கிறிஸ்தவக் கூட்டங்கள் பலப்படுத்துவதாய் இருப்பதில் உங்கள் பங்கு
“நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, . . . எல்லாக் காரியங்களையும் சபையைப் பலப்படுத்தும் விதத்தில் செய்ய வேண்டும்.”—1 கொ. 14:26.
1. ஒன்று கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, கிறிஸ்தவக் கூட்டங்களின் முக்கிய நோக்கம் என்ன?
‘கூட்டம் ரொம்ப அருமையாக இருந்தது!’ ராஜ்ய மன்றத்தில் கூட்டம் முடிந்த பிறகு நீங்களும் இதேபோல் எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா? கண்டிப்பாகச் சொல்லியிருப்பீர்கள்! கிறிஸ்தவக் கூட்டங்கள் உண்மையிலேயே உற்சாகத்தின் ஊற்றாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சொல்லப்போனால், ஆரம்பகால கிறிஸ்தவர்களின் கூட்டங்களைப் போல ஆன்மீக ரீதியில் பலப்படுத்துவதுதான் நம்முடைய கூட்டங்களின் நோக்கமும்கூட. கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில், கூட்டங்களின் குறிக்கோளைப் பற்றி பவுல் விளக்குவதைக் கவனியுங்கள். கூட்டங்களில் ஒவ்வொரு பகுதியும் ‘சபையைப் பலப்படுத்துவதற்காகத்தான்’ நடத்தப்படுகிறது என்பதை 14-ஆம் அதிகாரம் முழுவதிலும் திரும்பத் திரும்ப அவர் குறிப்பிடுகிறார்.—1 கொரிந்தியர் 14:3, 12, 26-ஐ வாசியுங்கள்.a
2. (அ) கூட்டங்கள் பலப்படுத்துவதாய் இருப்பதற்குக் காரணம் என்ன? (ஆ) நாம் என்ன கேள்வியைச் சிந்திக்கப் போகிறோம்?
2 முதலாவதாக, கூட்டங்கள் பலப்படுத்துவதாயும் அறிவொளியூட்டுவதாயும் இருப்பதற்குக் காரணம் என்ன? கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதல் இருப்பதுதான் காரணம். ஆகவே, ஒவ்வொரு கூட்டத்தையும் ஜெபத்துடன் ஆரம்பிக்கிறோம்; யெகோவா தமது சக்தியைப் பொழிந்து கூட்டத்தை ஆசீர்வதிக்கும்படி அவரிடம் உள்ளப்பூர்வமாகக் கேட்கிறோம். என்றாலும், கூட்டங்கள் பலப்படுத்துவதாய் இருக்க சபையார் எல்லாருமே முடிந்தளவு பங்களிக்கலாம். அப்படியானால், ராஜ்ய மன்றத்தில் வாரந்தோறும் நடத்தப்படுகிற கூட்டங்கள் எப்போதும் ஆன்மீகப் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் என்ன சில படிகளை எடுக்கலாம்?
3. கிறிஸ்தவக் கூட்டங்கள் எந்தளவு முக்கியமானவை?
3 இதற்குப் பதில் காண, கூட்டங்களை நடத்துகிறவர்கள் மனதில் வைக்க வேண்டிய சில அம்சங்களை இப்போது ஆராயலாம். கூட்டங்கள் ஊக்கமூட்டுவதாய் அமைய சபையார் எல்லாரும் எப்படிப் பங்களிக்கலாம் என்பதையும் சிந்திக்கலாம். நம் கூட்டங்கள் பரிசுத்தமானவை என்பதால் இவற்றைச் சிந்திப்பது நமக்கு மிகுந்த ஆர்வமூட்டுகிறது. சொல்லப்போனால், கூட்டங்களில் கலந்துகொள்வதும் பங்குகொள்வதும் நம் வழிபாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.—சங். 26:12; 111:1; ஏசா. 66:22, 23.
பைபிள் படிப்புக்கான ஒரு கூட்டம்
4, 5. காவற்கோபுர படிப்பின் நோக்கம் என்ன?
