“பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்”
“உங்களை முழுமையாய்ச் சோதிப்பதற்காகப் பிசாசு உங்களில் சிலரைச் சிறையில் அடைத்து வருவான்” என இயேசு தம்முடைய சீடர்களை முன்கூட்டியே எச்சரித்தார். என்றாலும், அப்படி எச்சரிப்பதற்கு முன், ‘உங்களுக்கு வரப்போகிற பாடுகளைக் குறித்துப் பயப்படாதீர்கள்’ என்றார். நற்செய்தியை அறிவிக்கவிடாமல் தடுப்பதற்கு, இன்றும்கூட சிறையில் அடைக்கும் உத்தியைச் சாத்தான் பயன்படுத்தி வருகிறான்; அதனால், உண்மைக் கிறிஸ்தவர்களைச் சில அரசாங்கங்கள் துன்புறுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம். (வெளி. 2:10; 12:17) ஆகவே, சாத்தானுடைய சதித்திட்டங்களைச் சந்திக்கத் தயாராய் இருப்பதற்கும் இயேசுவின் அறிவுரைப்படி ‘பயப்படாதிருப்பதற்கும்’ எது நமக்கு உதவும்?
நம்மில் பெரும்பாலோர் ஏதோவொரு சமயத்தில் பயத்திற்கு ஆளாகியிருப்போம் என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும், யெகோவாவின் உதவியோடு பயத்தை மேற்கொள்ள முடியுமென அவருடைய வார்த்தை உறுதி அளிக்கிறது. எப்படி? எதிர்ப்பைச் சந்திக்க யெகோவா நம்மைத் தயார்படுத்துகிற ஒரு வழியானது, சாத்தானும் அவனுடைய கையாட்களும் பயன்படுத்துகிற தந்திரங்களை அடையாளம் கண்டுகொள்ள உதவுவதாகும். (2 கொ. 2:11) இதைப் புரிந்துகொள்ள, பண்டைய காலங்களில் நடந்த ஒரு சம்பவத்தை நாம் சிந்திப்போம். ‘பிசாசின் சூழ்ச்சிகளை உறுதியோடு எதிர்த்து நின்ற’ நவீன கால உண்மைக் கிறிஸ்தவர்கள் சிலரின் உதாரணங்களையும் நாம் சிந்திப்போம்.—எபே. 6:11-13.
தேவ பயமுள்ள ராஜாவுடன் பொல்லாத ராஜா மோதுகிறான்
கி.மு. எட்டாம் நூற்றாண்டில் அசீரியாவை ஆண்ட பொல்லாத ராஜாவான சனகெரிப் பல நாடுகளை வென்று வெற்றி மேல் வெற்றி குவித்தான். அடுத்து, தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற துணிச்சலுடன் யெகோவாவின் மக்கள் மீதும் அவர்களுடைய தலைநகரமான எருசலேம் மீதும் அவன் கண் வைத்தான்; அப்போது, தேவ பயமுள்ள எசேக்கியா ராஜா எருசலேமை ஆண்டு வந்தார். (2 இரா. 18:1-3, 13) இந்தச் சூழ்நிலையைச் சாத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தான் என்பதில் சந்தேகமில்லை; உண்மை வணக்கத்தைப் பூமியிலிருந்து ஒழித்துக்கட்டுவதில் தன்னுடைய சதித்திட்டங்களை நிறைவேற்ற சனகெரிப்பைச் சாத்தான் முடுக்கிவிட்டான்.—ஆதி. 3:15.
சனகெரிப் தன்னுடைய ஆட்களை எருசலேமுக்கு அனுப்பி அந்நகரத்தாரைச் சரணடையும்படி கோரினான். சனகெரிப் ராஜாவின் முக்கியப் பிரதிநிதியாகிய ரப்சாக்கே அந்த ஆட்களில் ஒருவன்.a (2 இரா. 18:17) யூதர்களுடைய மனவுறுதியைக் குலைத்து, போரிடாமலேயே அவர்களை அடிபணிய வைக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய குறிக்கோள். யூதர்களின் மனதில் பீதியை ஏற்படுத்துவதற்காக ரப்சாக்கே என்னென்ன உத்திகளைப் பயன்படுத்தினான்?
