கடவுளுடைய நீதியை இயேசு மகிமைப்படுத்திய விதம்
“மனிதர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் மூலம் தம்மோடு சமாதானமாவதற்காக அவரைப் பிராயச்சித்த பலியாகக் கடவுள் கொடுத்தார். . . . [இது] நீதியான செயல் என்பதைக் காட்டுவதற்காக அவர் அப்படிச் செய்தார்.”—ரோ. 3:25.
1, 2. (அ) மனிதருடைய நிலையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (ஆ) என்ன கேள்விகளுக்கான பதிலை இக்கட்டுரையில் சிந்திக்கப் போகிறோம்?
ஏதேன் தோட்டத்தில் நடந்த கலகத்தைப் பற்றிய பைபிள் பதிவு எல்லாருக்கும் தெரிந்ததே. ஆதாம் செய்த பாவத்தின் பாதிப்புகளை நாம் எல்லாருமே உணருகிறோம். பைபிள் அதை இவ்வாறு விளக்குகிறது: “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோ. 5:12) நாம் நல்லது செய்ய என்னதான் முயன்றாலும் தவறுகள் செய்துவிடுகிறோம்; அதனால், கடவுளுடைய மன்னிப்பு நமக்குத் தேவைப்படுகிறது. அப்போஸ்தலன் பவுல்கூட இவ்வாறு ஆதங்கப்பட்டார்: “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே செய்து வருகிறேன். எப்பேர்ப்பட்ட இக்கட்டான நிலையில் இருக்கிறேன்!”—ரோ. 7:19, 24.
2 இக்கட்டுரையில் பின்வரும் முக்கிய கேள்விகளைச் சிந்திப்போம்: நாம் பிறப்பிலேயே பாவிகளாக இருப்பதால், நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவால் மட்டும் எப்படி பாவமில்லாமல் பிறக்க முடிந்தது? அவர் ஏன் ஞானஸ்நானம் பெற்றார்? இயேசுவின் வாழ்க்கைமுறை யெகோவாவின் நீதியை எப்படி மகிமைப்படுத்தியது? மிக முக்கியமாக, கிறிஸ்துவின் மரணம் எவற்றை நிறைவேற்றியது?
கடவுளுடைய நீதி சவால்விடப்பட்டது
3. ஏவாளைச் சாத்தான் எவ்வாறு வஞ்சித்தான்?
3 நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய பேரரசாட்சியை முட்டாள்தனமாக ஒதுக்கித்தள்ளினார்கள்; ‘பழைய பாம்பு, . . . அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன்’ தங்களை ஆட்சி செய்ய வேண்டுமென விரும்பியதால் அப்படிச் செய்தார்கள். (வெளி. 12:9) இது எப்படி நடந்தது என சிந்தித்துப் பாருங்கள். யெகோவா தேவன் ஆட்சி செய்யும் விதம் நீதியானதா என்ற சந்தேகத்தை சாத்தான் எழுப்பினான். “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ” என ஏவாளிடம் கேட்பதன் மூலம் இந்தச் சந்தேகத்தை எழுப்பினான். ஒரேவொரு மரத்தைத் தொட வேண்டாம் என்றும் தொட்டால் இறந்துவிடுவீர்கள் என்றும் கடவுள் கொடுத்திருந்த தெளிவான கட்டளையை அப்படியே சாத்தானிடம் ஏவாள் சொன்னாள். அப்போது, கடவுள் பொய் சொன்னதாக அவன் குற்றம் சாட்டினான். “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று பிசாசு கூறினான். பிறகு, கடவுள் நன்மையான ஒன்றைக் கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்கிறார் என்றும் அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கடவுள் போல் ஆகி, தன்னிச்சையாகச் செயல்படலாம் என்றும் நம்ப வைத்து ஏவாளை வஞ்சித்தான்.—ஆதி. 3:1-5.
