கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்படுகிற ராஜா அளிக்கும் ஆசீர்வாதங்கள்!
“யெகோவாவின் சக்தி அவர்மீது தங்கியிருக்கும்.”—ஏசா. 11:2, NW.
1. உலகப் பிரச்சினைகளைக் குறித்து சிலர் தங்கள் கவலைகளை எப்படித் தெரிவித்திருக்கிறார்கள்?
“அரசியல், சமுதாயம், சுற்றுச்சூழல் என எல்லாவற்றிலும் தாறுமாறாகப் போய்க்கொண்டிருக்கிற இந்த உலகம் இன்னும் 100 வருடம் தாக்குப்பிடிக்குமா என்ன?” இப்படித்தான் 2006-ல் வான்-இயற்பியல் வல்லுநர் ஸ்டீஃபன் ஹாக்கிங் கேட்டார். நியு ஸ்டேட்ஸ்மென் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை இவ்வாறு சொன்னது: “பசி பட்டினியையும் நாம் ஒழிக்கவில்லை, உலக சமாதானத்தையும் நிலைநாட்டவில்லை; ஆனால், அதற்கு நேர்மாறானதையே சாதித்திருக்கிறோம். அதற்காக நாம் எந்த முயற்சியும் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. பொதுவுடைமை கொள்கைமுதல் முதலாளித்துவம்வரை எல்லாவற்றையும் முயற்சிசெய்து பார்த்துவிட்டோம். சர்வதேச சங்கத்தையும் முயன்று பார்த்துவிட்டோம், அணு ஆயுதக் கருவிகளைக் குவித்தும் பார்த்துவிட்டோம். போரை முற்றிலும் ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நிறையப் போர்களையே தொடுத்திருக்கிறோம்.”
2. பூமியின்மீது யெகோவா சீக்கிரத்தில் தம் உன்னதப் பேரரசாட்சியை எப்படி நிலைநாட்டுவார்?
2 இதைப் போன்ற வார்த்தைகள் யெகோவாவின் ஊழியர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்துகொள்ளும் விதத்தில் படைக்கப்படவில்லை என பைபிள் சொல்கிறது. (எரே. 10:23) யெகோவா ஒருவரே நம் பேரரசர். அதனால், நெறிமுறைகளை ஏற்படுத்தவும், நம் வாழ்க்கையின் நோக்கத்தை வரையறுக்கவும், அந்த நோக்கத்திற்கு இசைய நம்மை வழிநடத்தவும் அவர் ஒருவருக்கே உரிமை இருக்கிறது. அதோடு, தோல்வியைத் தழுவிய மனித ஆட்சிக்குச் சீக்கிரத்தில் முடிவும் கட்டுவார். அதேசமயத்தில், தம்முடைய உன்னதப் பேரரசாட்சியை ஆதரிக்காதவர்கள் அனைவரையும் அவர் அழித்துவிடுவார்; இவர்கள் அனைவரும் மனிதரைப் பாவத்திற்கும் அபூரணத்திற்கும் ‘இந்த உலகத்தின் கடவுளான’ பிசாசாசிய சாத்தானுக்கும் அடிமைகளாக வைக்கவே விரும்புகிறார்கள்.—2 கொ. 4:4.
3. மேசியாவைப் பற்றி ஏசாயா என்ன முன்னறிவித்தார்?
3 மேசியானிய அரசாங்கத்தின் மூலம் யெகோவா தமது அன்பான பேரரசாட்சியை பூஞ்சோலை பூமியில் ஏற்படுத்துவார். (தானி. 7:13, 14) அதன் ராஜாவைப் பற்றி ஏசாயா இவ்வாறு முன்னறிவித்தார்: ‘ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஞானத்தையும் உணர்வையும் அருளும் சக்தியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் சக்தியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் சக்தியுமாகிய கர்த்தருடைய சக்தி அவர்மேல் தங்கியிருக்கும்.’ (ஏசா. 11:1, 2) மனிதகுலத்தை ஆட்சி செய்வதற்காக ‘ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றிய துளிருக்கு,’ அதாவது இயேசு கிறிஸ்துவுக்கு, கடவுளுடைய சக்தி என்னென்ன தகுதிகளை அளித்திருக்கிறது? அவருடைய ஆட்சியினால் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? அந்த ஆசீர்வாதங்களைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
கடவுளால் தகுதிபெற்ற ராஜா
4-6. ஞானமும் கரிசனையும் உள்ள ராஜாவாக, தலைமைக் குருவாக, நியாயாதிபதியாக இருக்க இயேசுவுக்கு எது உதவும்?