4 வாரந்தோறும் நடத்தப்படுகிற காவற்கோபுர படிப்பிலிருந்து முழுமையாகப் பயனடைய நாம் எல்லாரும் விரும்புகிறோம். ஆகவே, அந்தப் படிப்பின் முக்கிய நோக்கத்தை புரிந்துகொள்வதற்கு காவற்கோபுர பத்திரிகையிலும் அதன் படிப்புக் கட்டுரைகளிலும் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை இப்போது நாம் பார்க்கலாம்.
5 ஜனவரி 15, 2008 காவற்கோபுர படிப்பு இதழ் முதற்கொண்டு அட்டைப் பக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உங்கள் கையிலுள்ள பத்திரிகையின் அட்டைப் படத்தைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். அந்தப் படத்தில், கோபுரத்தின் கீழே பைபிள் திறந்து வைக்கப்பட்டிருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்த அம்சம் காவற்கோபுர படிப்பின் முக்கியத்துவத்தைச் சிறப்பித்துக் காட்டுகிறது. இந்தப் பத்திரிகை பைபிளை ஆழ்ந்து படிக்க உதவுகிறது. ஆம், வாராந்தர காவற்கோபுர படிப்பில் கடவுளுடைய வார்த்தைக்கு ‘விளக்கம்’ அளிக்கப்படுகிறது; நெகேமியாவின் காலத்தில் செய்யப்பட்டது போல் அதற்கு ‘அர்த்தமும் சொல்லப்படுகிறது.’—நெ. 8:8; ஏசா. 54:13.
6. (அ) காவற்கோபுர படிப்பில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது? (ஆ) வசனங்களுக்குப் பக்கத்தில் “வாசியுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தால், எதை நினைவில் வைக்க வேண்டும்?
6 பைபிளே நம்முடைய முக்கியப் பாடப் புத்தகமாக இருப்பதால், காவற்கோபுர படிப்புக் கட்டுரைகளிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. படிப்புக் கட்டுரைகளில் வரும் சில வசனங்களுக்குப் பக்கத்தில் “வாசியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் இந்த வசனங்கள் வாசிக்கப்படும்போது பைபிளைத் திறந்து பார்க்கும்படி நம் எல்லாரிடமும் சொல்லப்படுகிறது. (அப். 17:11) ஏன்? கடவுள் தரும் அறிவுரையை நம்முடைய சொந்த பைபிளில் பார்க்கையில், அது நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். (எபி. 4:12) ஆகவே, எல்லாரும் அந்த வசனங்களை தங்கள் பைபிள்களில் எடுத்துப் பார்ப்பதற்கு வசதியாக, படிப்பை நடத்துபவர் போதுமான நேரத்தை அளிக்க வேண்டும்.
நம் விசுவாசத்தை அறிவிக்க அதிக நேரம் கிடைக்கிறது
7. காவற்கோபுர படிப்பின்போது நமக்கு என்ன வாய்ப்பு கிடைக்கிறது?
7 காவற்கோபுர படிப்புக் கட்டுரைகளில் செய்யப்பட்டுள்ள மற்றொரு மாற்றம் அவற்றின் அளவு. சமீப வருடங்களில், கட்டுரைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதனால், காவற்கோபுர படிப்பில் பாராக்களை வாசிப்பதற்குக் குறைந்த நேரமே ஆகிறது; அதே சமயத்தில் குறிப்புகள் சொல்வதற்கு அதிக நேரம் கிடைக்கிறது. சபையில் தங்களுடைய விசுவாசத்தைப் பல்வேறு வழிகளில் அறிவிக்க இப்போது அநேகருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணமாக, கேள்விக்கு நேரடியான பதிலைச் சொல்ல முடிகிறது; ஒரு பைபிள் வசனத்தைப் பொருத்திக் காட்ட முடிகிறது; பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதால் கிடைக்கும் பயனை விளக்கி, ஒரு சுருக்கமான அனுபவத்தைக் கூற முடிகிறது; இதுபோல பல வழிகளில் விசுவாசத்தை அறிவிக்க அநேகருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. படங்களின் பேரில் குறிப்புகள் சொல்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.—சங்கீதம் 22:22; 35:18; 40:9 ஆகிய வசனங்களை வாசியுங்கள்.
8, 9. காவற்கோபுர படிப்பை நடத்துபவரின் பங்கு என்ன?