4. மனிதர் எவ்வாறு சாத்தானுடைய ஆட்சியின் கீழ் வாழ வேண்டியதாயிற்று?
4 கடவுளைச் சாராமல் சுதந்திரமாக வாழ்ந்தால் மனிதர்கள் சந்தோஷமாக இருக்க முடியும் என்றே சாத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டான். கடவுளுடைய நீதியான பேரரசாட்சியை ஆதரிப்பதற்குப் பதிலாக, ஆதாம் தன்னுடைய மனைவியின் பேச்சைக் கேட்டு அவளோடு சேர்ந்து விலக்கப்பட்ட அந்தப் பழத்தைச் சாப்பிட்டான். இவ்வாறு, யெகோவாவுக்கு முன் தனக்கிருந்த பரிபூரண நிலையை இழந்துவிட்டான்; அதோடு, நம்மை பாவம் மற்றும் மரணம் என்ற கொடுமையான நுகத்தைச் சுமக்க வைத்துவிட்டான். அதுமட்டுமா, கடவுளுடைய ஆட்சிக்கு எதிராகச் செயல்படுகிற ‘இந்த உலகத்தின் கடவுளாகிய’ சாத்தானுடைய ஆட்சியின் கீழ் மனிதர் வாழ வேண்டியதாயிற்று.—2 கொ. 4:4; ரோ. 7:14.
5. (அ) யெகோவா எப்படித் தாம் சொன்னபடியே செய்தார்? (ஆ) ஆதாம், ஏவாளின் சந்ததியாருக்குக் கடவுள் என்ன நம்பிக்கையைக் கொடுத்தார்?
5 வாக்கு மாறாத யெகோவா தாம் சொன்னபடியே, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மரண தண்டனை விதித்தார். (ஆதி. 3:16-19) கடவுளுடைய நோக்கம் தோல்வியடைந்ததை இது அர்த்தப்படுத்தவில்லை. சொல்லப்போனால், அதற்கு நேர்மாறானதே நடந்தது. ஆதாம், ஏவாளுக்கு தண்டனை தீர்ப்பளித்தபோது, அவர்களுடைய எதிர்கால சந்ததியாருக்கு நம்பிக்கையூட்டும் ஓர் அருமையான ஆதாரத்தை அளித்தார். ஒரு ‘வித்துவை’ உண்டுபண்ணுவதைப் பற்றிய தம்முடைய நோக்கத்தை அறிவித்தபோது அதை அளித்தார். அந்த ‘வித்துவின்’ குதிங்காலைச் சாத்தான் நசுக்குவான். என்றாலும், வாக்குபண்ணப்பட்ட வித்து அந்தக் காயத்திலிருந்து சுகமடைந்த பிறகு, சாத்தானுடைய “தலையை நசுக்குவார்.” (ஆதி. 3:15) இயேசு கிறிஸ்துவைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகையில் இந்த விஷயத்தை பைபிள் தெளிவுபடுத்துகிறது: “பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகவே கடவுளுடைய மகன் வந்தார்.” (1 யோ. 3:8) ஆனால், இயேசுவின் வாழ்க்கைமுறையும் மரணமும் எவ்வாறு கடவுளுடைய நீதியை மகிமைப்படுத்தின?
இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் அர்த்தம்
6. இயேசு ஆதாமிடமிருந்து பாவத்தைப் பெறவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
6 இயேசு வளர்ந்து ஆளானபோது, ஆரம்பத்தில் பரிபூரணமாக இருந்த ஆதாமுக்கு ஒப்பாக ஆனார். (ரோ. 5:14; 1 கொ. 15:45) அதற்காக, அவர் பரிபூரணராகப் பிறக்க வேண்டியிருந்தது. அது எப்படிச் சாத்தியமானது? இயேசுவின் தாயான மரியாளிடம் காபிரியேல் தூதன் இதைப் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கினார். “கடவுளுடைய சக்தி உன்மீது வரும்; உன்னதமானவருடைய வல்லமை உன்மீது தங்கும். இதன் காரணமாக, உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்” என்றார். (லூக். 1:35) இயேசு சிறுவராக இருந்தபோதே அவருடைய பிறப்பைப் பற்றிய சில விஷயங்களை மரியாள் அவருக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அதனால்தான், சிறுவராய் இருந்த இயேசுவை ஒருசமயம் மரியாளும் வளர்ப்புத் தகப்பனாகிய யோசேப்பும் ஆலயத்தில் கண்டுபிடித்தபோது, “நான் என் தகப்பனுடைய வீட்டில் இருக்க வேண்டுமென உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். (லூக். 2:49) ஆம், தாம் கடவுளுடைய மகன் என்பதை இயேசு தம்முடைய சிறு வயதிலிருந்தே அறிந்திருந்தார். ஆகவேதான், கடவுளுடைய நீதியை மகிமைப்படுத்துவது அவருக்கு மிக முக்கியமான ஒன்றாய் இருந்தது.
7. இயேசு எதையெல்லாம் மதிப்புள்ள சொத்தாகப் பெற்றிருந்தார்?
7 இயேசு வழிபாட்டுக்கான கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டார்; இது ஆன்மீகக் காரியங்களில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததைக் காட்டியது. அவர் பரிபூரண மனதைச் சொத்தாகப் பெற்றிருந்ததால், எபிரேய வேதாகமத்திலிருந்து தாமும் மற்றவர்களும் வாசித்த விஷயங்களை எல்லாம் நன்கு புரிந்திருப்பார். (லூக். 4:16) அவர் மதிப்புள்ள வேறொன்றையும் சொத்தாகப் பெற்றிருந்தார்; அதுதான் மனிதருக்காகப் பலி கொடுக்க முடிந்த பரிபூரண மனித உடல். இயேசு ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், ஜெபம் செய்துகொண்டிருந்தார்; அதோடு, சங்கீதம் 40:6-8–லுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்திருக்கலாம்.—லூக். 3:21; எபிரெயர் 10:5-10-ஐ வாசியுங்கள்.a
8. இயேசு ஞானஸ்நானம் பெறுவதை யோவான் ஏன் தடுக்க முயன்றார்?
8 யோவான் ஸ்நானகர் முதலில் இயேசு ஞானஸ்நானம் பெறுவதைத் தடுக்க நினைத்தார். ஏன்? ஏனென்றால், யூதர்கள் திருச்சட்டத்திற்கு விரோதமாகச் செய்த பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கு அடையாளமாக அவர்களுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். அவர் இயேசுவின் நெருங்கிய உறவினராக இருந்ததால், இயேசு நீதிமான் என்பதையும் மனந்திரும்ப வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். தாம் ஞானஸ்நானம் பெறுவது தகுந்தது என்பதை யோவானுக்கு இயேசு உறுதிப்படுத்தினார். “இதன் மூலம்தான் நீதியான எல்லாவற்றையும் நம்மால் நிறைவேற்ற முடியும்” என்று இயேசு விளக்கினார்.—மத். 3:15.
9. இயேசுவின் ஞானஸ்நானம் எதை அடையாளப்படுத்தியது?