4 ஞானமும் கரிசனையும் உள்ள ராஜாவாக, தலைமைக் குருவாக, நியாயாதிபதியாக இருக்கிற ஒருவரின் வழிநடத்துதலில் மனிதர் பரிபூரணத்தை அடைய வேண்டுமென யெகோவா விரும்புகிறார். அதனால்தான் இயேசு கிறிஸ்துவைக் கடவுள் தேர்ந்தெடுத்து, மிக முக்கியமான இந்தப் பொறுப்புகளை வகிக்க தமது சக்தியின் மூலம் தகுதியுள்ளவராக்கினார். இந்தப் பொறுப்புகளை இயேசு எப்படிச் சரிவர நிறைவேற்றுவார் என்பதற்கான சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.
5 கடவுளைப் பற்றி இயேசு மிக நெருக்கமாக அறிந்திருக்கிறார். ஒரே மகனான அவர் தம் தகப்பனோடு கோடானுகோடி வருடங்கள் வாழ்ந்திருப்பதால் வேறு எவரையும்விட கடவுளைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார். அதனால்தான், “காணமுடியாத கடவுளுடைய சாயலாக” இருக்கிறார் என்று அவரைக் குறித்து சொல்ல முடிந்தது. (கொலோ. 1:15) “என்னைப் பார்த்தவன் என் தகப்பனைப் பார்த்திருக்கிறான்” என இயேசுவே சொன்னார்.—யோவா. 14:9.
6 யெகோவாவுக்கு அடுத்தபடியாக, மனிதர் உட்பட படைப்புகள் எல்லாவற்றையும் பற்றி அத்துப்படியாக அறிந்தவர் இயேசுவே. கொலோசெயர் 1:16, 17 இவ்வாறு சொல்கிறது: “பரலோகத்திலுள்ளவை, பூமியிலுள்ளவை, காணப்படுகிறவை, காணப்படாதவை ஆகிய அனைத்தும் . . . அவர் [கடவுளுடைய மகன்] மூலமாகவே படைக்கப்பட்டன. . . . அவர் எல்லாப் படைப்புகளுக்கும் முன்பே இருக்கிறார்; அவர் மூலமாகவே எல்லாம் உண்டாக்கப்பட்டன.” அதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! கடவுளுடைய ‘கைதேர்ந்த வேலையாளரான’ இயேசு, படைப்பின் எல்லா வேலைகளிலும் ஈடுபட்டார். ஆகவே, இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும், அணுத் துகள்கள்முதல் வியக்க வைக்கும் மனித மூளைவரை அனைத்து விவரங்களையும், அவர் அறிந்திருக்கிறார். ஆம், கிறிஸ்து ஞானத்தின் உருவாகவே இருக்கிறார்!—நீதி. 8:12, 22, 30, 31; NW.
7, 8. கடவுளுடைய சக்தி இயேசுவுக்கு எப்படி ஊழியத்தில் உதவியது?
7 இயேசு, கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டார். “யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை நியமித்தார்; சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வையற்றவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று பிரசங்கிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை அளிப்பதற்காகவும், யெகோவாவின் அனுக்கிரக காலத்தைப் பிரசங்கிப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பினார்” என்று ஏசாயா தீர்க்கதரிசனத்திலிருந்து இயேசு வாசித்தார். (லூக். 4:18, 19) இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, பரலோகத்தில் தாம் கற்றுக்கொண்ட விஷயங்களையும் பூமியில் தமக்கு யெகோவா கொடுத்திருந்த வேலையையும் பற்றி அவருடைய சக்தியின் உதவியால் தெரிந்துகொண்டார்.—ஏசாயா 42:1; லூக்கா 3:21, 22; யோவான் 12:50 ஆகிய வசனங்களை வாசியுங்கள்.
