யெகோவாவின் அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவுங்கள்
பிள்ளைகளுக்குப் புதுப் புது விஷயங்களைத் தெரிந்துகொள்வதென்றால் கொள்ளை ஆசை. முதல் பஸ்கா இரவில், எகிப்திலிருந்த இஸ்ரவேலருடைய பிள்ளைகள் என்னென்ன கேள்விகளைக் கேட்டிருப்பார்கள் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: ‘இந்த ஆட்டுக்குட்டியை ஏன் சாகடிக்க வேண்டும்?’ ‘அப்பா ஏன் இரத்தத்தைக் கதவில் தெளிக்கிறார்?’ ‘நாம் இப்போது எங்கே போகிறோம்?’ இப்படிப்பட்ட கேள்விகளை யெகோவா வரவேற்கிறார்! ஏனென்றால், ‘இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று பிள்ளைகள் உங்களைக் கேட்டால், இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரைச் சாகடித்து நம்முடைய வீடுகளைத் தப்பப் பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்ல வேண்டும்’ என தகப்பன்மார்களுக்கு அவர் கட்டளை கொடுத்திருந்தார். (யாத். 12:24-27) தாம் கொடுத்த ‘கட்டளைகளையும், நியாயங்களையும்’ பற்றி பிள்ளைகள் கேள்வி கேட்கையில் அதற்கு பதிலளிப்பது முக்கியம் என்பதை இஸ்ரவேலப் பெற்றோருக்கு யெகோவா பிற்பாடு நினைப்பூட்டினார்.—உபா. 6:20-25.
உண்மை வழிபாடு சம்பந்தமான கேள்விகளுக்குப் பிள்ளைகள் திருப்தியான பதில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென யெகோவா விரும்பினார். இன்றும்கூட அவர் அதையே விரும்புகிறார். அப்படி பதில்களைத் தெரிந்துகொள்ளும்போது யெகோவாவை நேசிப்பார்கள், கடவுளாகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொள்வார்கள். கடவுள்மீதும் அவருடைய மக்கள்மீதும் பிள்ளைகள் இருதயப்பூர்வமான அன்பை வளர்க்க பெற்றோர் என்ன செய்யலாம்? யெகோவாவின் அமைப்பைப் பற்றியும் அதிலிருந்து கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள உதவலாம். அப்படியென்றால், கடவுளுடைய அமைப்பைப் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லித்தர உதவும் சில வழிகளை இப்போது பார்க்கலாம்.
உங்கள் சபை
நீங்கள் குடும்பமாக கலந்துகொள்கிற சபையைப் பற்றி பிள்ளைகள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படியென்றால், பெற்றோராகிய நீங்கள் பிள்ளைகளை எல்லாக் கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்வது அவசியம். இவ்விதத்தில், இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த கட்டளையை நீங்களும் கடைப்பிடிக்க முடியும். ‘புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் . . . கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, . . . உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும்’ என்று யெகோவா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்.—உபா. 31:12, 13.
பிள்ளைகள் சிசுப் பருவத்திலிருந்தே பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்ள முடியும். “பரிசுத்த எழுத்துக்களை நீ சிசுப் பருவத்திலிருந்தே அறிந்திருக்கிறாய்” என அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவைப் பற்றிச் சொன்னார். (2 தீ. 3:15) கூட்டங்களில் சொல்லப்படும் விஷயங்களை சின்னப் பிள்ளைகள்கூட புரிந்துகொள்கிறார்கள்; பாடல்களையும் மனப்பாடம் செய்கிறார்கள். அங்குதான், பைபிள் மற்றும் பைபிள் பிரசுரங்களைப் பயன்படுத்தவும் கவனமாகக் கையாளவும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கு அடையாளமாக இருக்கும் உண்மையான அன்பு அங்கு இருப்பதை உணர்ந்துகொள்வார்கள். “நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்; நான் உங்கள்மீது அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அப்படிப்பட்ட அன்பை ஒருவர்மீது ஒருவர் காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 13:34, 35) ராஜ்ய மன்றத்தில் பளிச்சென்று தெரியும் கனிவான அன்பும் உண்மையான பாதுகாப்பும் பிள்ளைகளைக் கவர்ந்திழுக்கும்; அதோடு, கூட்டங்களுக்கு தவறாமல் செல்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளவும் உதவும்.
