நியாயங்காட்டிப் பேசும் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்
1 அப்போஸ்தலன் பவுல் பிசீதியா அந்தியோகியாவில் கொடுத்த ஒரு பேச்சு அப்போஸ்தலர் 13:16-41-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, நாம் எப்படி நியாயங்காட்டிப் பேசலாம் என்பதற்கு இப்பதிவு நல்ல உதாரணமாக இருக்கிறது. மக்களின் பின்னணியையும் மனப்பான்மையையும் கவனித்து, அதற்கேற்றவாறு பவுல் தன்னுடைய பிரசங்க முறையை மாற்றிக்கொண்டார். இந்தப் பதிவை இப்போது ஆராய்கையில், அவரைப் போலவே நாமும் ஊழியத்தில் எப்படிப் பிரசங்கிக்கலாம் என்பதை சிந்தித்துப் பார்க்கலாம்.
2 பொதுவான விஷயத்தைப் பேசி ஆரம்பியுங்கள்: கடவுளுடைய நோக்கத்தில் இயேசு விசேஷ பங்கு வகிக்கிறார் என்பதுதான் பவுலுடைய பேச்சின் முக்கிய செய்தி, ஆனால் எடுத்தவுடனேயே அவர் அதைப் பற்றி பேசவில்லை. மாறாக, அங்கு கூடியிருந்த திரளான யூதர்கள் எல்லாருக்கும் தெரிந்திருந்த அவர்களுடைய சரித்திரத்தைப் பற்றிப் பேசினார். (அப். 13:16-22) நாமும் அதேவிதமாக பொதுவான விஷயங்களைப் பேசும்போது, இன்னும் திறமையாக மக்களுடைய மனதைத் தொட முடியும். அவ்வாறு பொதுவான விஷயங்களைப் பேசுவதற்கு, நாம் சாதுரியமான கேள்விகளைக் கேட்க வேண்டும், பிறகு அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும்; அப்போதுதான் அவர்கள் எதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
3 யூதர்களின் சரித்திரத்தைப் பற்றி பவுல் பேசியபோது, கடவுள் சொன்னபடியே தாவீதின் வம்சத்தில் மீட்பர் வருவார் என்பதை அங்கிருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். ஆனால் அநேக யூதர்கள், தங்களுடைய மீட்பர் படைத் தளபதியாக வந்து ரோம அதிகாரத்திலிருந்து தங்களை மீட்பார் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்; யூத தேசத்தை மற்ற எல்லாத் தேசங்களையும்விட உயர்த்துவார் என்றுகூட நம்பிக்கொண்டிருந்தார்கள். அதேசமயத்தில், யூத மதத் தலைவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ரோம அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்து, கொலை செய்தார்கள் என்பதை அந்த யூதர்கள் அறிந்திருந்தார்கள். இப்படியிருக்க, இயேசுதான் மேசியா என்று அவர்களை பவுல் எப்படி நம்பவைப்பார்?
4 அணுகுமுறையை மாற்றிக்கொள்ளுங்கள்: பவுலுக்கு யூதர்களின் மனநிலை தெரிந்திருந்ததால், அவர்கள் நம்பிய விஷயத்தின் அடிப்படையில் வசனங்களைப் பயன்படுத்தி நியாயங்காட்டிப் பேசினார். உதாரணத்திற்கு, தாவீது வம்சத்தில் இயேசு பிறந்ததாகச் சொன்னார்; மேலும் கடவுளுடைய தீர்க்கதரிசி என எல்லாராலும் கருதப்பட்ட யோவான் ஸ்நானனும் இயேசுவைப் பற்றிக் குறிப்பிட்டதாகக் கூறினார். (அப். 13:23-25) மதத் தலைவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் கொலை செய்ததன் மூலம் “தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை . . . நிறைவேற்றினார்கள்” என்பதைச் சுட்டிக்காட்டினார். (அப். 13:26-28) இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதற்குக் கண்கண்ட சாட்சிகள் இருந்தார்கள் என்று விளக்கினார். அதோடு, இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றித் துல்லியமாக முன்னறிவித்த வசனங்களுக்கு—அவர்களுக்கு ஏற்கெனவே நன்கு தெரிந்த வசனங்களுக்கு—அவர்களுடைய கவனத்தைத் திருப்பினார்.—அப். 13:29-37.
5 மறுபட்சத்தில், அத்தேனே பட்டணத்திலிருந்த மார்ஸ் மேடையில் கிரேக்கர்களிடம் பேசியபோது பவுல் வேறுவிதமான அணுகுமுறையைப் பயன்படுத்தினார். (அப். 17:22-31) ஆனால் யூதர்களிடம் சொன்ன அதே செய்தியைத்தான் இவர்களிடமும் சொன்னார். அந்த இரண்டு அணுகுமுறைகளுமே நல்ல பலன் தந்தன. (அப். 13:42, 43; 17:34) அதேவிதமாக, நாமும் பொதுவான விஷயங்களைப் பேச ஆரம்பித்து, மக்களுடைய பின்னணிக்கும் மனப்பான்மைக்கும் ஏற்றவாறு அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் இன்னும் திறமையாக ஊழியம் செய்து நல்ல பலன்களைப் பெறுவோம்.
[கேள்விகள்]
1. பைபிளிலுள்ள எந்தப் பதிவை நாம் ஆராயப்போகிறோம், ஏன்?
2. பவுல் தன்னுடைய பேச்சை ஆரம்பித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
3. இயேசுதான் மேசியா என்பதை நம்ப யூதர்களுக்கு ஏன் கடினமாக இருந்தது?
4. பவுல் எப்படித் திறமையாக யூதர்களிடம் நியாயங்காட்டிப் பேசினார்?
5. (அ) கிரேக்கர்களிடம் பேசியபோது பவுல் தன் அணுகுமுறையை எப்படி மாற்றிக்கொண்டார்? (ஆ) நம் பிராந்தியத்தில் பிரசங்கிக்கும்போது பவுலின் உதாரணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?