9 பரிபூரண மனிதராக இருந்த இயேசு, ஆதாமைப் போல தம்மாலும் ஒரு பரிபூரண சந்ததியாருக்குத் தகப்பனாக முடியும் என்று நினைத்திருக்கலாம். என்றாலும், அவர் அதற்கு ஆசைப்படவில்லை; ஏனென்றால், அது அவரைக் குறித்த யெகோவாவின் சித்தமாக இருக்கவில்லை. வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாக, அதாவது மேசியாவாகத் தம்முடைய பங்கை நிறைவேற்றுவதற்காகவே அவரைக் கடவுள் பூமிக்கு அனுப்பினார். தம்முடைய பரிபூரண மனித உயிரைப் பலியாகக் கொடுப்பதும் அதில் உட்பட்டிருந்தது. (ஏசாயா 53:5, 6, 12-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் ஞானஸ்நானமும் நாம் பெறும் ஞானஸ்நானமும் ஒரே மாதிரியானது அல்ல என்பது உண்மைதான். அவர் யெகோவாவுக்குத் தம்மை அர்ப்பணிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை; ஏனென்றால், அவர் கடவுளுக்கு ஏற்கெனவே அர்ப்பணிக்கப்பட்ட இஸ்ரவேல் தேசத்தின் பாகமாக இருந்தார். மாறாக, அவருடைய ஞானஸ்நானம் மேசியாவைப் பற்றி வேதாகமத்தில் சொல்லப்பட்டபடி கடவுளுடைய சித்தத்தைச் செய்ய தம்மை அளிப்பதையே அடையாளப்படுத்தியது.
10. மேசியாவாகக் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் என்னவெல்லாம் உட்பட்டிருந்தன, அதைக் குறித்து இயேசு எப்படி உணர்ந்தார்?
10 இயேசுவைக் குறித்த யெகோவாவின் சித்தத்தில், அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் சீடராக்குவதும், அவ்வாறு சீடரானவர்கள் எதிர்காலத்தில் சீடராக்கும் வேலையில் ஈடுபட தயார்படுத்துவதும் உட்பட்டிருந்தன. அவர் தம்மையே அளிப்பதும்கூட, யெகோவா தேவனுடைய நீதியான பேரரசாட்சிக்கு ஆதரவு தரும் வகையில் துன்புறுத்தலையும் கொடூர மரணத்தையும் சகிக்க முன்வருவதை உட்படுத்தியது. இயேசு தம்முடைய பரலோகத் தகப்பனை உண்மையிலேயே நேசித்ததால், அவருடைய சித்தத்தைச் செய்வதில் இன்பம் கண்டார்; அதோடு, தம் உடலைப் பலியாக அளிப்பதில் மிகுந்த திருப்தி கண்டார். (யோவா. 14:31) பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்க தம்முடைய பரிபூரண உயிரின் விலையை மீட்புவிலையாகக் கடவுளுக்குக் கொடுக்க முடியும் என்பதை அறிந்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த மிகப் பெரிய பொறுப்பைச் சுமக்க தம்மையே அளித்ததைக் கடவுள் ஏற்றுக்கொண்டாரா? ஆம், அதில் சந்தேகமே இல்லை.
11. இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக, அதாவது கிறிஸ்துவாகத் தாம் ஏற்றுக்கொண்டதை யெகோவா எப்படிக் காண்பித்தார்?
11 இயேசு யோர்தான் நதியிலிருந்து கரையேறியபோது, அவரை ஏற்றுக்கொண்டதாக யெகோவா தேவன் வெளிப்படையாகத் தெரிவித்ததை நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களும் உறுதிப்படுத்துகிறார்கள். “கடவுளுடைய சக்தி புறாவைப் போல் பரலோகத்திலிருந்து இறங்கி அவர்மீது தங்கியதைப் பார்த்தேன். . . . அதன்படியே நான் கண்டேன், அதனால் இவர்தான் கடவுளுடைய மகன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்” என யோவான் ஸ்நானகர் உறுதிப்படுத்தினார். (யோவா. 1:32-34) மேலும், அந்தச் சமயத்தில், “இவர் என் அன்பு மகன், நான் இவரை அங்கீகரிக்கிறேன்” என்று யெகோவா அறிவித்தார்.—மத். 3:17; மாற். 1:11; லூக். 3:22.
மரணம்வரை உண்மையோடிருந்தார்
12. இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு மூன்றரை வருடங்களுக்கு என்ன செய்தார்?
