வாழ்க்கை சரிதை
மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்! ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டேன்!!
சின்ன வயதில், ஊழியம் செய்வதற்குப் பயந்தேன். என்னால் செய்ய முடியாது என்று நினைத்த நியமிப்புகள் எல்லாம் வயதாக வயதாக என்னைத் தேடிவந்தன. என்னுடைய பயத்தையெல்லாம் மூட்டைகட்டி வைக்க நிறைய பேர் உதவினார்கள். அவர்களைப் பற்றியும், என்னுடைய 58 வருஷ முழுநேர சேவையில் கிடைத்த ஆசீர்வாதங்களைப் பற்றியும் இப்போது சொல்கிறேன்.
கனடாவைச் சேர்ந்த கியுபெக் நகரத்தில் நான் பிறந்தேன். அந்தப் பகுதியில் ஃபிரெஞ்சு மொழிதான் உள்ளூர் மொழி. என்னுடைய அப்பாவின் பெயர் லூயி, அம்மாவின் பெயர் ஸீலியா. அவர்கள் எனக்கு அன்பை ஊட்டி வளர்த்தார்கள். அப்பா கூச்ச சுபாவம் உள்ளவர். படிப்பது என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம். எழுதுவது என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். பத்திரிகை நிருபராக ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது.
எனக்குக் கிட்டத்தட்ட 12 வயது இருந்தபோது, அப்பாவுடன் வேலை செய்த ரொடால்ஃப் சூசி என்பவரும் அவருடைய நண்பரும் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். அந்தச் சமயத்தில், சாட்சிகளைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. அவர்களுடைய மதத்தின் மீதும் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால், எங்களுடைய கேள்விகளுக்கெல்லாம் பைபிளிலிருந்து அவர்கள் பதில் சொன்னார்கள். அதைப் பார்த்து அசந்துபோனேன். அவர்கள் சொன்ன பதில்கள் நியாயமாக இருந்தன. அப்பா அம்மாவுக்கும் அது ரொம்பப் பிடித்திருந்தது. அதனால், நாங்கள் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டோம்.
கத்தோலிக்க சர்ச்சு நடத்திய ஒரு பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்தேன். பைபிள் படிப்பில் நான் கற்றுக்கொண்ட விஷயங்களைக் கூடபடிக்கிற மாணவர்களிடம் அவ்வப்போது பேசுவேன். கொஞ்ச நாளில், இது என் ஆசிரியர்களின் காதுக்குப் போனது. அந்த ஆசிரியர்கள் குருமார்களாகவும் இருந்தார்கள். நான் சொல்லும் விஷயங்கள் தவறானவை என்று நிரூபிக்க அவர்கள் நினைத்திருந்தால், பைபிளைப் பயன்படுத்தி அதைச் செய்திருக்க வேண்டும்! அதற்குப் பதிலாக, அந்த ஆசிரியர்களில் ஒருவர், ‘நான் எதிர்த்து கேள்வி கேட்பவன்’ என்று வகுப்பில் இருந்த எல்லார் முன்பாகவும் சொன்னார். இது எனக்குக் கஷ்டமாக இருந்தாலும், அதனால் நல்ல பலன் கிடைத்தது. என் பள்ளியில் கற்றுக்கொடுக்கப்பட்ட மத போதனைகள் பைபிளுக்கு எதிரானவை என்பதைப் புரியவைத்தது. இனிமேலும் அந்தப் பள்ளிக்குப் போகக் கூடாது என்று முடிவெடுத்தேன். அப்பா அம்மாவின் அனுமதியோடு வேறொரு பள்ளியில் சேர்ந்தேன்.
ஊழியத்தை ஆசையாகச் செய்ய கற்றுக்கொண்டேன்
நான் தொடர்ந்து பைபிளைப் படித்தாலும், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேற்றம் செய்தேன். ஏனென்றால், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதென்றால் எனக்கு ரொம்பப் பயம்! அந்தச் சமயத்தில், கத்தோலிக்க சர்ச்சுக்கு அதிக செல்வாக்கு இருந்தது. நம்முடைய பிரசங்க வேலையை அது வெறித்தனமாக எதிர்த்தது. கியுபெக்கின் அரசியல் தலைவரான மாரிஸ் டூப்லெசிஸ், சர்ச்சோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவருடைய ஆதரவோடு, ரவுடி கும்பல்கள் யெகோவாவின் சாட்சிகளைத் தாக்கின. ஊழியம் செய்வதற்கு உண்மையிலேயே தைரியம் தேவைப்பட்டது!