8 என்றாலும், பல்வேறு கோணங்களில் பதில் சொல்ல அநேகருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் பதில்கள் சுருக்கமாக இருக்க வேண்டும்; அதோடு, படிப்பை நடத்துபவரும் அடிக்கடி குறிப்பு சொல்வதைத் தவிர்க்க வேண்டும். கூட்டத்திலிருந்து எல்லாருமே பயனடைய படிப்பை நடத்துபவரின் குறிப்புகளும் சபையாரின் குறிப்புகளும் தகுந்த அளவில் இருக்க வேண்டும். இப்படிச் செய்ய நடத்துபவருக்கு எது உதவும்?
9 இதற்கு ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். நன்கு நடத்தப்படுகிற காவற்கோபுர படிப்பை கண்ணுக்கு விருந்தளிக்கும் ஒரு மலர்ச்செண்டுக்கு ஒப்பிடலாம். ஒரு பெரிய மலர்ச்செண்டில் பல்வகை மலர்கள் இருப்பது போல, காவற்கோபுர படிப்பில் சொல்லப்படும் குறிப்புகளும் பல்வகையில் இருக்கும். மேலும், ஒரு மலர்ச்செண்டில் உள்ள மலர்களின் நிறமும் அளவும் வேறுபடுவது போல, ஒவ்வொருவரும் குறிப்பு சொல்லும் விதமும் அளவும் வேறுபடுகின்றன. இதில் நடத்துபவர் வகிக்கும் பங்கு என்ன? அவ்வப்போது அவர் சொல்கிற குறிப்புகள், மலர்ச்செண்டில் ஆங்காங்கே செருகப்பட்டிருக்கும் இலைகளைப் போல இருக்கின்றன. மலர்ச்செண்டில் இலைகள் குறைவாக இருந்தாலும், அவை அந்த மலர்ச்செண்டின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. அவ்வாறே, படிப்பை நடத்துபவர் தன்னுடைய குறிப்புகள் குறைவாகவும் சபையாரின் குறிப்புகள் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைப்பது அவசியம். ஆம், சபையார் சொல்லும் பல வித்தியாசப்பட்ட குறிப்புகளும் நடத்துபவர் அவ்வப்போது சொல்லும் பொருத்தமான குறிப்புகளும் ஒன்றுசேரும்போது அவை அழகிய வார்த்தைகளாலான ஒரு மலர்ச்செண்டைப் போல கூடிவந்திருப்போர் எல்லாருக்குமே மனமகிழ்ச்சியைத் தரும்.
“கடவுளுக்கு எப்போதும் உதடுகளின் கனியைப் பலி செலுத்துவோமாக”
10. பூர்வ கிறிஸ்தவர்கள் சபைக் கூட்டங்களை எவ்வாறு கருதினார்கள்?
10 முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவக் கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பதை 1 கொரிந்தியர் 14:26-33-ல் பவுல் கொடுத்திருக்கும் விளக்கத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். இந்த வசனங்கள் சம்பந்தமாக பைபிள் அறிஞர் ஒருவர் தன் கருத்தை இவ்வாறு எழுதுகிறார்: “பூர்வ கால சபைக் கூட்டத்தைப் பொறுத்ததில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், அங்கு வந்த ஒவ்வொருவரும் அதில் பங்குகொள்வதைப் பாக்கியமாகவும் கடமையாகவும் நினைத்தார்கள். ஒருவர் அங்கு சொல்லப்படுவதை வெறுமனே கேட்டுவிட்டு செல்வதற்காக வரவில்லை; பெற்றுக்கொள்வதற்கு மட்டுமல்ல கொடுப்பதற்கும் வந்தார்.” ஆம், பூர்வ கிறிஸ்தவர்கள் சபைக் கூட்டங்களைத் தங்கள் விசுவாசத்தை அறிவிப்பதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களாகக் கருதினார்கள்.—ரோ. 10:10.