12 அடுத்த மூன்றரை வருடங்களுக்கு, இயேசு தம்முடைய தகப்பனையும் அவருடைய நீதியான பேரரசாட்சியையும் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் முழு மூச்சுடன் இறங்கினார். வாக்குப்பண்ணப்பட்ட தேசமெங்கும் நடையாய் நடந்து களைத்துபோன போதிலும், அவர் சத்தியத்தைக் குறித்து முழுமையாகச் சாட்சி கொடுப்பதை எதுவும் தடுக்க முடியவில்லை. (யோவா. 4:6, 34; 18:37) இயேசு மற்றவர்களுக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி கற்றுக்கொடுத்தார். அதோடு, சுகவீனருக்கு சுகமளித்தார், பசியில் வாடியோருக்கு உணவளித்தார், மரித்தவர்களையும்கூட உயிர்த்தெழுப்பினார்; இதையெல்லாம் அற்புதமாய்ச் செய்வதன் மூலம் கடவுளுடைய அரசாங்கம் மனிதகுலத்திற்கு என்ன செய்யும் என்பதை மெய்பித்துக் காட்டினார்.—மத். 11:4, 5.
13. ஜெபம் சம்பந்தமாக இயேசு என்ன கற்பித்தார்?
13 சத்தியத்தைக் கற்றுக்கொடுத்ததற்கும் சுகவீனரைச் சுகப்படுத்தியதற்குமான புகழைத் தமக்குச் சேர்க்காமல் தாழ்மையுடன் யெகோவாவுக்குச் சேர்ப்பதில் இயேசு தலைசிறந்த முன்மாதிரியாய்த் திகழ்ந்தார். (யோவா. 5:19; 11:41-44) மேலும், மிக முக்கியமான எந்தெந்த காரியங்களுக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும் என்பதையும் இயேசு தெரியப்படுத்தினார். யெகோவா என்ற திருப்பெயர் ‘பரிசுத்தப்படவும்’ அவருடைய நீதியான பேரரசாட்சி சாத்தானுடைய பொல்லாத ஆட்சியை நீக்கி, அவரது ‘சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலே செய்யப்படவும்’ ஜெபிக்க வேண்டும். (மத். 6:9, 10) ‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடுவதன்’ மூலம் அந்த ஜெபங்களுக்கு இசைவாக செயல்படவும் இயேசு அறிவுறுத்தினார்.—மத். 6:33.
14. இயேசு பரிபூரணராக இருந்தாலும், கடவுளுடைய நோக்கத்தில் தம் பங்கை நிறைவேற்ற அவருக்கு ஏன் முயற்சி தேவைப்பட்டது?
14 இயேசு தம்மைப் பலியாகக் கொடுக்க வேண்டிய சமயம் நெருங்க நெருங்க, தம்மீதுள்ள பெரும் பொறுப்பைக் குறித்து இன்னும் உணர்வுள்ளவரானார். அவருடைய தகப்பனின் நோக்கமும் நற்பெயரும், அவர் தகாத முறையில் விசாரனை செய்யப்படுவதைச் சகித்து கோர மரணம் அடைவதைச் சார்ந்திருந்தன. இயேசு தாம் மரிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், “இப்போது என் உள்ளம் கலங்குகிறது, நான் என்ன சொல்வேன்? தகப்பனே, இந்தச் சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். என்றாலும், நான் இந்தச் சோதனையை எதிர்ப்பட்டே ஆக வேண்டும்” என்று ஜெபம் செய்தார். மனிதருக்கு இயல்பாக ஏற்படுகிற இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்திய பிறகு, அவர் தம்மைக் குறித்து யோசிப்பதை விட்டுவிட்டு மிக முக்கியமான காரியத்திற்கு கவனம் செலுத்தி, “தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று ஜெபம் செய்தார். உடனடியாக யெகோவா, “நான் அதை மகிமைப்படுத்தினேன், மீண்டும் மகிமைப்படுத்துவேன்” என்று பதிலளித்தார். (யோவா. 12:27, 28) ஆம், உத்தமத்தைக் காப்பதில் எந்தவொரு மனிதனும் சந்தித்திராத மாபெரும் சோதனையை அனுபவிக்க இயேசு மனமுள்ளவராய் இருந்தார். ஆனால், தம்முடைய பரலோகத் தகப்பனின் வார்த்தைகளைக் கேட்டது, அவருடைய பேரரசாட்சியை மகிமைப்படுத்துவதிலும் அந்த ஆட்சியே நீதியானது என்பதை நிரூபிப்பதிலும் வெற்றி காண முடியும் என்ற பலமான நம்பிக்கையை இயேசுவுக்கு அளித்தது. அதில் அவர் வெற்றியும் கண்டார்!
