உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 3/15 பக். 17-20
  • மகிழ்ச்சியில் திளைக்க ...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகிழ்ச்சியில் திளைக்க ...
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘பூர்வ நாட்களை’ அறிவியுங்கள்
  • ‘ஒவ்வோர் உறுப்பும் . . . பணி செய்யும்’ விதத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
  • “அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்”
  • யெகோவாவின் அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • கடவுளுடைய அமைப்பில் பாதுகாப்பாய் இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுகிறீர்களா?
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 3/15 பக். 17-20

மகிழ்ச்சியில் திளைக்க ...

சின்னஞ்சிறிய உயிரணுவிலிருந்து பிரமாண்டமான நட்சத்திர மண்டலங்கள்வரை, அதாவது கொத்துகளாகவோ, பெரிய கொத்துகளாகவோ தொகுதியாகக் காணப்படுகிற நட்சத்திர மண்டலங்கள்வரை படைப்புகள் எல்லாமே ஒழுங்கமைப்பைப் பறைசாற்றுகின்றன. படைப்பாளர் ‘குழப்பத்தின் கடவுளாக இல்லாமல்’ ஒழுங்கின் கடவுளாக இருப்பதால் இதையெல்லாம் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. (1 கொ. 14:33) சொல்லப்போனால், வழிபாட்டிற்காகக் கடவுள் செய்திருக்கிற ஏற்பாடுகளும்கூட நம்மை வியக்க வைக்கின்றன. யெகோவா செய்திருப்பவற்றைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அவர் ஒரு சர்வலோக அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்; இதில் புத்திக்கூர்மைமிக்க தேவதூதர்களும் மனிதர்களும் இருக்கிறார்கள்; சுதந்திரமாய்ச் செயல்படும் உரிமை பெற்ற இவர்கள் உண்மை வழிபாட்டில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். இது அற்புதத்திலும் அற்புதம், அல்லவா?

பூர்வ இஸ்ரவேலில், கடவுளுடைய அமைப்பின் பூமிக்குரிய பகுதியை எருசலேம் பிரதிநிதித்துவம் செய்தது; இங்குதான் யெகோவாவுடைய ஆலயம் இருந்தது, அவரால் நியமிக்கப்பட்ட அரசரும் வசித்தார். இந்தப் பரிசுத்த நகரம் பற்றி பாபிலோனில் சிறைப்பட்டிருந்த ஓர் இஸ்ரவேலன் தன்னுடைய உணர்ச்சிகளைப் பின்வரும் வார்த்தைகளில் வடித்தார்: “நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.”—சங். 137:6.

இன்று நீங்களும் கடவுளுடைய அமைப்பைக் குறித்து அப்படித்தான் உணருகிறார்களா? அதுவே உங்கள் மகிழ்ச்சியின் மகுடமாக இருக்கிறதா? கடவுளுடைய அமைப்பின் பூமிக்குரிய பகுதியின் சரித்திரத்தையும், அது செயல்படும் விதத்தையும் உங்களுடைய பிள்ளைகள் புரிந்திருக்கிறார்களா? யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பதை அவர்கள் உயர்வாய் மதிக்கிறார்களா? (1 பே. 2:17) யெகோவாவின் அமைப்பை உங்கள் பிள்ளைகள் இன்னும் உயர்வாய் மதிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியென்றால் பின்வரும் ஆலோசனைகளை உங்கள் குடும்ப வழிபாட்டில் பயன்படுத்த முயலுங்கள்.

‘பூர்வ நாட்களை’ அறிவியுங்கள்

ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்கு இஸ்ரவேலருடைய குடும்பங்கள் ஒன்றுகூடி வந்தன. அந்தப் பண்டிகையை ஆரம்பித்து வைத்த சமயத்தில் மோசே ஜனங்களிடம் இவ்வாறு சொன்னார்: “பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார் . . . என்று சொல்வாயாக.” (யாத். 13:14, 16) இஸ்ரவேலருடன் யெகோவா செயல்பட்ட விதம் மறக்கப்பட வேண்டிய ஒரு சரித்திரம் அல்ல. இஸ்ரவேல தகப்பன்மார்களில் அநேகர் மோசேயின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள். பல தலைமுறைகள் கடந்த பிறகு ஓர் இஸ்ரவேலன் இவ்வாறு ஜெபம் செய்தார்: “தேவனே எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வ நாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள், எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.”—சங். 44:1.

கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலான யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரம், இன்றுள்ள ஒரு பிள்ளைக்கு “பூர்வ நாட்களில்” நடந்ததைப் போலத் தோன்றலாம். அந்தச் சம்பவங்களை நீங்கள் எப்படி உங்கள் பிள்ளைகளின் கண்முன் தத்ரூபமாகக் கொண்டுவந்து நிறுத்தலாம்? அதற்கு பெற்றோர் சிலர், யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர், இயர்புக் போன்ற ஆங்கில புத்தகங்களையும் நமது பத்திரிகைகளில் வெளிவருகிற வாழ்க்கை சரிதைகளையும் தேவராஜ்ய சரித்திரம் சார்ந்த அறிக்கைகளையும் பயன்படுத்துகிறார்கள்; அதோடு, இன்றுள்ள கடவுளுடைய மக்களைப் பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள புதிய டிவிடி-யையும் பயன்படுத்துகிறார்கள். முன்னாள் சோவியத் யூனியனிலும் நாசி ஜெர்மனியிலும் நம்முடைய சகோதரர்கள் அனுபவித்த சித்திரவதைகளை விளக்குகிற வீடியோக்கள், சோதனைகள் வரும்போது யெகோவாவை எப்படிச் சார்ந்திருக்கலாம் என்பதைக் குடும்பத்தாருக்குக் கற்பிக்கின்றன. இது போன்ற வீடியோக்களையும் உங்களுடைய குடும்ப வழிபாட்டில் பயன்படுத்துங்கள். உத்தமத்தில் நிலைத்திருப்பது சம்பந்தப்பட்ட சவால்களை உங்கள் பிள்ளைகள் ஒருவேளை எதிர்ப்பட்டால் விசுவாசத்தை விட்டுவிலகாதிருக்க இவை அவர்களுக்கு உதவும்.

சிலசமயங்களில், சரித்திரத்தைப் பற்றி பெற்றோர் விலாவாரியாக விளக்குவதைக் கேட்க பிள்ளைகளுக்கு அலுப்புத் தட்டலாம். எனவே, அதில் பிள்ளைகளையும் ஒன்றிப்போகச் செய்யுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் மகனிடம் அவனுக்குப் பிடித்தமான நாடு ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி நீங்கள் சொல்லலாம்; அந்த நாட்டைப் பற்றிய தேவராஜ்ய சரித்திரத்தை ஆராய்ச்சி செய்யும்படி அவனிடம் சொல்லலாம்; பின்னர் அவன் கற்றுத் தெரிந்துகொண்ட விஷயங்கள் சிலவற்றைக் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ளும்படி கேட்கலாம். உங்கள் சபையில் நீண்ட காலமாக யெகோவாவைச் சேவித்து வருபவர்கள் இருக்கலாம்; அவர்களை ஒரு நாள் உங்களுடைய குடும்ப வழிபாட்டில் வந்து கலந்துகொள்ளும்படி அழைக்கலாம். அப்போது உங்கள் மகள் அவர்களிடம் அநேக தகவல்களையும், அவர்களுடைய அனுபவங்களையும் தெரிந்துகொள்ள கேள்விகளைக் கேட்கலாம். அல்லது கிளை அலுவலகக் கட்டுமானப் பணி, ஒரு சர்வதேச மாநாடு, அல்லது வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஃபோனோகிராஃப்பைப் பயன்படுத்தியது போன்று மைல்கல்லாய் அமைந்த தேவராஜ்ய சம்பவங்களை உங்கள் பிள்ளை படமாக வரையலாம்.

‘ஒவ்வோர் உறுப்பும் . . . பணி செய்யும்’ விதத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்

கிறிஸ்தவச் சபையை அப்போஸ்தலன் பவுல் ஓர் உடலுக்கு ஒப்பிட்டார்; “முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசை நார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது” என்று அவர் எழுதினார். (எபே. 4:18, பொது மொழிபெயர்ப்பு) மனித உடல் செயல்படும் விதத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்போது, நம்முடைய படைப்பாளர் மீதுள்ள மதிப்பு பெருகுகிறது, நன்றியுணர்வு அதிகரிக்கிறது. அதே போல், உலகளாவிய சபை செயல்படும் விதத்தை ஆராயும்போது, ‘பற்பல விதங்களில் வெளிப்படுகிற கடவுளுடைய ஞானத்தைப்’ பார்த்து நாம் அசந்துவிடுவோம்.—எபே. 3:10.

