நாம் உத்தமத்தில் நடப்போம்!
“நானோ என் உத்தமத்திலே நடப்பேன்.”—சங். 26:11.
1, 2. யோபு தன் உத்தமத்தைப் பற்றி என்ன சொன்னார், யோபு 31-ஆம் அதிகாரத்தில் யோபுவைப் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
பண்டையக் காலங்களில் பொருள்கள் பெரும்பாலும் தராசில் நிறுக்கப்பட்டன. அதில் நிறுக்க வேண்டிய பொருள் ஒரு தட்டிலும் நிறைகல் மற்றொரு தட்டிலும் வைக்கப்படும். கடவுளுடைய மக்கள் சரியான தராசுகளையும் நிறைகற்களையும் பயன்படுத்த வேண்டியிருந்தது.—நீதி. 11:1.
2 சாத்தானுடைய தாக்குதலுக்குத் தேவபக்தியுள்ள யோபு இரையானபோது இவ்வாறு சொன்னார்: “சுமுத்திரையான [அதாவது, சரியான] தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.” (யோபு 31:6) உத்தமருக்குச் சோதனையாய் இருக்கும் நிறையச் சூழ்நிலைகளைப் பற்றி அவர் குறிப்பிட்டார். ஆனால், தனக்கு வந்த சோதனையில் அவர் வெற்றிகண்டார்; இதை யோபு 31-ஆம் அதிகாரத்திலுள்ள பதிவிலிருந்து தெரிந்துகொள்கிறோம். யோபுவின் சிறந்த முன்மாதிரி அவரைப் போல செயல்பட நம்மைத் தூண்டும்; அதோடு, சங்கீதக்காரனாகிய தாவீதைப் போல “நானோ என் உத்தமத்திலே நடப்பேன்” என்று உறுதியோடு சொல்லவும் தூண்டும்.—சங். 26:11.
3. பெரிய விஷயத்திலும் சரி சிறிய விஷயத்திலும் சரி, நாம் உண்மையாய் இருப்பது ஏன் முக்கியம்?
3 யோபு மிகக் கடுமையாகச் சோதிக்கப்பட்டபோதிலும் கடவுளுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். யோபுவுக்கு வந்த பயங்கரமான சோதனைகளையும் அவர் உண்மையாய் நடந்துகொண்ட விதத்தையும் கண்டு சிலர் அவரை மாமனிதராகச் சித்தரிக்கலாம். யோபுவுக்கு வந்ததைப் போன்ற சோதனைகள் நமக்கு வருவதில்லை. இருந்தாலும், நாம் உத்தமர்கள் என்பதையும் கடவுளின் பேரரசாட்சியை ஆதரிப்பவர்கள் என்பதையும் காட்டுவதற்கு, பெரிய விஷயத்திலும் சரி சிறிய விஷயத்திலும் சரி, உண்மையாய் இருக்க வேண்டும்.—லூக்கா 16:10-ஐ வாசியுங்கள்.
ஒழுக்க விஷயத்தில் உத்தமம் மிக முக்கியம்
4, 5. உத்தமரான யோபு என்ன செய்யவில்லை?
4 யெகோவாவுக்கு உத்தமமாய் இருக்க, யோபுவைப் போல ஒழுக்க நெறிகளை நாம் உறுதியாய்க் கடைப்பிடிக்க வேண்டும். “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? . . . என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்த்ததுண்டானால், அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனிதர் அவள்மேல் சாய்வார்களாக” என்று யோபு சொன்னார்.—யோபு 31:1, 9, 10.
5 கடவுளுக்கு உத்தமமாய் நடக்க யோபு திடத் தீர்மானமாய் இருந்ததால், எந்தவொரு பெண்ணையும் தவறான எண்ணத்தோடு பார்க்கவில்லை. அவர் திருமணமானவராக இருந்ததால், மணமாகாத எந்தப் பெண்ணுடனும் சரசமாடவில்லை, அல்லது மற்றவரின் மனைவியுடன் காதல் வயப்படவில்லை. மலைப் பிரசங்கத்தில், ஒழுக்கம் சம்பந்தமாக ஒரு முக்கியக் குறிப்பை, உத்தமர் ஒருவர் மனதில் வைக்க வேண்டிய ஒரு குறிப்பை, இயேசு சொன்னார்.—மத்தேயு 5:27, 28-ஐ வாசியுங்கள்.
