‘அந்த நல்ல தேசத்தில்’ ஒரு வருடம்
கேசேர். இது பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நகரமாகும். இது எருசலேமுக்கு மேற்கிலிருந்த கடற்கரைச் சமவெளிக்கு அருகே அமைந்திருந்தது. 1908-ஆம் வருடத்தில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பொருள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு சிறிய சுண்ணாம்புக்கல் பலகையாகும். அது பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது. அதில் பண்டைய எபிரெய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த ஓர் எளிய அட்டவணை காணப்பட்டது; பல்வேறு விவசாயப் பணிகளின் குறிப்புகள் அடங்கிய வேளாண்மை வருடத்தை அது சித்தரித்ததாகக் கருதப்பட்டது. அந்தக் கற்பலகை கேசேர் நாட்காட்டி என பின்னர் அழைக்கப்பட்டது.
அந்தக் கற்பலகையில் அபிஜா என்ற கையொப்பம் காணப்படுகிறது. பள்ளி மாணவன் ஒருவன் செய்யுள் நடையில் எழுதிய வீட்டுப்பாடமாக அது இருக்கலாமென அநேக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்; இருந்தாலும் எல்லாருமே இதை ஒப்புக்கொள்வதில்லை.a அக்காலத்தில் வாழ்ந்த அந்தச் சிறுவனின் கண்ணோட்டத்தில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் பருவகால மாற்றங்களைக் காண நீங்கள் விரும்புகிறீர்களா? அவ்வாறு செய்வது பைபிள் சம்பவங்கள் சிலவற்றை நினைவுபடுத்திப் பார்க்க உங்களுக்கு உதவலாம்.
இரண்டு மாதங்கள்—சேர்ப்புக் காலம்
இந்த நாட்காட்டியில், அறுவடையின் பலனைச் சேர்க்கும் காலத்தை அபிஜா முதலாவதாகக் குறிப்பிட்டிருந்தான். அப்படியிருக்க, இஸ்ரவேலர் இந்தச் சேர்ப்புக் காலத்தை வேளாண்மை வருடத்தின் பெரும்பகுதி நிறைவடைந்த சமயமாகக் கருதினதற்கான காரணத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஏத்தானீம் மாதம் (பிற்பாடு திஷ்ரி என அழைக்கப்பட்டது) நம் நாட்காட்டியில் செப்டம்பர் பிற்பகுதிக்கும் அக்டோபர் முற்பகுதிக்கும் இணையான மாதமாகும். அச்சமயத்தில் அறுவடை வேலைகள் பெரும்பாலும் முடிவடைந்திருக்கும். அது விசேஷித்த விழாக் காலமாக இருந்தது, இளம் அபிஜாவுக்கும்கூட அது கொண்டாட்டமான காலமாக இருந்திருக்கும். ஏனெனில் ஒரு வாரத்திற்கு அவர்கள் குடும்பமாகக் கூடாரத்தில் குடியிருப்பார்கள். அபிஜா உற்சாகத்தில் துள்ளிக் குதித்தவாறு, கூடாரம் கட்டுகிற வேலையில் தன் அப்பாவுக்கு கூடமாட உதவியதையும், தங்களுடைய நிலத்தின் விளைச்சலுக்காக யெகோவாவுக்கு அவர்கள் மகிழ்ச்சி ததும்ப நன்றி தெரிவித்ததையும் கற்பனை செய்து பாருங்கள்!—உபாகமம் 16:13-15.