11. (அ) கூட்டங்கள் பலப்படுத்துவதாய் இருக்க எது பெரிதும் உதவுகிறது, ஏன்? (ஆ) நம் பதில்களின் தரத்தைக் கூட்டுவதற்கு உதவும் ஆலோசனைகள் யாவை? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
11 கூட்டங்களில் நம்முடைய விசுவாசத்தை அறிவிப்பது ‘சபையைப் பலப்படுத்துவதற்கு’ பெரிதும் உதவுகிறது. நாம் எத்தனை வருடங்களாகக் கூட்டங்களுக்குச் சென்றுகொண்டிருந்தாலும் சரி, ஒவ்வொரு கூட்டத்திலும் சகோதர சகோதரிகள் சொல்லும் குறிப்புகள் காதுக்கு இனிமையாக இருந்திருப்பதை நீங்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள். வயதான சக கிறிஸ்தவர் ஒருவர் சொல்லும் உள்ளப்பூர்வமான பதில் நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது; அன்பான ஒரு மூப்பர் சொல்லும் அர்த்தம்பொதிந்த குறிப்பு நமக்கு அறிவொளியூட்டுகிறது. யெகோவா மீதுள்ள அன்பினால், ஒரு சிறு பிள்ளை தானே கையை உயர்த்தி பதில் சொல்லும்போது நம் உதட்டில் புன்னகை பூக்கிறது. இவ்வாறு, பதில் சொல்வதன் மூலம் கூட்டங்கள் பலப்படுத்துவதாய் இருக்க நாம் எல்லாருமே பங்களிக்கிறோம்.b
12. (அ) மோசே மற்றும் எரேமியாவின் உதாரணங்களிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? (ஆ) பதில் சொல்லும் விஷயத்தில் ஜெபம் எப்படி உதவுகிறது?
12 ஆனால், கூச்ச சுபாவமுள்ளவர்களுக்குப் பதில் சொல்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். உங்களுக்கு அப்படிப்பட்ட சுபாவம் இருந்தால், இவ்வாறு கூச்சப்படுவது நீங்கள் மட்டுமே அல்ல என்பதை நினைவில் வையுங்கள். சொல்லப்போனால், கடவுளுடைய உண்மை ஊழியர்களான மோசேயும் எரேமியாவும்கூட மற்றவர்களுக்கு முன் பேச தங்களுக்குத் திறமையில்லை என்று சொன்னார்கள். (யாத். 4:10; எரே. 1:6) ஆனாலும், தம்மைக் குறித்துப் புகழ்ந்து பேச யெகோவா அவர்களுக்கு உதவினார்; புகழ்ச்சி பலிகளைச் செலுத்துவதில் உங்களுக்கும் அவர் உதவுவார். (எபிரெயர் 13:15-ஐ வாசியுங்கள்.) பயமின்றி பதில் சொல்ல யெகோவாவின் உதவியை எப்படிப் பெறலாம்? முதலில் நன்கு தயாரியுங்கள். அடுத்து, ராஜ்ய மன்றத்திற்குச் செல்லும்முன் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்; தைரியமாகப் பதில்சொல்ல உதவும்படி கேளுங்கள். (பிலி. 4:6) நீங்கள் ‘யெகோவாவுடைய சித்தத்திற்கு இசைவாக’ கேட்பதால் அதற்கு அவர் நிச்சயம் பதிலளிப்பார்.—1 யோ. 5:14; நீதி. 15:29.
‘பலப்படுத்த, ஊக்கப்படுத்த, ஆறுதல்படுத்த’ உதவும் கூட்டங்கள்
13. (அ) கூட்டங்கள் எவ்விதங்களில் பயனளிப்பதாய் இருக்க வேண்டும்? (ஆ) மூப்பர்களுக்கான ஒரு முக்கியக் கேள்வி என்ன?
13 கூடிவந்திருப்போரை ‘பலப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதும் ஆறுதல்படுத்துவதுமே’ சபைக் கூட்டங்களின் முக்கிய நோக்கம் என பவுல் குறிப்பிடுகிறார்.c (1 கொ. 14:3) இன்று, சகோதர சகோதரிகளை ஊக்கப்படுத்தி, ஆறுதல்படுத்தும் விதமாகக் கிறிஸ்தவ மூப்பர்கள் எவ்வாறு கூட்டங்களில் தங்கள் பாகங்களை நடத்தலாம்? இதற்குப் பதில் காண, இயேசு உயிர்த்தெழுந்து சில நாட்களுக்குப் பிறகு நடத்திய ஒரு கூட்டத்தைப் பற்றிச் சிந்திக்கலாம்.
14. (அ) இயேசு ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு முன் நடந்த சம்பவங்கள் யாவை? (ஆ) “இயேசு சீடர்களின் அருகே சென்று” பேசியபோது அவர்கள் ஏன் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள்?