ராஜ்ய மன்றத்திற்குச் சீக்கிரமாகச் செல்வதையும் கூட்டம் முடிந்த பிறகு கொஞ்ச நேரம் அங்கு இருப்பதையும் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்; அப்போது பிள்ளைகள் தங்களுக்கென நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். சக வயதினரோடு மட்டுமே பழக விடுவதற்குப் பதிலாக, எல்லா வயதிலுள்ள சகோதர சகோதரிகளிடமும் அவர்களை அறிமுகப்படுத்தலாம், அல்லவா? வயதானவர்களோடு பழக ஆரம்பிக்கும்போது, அவர்களிடம் அனுபவமும் ஞானமும் பொக்கிஷம்போல் கொட்டிக் கிடப்பதை உங்கள் பிள்ளைகள் தெரிந்துகொள்வார்கள். “கடவுளுக்குப் பயப்படுகிற பயத்தைப் போதித்து வந்த” சகரியா தீர்க்கதரிசி, யூதாவின் ராஜாவான இளம் உசியா நல்வழியில் நடக்க உதவினார்; அதேபோல, இன்று பல வருடங்களாக யெகோவாவைச் சேவிப்பவர்களும் இளைஞர்களுக்கு நல்வழி காட்ட முடியும். (2 நா. 26:1, 4-6 திருத்திய மொழிபெயர்ப்பு) மேலும், ராஜ்ய மன்றத்தில் இருக்கையில் அங்குள்ள நூலகம், அறிவிப்புப் பலகை, பிற அம்சங்கள் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம்.
உலகளாவிய அமைப்பு
உலகளாவிய அமைப்பில் 1,00,000-க்கும் மேலான சபைகள் உள்ளன; அதில் தங்கள் சபையும் ஒன்று என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும். அமைப்பின் அம்சங்கள், அது செயல்படும் விதம் ஆகியவற்றைப் பற்றி அவர்களுக்கு விளக்குங்கள்; அதன் வேலைக்கு பிள்ளைகள் எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பதையும் விளக்குங்கள். வட்டார மாநாடு, மாவட்ட மாநாடு, வட்டாரக் கண்காணியின் சந்திப்பு ஆகியவற்றிற்காக நீங்கள் ஏன் ஆவலோடு காத்திருக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்.—பக்கம் 28-ல் உள்ள “குடும்ப வழிபாட்டின்போது சிந்திக்க வேண்டிய விஷயங்கள்” என்ற பெட்டியைக் காண்க.
உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பயணக் கண்காணிகள், மிஷனரிகள், பெத்தேல் ஊழியர்கள் ஆகியோரையும், முழுநேர சேவையில் உள்ள மற்றவர்களையும் சாப்பாட்டிற்காக உங்கள் வீட்டிற்கு அழையுங்கள். பிள்ளைகளிடம் பேசுவதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்காது என ஒருபோதும் நினைக்காதீர்கள். இயேசு எவ்வாறு பிள்ளைகளைக் கைநீட்டி வரவேற்று அவர்களிடம் பேசினாரோ அவ்வாறே முழுநேர ஊழியர்களும் அவருடைய மாதிரியைப் பின்பற்ற முயலுகிறார்கள். (மாற். 10:13-16) இந்த முழுநேர ஊழியர்கள் சொல்லும் அனுபவங்களைக் கேட்கும்போது, ஊழியத்தில் அவர்கள் பெறும் சந்தோஷத்தைப் பார்க்கும்போது, உங்கள் பிள்ளைகள்கூட முழுநேர சேவை செய்ய இலக்கு வைக்கலாம்.
யெகோவாவின் அமைப்பைப் பற்றி பிள்ளைகள் நன்கு தெரிந்துகொள்ள நீங்கள் வேறென்ன செய்யலாம்? இதோ சில ஆலோசனைகள்: யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தைக் குடும்பமாகச் சிந்திக்கத் திட்டமிடுங்கள். யெகோவாவின் ஊழியர்கள் காட்டிய பக்தியை . . . மனத்தாழ்மையை . . . உண்மைத்தன்மையை . . . அந்தப் புத்தகத்திலிருந்து சிறப்பித்துக் காட்டுங்கள். நற்செய்தியைப் பாரெங்கும் பரப்ப இவர்களை எப்படியெல்லாம் யெகோவா பயன்படுத்தினார் என்பதை விளக்குங்கள். யெகோவாவின் அமைப்பு வெளியிட்ட வீடியோக்களைப் பயன்படுத்துங்கள். கடந்த கால, தற்கால சம்பவங்களிலிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுக்க அவை கைகொடுக்கும், அல்லவா? வசதிப்பட்டால், உங்களுடைய நாட்டிலோ மற்ற நாடுகளிலோ உள்ள கிளை அலுவலகத்தையும் பெத்தேல் இல்லத்தையும் சென்று பாருங்கள். அப்போது, யெகோவாவுடைய அமைப்பு எப்படி உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பாரின் வாயிலாகச் செயல்படுகிறது என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள்; ஏனென்றால், இந்த அடிமை வகுப்பாரின் மூலமே முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு ஆன்மீக உணவையும் வழிநடத்துதலையும் யெகோவா அளித்தார்.—மத். 24:45-47; அப். 15:22-31.