ஒருபோதும் நேர்மையற்ற வழிகளை நாடாதீர்கள்
6, 7. (அ) யோபுவின் விஷயத்தில் பார்த்தது போல நாம் உத்தமர்களா என்பதைக் கண்டறிய கடவுள் எதைப் பயன்படுத்துகிறார்? (ஆ) நாம் நேர்மையற்றவராகவோ ஏமாற்றுபவராகவோ ஏன் இருக்கக் கூடாது?
6 மற்றவர்கள் நம்மை உத்தமராகக் கருத வேண்டுமென்றால், நேர்மையற்ற வழிகளை நாடக்கூடாது. (நீதிமொழிகள் 3:31-33-ஐ வாசியுங்கள்.) “நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடு செய்யத் தீவிரித்ததோ என்று, சுமுத்திரையான [அதாவது, சரியான] தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக” என்று யோபு சொன்னார். (யோபு 31:5, 6) எல்லா மனிதரையும் யெகோவா ‘சரியான தராசிலே’ நிறுத்துப் பார்க்கிறார். நாம் உத்தமர்களா என்பதைக் கண்டறிய யெகோவா தமது பரிபூரண நீதி தராசைப் பயன்படுத்துகிறார் என்பது யோபுவின் விஷயத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
7 நாம் நேர்மையற்றவராகவோ ஏமாற்றுபவராகவோ இருந்தால் கடவுளுக்கு உத்தமத்தில் நிலைத்திருக்க முடியாது. உத்தமர்கள் ‘மறைவாகச் செய்யப்படும் வெட்கக்கேடான காரியங்களை ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்’; அதோடு, “தந்திரமாய் நடக்காமலும்” இருக்கிறார்கள். (2 கொ. 4:1, 2) ஆனால், சக கிறிஸ்தவர் ஒருவர் கடவுளுடைய உதவியை நாடும் அளவுக்கு நம்முடைய பேச்சோ செயலோ நேர்மையற்றதாக இருந்தால் என்ன செய்வது? அது நமக்கு எவ்வளவு பெரிய கேடு! சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபட நாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.” (சங். 120:1, 2) நாம் உண்மையிலேயே உத்தமர்களா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகக் கடவுள் நம்முடைய ‘இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதிக்கிறார்,’ அதாவது நம் உள்ளத்தைப் பார்க்கிறார் என்பதை நினைவில் வைப்பது நல்லது.—சங். 7:8, 9.
மற்றவர்களிடம் நடந்துகொள்வதில் முன்மாதிரியாக இருங்கள்
8. மற்றவர்களிடம் யோபு எப்படி நடந்துகொண்டார்?
8 நாம் உத்தமத்திலே நிலைத்திருப்பதற்கு, யோபுவைப் போல மற்றவர்களிடம் நீதியோடும் மனத்தாழ்மையோடும் அக்கறையோடும் நடந்துகொள்ள வேண்டும். “என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டை பண்ணியிருந்தால், தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன். தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?” என்று யோபு சொன்னார்.—யோபு 31:13-15.
9. யோபு தன் வேலைக்காரர்களிடம் எப்படி நடந்துகொண்டார், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
9 யோபுவின் நாட்களில் வழக்குகளைக் கையாள சிக்கலான முறைகள் எதுவும் இருக்கவில்லை. வழக்குகள் முறைப்படி தீர்க்கப்பட்டன; அதனால், அடிமைகள்கூட வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள முடிந்தது. யோபு தன் வேலைக்காரர்களிடம் நீதியுடனும் இரக்கத்துடனும் நடந்துகொண்டதால், அவருக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் வழக்காடவில்லை. உத்தமத்தில் நடப்பதற்கு நாம் இப்படிப்பட்ட குணங்களை வெளிக்காட்ட வேண்டும், முக்கியமாக நாம் மூப்பர்களாக இருந்தால் இக்குணங்களை வெளிக்காட்ட வேண்டும்.
