‘கற்பிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருங்கள்’
“என்னை ‘போதகர்’ என்றும், ‘எஜமான்’ என்றும் நீங்கள் அழைப்பது சரியே; நான் போதகர்தான், எஜமான்தான்.” (யோவா. 13:13) இந்த வார்த்தைகளை இயேசு தம்முடைய சீடர்களிடம் சொன்னபோது போதகராகத் தம் பணியை அவர் சிறப்பித்துக் காட்டினார். பிறகு, அவர் பரலோகத்திற்குச் செல்வதற்குச் சற்று முன்பாக தம்மைப் பின்பற்றியோருக்கு இவ்வாறு கட்டளை கொடுத்தார்: “ஆகவே, புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்.” (மத். 28:19, 20) பிற்பாடு, கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பவர்களாக இருப்பதன் முக்கியத்துவத்தை அப்போஸ்தலன் பவுலும் வலியுறுத்தினார். அவர், கிறிஸ்தவ மூப்பராக இருந்த தீமோத்தேயுவுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “சபையார்முன் வாசிப்பதிலும், அவர்களுக்கு அறிவுரை வழங்குவதிலும், கற்பிப்பதிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிரு. . . . இவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்.”—1 தீ. 4:13-15.
அன்று போலவே இன்றும், நம்முடைய வெளி ஊழியத்திலும் சரி கிறிஸ்தவக் கூட்டங்களிலும் சரி, கற்பிப்பது தனிச்சிறப்புமிக்க அம்சமாய் இருக்கிறது. கற்பிப்பதில் நாம் எப்படி முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கலாம்? கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பவர்களாக நாம் முன்னேற்றம் செய்வதற்கு இது எந்த வழிகளில் நமக்கு உதவும்?
மிகப் பெரிய போதகரைப் பின்பற்றுங்கள்
இயேசு கற்பித்த விதம், கேட்டுக்கொண்டிருந்த அநேகரின் மனதைக் கவர்ந்தது. நாசரேத்திலிருந்த ஜெபக்கூடத்திற்கு வந்திருந்தவர்கள்மீது அவருடைய வார்த்தைகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதைக் கவனியுங்கள். சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா இவ்வாறு எழுதினார்: “அங்கிருந்த எல்லாரும் அவர் பேசிய மனங்கவரும் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியத்துடன் . . . அவரைப் பாராட்டிப்பேச ஆரம்பித்தார்கள்.” (லூக். 4:22) இயேசுவின் சீடர்கள் தங்களுடைய எஜமானருடைய முன்மாதிரியைப் பின்பற்றி பிரசங்கித்தார்கள். சொல்லப்போனால், அப்போஸ்தலன் பவுல்கூட “நான் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதுபோல் நீங்கள் என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். (1 கொ. 11:1) இயேசு கற்பித்த முறைகளை பவுல் பின்பற்றியதால், “பொது இடங்களிலும் வீடு வீடாகவும்” அதிக திறம்பட்டு விளங்கினார்.—அப். 20:20.
“சந்தைவெளியில்” கற்பித்தல்
பொது இடங்களில் பவுல் திறம்பட கற்பித்ததற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டை அப்போஸ்தலர் 17-ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். கிரேக்க தேசத்திலுள்ள அத்தேனே நகருக்கு அவர் சென்றதைப் பற்றி அங்கே நாம் வாசிக்கிறோம். அந்த நகரின் தெருக்களிலும் சரி பொது இடங்களிலும் சரி, திரும்பிய பக்கமெல்லாம் அவர் உருவச் சிலைகளையே பார்த்தார். அதைக் கண்டு அவர் எரிச்சலடைந்ததில் ஆச்சரியமே இல்லை! ஆனாலும் அவர் கோபத்தை வெளிக்காட்டவில்லை. மாறாக, ‘ஜெபக்கூடத்திலும் . . . தினந்தோறும் சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் நியாயங்காட்டிப் பேசி வந்தார்.’ (அப். 17:16, 17) நாம் பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி! எல்லா விதமான பின்னணியைச் சேர்ந்தவர்களிடமும், குற்றப்படுத்தும் விதத்தில் அல்லாமல் மரியாதைக்குரிய விதத்தில் பேசும்போது, சிலராவது சத்தியத்திற்குச் செவிசாய்க்கவும், பொய் மதத்தின் பிடியிலிருந்து விடுபடவும் நாம் வழிசெய்வோம்.—அப். 10:34, 35; வெளி. 18:4.
