கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
நாம் செய்கிற நல்லதைப் பார்க்கிறார்
‘யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்.’ (1 நாளாகமம் 28:9) யெகோவா நம்மீது எந்தளவு அக்கறையாய் இருக்கிறார் என்பதை இந்த வசனம் காட்டுகிறது; யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கவும் இது நம்மைத் தூண்டுகிறது. நாம் அபூரணராக இருந்தாலும் நாம் செய்கிற நல்லதை யெகோவா கவனிக்கிறார். 1 இராஜாக்கள் 14:13-ல் அபியாவைக் குறித்து அவர் சொன்ன வார்த்தைகளிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது.
ஒரு மோசமான குடும்பத்தில் அபியா வாழ்ந்து வந்தார். அவருடைய அப்பா யெரொபெயாம், பெரும்பாலான இஸ்ரவேல் மக்களை யெகோவாவிடமிருந்து வழிவிலகச் செய்தார்.a ‘குப்பையைக் கழித்துப்போடுவது போல்’ யெரொபெயாமின் வீட்டாரில் அனைவரையும் அழித்துப்போட யெகோவா தீர்மானித்தார். (1 இராஜாக்கள் 14:10) ஆனால், அவருடைய குடும்பத்தில் ஒருவரை மட்டும், ஆம், மரணப் படுக்கையில் இருந்த அபியாவை மட்டும் நல்லடக்கம் செய்யும்படி யெகோவா கட்டளையிட்டார்.b ஏன்? அதை யெகோவாவே சொன்னார்: ‘யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டது.’ (1 இராஜாக்கள் 14:1, 12, 13) இதிலிருந்து அபியாவைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
அபியா யெகோவாவை வணங்கிவந்தார் என்று பைபிள் சொல்வதில்லை. இருந்தாலும், ஏதோவொரு நல்ல காரியம் அவரிடம் காணப்பட்டது. ஆம், “தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக” அவரிடத்தில் நல்ல காரியம் காணப்பட்டது; ஒருவேளை யெகோவாவுடைய வணக்கம் சம்பந்தமாக ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கலாம். எருசலேமிலிருந்த ஆலயத்திற்கு அபியா புனித யாத்திரை மேற்கொண்டிருக்கலாம், அல்லது இஸ்ரவேலர்களை எருசலேமிற்குப் போகவிடாமல் தடுப்பதற்கு யெரொபெயாம் வைத்திருந்த காவலாளர்களைப் பணியிலிருந்து நீக்கியிருக்கலாம் என்று ரபீனிய எழுத்தாளர்கள் சொல்கிறார்கள்.
அபியா செய்த நல்ல காரியம் எதுவாக இருந்தாலும், அது குறிப்பிடத்தக்கது. முதலாவது, அவர் அதை மனப்பூர்வமாகச் செய்தார். ஏன் அப்படிச் சொல்கிறோமென்றால், இந்த நல்ல காரியம் ‘அவரிடத்திலே’ இருந்தது; அதாவது, அவருடைய இருதயத்தில் இருந்தது. இரண்டாவது, அது அசாதாரணமானது. “யெரொபெயாமின் வீட்டாரில்” ஒருவராய் இருந்தபோதிலும் அவர் அந்த நல்ல காரியத்தைச் செய்தார். ஓர் அறிஞர் சொல்கிறபடி, “ஒரு மோசமான இடத்திலிருந்தோ, ஒரு மோசமான குடும்பத்திலிருந்தோ வந்த ஒருவர் ஒரு நல்ல காரியத்தைச் செய்கிறார் என்றால் அது மிகவும் பாராட்டத்தக்கது.” இன்னொரு அறிஞர் சொல்கிறபடி, அபியா செய்த நல்ல காரியம், “இருள் சூழ்ந்த வானில் மின்னுகிற நட்சத்திரங்களைப் போலவும் இலையுதிர்ந்த மரங்களுக்கு நடுவில் நிற்கிற கேதுரு மரத்தைப் போலவும் . . . பளிச்சென்று தெரிந்தது.”
மிக முக்கியமாக, யெகோவாவைப் பற்றி, அதுவும், நம்மிடத்தில் அவர் எதைப் பார்க்கிறார் என்பதைப் பற்றி 1 இராஜாக்கள் 14:13-லிருந்து ஓர் அருமையான விஷயத்தை நாம் கற்றுக்கொள்கிறோம். அபியாவிடத்தில் ஏதோவொரு நல்ல காரியம் ‘காணப்பட்டது’ என்பதை மறந்துவிடாதீர்கள். துளியளவாவது நல்லது இருக்குமா என்பதைக் கண்டுபிடிக்க அபியாவின் இருதயத்தை யெகோவா அலசிப் பார்த்திருப்பார் எனத் தெரிகிறது. அவருடைய குடும்பத்தாருடன் ஒப்பிடுகையில், அபியா “கல் மத்தியில்” கண்டெடுக்கப்பட்ட நல்முத்தாய் இருந்தார் என்று ஓர் அறிஞர் சொல்கிறார். அபியா செய்த நல்ல காரியத்தை யெகோவா பொக்கிஷமாய்ப் போற்றி, அதற்குப் பலனளித்தார்; மோசமான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு மட்டும் யெகோவா கருணை காட்டினார்.
நாம் அபூரணராக இருந்தாலும் யெகோவா நாம் செய்கிற நல்லதைப் பார்க்கிறார், அதைப் பொன்னெனப் போற்றுகிறார் என்பது நமக்கு எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது! (சங்கீதம் 130:3) இந்த உண்மையைத் தெரிந்துகொள்ளும்போது, கடுகளவாவது நல்லது தட்டுப்படாதா என்று சல்லடை போட்டுச் சலிக்கிற யெகோவாவிடம் நெருங்கி வர நாம் தூண்டப்படுவோம். (w10-E 07/01)
[அடிக்குறிப்புகள்]
a எருசலேம் ஆலயத்தில் யெகோவாவை வழிபடுவதற்காக யூதாவுக்கு ஜனங்கள் போய்விடக் கூடாதென்று இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தில் யெரொபெயாம் கன்றுக்குட்டி வழிபாட்டை ஆரம்பித்து வைத்தார்.
b பைபிள் காலங்களில் ஒருவரை நல்லடக்கம் செய்யவில்லை என்றால், அவர் கடவுளுடைய வெறுப்புக்கு ஆளானவர் என்று அர்த்தம்.—எரேமியா 25:32, 33.