ஆதரவற்ற நிலையிலும் உண்மையாய் இருத்தல்
எசேக்கியாவின் பிரதிநிதிகளிடம் ரப்சாக்கே இவ்வாறு சொன்னான்: “அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்ல வேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்.” (2 இரா. 18:19, 21) ரப்சாக்கேயின் குற்றச்சாட்டு பொய்யாக இருந்தது; ஏனென்றால், எகிப்தின் உதவியை எசேக்கியா நாடவில்லை. இருந்தாலும், ‘யாருமே உங்களுடைய உதவிக்கு வரமாட்டார்கள். நீங்கள் ஆதரவின்றி தனியாக இருக்கிறீர்கள்’ என யூதர்களுக்குத் தெளிவாக வலியுறுத்த ரப்சாக்கே விரும்பினான்.
சமீப காலங்களில், சத்தியத்தை எதிர்ப்பவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களின் மனதில் பீதியை ஏற்படுத்துவதற்காக இதே உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சகோதரி, விசுவாசத்தின் காரணமாகச் சிறையிலடைக்கப்பட்டு சக கிறிஸ்தவர்களிடமிருந்து பல வருடங்களுக்குப் பிரித்துவைக்கப்பட்டார்; பயத்திற்கு அடிபணிந்துவிடாதிருக்க எது தனக்கு உதவியது என்பதை அவர் பின்பு இவ்வாறு சொன்னார்: “யெகோவாவிடம் நெருங்கிவர ஜெபம் எனக்கு உதவியது. . . . ‘சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு’ போகிறவரைக் கடவுள் பார்க்கிறார் என்று ஏசாயா 66:2-ல் உள்ள வாக்குறுதியை நான் நினைவுபடுத்திப் பார்த்தேன். இது எனக்கு எப்போதுமே பலத்தையும் பெரும் ஆறுதலையும் அளித்திருக்கிறது.” அவ்வாறே, தனிச்சிறையில் பல வருடங்களைக் கழித்த ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “கடவுளோடு நெருக்கமான பந்தம் வைத்திருக்கும்போது முக்கோண வடிவத்திலுள்ள ஒரு சிறிய அறைகூட பெரிய பிரபஞ்சமாக ஆகிவிடுவதை நான் உணர்ந்தேன்.” ஆம், யெகோவாவோடு வைத்திருந்த நெருக்கமான பந்தம், தனிமையைச் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தை அந்த இரண்டு கிறிஸ்தவர்களுக்கும் அளித்தது. (சங். 9:9, 10) துன்புறுத்தியவர்களால், தங்களைக் குடும்பத்தாரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் சக கிறிஸ்தவர்களிடமிருந்தும் பிரிக்க முடிந்தாலும், யெகோவாவிடமிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதைச் சிறையிலடைக்கப்பட்ட அந்தச் சாட்சிகள் அறிந்திருந்தார்கள்.—ரோ. 8:35-39.
அப்படியானால், நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி யெகோவாவுடன் நமக்குள்ள பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம்! (யாக். 4:8) அதற்காக, நம்மை நாமே அடிக்கடி இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘யெகோவா எனக்கு எந்தளவு நிஜமானவராக இருக்கிறார்? தினந்தோறும் நான் எடுக்கிற சிறிய, பெரிய தீர்மானங்கள் முழுக்க முழுக்க அவருடைய வார்த்தையின் அடிப்படையில் இருக்கின்றனவா?’ (லூக். 16:10) கடவுளோடு எப்போதும் நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள நாம் கடும் முயற்சி செய்தால், எதைக் குறித்தும் பயப்பட வேண்டியதில்லை. ஒடுக்கப்பட்ட யூதர்களின் சார்பாக எரேமியா தீர்க்கதரிசி இவ்வாறு புலம்பினார்: “மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன். . . . நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.”—புல. 3:55-57.
சந்தேக விதைகளை விதைப்பது வீண்
ரப்சாக்கே தந்திரமான நியாய விவாதங்களைப் பயன்படுத்தி மக்களின் மனதில் சந்தேக விதைகளை விதைக்க முயன்றான். ‘யெகோவாவுடைய மேடைகளையும், அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றினான்? . . . இந்தத் தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னோடே சொன்னார்’ என அவன் கூறினான். (2 இரா. 18:22, 25) இவ்வாறு, தம்முடைய மக்கள் மீதுள்ள அதிருப்தியினால் யெகோவா அவர்களுக்காகப் போரிடப் போவதில்லை என ரப்சாக்கே சொன்னான். ஆனால், அது உண்மையே அல்ல. எசேக்கியாவையும் உண்மை வணக்கத்திடம் திரும்பிய யூதர்களையும் யெகோவா நேசித்தார்.—2 இரா. 18:3-7.