சந்தைவெளியில் பவுல் பிரசங்கித்ததைப் பெரும்பாலோர் காதுகொடுத்துக் கேட்கவில்லை. அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் தத்துவஞானிகளும் இருந்தார்கள்; அவர்களுடைய கருத்துகள், பவுல் பிரசங்கித்த சத்தியத்திலிருந்து முற்றிலும் முரண்பட்டிருந்தன. பவுலோடு அவர்கள் வாக்குவாதம் செய்தபோது, அவர்களுடைய குறிப்புகளுக்கு அவர் கவனம் செலுத்தினார் என்பதில் சந்தேகமில்லை. சிலர் அவரை “வாயாடி” (நேர்ப்பெயர்ப்பு, “விதைகளைப் பொறுக்குகிறவன்”) என்றார்கள். வேறு சிலர், “இவன் அந்நிய தெய்வங்களைப் பற்றி அறிவிக்கிறவன்போல் தெரிகிறது” என்றார்கள்.—அப். 17:18.
இருந்தாலும், அவர்கள் தன்னை மட்டம்தட்டிப் பேசியதைக் குறித்து பவுல் சோர்ந்துபோகவில்லை. மாறாக, அவருடைய போதனைகளைப் பற்றி விளக்கும்படி அவர்கள் கேட்டபோது, அந்த வாய்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் கருத்தாழமிக்க சொற்பொழிவைக் கொடுத்தார்; அது, அவருடைய கற்பிக்கும் திறமைகளை நன்கு படம்பிடித்துக் காட்டியது. (அப். 17:19-22; 1 பே. 3:15) அந்தச் சொற்பொழிவை இப்போது நாம் விவரமாய்க் கலந்தாலோசிக்கலாம்; அதோடு, கற்பிக்கும் திறமைகளில் முன்னேற உதவும் பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ளலாம்.
ஆர்வமூட்டும் விஷயத்தைக் கண்டுபிடியுங்கள்
பவுல் இவ்வாறு சொன்னார்: “அத்தேனே நகர மக்களே, மற்ற மக்களைவிட நீங்கள் எல்லா விதத்திலும் தெய்வங்கள்மீது பயபக்தியுள்ளவர்களாக இருப்பதைக் காண்கிறேன். உதாரணமாக, நான் இந்த நகரத்தில் . . . நீங்கள் வழிபடுகிறவற்றைக் கவனமாகப் பார்த்துக்கொண்டே வந்தேன்; அப்போது, ‘அறியப்படாத கடவுளுக்கு’ என்று பொறிக்கப்பட்டிருந்த ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் வழிபடுகிற அந்தக் கடவுளையே நான் உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன்.”—அப். 17:22, 23.
பவுல் தன்னைச் சுற்றி என்னென்ன இருக்கின்றனவென நன்கு கவனித்தார். அப்படி அவர் கூர்ந்து கவனித்தவற்றிலிருந்து, தான் பேசிக்கொண்டிருந்த மக்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டார். அவ்வாறே நாமும் கூர்ந்து கவனிக்கிறவர்களாய் இருந்தால் வீட்டுக்காரரைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு, வீட்டின் முற்றத்தில் கிடக்கும் விளையாட்டுச் சாமான்களோ கதவில் ஒட்டப்பட்டிருக்கும் அடையாளச் சின்னங்களோ நிறைய விஷயங்களைத் தெரிவிக்கலாம். வீட்டுக்காரரின் சூழ்நிலைகளை நாம் ஓரளவு புரிந்துகொண்டோம் என்றால், நாம் என்ன பேசப் போகிறோம் என்பதை மட்டுமல்ல, எப்படிப் பேசப் போகிறோம் என்பதையும் கவனமாக யோசிப்போம்.—கொலோ. 4:6.