தாராளமாய்க் கொடுங்கள், பேராசைப் படாதீர்கள்
10, 11. (அ) யோபு தாராளமாய் மற்றவர்களுக்குக் கொடுத்து உதவினார் என்று நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) யோபு 31:16-25-லுள்ள வார்த்தைகள் என்ன பைபிள் ஆலோசனையை நமக்கு நினைப்பூட்டுகின்றன?
10 யோபு சுயநலம் பிடித்தவராகவோ பேராசை பிடித்தவராகவோ இருக்கவில்லை; மாறாக, தாராளமாய்க் கொடுப்பவராயும் உதவிக்கரம் நீட்டுபவராயும் இருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “விதவையின் கண்களைப் பூத்துப்போகப் பண்ணி, தாய்தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? . . . ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்துபோகிறதை [பார்த்துக்கொண்டு இருந்ததுண்டோ?] . . . ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால், என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக.” அதோடு, அவர் தங்கத்தைப் பார்த்து “நீ என் ஆதரவு!” என்று சொல்லியிருந்தால் உத்தம சீலராக இருந்திருக்க முடியாது.—யோபு 31:16-25.
11 கவிதை நடையிலான இந்த வார்த்தைகள், யாக்கோபு பின்வருமாறு சொன்னதை நமக்கு நினைப்பூட்டலாம்: “துன்பப்படுகிற அநாதைகளையும் விதவைகளையும் கவனித்துக்கொள்வதும், இந்த உலகத்தால் கறைபடாதபடி நம்மைக் காத்துக்கொள்வதுமே நம் தகப்பனாகிய கடவுளுடைய பார்வையில் சுத்தமான, மாசில்லாத வணக்க முறையாகும்.” (யாக். 1:27) இயேசு கொடுத்த இந்த எச்சரிப்பையும் நினைவுப்படுத்திப் பார்க்கலாம்: “விழித்திருங்கள், எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது.” பிறகு அவர், “கடவுளுடைய பார்வையில் செல்வந்தனாக இல்லாமல்” இறந்துபோன, பேராசை பிடித்த ஒரு செல்வந்தனைப் பற்றிய உவமையைச் சொன்னார். (லூக். 12:15-21) நாம் உத்தமர்களாய் இருக்க வேண்டுமென்றால், பேராசை எனும் பாவ வலையில் விழுந்துவிடக்கூடாது. பேராசை உருவ வழிபாட்டிற்குச் சமம்; ஏனென்றால், ஒரு பொருளின் மீதுள்ள கட்டுக்கடங்கா பேராசையினால் ஒருவருடைய கவனம் யெகோவாவிடமிருந்து திசைதிரும்பி விடும்போது அது அவருக்கு வழிபாட்டிற்குரிய உருவச்சிலை ஆகிவிடுகிறது. (கொலோ. 3:5) உத்தமத்தன்மையும் பேராசையும் இரு துருவங்கள்!
உண்மை வழிபாட்டை விட்டுவிடாதீர்கள்
12, 13. உருவ வழிபாட்டைத் தவிர்ப்பதில் யோபு என்ன முன்மாதிரி வைத்தார்?
12 உத்தமர்கள் தூய வழிபாட்டிலிருந்து விலக மாட்டார்கள். யோபு அப்படிச் செய்யவில்லை, அவரே இவ்வாறு சொன்னார்: “சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும், நான் அதை நோக்கி: என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால், இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.”—யோபு 31:26-28.