ஜான் ரே என்ற சகோதரர், என்னுடைய பயத்தை மூட்டைகட்டி வைக்க உதவினார். ஒன்பதாவது கிலியட் பள்ளியில் அவர் பட்டம் பெற்றவர். அவருக்கு நிறைய அனுபவம் இருந்தாலும், சாந்தமாகவும் மனத்தாழ்மையாகவும் நடந்துகொள்வார். தயக்கமில்லாமல் அவரிடம் பேச முடிந்தது. அவர் எனக்கு நேரடியாக அறிவுரை கொடுத்தது குறைவுதான்; ஆனால், தன் முன்மாதிரியின் மூலம் ஏகப்பட்ட பாடங்களைக் கற்றுக்கொடுத்தார். அவருக்கு ஃபிரெஞ்சு மொழி அவ்வளவாகத் தெரியாததால், ஊழியத்தில் நான் அவருக்கு உதவினேன். அவரோடு பழகியது, யெகோவாவின் சாட்சியாக ஆக வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்க உதவியது. முதன்முதலில் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்து பத்து வருஷங்கள் கழித்து, அதாவது மே 26, 1951-ல், ஞானஸ்நானம் எடுத்தேன்.
வீட்டுக்கு வீடு ஊழியத்தைப் பயமில்லாமல் செய்வதற்கு ஜான் ரேயின் (1) அருமையான முன்மாதிரி எனக்கு (2) உதவியது
கியுபெக்கில் இருந்த சின்ன சபையில் பெரும்பாலானவர்கள் பயனியர்கள்தான்! அவர்களைப் பார்த்து நானும் பயனியராக ஆனேன். அப்போதெல்லாம், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பைபிளை மட்டும்தான் பயன்படுத்துவோம். பிரசுரங்கள் இல்லாததால், பைபிள் வசனங்களை திறமையாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அதனால், வசனங்களை நன்றாகத் தெரிந்துகொள்வதற்குக் கடினமாக முயற்சி செய்தேன். ஆனால், கத்தோலிக்க சர்ச்சின் அங்கீகாரம் இல்லாத எந்த பைபிள்களையும் மக்கள் வாசிக்க விரும்பவில்லை.
1952-ல், எங்கள் சபையிலிருந்த சிம்மோன் பேட்ரி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தேன். அவள் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்துகொண்டிருந்தாள். கல்யாணத்துக்குப் பிறகு நாங்கள் மான்ட்ரீல் என்ற இடத்துக்குக் குடிமாறிப் போனோம். ஒரு வருஷத்துக்குள் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு லிஸ் என்று பெயர் வைத்தோம். கல்யாணத்துக்குக் கொஞ்சம் முன்பு பயனியர் சேவையை நான் நிறுத்தியிருந்தாலும், குடும்பமாக சபை காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதற்காக, வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டோம்.
பயனியர் சேவையை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பிப்பதற்குள் பத்து வருஷங்கள் பறந்துவிட்டன! 1962-ல், மூப்பர்களுக்கான ராஜ்ய ஊழியப் பள்ளிக்குப் போனேன். கனடா பெத்தேலில் ஒரு மாதத்துக்கு அது நடந்தது. அப்போது, காமில் வாலெட் என்ற சகோதரரும் நானும் ஒரே அறையில் தங்கினோம். ஊழியத்தின் மீது அவர் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து மலைத்துப்போனேன். அவருக்குக் கல்யாணமாகி பிள்ளைகளும் இருந்தார்கள். அந்தக் காலத்திலெல்லாம் குடும்பஸ்தர்கள் பயனியர் சேவை செய்வது குதிரைக்கொம்பாக இருந்தது! ஆனால், பயனியராக சேவை செய்ய வேண்டும் என்பதுதான் காமிலின் லட்சியமாக இருந்தது. என்னுடைய சூழ்நிலையைப் பற்றி நன்றாக யோசித்துப்பார்க்கும்படி அவர் சொன்னார். சில மாதங்களிலேயே, என்னால் மறுபடியும் பயனியர் சேவை செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொண்டேன். நான் எடுத்த முடிவு ஞானமானதுதானா என்ற கேள்வி சிலருக்கு இருந்தது. ஆனால், யெகோவாமேல் பாரத்தைப் போட்டுவிட்டு பயனியர் சேவையை ஆரம்பித்தேன்.
மறுபடியும் கியுபெக்குக்கு—விசேஷ பயனியர்களாக!