14 முதலில், அந்தக் கூட்டத்திற்கு முன் நடந்த சம்பவங்களைக் கவனியுங்கள். இயேசுவைக் கொலை செய்வதற்கு முன், அப்போஸ்தலர்கள் ‘அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்’; அதோடு, முன்னறிவிக்கப்பட்டபடி அவர்கள் ‘சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் தன்தன் வீட்டிற்குப் போனார்கள்.’ (மாற். 14:50; யோவா. 16:32) பிறகு உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, மனமுடைந்து போயிருந்த சீடர்களை ஒரு விசேஷித்த கூட்டத்திற்கு அழைத்தார்.d “பதினொரு சீடர்களும் இயேசு சொல்லியிருந்தபடியே கலிலேயாவிலுள்ள மலைக்குப் போனார்கள்.” அங்கு போனதும், “இயேசு சீடர்களின் அருகே சென்று” அவர்களிடம் பேசினார். (மத். 28:10, 16, 18) இப்படி அவரே சென்று சீடர்களிடம் பேசியதால் அவர்கள் எந்தளவு நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள்! சரி, இயேசு என்னவெல்லாம் பேசினார்?
15. (அ) கூட்டத்தில் இயேசு என்ன விஷயங்களைப் பேசினார், ஆனால் என்ன செய்யவில்லை? (ஆ) அந்தக் கூட்டத்திற்குப் பின் அப்போஸ்தலர்கள் எப்படி உணர்ந்தார்கள்?
15 “எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்ற அறிவிப்புடன் இயேசு கூட்டத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு அவர்களுக்குப் பின்வரும் நியமிப்பைக் கொடுத்தார்: ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்.’ பேச்சின் முடிவில் பின்வரும் அன்பான வாக்குறுதியும் அளித்தார்: “எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்.” (மத். 28:18-20) ஆனால், அந்தக் கூட்டத்தில் இயேசு என்ன செய்யவில்லை என்பதைக் கவனித்தீர்களா? அவர் தம் அப்போஸ்தலர்களைக் கடிந்துகொள்ளவில்லை; அவர்களுடைய உள்நோக்கங்களைப் பற்றி விவாதிக்கவோ, ஏதோ பலவீனத்தினால் செய்த குற்றத்தைக் குத்திக்காட்டி அவர்களுடைய மனதை நோகடிக்கவோ இல்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஒரு பொறுப்பான வேலையைக் கொடுப்பதன் மூலம், தமக்கும் தம் தகப்பனுக்கும் அவர்கள்மீது அன்பிருப்பதை உறுதிப்படுத்தினார். இயேசு இப்படிச் செய்ததால் சீடர்கள் எப்படி உணர்ந்தார்கள்? இது அவர்களை அந்தளவு பலப்படுத்தி, ஊக்கப்படுத்தி, ஆறுதல்படுத்தியதால், சில நாட்களிலேயே மீண்டும் ‘கற்பித்து, . . . நற்செய்தியை அறிவிக்க’ தொடங்கினார்கள்.—அப். 5:42.
16. இயேசுவைப் போல இன்று மூப்பர்களும் எவ்வாறு புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் கூட்டங்களை நடத்துகிறார்கள்?