13 யோபு உயிரற்ற பொருள்களை வழிபடவில்லை. வானிலுள்ள சந்திரன் போன்றவற்றைப் பார்த்து யோபுவின் மனம் இரகசியமாக மயங்கியிருந்தால், உருவ வழிபாட்டுக்குச் சமமாக அவருடைய வாய் ‘அவரது கையை முத்தி செய்திருந்தால்,’ அவர் கடவுளை மறுதலிப்பவரும் உருவ வழிபாட்டில் ஈடுபடுபவருமாய் இருந்திருப்பார். (உபா. 4:15, 19) கடவுளுக்கு உத்தமமாய் நிலைத்திருப்பதற்கு, எல்லா விதமான உருவ வழிபாட்டையும் நாம் தவிர்க்க வேண்டும்.—1 யோவான் 5:21-ஐ வாசியுங்கள்.
பழிவாங்காதீர்கள், பாசாங்கு செய்யாதீர்கள்
14. யோபு வன்மம் கொண்டவராக இருக்கவில்லை என்று நாம் எப்படிச் சொல்லலாம்?
14 யோபு வன்மம் கொண்டவராகவோ கொடுமைக்காரராகவோ இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் உத்தமத்தில் நிலைத்திருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். “என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ? அவன் ஜீவனுக்குச் சாபத்தைக் கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை” என்று அவரே சொன்னார்.—யோபு 31:29, 30.
15. நம்மைப் பகைப்பவர்கள் கஷ்டப்படுகையில் நாம் சந்தோஷப்படுவது ஏன் தவறு?
15 உத்தமரான யோபு தன்னைப் பகைத்தவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து ஒருபோதும் சந்தோஷப்படவில்லை. “உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக. கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்” என ஒரு நீதிமொழி எச்சரிக்கிறது. (நீதி. 24:17, 18) யெகோவாவால் நம் இருதயத்தைப் பார்க்க முடியும் என்பதால், மற்றவர்கள் கஷ்டப்படும்போது நாம் மனதுக்குள் சந்தோஷப்பட்டால் அது அவருக்குத் தெரிந்துவிடும்; அப்படிப்பட்ட மனப்பான்மையை அவர் விரும்புவதே இல்லை. (நீதி. 17:5) நம்மிடம் அப்படிப்பட்ட மனப்பான்மை இருந்தால் அதற்கேற்ப அவர் செயல்படலாம்; ஏனென்றால், “பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது” என்று அவர் சொல்கிறார்.—உபா. 32:35.
16. நாம் பணக்காரராக இல்லாவிட்டாலும் உபசரிக்கும் பண்பை எப்படிக் காட்டலாம்?
16 யோபு உபசரிக்கும் பண்புடையவர். (யோபு 31:31, 32) நாம் பணக்காரராக இல்லாவிட்டாலும் ‘உபசரிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளலாம்.’ (ரோ. 12:13) நம்முடைய உபசரிப்பு எளிமையாக இருந்தாலே போதும்; “பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 15:17) ஓர் உத்தமரோடு அன்பான சூழலில் எளிய உணவைச் சாப்பிடுவது சந்தோஷம் அளிக்கும், ஆன்மீகப் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
17. படுமோசமான பாவத்தை நாம் ஏன் மறைக்கக் கூடாது?
17 யோபு பாசாங்குக்காரராகவும் இருக்கவில்லை, அதனால் அவருடைய உபசரிப்பு நிச்சயம் ஆன்மீக ரீதியில் உற்சாகத்தை அளித்திருக்கும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவச் சபைக்குள் தந்திரமாக நுழைந்த தேவபக்தியற்ற ஆட்களைப் போல யோபு இருக்கவில்லை; அவர்கள் ‘சொந்த லாபத்திற்காக மற்றவர்களைப் போலியாகப் புகழ்ந்தார்கள்.’ (யூ. 3, 4, 16) யோபு தன்னுடைய தவறுகளை மறைக்கவில்லை, ‘மீறுதல்களை மூடி அக்கிரமத்தை மடியிலே’ ஒளித்து வைக்கவுமில்லை. மாறாக, யெகோவா தன்னை ஆராய்ந்து பார்க்க அனுமதித்தார்; தேவைப்பட்டால் தன்னுடைய பாவங்களை அவரிடம் அறிக்கை செய்யவும் தயாராய் இருந்தார். (யோபு 31:33-37) நாம் ஏதாவது படுமோசமான பாவம் செய்துவிட்டால், நம்முடைய பெயரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அதை மறைக்கக் கூடாது. நாம் உத்தமத்தில் நிலைத்திருக்க முயற்சி செய்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? நாம் செய்த தவறை ஒத்துக்கொண்டு, மனந்திரும்பி, மூப்பர்களின் உதவியை நாட வேண்டும்; அந்தத் தவறைத் திரும்பச் செய்யாதிருப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.—நீதி. 28:13; யாக். 5:13-15.