1964-ல், சிம்மோனும் நானும் எங்கள் சொந்த ஊரான கியுபெக்கில் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். நிறைய வருஷங்கள் அங்கேயே சேவை செய்தோம். அந்தக் காலகட்டத்தில், எதிர்ப்பு கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனாலும், சிலர் இன்னும் எதிர்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
ஒரு சனிக்கிழமை சாயங்காலத்தில், கியுபெக்குக்குப் பக்கத்திலிருந்த செயின்ட்-மரீ என்ற சின்ன ஊரில் ஊழியம் செய்துகொண்டிருந்தேன். அனுமதி இல்லாமல் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ததால், போலீசார் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பிறகு, நீதிபதி பயார்ஜோன் முன்பு என்னை ஆஜர்படுத்தினார்கள். அவரைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படுவார்கள்! ‘உங்க சார்புல யார் வாதாடப்போறாங்க?’ என்று அவர் என்னிடம் கேட்டார். நான் உடனே, ‘கிளென் ஹௌ’a என்று சொன்னேன். அவருடைய பெயரைச் சொன்னதும், அந்த நீதிபதி பதற்றத்தோடு “அய்யய்யோ, அவரா?” என்று கேட்டார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி; பிரபலமான வக்கீல். அந்தக் காலத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய சார்பில் வாதாடுவதில் பேர்போனவர். சீக்கிரத்திலேயே, என்மேல் சுமத்திய குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கியுபெக்கில் நம்முடைய வேலைக்கு எதிர்ப்பு இருந்ததால், கூட்டங்களை நடத்த வாடகைக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை. கார் நிறுத்துகிற ஓர் இடம்தான் கிடைத்தது; அதுவும் அந்த இடத்தைச் சூடாக்கும் வசதி எதுவும் அங்கே இல்லை. அதனால், கடுங்குளிர் மாதங்களில், ஓரளவு கதகதப்பாக இருப்பதற்காக எண்ணெய் மூலம் இயங்குகிற சூடேற்றும் கருவியைச் சகோதரர்கள் பயன்படுத்தினார்கள். கூட்டங்கள் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதைச் சுற்றியும் உட்கார்ந்துகொண்டு, எங்களுடைய அனுபவங்களைச் சொல்லி ஒருவரையொருவர் பலப்படுத்துவோம்.
இத்தனை வருஷங்களில், ஊழியம் இந்தளவுக்கு முன்னேறியிருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. 1960-களில், கோட்நார் பகுதி மற்றும் காஸ்பா தீபகற்பம் அடங்கிய கியுபெக் நகரத்தில் கொஞ்ச சபைகள்தான் இருந்தன. அதுவும், அவை சிறிய சபைகளாக இருந்தன. ஆனால் இன்று, இரண்டுக்கும் அதிகமான வட்டாரங்கள் அங்கே இருக்கின்றன. அழகான ராஜ்ய மன்றங்களும் இந்தப் பகுதிகளில் இருக்கின்றன.
பயணக் கண்காணியாகச் சேவை செய்வதற்கான அழைப்பு
1977-ல் டோரான்டோவில் நடந்த பயணக் கண்காணிகளுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டேன்
1970-ல் வட்டார சேவைக்கான அழைப்பு வந்தது. பிறகு 1973-ல் மாவட்ட சேவை செய்வதற்கான நியமிப்பு கிடைத்தது. அந்தச் சமயங்களில், லார்யா சாம்யூர்,b டேவிட் ஸ்ப்ளேன்c போன்ற திறமையான சகோதரர்களிடமிருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இவர்கள் இரண்டு பேருமே பயணக் கண்காணிகளாகச் சேவை செய்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாநாடு முடிந்த பிறகும் எங்களுடைய கற்பிக்கும் கலையை இன்னும் எப்படி மெருகேற்றலாம் என்பது பற்றி டேவிடும் நானும் பேசிக்கொள்வோம். ஒரு தடவை, “லியோன்ஸ், உங்களோட கடைசி பேச்சை நான் நல்ல ரசிச்சு கேட்டேன், அருமையா இருந்துச்சு. நானா இருந்தா, நீங்க கொடுத்த தகவல்கள வெச்சு மூணு பேச்சுகள கொடுத்திருப்பேன்!” என்று டேவிட் சொன்னார். என்னுடைய பேச்சுகளில் ஏராளமான தகவல்களைக் கொடுப்பது என்னுடைய வழக்கமாக ஆகியிருந்தது. சுருக்கமாகப் பேச பழகிக்கொள்ள வேண்டியிருந்தது.
