யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் இருக்கிறேன்
வர்னன் ஸுப்கோ சொன்னபடி
கனடாவிலுள்ள சஸ்காட் செவன் மாகாணத்தில் ஸ்டெனென் என்ற கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் வளர்ந்தேன். என்னுடைய அப்பா பெயர் ஃப்ரெட், அம்மா பெயர் அடெல்லா. எனக்கு ஆரேல்யா என்ற ஒரு அக்காவும், ஆல்வின், டாரில் என்ற இரண்டு தம்பிகளும், அலெக்ரா என்ற ஒரு தங்கையும் இருக்கிறார்கள். பிள்ளைகளான எங்களை ஆன்மீக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கவனிப்பதற்காக அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு உழைத்தார்கள்; அவர்கள் எங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லிக் கொடுத்ததற்காக இந்நாள் வரைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.
பரலோக நம்பிக்கையுள்ள என் அப்பா வைராக்கியமான சுவிசேஷகராய் இருந்தார். அவர் குடும்பத்தை நடத்துவதற்குக் கடினமாய் உழைத்தபோதிலும், தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று எல்லாருக்கும் தெரியும்படி நடந்துகொண்டார். அவர் சத்தியத்தைப் பற்றியே சதா பேசிக்கொண்டிருப்பார். அவருடைய வைராக்கியமும் தைரியமும் என் மனதில் அழியா முத்திரையைப் பதித்துவிட்டது. “யெகோவாவின் சேவையில் எப்போதும் சுறுசுறுப்பாய் இருந்தால் நிறையப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்” என்று அப்பா என்னிடம் அடிக்கடி சொல்வார்.
ஸ்டெனெனிலும் பக்கத்து ஊர்களிலும் அடிக்கடி தெரு ஊழியம் செய்தோம்.சிலசமயங்களில் அது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் இருந்த ரௌடிகள் எங்களைப் போன்ற சிறுவர்களைக் கேலி செய்தார்கள். ஒருமுறை எனக்கு எட்டு வயதிருக்கையில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுடன் ஒரு தெரு முனையில் நின்றுகொண்டிருந்தபோது இளைஞர் பட்டாளம் என்னை சூழ்ந்துகொண்டது. என் தலையில் இருந்த புது தொப்பியைப் பிடுங்கி, பக்கத்தில் இருந்த கம்பத்தில் மாட்டினார்கள். என்னை அவ்வப்போது கவனித்துக்கொண்டிருந்த வயதான சகோதரர் நடந்ததையெல்லாம் பார்த்தார். நல்லவேளை அவர் என்னிடம் வந்து, “வர்ன், ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார். உடனடியாக அவர்கள் அங்கிருந்து மாயமாய் மறைந்துவிட்டார்கள். அந்த அனுபவம் எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தபோதிலும், ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்; தெரு ஊழியம் செய்யும்போது சிலைபோல ஒரே இடத்தில் நிற்காமல் நடந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். வளர்ந்துவருகிற வயதில் கிடைத்த இப்படிப்பட்ட பயிற்சி, வீட்டுக்குவீடு ஊழியம் செய்வதற்கு தேவையான தைரியத்தையும் எனக்குத் தந்தது.
நானும் ஆல்வினும் மே 1951-ல் ஞானஸ்நானம் எடுத்தோம். அப்போது எனக்கு 13 வயது. சகோதரர் ஜாக் நேத்தன் ஞானஸ்நான பேச்சைக் கொடுத்தார்; யெகோவாவைப் பற்றி ஒரு மாதம்கூட பேசாமலிருந்துவிடக் கூடாது என அவர் உற்சாகப்படுத்தியது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.a எங்களுடைய வீட்டில் எல்லாருமே, பயனியர் சேவையைத்தான் மிகச் சிறந்த வேலையாக எப்போதும் கருதினார்கள். அதனால், நான் 1958-ல் பள்ளி படிப்பை முடித்த கையோடு பயனியர் செய்வதற்காக மானிடோபாவிலுள்ள வின்னிபெக்குக்குச் சென்றேன். எங்களுடைய குடும்பத் தொழிலான மர வேலையைச் செய்வதில் நான் உதவ வேண்டுமென்று அப்பா விரும்பினார்; என்றாலும், முழுநேர சேவை செய்வதற்குத்தான் அப்பாவும் அம்மாவும் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தினார்கள், வின்னிபெக்குக்குச் செல்வதற்கும் உதவினார்கள்.