8 அவர் கடவுளுடைய சக்தியைப் பெற்றிருந்ததாலும் உடலிலும் உள்ளத்திலும் பரிபூரணராக இருந்ததாலும், பூமியில் மிகப் பெரிய மனிதராக மட்டுமல்ல, மிகப் பெரிய போதகராகவும் விளங்கினார். சொல்லப்போனால், “அவர் கற்பித்த விதத்தைக் கண்டு மக்கள் மலைத்துப்போனார்கள்.” (மத். 7:28) ஏனென்றால், பாவம், அபூரணம், கடவுளைப் பற்றிய அறியாமை ஆகியவையே மனித பிரச்சினைகளுக்கு ஆணிவேர் என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும், மக்களின் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொண்டார்.—மத். 9:4; யோவா. 1:47.
9. இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கும்போது ராஜாவான அவர்மீது உங்கள் நம்பிக்கை எப்படி அதிகரிக்கிறது?
9 இயேசு மனிதராக வாழ்ந்தார். மனிதராக வாழ்ந்த அனுபவமும் அபூரண மனிதரோடு நெருங்கிப் பழகியதும் ராஜாவாகத் தகுதி பெற இயேசுவுக்குப் பெரிதும் உதவின. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எல்லா விதத்திலும் அவர் [இயேசு] தமது ‘சகோதரர்களைப்’ போல் ஆவதற்குக் கடமைப்பட்டிருந்தார்; இரக்கமும் உண்மையும் உள்ள தலைமைக் குருவாகக் கடவுளுக்குச் சேவை செய்து, மக்களுடைய பாவங்களுக்காகப் பிராயச்சித்த பலி செலுத்துவதற்காக அவர்களைப் போலானார். இவ்வாறு, அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுகளை அனுபவித்ததால், சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராக இருக்கிறார்.” (எபி. 2:17, 18) இயேசுவும் ‘சோதிக்கப்பட்டதால்’ மனிதர் சோதிக்கப்படும்போது அவரால் அனுதாபப்பட முடிகிறது. பூமியில் ஊழியம் செய்தபோதும் அவர் கரிசனை காட்டினார். நோயாளிகள், ஊனமுற்றவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், ஏன் பிள்ளைகளும் தயக்கமின்றி அவரை அணுகினார்கள். (மாற். 5:22-24, 38-42; 10:14-16) சாந்தமுள்ளோரும் ஆன்மீகப் பசியில் வாடுவோரும்கூட அவரிடம் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். ஆனால், அகம்பாவம், ஆணவம் பிடித்தவர்களும் ‘கடவுள்மீது அன்பு இல்லாதவர்களும்’ அவரைப் புறக்கணித்தார்கள், பகைத்தார்கள், எதிர்த்தார்கள்.—யோவா. 5:40-42; 11:47-53.
10. நம்மீது அன்பிருப்பதை இயேசு எப்படி மகத்தான விதத்தில் காட்டினார்?
10 இயேசு நமக்காக உயிரைக் கொடுத்தார். அவர் நமக்காக உயிரைக் கொடுக்க மனமுள்ளவராய் இருந்ததுதான் அவர் ஒப்பற்ற ராஜா என்பதற்கு வலுவான ஆதாரமாக இருக்கிறது. (சங்கீதம் 40:6-10-ஐ வாசியுங்கள்.) “ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு இல்லை” என்று கிறிஸ்துவே சொன்னார். (யோவா. 15:13) ஆம், குடிமக்களின் வயிற்றிலடித்துச் சொகுசாக வாழும் மனித ஆட்சியாளர்களைப் போலின்றி, இயேசு மனிதருக்காகத் தம்முடைய உயிரையே கொடுத்தார்.—மத். 20:28.
மீட்பு பலியின் பயன்களை அளிக்க அதிகாரம் பெற்றவர்
11. மீட்பரான இயேசுமீது நாம் ஏன் முழு நம்பிக்கை வைக்கலாம்?