ஏறக்குறைய இதே சமயத்தில், ஒலிவப்பழங்களும் கிட்டத்தட்ட அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன. இப்போது அபிஜாவின் குடும்பத்தார் ஒலிவ மரக்கிளைகளை அடித்துப் பழங்களை உதிர்ப்பார்கள். சிறுவன் அபிஜாவுக்கு இது ரொம்ப கஷ்டமான வேலை என்பதால் மற்றவர்கள் செய்வதை அவன் ஆசைஆசையாய் வேடிக்கை பார்த்திருக்கலாம். (உபாகமம் 24:20) உதிர்க்கப்பட்ட ஒலிவப்பழங்களை அவர்கள் பொறுக்கியெடுத்த பிறகு, அவற்றிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக அருகிலிருந்த எண்ணெய்ச் செக்கிற்குக் கொண்டு செல்வார்கள். சில குடும்பத்தார் இதைவிட எளிய முறையிலும்கூட கொஞ்சம் எண்ணெய் எடுத்திருக்கலாம்; அதாவது, அடித்து உதிர்க்கப்பட்ட அல்லது வெடித்துக் கீழே விழுந்த ஒலிவப்பழங்களை நீரில் போட்டுவைத்து, பிறகு மேலே மிதக்கிற எண்ணெயைச் சேகரித்திருக்கலாம். இதை எந்தமுறையில் எடுத்திருந்தாலும்சரி, இந்த விலையுயர்ந்த எண்ணெய், உணவுப்பொருளாக மட்டுமே இருக்கவில்லை. விளக்கு எரிப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது; அபிஜாவைப் போன்ற சிறுவர்கள் விளையாடும்போது ஒருவேளை அடிபட்டு எங்காவது கன்றிப்போனாலும் காயமேற்பட்டாலும் அதை ஆற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது.
இரண்டு மாதங்கள்—விதைப்பு
முன்மாரி பெய்யத் துவங்கியபோது, சில்லென்ற மழைத்தூறலில் நனைவது அபிஜாவுக்கு ஒரே குஷியாக இருந்திருக்கும். நிலத்திற்கு மழை எவ்வளவு முக்கியம் என்பதைப்பற்றி அவனுடைய அப்பா ஒருவேளை அவனுக்குச் சொல்லியிருப்பார். (உபாகமம் 11:14) மாதக்கணக்காக சுட்டுப் பொசுக்கிய வெயிலில் பாளம்பாளமாய் வெடித்திருந்த நிலம் மென்மையாகி உழுவதற்குத் தயாராக இருந்திருக்கும். அந்தக்காலத்து விவசாயி நிலத்தை உழுவதற்கு கலப்பையை—ஒருவேளை உலோகத்தாலான கூர்முனையை உடைய கலப்பையை—பயன்படுத்தினார்; அதை ஓர் எருது இழுத்துச் செல்ல, நிலத்தை அவர் மிகத் திறமையாக உழுதார். நிலத்தில் நேராக சால் ஓட்டவேண்டுமென்பதுதான் அவருடைய குறிக்கோள். இஸ்ரவேல் விவசாயிகள் நிலத்தை மதிப்புமிக்கதாகக் கருதியதால் சரிவுகள் உட்பட சிறுசிறு துண்டு நிலங்களையும்கூட விட்டுவிடாமல் அவற்றில் பயிரிட்டார்கள். ஆனால் சரிவுகளில் உழுவதற்கு மண்வெட்டியைப் போன்ற கருவிகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
மென்மையான நிலத்தை உழுது முடித்தவுடன் அதில் கோதுமையையும், பார்லியையும் (வாற்கோதுமை) அவர்கள் விதைத்திருக்கலாம். இரண்டு மாதங்களுக்கு இந்த விதைப்பு வேலை நடைபெற்றதாக கேசேர் நாட்காட்டியிலுள்ள அடுத்த குறிப்பு காட்டுகிறது. விதைப்பவர் தனது உடையிலுள்ள மடிப்பில் தானிய விதைகளை வைத்துக்கொண்டு கையில் அள்ளி அவற்றைத் தூவியிருக்கலாம்.
இரண்டு மாதங்கள்—இரண்டாம் விதைப்பு
‘அந்த நல்ல தேசத்தில்’ விளைச்சலுக்குக் குறைச்சலே இருக்கவில்லை. (உபாகமம் 3:25) டிசம்பர் மாதத்தில் மழை சக்கைப்போடு போட்டதால் அந்தத் தேசமே பச்சைப்பசேலென்று மாறியது. இது இரண்டாம் விதைப்புக்கு ஏற்ற காலமாக இருந்தது. அச்சமயத்தில் பட்டாணி, கடலை போன்ற பயறு வகைகளும், அதோடுகூட மற்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டன. (ஆமோஸ் 7:1, 2) அபிஜா அதை “வசந்தகால மேய்ச்சல்” என்று அந்தக் கற்பலகையில் குறிப்பிட்டிருந்தான்; இதை “இரண்டாம் விதைப்பு” என்று மற்றொரு மொழிபெயர்ப்பு குறிப்பிடுகிறது. அப்பருவத்தில் விளைந்த காய்கறிகளால் வகைவகையான அறுசுவை உணவுகள் அப்போது தயாரிக்கப்பட்டன.