பவுல், குற்றப்படுத்தும் விதத்தில் பேசவில்லை. அத்தேனே நகரத்தார் கடவுளை “வழிபடுகிற” விதம் தவறானது என்பதை அவர் அறிந்துகொண்டார். உண்மைக் கடவுளை அவர்கள் எப்படி வழிபடுவதென பவுல் அவர்களுக்குத் தெளிவாகக் காட்டினார். (1 கொ. 14:8) அப்படியானால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கையில், அதைத் தெளிவாகவும் நம்பிக்கையூட்டும் விதத்திலும் நாம் பேசுவது எவ்வளவு முக்கியம்!
சாதுரியமும் பாரபட்சமின்மையும்
பவுல் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த கடவுள் வானத்திற்கும் பூமிக்கும் எஜமானராக இருப்பதால், மனிதருடைய கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. மனிதருடைய கைகளால் அவர் எந்தப் பணிவிடையையும் பெற்றுக்கொள்வதில்லை, அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை; ஏனென்றால், அவர்தான் எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும் கொடுக்கிறார்.”—அப். 17:24, 25.
பவுல் இங்கே, உயிர் அளிக்கிறவரான யெகோவாவிடம் அவர்களுடைய கவனத்தைத் திருப்பினார்; அவரை ‘வானத்திற்கும் பூமிக்கும் எஜமானர்’ எனக் குறிப்பிடுவதன் மூலம் சாதுரியமாகப் பேசினார். பல்வேறு மதங்களையும் கலாசாரங்களையும் சேர்ந்த நல்மனமுள்ளோர், யெகோவா தேவனே உயிர்கள் அனைத்தின் ஊற்றுமூலர் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!—சங். 36:9.
அடுத்ததாக பவுல் இவ்வாறு சொன்னார்: “ஒரே மனிதனிலிருந்து எல்லாத் தேசத்தாரையும் உண்டுபண்ணி, . . . குறித்த காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் அவர்களுக்கு வரையறுத்திருக்கிறார். உண்மையில் அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லாதபோதிலும், அவரை நாம் நாடித்தேட வேண்டும் என்பதற்காக, அதுவும் தட்டித் தடவியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்.”—அப். 17:26, 27.
நாம் கற்பிக்கிற விதத்தின் மூலம், நாம் எப்படிப்பட்ட கடவுளை வணங்குகிறோம் என்பதை மற்றவர்களுக்குக் காட்டலாம். பராபட்சமற்றவரான யெகோவா தம்மை எல்லாத் தேசத்தாரும் “தட்டித் தடவியாவது கண்டுபிடிக்க” வழிசெய்கிறார். அதேபோல், நாம் சந்திக்கிற எல்லாரிடமும் பாரபட்சம் காட்டாமல் பேசுகிறோம். படைப்பாளர்மீது நம்பிக்கை வைக்கிறவர்கள், அவருடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளவும், அதன்மூலம் முடிவில்லா ஆசீர்வாதங்களைப் பெறவும் நாம் உதவுகிறோம். (யாக். 4:8) ஆனால், கடவுள் இருப்பதையே சந்தேகிப்பவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? இதிலும் நாம் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். அவர் அடுத்து என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்.
“அவராலேயே நாம் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; உங்கள் கவிஞர்களில் சிலர்கூட, ‘நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே, நாம் கடவுளுடைய பிள்ளைகளாக இருப்பதால், . . . பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போல் கடவுள் இருப்பார் என நினைக்கக் கூடாது.”—அப். 17:28, 29.
பவுல் தான் சொன்னவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த அத்தேனே நகரத்தார் நற்செய்தியை ஏற்றுக்கொள்வதற்காக, அவர்கள் நன்கு அறிந்திருந்த, அங்கீகரித்திருந்த கவிஞர்களுடைய வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். நாமும்கூட, வீட்டுக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கும் பொதுவான விஷயத்தை எடுத்துச் சொல்லி விளக்க முயலுகிறோம். எடுத்துக்காட்டாக, எபிரெயருக்கு எழுதிய கடிதத்தில் பவுல் பயன்படுத்திய உதாரணம் இன்றும்கூட ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது. அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.” (எபி. 3:4) வீட்டுக்காரர்களிடம் இந்த எளிய உதாரணத்தைச் சொல்லி நியாயங்காட்டி விளக்குவது, நாம் சொல்வது எவ்வளவு உண்மை என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவும். திறம்பட கற்பிப்பதில் உட்பட்டுள்ள இன்னொரு விஷயம், தூண்டுவித்தல் ஆகும்; இதை பவுல் தன்னுடைய சொற்பொழிவில் எப்படிப் பயன்படுத்தினார் என்பதைப் பார்க்கலாம்.