புதிய வீடும் புதிய பார்ட்னரும்
கியுபெக்கில் சுவிசேஷகர்கள் அதிகம் தேவைப்படுவதால் அங்கு செல்ல முடிந்தவர்களுக்குக் கிளை அலுவலகம் 1959-ல் அழைப்பு விடுத்தது. நான் பயனியர் உழியம் செய்வதற்காக மான்ட்ரீலுக்கு போனேன். எப்பேர்ப்பட்ட மாற்றம் அது! என் வாழ்க்கையில் அது மைல்கல்லாக இருந்தது; நான் பிரெஞ்சு படிக்க ஆரம்பித்தேன், வித்தியாசப்பட்ட நாகரிகத்துக்கும் ஒத்துப்போகக் கற்றுக்கொண்டேன். “எங்க ஊரில் இப்படித்தான் செய்வோம் என சொல்லவே கூடாது” என எங்களுடைய வட்டாரக் கண்காணி என்னிடம் சொன்னார். எனக்கு அது நல்ல ஆலோசனையாகப் பட்டது.—1 கொ. 9:22, 23.
கியுபெக்குக்கு வந்தபோது என்கூட பயனியர் ஊழியம் செய்ய ஒரு பார்ட்னர்கூட இருக்கவில்லை. ஆனால், வின்னிபெக்கில் நான் ஏற்கெனவே சந்தித்த ஷர்லி டர்காட் என்ற இளம் பெண்ணை பிப்ரவரி 1961-ல் கல்யாணம் செய்தபோது அவள் என்னுடைய நிரந்தர பார்ட்னர் ஆகிவிட்டாள். அவளும்கூட யெகோவாவை நேசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளைக் கல்யாணம் செய்த சமயத்தில் காலமெல்லாம் அவள் எனக்குப் பக்கத்துணையாக இருந்து என்னை உற்சாகப்படுத்துவாள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
காஸ்பே தீபகற்பத்தில் பிரசங்கப் பயணம்
எங்களுக்குக் கல்யாணமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கியுபெக்கிலுள்ள ரிமௌஸ்கி என்ற இடத்திற்கு விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டோம். அதைத் தொடர்ந்த இளவேனிற்காலத்தில் கனடாவின் கிழக்கு கடற்கரையோரத்திலுள்ள காஸ்பே தீபகற்பம் முழுவதிலும் பிரசங்கப் பயணத்தைச் செய்யுமாறு கிளை அலுவலகம் எங்களைக் கேட்டுக்கொண்டது. சத்திய விதைகளை முடிந்தளவுக்கு விதைப்பதுதான் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த நியமிப்பு. (பிர. 11:6) நாங்கள் 1,000-க்கும் அதிகமான பத்திரிகைகளையும் கிட்டத்தட்ட 400 புத்தகங்களையும் கொஞ்ச உணவு பொருட்களையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு ஒரு மாத பிரசங்கப் பயணத்திற்காக காரில் கிளம்பினோம். காஸ்பேயிலுள்ள எல்லாக் கிராமங்களுக்கும் சென்று ஒரு வீட்டையும் விடாமல் எல்லா வீடுகளிலும் பிரசங்கித்தோம். சாட்சிகள் வீடு வீடாக வருகிறார்கள் என்றும் அவர்கள் தரும் பிரசுரங்களை வாங்கக் கூடாது என்றும் உள்ளூர் வானொலி நிலையம் மக்களை எச்சரித்தது. ஆனால், அந்த அறிவிப்பை நாங்கள் கொடுத்த பிரசுரங்களுக்கான விளம்பரம் என அநேகர் தவறாகப் புரிந்துகொண்டதால் பிரசுரங்களை வாங்கிக்கொண்டார்கள்.
அந்தக் காலத்தில், கியுபெக்கிலுள்ள சில இடங்களில் சுதந்திரமாகப் பிரசங்கிப்பதற்குப் புதிதாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது; அதனால், போலீஸ் வந்து எங்களைத் தடுத்து நிறுத்துவது சகஜமாக இருந்தது. ஒரு நகரத்தில், நாங்கள் வீடு வீடாகப் பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது இதுதான் நடந்தது. அந்தச் சமயத்தில், ஒரு போலீஸ் அதிகாரி தன்னுடன் காவல் நிலையத்துக்கு வருமாறு எங்களிடம் சொன்னார், நாங்களும் போனோம். நாங்கள் பிரசங்க வேலை செய்வதைத் தடுத்து நிறுத்துவதற்கு அந்த நகர வக்கீல் ஆணையிட்டிருந்தது எனக்குத் தெரிய வந்தது. அன்றைக்கு உயர் அதிகாரி வெளியே போயிருந்ததால், டோரான்டோ கிளை அலுவலகத்திலிருந்து பெற்ற சட்டப்பூர்வ ஆதாரத்துடன் கூடிய கடிதத்தை அந்த வக்கீலிடம் சமர்ப்பித்தேன்; பிரசங்க வேலையைச் செய்ய எங்களுக்கு உரிமையிருப்பதை அக்கடிதம் விளக்கியது. அதை வாசித்த உடனே அந்த வக்கீல், “பாருங்க, இந்த விஷயத்தில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சர்ச் பாதிரிதான் உங்களைப் பிரசங்கிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.” எங்களுடைய வேலை சட்டப்பூர்வமானதுதான் என்பதை மக்களுக்குப் புரியவைப்பதற்காக எங்களை போலீஸ் தடுத்து நிறுத்திய அதே பிராந்தியத்திற்கு போய் திரும்பவும் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம்.