குளுகுளுவென்று இருந்த குளிர் காலம் விடைபெறுமுன்னே மிதமான வெயில் தலைகாட்டியதால் வாதுமை மரத்தில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு மலர்கள் பூத்துக் குலுங்கின; இது வசந்தத்தின் வருகையை அறிவித்தது. மிதமான வெப்பம் நிலவிய ஜனவரியின் விடியலிலேயே இவை மலர ஆரம்பிக்கலாம்.—எரேமியா 1:11, 12.
ஒரு மாதம் சணல் அறுவடை
அடுத்ததாக சணலைப்பற்றி அபிஜா குறிப்பிடுகிறான். அபிஜாவின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யூதேயா மலைகளுக்கு கிழக்கே நடைபெற்ற ஒரு சம்பவத்தை அது உங்களுக்கு நினைப்பூட்டலாம். எரிகோ பட்டணத்தில், ராகாப் என்ற பெண், சணல் தட்டைகளை வீட்டின் கூரையில் காய வைத்திருந்தாள்; “பரப்பப்பட்ட [அந்த] சணல் தட்டைகளுக்குள்ளே” வேவுகாரர்கள் இருவரை அவள் ஒளித்துவைத்தாள். (யோசுவா 2:6) இஸ்ரவேலரின் வாழ்க்கையில் சணல் முக்கியப் பங்கு வகித்தது. சணல் நாரைப் பிரித்தெடுக்க அந்தச் செடியை அழுகவிட வேண்டியிருந்தது. பனியில் நனையும்படி வைத்தால் அது கொஞ்சம்கொஞ்சமாக அழுக ஆரம்பிக்கும்; குளத்திலோ நீரோடையிலோ போட்டுவைத்தால் சீக்கிரம் அழுகிவிடும். சணல் நாரைப் பிரித்தெடுத்த பிறகு, அதிலிருந்து சணல்நார்த்துணி உற்பத்தி செய்யப்பட்டது; அதைக்கொண்டு கப்பற்பாய்கள், கூடாரங்கள் மற்றும் ஆடைகள் தயாரிக்கப்பட்டன. விளக்குத் திரியாகவும் சணல் பயன்படுத்தப்பட்டது.
கேசேர் பகுதியில் ஓரளவு தண்ணீர் தட்டுப்பாடு இருந்ததால் அங்கு சணல் பயிரிடப்பட்டதென்ற கருத்தை சிலர் ஆட்சேபிக்கிறார்கள். வேறு சிலரோ, வருடத்தின் பிற்பகுதியில் சணல் பயிரிடப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் கேசேர் நாட்காட்டியில் தீவனப் “புல்” என்பதன் இணைச்சொல்லாக “சணல்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனச் சிலர் நினைக்கிறார்கள்.