கிழக்கு கனடாவின் வெவ்வேறு நகரங்களில் சேவை செய்தேன்
வட்டாரக் கண்காணிகளைச் சந்தித்து உற்சாகப்படுத்த வேண்டிய பொறுப்பு மாவட்டக் கண்காணிகளுக்கு இருந்தது. கியுபெக்கிலிருந்த சகோதர சகோதரிகள் நிறைய பேருக்கு என்னை நன்றாகத் தெரியும். அதனால், வட்டாரக் கண்காணிகளோடு நான் சபைகளுக்குப் போகும்போது, சகோதர சகோதரிகள் அடிக்கடி என்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆசைப்பட்டார்கள். அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தாலும், வட்டாரக் கண்காணியோடு செலவிடுவதற்கு போதுமான நேரத்தை ஒதுக்காமல் போய்விட்டேன். ஒரு தடவை, “சகோதரர்களோட சேர்ந்து நீங்க நேரம் செலவிடுறது நல்ல விஷயம் பிரதர். ஆனா, நீங்க என்னை பார்க்க வந்திருக்கீங்க, அத மறந்துடாதீங்க பிரதர். எனக்கும் உற்சாகம் தேவைப்படுது” என்று ஒரு வட்டாரக் கண்காணி சொன்னார். அந்த அன்பான ஆலோசனையிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
1976-ல், கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு துக்க சம்பவம் நடந்தது. என் உயிருக்கு உயிரான மனைவி சிம்மோனின் உடல்நிலை ரொம்ப மோசமாகி, கடைசியில் அவள் இறந்துவிட்டாள். அவள் எனக்கு அருமையான மனைவியாக இருந்தாள்! அவள் சுயநலமாக நடந்துகொண்டதில்லை, யெகோவாமீது ரொம்ப அன்பு வைத்திருந்தாள். ஊழியத்தை மும்முரமாகச் செய்ததால் அவளுடைய இழப்பை என்னால் சமாளிக்க முடிந்தது. அந்த வேதனையான காலகட்டத்தில் யெகோவா என்னைத் தாங்கினார்; அதற்கு அவருக்கு ரொம்ப நன்றி! பிறகு, ஆர்வத்துடிப்போடு பயனியர் சேவை செய்துவந்த கரெலின் எலியட் என்ற சகோதரியைக் கல்யாணம் செய்துகொண்டேன். ஆங்கிலம்தான் அவளுடைய தாய்மொழி. கியுபெக்கில் தேவை அதிகம் இருந்ததால், அங்கே குடிமாறி வந்திருந்தாள். எல்லாராலும் அவளிடம் தயக்கமில்லாமல் பேச முடிந்தது. மற்றவர்கள்மேல் உண்மையான அக்கறை காட்டுவாள். முக்கியமாக, கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அல்லது தனிமை உணர்வால் வாடுகிறவர்கள்மீது அக்கறை காட்டுவாள். வட்டார சேவையில் அவள் எனக்கு உறுதுணையாக இருந்தாள்.
மிக முக்கியமான வருஷம்
ஜனவரி 1978-ல், கியுபெக்கில் நடத்தப்பட்ட முதல் பயனியர் ஊழியப் பள்ளியில் போதனையாளராக நான் நியமிக்கப்பட்டேன். அந்தப் பாடத் திட்டம், மாணவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் புதியதுதான்! அதனால், எனக்கு படபடப்பாக இருந்தது. ஆனால், அனுபவம் நிறைந்த பயனியர்கள் நிறைய பேர் பள்ளியில் இருந்ததால் என்னால் சமாளிக்க முடிந்தது. நான் போதனையாளராக இருந்தாலும், மாணவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
மான்ட்ரீல் நகரத்திலிருக்கிற ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 1978-ல் “வெற்றியுள்ள விசுவாசம்” என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடந்தது. கியுபெக்கில் இன்றுவரை நடந்த மாநாடுகளிலேயே அதுதான் பெரிய மாநாடு! மொத்தம் 80,000 பேர் வந்திருந்தார்கள்!! அந்த மாநாட்டில், செய்தித் தொடர்பு இலாகாவில் நான் சேவை செய்தேன். பத்திரிகையாளர்கள் நிறைய பேரிடம் பேசினேன். நம்மைப் பற்றிய நல்ல விஷயங்களை அவர்கள் எழுதினார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. டிவியிலும் ரேடியோ நிகழ்ச்சிகளிலும் எங்களைப் பேட்டி எடுத்தார்கள். மொத்த நிகழ்ச்சி 20 மணிநேரத்துக்கும் அதிகமாக இருக்கும்! நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினார்கள். பிரமாண்டமான விதத்தில் சாட்சி கொடுக்கப்பட்டது!