11 தலைமைக் குருவான இயேசு, மீட்பு பலியின் பயன்களை நமக்கு அளிப்பதில் முன்நின்று செயல்படுவது எவ்வளவு பொருத்தமானது! சொல்லப்போனால், மீட்பு பலியைச் செலுத்திய அவர், ஆயிர வருட ஆட்சியில் செய்யப்போவதைப் பூமிக்குரிய ஊழியத்தின்போது சிறியளவில் செய்து காட்டினார்; நாம் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்தால் அந்தப் பயன்களைப் பெறுவோம். அவர் நோயாளிகளையும் ஊனமுற்றவர்களையும் சுகப்படுத்தினார், மரித்தோரை உயிர்த்தெழுப்பினார், திரளானோருக்கு உணவளித்தார், இயற்கை சக்திகளையும்கூட கட்டுப்படுத்தினார். (மத். 8:26; 14:14-21; லூக். 7:14, 15) தமக்கு அதிகாரமும் வல்லமையும் இருப்பதைப் பகட்டாய்க் காட்டுவதற்காக இவற்றைச் செய்யவில்லை, மாறாக மக்கள்மீது கரிசனையும் அன்பும் இருப்பதைக் காட்டுவதற்காகவே செய்தார். தன்னைக் குணப்படுத்தும்படி தொழுநோயாளி ஒருவர் அவரிடம் கெஞ்சிக் கேட்டபோது, குணப்படுத்த “எனக்கு மனமிருக்கிறது” என்று சொன்னார். (மாற். 1:40, 41) இதே விதமான கரிசனையை இயேசு தமது ஆயிர வருட ஆட்சியிலும் காட்டுவார், ஆனால் உலகளவில்!
12. ஏசாயா 11:9 எப்படி நிறைவேறும்?
12 சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு இயேசு ஆரம்பித்து வைத்த ஆன்மீகக் கல்வி திட்டத்தை கிறிஸ்துவும் அவருடைய சக ராஜாக்களும் தொடர்ந்து நடத்துவார்கள். அப்போது ஏசாயா 11:9-லுள்ள பின்வரும் வார்த்தைகள் நிறைவேறும்: “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” அந்த ஆன்மீகக் கல்வியில், பூமியையும் எண்ணிலடங்கா உயிரினங்களையும் பராமரிப்பது பற்றிய போதனையும் அடங்கும்; பராமரிக்கும் இந்த வேலையே துவக்கத்தில் ஆதாமுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆதியாகமம் 1:28-ல் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளின் ஆதி நோக்கம் ஆயிர வருட ஆட்சியின் முடிவில் நிறைவேறியிருக்கும்; அப்போது மீட்பு பலியின் முழு பயன்களையும் மனிதர் பெற்றிருப்பார்கள்.
நீதி வழங்க அதிகாரம் பெற்றவர்
13. நீதியை நேசித்ததை இயேசு எப்படிக் காட்டினார்?
13 ‘உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் கிறிஸ்துவையே நீதிபதியாக [கடவுள்] நியமித்தார்.’ (அப். 10:42) அப்படியானால், நீதி வழங்குவதில் இயேசு எந்த முறைகேடும் செய்ய மாட்டார் என்பது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது! நீதியும் உண்மையும் அவருக்கு இடைக்கச்சை போல் இருக்கிறதே! (ஏசா. 11:5) அவர் பேராசையையும் வெளிவேஷத்தையும் தீய செயல்களையும் அறவே வெறுத்தார்; மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்டு நெஞ்சில் ஈரமின்றி இருப்பவர்களை வன்மையாகக் கண்டித்தார். (மத். 23:1-8, 25-28; மாற். 3:5) அதுமட்டுமல்ல, வெளித் தோற்றத்தைக் கண்டு அவர் ஏமாற்றமடையவில்லை; ஏனெனில், ‘மனிதருடைய உள்ளத்தை அவரே அறிந்திருந்தார்.’—யோவா. 2:25.