ஒரு மாதம் பார்லி அறுவடை
ஒவ்வொரு வருடமும் சணல் அறுவடை செய்யப்பட்ட மாதத்திற்கு அடுத்துவந்த மாதத்தில், பார்லியின் பச்சைக் கதிர்களை—நாட்காட்டியில் அடுத்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்த பயிரின் கதிர்களை—அபிஜா கவனித்தான். அந்த மாதத்திற்கு இணையான எபிரெய மாதம் ஆபிப். இதற்கு “பச்சைக் கதிர்கள்” என்று அர்த்தம். கதிர்கள் முதிர்ந்திருந்தாலும் இன்னும் மென்மையாகவே இருக்கிற பருவத்தை இது ஒருவேளை குறிப்பிட்டிருக்கலாம். யெகோவா இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: “ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்.” (உபாகமம் 16:1) நிசான் என பின்னர் அழைக்கப்பட்ட ஆபிப் மாதம், இன்றைய மார்ச் பிற்பகுதிக்கும் ஏப்ரல் முற்பகுதிக்கும் இணையான மாதமாகும். ஆபிப் மாதம் எப்போது துவங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க பார்லி முதிரும் பருவத்தை அவர்கள் கவனித்திருக்கலாம். இன்றும்கூட, கரயயிட் யூதர்கள் தங்களுடைய புத்தாண்டு தினத்தைக் கணக்கிடுவதற்கு பார்லி முதிரும் பருவத்தைக் கவனிக்கிறார்கள். அன்றோ, ஆபிப் 16-ஆம் தேதி பார்லியின் முதற்கனிகளை யெகோவாவுக்கு முன்பு அசைவாட்ட வேண்டியிருந்தது.—லேவியராகமம் 23:10, 11.
பெரும்பாலான இஸ்ரவேலர்களின் அன்றாட வாழ்க்கையில் பார்லி மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. கோதுமையைக் காட்டிலும் மலிவாக இருந்ததால், பெரும்பாலும் அப்பம் சுடுவதற்கு இதுவே பயன்படுத்தப்பட்டது; முக்கியமாக ஏழைஎளியோர் இதைப் பயன்படுத்தினார்கள்.—எசேக்கியேல் 4:12.
ஒரு மாதம்—அறுவடையும் அளத்தலும்
அபிஜா வாழ்ந்த காலத்தை உங்கள் மனத்திரையில் ஓடவிட்டால், ஓர் அதிகாலைப் பொழுதில், இருண்ட மேகக்கூட்டங்கள் கலைந்து செல்வதை அவன் பார்ப்பதாக நீங்கள் கற்பனை செய்ய முடியும். இனி கொஞ்ச காலத்திற்கு மழை தலைகாட்டாது. அந்த நல்ல தேசத்திலிருந்த தாவரங்கள் இப்போது பனியைத்தான் நம்பியிருந்தன. (ஆதியாகமம் 27:28; சகரியா 8:12) சுட்டுப் பொசுக்கும் கோடையில் அறுவடை செய்யப்பட்ட அநேக பயிர்களுக்கு பெந்தெகொஸ்தே நாள் வரை சமநிலையோடு வீசுகிற காற்று தேவைப்பட்டதை இஸ்ரவேல் விவசாயிகள் அறிந்திருந்தார்கள். வடக்கிலிருந்து வீசிய குளிர்ந்த வாடைக்காற்று வளர்ந்துவருகிற தானியப் பயிர்களுக்குப் பயனளித்திருக்கலாம்; ஆனால் இதே காற்று கனிதரும் மரங்களில் மொட்டுகள் மலர்ந்துவிட்டால் அவற்றுக்குச் சேதம் விளைவிக்கலாம். தெற்கிலிருந்து வீசிய வறண்ட அனல் காற்று மொட்டுகள் மலர்வதற்கும் மகரந்தச் சேர்க்கைக்கும் கைகொடுத்தன.—நீதிமொழிகள் 25:23; உன்னதப்பாட்டு 4:16.
சீதோஷ்ண நிலையை உருவாக்கியவரான யெகோவா, தாவரங்கள் தழைத்தோங்குவதற்கு ஏற்ற கச்சிதமான சூழலை அமைத்திருக்கிறார். அபிஜா வாழ்ந்த காலத்தில் இஸ்ரவேல் தேசம் உண்மையில், ‘கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசமாகவும் . . . ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசமாகவும்’ இருந்தது. (உபாகமம் 8:8) அத்தேசம் ஞானமுள்ள அரசனாகிய சாலொமோனின் ஆட்சியில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு செழித்தோங்கியதைக் குறித்து அபிஜாவின் தாத்தா அவனுக்குச் சொல்லியிருக்கலாம். இத்தகைய செழுமை யெகோவாவின் ஆசீர்வாதத்திற்குத் தெளிவான அத்தாட்சியாக இருந்தது.—1 இராஜாக்கள் 4:20.