இன்று சதிகாரர்கள், கிறிஸ்தவர்களின் மனதில் சந்தேக விதைகளை விதைக்கும் நோக்கத்தோடு உண்மையான சில தகவலுடன் தந்திரமாகப் பொய்களைக் கலந்து அவர்களை நம்ப வைக்கும் விதத்தில் சொல்லலாம். உதாரணமாக, சிறையில் தள்ளப்பட்ட சகோதர சகோதரிகளிடம், அவர்களுடைய நாட்டில் முன்நின்று வழிநடத்துகிற ஒரு சகோதரர் விசுவாசத்தை விட்டுக்கொடுத்துவிட்டதாகச் சில சமயங்களில் சதிகாரர்கள் சொல்லியிருக்கிறார்கள்; அதனால், அவரைப்போலவே சகோதர சகோதரிகளும் தங்களுடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், விவேகமுள்ள கிறிஸ்தவர்களிடம் அப்படிப்பட்ட நியாய விவாதங்கள் பலிப்பதில்லை; அவர்களுடைய மனதில் சந்தேக விதைகளை விதைக்க முடிவதில்லை.
இரண்டாம் உலகப் போரின்போது ஒரு சகோதரிக்கு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். அவர் சிறையில் இருந்தபோது, பொறுப்பிலிருந்த ஒரு சகோதரர் தன்னுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுத்துவிட்டதாக எழுதியிருந்த ஒரு துண்டுக் காகிதம் அவருக்குக் காட்டப்பட்டது. அந்தச் சகோதரர்மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறதா என அவரை விசாரித்தவர் கேட்டார். “[அவரும்] தப்புத்தவறுகள் செய்கிற சாதாரண ஒரு மனிதன்தான்” என்று அந்தச் சகோதரி பதிலளித்தார். பைபிள் நெறிகளை அவர் கடைப்பிடித்த வரையில் கடவுள் அவரைப் பயன்படுத்தினார் என்பதாகவும் அந்தச் சகோதரி சொன்னார். “அவர் பைபிளுக்கு முரணாக எழுதியிருந்ததால், இனிமேலும் அவர் என்னுடைய சகோதரர் அல்ல” என்றார். உண்மையுள்ள அந்தச் சகோதரி, “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” என்ற பைபிள் அறிவுரையை விவேகத்தோடு பின்பற்றினார்.—சங். 146:3.
கடவுளுடைய வார்த்தையை நன்கு அறிந்திருப்பதும் அதிலுள்ள ஆலோசனையைப் பின்பற்றுவதும் சகித்திருப்பதற்கான நம் தீர்மானத்தைக் குலைத்துப் போடுகிற தந்திரமான நியாய விவாதங்களை எதிர்த்து நிற்க நமக்கு உதவும். (எபே. 4:13, 14; எபி. 6:19) ஆகவே, அப்படிப்பட்ட சோதனையின்போது தெளிவாகச் சிந்திப்பதற்கு நம்மைத் தயார்படுத்த வேண்டும்; அதற்காக அன்றாட பைபிள் வாசிப்புக்கும் தனிப்பட்ட படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். (எபி. 4:12) ஆம், நம்முடைய பைபிள் அறிவைக் கூர்மையாக்குவதற்கும் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கும் இதுவே சமயம். தனிச்சிறையில் பல வருடங்களைக் கழித்த ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “ஆன்மீக உணவு வேறொரு சமயத்தில் எந்தளவு மதிப்புள்ளதாயிருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அதனால், நமக்குக் கிடைக்கிற எல்லா ஆன்மீக உணவுக்கும் தகுந்த மதித்துணர்வைக் காட்டும்படி எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன்.” கடவுளுடைய வார்த்தையையும் அடிமை வகுப்பார் இன்று அளிக்கிற பிரசுரங்களையும் நாம் கவனமாகப் படித்தால், கற்ற விஷயங்களைச் சோதனையான காலகட்டத்தில் கடவுளுடைய சக்தி ‘நமக்கு நினைப்பூட்டும்’ என்பது உறுதி.—யோவா. 14:26.
அச்சுறுத்தலின்போது பாதுகாப்பு
யூதர்களை அச்சுறுத்த ரப்சாக்கே முயன்றான். “நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக் கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு. கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்?” என்று கேட்டான். (2 இரா. 18:23, 24) மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், எசேக்கியாவும் அவருடைய மக்களும் வலிமைமிக்க அசீரியப் படைக்கு முன்னால் நின்றிருக்க முடியாது.