14. நீதியையும் நியாயத்தையும் நேசிப்பதை இயேசு இப்போது எவ்வழியில் காட்டுகிறார், நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
14 நீதியையும் நியாயத்தையும் இயேசு நேசிக்கிறார் என்பதைத் தொடர்ந்து காட்டுகிறார்; எப்படியென்றால், வரலாறு காணாத அளவில் நடந்துவருகிற பிரசங்கிக்கும் மற்றும் கற்பிக்கும் வேலையைக் கண்காணிப்பதன் மூலம் காட்டுகிறார். கடவுள் முழு திருப்தி அடையும்வரை எந்த மனிதனாலும் அரசாங்கத்தாலும் தீய சக்தியாலும் இந்த வேலையைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே, அர்மகெதோன் போர் முடிவடையும்போது கடவுளுடைய நீதி வெற்றிசிறக்கும் என்பதில் நாம் முழு நம்பிக்கையுடன் இருக்கலாம். (ஏசாயா 11:4-ஐயும் மத்தேயு 16:27-ஐயும் வாசியுங்கள்.) அப்படியானால், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் இயேசுவைப் போல் நான் நடந்துகொள்கிறேனா? என்னுடைய உடல்நிலையோ சூழ்நிலையோ மோசமாக இருந்தாலும் என்னால் முடிந்தளவு யெகோவாவுக்குச் சேவை செய்கிறேனா?’
15. கடவுளுக்கு முடிந்தளவு சேவை செய்ய நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
15 நாம் செய்கிற பிரசங்க வேலை கடவுளுடைய வேலை என்பதை மனதில் வைத்திருந்தால், அதை முழு மூச்சோடு செய்வோம். இது அவர் கொடுத்த கட்டளை, இதைத் தமது மகன் மூலம் வழிநடத்துகிறார், இதில் ஈடுபடுகிறவர்களுக்கு அவருடைய சக்தியை அளித்து பலப்படுத்துகிறார். யெகோவாவுடைய சக்தியினால் வழிநடத்தப்படுகிற இயேசுவுடன் சேர்ந்து கடவுளுடைய சக வேலையாட்களாய்ச் சேவை செய்வதைப் பாக்கியமாய்க் கருதுகிறீர்களா? 236 நாடுகளில் நற்செய்தியைப் பிரசங்கிக்க 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை, பெரும்பாலும் ‘கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்களை,’ யெகோவாவைத் தவிர வேறு யார்தான் உந்துவிக்க முடியும்?—அப். 4:13.
கிறிஸ்து மூலம் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்
16. கடவுள் தரும் ஆசீர்வாதங்களைப் பற்றி ஆதியாகமம் 22:18 என்ன சுட்டிக்காட்டுகிறது?
16 ‘நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று என்பேரில் ஆணையிட்டேன்’ என்று ஆபிரகாமிடம் யெகோவா சொன்னார். (ஆதி. 22:18) இந்த வசனம் எதைச் சுட்டிக்காட்டுகிறது? கடவுளுக்குச் சேவை செய்வதைப் பாக்கியமாகக் கருதுகிறவர்கள் மேசியானிய சந்ததி மூலம் கிடைக்கும் ஆசீர்வாதங்களுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆசீர்வாதங்களை மனதில் வைத்து அவர்கள் இன்று சுறுசுறுப்புடன் சேவை செய்கிறார்கள்.
17, 18. உபாகமம் 28:2-ல் யெகோவா கொடுத்த வாக்குறுதி என்ன, இது நமக்கு எதைக் குறிக்கிறது?
17 ஒருசமயம், ஆபிரகாமின் சந்ததியான இஸ்ரவேலரிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் [திருச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆசீர்வாதங்களெல்லாம்] உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.” (உபா. 28:2) இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்களுக்கும் இது பொருந்தும். நீங்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பினால் அவருடைய சத்தத்துக்குத் தொடர்ந்து ‘செவிகொடுங்கள்.’ அப்போது அவருடைய ஆசீர்வாதங்கள் ‘உங்கள்மேல் வந்து உங்களுக்குப் பலிக்கும்,’ அதாவது உங்கள்மேல் நிலைக்கும். அப்படியானால், ‘செவிகொடுப்பது’ என்பது எதையெல்லாம் குறிக்கிறது?