அந்த நாட்காட்டி அறுவடையைப்பற்றி குறிப்பிட்ட பிறகு, “அளத்தல்” எனச் சிலர் புரிந்துகொண்ட ஒரு வார்த்தையைக் குறிப்பிடுகிறது. வயலின் சொந்தக்காரர்களுக்கும் பணியாட்களுக்கும் விளைச்சலைப் பங்கிடுவதற்கு அல்லது வரி செலுத்துவதற்கும்கூட அளக்கப்பட்டதை இது குறித்திருக்கலாம். இருந்தபோதிலும், மற்ற அறிஞர்கள் இந்த எபிரெய வார்த்தை, “விருந்து” என்ற அர்த்தத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள்; சீவான் (மே/ஜூன்) மாதத்தில் வரும் வாரங்களின் பண்டிகையை இது மறைமுகமாகக் குறிப்பிடுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.—யாத்திராகமம் 34:22.
இரண்டு மாதங்கள்—இலைகளைக் களைதல்
அடுத்துவரும் இரண்டு மாதங்களில் திராட்சைக் கொடிகள் பராமரிக்கப்பட்டதாக அபிஜா குறிப்பிட்டான். திராட்சைக்குலைகளில் சூரிய ஒளி படாதவாறு மண்டிக்கிடக்கும் இலைகளைக் களையும் வேலையில் அவனும் ஒருவேளை கூடமாட உதவியிருப்பான்போலும்! (ஏசாயா 18:5) அடுத்தது, திராட்சைப் பழங்களைப் பறிக்கும் காலம்; அபிஜாவுக்கு அப்போது ஒரே கொண்டாட்டம்தான். முதன்முதலில் பழுத்த திராட்சைப் பழங்கள் எவ்வளவு ருசியாக இருந்திருக்கும்! வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு மோசே அனுப்பிய 12 வேவுகாரர்களைக் குறித்து அபிஜா ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். அத்தேசம் உண்மையிலேயே நல்ல தேசம்தானா என்பதைப் பார்த்து வருவதற்காக அவர்கள் திராட்சைப் பழங்களின் முதற்கனிப் பருவத்தில் சென்றார்கள். அச்சமயத்தில், ஒரு திராட்சைக்குலையை இரண்டு பேர் சேர்ந்து தூக்கி வந்தார்கள்; அந்தளவுக்கு அது பெரியதாக இருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!—எண்ணாகமம் 13:20, 23.
ஒரு மாதம்—கோடைக் கனி
அபிஜாவின் நாட்காட்டியில் வரும் கடைசி குறிப்பு கோடைக் கனியைச் சுட்டிக்காட்டுகிறது. பண்டைய கால மத்தியக் கிழக்கில் வேளாண்மை வருடத்தின் பாகமான கோடை மாதம் கனிகளுக்குப் பெயர்பெற்றது. அபிஜாவின் காலத்திற்குப் பிறகு, யெகோவா ‘தம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு முடிவு வந்துவிட்டது’ என்பதை விளக்குவதற்கு “ஒரு கோடைக் கனியுள்ள கூடை” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். எபிரெயுவில், “கோடைக் கனி” என்ற பதத்தை “முடிவு” என்ற அர்த்தத்தில் சிலேடையாகப் பயன்படுத்தினார். (ஆமோஸ் 8:2, ஈஸி டு ரீட் வர்ஷன்) தங்களுக்கு முடிவுகாலம் நெருங்கிவிட்டது என்பதையும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு வந்துவிட்டது என்பதையும் விசுவாசமற்ற இஸ்ரவேலர்களுக்கு இது நினைவுபடுத்தியிருக்க வேண்டும். அபிஜா குறிப்பிட்ட கோடைக் கனிகளில் அத்திப்பழங்களும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள், கோடைக்கால அத்திப்பழங்களை அடையாகத் தட்டி அவற்றைச் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தியிருக்கலாம், கட்டிகள்மீது பத்துப்போடுவதற்கும் பயன்படுத்தியிருக்கலாம்.—2 இராஜாக்கள் 20:7.
