“மக்களின் இதயத்தைச் சென்றெட்ட இது எனக்கு உதவுகிறது”
தெற்கு பிரேசிலைச் சேர்ந்த ஒரு நகரம்தான் போர்டோ அலெக்ரே. சில காலத்திற்கு முன்பு, அங்கு சமூக பிரச்சினைகளைப் பற்றிய சர்வதேச மாநாடு ஒன்று நடந்தது. 135 நாடுகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்துகொண்டனர். போர்டோ அலெக்ரேயிலுள்ள ஒரு சபையைச் சேர்ந்த சில சாட்சிகள், மாநாட்டின் ஒவ்வொரு நாள் இடைவேளையிலும் அங்கிருந்த வெளிநாட்டவர் பலரைச் சந்தித்து, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பைபிள் செய்தியை பேசினார்கள். வேற்று மொழி பேசுபவர்களிடம் இந்தச் செய்தியைச் சொல்ல எது அவர்களுக்கு உதவியது?
எலிசபெத் என்ற பயனியர் இவ்வாறு சொல்கிறார்: “சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறு புத்தகத்தைப் பயன்படுத்தினோம். அங்கு வந்திருந்தவர்களில் அநேகர் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை ஒரு தடவைக்கூட கேட்டதே இல்லை, ஆனால் நாங்கள் சொன்ன செய்திக்கு அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தியா, இஸ்ரேல், சீனா, நைஜீரியா, பிரான்சு, பொலிவியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களிடம் நாங்கள் பேசினோம். சிலரிடம் அவர்களுடைய சொந்த மொழியில் பிரசுரங்களைக் கொடுத்தபோது அதைச் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்கள்.”
மெக்சிகோவைச் சேர்ந்த ராவுல் என்ற பயனியரும்கூட இந்தச் சிறு புத்தகத்தைப் பயன்படுத்தி நல்ல பலன்களைக் காண்கிறார். ஒரு சமயம், 80 வயதுள்ள அரபிய நாட்டவரை ராவுல் சந்தித்தார்; சமீபத்தில்தான் அவர் தன் மனைவியை மரணத்தில் பறிகொடுத்திருந்தார். அவர், இந்தச் சிறு புத்தகத்திலிருக்கிற நற்செய்தியை அரபிய மொழியில் வாசித்தபிறகு ஆனந்தக் கண்ணீர் விட்டார். ஏன்? தன்னுடைய தாய்மொழியில் வெளிப்படுத்துதல் 21:3, 4-லிருந்து இனி மரணம் இருக்காது என்ற கடவுளுடைய வாக்குறுதியை வாசித்தது அவருடைய நெஞ்சைத் தொட்டது. மற்றொரு சமயம், சந்தர்ப்ப சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தபோது போர்ச்சுக்கல் மொழி பேசும் ஒருவரை ராவுல் சந்தித்தார். அவரும்கூட தன் மகனை மரணத்தில் பறிகொடுத்திருந்தார். இந்தச் சிறு புத்தகத்தில் போர்ச்சுக்கல் மொழியில் எழுதப்பட்டிருந்த பக்கத்தை ராவுல் அவரிடம் காட்டி அதை வாசிக்கும்படி சொன்னார். அதை வாசித்த பிறகு, பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னார்; பைபிள் படிப்புக்கும் ஒத்துக்கொண்டார்.
அர்மீனியன், ஆங்கிலம், கொரியன், சைனீஸ், பிரெஞ்சு, பெர்சியன், மிக்ஸி, ரஷ்யன், ஜெர்மன், ஸாப்பட்டெக், ஹிந்தி ஆகிய மொழிகளைப் பேசியவர்களிடம் சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறு புத்தகத்தைப் பயன்படுத்தி ராவுல் சாட்சி கொடுத்திருக்கிறார். “ஊழியத்தில் இந்தச் சிறு புத்தகத்தைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்துகொண்டேன். அவர்களுடைய மொழியை நான் பேசாவிட்டாலும்கூட மக்களின் இதயத்தைச் சென்றெட்ட இது எனக்கு உதவுகிறது” என்று அவர் சொல்கிறார்.
அநேகர் இப்போது தங்கள் நாடுகளிலிருந்து வேறு நாடுகளுக்குச் செல்வதாலும் அங்கேயே வாழ்வதாலும், வேற்று மொழி பேசுபவர்களைச் சந்திக்க நமக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்களிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைச் சொல்ல சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறு புத்தகம் நமக்கு உதவும். அந்தச் சிறு புத்தகத்தை எப்போதும் உங்கள் பையில் வைத்திருக்கிறீர்களா?
[பக்கம் 32-ன் படங்கள்]
மக்களின் இதயத்தைச் சென்றெட்ட ராவுலுக்கு இந்தச் சிறு புத்தகம் உதவுகிறது