பள்ளி
சபை மூப்பர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்பதை ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் அன்தனி மாரிஸ் இந்த வருடாந்தரக் கூட்டத்தில் அறிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மூப்பர்களுக்கு 2008-ன் ஆரம்பத்தில் ஒரு பள்ளி துவங்கப்பட்டது; நியு யார்க், பாட்டர்ஸனிலுள்ள கல்வி மையத்தில் அது துவங்கப்பட்டது. அதன் 72-வது வகுப்பு அப்போதுதான் முடிவடைந்திருந்தது; மொத்தம் 6,720 மூப்பர்கள் அப்பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் நிறையப் பேருக்குப் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமே 86,000-க்கும் அதிகமான மூப்பர்கள் இருக்கிறார்கள். ஆகவே, டிசம்பர் 7, 2009 முதற்கொண்டு நியு யார்க், புருக்லினில் மற்றொரு பள்ளியைத் துவங்க ஆளும் குழு அனுமதி அளித்தது.
இந்தப் பள்ளியில் போதனையாளர்களாக இருப்பதற்கான பயிற்சியை நான்கு பயணக் கண்காணிகள் இரு மாதங்களுக்கு பாட்டர்ஸனில் பெறவிருந்தார்கள். அந்தப் பயிற்சிக்குப்பின் அவர்கள் புருக்லினில் நடைபெறும் பள்ளியில் போதனையாளர்களாக இருப்பதற்கு அனுப்பப்படுவார்கள்; அதன்பின் இன்னும் நான்கு பேர் பயிற்றுவிக்கப்படுவார்கள். பிறகு இவர்கள் புருக்லினில் நடைபெறும் பள்ளியில் போதனையாளர்களாக இருப்பார்கள்; முதலில் அனுப்பப்பட்ட நான்கு பேரோ மாநாட்டு மன்றங்களிலும் ராஜ்ய மன்றங்களிலும் நடக்கும் பள்ளியில் போதனையாளர்களாக இருப்பார்கள். இம்முறையில் 12 போதனையாளர்கள் பயிற்சி பெற்ற பிறகு, ஒவ்வொரு வாரமும் அவர்கள் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் நடக்கும் ஆறு பள்ளிகளில் போதிப்பார்கள். அதன்பின், ஸ்பானிஷ் மொழியில் போதிப்பதற்கு நான்கு போதனையாளர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். இந்தப் பள்ளி, தற்போதுள்ள ராஜ்ய ஊழியப் பள்ளியை மாற்றீடு செய்யாது; இந்தப் பள்ளியின் நோக்கம், ஆன்மீக முன்னேற்றம் செய்ய மூப்பர்களுக்கு உதவுவதாகும். 2011-ஆம் ஊழிய ஆண்டில், உலகெங்கும் உள்ள கிளை அலுவலகங்கள் இந்தப் பள்ளிகளை மாநாட்டு மன்றங்களிலும் ராஜ்ய மன்றங்களிலும் நடத்த ஆரம்பிக்கும்.
[பக்கம் 4-ன் படங்கள்]
“யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்” என்ற புதிய பாட்டுப் புத்தகத்திலுள்ள பாடலுடன் வருடாந்தரக் கூட்டம் துவங்கியது