கேசேர் நாட்காட்டியும் நீங்களும்
தன்னுடைய நாட்டில் நடைபெற்ற விவசாயப் பணிகளைக் குறித்து அபிஜா நன்கு அறிந்திருந்ததாகத் தெரிகிறது. அன்றைய இஸ்ரவேலருக்கு விவசாயமே பெரும்பாலும் வாழ்க்கைத்தொழிலாக இருந்தது. விவசாயத்தைப் பற்றி நீங்கள் அவ்வளவாக அறிந்திராவிட்டாலும்கூட, கேசேரில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கற்பலகையில் உள்ள குறிப்புகள் உங்களது பைபிள் வாசிப்பிற்கு விறுவிறுப்பூட்டுவதோடு, பைபிளை நன்கு புரிந்துகொள்ளவும் பைபிள் வாசிப்பைப் பயனுள்ளதாக்கவும் உதவுகின்றன.
[அடிக்குறிப்பு]
a கேசேர் நாட்காட்டியில் உள்ள மாதங்களின் வரிசைக்கும் பைபிள் குறிப்பிடுகிற மாதங்களின் வரிசைக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைக் குறித்ததில் எல்லாருக்குமே முழு உடன்பாடு இல்லை. அதோடு, சில விவசாயப் பணிகள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் சற்று வித்தியாசப்பட்ட சமயங்களில் நடைபெற்றிருக்கலாம்.
[பக்கம் 11-ன் பெட்டி/படம்]
கேசேர் நாட்காட்டியின் உத்தேசமான விளக்கம்:
“திராட்சையும் ஒலிவப்பழங்களும் அறுவடை செய்யும் மாதங்கள்;
விதை விதைக்கும் மாதங்கள்;
வசந்தகால மேய்ச்சல் மாதங்கள்;
சணல் அறுவடை செய்யும் மாதம்;
பார்லி அறுவடை செய்யும் மாதம்;
கோதுமை அறுவடை மற்றும் அளக்கும் மாதம்;
கிளைகளையும் இலைகளையும் வெட்டிவிடும் மாதங்கள்;
கோடைக் கனிகளின் மாதம்.”
[கையெழுத்து:] அபிஜாb
[அடிக்குறிப்பு]
b தகவல்: சிரியா நாட்டு செமிட்டிக் மொழி கல்வெட்டுகளின் பாடநூல், தொகுதி 1—ஜான் ஸி. எல். கிப்ஸன், 1971.
[படத்திற்கான நன்றி]
Archaeological Museum of Istanbul
[பக்கம் 9-ன் அட்டவணை/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
நிசான் (ஆபிப்)
மார்ச்-ஏப்ரல்
அய்யார் (சீப்)
ஏப்ரல்-மே
சீவான்
மே-ஜூன்
தம்மூஸ்
ஜூன்-ஜூலை
ஆப்
ஜூலை-ஆகஸ்ட்
எலூல்
ஆகஸ்ட்-செப்டம்பர்
திஷ்ரி (ஏத்தானீம்)
செப்டம்பர்-அக்டோபர்
எஷ்வன் (பூல்)
அக்டோபர்-நவம்பர்
கிஸ்லேயு
நவம்பர்-டிசம்பர்
தேபேத்
டிசம்பர்-ஜனவரி
சேபாத்
ஜனவரி-பிப்ரவரி
ஆதார்
பிப்ரவரி-மார்ச்
வியாதார்
மார்ச்
[படத்திற்கான நன்றி]
விவசாயி: Garo Nalbandian
[பக்கம் 8-ன் படம்]
கேசேரில் அகழாய்வு
[படத்திற்கான நன்றி]
© 2003 BiblePlaces.com
[பக்கம் 10-ன் படங்கள்]
வாதுமை மரம்
[பக்கம் 10-ன் படம்]
சணல் செடி
[படத்திற்கான நன்றி]
Dr. David Darom
[பக்கம் 10-ன் படம்]
பார்லி
[படத்திற்கான நன்றி]
U.S. Department of Agriculture