16 இயேசுவைப் போல இன்று மூப்பர்களும், யெகோவா தம் மக்களிடம் பிரிக்க முடியாத அன்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகக் கூட்டங்களைக் கருதுகிறார்கள். (ரோ. 8:38, 39) எனவே, மூப்பர்கள் கூட்டங்களில் தங்கள் பாகங்களைக் கையாளும்போது, சகோதரர்களின் பலவீனங்களை அல்ல, பலங்களைப் பற்றியே பேசுகிறார்கள். சகோதரர்களுடைய உள்நோக்கங்களைப் பற்றி விவாதிப்பதில்லை. மாறாக, யெகோவாமீது அன்பு வைத்து சரியானதைச் செய்ய விரும்புகிறவர்களாகத் தங்கள் சக கிறிஸ்தவர்களைக் கருதுவதை அவர்களுடைய பேச்சு வெளிப்படுத்துகிறது. (1 தெ. 4:1, 9-12) சில சமயங்களில், மூப்பர்கள் சபையைச் சரிப்படுத்துவதற்குப் புத்திமதி கொடுக்க வேண்டியிருக்கலாம்; ஆனால், சிலரை மட்டும் சரிப்படுத்த வேண்டியிருந்தால், பொதுவாக அவர்களுக்குத் தனியாகவே ஆலோசனை கொடுக்கப்படுகிறது. (கலா. 6:1; 2 தீ. 2:24-26) முழு சபையாரையும் பார்த்துப் பேசுகையில், பொருத்தமான சமயங்களில் மூப்பர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள். (ஏசா. 32:2) அவ்வாறு செய்ய மூப்பர்கள் முயலுகையில், கூட்டத்தின் முடிவில் கூடிவந்திருப்போர் எல்லாருமே புத்துணர்ச்சியும் புதுத்தெம்பும் பெறுவார்கள்.—மத். 11:28; அப். 15:32.
ஆறுதலின் உறைவிடம்
17. (அ) நம் காலத்தில், கூட்டங்கள் ஆறுதலின் உறைவிடமாக இருப்பது ஏன் ரொம்பவே முக்கியம்? (ஆ) கூட்டங்கள் பலப்படுத்தும் விதமாய் இருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? (“கூட்டங்கள் உங்களையும் மற்றவர்களையும் பலப்படுத்த பத்து வழிகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
17 சாத்தானுடைய இந்த உலகம் படு மூர்க்கத்தனமாகிவருவதால், ‘சுடும் வெயிலைச் சமாளிக்க வந்த இளந்தென்றல்’ போல சபைக் கூட்டங்கள் நம் அனைவருக்கும் ஆறுதலின் உறைவிடமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். (1 தெ. 5:11) ஒரு சகோதரி, சில வருடங்களுக்கு முன் தானும் தன் கணவரும் பட்ட கஷ்டங்களை எப்படிச் சமாளித்தார் என்பதைச் சொல்கிறார்: “ராஜ்ய மன்றத்தில் இருந்தபோது யெகோவாவின் அரவணைக்கும் கைக்குள் இருப்பதைப் போல நினைத்தோம். சகோதர சகோதரிகள் சூழ அங்கு உட்கார்ந்திருந்த சமயத்தில் எங்களுடைய சுமைகளை எல்லாம் யெகோவாமேல் தூக்கிப்போட முடிந்ததை உணர்ந்தோம்; அதனால் எங்கள் மனசே லேசாகிவிட்டது.” (சங். 55:22) கூட்டங்களில் கலந்துகொள்கிற எல்லாருமே இதுபோன்ற ஊக்குவிப்பையும் ஆறுதலையும் பெற வேண்டும். ஆகவே, கிறிஸ்தவக் கூட்டங்கள் பலப்படுத்தும் விதத்தில் இருப்பதற்கு நம் பங்கைத் தொடர்ந்து செய்வோமாக.
[அடிக்குறிப்புகள்]
a முதல் நூற்றாண்டு கிறிஸ்தவக் கூட்டங்களில் இடம்பெற்ற சில அம்சங்கள் முடிவுக்கு வரும் என முன்னறிவிக்கப்பட்டது. உதாரணமாக, இன்று நாம் ‘வேற்றுமொழி பேசுவதோ,’ ‘தீர்க்கதரிசனம் சொல்வதோ’ இல்லை. (1 கொ. 13:8; 14:5) என்றாலும், இன்று கிறிஸ்தவக் கூட்டங்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதைச் சரிவரப் புரிந்துகொள்ள பவுலின் அறிவுரைகள் நமக்கு உதவுகின்றன.
b நம் பதில்களின் தரத்தைக் கூட்டுவதற்கு உதவும் ஆலோசனைகளை காவற்கோபுரம், செப்டம்பர் 1, 2003, பக்கங்கள் 19-22-ல் பாருங்கள்.
c ‘ஆறுதல்படுத்துவது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை “[ஊக்கப்படுத்துவதைவிட] மிகுந்தளவு கனிவு காட்டுவதை” அர்த்தப்படுத்துகிறது என வைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் ஓல்ட் அண்ட் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் விளக்குகிறது.—யோவான் 11:19-ஐ ஒப்பிடுங்கள்.
d இயேசு “ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்குத் தோன்றினார்” என பிற்பாடு பவுல் குறிப்பிட்ட சந்தர்ப்பமாக இது இருக்கலாம்.—1 கொ. 15:6.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• கிறிஸ்தவக் கூட்டங்கள் எந்தளவு முக்கியமானவை?