பரலோகத்திலும் பூமியிலும் உள்ள தம்முடைய அமைப்பு செயல்படும் விதத்தை யெகோவா விவரிக்கிறார். உதாரணத்திற்கு, முதலாவது அவர் அதை இயேசு கிறிஸ்துவுக்கு வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார்; இயேசு கிறிஸ்துவோ, ‘தம்முடைய தூதரை அனுப்பி தமது அடிமையாகிய யோவானுக்கு அடையாளங்கள் மூலம் அதை வெளிப்படுத்தினார்.’ (வெளி. 1:1, 2) தம்முடைய பரலோக அமைப்பு செயல்படும் விதத்தைக் கடவுள் நமக்கு வெளிப்படுத்துகிறார் என்றால், பூமியிலுள்ள அதன் ‘ஒவ்வோர் உறுப்பும் . . . பணி செய்யும்’ விதத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் என்றல்லவா அர்த்தம்?

உதாரணத்திற்கு, சீக்கிரத்தில் வட்டாரக் கண்காணி உங்கள் சபையைச் சந்திக்க வரப் போகிறார் என்றால், வட்டாரக் கண்காணிகளுடைய பணிகளையும் அவர்கள் பெற்றுள்ள ஆசீர்வாதங்களையும் பற்றி உங்கள் குடும்பத்தாரோடு கலந்துபேசலாம், அல்லவா? அவர்கள் எப்படி நம் ஒவ்வொருவருக்கும் உதவுகிறார்கள்? பின்வரும் கேள்விகளையும்கூட நீங்கள் சிந்திக்கலாம்: வெளி ஊழியத்தை அறிக்கை செய்வது ஏன் முக்கியம்? கடவுளுடைய அமைப்பிற்கு நிதி உதவி எப்படி கிடைக்கிறது? ஆளும் குழு எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது, அது எப்படி ஆன்மீக உணவை அளிக்கிறது?

கடவுளுடைய ஜனங்கள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது, மூன்று வழிகளிலாவது பயனடைகிறோம்: நமக்காகக் கடினமாய்ப் பாடுபடுகிறவர்களிடம் நமக்குள்ள மதிப்பு அதிகரிக்கிறது. (1 தெ. 5:12, 13) தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க நாம் தூண்டப்படுகிறோம். (அப். 16:4, 5) கடைசியாக, முன்நின்று வழிநடத்துகிறவர்கள் பைபிளின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுப்பதையும் ஏற்பாடுகள் செய்வதையும் நாம் பார்க்கும்போது அவர்கள் மீதுள்ள நம்பிக்கை அதிகரிக்கிறது.—எபி. 13:7.

“அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்”

“சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள். பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.” (சங். 48:12, 13) எருசலேமை அருகில் சென்று பார்க்கும்படி இந்தச் சங்கீதக்காரன் இஸ்ரவேலரை ஊக்கப்படுத்தினார். வருடாந்தர பண்டிகைகளுக்காக அந்தப் பரிசுத்த நகரத்திற்குச் சென்று, அதன் பிரமாண்டமான ஆலயத்தைப் பார்த்துவிட்டு வந்த இஸ்ரவேல குடும்பங்கள் அதைப் பற்றி ஆசை ஆசையாகப் பேசிக்கொள்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அதை ‘பின்வரும் சந்ததிக்கு விவரிக்க’ அவர்கள் தூண்டப்பட்டிருக்க வேண்டும்.

சேபா நாட்டு ராணியை எடுத்துக்கொள்ளுங்கள். சாலொமோனின் சீரும்சிறப்புமிக்க ஆட்சியையும் அவர் பெற்றிருந்த அளவற்ற ஞானத்தையும் பற்றிக் கேள்விப்பட்டவற்றை அவள் முதலில் நம்பவில்லை. தான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான் என எது அவளுக்கு உறுதிப்படுத்தியது? “நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை” என்று அவள் சொன்னாள். (2 நா. 9:6) உண்மைதான், நம்முடைய “கண்களால்” காண்பவை நம்மைச் செயல்படத் தூண்டும்.