உத்தமர் ஒருவர் சோதனைகளைச் சந்திக்கிறார்
18, 19. (அ) யோபு மற்றவர்களுடைய உழைப்பில் குளிர்காயவில்லை என எப்படிச் சொல்லலாம்? (ஆ) யோபு தவறு செய்திருந்தால் எதைப் பெற தயாராக இருந்தார்?
18 யோபு நேர்மையானவர், நீதியானவர். எனவே, அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும், கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால், அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது.” (யோபு 31:38-40) யோபு மற்றவர்களுடைய நிலத்தை அபகரிக்கவுமில்லை, தன் வேலைக்காரர்களின் உழைப்பில் குளிர்காயவுமில்லை. அவரைப் போலவே நாமும், சிறிய விஷயத்திலும் சரி பெரிய விஷயத்திலும் சரி, யெகோவாவுக்கு உத்தமமாய் நடந்துகொள்ள வேண்டும்.
19 தன்னுடைய மூன்று நண்பர்களிடமும் இளம் எலிகூவிடமும் யோபு தான் வாழ்ந்த விதத்தைப் பற்றிச் சொல்லியிருந்தார். தான் எழுதி ‘கையெழுத்திட்ட’ சொந்த வாழ்க்கை பதிவை எதிர்த்து யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடுக்கவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். அவர்மீது தவறு இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அதற்குரிய தண்டனையைப் பெறத் தயாராய் இருந்தார். ஆகவே, கடவுளுடைய நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கைச் சமர்ப்பித்து, தீர்ப்புக்காகக் காத்திருந்தார். இத்துடன் ‘யோபின் வார்த்தைகள் முடிவடைந்தன.’—யோபு 31:35, 40; NW.
நீங்கள் உத்தமத்தில் நிலைத்திருக்க முடியும்
20, 21. (அ) யோபுவால் எப்படி உத்தமத்தில் நிலைத்திருக்க முடிந்தது? (ஆ) கடவுள்மீது அன்பை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
20 யோபு உத்தமத்தில் நிலைத்திருக்க முடிந்ததற்குக் காரணம், யெகோவாமீது அவருக்கு அன்பு இருந்தது, யெகோவாவும் அவர்மீது அன்பு வைத்து அவருக்கு உதவினார். “எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் [அதாவது, பற்றுமாறா அன்பையும்] எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது” என்று அவர் சொன்னார். (யோபு 10:12) யோபு மற்றவர்களிடமும் அன்பு காட்டினார்; ஏனென்றால், சக மனிதரிடம் பற்றுமாறா அன்பு காட்டாதவருக்குச் சர்வவல்ல கடவுள்மீது பயம் இருக்காது என்பதை அறிந்திருந்தார். (யோபு 6:14) உத்தமர்கள் யெகோவாவிடமும் சக மனிதரிடமும் அன்பு காட்டுகிறார்கள்.—மத். 22:37-40.