காலத்தின் அவசரத்தன்மையை வலியுறுத்துங்கள்
பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “உண்மைதான், நீங்கள் அறியாமையிலிருந்த காலங்களைக் கடவுள் கண்டும்காணாதவர்போல் இருந்தார். இப்போதோ மனந்திரும்பும்படி எங்குமுள்ள மனிதரெல்லாருக்கும் சொல்கிறார். ஏனென்றால், தாம் நியமித்த ஒரு மனிதரைக் கொண்டு இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.”—அப். 17:30, 31.
கடவுள் தற்காலிகமாகத் தீமையை பூமியில் அனுமதித்திருப்பது, நம் இருதயத்தில் உண்மையிலேயே என்ன இருக்கிறது என்பதை அவருக்குக் காட்ட நம் எல்லாருக்கும் வாய்ப்பளித்திருக்கிறது. எனவே, நாம் வாழும் காலத்தின் அவசரத்தன்மையைப் பற்றி மக்களுக்கு வலியுறுத்துவது அவசியம்; அதோடு, சீக்கிரத்தில் வரவிருக்கும் கடவுளுடைய அரசாங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பற்றி நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசுவதும் அவசியம்.—2 தீ. 3:1-5.
செய்திக்குப் பாதகமாகப் பிரதிபலிக்கையில் . . .
“உயிர்த்தெழுதலைப் பற்றி அவர்கள் கேட்டபோது சிலர் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் வேறு சிலர், ‘இன்னொரு சமயத்திலும் இதைப் பற்றிக் கேட்கிறோம்’ என்றார்கள். அதன்பின், அவர்களைவிட்டு பவுல் புறப்பட்டுப் போனார். என்றாலும், சில ஆட்கள் அவரோடு சேர்ந்துகொண்டு விசுவாசிகளானார்கள்.”—அப். 17:32-34.
நாம் கற்பிக்கும்போது சிலர் உடனடியாகச் செவிசாய்க்கலாம்; இன்னும் சிலர், நாம் கொடுக்கும் விளக்கத்தைத் தாமதமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தெளிவாகவும் எளிமையாகவும் பைபிள் சத்தியத்தை நாம் விளக்கும்போது யெகோவாவைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ள மக்களுக்கு உதவுகிறோம்; அப்படி ஒரே ஒருவரையாவது தம்முடைய குமாரனிடம் ஈர்ப்பதற்கு யெகோவா நம்மைப் பயன்படுத்தும்போது நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருப்போம்!—யோவா. 6:44.
நமக்குப் பாடம்
பவுலுடைய சொற்பொழிவை நாம் மனதில் அசைபோடும்போது, பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்கு விளக்கும் விதத்தைப் பற்றி நாம் அதிகம் கற்றுக்கொள்கிறோம். சபையில் பொதுப் பேச்சுகளைக் கொடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறதென்றால், பவுலைப் போல சாதுரியமான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்; அப்படிச் செய்வது, புதியவர்கள் பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். அந்தச் சத்தியங்களைத் தெளிவாக எடுத்துப் பேச நாம் விரும்புவோம். ஆனால், சபைக்கு வந்திருக்கும் புதியவர்களின் மத நம்பிக்கைகளைக் குறைத்துப் பேசாதிருக்கக் கவனமாய் இருப்போம். அதே சமயம், வெளி ஊழியத்தில் இணங்க வைக்கும் விதத்திலும், சாதுரியமாகவும் பேச முயற்சி செய்வோம். இவ்வாறு செய்வதன் மூலம், ‘கற்பிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்படி’ பவுல் கொடுத்த அறிவுரையை நாம் உண்மையிலேயே பின்பற்றுவோம்.
[பக்கம் 30-ன் படம்]
பவுல் தெளிவாகவும் எளிமையாகவும் சாதுரியமாகவும் போதித்தார்
[பக்கம் 31-ன் படம்]
பவுலைப் போல, நாம் ஊழியத்தில் மற்றவர்களின் நம்பிக்கைகளைக் கருத்தில் கொள்கிறோம்