இயேசுவின் மரணம் நிறைவேற்றியவை
15. இயேசு மரிப்பதற்குச் சற்று முன் “எல்லாம் நிறைவேறிற்று” என்று ஏன் சொன்னார்?
15 கழுமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று!” என்று சொல்லி வேதனையோடு இறுதி மூச்சை விட்டார். (யோவா. 19:30, பொது மொழிபெயர்ப்பு) இயேசு ஞானஸ்நானம் பெற்றதிலிருந்து மரணமடைந்தது வரையான மூன்றரை வருடங்களில் கடவுளுடைய உதவியோடு அவர் நிறைவேற்றியவை எத்தனை எத்தனை! இயேசு இறந்தபோது, பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது; அதனால், இயேசுவைக் கொலை செய்வதற்கு உத்தரவளித்த ரோமப் படை அதிகாரி, “நிச்சயமாகவே இவர் கடவுளுடைய மகன்தான்” என்று சொல்லத் தூண்டப்பட்டார். (மத். 27:54) இயேசு தம்மைக் கடவுளுடைய மகன் என்று சொன்னதற்கு மக்கள் அவரைக் கேலி செய்ததை அந்த அதிகாரி பார்த்திருக்கலாம். இயேசு தாம் பட்ட எல்லாத் துன்புறுத்தலின் மத்தியிலும், உத்தமமாய் இருந்து சாத்தான் படு பயங்கரமான பொய்ப் பேர்வழி என்பதை நிரூபித்தார். கடவுளுடைய பேரரசாட்சியை ஆதரிக்கிறவர்கள் சம்பந்தமாக சாத்தான் இவ்வாறு சவால்விட்டிருந்தான்: “ஒருவன் தான் உயிரை காப்பதற்காக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பான்.” (யோபு 2:4, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வந்த மிக மிக எளிய சோதனையின்போது அவர்கள் உண்மையுள்ளவர்களாக நிரூபித்திருக்க முடியும் என்பதைத் தம்முடைய உண்மைத்தன்மையின் மூலம் இயேசு காட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் வாழ்க்கைமுறையும் மரணமும் யெகோவாவின் நீதியான பேரரசாட்சிக்கு ஆதரவளிப்பதாயும் அதை மகிமைப்படுத்துவதாயும் இருந்தன. (நீதிமொழிகள் 27:11-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் மரணம் வேறு எதையாவது நிறைவேற்றியதா? ஆம், நிறைவேற்றியது.
16, 17. (அ) இயேசுவுக்கு முன் வாழ்ந்த சாட்சிகளால் எப்படி யெகோவாவின் முன்னிலையில் நீதிமான்களாய் இருக்க முடிந்தது? (ஆ) யெகோவா தம்முடைய மகனின் உண்மைத்தன்மையை எவ்வாறு ஆசீர்வதித்தார், எஜமானர் இயேசு கிறிஸ்து எதைச் செய்து வருகிறார்?