வேறொரு புதிய நியமிப்பு
ஞானஸ்நானம் எடுத்ததிலிருந்தே பிரெஞ்சு மொழி சபைகள் இருக்கிற பகுதிகளில்தான் சேவை செய்துவந்தேன். ஆனால், 1996-ல் என்னுடைய சேவையில் மிகப் பெரிய ஒரு மாற்றம் வந்தது. டோரான்டோ பகுதியிலிருந்த ஆங்கில மொழி சபைகளுக்கு மாவட்டக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன்! இந்தப் பொறுப்பைச் செய்வதற்கு எனக்குத் தகுதியில்லை என்று நினைத்தேன். எனக்கு சரளமாக ஆங்கிலம் பேச வராததால், ஆங்கிலத்தில் பேச்சு கொடுப்பதை நினைத்துப் பயந்தேன். அடிக்கடி ஜெபம் செய்தேன், யெகோவாவை முழுமையாக நம்பியிருந்தேன்.
ஆரம்பத்தில் நான் பயந்தாலும், டோரான்டோ நகர பகுதிகளில் இரண்டு வருஷங்களாகச் செய்த சேவை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஆங்கிலத்தில் தேறுவதற்கு கரெலின் பொறுமையாக உதவினாள். சகோதர சகோதரிகளும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள், உற்சாகம் தந்தார்கள். சீக்கிரத்தில் எங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.
வார இறுதியில் நடக்கிற வட்டார மாநாடுகளுக்குத் தயாராவதற்கு நிறைய வேலைகளை நான் செய்ய வேண்டியிருக்கும். இருந்தாலும், வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வேன். ‘மாநாடு நடக்கிறதால ஏகப்பட்ட வேலைகள் இருக்குமே. எதுக்கு இப்ப ஊழியத்துக்கு போகணும்?’ என்று சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், ஊழியத்தில் பேசுவது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. இன்றும் அப்படித்தான்! ஊழியத்துக்குப் போய்விட்டு வரும்போது கிடைக்கிற சந்தோஷமே தனிதான்!!
1998-ல், மான்ட்ரீலில் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். விசேஷ பொது ஊழியத்தை ஒழுங்கமைக்கும் வேலைகளையும் பல வருஷங்களாக செய்துவந்தேன். அதோடு, நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களைப் போக்குவதற்காக, ஊடகங்களோடு சேர்ந்தும் வேலை செய்துவந்தேன். சமீபத்தில், வெளிநாட்டிலிருந்து நிறைய பேர் கனடாவுக்கு வந்திருக்கிறார்கள். பைபிளைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்கிறது. இப்போது, கரெலினும் நானும் அவர்களுக்குச் சந்தோஷமாகப் பிரசங்கிக்கிறோம்.
என்னுடைய மனைவி கரெலினோடு
நான் ஞானஸ்நானம் எடுத்து 68 வருஷங்கள் ஆகின்றன. இத்தனை வருஷங்களாக யெகோவா என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார். ஊழியத்தைச் சந்தோஷமாகச் செய்வதற்குக் கற்றுக்கொண்டேன், சத்தியத்தைத் தெரிந்துகொள்ள நிறைய பேருக்கு உதவினேன். இதையெல்லாம் நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய மகள் லிஸும் மருமகனும், தங்கள் பிள்ளைகள் வளர்ந்த பிறகு பயனியர் சேவையை ஆரம்பித்தார்கள். இன்றுவரை அவள் ஆர்வமாக ஊழியம் செய்வதைப் பார்க்கும்போது என் மனதுக்கு இதமாக இருக்கிறது. யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும், வெவ்வேறு விதமான நியமிப்புகளைச் செய்யவும் சகோதர சகோதரிகள் எனக்கு உதவியிருக்கிறார்கள். அவர்களுடைய நல்ல முன்மாதிரியும், ஞானமான ஆலோசனைகளும் பெரிய உதவியாக இருந்தன. அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நம்முடைய நியமிப்பை உண்மையோடு செய்ய வேண்டுமென்றால், கடவுளுடைய சக்தியை நம்பியிருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டேன். (சங். 51:11) நான் எப்போதும் யெகோவாவுக்கு நன்றி சொல்வேன். ஏனென்றால், அவருடைய பெயரைப் புகழ்கிற பாக்கியத்தை எனக்குத் தந்திருக்கிறார்!—சங். 54:6.
a சகோதரர் டபிள்யு. கிளென் ஹௌவின் வாழ்க்கை சரிதை, ஏப்ரல் 22, 2000 விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்தது. அதன் தலைப்பு: “இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.”
b சகோதரர் லார்யா சாம்யூரின் வாழ்க்கை சரிதையை நவம்பர் 15, 1976 காவற்கோபுரத்தில் (ஆங்கிலம்) பாருங்கள்.
c சகோதரர் டேவிட் ஸ்ப்ளேன் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவில் சேவை செய்கிறார்.