இன்றும்கூட துன்புறுத்துகிறவர்கள் நம்மைவிட ரொம்பவே வலிமையுள்ளவர்களாகத் தெரியலாம்; அதுவும் அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் செயல்படும்போது! இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் கடவுளுடைய ஊழியர்களைத் துன்புறுத்திய நாசி ஆட்களின் விஷயத்தில் இதுவே உண்மையாக இருந்தது. கடவுளுடைய ஊழியர்களில் அநேகரை அச்சுறுத்த அவர்கள் முயன்றார்கள். பல வருடங்கள் சிறையில் கழித்த ஒரு சகோதரர் எவ்வாறு அச்சுறுத்தப்பட்டார் என்பதைப் பிற்பாடு அவரே விவரித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அதிகாரி ஒருவர் அவரிடம் இவ்வாறு கேட்டாராம்: “உன் தம்பி எப்படிச் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று பார்த்தாயா? அதிலிருந்து நீ என்ன தெரிந்துகொண்டாய்?” அந்தச் சகோதரர் சொன்ன பதில் இதுதான்: “நான் யெகோவாவுக்குச் சாட்சி, கடைசிவரை நான் இப்படித்தான் இருப்பேன்.” “அப்படியென்றால், அடுத்ததாகத் துப்பாக்கிக்கு இரையாகப் போவது நீதான்,” என்று அவர் மிரட்டினார். என்றாலும், அச்சகோதரர் உறுதியாக இருந்ததால் அந்த அதிகாரி பயமுறுத்துவதை நிறுத்திவிட்டார். இப்படிப்பட்ட அச்சுறுத்தலுக்கு அடிபணியாதிருக்க எது அந்தச் சகோதரருக்கு உதவியது? “யெகோவாவின் பெயரில் நான் நம்பிக்கை வைத்திருந்தேன்” என்று அவர் பதிலளித்தார்.—நீதி. 18:10.
நாம் யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்திருப்பது ஒரு பெரிய கேடயத்தைப் பிடித்திருப்பதற்குச் சமம்; ஆன்மீக ரீதியில் நமக்குத் தீங்கு விளைவிக்க சாத்தான் நமக்கு எதிராக உபயோகிக்கிற எல்லா ஆயுதங்களிலிருந்தும் அது நம்மைப் பாதுகாக்கும். (எபே. 6:16) ஆகவே, நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்வது நல்லது. (லூக். 17:5) அவ்வாறு பலப்படுத்திக்கொள்வதற்கு உண்மையுள்ள அடிமை வகுப்பார் செய்திருக்கிற ஏற்பாடுகளை நாம் நன்கு பயன்படுத்துவதும் அவசியம். அச்சுறுத்தல்களை எதிர்ப்படும்போது, எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு யெகோவா கொடுத்த உறுதியை நினைவுபடுத்திப் பார்ப்பது நம்மைப் பலப்படுத்துகிறது. அவர், அடங்காத மக்களிடம் ஒரு செய்தியை அறிவிக்க வேண்டியிருந்தது. யெகோவா அவரிடம், “உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன். உன் நெற்றியை வச்சிரக்கல்லைப் போலாக்கினேன், கன்மலையைப் பார்க்கிலும் கெட்டியாக்கினேன்” என்று சொன்னார். (எசே. 3:8, 9) தேவைப்பட்டால், எசேக்கியேலை உறுதிப்படுத்தியதைப் போல நம்மையும் உறுதிப்படுத்த யெகோவாவால் முடியும்.
சோதனைகளைச் சமாளித்தல்
தங்களுடைய எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தாலும் ஆசைகாட்டி அடிபணிய வைத்து ஒருவருடைய உத்தமத்தை முறித்துவிட முடியும் என்பதை எதிரிகள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். ரப்சாக்கேயும்கூட இந்த உத்தியைத்தான் பயன்படுத்தினான். எருசலேம் வாசிகளிடம் அவன் இவ்வாறு சொன்னான்: “அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத் தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்ச ரசமுமுள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டு போகுமளவும் [அவ்வாறு செய்யுங்கள்] . . . இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்.” (2 இரா. 18:31, 32) முற்றுகையிடப்பட்ட நகருக்குள் அடைபட்டுக் கிடக்கிற மக்களுக்கு, சுடச் சுட அப்பம் சாப்பிடுவதைப் பற்றியும் புது திராட்ச ரசத்தைக் குடிப்பதைப் பற்றியும் கேட்டவுடன் வாயில் நீர் ஊறியிருக்கும்.