யெகோவாவுடைய அமைப்பின் வியத்தகு செயல்களை உங்கள் பிள்ளைகளும் தங்கள் “கண்களால்” காண நீங்கள் எப்படி உதவலாம்? உங்கள் வீட்டுக்கு அருகில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் இருக்கிறதா? அப்படியென்றால் அதைப் போய்ப் பார்ப்பதற்கு முயற்சி எடுங்கள். மாண்டி, பெத்தனி என்பவர்களின் உதாரணத்தைக் கவனியுங்கள். தங்கள் நாட்டிலுள்ள பெத்தேலிலிருந்து அவர்கள் சுமார் 1,500 கிலோமீட்டர் (900 மைல்) தூரத்தில் வசித்து வந்தார்கள். இருந்தாலும், அவர்கள் வளர்ந்து வருகையில் அவர்களுடைய பெற்றோர் அடிக்கடி அவர்களை பெத்தேலுக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினார்கள். “பெத்தேலைச் சுற்றுப் பார்ப்பதற்கு முன்பு ‘இது கட்டுப்பாடுமிக்க இடம், வயதானவர்களுக்குத்தான் சரிப்பட்டுவரும்’ என்று நினைத்தோம். ஆனால், யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்து வருகிற இளைஞர்களைச் சந்தித்தோம். யெகோவாவின் அமைப்பு எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைப் புரிந்துகொண்டோம்; ஒவ்வொரு முறையும் நாங்கள் பெத்தேலுக்குப் போய் வந்தபோது யெகோவாவுடன் உள்ள எங்கள் பந்தம் பலப்பட்டது, அவருக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் பிறந்தது” என்று அவர்கள் சொல்கிறார்கள். மாண்டியும் பெத்தனியும் கடவுளுடைய அமைப்பை அருகே சென்று பார்த்ததால், பயனியர் சேவை செய்ய தூண்டப்பட்டார்கள்; தற்காலிக வாலண்டியர்களாக பெத்தேலில் சேவை செய்யும் வாய்ப்பையும் பெற்றார்கள்.

யெகோவாவின் அமைப்பை ‘காண்பதற்கு’ மற்றொரு வழியும் இருக்கிறது; இது பூர்வ இஸ்ரவேலர் அறிந்திராத வழி. சமீப வருடங்களில், கடவுளுடைய ஜனங்கள் அவருடைய அமைப்பின் பல்வேறு அம்சங்களை விவரிக்கிற வீடியோக்களையும் டிவிடி-களையும் ஆங்கிலத்தில் பெற்றிருக்கிறார்கள். அவை: யெகோவாவின் சாட்சிகள்—நற்செய்தியை அறிவிக்க ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள், நம் சகோதரக் கூட்டுறவு, பூமியின் கடைக்கோடிகளுக்கு, தெய்வீக போதனையால் ஒன்றுபட்டிருத்தல். பெத்தேல் அங்கத்தினர்களும் நிவாரண உதவி பணியாளர்களும் மிஷனரிகளும் மாநாடுகளுக்குத் தயாரித்து, ஒழுங்கமைக்கிற சகோதரர்களும் கடினமாய் உழைப்பதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பார்க்கும்போது உலகெங்குமுள்ள சகோதரர்களிடம் உள்ள மதிப்பும் மரியாதையும் உங்கள் மனதில் நிச்சயம் ஓங்கி நிற்கும்.

கடவுளுடைய ஜனங்கள் அடங்கிய ஒவ்வொரு சபையுமே நற்செய்தியை அறிவிப்பதிலும் அந்தந்தப் பகுதியிலுள்ள சகோதரர்களை ஆதரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. என்றாலும், ‘உலகத்திலுள்ள உங்கள் சகோதரர்கள் அனைவரையும்’ நினைத்துப் பார்க்க உங்கள் குடும்பத்தாரோடு நேரத்தை ஒதுக்குங்கள். மகிழ்ச்சியில் திளைக்க காரணம் இருப்பதைப் புரிந்துகொள்ளும்போது, எப்போதும் ‘விசுவாசத்தில் உறுதியாயிருக்க’ அது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உதவும்.—1 பே. 5:9.

[பக்கம் 18-ன் பெட்டி/படம்]

கடவுளுடைய அமைப்பு உங்கள் ஆராய்ச்சிக்கு

யெகோவாவுடைய அமைப்பின் சரித்திரத்தையும் அது செயல்படும் விதத்தையும் பற்றிக் கற்றுக்கொள்வதில் நம் அனைவருக்கும் உதவ ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்படிக் கற்றுக்கொள்ள பின்வரும் கேள்விகள் முதற்படியாய் அமையலாம்:

☞ இன்றைய பயணக் கண்காணிகளின் வேலை எப்போது, எப்படி ஆரம்பமானது?—காவற்கோபுரம், நவம்பர் 15, 1996, பக்கங்கள் 10-15.

☞ 1941 தேவராஜ்ய அசெம்பிளியில் ‘பிள்ளைகள் தினத்தின்’ முக்கியத்துவம் என்ன? —காவற்கோபுரம், ஜூலை 15, 2001, பக்கம் 8.

☞ ஆளும் குழு எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது?—காவற்கோபுரம், மே 15, 2008, பக்கம் 29.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்