16 இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பே யெகோவாவின் ஊழியர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் கடவுளுடைய முன்னிலையில் நீதிமான்களாக இருந்தார்கள்; அதனால், அவர்களுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை அளிக்கப்பட்டது. (ஏசா. 25:8; தானி. 12:13) ஆனால், பரிசுத்த கடவுளாகிய யெகோவா எந்தச் சட்டப்பூர்வ ஆதாரத்தின் பேரில் பாவமுள்ள அந்த மனிதரை இவ்வளவு அருமையாக ஆசீர்வதித்தார்? பைபிள் அதை இவ்வாறு விளக்குகிறது: “மனிதர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் மூலம் தம்மோடு சமாதானமாவதற்காக அவரைப் பிராயச்சித்த பலியாகக் கடவுள் கொடுத்தார். முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களைத் தாம் சகித்துக்கொண்டு மன்னித்தது நீதியான செயல் என்பதைக் காட்டுவதற்காக அவர் அப்படிச் செய்தார். இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் மனிதனை நீதிமானாக அறிவிப்பதன் மூலம் தாம் நீதியுள்ளவர் என்பதைத் தற்காலத்தில் நிரூபிப்பதற்காகவும் அவர் அப்படிச் செய்தார்.”—ரோ. 3:25, 26.b
17 இயேசு பூமிக்கு வருவதற்கு முன் பெற்றிருந்த ஸ்தானத்தைவிட உயர்ந்த ஸ்தானத்தைப் பெறுவதற்கு அவரை யெகோவா உயிர்த்தெழுப்பி ஆசீர்வதித்தார். இப்போது இயேசு சாவாமையுள்ள மகிமையான ஆவியாளாக இருக்கிறார். (எபி. 1:3) தலைமை குருவும் ராஜாவுமான எஜமானர் இயேசு கிறிஸ்து, கடவுளுடைய நீதியை மகிமைப்படுத்த தம்முடைய சீடர்களுக்கு உதவி வருகிறார். இவ்வாறு மகிமைப்படுத்துகிறவர்களுக்கும் தம்முடைய மகனைப் பின்பற்றி தம்மை உண்மையோடு சேவிப்பவர்களுக்கும் பலனளிக்கிற நம் பரம தகப்பனாகிய யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!—சங்கீதம் 34:3-யும், எபிரெயர் 11:6-யும் வாசியுங்கள்.
18. அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
18 ஆபேல் முதற்கொண்டு உண்மையோடு வாழ்ந்து வந்த பூர்வகால ஊழியர்கள் யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை வைத்திருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட வித்துவின் மீது விசுவாசமும் நம்பிக்கையும் இருந்தது. தம்முடைய மகன் சாகும்வரை உத்தமராய் இருப்பார் என்பதை யெகோவா அறிந்திருந்தார்; அதோடு, அவருடைய மரணம் “உலகத்தின் பாவத்தை” முழுமையாகப் போக்கும் என்பதையும் அறிந்திருந்தார். (யோவா. 1:29) இயேசுவின் மரணம், இன்று வாழ்கிற மக்களுக்கும் நன்மை அளிக்கிறது. (ரோ. 3:26) ஆகவே, கிறிஸ்துவின் மீட்புவிலை உங்களுக்கு என்ன ஆசீர்வதங்களை அளிக்கும்? பதில் அடுத்த கட்டுரையில்.
[அடிக்குறிப்புகள்]
a அப்போஸ்தலன் பவுல் இங்கு சங்கீதம் 40:6-8-ஐ கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டினார்; அதில், “எனக்காக ஓர் உடலைத் தயார்படுத்தினீர்கள்” என்ற வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. இப்போது கிடைக்கிற பூர்வ எபிரெய வேதாகமங்களின் மொழிபெயர்ப்புகளில் இந்தச் சொற்றொடர் காணப்படுவதில்லை.
b பக்கம் 6, 7-லுள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• கடவுளுடைய நீதி எவ்வாறு சவால்விடப்பட்டது?
• இயேசுவின் ஞானஸ்நானம் எதை அடையாளப்படுத்தியது?
• இயேசுவின் மரணம் எவற்றை நிறைவேற்றியது?
[பக்கம் 9-ன் படம்]
இயேசுவின் ஞானஸ்நானம் எதை அடையாளப்படுத்தியது என்று உங்களுக்குத் தெரியுமா?