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏற்றார்போல் கற்பியுங்கள்
பிள்ளைகளுக்கு கற்பிக்கையில் இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்குக் கற்பித்த விதத்தை மனதில் வையுங்கள். ஒருமுறை அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “இன்னும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் இப்போது அவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.” (யோவா. 16:12) இயேசு அளவுக்கதிகமான விஷயங்களைச் சொல்லி தம் சீடர்களைத் திணறடிக்கவில்லை. மாறாக, முக்கியமான சத்தியங்களை அவர்களுடைய மனதில் பதிய வைப்பதற்குப் படிப்படியாகக் கற்பித்தார். அதேபோல, உங்கள் பிள்ளைகளுக்கும் நிறைய விஷயங்களைச் சொல்லி அவர்களைத் திணறடிக்காதீர்கள். யெகோவாவின் அமைப்பைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக அதே சமயத்தில், தவறாமல் சொல்லிக் கொடுக்கும்போது அவர்களுடைய ஆர்வம் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்; அதோடு, கிறிஸ்தவச் சபையைப் பற்றி ஆசை ஆசையாகக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவலாம். உங்களுடைய பிள்ளைகள் வளரவளர அவர்கள் ஏற்கெனவே கற்றுக்கொண்ட விஷயங்களோடு இன்னும் அதிகத்தைச் சொல்லிக் கொடுக்கலாம்.
கடவுளோடு உள்ள பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்கு கிறிஸ்தவச் சபை நமக்கு ஒரு தூணாக இருக்கிறது; சபை சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களிலும் பிள்ளைகள் வைராக்கியமாய் ஈடுபட்டால் சாத்தானுடைய உலகத்திலிருந்து வரும் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். (ரோ. 12:2) யெகோவாவின் அமைப்பைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு சந்தோஷமாக உதவுவீர்கள் என்பதில் நாங்கள் நிச்சயமாய் இருக்கிறோம். பிள்ளைகள், யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு நம் அன்புள்ள கடவுளாகிய அவரையும் அவருடைய அமைப்பையும் உண்மையோடு பற்றிக்கொள்வார்களாக.
[பக்கம் 28-ன் பெட்டி/ படம்]
குடும்ப வழிபாட்டின்போது சிந்திக்க வேண்டிய விஷயங்கள்
உங்களுடைய குடும்ப வழிபாட்டின்போது சிந்திக்க யெகோவாவின் அமைப்பு சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் இதோ:
▪ உள்ளூர் சபை உருவான விதத்தைக் கலந்து பேசுங்கள். அது எப்போது, எப்படி உருவானது? எந்தெந்த ராஜ்ய மன்றங்கள் பயன்படுத்தப்பட்டன? பிள்ளைகளின் இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க, சபையில் ரொம்ப காலமாக இருக்கிற ஒருவரை உங்கள் வீட்டிற்கு அழைக்கலாம், அல்லவா?
▪ சபைக் கூட்டங்களும் மாநாடுகளும் ஏன் நடத்தப்படுகின்றன, அவற்றிலிருந்து பிள்ளைகள் எவ்வாறு நன்மையடையலாம் என்பதையெல்லாம் விளக்குங்கள்.
▪ யெகோவாவின் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பள்ளிகளின் நோக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள். இந்தப் பள்ளிகளில் கலந்துகொண்டவர்கள் பெற்றிருக்கிற நல்ல பலன்களை விவரிக்கும் அனுபவங்களைச் சொல்லுங்கள்.
▪ நற்செய்தியைப் பற்றி மக்களுக்குச் சொல்வதில் தவறால் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள இளைஞர்களுக்கு உதவுங்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக்கில் இருக்கிற உலகளாவிய அறிக்கைக்கு அவர்களும் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை விளக்குங்கள்.
▪ யெகோவாவின் அமைப்பில் இளைஞர்கள் பல்வேறு விதமான முழுநேர சேவையில் பங்குகொள்ள முடியும் என்பதைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். இதைக் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில் 10-ஆம் அதிகாரம் உங்களுக்கு உதவும்.
▪ சபையில் சில வழிமுறைகள் ஏன் பின்பற்றப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இளைஞர்களுக்கு உதவுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில்கூட ஏன் யெகோவாவின் அமைப்போடு ஒத்து செயல்பட வேண்டும் என்பதை விளக்குங்கள். மூப்பர்களின் வழிநடத்துதலைப் பின்பற்றி சபையின் ஒழுங்கை எவ்வாறு கட்டிக்காக்கலாம் என்பதையும் அவர்களுக்குச் சொல்லுங்கள்.
[படம்]
பண்டைய இஸ்ரவேலரைப் போலவே இன்றுள்ள பெற்றோரும் யெகோவாவின் அமைப்பைப் பற்றி பிள்ளைகள் கேள்வி கேட்கையில் திருப்திகரமான பதில்களை அளிக்க முயலுகிறார்கள்
[பக்கம் 28-ன் படங்கள்]
நீண்ட காலமாக ஊழியம் செய்வோருடன் நட்பை வளர்த்தால் உங்கள் பிள்ளைகள் நிச்சயம் பயனடைவர்