18 செவிகொடுப்பது என்பது கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களையும் அவர் அளிக்கும் ஆன்மீக போதனையையும் இதயத்தில் பதிய வைப்பதைக் குறிக்கிறது. (மத். 24:45) கடவுளுக்கும் அவருடைய மகனுக்கும் கீழ்ப்படிவதும் இதில் அடங்கும். “என்னை நோக்கி, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிறவர்கள் பரலோக அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்களே அதில் அனுமதிக்கப்படுவார்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 7:21) மேலும், கடவுளுக்குச் செவிகொடுப்பது அவருடைய ஏற்பாட்டிற்கு மனமுவந்து கீழ்ப்படிவதை, அதாவது கிறிஸ்தவச் சபையில் ‘பரிசுகளாக’ இருக்கிற மூப்பர்களுக்குக் கீழ்ப்படிவதை, குறிக்கிறது.—எபே. 4:8.
19. கடவுளுடைய ஆசீர்வாதத்தை நாம் எப்படிப் பெறலாம்?
19 அந்த ‘பரிசுகளில்’ ஆளும் குழுவினரும் அடங்குவர்; அவர்கள் கிறிஸ்தவச் சபை முழுவதற்கும் பிரதிநிதிகளாகச் செயல்படுகிறார்கள். (அப். 15:2, 6) சொல்லப்போனால், கிறிஸ்துவின் ஆன்மீகச் சகோதரர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதைப் பொறுத்தே, வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தில் நாம் எப்படி நியாயந்தீர்க்கப்படுவோம் என்பது தீர்மானிக்கப்படும். (மத். 25:34-40) ஆகவே, கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற ஒரு வழி, அந்தச் சகோதரர்களுக்கு உண்மையுடன் ஆதரவளிப்பதே.
20. (அ) கடவுளுடைய அமைப்பில் ‘பரிசுகளாக’ இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியப் பொறுப்பு என்ன? (ஆ) இந்தச் சகோதரர்களுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
20 கிளை அலுவலகக் குழுவினரும் பயணக் கண்காணிகளும் மூப்பர்களும்கூட ‘பரிசுகளாக’ இருக்கிறார்கள்; இவர்கள் எல்லாருமே கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். (அப். 20:28) கடவுளுடைய மக்களைப் பலப்படுத்துவதே அவர்களுடைய முக்கியப் பொறுப்பு; ஆம், ‘எல்லாரும் விசுவாசத்திலும் கடவுளுடைய மகனைப் பற்றிய திருத்தமான அறிவிலும் ஒன்றுபடுவதற்காகவும், கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு . . . முழு வளர்ச்சி அடைவதற்காகவும்’ அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். (எபே. 4:13) நம்மைப் போலவே அவர்களும் அபூரணர்தான். இருந்தாலும், அவர்களுடைய அன்பான வழிநடத்துதலுக்கு நாம் நன்றியோடு கீழ்ப்படிதலைக் காட்டினால் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்.—எபி. 13:7, 17.
21. கடவுளுடைய மகனுக்கு நாம் ஏன் இப்போதே கீழ்ப்படிய வேண்டும்?
21 சீக்கிரத்தில், சாத்தானுடைய உலகிற்கு எதிராக கிறிஸ்து நடவடிக்கை எடுப்பார். அப்போது, நாம் எப்படி நியாயந்தீர்க்கப்படுவோம் என்பது இயேசுவின் கையில்தான் இருக்கிறது; ஏனென்றால், முன்னறிவிக்கப்பட்ட ‘திரள் கூட்டமான மக்களை’ “வாழ்வளிக்கும் நீரூற்றுகளிடம்” வழிநடத்திச் செல்ல அவருக்குக் கடவுள் அதிகாரம் அளித்திருக்கிறார். (வெளி. 7:9, 16, 17) எனவே, யெகோவாவுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிற ராஜாவுக்கு மனமுவந்து கீழ்ப்படிய நம்மாலான அனைத்தையும் இப்போதே செய்வோமாக.
பின்வரும் வசனங்களிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
[பக்கம் 17-ன் படம்]
யவீருவின் மகளை உயிர்த்தெழுப்பிய சமயத்தில் இயேசுவின் கரிசனை பளிச்சிட்டது
[பக்கம் 18-ன் படங்கள்]
வரலாறு காணாத அளவில் நடந்துவருகிற பிரசங்க வேலையை இயேசு கிறிஸ்து கண்காணிக்கிறார்