21 நாம் கடவுளுடைய வார்த்தையைத் தினமும் படித்து, அவரைப் பற்றிக் கற்றுக்கொண்டதைத் தியானிக்கும்போது அவரிடம் அன்பை வளர்த்துக்கொள்ளலாம். நம் இருதயப்பூர்வமான ஜெபத்தின் மூலம் யெகோவாவைப் போற்றி, அவர் நமக்குச் செய்த நன்மைகளுக்காக நன்றி சொல்லலாம். (பிலி. 4:6, 7) யெகோவாவின் ஜனங்களுடன் தவறாமல் கூடிவருவதன் மூலம் அவரைப் புகழ்ந்து பாடலாம், பயனும் அடையலாம். (எபி. 10:23-25) மேலும், ஊழியத்தில் கலந்துகொண்டு கடவுளுடைய ‘இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவிக்கும்போது’ அவர்மீதுள்ள அன்பு வளரும். (சங். 96:1-3) இப்படியெல்லாம் செய்வதன் மூலம் பின்வருமாறு பாடிய சங்கீதக்காரனைப் போல நாமும் உத்தமத்தில் நிலைத்திருக்க முடியும்: “கடவுளிடம் நெருங்கி வருவதே எனக்கு நல்லது. பேரரசராகிய எஜமானர் யெகோவாவை என் அடைக்கலமாகக் கொண்டிருக்கிறேன்.”—சங். 73:28, NW.
22, 23. யெகோவாவின் பேரரசாட்சிக்கு ஆதரவளிக்கிற நாம் எவ்விதத்தில் பண்டையக் கால உத்தமர்களைப் போல செயல்படுகிறோம்?
22 கடந்த பல நூற்றாண்டுகளில் உத்தமர்களுக்குப் பல்வேறு பொறுப்புகளை யெகோவா கொடுத்திருக்கிறார். நோவா பேழையைக் கட்டினார், ‘நீதியைப் பிரசங்கித்தார்.’ (2 பே. 2:5) யோசுவா வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலரை வழிநடத்திச் சென்றார்; ‘நியாயப்பிரமாண புஸ்தகத்தை . . . இரவும் பகலும்’ படித்து அதன்படி நடந்ததால்தான் அவரால் அப்படிச் செய்ய முடிந்தது. (யோசு. 1:7, 8) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சீடர்களை உருவாக்கினார்கள், வேத வசனங்களை ஆழ்ந்து படிப்பதற்காகத் தவறாமல் ஒன்றுகூடி வந்தார்கள்.—மத். 28:19, 20.
23 நாமும் கடவுளுடைய நீதிநெறிகளைப் பிரசங்கிக்கிறோம், சீடர்களை உருவாக்குகிறோம், பைபிள் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கிறோம், சக கிறிஸ்தவர்களுடன் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்கிறோம்; இவ்வாறு, யெகோவாவின் பேரரசாட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம், உத்தமத்தில் நிலைத்திருக்கிறோம். இவையெல்லாம், நாம் தைரியமாயும் ஆன்மீக ரீதியில் பலமாயும் இருக்க உதவுவதோடு, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் வெற்றி காணவும் துணைபுரிகிறது. இது ஒன்றும் ரொம்பக் கஷ்டமான விஷயமல்ல, ஏனென்றால் நம் பரலோகத் தகப்பனின் ஆதரவும் அவருடைய மகனின் ஆதரவும் நமக்கு இருக்கிறது. (உபா. 30:11-14; 1 இரா. 8:57) அதோடு, உத்தமத்தில் நடந்து, நமது பேரரசராகிய எஜமானர் யெகோவாவுக்கு மதிப்புக் கொடுக்கிற ‘சகோதரர்கள் எல்லாருடைய’ ஆதரவும் இருக்கிறது.—1 பே. 2:17.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• யெகோவா வகுத்த ஒழுக்க நெறிகளை நாம் எப்படிக் கருத வேண்டும்?
• யோபுவிடம் உங்களுக்குப் பிடித்த குணங்கள் யாவை?
• யோபு 31:29-37 காட்டுகிறபடி, யோபு எப்படி நடந்துகொண்டார்?
• கடவுளுக்கு உத்தமமாய் இருப்பது ஏன் கடினமல்ல?
[பக்கம் 29-ன் படம்]
யோபு உத்தமத்தில் நிலைத்திருந்தார். நம்மாலும் முடியும்!
[பக்கம் 32-ன் படம்]
நம்மால் உத்தமத்தில் நிலைத்திருக்க முடியும்!