• கூட்டங்களில் சொல்லப்படும் பதில்கள், ‘சபையைப் பலப்படுத்துவதற்கு’ எப்படி உதவுகின்றன?
• இயேசு தம் சீடர்களுடன் நடத்திய கூட்டத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
[பக்கம் 22, 23-ன் பெட்டி/ படங்கள்]
கூட்டங்கள் உங்களையும் மற்றவர்களையும் பலப்படுத்த பத்து வழிகள்
முன்னதாகவே தயாரியுங்கள். ராஜ்ய மன்றத்தில் சிந்திக்கவிருக்கும் கட்டுரையை நீங்கள் முன்கூட்டியே படித்தால், கூட்டங்களில் முழு கவனம் செலுத்த முடியும்; அதோடு, சிந்திக்கப்படும் விஷயங்கள் பசுமரத்தாணிபோல் மனதில் ஆழப் பதிந்துவிடும்.
தவறாமல் கலந்துகொள்ளுங்கள். நீங்கள் தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வது முக்கியம்; ஏனெனில், கூடிவருகிற அனைவருக்கும் அது மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்.
நேரத்தோடு செல்லுங்கள். கூட்டங்கள் ஆரம்பமாவதற்கு முன்பே நீங்கள் அங்கு இருந்தால், பாடலிலும் ஜெபத்திலும் பங்குகொள்ள முடியும்; ஏனெனில் இவையும் வழிபாட்டின் முக்கிய அம்சங்கள்.
தேவையானவற்றை எடுத்து வாருங்கள். பைபிளையும் கூட்டத்தில் பயன்படுத்தவிருக்கும் பிரசுரங்களையும் எடுத்து வாருங்கள். அப்போதுதான் அங்கு கலந்தாராயப்படும் விஷயங்களைக் கவனிக்கவும் நன்கு புரிந்துகொள்ளவும் முடியும்.
கவனச்சிதறல்களைத் தவிருங்கள். உதாரணமாக, செல்ஃபோன் மெஸேஜை கூட்டங்களின்போது வாசிக்காதீர்கள். அப்படிச் செய்வதன்மூலம் தனிப்பட்ட விஷயங்கள் உங்களுடைய கவனத்தைச் சிதறடிக்காதபடி பார்த்துக்கொள்கிறீர்கள்.
பங்குகொள்ளுங்கள். நிறையப் பேர் பதில்களைச் சொல்லும்போது நிறையப் பேர் ஊக்கம் பெறுகிறார்கள்; அதோடு, பலருடைய வித்தியாசப்பட்ட குறிப்புகளால் பலப்படுகிறார்கள்.
சுருக்கமாகப் பதில் சொல்லுங்கள். இப்படிச் செய்வதால் பதில் சொல்ல நிறையப் பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
நியமிப்புகளைத் தவறவிடாதீர்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலோ ஊழியக் கூட்டத்திலோ நியமிப்புகள் கொடுக்கப்பட்டால், நன்கு தயாரித்து, முன்கூட்டியே ஒத்திகை பாருங்கள். கொடுக்கப்பட்ட நியமிப்புகளைத் தவறவிடாமல் எப்படியாவது செய்துமுடிக்க முயலுங்கள்.
பங்குபெற்றோரைப் பாராட்டுங்கள். கூட்டத்தில் தங்கள் நியமிப்பைச் செய்தவர்கள் அல்லது பதில் சொன்னவர்கள் எடுத்த முயற்சியைப் பாராட்டுங்கள்.
உரையாடுங்கள். கூட்டத்திற்கு முன்பும் பின்பும், ஒருவரையொருவர் அன்போடு வாழ்த்தி நலம் விசாரியுங்கள், உற்சாகமூட்டும் விதமாக உரையாடுங்கள். இப்படிச் செய்வது, கூட்டங்களில் கலந்துகொள்வதால் கிடைக்கும் சந்தோஷத்தையும் பயன்களையும் இரட்டிப்பாக்கும்.