அடுத்த நாள் காலையில், அந்த உயர் அதிகாரியைப் பார்க்கச் சென்றோம்; எங்களை போலீஸ் தடுத்து நிறுத்தியதைக் கேட்டு அவர் ரொம்பவே வருத்தப்பட்டார். அவர் உடனடியாக அந்த வக்கீலிடம் ஃபோனில் எவ்வளவு கோபமாகப் பேசினார் தெரியுமா? ஏதாவது பிரச்சினை வந்தால் ஃபோனில் தன்னிடம் நேரடியாகச் பேசும்படியும் தான் அதைப் பார்த்துக் கொள்வதாகவும் அவர் எங்களிடம் சொன்னார். நாங்கள் அந்த ஊருக்கு புதியவர்கள், பிரெஞ்சு மொழியும் அவ்வளவாய்த் தெரியாது; இருந்தாலும் அங்குள்ள மக்கள் எங்களிடம் அன்பாக நடந்துகொண்டார்கள், எங்களை உபசரித்தார்கள். ஆனால், ‘அவர்கள் என்றாவது ஒருநாள் சத்தியத்தைத் தெரிந்துகொள்வார்களா?’ என்று நாங்கள் யோசித்தோம். பல வருடங்களுக்குப் பின் நாங்கள் காஸ்பேயில் அநேக ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்காக அங்குத் திரும்பி சென்றபோதுதான் இந்த கேள்விக்கான விடை கிடைத்தது. நாங்கள் சாட்சி கொடுத்திருந்த நிறையப் பேர் அப்போது சகோதரர்களாக இருந்ததைத் தெரிந்துகொண்டோம். ஆம், யெகோவாவே சத்திய விதைகளை வளரச் செய்கிறார்.—1 கொ. 3:6, 7.
நாங்கள் பெற்ற செல்வம்
எங்களுடைய மகள் லீசா 1970-ல் பிறந்தாள். யெகோவா கொடுத்த இந்தச் செல்வத்தால் எங்களுடைய சந்தோஷம் இன்னும் அதிகமானது. ராஜ்ய மன்ற கட்டுமானப் பணிகளில் ஷர்லியும் லீசாவும் எனக்கு உதவினார்கள். லீசா பள்ளிப் படிப்பை முடித்ததும் எங்களிடம் வந்து, “நீங்கள் இவ்வளவு காலமாக முழுநேர சேவையில் ஈடுபட முடியாமல் போனது என்னால்தான்; நான் ஒரு பயனியர் ஆகி அதை ஈடுகட்டுவேன்” என்று சொன்னாள். அவள் அதைச் சொல்லி சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இன்னமும் பயனியர் சேவை செய்து வருகிறாள்; இப்போது அவளுடைய கணவர் சில்வேனோடு சேர்ந்து செய்கிறாள். நிறைய சர்வதேச கட்டுமானப் பணிகளில் வேலை செய்வதற்கான பாக்கியமும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. குடும்பமாக எங்களுடைய லட்சியம் என்னவென்றால், எளிமையாக வாழ்வதும் யெகோவாவின் சேவையில் முழுமையாக ஈடுபடுவதுமே. பயனியர் சேவையை ஆரம்பித்தபோது லீசா சொன்ன வார்த்தைகள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. சொல்லப்போனால், 2001–ல் மறுபடியும் முழுநேர ஊழியத்தைத் தொடங்க அவள்தான் என்னைத் ஊக்குவித்தாள்; அது முதற்கொண்டு நான் பயனியராகச் சேவை செய்கிறேன். எதையும் யெகோவாவைச் சார்ந்து செய்வதற்கு பயனியர் சேவை எனக்கு எப்போதும் கற்பிக்கிறது; எளிமையாக அதே சமயத்தில் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்வதற்கும் கற்பிக்கிறது.
கட்டுமானப் பணிக்குத் தேவை —அன்பு, பற்றுறுதி, உண்மைத்தன்மை
எந்தவொரு நியமிப்பையும் ஏற்றுக்கொண்டு அதைச் செய்யத் தயாராய் இருந்தால், அளவிலா ஆசீர்வாதங்களைப் பெறலாம் என்பதை யெகோவா எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். மண்டலக் கட்டடக் குழுவில் சேவை செய்வதும் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து கியுபெக்கிலும் மற்ற இடங்களிலும் கட்டுமானப் பணியில் ஈடுபடுவதும் எனக்குக் கிடைத்த அரும்பெரும் பாக்கியம்.