ஒருமுறை, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு மிஷனரியின் மனவுறுதியைக் குலைப்பதற்கு இப்படிப்பட்ட உத்திதான் கையாளப்பட்டது. அவரைச் சிந்திக்க வைப்பதற்காக, “அழகான தோட்டத்தில் அமைந்துள்ள அருமையான வீட்ல்” ஆறு மாதங்கள் தங்குவதற்கு அழைத்துச் செல்லப்போவதாக அவரிடம் சொல்லப்பட்டது. என்றாலும், அவர் ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருந்தார்; கிறிஸ்தவ நெறிகளை விட்டுக்கொடுக்காதிருந்தார். அப்படிச் செய்ய எது அவருக்கு உதவியது? “கடவுளுடைய அரசாங்கம் எனக்கு எப்போதும் நிஜமானதாகவே இருந்தது. . . . கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிந்திருந்தது என்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியது; அது நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையில் உறுதியாய் இருந்தேன். இதனால், யாராலும் என்னை அசைக்க முடியவில்லை” என்று பிற்பாடு அவர் சொன்னார்.
கடவுளுடைய அரசாங்கம் நமக்கு எந்தளவு நிஜமானதாய் இருக்கிறது? முற்பிதாவாகிய ஆபிரகாம், அப்போஸ்தலன் பவுல், இயேசு என இவர்கள் எல்லாரும் கடவுளுடைய அரசாங்கத்தை நிஜமானதாகக் கருதியதால் கடினமான சோதனைகளைச் சமாளித்தார்கள். (பிலி. 3:13, 14; எபி. 11:8-10; 12:2) எப்போதும் கடவுளுடைய அரசாங்கத்திற்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்து, அதன் முடிவில்லா ஆசீர்வாதங்களை மனதில் வைத்தால், நாமும்கூட தற்காலிக விடுதலைக்காக ஆசைப்படாமல் சபலத்தை எதிர்த்து நிற்போம்.—2 கொ. 4:16-18.
யெகோவா நம்மைக் கைவிட மாட்டார்
யூதர்களை அச்சுறுத்த ரப்சாக்கே என்னென்னவோ செய்து பார்த்தார்; என்றாலும், எசேக்கியாவும் அவருடைய குடிமக்களும் யெகோவாமீது வைத்திருந்த நம்பிக்கையைக் கைவிடவில்லை. (2 இரா. 19:15, 19; ஏசா. 37:5-7) பலன்? யெகோவா அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக தம்முடைய தூதரை அனுப்பினார்; அவர், ஒரே இரவில் அசீரிய பாளயத்திலிருந்த 1,85,000 போர்வீரர்களைக் கொன்று குவித்தார். மறுநாள், அவமானம் தாங்காத சனகெரிப் மிச்சமீதியிருந்த தன் போர்வீரர்களுடன் தலைநகர் நினிவேக்கு ஓட்டம்பிடித்தான்.—2 இரா. 19:35, 36.
உண்மைதான், யெகோவா தம்மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களைக் கைவிடவில்லை. சோதனைகளைச் சகித்து நிற்கிற இன்றைய சகோதர சகோதரிகளும் அதையே அனுபவப்பூர்வமாக ருசித்திருக்கிறார்கள். அதனால்தான், நம் பரலோகத் தகப்பன் இவ்வாறு நமக்கு உறுதி அளிக்கிறார்: “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.”—ஏசா. 41:13.
[அடிக்குறிப்பு]
a “ரப்சாக்கே” என்பது பிரபல அசீரிய அதிகாரியின் பட்டப் பெயராகும். அவனுடைய சொந்தப் பெயர் இந்தப் பதிவில் குறிப்பிடப்படவில்லை.
[பக்கம் 13-ன் சிறுகுறிப்பு]
“பயப்படாதே” என்று தம் ஊழியர்களுக்கு யெகோவா அளித்திருக்கிற உறுதி பைபிளில் 30 தடவைக்கும் மேல் காணப்படுகிறது
[பக்கம் 12-ன் படம்]
ரப்சாக்கேயின் உத்திகள் எவ்வாறு இன்று கடவுளுடைய மக்களை எதிர்ப்பவர்கள் பயன்படுத்திய உத்திகளுக்கு ஒத்திருந்தன?
[பக்கம் 15-ன் படங்கள்]
யெகோவாவுடன் நாம் நெருங்கிய பந்தம் வைத்திருப்பது சோதனைகளின் மத்தியிலும் உத்தமத்தில் நிலைத்திருக்க உதவுகிறது