வாலண்டியர்கள் சிலருக்கு மேடையில் நின்று பேச்சுகளைத் திறம்பட கொடுக்க முடியாவிட்டாலும், ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் அவர்கள் நட்சத்திரங்களைப் போல் ஜொலிக்கிறார்கள். இந்த அன்பான சகோதரர்கள் தங்களுடைய திறமைகளை எல்லாம் வெளிக்கொணர்ந்து உயிரைக் கொடுத்து வேலை செய்கிறார்கள். இதன் விளைவாக, ஓர் அழகிய கட்டிடத்தில் யெகோவாவை வழிபட முடிகிறது.
“ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் வாலண்டியராக இருக்க மிக முக்கியமாக என்ன குணங்கள் தேவைப்படுகின்றன?” என்று அநேகர் என்னிடம் கேட்டதுண்டு. என்னுடைய அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொண்டது இதுதான்: முதலாவது, யெகோவாமீதும் அவருடைய மகன்மீதும் நம் சகோதரர்கள்மீதும் அன்பு வைத்திருப்பது முக்கியம். (1 கொ. 16:14) இரண்டாவது, பற்றுறுதியும் உண்மைத்தன்மையும் அவசியம். சில சமயம் நாம் நினைக்கிறபடி காரியங்கள் நடக்காமல் போகலாம், பெரும்பாலும் அது சகஜம்தான்; அப்போது பற்றுறுதியுள்ள ஒருவர் யெகோவாவுடைய அமைப்பின் ஏற்பாடுகளுக்கே தொடர்ந்து ஆதரவு காட்டுவார். அடுத்தடுத்து வரும் கட்டுமானப் பணிகளிலும் வாலண்டியராகச் சேவை செய்ய உண்மைத்தன்மை அவருக்குக் கைகொடுக்கும்.
யெகோவாவுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்
என் அப்பா 1985-ல் இறந்துவிட்டார்; என்றாலும், யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் இருக்கும்படி அவர் எனக்குக் கொடுத்த ஆலோசனை இன்னும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது. யெகோவாவுடைய அமைப்பின் பாகமான பரலோகத்தில் நியமிப்பைப் பெற்ற மற்றவர்களைப் போல அப்பாவும் சுறுசுறுப்பாகத்தான் இருப்பார். (வெளி. 14:13) அம்மாவுக்கு இப்போது 97 வயது. அவருக்குப் பக்கவாதம் வந்ததால் முன்புபோல் பேச முடியாது, இருந்தாலும் பைபிள் வசனங்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறார். கடிதம் எழுதும்போது சில வசனங்களைக் குறிப்பிடுவார், தொடர்ந்து உண்மையோடு யெகோவாவுக்குச் சேவை செய்யவும் உற்சாகப்படுத்துவார். இப்படிப்பட்ட அன்பான அப்பா அம்மா கிடைத்திருப்பதற்குப் பிள்ளைகளான நாங்கள் எவ்வளவாய் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்!
அதோடு, ஷர்லியை உண்மையுள்ள மனைவியாகவும் பார்ட்னராகவும் தந்ததற்காக யெகோவாவுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். அவளுடைய அம்மா கொடுத்த ஆலோசனையை அவள் மனதில் வைத்திருக்கிறாள். அந்த ஆலோசனை இதுதான்: “கடவுளுடைய சேவையில் வர்ன் ரொம்ப பிஸியாக இருப்பார், அதனால் அவர் மற்றவர்களுடன் நேரம் செலவழிக்க நேரிடும்போது, எரிச்சலடையாமல் அதைக் குறித்துச் சந்தோஷப்பட வேண்டும்.” எங்களுக்கு 49 வருடங்களுக்கு முன் கல்யாணம் ஆனபோது, முதுமையிலும் நாங்கள் ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தோம்; இந்த உலகத்தின் முடிவைத் தப்பிப்பிழைத்தாலும் என்றென்றும் இளமைத் துடிப்புடன் ஒன்றுசேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். ஆம், ‘நம் எஜமானருடைய வேலையில் அதிகமதிகமாய் ஈடுபட்டிருக்கிறோம்.’ (1 கொ. 15:58) யெகோவா எங்களுக்கு எந்தக் குறையும் வைக்காமல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார்.
[அடிக்குறிப்பு]
a சகோதரர் ஜாக் ஹேலிடே நேத்தன் என்பவருடைய வாழ்க்கை சரிதையை காவற்கோபுரம் (ஆங்கிலம்) செப்டம்பர் 1, 1990 பக்கம் 10-14-ல் பார்க்கலாம்.
[பக்கம் 31-ன் படம்]
“குடும்பமாக எங்களுடைய லட்சியம் என்னவென்றால், எளிமையாக வாழ்வதும் யெகோவாவின் சேவையில் முழுமையாக ஈடுபடுவதுமே”